முடியல கதைகள் - 1
”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம
தனியா போயே ஆகனுமா ராக்காயி? பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு
போயேன்” முத்துப்பேச்சி அக்கறையாக விசாரித்தாள்.
”நோ ப்ராப்ஸ்
முத்து. கேப் வர எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். ஏதாவது ஆட்டோ பிடிச்சு
போய்கிறேன். திருவான்மையூர் பக்கம் தானே. டைம் ஆகறது.” என்றபடி குதித்தபடி
லிப்டை நோக்கியபடி சென்றாள் ராக்காயி.
ஜீன்ஸ் மற்றும்
டீசர்ட், கையில் தங்க ப்ரேஸ்லெட், சந்தைக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்த
செல்போன், வாயில் சுவிங்கத்துடன் “திருவான்மையூர் வருமாப்பா” என்ற
ராக்காயியை ஏற இறங்கப்பார்த்தான் ஆட்டோக்காரன் ராகுல். “ஏறுங்கம்மா”
என்றவனை கண்டு கொள்ளாமல் செல்போனை நோண்டியபடி ஆட்டோவில் அமர்ந்தாள்
ராக்காயி.
செல் போனிலே கவனத்தை செலுத்தியவள் ஆட்டோ வழி மாறி
செல்வதை அறியவில்லை. திடீரென்று ஆட்டோ செல்லும் பாதையை கவனித்தவள்,
செல்போனில் வேலையை முடித்துவிட்டு ஹேண்ட்பேக்கில் போட்டுவிட்டு “ஆட்டோ ஏன்
இந்த பக்கம் போகுது?” என்று கேட்டாள்.
“இது ஷார்ட் கட்மா. சீக்கிரம் போயிடலாம்” என்றான் ராகுல்.
“அதெல்லாம் வேணாம்ப்பா நீ வண்டியை திருப்பி மெயின் ரோடு வழியாவே போ” ராக்காயி
வண்டியை
மற்றுமொரு குறுக்கு சந்தில் நுழைத்து ஒரு ஓட்டு வீடின் முன் நிறுத்திய ராகுல் “பேசாம இருடி இல்ல கழுத்தை அறுத்திடுவேன்” என கத்தியை அவள்
கழுத்தில் வைத்தான் ராகுல். அதிர்ச்சியில் உறைந்தாள் ராக்காயி.
தலைவரே
ஒரு சிட்டு மாட்டியிருக்கு. சாப்ட்வேர்ல வேலை பாக்குற பொண்ணுதான். ஆமா
ஆமா.. யாரும் பார்க்கல. உங்களுக்குன்னே ப்ரஷா வச்சிருக்கேன். இப்ப
வந்தீங்கன்னா அப்படியே அலேக்கா தூக்கிடலாம். ஹி ஹி எனக்கும் செட்டில்
பண்ணிடுங்க” என தன் தலைவன் கொருக்குப்பேட்டை சஞ்செய்யிடம்
பேசிக்கொண்டிருக்கும் போதே போலீஸ் வண்டி அவன் வீட்டு வாசலில் வந்து
நின்றது.
பத்திரிக்கை நிருபர்கள் சூழ இன்ஸ்பெக்டர் ராமராஜன்
பேட்டி கொடுத்துகொண்டிருந்தார் “சாஃப்ட்வேர் கம்பெனியில நைட் ஷிப்ட் வேலை
பார்த்துட்டு வந்த ராக்காயியை ஆட்டோகாரன் ராகுல் கடத்தியிருக்கான். ஆட்டோல
ஏறும் போதே வண்டியை நோட் பண்ணி டிவிட்டர்ல இந்த நம்பர் ஆட்டோல போறதா
போட்டிருக்காங்க. அப்புறம் கொஞ்ச நேரத்துல அதே டிவிட்டர்ல ஆட்டோ வழி மாறி
வேற ரூட்ல போறதாவும் டிவிட்டியிருக்காங்க. எப்பவும் ஆன்லைன்லயே இருக்க
ராக்காயியோட ப்ரண்ட் முத்துப்பேச்சி ஆட்டோ நம்பரை நோட் பண்ணி எங்களுக்கு
போன் பண்ணினாங்க. ஆட்டோ நம்பரை வச்சு நாங்க ஆட்டோ காரன் வீட்டை
கண்டுபிடிச்சுட்டோம். இன்னும் கொஞ்சம் லேட்டாகியிருந்தாலும் ராக்காயி
நிலைமை மோசமாகியிருக்கும்”
நிருபர்கள் ஆட்டோ காரன் ராகுலை நோக்கி “நீங்க இதை பத்தி என்ன சொல்ல விரும்புறீங்க”ன்னு கேட்க ராகுல் கேமராவை நோக்கி “ முடியல “ என்று கண்ணை கசக்கிக்கொண்டு சென்றான்.
--------------------------------------------------------------------------------------------------------------
(தாங்க) முடியல கதைகள் - 2
பிரசவ வார்டின் வெளியே ராஜேஷ் டென்சனோடு
உட்கார்ந்திருந்தான். உள்ளே அக்கா. பிரசவம். அதுவும் நார்மல் டெலிவரி
ஆவதில் சிக்கல் இருந்தால் கடைசி நேரத்தில் சிசேரியனாக கூட இருக்கலாம் என்று
வேறு சொல்கிறார்கள். மாமா அலுவலக வேலையாக வெளிநாடு சென்றிருந்த சமயம் இந்த
சூழ்நிலை அமைந்துவிட்டது.
ராஜேஷின் நண்பன் தீபக் கையில் டீயோடு
வந்தான். "டேய் டென்சனாக வேண்டிய உங்க அக்காவே சிரிச்சுட்டே உள்ள போனாங்க.
மாமா கூட போன்ல பதட்டபடாம தான் பேசினாரு. நீ ஏன் காலையில இருந்து டென்சனா
இருக்க? ஒன்னுமே சாப்பிடல வேற. இந்த டீயாவது குடி" என்றான்.
டீயை
வாங்கிய ராஜேஷ் "உனக்கு தான் தெரியுமேடா அக்கா காலேஜ்ல படிச்சுட்டு
இருக்கும் போதே லவ் பண்ணி வீட்டு எதிர்ப்பை மீறி கல்யாணம் பண்ணிகிட்டான்னு.
அக்கா புருசன் தான் மேற்கொண்டு அக்காவை படிக்க வச்சு இப்ப இந்த நல்ல
வேலையில இருக்குறது காரணம்."
"ம்ம்ம் " தீபக்
"முதல்
பிரசவம்டா தீபக். இது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட தெரியும். நேத்து
சொன்னேன். ஆனா இனி அவ முகத்துலயே முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க."
என்றான் வருத்தத்துடன். டீயை குடிக்க வாயருகே எடுத்துச்சென்றவன் "அய்யோ
அம்மா தாங்க முடியல " என்று உள்ளே வந்த சத்தத்தில் அதிர்ந்து டீயை குடிக்காமல் மேசை மீது வைத்தான்.
"கவலைபடாதேடா குழந்தை நல்லபடியா பிறக்கும்" தீபக்
அரைமணி நேர போராட்டத்துக்கு பிறகு "குவா குவா குவா குவா" என குழந்தை அழும் சத்தம் கேட்டது.
ராஜேஷூம்,
தீபக்கும் சந்தோஷமாகினர். ராஜேஷின் அக்காவே வெளியே வந்தாள். "டேய் ராஜேஷ்
பெண் குழந்தை டா. சிசேரியன் தான். மாமாவுக்கு போன் போட்டு சொல்லுடா. நான்
செஞ்ச முதல் பிரசவ கேஸ் நல்லபடியா முடிஞ்சுதுன்னு. என்னால சந்தோசம் (தாங்க)
முடியல டா" என்றாள் டாக்டர் பூரணி.
-------------------------------------------------------------------------------------------------------------
" (திரும்ப) முடியல " கதைகள் - 3
"எல்லாரும் வரிசையா வாங்க.
ஏம்ப்பா யாருப்பா அது? கண்டுபிடிப்பையே இங்க கொண்டு வந்திருக்கிறது?
அவங்கவங்க கண்டுபிடிப்போட ரிப்போர்ட் கொடுத்தா போதும். வரலாறு பேராசியர்கள்
தேவைக்கு அதிகமா இருக்காங்க. அதுனால வரலாறு ஆசிரியர்கள் இருந்தா லைன்ல
வேஸ்டா நிக்காதீங்க. இன்னைக்கு தான் கடைசி நாள். அடுத்த வாரம் கடைசி
விண்கலமும் கிளம்புது. அதனால எல்லாரும் அடிதடியில ஈடுபடாம லைன்ல வாங்க.
சின்ன சச்சரவு வந்தாலும் சுடச்சொல்லி உத்தரவு வந்திருக்கு." மூக்கில்
மாஸ்க் ஒன்றை மாட்டிக்கொண்டு அரசாங்க அதிகாரி கத்திக்கொண்டிருந்தார்.
கட்டத்திற்கு
வெளியே சில அரசியல் கட்சிகள் "புதிய கிரகத்திற்கு அனைத்து மக்களையும்
அழைத்துச்செல்." "முதலாளித்துவ முதலைகளை இங்கேயே விட்டு செல். உழைப்பாளிகளை
அழைத்துச்செல்" என அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒலியின் அளவுக்கு உட்பட்டு
கத்திக்கொண்டிருந்தனர்.
கர்னல் மேனன் தொலைபேசியில் புதிய உலக
ஜனாதிபதியிடம் பவ்யமாக பேசிக்கொண்டிருந்தார் "ஆமா சார். இன்னும் ரெண்டு
நாள்ல விண்கலம் கிளம்புது. ஒரு லட்சம் பேர் பயணிக்கலாம். நீங்க கொடுத்த
லிஸ்ட்ல இருந்த 50 ஆயிரம் பேரை செலக்ட் பண்ணியாச்சு. இப்ப இந்த ஊர்ல
இருக்குற அவசியப்படுற இன்ஜினியர்ஸ், பேராசியர்கள், அறிவியல்
கண்டுபிடிப்பார்கள், மொழி வல்லுனர்கள்னு செலக்ட் பண்ணிட்டு இருக்கோம்.
நீங்க கவலைப்படாதீங்க சார் முன்ன சென்ற 3000 விண்கலத்தை போல இந்த கடைசி
விண்கலமும் நல்லபடியா கிளம்பிடும்."
பேசி முடித்ததும் வெறுப்பாக
போனை வைத்தார் மேனன். இன்டர்காமில் செலக்சன் இன்சார்ஜ் பட்டேலை அழைத்து
"பட்டேல் இனி ரிப்போர்ட் எதுவும் வாங்காத. இதுவரைக்கும் வந்த ரிப்போர்டை
என் ரூமுக்கு கொண்டு வா. நான் ஏற்கனவே செலக்ட் பண்ணின அந்த ஒரு லட்சம்
பேரையும் லிஸ்ட்ல சேர்த்திடு." போனை வைத்தார்.
விண்கலம் கிளம்பியது. எஞ்சியிருந்தோர் கடைசி விண்கலம் கிளம்புவதை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
விண்கலம்
கிளம்பி சில மணி நேரங்களுக்கு பிறகு விண்கலத்தில் இருந்த மேனன் ஒவ்வொரு
ரிப்போர்டாக படித்துக்கொண்டிருந்தார். கடைசி ரிப்போர்டில் "இந்த விதை கடும்
வெயிலிலும் பசுமையாக மரத்தை வளர்க்கும். தண்ணீர் அதிகம் தேவைப்படாது..
ஆக்ஸிஜன்..." என பட்டியல் நீண்டுப்போவதை பார்த்த அவருக்கு சந்தோஷத்தில்.
"ஸ்டாப். ஹோல்டன்.. விண்கலத்தை பூமிக்கு திருப்புங்க"ன்னு கத்த
ஆரம்பித்தார்.
" திரும்ப முடியல சார் " என்று பதில் வந்தது.
"என்ன?" மேனன்
"இது
முழுக்க ப்ரோகிராம் செய்யப்பட்டிருக்கு சார். இதுவா புது கிரகத்திற்கு
சேர்ர வரைக்கும் இதை திருப்ப முடியாது. அங்க போகவே இன்னும் ஓராண்டுக்கு மேல
ஆகும்.அங்கிருந்தும் நம்மால உடனே திரும்ப முடியாது." பட்டேல்
மேனன் கண்ணாடியின் வழியே பூமியை பார்த்தார். கண் கலங்கியிருந்தது.
"என்ன ஆச்சு சார்?" பட்டேல்
" முடியல " என தேம்பி தேம்பி அழுதார் மேனன்