இடம்: சரவணபவன்
”என்ன சார் படம் பிடிக்கலையா?”
“படமா எடுத்திருக்கானுங்க ஆதவன். சுத்த வேஸ்ட்.” புரொபஸர் ரவி.
“சார் இது ஒரு பேண்டஸி பிலிம். புனைவு வேற. இதுல லாஜிக் எல்லாம் பார்க்காதீங்க. எடுத்த வரைக்கும் எனக்கு பிடிச்சிருக்கு. உங்களுக்கு கோபி?”
சிரித்தபடியே தலையாட்டினார் கோபி (ங்கொய்யால நேர்ல கூடவாய்யா ஸ்மைலி போடுவ? நல்ல வேளை ரிப்பீட்டு சொல்லல...)
“ஆதவன் நீங்க சொன்ன மாதிரி புனைவுங்கிறதுல லாஜிக் பார்க்கவேண்டாம் தான். ஆனா புனைவுக்குள்ள இருக்குற கதைக்குள்ளவே லாஜிக் இல்லாம இருந்தா எப்படி? பார்க்கிற எல்லாரையும் முட்டாளாக்கி எடுக்குறதுக்கு பேரு பேண்டஸி இல்ல ஆதவன். அதை புரிஞ்சுக்கங்க”
“புரியலையே சார். நீங்க வரலாற்று புரொபஸர்ன்றதால நிறைய லாஜிக் பார்க்குறீங்களோ என்னமோ?” நான்.
”இப்ப “லார்ட் ஆப் தி ரிங்ஸ்” படம் ஒரு புனைவு தான். அதை ஒத்துகிறீங்க இல்ல? (தலையாட்டினேன்). அதுல அந்த கதைக்கு அந்த மோதிரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? சொல்லப்போனா அந்த கதையே அதை சுத்தி தான் நடக்குது. அதை வைத்திருக்கிறதனால எவ்வளவு நன்மை, பிரச்சனைன்னு தெளிவா காண்பிச்சு இருப்பாங்க இல்லையா?. அதே போல தான் இந்த கதைக்கும் அந்த சாமி சிலை முக்கியமானது. அதை நோக்கி தான் கதையே ஆரம்பமாகுது இல்லையா? அப்ப அதோட முக்கியத்துவத்தை சொல்லனும். வெறுமனே ஆயிரம் வருஷசமா அந்த சாமி சிலையை தேடி அலையறாங்கன்னு பொதுவா சொல்லும் போதே அந்த கதை வலு இழந்திடுது. இந்த ரகசியம் தெரிஞ்ச வெறும் எட்டு பேர் மட்டும் இப்ப இருக்காங்க, மேலும் சோழர்கள் உயிரோட இல்லை பின்ன அந்த சிலையை எடுக்க ஏன் இவ்வளவு பிராயத்தனபடனும்?” பூரியை முழுங்கியவாறே ஆங்கிலம் கலந்த தமிழில் விளக்கி கொண்டிருந்தார்.
“இப்பெல்லாம் வீட்டு சொத்து ஏதாவது ஒரு பத்து வருசம் கோர்ட்ல இருந்தாலே அடபோங்கடான்னு போயிட்டு இருங்காங்க இல்லையா... அப்ப அத்தனை வருசம் காத்திருக்கிற அதோட முக்கியத்துவத்தை சொல்லனும் இல்லையா? அதுவுமில்லாம கதையாசிரியன் நமக்கு எல்லா கதாபாத்திரத்தையும் விளக்க வேண்டாம். ஆனா அவன் மனசுகுள்ள ஒரு சின்ன கதாபாத்திரம் உருவாகும் போதே அந்த கதாபாத்திரத்தோட உருவம், குடும்பம், ஏன்.......குலம் கோத்திரம்னு எல்லாமே உருவகப்படுத்தி வச்சிருக்கனும். இதையெல்லாம் சொல்லனும்ற அவசியம் இல்ல.... ஆனா அப்ப தான் அந்த பாத்திரத்தை எழுத்தாவோ அல்லது காட்சியாவோ எடுக்கும் போது பார்வையாளனுக்கு தெளிவா காண்பிக்க முடியும். இதுல கதாசிரியனுக்கே பல கதாபாத்திரத்தோட குழப்பம் இருப்பது தெளிவா தெரியுது” பூரி முடிந்து ரவா தோசை வந்தது.
“சோழர்கள் குடியிருக்குற கிராமத்துல குஜராத் கோவில் எப்படி வந்தது?”
“என்ன குஜராத் கோவிலா? நான் பார்க்கலையே சார்” என்றேன்
“அது தான் டைரக்டர் செஞ்ச முட்டாள் தனம். அந்த செட் போட்டது குஜராத்ல லோத்தல்னு ஒரு இடம்னு நினைக்கிறேன். சரி செட் போட்டாங்களே அட்லீஸ் அந்த கோவிலை மறைக்க கூடவா தெரியல? இந்த மாதிரி டைரக்டர் சரியா உழைக்காம பார்வையாளனை முட்டாளாக்குற வேலை தான் இதுன்னேன். நடராஜர் நிழல் காட்சி நல்லாயிருக்கு. ஆனா அதுகூட வேற ஏதோ ஆங்கில படம். தூண் நிழல் மாதிரி வரும் சரியா ஞாபகம் இல்ல. இதைப்பார்த்து தான் பண்ணியிருப்பாருன்னு சொல்லல.... அவருக்கே கூட தோணியிருக்கலாம். இதையெல்லாம் விடு விட்டாசாலாச்சார்யா படத்துல கூட லாஜிக் கச்சிதமா இருக்கும். சாண்டில்யன் கதைகளை படிச்சாலே போதும். கொஞ்சமாவது உருப்படியா வந்திருக்கும்”
ஆஹா இவ்ளோ உன்னிப்பா கவனிச்சுருக்காரே! ரைட்டு........
“என்னப்பா யோசிக்கிற?”
“இல்ல சார் நாளைக்கு திரும்பவும் பார்க்கலாம்னு இருக்கேன். என் நண்பர்கள் சில பேர் கூட பார்க்கல. அவங்களோட போகலாம்னு இருக்கேன்”
பில்லை கொடுத்துவிட்டு கிளம்பினோம்.
மறுநாள் அதே சரவணபவன்...
”என்னடா மச்சி படம் புடிக்கலையா?”
“படமாடா எடுத்திருக்காங்க சுத்த வேஸ்ட் மச்சி.” பேரர் வந்தான்.
“எனக்கு ஒரு செட்டு பூரி. அது முடியும் போது ஒரு ரவா தோசை எடுத்துட்டு வாங்க” என்றபடி ஐந்து பேரையும் பார்த்தேன்.
“எங்களுக்கு படம் பிடிச்சிருக்குடா மச்சி. மனுசன் எப்படி தான் இப்படி யோசிக்கிறான்னு தெரியல. சான்ஸே இல்லை” என்றான். அனைவரும் ஆமோதித்தனர்.
“மச்சி இது ஒரு புனைவு தான். ஆனாலும் புனைவுக்குள்ள இருக்குற கதையில லாஜிக் பார்க்கனும்ல?”
“என்னது பூனையா? அப்படின்னா?”
“ஓ உனக்கு புனைவுன்னா என்னென்னு தெரியாதோ?(சலித்து கொண்டேன்) அதாவது படத்தோட ஆரம்பத்துலேயே இந்த கதையில் வரும் அனைத்து சம்பங்களும் கற்பனையேன்னு சொன்னான்ல....அந்த கற்பனை தான் புனைவு”
“சரி அதுக்கென்ன இப்போ?”
“இல்லடா இப்ப “லார்ட் ஆப் தி ரிங்ஸ்” படம் பார்த்தயா...... நிறுத்தினேன்.(இன்னும் பூரி வரவில்லை)
“ஆமா... அதுக்கென்ன சொல்லுடா?”
“இருடா பூரி வரட்டும்...(வந்தது)...அதுல அந்த கதைக்கு அந்த மோதிரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? சொல்லப்போனா அந்த கதையே அதை சுத்தி தான் நடக்குது. அதை வைத்திருக்கிறதனால ....................................
.....................................................................................................................................................கதாபாத்திரத்தோட குழப்பம் இருப்பது தெளிவா தெரியுது” பூரி முடிந்து ரவா தோசை வந்தது.
பெருமூச்சு விட்டனர் அனைவரும்
“சோழர்கள் குடியிருக்குற கிராமத்துல குஜராத் கோவில் எப்படி வந்தது?”.....................................................................................................
........................................................................................................................................................
விட்டாசாலாச்சார்யா படத்துல கூட லாஜிக் கச்சிதமா இருக்கும்” முடித்தேன்
”எப்படிடா இதெல்லாம் கவனிச்ச? எங்களுக்கு எதுவுமே தோணல...... அதுவும் குஜராத் கோவில், இங்கிலீஷ் படத்துல சீன்ஸ்னு எல்லாம் தெரிஞ்சிருக்கே”
சிரித்தேன். “ஆமா நீ என்ன யோசிக்கிற? படத்தை பத்தி என்ன டவுட்டு இருந்தாலும் என்கிட்ட கேளு. நான் சொல்றேன்.” என்றேன்
”இல்லடா மச்சி நாளைக்கு திரும்பவும் பார்க்கலாம்னு இருக்கேன். என் ஆபிஸ் ப்ரெண்ட்ஸ் சில பேர் கூட பார்க்கல. அவங்களோட போகலாம்னு இருக்கேன்” என்றான்.
பில்லை கொடுத்துவிட்டு கிளம்பினோம்.
நாளையும் பூரியும் ரவாதோசையும் யாராவது சாப்பிடலாம்.













