சில்லறைகள்

கடந்த வாரம் பர்ஸில் வைத்திருந்த பணத்தில் பத்து,இருபது, ஐம்பது திரஹமாக நூறு திரஹம் வரை கணக்கில் வரவில்லை. அல்லது காணவில்லை. ஆனால் அதனோடு வைத்திருந்த ஐநூறு, ஆயிரம் திரஹம் நோட்டுகள் அப்படியே இருந்தன. எவ்வாறு செலவு செய்தேன் என ஞாபகமே வரவில்லை. நண்பனிடம் சொன்னேன். "சில்லறை தானேடா எங்கயாச்சும் செலவு பண்ணியிருப்ப" என்றான்.

பத்து ரூபாய் இருபது ரூபாய் நோட்டெல்லாம் இப்போது சில்லறையாகிவிட்டது. சிறுவயதில் அப்பா வேலைக்கு போய்விட்டு மதிய உணவிற்காக வீட்டிற்கு வருவார். சிறிது நேரமும் உறங்குவார். கை எட்டாத தூரத்தில் அவரது சட்டை பாக்கெட் இருக்கும். பள்ளிகூடம் விட்டதும் வீட்டிற்கு வந்து வெளியே விளையாட சென்று விடுவேன்.விளையாட போகும் முன் அப்பாவின் சட்டையை கீழிருந்து ஆட்டுவேன். சில்லறையின் சத்தம் கேட்கும். அம்மாவிடம் ஓடிப்போய் “அம்மா பத்து காசு அப்பா பையில இருந்து எடுத்து கொடும்மா” என்றதும் அம்மாவும் “உஷ்ஷ்ஷ்” சத்தம் போடாம வா என்ற சைகையுடன் மெதுவாக நடந்து அப்பாவிற்கு தெரியாமல் எடுத்து கொடுப்பார் அல்லது தெரியாமல் எடுத்துக்கொடுத்தது போல் நடிப்பார்.  அப்பாவுக்கு தெரியாமல் தான் சில்லறைகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன் என வருடம் பல கடந்தும் நினைத்துக்கொண்டிருந்தேன்.

அப்பா முழுக்கை சட்டையை முழுங்கை வரை மடித்துவிட்டிருப்பார். லைட் கலர் சட்டையையே இடுவார். கை மடித்த விட்ட இடத்திலும் கழுத்திலும் வியர்வை அப்பிக்கொண்டிருக்கும். சில்லறைகளை வெளிபாக்கெட்டில் தான் வைத்திருப்பார். உள்பாக்கெட்டில் பெரும்பாலும் பண நோட்டுகளோடு வியாபாரம் சம்பந்தமான கணக்கு வழக்குகள் இருக்கும். சில்லறைகள் அதிகம் இருந்தால் அன்று அப்பாவிற்கு நிறைய லாபம் போல என நானே எனக்கான சமாதானமாக நினைத்துக்கொள்வேன். சில்லறைகளே அதிகபட்ச பணமாக தெரிந்த காலங்கள்.

அப்பாவிடம் தான் காசு கேட்க பயமே தவிர அம்மாவிடம் பயம் இருந்ததில்லை. கேட்டதும் கொடுப்பார். இல்லாத சமயங்களில் கொஞ்சம் குறைவாக கிடைக்கும். நாலணா கேட்டால் பத்து பைசா தருவார். அம்மா பணம் சேர்த்து வைத்து இதுவரை பார்த்ததில்லை. அப்பா கொடுக்கும் பணம் வீட்டுசெலவிற்கே சரியாக இருக்கும். அதில் சேமிக்கும் சாமர்த்தியம் அம்மாவிற்கு இல்லை. அதனாலயோ என்னவோ கேட்கும் போது சில்லறைகள் எனக்கு கிடைத்தது.

அம்மாவை ஏமாற்றி சில்லறைகள் எடுப்பதும் எளிதாக இருந்தது. ஏதாவது ஒரு ஷெல்ப்பில் பேப்பர் விரிப்பிற்கு கீழே சில நேரம் சில்லறைகளை அம்மா வைத்திருப்பார். விளிம்பில் இருக்கும் அந்த சில்லறையை சற்று அதிகப்படியாக உள்ளே தள்ளி வைத்து விடுவேன். அம்மா "இங்க தானே எங்கேயோ வச்சேன்" என முணங்குவது கேட்கும்.  அம்மா அது போல் தொலைந்த சில்லறைகளை அதிக தேடிப்பார்த்ததில்லை. இரண்டு நாட்கள் கழித்து அந்த சில்லறையை எடுத்து ஏதாவது வாங்கி தின்று விடுவேன். அம்மாவின் மறதியால் எனக்கு கிடைத்த காசு இது திருடியதாக வராது என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொள்வேன்.

அப்பாவின் சட்டைப்பை எட்டும் பருவம் வந்ததும் பத்து பைசா, நாலணாவிலிருந்து எட்டணா, ஒரு ரூபாய்  அளவிற்கு உயர்ந்தது. தின்பண்டங்கள், விளையாட்டுப்பொருள்கள் என இருக்கும் காசுக்கேற்றவாறு என் தேவையும் அடங்கியது. அப்பா ஒரு போதும் பையிலிருந்து காசு எடுத்தயா என கேட்டதில்லை. சில சமயம் வெறும் ஒரு ரூபாய் மட்டும் சட்டை பையில் இருக்கும். அதை எடுத்து சட்டைப்பாக்கெட் காலியாக விட்டுருக்கிறேன். அப்பாவிற்கு நான் எடுப்பது தெரியாது என்ற நம்பிக்கையில் இருந்திருக்கிறேன். வருடங்கள் பல கடந்தும்.

பின்பு பள்ளி படிப்பு முடிந்ததும் சில்லறைகளின் தேவை நோட்டுக்களாக உருவெடுத்தப்பின் அப்பாவின் பாக்கெட்டில் சில்லறைகள் எடுப்பதும் குறைந்தது. அம்மாவிடம் கெஞ்சி கெஞ்சி பணம் வாங்குவது வாடிக்கையானது. அம்மாவின் பர்ஸில் இருக்கும் நோட்டுக்களில் கூட பத்து ரூபாய்கள் எடுத்த ஞாபகம். அம்மாவும் அப்போது எதுவும் கேட்டதில்லை. மாறாக தினமும் பர்ஸில் நூறு ரூபாய் தாள்களுக்கு நடுவே சில பத்து ஐந்து ரூபாய் தாள்கள் இருக்கும்.

கஷ்டமும் கவலையும் தெரியாமல் வளரவில்லை என்றாலும், அக்கா, அண்ணன் தேவையை விட அனைத்து விதத்திலும் என் தேவைகள் முதலில் பூர்த்தி செய்யப்பட்டதாக நினைக்கிறேன். என்னடா படிக்கிற? எப்படி படிக்கிற? என்று எப்போதும் கேட்டதில்லையோ அதே போல் காணாது போன சில்லறைகளும் நோட்டுக்களும் எங்கே என இதுவரை என்னிடம் அப்பாவும் அம்மாவும் கேட்டதில்லை. தேன்மிட்டாய்களும் மோதிர அப்பளமும் வாங்கிய பத்து பைசாவிலிருந்து காலேஜ் கேன்டீன், சினிமா, நண்பர்களோடு சுற்றுலா என செலவழித்த நோட்டுகள் அனைத்தும் யாருக்கும் தெரியாது என்ற மாயையில் இதுவரை இருந்தேன்.

ஆம். இருந்தேன். கடந்த முறை விடுமுறைக்கு இந்தியா சென்ற போது மதிய தூக்கத்தில் இருந்தேன். ”மாமா எழேன்.. மாமா கண்ணை திறயேன்...” என இமையை மெதுவாக திறக்க முயன்று கொண்டிருந்தனர் அக்கா மகளும் மகனும். தூக்கம் மெதுவாக கலைந்தாலும் முழுவதுமாக எழ மனம் வரவில்லை. “ம்ம்ம்..ம்ம்” என முணங்கியவாறு இருந்தேன். இரண்டு வாண்டுகள் ”அம்மாச்சி அம்மாச்சி...” என உடனே என் அம்மாவை அழைத்து வந்தனர்.

“அம்மாச்சி மாமாவை எழுப்பேன். ப்ளீஸ்” என்றனர்

”மாமா தூங்கிறானே. என்ன வேணும்னு சொல்லுங்க.” என்றார்.

“வெளிய ஐஸ்க்ரீம் போகுது. எனக்கு மேங்கோ ஐஸ் வேணும். இவனுக்கு வெண்ணிலா ஐஸ்க்ரீம் வேணும். வாங்கி கொடு” என்றனர்

“உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்” மெதுவா பேசுங்க எனறு சைகையில் காட்டி எனக்கு தெரியாமல் அம்மா என் பர்ஸிலிருந்து சில சில்லறை நோட்டுகளை எடுத்து வாண்டுகளிடம் கொடுத்தார்.

அரைதூக்கத்தில் அப்பாவின் சட்டைப்பை சில்லறை மர்மத்திற்கான விடை கிடைத்தது. அன்றிலிருந்து கணக்கு வைக்காத நிறைய சில்லறை நோட்டுகளை பர்ஸ் முழுதும் நிரப்பி வைத்தே வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தேன்.

26 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

Anonymous said...

வடை

Anonymous said...

உண்மையாகவே நல்ல கொசுவத்தி தான். சின்ன வயசுல எல்லாரும் பண்ணுற சேட்டை தான்.. குறிப்பா பசங்க..
அப்பாவுக்குத் தெரியாம அம்மாகிட்ட காக்கா பிடிச்சு காசு வாங்குற டெக்னிக்கே தனிதான். ஏதாவது சாக்கு சொல்லி காசு தேத்திடுவாங்க.

Anonymous said...

முன்னாடியெல்லாம் சின்ன வயசுல பத்து பைசா நாலணா எட்டணானு வாங்குறதே பெரிய மலையா இருக்கும். நான் முதல் முதலா சில்லரையாக சேத்து வச்ச பணம், பத்து ரூபாய். அத திரும்ப திரும்ப எண்ணிப் பாத்து சந்தோசப்பட்டுக்குவேன். ஆனா இப்ப பத்து ரூபாய் எல்லாம் சாதாரணமாப் போய்டுச்சு. afterall அம்பது ரூபாய்னு பொடுசுக சொல்லுதுக.. என்னத்த சொல்றது..

அரபுத்தமிழன் said...

இந்த வாரம் பர்ஜுமான் சென்டரில், அவர்கள் சொல்லும் நம்பர், நம்மிடம் உள்ள பத்து ரூபா நோட்டில் இருந்தால் மில்லியன் தருகிறார்களாம் தெரியாதா ?
கூல்94.7 ரேடியோ கேட்பவர்கள் யாராவது எடுத்திருக்கலாம்...
(ஆஹா கொளுத்திப் போட்டேனோ, யார் தலை உருளுமோ தெரியலயே ... :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

எலே தேவுடு
இதை கதையாவே எழுதிருக்கலாம்யா
ரொம்ப நல்லா வந்திருக்கு

siva said...

வடை
//

no no vadai for me..

சந்தனமுல்லை said...

ஆகா..மிக அழகான கொசுவத்தி..ரொம்ப பிடிச்சிருந்தது...பைதிவே, இதுல யாருக்காவது ஐ மீன்
உங்க குடும்பத்துக்கு மெசேஜ் சொல்றீங்களா பாஸ்?!! அம்மாவே எவ்ளோ நாள்தான் உஷ்ஷ்னு
சொல்லி எடுத்துக்கொடுப்பாங்க...பாவம்னு! :))

/ஏதாவது ஒரு ஷெல்ப்பில் பேப்பர் விரிப்பிற்கு கீழே சில நேரம் சில்லறைகளை /சேம் ஸ்வீட்...
எங்க ஆயாக்கிட்டேயும் இப்படி பண்ணுவேன்...அப்புறம் அவங்க உஷாராகி என்கிட்டே
கொடுத்துட்டு வாங்கிக்குவாங்க! மீ த ஙே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

கோபிநாத் said...

ஒரே இனம் ;)

வினோத் கெளதம் said...

நான் என் தாத்தா சட்டை பையில் இருந்து ஆட்டைய போட்டு இருக்கேன்..But never from dads pocket.

சேட்டைக்காரன் said...

நல்லாயிருக்குது! நானு கமிஷன் அடிச்சே செலவுக்குப் பணத்தைத் தேத்திருவேன் ஒரு காலத்துலே! :-)

manjoorraja said...

எல்லா அம்மாக்களும் எப்பவும் ஏன் இப்படி ஒரே மாதிரி இருக்காங்க..... !

நாஞ்சில் பிரதாப்™ said...

இதிலிருக்கும் ஆணாதிக்கத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....
என்னடா பதிவு சில்லறைத்தனமா இருக்கு...:) ஐ மீன் சில்லறைங்கற வார்த்தை அதிகமா வந்திருக்கு.... :))) என்னமோ போடா ஆதவா.... நல்லாருக்கு ராசா..

ஈரோடு கதிர் said...

மிக அருமை

☀நான் ஆதவன்☀ said...

@இந்திரா

ரொம்ப நன்றி இந்திரா :) ஆமா இப்பெல்லாம் ஐம்பது நூறெல்லாம் சாதாரணாமா வாங்கிடுறாங்க சின்ன பசங்க.
------------------------------------
@அரபுத்தமிழன்

ஹிஹி மில்லியனே சில்லறையா உங்களுக்கு :)) பெரிய ஆள் தான் நீங்க
----------------------------------
@கார்த்திகேயன்

நன்றி தேவுடு
----------------------------------
@சிவா

நன்றி
----------------------------------
@சந்தனமுல்லை

:))) பாஸ் அம்மா எப்பவும் இப்படி தான் பாஸ் உஷ்ஷ் உஷ்ஷ்னு..

ஆஹா பல பேரு இப்படி தான் இருந்திருக்கீங்களா சின்ன வயசுல :)
-----------------------------------
@முத்தக்கா

நன்றிக்கா
-----------------------------------
@கோபி

ஹிஹி :))
----------------------------------
@வினோத்

தாத்தா சட்டையா? :) தாத்தா எல்லாம் கேட்காம கொடுக்குற ஆளாச்சே. ஆட்டைய போடுற அவசியமே இருக்காதே :)
-----------------------------------
@சேட்டை

சேட்டை :)) இதுக்கு தான் என்னைய கடைக்கு எதுவும் அனுப்பமாட்டாங்க :)
-----------------------------------
@மஞ்சூர் ராசா

உங்களுக்குமா? :)
------------------------------------
@பிரதாப்பு

இப்படி நீ பின்னூட்டம் போடுவன்னு தெரியும்லே. ரொம்ப நன்றிலே :)
----------------------------------
@கதிர்

ரொம்ப நன்றி கதிர்

ஸ்வர்ணரேக்கா said...

//அப்பாவிற்கு தெரியாமல் எடுத்து கொடுப்பார் //

--- எங்க வீட்ல சான்சே இல்ல.. ஏங்க உங்க புள்ளைக்கு காசு வேணுமாம் என்று டமால்ன்னு சத்தம் போட்டு சொல்லிடுவாங்க எங்க அம்மா..

நல்லா கொசுவத்தி சுத்தியிருக்கீங்க ...

அன்புடன் அருணா said...

மலரும் நினைவுகள்!

விஜி said...

இம்புட்டு நல்லவனா நீ???????????

சி.கருணாகரசு said...

பகிர்வு மிக நெகிழ்ச்சி.... என்னையும் கொஞ்சம் பின்னோக்கி இழுத்து சென்றது.

Anonymous said...

கொசுவத்தியை நன்றாக சுழற்றி பழைய ஞாபகத்திற்கே கொண்டு சென்று விட்டீர்கள்....

கோமதி அரசு said...

//பர்ஸ் முழுதும் நிரப்பி வைத்தே வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தேன்.//

ஆதவன், வரேன் சில்லரை தேவைப் படுகிறது.

மலரும் நினைவு நல்லா இருக்கு.

இராஜராஜேஸ்வரி said...

நல்லாயிருக்குது

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரீடரில் நண்பர் முத்துக்குமார் ஷேர் செய்திருந்தார் இப்போதுதான் படித்தேன். first class write-up!

ஹுஸைனம்மா said...

இத எப்படி படிக்காம விட்டேன்???!!!! :-( அரும்மையா இருக்கு வர்ணனை... எனக்கு இம்புட்டு தைரியம் கிடையாது... கடைக்குப் போகும்போது, வரும் மீதியில் அஞ்சு - பத்து பைசா ஆட்டையைப் போடுவதோடு சரி... என்ன சமாளிச்சாலும் அதுவும் தப்புதான்...

இருந்தாலும்....நானும் ஒரு அம்மாவா ஆனபின்பு என் கருத்து என்னன்னா.... அப்பாவுக்குத் தெரியாமல் அம்மா சில விஷயங்கள் செய்வார் என்ற கருத்தை பிள்ளைகள் மனதில் ஒருபோதும் பதியவைக்கக்கூடாது.... (உண்மையில் அப்படி இல்லை, விளையாட்டுக்குத்தான் என்றாலும் கூட...)

ஹுஸைனம்மா said...

அதேபோல, அப்பாவும்.... :-)

☀நான் ஆதவன்☀ said...

ஹுஸைனம்மா :)) vanga vanga.. pala varushangalukku piragu oru comments. aadhavan happy anachi :)

Related Posts with Thumbnails