"மச்சி ஆறாம் நம்பர் நூலை வச்சே நம்மளை வெட்டிட்டான்டா. மாஞ்சால என்னத்த தான் கலக்குறான்னு தெரியல"
"டேய் சூஸ்திரம் போடனும். நம்ம ஜோதிய கூப்பிடு. அவன் தான் கில்லாடி"
இப்படி தீபாவளிக்கு இரண்டு மாதங்கள் முன்னதாக காத்தாடி சீசன் ஆரம்பிப்பதற்கான அறிகுறிகளாய் இவ்வகை வசனங்களை வட சென்னையில் கேட்கலாம். இரண்டு மாதங்கள் முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாய் காத்தாடிகள் பறக்க ஆரம்பித்து தீபாவளி நெருங்கும் போது பூமியை சுற்றும் விண்கலம் போல காத்தாடிகள் நாற்புறமும் மொய்க்க ஆரம்பிக்கும்.
அதுவரை பம்பரம், கோலி, ஐஸ்பாய் என விளையாடிக்கொண்டிருந்த நான் முதல் முறையாக காத்தாடி விட ப்ரோமஷன் ஆனது நண்பன் ஜோதி வீட்டு மாடியில் தான். மாஞ்சா போடும் போது பல நூறு தடவை கையை அறுத்த அந்த நூல் கடந்த வாரம் ஒரு பிஞ்சு உயிரை பறித்திருக்கிறது. பத்து/பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை இது போன்ற சம்பவங்கள் நடந்ததாக நினைவில்லை.
பலரும் வெறுக்கும் இவ்விளையாட்டு ஒன்றும் லேசுபாசானது அல்ல பாஸூ. இதிலும் பல நுணுக்கமான விசயங்கள் இருக்கின்றன.
காத்தாடி விடுவதின் முதல் பாடம் லொட்டாயை சுற்றத்தெரியணும். கிட்டதட்ட இது ஒரு அப்ரண்டீஸ் பணி. டீலீல் காத்தாடி அறுந்து போய்விட்டால் மிக வேகமாக லொட்டாயை கொண்டு நூலை சுற்ற வேண்டும். இல்லெயெனில் எதிராளிகள் நமது நூலைக் கைப்பற்றக்கூடும். கீழ்கண்ட படத்தில் உள்ள இரண்டு நீளமான கட்டையை பிடித்து இரண்டு கையால் சுற்ற வேண்டும்.
லொட்டாய்
பின்பு காத்தாடிக்கு சூஸ்திரம் போடுவது, வால் கட்டுவது, சாய் கந்தை போன்றவை அடுத்தடுத்த பாடங்கள். திமிறும் காளையை அடக்கும் மூக்கணாங்கயிறு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் காத்தாடி சூஸ்திரம். கொஞ்சம் பிசகினாலும் காற்றின் எதிர்/பக்கவாட்டு விசையை சமாளிக்க முடியாமல் எங்காவது போய் மாட்டிக்கொள்ளும்.
வால் என்பது ஒரு காத்தாடி ஆடாமல் அசையாமல் பறக்க கட்டுவது. இது பெரும்பாலும் மாஞ்சா போடும் நேரத்தில் மட்டும் உபயோகப்படும். அல்லது சிறுவர்கள் காத்தாடி விடும் போது கட்டுவார்கள். சில காத்தாடிகள் உண்டாக்கும் போது manufacturing defectஆகி பறக்கும் போது ஒரு பக்கம் சாயும் . அப்போது சாய்கந்தையாக துணியை மற்ற பக்கம் சேர்ப்பார்கள்.
இவையனைத்தும் கற்றபிறகு "டேய் தம்பி கொஞ்சம் இதை பிடிச்சுக்க அண்ணன் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்" என அடிக்கடி நூல் நம் கையில் கிடைக்கும். இவ்வாறு கொடுக்கும் நேரங்களில், நூல் விட்டு காற்றாடியை வட்டமடிக்கும் வித்தை(பெரலு!), நேராக பிடித்து உச்ச தலைக்கு மேலே(ஸ்டிப்!) கொண்டு செல்லவும் பழகிக்கொள்ளவேண்டும்.
இப்படி சில சில நுணுக்கங்களை கற்கும் போதே காத்தாடி விடுதலின் மிக முக்கியமான கட்டமான மாஞ்சா போடுதல் கற்க வேண்டும். எங்கள் தெருவில் மொத்தம் மூன்று முக்கியமான கோஷ்டிகள் இருக்கும். ”கோபி” “தெருமுனை மாடி வீடு” “ஜோதி”. இதில் ஒவ்வொரு வரும் மாஞ்சா போடும் பார்முலாவை மிக ரகசியமாக வைத்திருப்பர். மாஞ்சாவை காய்ச்சும் போதும் சில நம்பிக்கையான ஆட்கள் மட்டுமே அருகில் இருப்பர்.
வஜ்ரம், சோடா மாவு, பாட்டில் துண்டுகள், ஆல மர(?) வேர், கலர் பவுடர், முட்டை ஆகியவற்றோரு மற்றுமொரு முக்கிய பொருள் வெகு சிலரால் சேர்க்கப்படும். நாயின் கக்கா(!). இவையனைத்தையும் நன்றாக காய்ச்ச வேண்டும். கலக்கு முறை பெரிதாக எதுவும் இல்லை. யுனிக் இண்டர்வெல் அதாவது சீரான இடைவெளியில்(மேஜர்?) கலக்க வேண்டும்.
மிக முக்கியமாக நூல்களை தேர்ந்தெடுக்க வேண்டும். சிறுசங்கிலி(சற்று மெலிதாக இருக்கும் நூல்), பெருவண்டி(தடிமனாக), செயின், ட்ரொயின் போன்ற நூல்களில் ஒன்றை தேர்தெடுக்க வேண்டும். இதில் ட்ரொயின் எனப்படும் நூல் மிகவும் உறுதியானது. ஆனால் சாதா டீல்களுக்கு இது சரி வராது. சிக்கு டீல்களுக்கு மட்டுமே சரி வரும். டீல் என்ன என்பதைப்பற்றி பின் வரும் பத்திகளில் தெளிவாக காண்போம் (டாய் கதவை சாத்துங்கடா. எவனும் வெளிய போகக்கூடாது).
பின்பு காத்தாடிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். எட்டனா காத்தாடி, கால்ஷீட், அரை ஷீட், முக்கா ஷீட், ஃபுல் ஷீட் என சைஸ் வாரியாக அதாவது அளவு வாரியாக (இன்னுமாடா மேஜர் சாகல!) பிரிக்கப்பட்டிருக்கும். இதில் மாஞ்சா போடும் போது முக்கா ஷீட் அல்லது ஃபுல் ஷீட் காத்தாடிகளே பரிந்துரைக்க வேண்டியவை. காய்ச்சிய மாஞ்சாவினை சூடோடு எடுத்து உச்சி வெயிலில் மொட்டை மாடியில் கொண்டு வர வேண்டும். பின்பு காத்தாடியில் வால் கட்டுவது முக்கியமானது. அது ஒரு கோட் வேர்ட் மாதிரி. "நான் மாஞ்சா போடுறேன். என்கிட்ட டீல் வேணாம்" என்பதாக பொருள் கொள்ளலாம். மற்றவர்களும் இதை மதித்து அவரது காத்தாடியை டீலுக்கு போவதில்லை. (விரோதகாரன் வூட்டோட இருந்தா வுட்ரனும். தனியா வரும் போது தான் போடனும்.). காத்தாடியை மாஞ்சாவில் மிக்ஸ் செய்த நூலில் பறக்க விட்டு காய வைக்க வேண்டும்.
இதே போல் நாலைந்து முறை நூல் முழுதும் விட்டு காத்தாடியை இறக்க வேண்டும். இது போன்ற சமயங்களில் கண்ணுக்கே தெரியாத தூரத்தில் காத்தாடி பறக்கும். முதல் முறை மாஞ்சா விடும் போது கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று சற்று பயமாக இருக்கும். பின்பு அதுவே பழகி தைரியமாக விடலாம்.
காத்தாடிகளில் பலவகை உண்டு. பாம்பே, ராக்கெட், இரட்டை கண், ஒத்தை கண், நாமம் என பலவகை படும். இதில் சற்று பணபலம் படைத்தவர்கள் தங்களது முதல் எழுத்துக்களை உள்ள காத்தாடிகளை ஆர்டர் செய்தும் விடுவதுண்டு.
இனி டீல் என்பது என்ன என்பதை பார்போம். மாஞ்சா போட்ட நூலைக்கொண்டு காத்தாடியை பறக்க விட வேண்டும். உலகக்கோப்பை கிரிக்கெட்டை விட சுவராஸியமானது இந்த விளையாட்டு. எந்த வித மேட்ச் பிக்ஸிங்கும் இல்லாமல் இரண்டு காத்தாடிகளின் நூல்கள் உராயும் படி பின்னிப்பிணைந்து கொள்ளுமாறு விடுவதே டீல். அவ்வாறு டீல் ஆகும் போது நாம் நூலை வேகமாக விடவேண்டும். நூல்களை வேகமாக விட வில்லையெனில் உராய்ந்த இடத்திலேயே உராய்ந்து நூல் அறுந்து போகும். யாருடைய நூலில் பாட்டில் மிகச்சரியாக அளவாக கலந்து சரி விகிதத்தில் நூலில் படர்ந்து உள்ளதோ அவரது நூல் லேசில் அறுந்துவிடாது.
அறுந்த காத்தாடி ஆத்துல போற தண்ணி மாதிரி. அதை சொந்தம் கொண்டாட முடியாது. நக்கறவனுக்கே அந்த தண்ணி. ஐ மீன் அந்த காத்தாடியை பிடிக்கிறவனுக்கே சொந்தம்.
இன்னும் பல நுணுக்கங்களைக் கொண்டது இந்த காத்தாடி விடுதல். இதில் உள்ள ஒரே குறை மொட்டை மாடியில் மேலே பார்த்துக்கொண்டே விடுவதால் அடிக்கிற வெயிலுக்கு வெள்ளைகாரனே கறுப்பாக நிறம் மாறும் வாய்ப்பு அதிகம். (இப்ப தெரியுதா நான் ஏன் கறுப்பானேன்னு?). கழுத்து சுளுக்கவும் வாய்ப்புகள் அதிகம்.
ரெண்டை கண் கால் ஷீட் பானா காத்தாடியுடன் பொடிசுகள்
நீதிமன்றத்தில் தடை செய்யப்பட்ட இவ்விளையாட்டு இன்று சென்னையில் பெரும்பாலும் காணமுடியவதில்லை. அதையும் மீறி சில பேர் விளையாடி சில உயிர்களை காவு வாங்குகின்றனர். பல வருடங்களாக மாஞ்சா போட்டு காத்தாடி விட்டவன் என்ற முறையில் சொல்கிறேன் கண்டிப்பாக தடை செய்ய வேண்டிய விளையாட்டு தான். பாதுகாப்பாக மாஞ்சா போடும் போதே பல முறை கையை அறுத்திருக்கிறது. அப்போதெல்லாம் விளைவுகளை எண்ணிப்பார்த்ததில்லை. எதிரியை வெல்ல வேண்டும் என்ற வெறியே இருந்தது. இனி இவ்விளையாட்டு முழுவதுமாக அழியும் பட்சத்தில் இப்பதிவு ஒரு ஆவணமாக விக்கி பீடியா போல (செத்தாண்டா விக்கி பீடியா காரன்) பின்வரும் சந்ததியனர் படிக்க உபயோகப்படட்டும்.