ஹ்ரித்திக் எனும் கடவுள் கதாநாயகன். ஆம் -கிரேக்க- கடவுள். அப்படியொரு தேஜஸ் அந்த முகத்தில். படம் முழுக்க அவரின் முகமே திரையில் அதிகமாக காண்பிக்கப்படுகிறது. நடிப்பதை தானே திரைமுழுக்க காண்பிக்கமுடியும்? கொள்ளை அழகு இந்த கடவுள். கை கால் விபத்தினால் செயல் இழந்து போக முகம் மட்டுமே படம் முழுதும் தன் நடிப்பை வெளிப்படுத்துகிறது. தலை சிறந்த மேஜிக் நிபுணரான நாயகன் வாழ்வையே புரட்டிப்போடுகிறது அந்த விபத்து. 14 வருட வனவாசமாய் உடல் முழுதும் உணர்வில்லாமல் பலவித உடல் வலியோடு வாழ்ந்து, வெறுத்து தன்னை கருணைக்கொலை செய்யுமாறு நீதிமன்றத்தில் தன் தோழியின் மூலமாக உதவி கோருகிறார். அது நிறைவேறியதா என்பதே கதை.
ஒரு நாவலை/சிறுகதையை அப்படியே திரையில் வாசிப்பது போன்ற உணர்வு தான் படம் பார்க்கும் பொழுது ஏற்படுகிறது. ஒரு புத்தகத்தை தொடந்து படிக்கும் போது இடையே சிற்சில பக்கங்களில் ஏற்படும் அலுப்பை போல் சில காட்சிகள் ஏற்படுத்துகின்றன. வாசிப்பின் சுவை அறியாதவர்களுக்கு படம் முழுக்க அலுப்பை தரலாம்.
மூக்கின் நுனியில் அமரும் ஈ, சொட்டு சொட்டாக இரவு முழுதும் வடியும் மழை நீர் என சில காட்சிகள் வருகிறது. எரிச்சலூட்டும் விசயங்களை கதாநாயகன் எப்படி சுவராஸியமாக மாற்றுகிறான் என்பதை காட்டுவதாக அமைகிறது. அவனே கருணைக் கொலைக்காக மன்றாடுவது நமக்கு அவனது வலியை உணரச்செய்கிறது. கேலி பேச்சுக்களும், சிரிப்புமாக கதாநாயகன் பாத்திரம். அதுவும் உணர்ச்சியற்ற கால்களை ஐஸ்வர்யா ராய் அமுக்கி விடும் போது கொடுக்கும் உணர்ச்சி சப்தங்கள் சிரிப்பின் உச்சம். இது போன்ற காட்சிகள் ரசிகனுக்கு கதாநாயகன் மேல் கழிவிரக்கம் கொள்ளாமல் காக்கின்றன.
ஐஸ்வர்யாராய். (முதல் முறையாக?) வயதுக்கேற்ற கதாபாத்திரம். அவ்வுடையில் ஹ்ருத்திக்கிற்கு பணிவிடை செய்யும் போது “கோபால்ல்ல்ல்ல் என்னை மன்னிச்சிடுங்க கோபால்ல்ல்ல்”(முக்கியமாக தலையில் கர்சீப்பை கட்டிக்கொள்கிறபோது) என வலிய ஒரு எண்ணம் தமிழ் ரசிகர்கள் மனதில் தோன்றவில்லை என்றால் அவன் கன்னடத்து பைங்கிளியின் போஸ்டரை கூட பாத்திருக்கவில்லை என அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். கம்பீரமான,அலட்சியமான,காதலான என பல முகபாவனைகளை மிக அருமையாக வெளிப்படுத்துகிறார். இடையிலும் கடைசியிலும் கொஞ்சம் அழவும் வைக்கிறார்.
கோபால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
அத்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
மொத்தம் 10(தோராயமாக) கதாபாத்திரங்கள், ஒரு வீடு, நீளமான காட்சிகள் என மிக சுருக்கமாக படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர். இடை இடையே பாடல்கள் வருகின்றன. ஐஸ்வர்யாராயின் அட்டகாசமான நடனமும் வருகிறது. அனைத்தும் கதையின் போக்கிலேயே அமைந்து விடுவதால் எங்கே எந்த பாடல் வந்தது என படம் முடிந்ததும் ரசிகனை யோசிக்க வைத்திருப்பது சிறப்பு. படத்தின் 60 சதவிகிதத்திற்கும் மேலே ஆங்கிலத்தில் தான் வசனம். மிச்சமிருக்கும் வசனங்களும் எளிதில் புரிந்து கொள்ள கூடியவை தான். ஆனால் அனைத்தும் மிக அழுத்தமான வசனங்கள். ஆதலால் சப்டைட்டிலின் அவசியம் தேவையிருக்காது.
”ப்ளாக்” படத்தின் மூலம் ஒரு வாரத்திற்கும் மேலாக உறக்கத்தை பறித்து, “சாவரியா” மொத்தமாக சாவடித்த இயக்குனரிடமிருந்து இந்த படம் ஒரு சற்றே பெரிய ஆறுதல். மொத்த படமும் ஹ்ருத்திக்கை மட்டுமே நம்பி எடுத்திருக்கிறார். அதை ஹ்ருத்திக்கும் நிறைவேற்றியும் இருப்பது மிகப்பெரிய ஆறுதல்.
இது மிக மேலாட்டமான விமர்சனமே. ஆழ்ந்து எழுத வேண்டுமானால் இனி ஒரு முறை பார்க்க வேண்டும். இந்த படம் பார்ப்பதற்கே ஒரு அலுவலக நண்பனை உடன் அழைத்துச்சென்றேன். ஆரம்பம் முதல் கடைசி வரை கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தான். படம் முடிந்ததும் “படம் நல்லாயிருக்குல்ல” என்ற என்னை முறைத்து வேறு பார்த்தான். எனக்கு பிடித்திருந்தது. இன்னொரு முறை பார்க்க வேண்டும். ஆனால் இனி பார்ப்பதாக இருந்தால் டிவிடியில் மட்டுமே :)
குஜாரிஷ் - Guzaarish (கடைசியில இப்படி ஏதாவது போட்டா தான் விமர்சனம்னு ஒத்துக்கிறாங்களே..அதான் ஹி ஹி)