இரண்டு கன்னங்களையும் காற்றால் அடைத்து “உஃ(f)ப்ப்" என்று வைத்துப் பார்த்தேன். ஓரளவு பரவாயில்லை. நாக்கால் ஒரு பக்க கன்னத்தில் கீழே சுருத்தி கொண்டே வந்து ஒரு இடத்தில் நிறுத்தினேன்.... இது கூட ஓரளவு பரவாயில்லை. இரண்டு புருவங்களை நன்றாக சுருக்கி கண்களை கூர்மையாக்கினேன். ம்ஹீம்ம் சரியில்லை. நெற்றியில் வேறு கோடுகள் வருகிறது. மேல் உதடை கொஞ்சம் காற்றால் நிரப்பி தாடையை கீழே வைத்துப் பார்த்தேன், அய்யோ சகிக்கல. முதலில் செய்தது போல கன்னங்களில் காற்றை நிரப்பி கொண்டே எவ்வளவு நேரம் தான் வெளியே செல்வது? . வாய் வலிக்குமே!
குழம்பித்தான் போனேன். தலையை கொஞ்சம் சாய்த்து வைத்துப் பார்த்தேன். எந்த முன்னேற்றமும் இல்லை. சாய்த்து வைத்துக் கொண்டே ஒரு கண்ணை மூடினாற் போல் லைட்டாக திறந்து பார்த்தேன். இது பரவாயில்லை தான். ஆனால் கொஞ்சம் இருட்டாக இருக்கிறதே! எங்காவது முட்டி மோதி கீழே விழுந்து விட்டால்?
பின்பு என்ன கோளாறாக இருக்கும்? சட்டென்று ஞாபகம் வந்தது. ரொம்பச்சரி தலைமுடியே தான். கண்டிப்பாக அதுவே தான்.பரபரவென்று தலையை கலைத்தேன். இது கொஞ்சம் பரவாயில்லை. கையில் பார்த்தால் எக்கசக்க முடி! அய்யோ முடி என்ன இப்படி கொட்டுது. ச்சே வேண்டாம் முடியை முன்பு போலவே செய்துவிடலாம். சீப்பை எடுத்து வாரினேன். தண்ணீர் நன்றாக விட்டு தூக்கி வாரிய போது தான் கவனித்தேன். நெற்றிக்கு கீழே ஒரு வடு.
முடிவே செய்து விட்டேன் இது தான் காரணமென்று. ஆனால் எப்பொழுது இந்த வடு வந்ததென்று சரியாக ஞாபகம் இல்லை. ஆறேழு வயசில் அடி பட்டு இருக்கலாம். பத்து பதினைந்து வயதில் இதனை காண்பித்து வந்து அம்மாவிடம் கவலையுடன் கூறியது ஞாபகம் வந்தது. “அதுகெடக்குது...உனெக்கன்ன ராசா. அழகா இருக்க” டக்கென்று பத்து விரல்களில் ஐஸ் மழை போல சட சடவென்று சத்தம் வர திருஷ்டி கழிப்பாள். ப்ச் பழைய ஞாபகம்!.
சரி இதுதான் காரணமென்றால் ஏன் இத்தனை நாள் தெரியவில்லை? வாரிய தலைமுடியை இறக்கி நெற்றி வரை விட்டேன். அட இப்போது வடு தெரியவில்லை. வாயை கொஞ்சமாக ஒரு பக்கம் இழுத்து சிரித்தவாறு வைத்து இப்பொழுது கண்ணாடியை பார்த்தேன். இதுவும் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் எப்போதும் ஒரு பக்கம் சிரித்தவாறு வைத்திருந்தால் கோணவாயனாகி விடுவேனே? வேண்டாம் வேறெதாவது முயற்சிக்கலாம்.
வேறு என்ன தான் செய்வது. எப்படி பார்த்தாலும் முகம் அழகாக இல்லையே? அவள் திட்டியது போல் தான் இருக்கிறேன். இப்பொதெல்லாம் யாராவது என்னைப்பற்றி சொன்னால் உடனே அதனைப் பற்றிய கவலைகளில் மூழ்கி விடுகிறேன்.
பிடிமானம் சரியில்லாமல் கண்ணாடி ஆடியது. ஒருவேளை கண்ணாடியில் ஏதாவது கோளாறு இருக்குமா? ச்சே இது எனக்கான ஆறுதலை ஆழ் மனது எனக்கே தெரியாமல் கிளப்பி விடுகிறது.
மற்றவர்களின் ஐடியா கேட்பதை நிறுத்த வேண்டும். இதுவரை வாங்கிய குழாய் க்ரீம்களை ஒன்றாக சேர்த்திருந்தால் இந்தியா-ஈரான் குழாய் மூலமாக எண்ணெய் கொண்டு வரும் திட்டத்தையே செயல்படுத்தியிருக்கலாம். ரூம் சேட்டன் அறிவுரைப்படி லாலேட்டன் தொட்டு காவ்யா மாதவன் வரை விளம்பரங்களில் வந்த அழகு சாதனங்களை எல்லாம் பயன்படுத்தியாயிற்று. இதாவது பரவாயில்லை.... காலையில் கக்கா ஒழுங்காக, சீராக போனால் அன்றைய தினம் முகம் அழகாக இருக்கும் என்று ஒரு முறை சேட்டன் கூறியதை அப்பாவியாய் நான் ”ஆனோ சேட்டா?” என்று கேட்டதை இப்போது நினைத்தாலும் சேட்டனை மூக்கு மேல் குத்த வேண்டும் போல் உள்ளது.
சின்ன வயது போட்டாக்களிலெல்லாம் அழகான தான் தெரிகிறேன். இப்போது மட்டும் ஏன் இப்படி தோன்றுகிறது? ஒருவேளை மனபிராந்தியா? அதுவும் தனியாக இருக்கும் பொழுது தான் இதுபோல் தோன்றுகிறது. ஆம் தனியாக... இப்போது இந்த தனிமையை கலைப்போம். இப்போது எங்கே செல்வது? தாமஸ் ரூமுக்கு செல்லலாமா? வேண்டாம் போன முறை கண்ணாடியை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏதோ நினைத்தவன் தீடீரென்று “இச்சிரி சவுந்தர்யம் குறைவுண்டெங்கிலும் நீ செரிக்க புத்திஜீவியானு”ன்னான். இவன்கிட்ட கேட்டேனா நான்? இது தான் ஏத்துற மாதிரி ஏத்தி இறக்கிவிடுறது. அவனையும் மூக்குலயே குத்த வேண்டும்.
கண்ணாடி ஆடிக்கொண்டே இருந்தது.
ஒரு வேளை நிறம் காரணமாக இருக்கலாமா? ச்சேச்சே அப்படியெல்லாம் இருக்கவாய்பில்லை.
மெசேஜ் வந்திருந்தது. சென்னையிலிருந்து தோழி. “டேய் வீட்ல ஒரே பிரச்சனை. யார்கிட்ட சொல்றதுன்னே தெரியல. ரமெஷை நான் லவ் பண்றது தெரிஞ்சு போச்சு. நீ பக்கத்துல இருந்தேன்னா ரொம்ப தைரியமா இருக்கும். உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். சீக்கிரம் வாடா. இப்போ ப்ரீயா இருந்தா கால் பண்ணு..” படார் என்று சப்தம். திரும்பினேன்.
கண்ணாடி கீழே விழுந்து உடைந்திருந்தது. உடைந்த துண்டுகளில் எல்லாம் நான் தெரிந்தேன் மிக அழகாக.



