சில்லறைகள்

கடந்த வாரம் பர்ஸில் வைத்திருந்த பணத்தில் பத்து,இருபது, ஐம்பது திரஹமாக நூறு திரஹம் வரை கணக்கில் வரவில்லை. அல்லது காணவில்லை. ஆனால் அதனோடு வைத்திருந்த ஐநூறு, ஆயிரம் திரஹம் நோட்டுகள் அப்படியே இருந்தன. எவ்வாறு செலவு செய்தேன் என ஞாபகமே வரவில்லை. நண்பனிடம் சொன்னேன். "சில்லறை தானேடா எங்கயாச்சும் செலவு பண்ணியிருப்ப" என்றான்.

பத்து ரூபாய் இருபது ரூபாய் நோட்டெல்லாம் இப்போது சில்லறையாகிவிட்டது. சிறுவயதில் அப்பா வேலைக்கு போய்விட்டு மதிய உணவிற்காக வீட்டிற்கு வருவார். சிறிது நேரமும் உறங்குவார். கை எட்டாத தூரத்தில் அவரது சட்டை பாக்கெட் இருக்கும். பள்ளிகூடம் விட்டதும் வீட்டிற்கு வந்து வெளியே விளையாட சென்று விடுவேன்.விளையாட போகும் முன் அப்பாவின் சட்டையை கீழிருந்து ஆட்டுவேன். சில்லறையின் சத்தம் கேட்கும். அம்மாவிடம் ஓடிப்போய் “அம்மா பத்து காசு அப்பா பையில இருந்து எடுத்து கொடும்மா” என்றதும் அம்மாவும் “உஷ்ஷ்ஷ்” சத்தம் போடாம வா என்ற சைகையுடன் மெதுவாக நடந்து அப்பாவிற்கு தெரியாமல் எடுத்து கொடுப்பார் அல்லது தெரியாமல் எடுத்துக்கொடுத்தது போல் நடிப்பார்.  அப்பாவுக்கு தெரியாமல் தான் சில்லறைகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன் என வருடம் பல கடந்தும் நினைத்துக்கொண்டிருந்தேன்.

அப்பா முழுக்கை சட்டையை முழுங்கை வரை மடித்துவிட்டிருப்பார். லைட் கலர் சட்டையையே இடுவார். கை மடித்த விட்ட இடத்திலும் கழுத்திலும் வியர்வை அப்பிக்கொண்டிருக்கும். சில்லறைகளை வெளிபாக்கெட்டில் தான் வைத்திருப்பார். உள்பாக்கெட்டில் பெரும்பாலும் பண நோட்டுகளோடு வியாபாரம் சம்பந்தமான கணக்கு வழக்குகள் இருக்கும். சில்லறைகள் அதிகம் இருந்தால் அன்று அப்பாவிற்கு நிறைய லாபம் போல என நானே எனக்கான சமாதானமாக நினைத்துக்கொள்வேன். சில்லறைகளே அதிகபட்ச பணமாக தெரிந்த காலங்கள்.

அப்பாவிடம் தான் காசு கேட்க பயமே தவிர அம்மாவிடம் பயம் இருந்ததில்லை. கேட்டதும் கொடுப்பார். இல்லாத சமயங்களில் கொஞ்சம் குறைவாக கிடைக்கும். நாலணா கேட்டால் பத்து பைசா தருவார். அம்மா பணம் சேர்த்து வைத்து இதுவரை பார்த்ததில்லை. அப்பா கொடுக்கும் பணம் வீட்டுசெலவிற்கே சரியாக இருக்கும். அதில் சேமிக்கும் சாமர்த்தியம் அம்மாவிற்கு இல்லை. அதனாலயோ என்னவோ கேட்கும் போது சில்லறைகள் எனக்கு கிடைத்தது.

அம்மாவை ஏமாற்றி சில்லறைகள் எடுப்பதும் எளிதாக இருந்தது. ஏதாவது ஒரு ஷெல்ப்பில் பேப்பர் விரிப்பிற்கு கீழே சில நேரம் சில்லறைகளை அம்மா வைத்திருப்பார். விளிம்பில் இருக்கும் அந்த சில்லறையை சற்று அதிகப்படியாக உள்ளே தள்ளி வைத்து விடுவேன். அம்மா "இங்க தானே எங்கேயோ வச்சேன்" என முணங்குவது கேட்கும்.  அம்மா அது போல் தொலைந்த சில்லறைகளை அதிக தேடிப்பார்த்ததில்லை. இரண்டு நாட்கள் கழித்து அந்த சில்லறையை எடுத்து ஏதாவது வாங்கி தின்று விடுவேன். அம்மாவின் மறதியால் எனக்கு கிடைத்த காசு இது திருடியதாக வராது என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொள்வேன்.

அப்பாவின் சட்டைப்பை எட்டும் பருவம் வந்ததும் பத்து பைசா, நாலணாவிலிருந்து எட்டணா, ஒரு ரூபாய்  அளவிற்கு உயர்ந்தது. தின்பண்டங்கள், விளையாட்டுப்பொருள்கள் என இருக்கும் காசுக்கேற்றவாறு என் தேவையும் அடங்கியது. அப்பா ஒரு போதும் பையிலிருந்து காசு எடுத்தயா என கேட்டதில்லை. சில சமயம் வெறும் ஒரு ரூபாய் மட்டும் சட்டை பையில் இருக்கும். அதை எடுத்து சட்டைப்பாக்கெட் காலியாக விட்டுருக்கிறேன். அப்பாவிற்கு நான் எடுப்பது தெரியாது என்ற நம்பிக்கையில் இருந்திருக்கிறேன். வருடங்கள் பல கடந்தும்.

பின்பு பள்ளி படிப்பு முடிந்ததும் சில்லறைகளின் தேவை நோட்டுக்களாக உருவெடுத்தப்பின் அப்பாவின் பாக்கெட்டில் சில்லறைகள் எடுப்பதும் குறைந்தது. அம்மாவிடம் கெஞ்சி கெஞ்சி பணம் வாங்குவது வாடிக்கையானது. அம்மாவின் பர்ஸில் இருக்கும் நோட்டுக்களில் கூட பத்து ரூபாய்கள் எடுத்த ஞாபகம். அம்மாவும் அப்போது எதுவும் கேட்டதில்லை. மாறாக தினமும் பர்ஸில் நூறு ரூபாய் தாள்களுக்கு நடுவே சில பத்து ஐந்து ரூபாய் தாள்கள் இருக்கும்.

கஷ்டமும் கவலையும் தெரியாமல் வளரவில்லை என்றாலும், அக்கா, அண்ணன் தேவையை விட அனைத்து விதத்திலும் என் தேவைகள் முதலில் பூர்த்தி செய்யப்பட்டதாக நினைக்கிறேன். என்னடா படிக்கிற? எப்படி படிக்கிற? என்று எப்போதும் கேட்டதில்லையோ அதே போல் காணாது போன சில்லறைகளும் நோட்டுக்களும் எங்கே என இதுவரை என்னிடம் அப்பாவும் அம்மாவும் கேட்டதில்லை. தேன்மிட்டாய்களும் மோதிர அப்பளமும் வாங்கிய பத்து பைசாவிலிருந்து காலேஜ் கேன்டீன், சினிமா, நண்பர்களோடு சுற்றுலா என செலவழித்த நோட்டுகள் அனைத்தும் யாருக்கும் தெரியாது என்ற மாயையில் இதுவரை இருந்தேன்.

ஆம். இருந்தேன். கடந்த முறை விடுமுறைக்கு இந்தியா சென்ற போது மதிய தூக்கத்தில் இருந்தேன். ”மாமா எழேன்.. மாமா கண்ணை திறயேன்...” என இமையை மெதுவாக திறக்க முயன்று கொண்டிருந்தனர் அக்கா மகளும் மகனும். தூக்கம் மெதுவாக கலைந்தாலும் முழுவதுமாக எழ மனம் வரவில்லை. “ம்ம்ம்..ம்ம்” என முணங்கியவாறு இருந்தேன். இரண்டு வாண்டுகள் ”அம்மாச்சி அம்மாச்சி...” என உடனே என் அம்மாவை அழைத்து வந்தனர்.

“அம்மாச்சி மாமாவை எழுப்பேன். ப்ளீஸ்” என்றனர்

”மாமா தூங்கிறானே. என்ன வேணும்னு சொல்லுங்க.” என்றார்.

“வெளிய ஐஸ்க்ரீம் போகுது. எனக்கு மேங்கோ ஐஸ் வேணும். இவனுக்கு வெண்ணிலா ஐஸ்க்ரீம் வேணும். வாங்கி கொடு” என்றனர்

“உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்” மெதுவா பேசுங்க எனறு சைகையில் காட்டி எனக்கு தெரியாமல் அம்மா என் பர்ஸிலிருந்து சில சில்லறை நோட்டுகளை எடுத்து வாண்டுகளிடம் கொடுத்தார்.

அரைதூக்கத்தில் அப்பாவின் சட்டைப்பை சில்லறை மர்மத்திற்கான விடை கிடைத்தது. அன்றிலிருந்து கணக்கு வைக்காத நிறைய சில்லறை நோட்டுகளை பர்ஸ் முழுதும் நிரப்பி வைத்தே வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தேன்.
Related Posts with Thumbnails