மாஞ்சா - விக்கி பீடியா

"லொட்டாயை சரியா புடிக்க தெரியில நீயெல்லாம் எதுக்குடா காத்தாடி விட வந்த"

"மச்சி ஆறாம் நம்பர் நூலை வச்சே நம்மளை வெட்டிட்டான்டா. மாஞ்சால என்னத்த தான் கலக்குறான்னு தெரியல"

"டேய் சூஸ்திரம் போடனும். நம்ம ஜோதிய கூப்பிடு. அவன் தான் கில்லாடி"

இப்படி தீபாவளிக்கு இரண்டு மாதங்கள் முன்னதாக காத்தாடி சீசன் ஆரம்பிப்பதற்கான அறிகுறிகளாய் இவ்வகை வசனங்களை வட சென்னையில் கேட்கலாம். இரண்டு மாதங்கள் முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாய் காத்தாடிகள் பறக்க ஆரம்பித்து தீபாவளி நெருங்கும் போது பூமியை சுற்றும் விண்கலம் போல காத்தாடிகள் நாற்புறமும் மொய்க்க ஆரம்பிக்கும்.

அதுவரை பம்பரம், கோலி, ஐஸ்பாய் என விளையாடிக்கொண்டிருந்த நான் முதல் முறையாக காத்தாடி விட ப்ரோமஷன் ஆனது நண்பன் ஜோதி வீட்டு மாடியில் தான். மாஞ்சா போடும் போது பல நூறு தடவை கையை அறுத்த அந்த நூல் கடந்த வாரம் ஒரு பிஞ்சு உயிரை பறித்திருக்கிறது. பத்து/பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை இது போன்ற சம்பவங்கள் நடந்ததாக நினைவில்லை.

பலரும் வெறுக்கும் இவ்விளையாட்டு ஒன்றும் லேசுபாசானது அல்ல பாஸூ. இதிலும் பல நுணுக்கமான விசயங்கள் இருக்கின்றன. 

காத்தாடி விடுவதின் முதல் பாடம் லொட்டாயை சுற்றத்தெரியணும். கிட்டதட்ட இது ஒரு அப்ரண்டீஸ் பணி. டீலீல் காத்தாடி அறுந்து போய்விட்டால் மிக வேகமாக லொட்டாயை கொண்டு நூலை சுற்ற வேண்டும். இல்லெயெனில் எதிராளிகள் நமது நூலைக் கைப்பற்றக்கூடும். கீழ்கண்ட படத்தில் உள்ள இரண்டு நீளமான கட்டையை பிடித்து இரண்டு கையால்  சுற்ற வேண்டும்.

லொட்டாய்

பின்பு காத்தாடிக்கு சூஸ்திரம் போடுவது, வால் கட்டுவது, சாய் கந்தை போன்றவை அடுத்தடுத்த பாடங்கள். திமிறும் காளையை அடக்கும் மூக்கணாங்கயிறு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் காத்தாடி சூஸ்திரம். கொஞ்சம் பிசகினாலும் காற்றின் எதிர்/பக்கவாட்டு விசையை சமாளிக்க முடியாமல் எங்காவது போய் மாட்டிக்கொள்ளும்.

வால் என்பது ஒரு காத்தாடி ஆடாமல் அசையாமல் பறக்க கட்டுவது. இது பெரும்பாலும் மாஞ்சா போடும் நேரத்தில் மட்டும் உபயோகப்படும். அல்லது சிறுவர்கள் காத்தாடி விடும் போது கட்டுவார்கள். சில காத்தாடிகள் உண்டாக்கும் போது manufacturing defectஆகி பறக்கும் போது ஒரு பக்கம் சாயும் . அப்போது சாய்கந்தையாக துணியை மற்ற பக்கம் சேர்ப்பார்கள்.

இவையனைத்தும் கற்றபிறகு "டேய் தம்பி கொஞ்சம் இதை பிடிச்சுக்க அண்ணன் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்" என அடிக்கடி நூல் நம் கையில் கிடைக்கும். இவ்வாறு கொடுக்கும் நேரங்களில், நூல் விட்டு காற்றாடியை வட்டமடிக்கும் வித்தை(பெரலு!), நேராக பிடித்து உச்ச தலைக்கு மேலே(ஸ்டிப்!) கொண்டு செல்லவும் பழகிக்கொள்ளவேண்டும்.

இப்படி சில சில நுணுக்கங்களை கற்கும் போதே காத்தாடி விடுதலின் மிக முக்கியமான கட்டமான மாஞ்சா போடுதல் கற்க வேண்டும். எங்கள் தெருவில் மொத்தம் மூன்று முக்கியமான கோஷ்டிகள் இருக்கும். ”கோபி” “தெருமுனை மாடி வீடு” “ஜோதி”. இதில் ஒவ்வொரு வரும் மாஞ்சா போடும் பார்முலாவை மிக ரகசியமாக வைத்திருப்பர். மாஞ்சாவை காய்ச்சும் போதும் சில நம்பிக்கையான ஆட்கள் மட்டுமே அருகில் இருப்பர்.

வஜ்ரம், சோடா மாவு, பாட்டில் துண்டுகள், ஆல மர(?) வேர், கலர் பவுடர்,  முட்டை ஆகியவற்றோரு மற்றுமொரு முக்கிய பொருள் வெகு சிலரால் சேர்க்கப்படும். நாயின் கக்கா(!). இவையனைத்தையும் நன்றாக காய்ச்ச வேண்டும். கலக்கு முறை பெரிதாக எதுவும் இல்லை. யுனிக் இண்டர்வெல் அதாவது சீரான இடைவெளியில்(மேஜர்?) கலக்க வேண்டும்.

மிக முக்கியமாக நூல்களை தேர்ந்தெடுக்க வேண்டும். சிறுசங்கிலி(சற்று மெலிதாக இருக்கும் நூல்), பெருவண்டி(தடிமனாக), செயின், ட்ரொயின் போன்ற நூல்களில் ஒன்றை தேர்தெடுக்க வேண்டும். இதில் ட்ரொயின் எனப்படும் நூல் மிகவும் உறுதியானது. ஆனால் சாதா டீல்களுக்கு இது சரி வராது. சிக்கு டீல்களுக்கு மட்டுமே சரி வரும். டீல் என்ன என்பதைப்பற்றி பின் வரும் பத்திகளில் தெளிவாக காண்போம் (டாய் கதவை சாத்துங்கடா. எவனும் வெளிய போகக்கூடாது).

பின்பு காத்தாடிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். எட்டனா காத்தாடி, கால்ஷீட், அரை ஷீட், முக்கா ஷீட், ஃபுல் ஷீட் என சைஸ் வாரியாக அதாவது அளவு வாரியாக (இன்னுமாடா மேஜர் சாகல!) பிரிக்கப்பட்டிருக்கும். இதில் மாஞ்சா போடும் போது முக்கா ஷீட் அல்லது ஃபுல் ஷீட் காத்தாடிகளே பரிந்துரைக்க வேண்டியவை. காய்ச்சிய மாஞ்சாவினை சூடோடு எடுத்து உச்சி வெயிலில் மொட்டை மாடியில் கொண்டு வர வேண்டும். பின்பு காத்தாடியில் வால் கட்டுவது முக்கியமானது. அது ஒரு கோட் வேர்ட் மாதிரி. "நான் மாஞ்சா போடுறேன். என்கிட்ட டீல் வேணாம்" என்பதாக பொருள் கொள்ளலாம். மற்றவர்களும் இதை மதித்து அவரது காத்தாடியை டீலுக்கு போவதில்லை. (விரோதகாரன் வூட்டோட இருந்தா வுட்ரனும். தனியா வரும் போது தான் போடனும்.). காத்தாடியை மாஞ்சாவில் மிக்ஸ் செய்த நூலில் பறக்க விட்டு காய வைக்க வேண்டும்.


இதே போல் நாலைந்து முறை நூல் முழுதும் விட்டு காத்தாடியை இறக்க வேண்டும். இது போன்ற சமயங்களில் கண்ணுக்கே தெரியாத தூரத்தில் காத்தாடி பறக்கும். முதல் முறை மாஞ்சா விடும் போது கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று சற்று பயமாக இருக்கும்.  பின்பு அதுவே பழகி தைரியமாக விடலாம்.

காத்தாடிகளில் பலவகை உண்டு. பாம்பே, ராக்கெட், இரட்டை கண், ஒத்தை கண், நாமம் என பலவகை படும். இதில் சற்று பணபலம் படைத்தவர்கள் தங்களது முதல் எழுத்துக்களை உள்ள காத்தாடிகளை ஆர்டர் செய்தும் விடுவதுண்டு.

இனி டீல் என்பது என்ன என்பதை பார்போம். மாஞ்சா போட்ட நூலைக்கொண்டு காத்தாடியை பறக்க விட வேண்டும். உலகக்கோப்பை கிரிக்கெட்டை விட சுவராஸியமானது இந்த விளையாட்டு. எந்த வித மேட்ச் பிக்ஸிங்கும் இல்லாமல் இரண்டு காத்தாடிகளின் நூல்கள் உராயும் படி பின்னிப்பிணைந்து கொள்ளுமாறு விடுவதே டீல். அவ்வாறு டீல் ஆகும் போது நாம் நூலை வேகமாக விடவேண்டும். நூல்களை வேகமாக விட வில்லையெனில் உராய்ந்த இடத்திலேயே உராய்ந்து நூல் அறுந்து போகும். யாருடைய நூலில் பாட்டில் மிகச்சரியாக அளவாக கலந்து சரி விகிதத்தில் நூலில் படர்ந்து உள்ளதோ அவரது நூல் லேசில் அறுந்துவிடாது.

அறுந்த காத்தாடி ஆத்துல போற தண்ணி மாதிரி. அதை சொந்தம் கொண்டாட முடியாது. நக்கறவனுக்கே அந்த தண்ணி. ஐ மீன் அந்த காத்தாடியை பிடிக்கிறவனுக்கே சொந்தம்.

இன்னும் பல நுணுக்கங்களைக் கொண்டது இந்த காத்தாடி விடுதல். இதில் உள்ள ஒரே குறை மொட்டை மாடியில் மேலே பார்த்துக்கொண்டே விடுவதால் அடிக்கிற வெயிலுக்கு வெள்ளைகாரனே கறுப்பாக நிறம் மாறும் வாய்ப்பு அதிகம். (இப்ப தெரியுதா நான் ஏன் கறுப்பானேன்னு?). கழுத்து சுளுக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

ரெண்டை கண் கால் ஷீட் பானா காத்தாடியுடன் பொடிசுகள்

நீதிமன்றத்தில் தடை செய்யப்பட்ட இவ்விளையாட்டு இன்று சென்னையில் பெரும்பாலும் காணமுடியவதில்லை. அதையும் மீறி சில பேர் விளையாடி சில உயிர்களை காவு வாங்குகின்றனர். பல வருடங்களாக மாஞ்சா போட்டு காத்தாடி விட்டவன் என்ற முறையில் சொல்கிறேன் கண்டிப்பாக தடை செய்ய வேண்டிய விளையாட்டு தான். பாதுகாப்பாக மாஞ்சா போடும் போதே பல முறை கையை அறுத்திருக்கிறது. அப்போதெல்லாம் விளைவுகளை எண்ணிப்பார்த்ததில்லை. எதிரியை வெல்ல வேண்டும் என்ற வெறியே இருந்தது. இனி இவ்விளையாட்டு முழுவதுமாக அழியும் பட்சத்தில் இப்பதிவு ஒரு ஆவணமாக விக்கி பீடியா போல (செத்தாண்டா விக்கி பீடியா காரன்) பின்வரும் சந்ததியனர் படிக்க உபயோகப்படட்டும்.

தகிடுதத்தோம்

சத்தியத்தை காப்பாற்றுவது போல் வேறெந்த கஷ்டமான விஷயமும் இருக்க முடியாது. மாதம் மினிமம் நான்கு பதிவுகள் எழுதுவது, புதிய சாப்ட்வேர் படிப்பது, உடல் எடையை 77கிலோவிலிருந்து 74 ஆக குறைப்பது வரை பலமுறை எனக்கு நானே சத்தியம் செய்திருக்கிறேன். கவனிக்க 'பலமுறை'.......

அப்படி செய்த ஒரு சத்தியத்திலிருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டேன். "உசுரே போனாலும் யார்கிட்டவும் சொல்லமாட்டேன் மாப்பி" என்று என் ஆருயிருர் தோழன் இராஜேந்திரனிடம் 9 வருடங்களுக்கு முன்பு சத்தியம் செய்து கொடுத்திருந்தேன். கடந்த மாதம் அந்த சத்தியத்திற்கு மதிப்பில்லாமல் போனது அவனுடன் தொலைபேசும் போது தெரிந்தது.

என் வீடு அப்போது மூன்றாவது மாடியில் இருந்தது. நான் பால்கனியில் அவனிடம் பேசிக்கொண்டிருந்தேன்."சத்தியமா செத்துருவயாடா?" அங்கு வைத்து அவனிடம் அதை கேட்டிருக்ககூடாது தான். சட்டென்று பால்கனியிலிருந்து கீழே குதிக்க தயாராவான் என்று எனக்கெப்படி தெரியும்!. கையை பிடித்து அழைத்து மொட்டை மாடிக்கு அழைத்துச்சென்றேன் (இன்னும் உசரமாவா?!) "ஏன்டா லூசு மாதிரி நடந்துக்கிற?" என்பதையே விதம் விதமாக திட்டினேன்.

ராஜேந்திரன் அவன் முடிவில் தயாராக இருந்தான். கூடப்படிக்கும் பெண்ணை காதலிக்கிறான். நான் மெக்கானிக்கல் அவன் கம்யூட்டர் டெக்னாலஜி. எனக்கும் அந்த பெண் தோழி தான். அவளிடம் அரசல் புரசலாக காதலை தெரியப்படுத்தியும் அவள் கண்டுக்கொள்ளவில்லை. முடிவாக என்னிடம் வந்திருக்கிறான். காதல் ஒரு ஆளை எப்படி மாற்றிவிடுகிறது? அவன் அப்பெண்ணின் மீது பைத்தியமாகவே ஆகிவிட்டான். தற்கொலைக்கும் ரெடி.

"நீ நிறைய ப்ரண்ட்ஸ்க்கு ஹெல்ப் பண்ணியிருக்கல்ல. எனக்கும் நீ தான்டா உதவி செய்யனும்" என்றான்.  நானா? கொஞ்சம் கஷ்டமான விசயம் தான்.

முன்னதாக இன்னொரு நண்பனுக்காக ஒரே பஸ்ஸில் வரும் பெண்ணிடம் அவன் காதலை சொல்ல தூது போயிருக்கிறேன். "வித்யா யூ நோ, நான் தம்மடிப்பேன், பாக்கு போடுவேன், தண்ணிகூட அடிப்பேன்." பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தேன். (இதுவரை சிகரெட் பிடித்ததில்லை என்பது வேறு விசயம்) ஆனா விஜி இருக்கானே ரொம்ப நல்ல பையன். அதிர்ந்து கூட பேச மாட்டான். ஒரு கெட்ட பழக்கம் கூட இல்ல. எனக்கு தங்கை இருந்து அதை மட்டும் அவன் காதலிச்சிருந்தான்னா (கொலையே பண்ணியிருப்பேன்) கண்டிப்பா நானே அவங்க கல்யாணத்தை நடத்தி வைப்பேன். அவ்ளோ நல்லவன் விஜி" கடைசி வரை சிகரெட்டை பத்த வைக்கவில்லை.  "நான் விஜிகிட்டவே சொல்லிக்கிறேன்" என்று ஓடிவிட்டாள்.

மறுநாள் விஜியிடம் அவனை காதலிக்கவில்லை எனவும், முடிந்தால் என்னோடு உள்ள ப்ரண்ட்ஸிப்பை கட் செய்யும்படியும் அவனுக்கு அறிவுரை செய்து விட்டு போயிருக்கிறாள் அந்த சதிகாரி.

இதெல்லாம் ஞாபகம் வந்து இந்த முறை சொதப்பகூடாது என்று ப்ளான் செய்தேன். "மாப்ள ஒரு ரெண்டு நாள் காலேஜ்க்கு லீவு போடு. அப்புறம் உன் தம்பியை என்கிட்ட பேச சொல்லு. உனக்கு நாளைக்கு மிச்சம் சொல்றேன்." என்று அனுப்பி வைத்தேன். (எதையும் ப்ப்ப்ளான் பண்ணி தான் செய்யனும்).

இரண்டு நாள் அவன் வரவில்லை என்றதும் அவனது தோழியர் கூட்டம் என்னிடம் கேட்க ஆரம்பித்தனர்.(பயபுள்ளைக்கு க்ளாஸ்ல ஆம்பள பசங்களே ப்ரண்ட்ஸ் இல்ல போல). மிகவும் சோகமாக மௌனத்தை மட்டும் பதிலாக தந்து விட்டுக்கொண்டிருந்தேன். அது அவர்களுக்கு இன்னும் குழப்பத்தை கொடுத்தது.

மூன்றாம் நாள் அவன் தம்பியிடம் சொல்லி காலேஜ்க்கு 10 மணியளவில் வரச்சொன்னேன். தோழியர் கூட்டம் காண்டீனில் டீ அடித்துக்கொண்டிருந்தது. சம்பந்தப்பட்ட பெண்ணும் இருந்தாள். "உங்க எல்லார் கிட்டவும் முக்கியமா ஒரு விசயம் பேசனும்" என்றேன். அவன் தம்பியிருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றேன். "இவன் தான் ராஜேந்திரன் தம்பி" அறிமுகம் செய்த போதே தோழியருக்குள் கலக்கம். ராஜேந்திரனுக்கு என்ன ஆச்சு? ஏன் வரல காலேஜ்க்கு" என நச்சரிக்க தொடங்கினார்கள்.

இந்த தீடீர் தாக்குதலில் நிலைகுலைந்த தம்பி "சூரி அண்ணா..."என இழுக்க. "நானே சொல்றேன்... நானே சொல்றேன்" என அவன் டயலாக்கையும் நானே சொன்னேன் " உங்களுக்கும் அவனுக்கும் ஏதாச்சும் பிரச்சனையா?" என்றேன். குறிப்பிட்ட பெண்ணை தவிர அனைவரும் "இல்லையே" என்றனர். அவளுக்கு மட்டும் ஏதோ புரிந்தது போல் இருந்தாள்.

"தட் இடியட் ட்ரையிடு டூ கமிட் சூஸைட்..." என கதறி கதறி அழுதேன்(கௌரவம் சிவாஜி?). அவன் தம்பியும் அழுதான். "வாட்.. சூசைடா?'  என அனைவரும் அதிர்ச்சியாக, சம்பந்தப்பட்ட பெண் அழும் நிலைக்கே சென்றுவிட்டாள். "எப்படி? ஏன்?" தோழியர். "தூக்கு"  "தெரியல" தம்பி (மணிரத்னம்?) 

"கடைசி நேரத்துல அவங்கம்மா பார்த்து தடுத்துட்டாங்க"  நான்.

தோழியர் கூட்டம் கவலையால் துவண்டது.  "நாளைக்கு அவன் வருவான். அவன்கிட்ட ஒன்னும் கேட்காதீங்க. அவன் மனசு நோகாமாக நடந்துக்கங்க" நானும் அவன் தம்பியும் கிளம்பினோம். இந்த சிம்பதி வேலைக்காகும் என இதுவரை பார்த்த தமிழ்படங்கள் உறுதி செய்தன.

கிட்டதட்ட போட்ட ஸ்க்ரிப்ட் ஒழுங்காக நடித்து முடித்தோம். ராஜேந்திரன் தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தான். "டேய் மாப்ள கவலைப்படாத. அன்னைக்கு நான் தடுக்கலன்னா பால்கனியில இருந்து குதிச்சிருப்பல்ல? அப்படி குதிச்சு பொழச்சதா நினைச்சுக்க. ஏன் பொய் சொன்னதா நினைக்கிற" எனக்கான நியாயங்கள் அவனுக்கும் பொருந்திப்போனதில் ஆச்சர்யம் இல்லை.

அடுத்த நாள் அந்த தோழியர் கூட்டத்தில் அவன் ஒரு கண்ணனாகவே மாறிப்போனான். அவனை தனியாக விடாமல் அவன் கூடவே அவனது தோழிகள் இருந்தனர். காலேஜ் முடிந்ததும் என்னிடம் விட்டுவிட்டு சென்றனர். (தனியா வீட்டுக்கு போகவிடக்கூடாதாம். நான் கொண்டு போய் விடனுமாம்) ஆனால் அது அவனுக்கு தேவையில்ல. அவள் ஒருத்தியின் மாற்றம் மட்டும் அவனுக்கு தேவைப்பட்டது.  அதுவும் நடந்தது.அவளுகும் அவனை பிடித்தே இருந்தது. ஆனாலும் "எங்க வீட்ல ஒத்துக்கமாட்டாங்க. அதான் பயமாயிருக்கு" என்று சொல்லியே சம்மதத்தை சொல்லியிருக்கிறாள்.

காதல் தொடங்கி மூன்றுமாதங்களில் கல்லூரி முடிந்தது, ஹாஸ்டலில் தங்கி படித்தவள் ஊருக்கு சென்றாள். சென்றவள் என்ன பிரச்சனையோ தொடர்புகள் அறுந்தன. இவன் இங்கு பைத்தியமாக ஆகாத குறை. சில மாதங்கள் கழித்து ஊருக்கே சென்று தேடினான். அவள்  வீட்டிற்கு சென்று கதவையும் தட்டி இருக்கிறான்.

அவளின் அம்மா. "கொஞ்சம் தண்ணீர் கொடுக்க முடியுமாமா?" என்றிருக்கிறான். "இருப்பா" என்று உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்திருக்கிறார்கள்.

தண்ணீரை அருந்தி விட்டு  அவள் பெயரை சொல்லி "எப்படிம்மா இருக்கா?" என்றிருக்கிறான்.

"அவ ப்ரண்டாப்பா நீ? அவளுக்கு போன மாசம் தான் கல்யாணம் ஆச்சு" என்றிருக்கிறார்கள். உச்சி வெயிலில் மயக்கம் வராத குறையாக அப்படியே நின்றிருக்கிறான். துணுக்குற்ற அவள் அம்மா ஏதோ புரிந்து மிக மெதுவாக "தயவு செய்து போயிடுப்பா. உன்னை கெஞ்சிக்கேட்டுக்கிறேன்" என்றிருக்கிறார்கள்.  எல்லாம் ஒரு மாதிரி புரிந்தவனாய் ஊருக்கு வந்திருக்கிறான்.

அவனுக்கு இதிலிருந்து மீள சில வருடங்கள் ஆயின. இப்போது கல்யாணம் ஆகிவிட்டது. கல்யாணம் முடிந்து அடுத்த நாள் போன் செய்தேன். "மாப்ள எல்லாம் கனவு மாதிரி இருக்குடா. அவளை பத்தி மனைவிகிட்ட எல்லாம் சொல்லிட்டேன். நாம  அதுக்காக பண்ணின நாடகத்தை கூட சொல்லிட்டேன்" 

"அடப்பாவி அப்ப சத்தியம் பண்ணி யார்கிட்டவும் சொல்ல வேணாம்னு முடிவு பண்ணினோமேடா. ஏன் சொன்ன?"

"எனக்காக பொறந்தவ இவதான்டா. இவகிட்ட மறைச்சு என்னாகப்போகுது. அவளும் அதையெல்லாம் ஜாலியா எடுத்துகிட்டா." என்றான்.

நிகழ்வுகள் உருவாகும் போது தான் வலிக்கிறது. அவை ஞாபகங்களாக புதையும் போது ஒரு வித சுகத்தையே தருகிறது போலும்.

டேய் மாப்ள நல்லாயிருப்படா :)

சில்லறைகள்

கடந்த வாரம் பர்ஸில் வைத்திருந்த பணத்தில் பத்து,இருபது, ஐம்பது திரஹமாக நூறு திரஹம் வரை கணக்கில் வரவில்லை. அல்லது காணவில்லை. ஆனால் அதனோடு வைத்திருந்த ஐநூறு, ஆயிரம் திரஹம் நோட்டுகள் அப்படியே இருந்தன. எவ்வாறு செலவு செய்தேன் என ஞாபகமே வரவில்லை. நண்பனிடம் சொன்னேன். "சில்லறை தானேடா எங்கயாச்சும் செலவு பண்ணியிருப்ப" என்றான்.

பத்து ரூபாய் இருபது ரூபாய் நோட்டெல்லாம் இப்போது சில்லறையாகிவிட்டது. சிறுவயதில் அப்பா வேலைக்கு போய்விட்டு மதிய உணவிற்காக வீட்டிற்கு வருவார். சிறிது நேரமும் உறங்குவார். கை எட்டாத தூரத்தில் அவரது சட்டை பாக்கெட் இருக்கும். பள்ளிகூடம் விட்டதும் வீட்டிற்கு வந்து வெளியே விளையாட சென்று விடுவேன்.விளையாட போகும் முன் அப்பாவின் சட்டையை கீழிருந்து ஆட்டுவேன். சில்லறையின் சத்தம் கேட்கும். அம்மாவிடம் ஓடிப்போய் “அம்மா பத்து காசு அப்பா பையில இருந்து எடுத்து கொடும்மா” என்றதும் அம்மாவும் “உஷ்ஷ்ஷ்” சத்தம் போடாம வா என்ற சைகையுடன் மெதுவாக நடந்து அப்பாவிற்கு தெரியாமல் எடுத்து கொடுப்பார் அல்லது தெரியாமல் எடுத்துக்கொடுத்தது போல் நடிப்பார்.  அப்பாவுக்கு தெரியாமல் தான் சில்லறைகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன் என வருடம் பல கடந்தும் நினைத்துக்கொண்டிருந்தேன்.

அப்பா முழுக்கை சட்டையை முழுங்கை வரை மடித்துவிட்டிருப்பார். லைட் கலர் சட்டையையே இடுவார். கை மடித்த விட்ட இடத்திலும் கழுத்திலும் வியர்வை அப்பிக்கொண்டிருக்கும். சில்லறைகளை வெளிபாக்கெட்டில் தான் வைத்திருப்பார். உள்பாக்கெட்டில் பெரும்பாலும் பண நோட்டுகளோடு வியாபாரம் சம்பந்தமான கணக்கு வழக்குகள் இருக்கும். சில்லறைகள் அதிகம் இருந்தால் அன்று அப்பாவிற்கு நிறைய லாபம் போல என நானே எனக்கான சமாதானமாக நினைத்துக்கொள்வேன். சில்லறைகளே அதிகபட்ச பணமாக தெரிந்த காலங்கள்.

அப்பாவிடம் தான் காசு கேட்க பயமே தவிர அம்மாவிடம் பயம் இருந்ததில்லை. கேட்டதும் கொடுப்பார். இல்லாத சமயங்களில் கொஞ்சம் குறைவாக கிடைக்கும். நாலணா கேட்டால் பத்து பைசா தருவார். அம்மா பணம் சேர்த்து வைத்து இதுவரை பார்த்ததில்லை. அப்பா கொடுக்கும் பணம் வீட்டுசெலவிற்கே சரியாக இருக்கும். அதில் சேமிக்கும் சாமர்த்தியம் அம்மாவிற்கு இல்லை. அதனாலயோ என்னவோ கேட்கும் போது சில்லறைகள் எனக்கு கிடைத்தது.

அம்மாவை ஏமாற்றி சில்லறைகள் எடுப்பதும் எளிதாக இருந்தது. ஏதாவது ஒரு ஷெல்ப்பில் பேப்பர் விரிப்பிற்கு கீழே சில நேரம் சில்லறைகளை அம்மா வைத்திருப்பார். விளிம்பில் இருக்கும் அந்த சில்லறையை சற்று அதிகப்படியாக உள்ளே தள்ளி வைத்து விடுவேன். அம்மா "இங்க தானே எங்கேயோ வச்சேன்" என முணங்குவது கேட்கும்.  அம்மா அது போல் தொலைந்த சில்லறைகளை அதிக தேடிப்பார்த்ததில்லை. இரண்டு நாட்கள் கழித்து அந்த சில்லறையை எடுத்து ஏதாவது வாங்கி தின்று விடுவேன். அம்மாவின் மறதியால் எனக்கு கிடைத்த காசு இது திருடியதாக வராது என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொள்வேன்.

அப்பாவின் சட்டைப்பை எட்டும் பருவம் வந்ததும் பத்து பைசா, நாலணாவிலிருந்து எட்டணா, ஒரு ரூபாய்  அளவிற்கு உயர்ந்தது. தின்பண்டங்கள், விளையாட்டுப்பொருள்கள் என இருக்கும் காசுக்கேற்றவாறு என் தேவையும் அடங்கியது. அப்பா ஒரு போதும் பையிலிருந்து காசு எடுத்தயா என கேட்டதில்லை. சில சமயம் வெறும் ஒரு ரூபாய் மட்டும் சட்டை பையில் இருக்கும். அதை எடுத்து சட்டைப்பாக்கெட் காலியாக விட்டுருக்கிறேன். அப்பாவிற்கு நான் எடுப்பது தெரியாது என்ற நம்பிக்கையில் இருந்திருக்கிறேன். வருடங்கள் பல கடந்தும்.

பின்பு பள்ளி படிப்பு முடிந்ததும் சில்லறைகளின் தேவை நோட்டுக்களாக உருவெடுத்தப்பின் அப்பாவின் பாக்கெட்டில் சில்லறைகள் எடுப்பதும் குறைந்தது. அம்மாவிடம் கெஞ்சி கெஞ்சி பணம் வாங்குவது வாடிக்கையானது. அம்மாவின் பர்ஸில் இருக்கும் நோட்டுக்களில் கூட பத்து ரூபாய்கள் எடுத்த ஞாபகம். அம்மாவும் அப்போது எதுவும் கேட்டதில்லை. மாறாக தினமும் பர்ஸில் நூறு ரூபாய் தாள்களுக்கு நடுவே சில பத்து ஐந்து ரூபாய் தாள்கள் இருக்கும்.

கஷ்டமும் கவலையும் தெரியாமல் வளரவில்லை என்றாலும், அக்கா, அண்ணன் தேவையை விட அனைத்து விதத்திலும் என் தேவைகள் முதலில் பூர்த்தி செய்யப்பட்டதாக நினைக்கிறேன். என்னடா படிக்கிற? எப்படி படிக்கிற? என்று எப்போதும் கேட்டதில்லையோ அதே போல் காணாது போன சில்லறைகளும் நோட்டுக்களும் எங்கே என இதுவரை என்னிடம் அப்பாவும் அம்மாவும் கேட்டதில்லை. தேன்மிட்டாய்களும் மோதிர அப்பளமும் வாங்கிய பத்து பைசாவிலிருந்து காலேஜ் கேன்டீன், சினிமா, நண்பர்களோடு சுற்றுலா என செலவழித்த நோட்டுகள் அனைத்தும் யாருக்கும் தெரியாது என்ற மாயையில் இதுவரை இருந்தேன்.

ஆம். இருந்தேன். கடந்த முறை விடுமுறைக்கு இந்தியா சென்ற போது மதிய தூக்கத்தில் இருந்தேன். ”மாமா எழேன்.. மாமா கண்ணை திறயேன்...” என இமையை மெதுவாக திறக்க முயன்று கொண்டிருந்தனர் அக்கா மகளும் மகனும். தூக்கம் மெதுவாக கலைந்தாலும் முழுவதுமாக எழ மனம் வரவில்லை. “ம்ம்ம்..ம்ம்” என முணங்கியவாறு இருந்தேன். இரண்டு வாண்டுகள் ”அம்மாச்சி அம்மாச்சி...” என உடனே என் அம்மாவை அழைத்து வந்தனர்.

“அம்மாச்சி மாமாவை எழுப்பேன். ப்ளீஸ்” என்றனர்

”மாமா தூங்கிறானே. என்ன வேணும்னு சொல்லுங்க.” என்றார்.

“வெளிய ஐஸ்க்ரீம் போகுது. எனக்கு மேங்கோ ஐஸ் வேணும். இவனுக்கு வெண்ணிலா ஐஸ்க்ரீம் வேணும். வாங்கி கொடு” என்றனர்

“உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்” மெதுவா பேசுங்க எனறு சைகையில் காட்டி எனக்கு தெரியாமல் அம்மா என் பர்ஸிலிருந்து சில சில்லறை நோட்டுகளை எடுத்து வாண்டுகளிடம் கொடுத்தார்.

அரைதூக்கத்தில் அப்பாவின் சட்டைப்பை சில்லறை மர்மத்திற்கான விடை கிடைத்தது. அன்றிலிருந்து கணக்கு வைக்காத நிறைய சில்லறை நோட்டுகளை பர்ஸ் முழுதும் நிரப்பி வைத்தே வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தேன்.

தமிழர்களே தமிழர்களே

தமிழர்களே தமிழர்களே....... கடலில் தூக்கி போடும் நேரம் வந்து விட்டது....save #TNfisherman

படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்கவும்

விஜயகாந்திற்கு சமர்ப்பணம்

வருசத்தோட முதல் பதிவே இப்படி மனசு நெகிழ்ந்து போடுவேன்னு நினைக்கல. "எப்படா இந்த வருசத்தோட புது பதிவு போடுவ?"ன்னு இதுவரைக்கும் கேட்ட அந்த ஒருத்தருக்கும்(வேற யாரு என் மனசாட்சி தான்), கேட்க நினைச்சு ஆனா மறந்து போன மிச்சம் 30000 பேருக்கும் நன்றிகள்.

கேப்டன் விஜயகாந்த் மட்டும் இல்லைன்னா இந்த வருசம் இனிமையா தொடங்கியிருக்குமான்னு தெரியல. இதுக்காகவே இந்த வருசம் தமிழக ஆச்சி கட்டில்ல கேப்டன் படுக்கனும். (ஆச்சி வேணா ஒரு அஞ்சு வருசத்துக்கு வேற கட்டில்ல படுத்துக்கட்டும்). ரொம்ப ஓவரா இருக்கோ? சரி அப்ப அட்லீஸ்ட் சேப்பாக்கம் தொகுதியிலாவது ஜெயிக்கனும்.

கேப்டனை பத்தி தெரியாதவங்க இந்த தமிழகத்துல யாருமே இருக்க முடியாது.  அப்படி தெரியாத கொஞ்ச நஞ்ச பேரும் கேப்டனோட  புகழை உயர்த்தி அண்ணன் லக்கிலுக் எழுதிய "கேப்டன்" புத்தகத்தை படிச்சதன் மூலமா தெரிஞ்சிருப்பாங்க. அப்படியும் தெரியாத ஒருசிலரும் என்னோட "கை எட்டும் தூரத்தில் ஆஸ்கார்" பதிவு மூலமா தெரிஞ்சிருப்பாங்க. இப்படி பதிவுலகத்துல பரவிய அவரது புகழ், அவருக்கு கூடிய ரசிகர்கள் கூட்டம், என்னோட பதிவுக்கு ஓட்டுகள் போட்டு தமிழ்மண விருது இறுதிசுற்று வரைக்கும் அனுப்பியிருந்தாங்க.நிச்சயமா என்னை தேர்ந்தெடுத்த நடுவர்களும் விஜயகாந்த ரசிகர்களா தான் இருக்க முடியும். நகைச்சுவை/கார்டூன் பிரிவு முதல் இடத்துக்காக அந்த பதிவை தேர்ந்தெடுத்த  தமிழ்மணத்திற்கும் & நடுவர்களும் என் நன்றிகள்.  இது மேலும் எனக்கு கேப்டன் பெருமைகளை பரப்பும் பதிவுகள் இடுற உத்வேகத்தை கொடுக்குது...கை அரிக்குது...  கால் உதறருது.. இப்பவே அதற்கான ஆரம்ப பணியை தொடங்கனும்னு தோணுது.
அப்பாட ஒரு படத்தை ரெடி பண்ணிட்டேன். ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியாச்சு

இதே மாதிரி கேப்டனோட புகழ்பாடும் பதிவுகள் பல இட எம்மை வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஜெய் கேப்டன்
ஜெய் ஜெய் கேப்டன்.
Related Posts with Thumbnails