குஜாரிஷ்

படம் பார்த்தேன்னா விமர்சனம் எழுதியே ஆகனுமா? என்ற கட்டாயத்துக்காக இல்லாமல், விழுந்த கல்லால் எழுந்து அடங்கும் நீர் அலைகளை போல் அடங்கி விடாமல், பாதித்த படத்தை நான் சகஜமாகும் முன் ஏதேனும் வகையில் பதியச்செய்வதற்காக விமர்சனம் என்ற பெயரில் இந்த பதிவு. (ஸ்ஸ்ஸ்ப்ப்பா)

ஹ்ரித்திக் எனும் கடவுள் கதாநாயகன். ஆம் -கிரேக்க- கடவுள். அப்படியொரு தேஜஸ் அந்த முகத்தில். படம் முழுக்க அவரின் முகமே திரையில் அதிகமாக காண்பிக்கப்படுகிறது.  நடிப்பதை தானே திரைமுழுக்க காண்பிக்கமுடியும்? கொள்ளை அழகு இந்த கடவுள். கை கால் விபத்தினால் செயல் இழந்து போக முகம் மட்டுமே படம் முழுதும் தன் நடிப்பை வெளிப்படுத்துகிறது. தலை சிறந்த  மேஜிக் நிபுணரான நாயகன் வாழ்வையே புரட்டிப்போடுகிறது அந்த விபத்து. 14 வருட வனவாசமாய் உடல் முழுதும் உணர்வில்லாமல் பலவித உடல் வலியோடு வாழ்ந்து, வெறுத்து தன்னை கருணைக்கொலை செய்யுமாறு நீதிமன்றத்தில் தன் தோழியின் மூலமாக உதவி கோருகிறார். அது நிறைவேறியதா என்பதே கதை.

ஒரு நாவலை/சிறுகதையை அப்படியே திரையில் வாசிப்பது போன்ற உணர்வு தான் படம் பார்க்கும் பொழுது ஏற்படுகிறது. ஒரு புத்தகத்தை தொடந்து படிக்கும் போது இடையே சிற்சில பக்கங்களில் ஏற்படும் அலுப்பை போல் சில காட்சிகள் ஏற்படுத்துகின்றன. வாசிப்பின் சுவை அறியாதவர்களுக்கு படம் முழுக்க அலுப்பை தரலாம்.

மூக்கின் நுனியில் அமரும் ஈ, சொட்டு சொட்டாக இரவு முழுதும் வடியும் மழை நீர் என சில காட்சிகள் வருகிறது. எரிச்சலூட்டும் விசயங்களை கதாநாயகன் எப்படி சுவராஸியமாக மாற்றுகிறான் என்பதை காட்டுவதாக அமைகிறது. அவனே கருணைக் கொலைக்காக மன்றாடுவது நமக்கு அவனது வலியை உணரச்செய்கிறது. கேலி பேச்சுக்களும், சிரிப்புமாக கதாநாயகன் பாத்திரம். அதுவும் உணர்ச்சியற்ற கால்களை ஐஸ்வர்யா ராய் அமுக்கி விடும் போது கொடுக்கும் உணர்ச்சி சப்தங்கள் சிரிப்பின் உச்சம். இது போன்ற காட்சிகள் ரசிகனுக்கு கதாநாயகன் மேல் கழிவிரக்கம் கொள்ளாமல் காக்கின்றன.

ஐஸ்வர்யாராய். (முதல் முறையாக?) வயதுக்கேற்ற கதாபாத்திரம். அவ்வுடையில் ஹ்ருத்திக்கிற்கு பணிவிடை செய்யும் போது “கோபால்ல்ல்ல்ல் என்னை மன்னிச்சிடுங்க கோபால்ல்ல்ல்”(முக்கியமாக தலையில் கர்சீப்பை கட்டிக்கொள்கிறபோது) என வலிய ஒரு எண்ணம் தமிழ் ரசிகர்கள் மனதில் தோன்றவில்லை என்றால் அவன் கன்னடத்து பைங்கிளியின் போஸ்டரை கூட பாத்திருக்கவில்லை என அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். கம்பீரமான,அலட்சியமான,காதலான என பல முகபாவனைகளை மிக அருமையாக வெளிப்படுத்துகிறார். இடையிலும் கடைசியிலும் கொஞ்சம் அழவும் வைக்கிறார்.


கோபால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

அத்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

மேஜிக் நிபுணர் என்பதை தவிர படத்தில் சுவாரஸியமான ஒரு விஷயத்தை தேடினாலும் பிடிக்க முடியாது.  முதல் பாதி அந்த ஒரு சுவாரஸியமான விசயத்தை வைத்தே ஒரு எதிர்பார்ப்போடு போகிறது. மேஜிக் காட்சிகள் அதிகம் இல்லை. இருக்கும் காட்சிகளும் கதைக்கு பெரிய வலு சேர்ப்பதாக இல்லை. பின்பாதி எந்த முடிவை நோக்கி இனி படம் பயணிக்கும் என்பதை தெரிந்த பின்பு சற்றே தொய்வு பிறப்பது இயல்பு. ஆனால் ஹ்ருத்திக்கின் நடிப்பை/முகத்தை கவனித்து வருபவர்களுக்கு அக்கதாபாத்திரத்தின் மீது ஈடுபாடு வந்து கதையோடு பயணிக்கலாம்.

மொத்தம் 10(தோராயமாக) கதாபாத்திரங்கள், ஒரு வீடு, நீளமான காட்சிகள் என மிக சுருக்கமாக படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர். இடை இடையே பாடல்கள் வருகின்றன. ஐஸ்வர்யாராயின் அட்டகாசமான நடனமும் வருகிறது. அனைத்தும் கதையின் போக்கிலேயே அமைந்து விடுவதால் எங்கே எந்த பாடல் வந்தது என படம் முடிந்ததும் ரசிகனை யோசிக்க வைத்திருப்பது சிறப்பு. படத்தின் 60 சதவிகிதத்திற்கும் மேலே ஆங்கிலத்தில் தான் வசனம். மிச்சமிருக்கும் வசனங்களும் எளிதில் புரிந்து கொள்ள கூடியவை தான். ஆனால் அனைத்தும் மிக அழுத்தமான வசனங்கள். ஆதலால் சப்டைட்டிலின் அவசியம் தேவையிருக்காது.

”ப்ளாக்” படத்தின் மூலம் ஒரு வாரத்திற்கும் மேலாக உறக்கத்தை பறித்து, “சாவரியா” மொத்தமாக சாவடித்த இயக்குனரிடமிருந்து இந்த படம் ஒரு சற்றே பெரிய ஆறுதல். மொத்த படமும் ஹ்ருத்திக்கை மட்டுமே நம்பி எடுத்திருக்கிறார். அதை ஹ்ருத்திக்கும் நிறைவேற்றியும் இருப்பது மிகப்பெரிய ஆறுதல்.

இது மிக மேலாட்டமான விமர்சனமே. ஆழ்ந்து எழுத வேண்டுமானால் இனி ஒரு முறை பார்க்க வேண்டும். இந்த படம் பார்ப்பதற்கே ஒரு அலுவலக நண்பனை உடன் அழைத்துச்சென்றேன். ஆரம்பம் முதல் கடைசி வரை கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தான். படம் முடிந்ததும் “படம் நல்லாயிருக்குல்ல” என்ற என்னை முறைத்து வேறு பார்த்தான். எனக்கு பிடித்திருந்தது. இன்னொரு முறை பார்க்க வேண்டும். ஆனால் இனி பார்ப்பதாக இருந்தால் டிவிடியில் மட்டுமே :)

குஜாரிஷ் - Guzaarish (கடைசியில இப்படி ஏதாவது போட்டா தான் விமர்சனம்னு ஒத்துக்கிறாங்களே..அதான் ஹி ஹி)

சேட்டன்ஸ் கார்னர்

"சேட்டா"

"என்ன தம்பி?"

"சாப்பிட போலாமா?"

"டைம் என்ன ஆச்சு?" (அடப்பாவி டைம் என்னாவா? இதெல்லாம் ரொம்ப ஓவர்!)

"9.05 ஆச்சு. மெஸ் மூடிற போறாங்க"

"சரி தம்பி போகலாம்" என்ற சேட்டனை லேப்டாப்லிருந்து தலையை தூக்கி எதிர் கட்டிலில் படுத்திருந்த சேட்டனை பார்த்தேன். சேட்டனும் தலையை தூக்கி "போவாம்" என்றபடி எழுந்தார். உரையாடல் நடந்தது சாட்டிங்கில். லேப்டாப் வாங்கினதும் போதும் இப்பெல்லாம் சேட்டன் தொல்லை தாங்க முடியல.

"தம்பி எனக்கி தமிழ் படிக்கனும்"

"படிச்சுட்டா போச்சு. என்ன திடீர்னு?"

"தம்பி ஸ்டேடசு எனக்கி மனசிலாயில்ல.. தம்பி buzz எனக்கி மனசிலாயில்ல.. தம்பி பேஸ்புக்ல இடுனது(என்னது முட்டையா?) எனக்கி மனசிலாயில்ல.. ஞான் அதுகொண்டு (வீறுகொண்டு?!)  தமிழ் படிக்கான் போகுன்னு. தம்பி எனக்கி தமிழ் படிப்பிக்கி (அட பக்கிப்பயலே)"

என்னது தமிழ் கத்துக்கொடுக்கனுமா? ஆதவா பஸ்ஸை ஷெட்டுல விடுடா. பேஸ்புக்கை கொளுத்துடா. "குப்பைத்தொட்டி"யில  இருக்குற சேட்டன் பதிவு எல்லாம் அழிச்சுருடா ஆதவா (எல்லா பதிவையும் அழிக்க வேண்டியிருக்குமோ!)

போன மாசம் அரபாப்பின் தம்பி கம்பெனிக்கு வந்திருந்தார். "hai. what your நாம்?"ன்னு  ஆங்கிலமும் ஹிந்தியும் கலந்து அனைவரிடமும் வலியக்க சென்று அறிமுகப்படுத்திக்கொண்டார். "சூர்யா" என்றேன்.

"சிரியா?" என்றார்

"(யோவ் மம்டி) சூர்யா சூர்யா" என்றேன்.

"சுறா?" (அட எடுபட்ட பயலே!)

"நோ நோ நோ சூர்யா சூர்யா" வேகமாக மறுத்தேன்.

"சுர்ரா.. சுர்ரா" இதுக்கு மேல என்னால முடியாதுன்ற ரீதியில அதையே முடிவு பண்ணிட்டு வேகமாக கைகுலுக்கினான்.தலையெழுத்துன்னு நானும் (பல்லைகடிச்சுட்டு)சிரிச்சுட்டே கை குலுக்கினேன்.

பக்கத்துல மற்றுமொரு புதிய சேட்டன். சிரித்துக்கொண்டே "ப்ரேம்" என்றார்

அரபி "what? what? what?" புரியாமல் திருப்பி கேட்டான்.

"ப்ரேம் ப்ரேம்....ப்ப்ப்ப்ப் ரேம்ம்ம்ம்ம்" கொஞ்சம் ராகத்தோடு வந்தது. சங்கீதம் தெரியும் போல.

அரபி ம்ஹூம் என்ற படி புரியல என்று தலையாட்டினான். (அடப்பாவி எனக்கு மட்டும் சுறா'ன்னு சொல்லி கேவலப்படுத்துன.... இவனுக்கு அட்லீஸ் "ப்ரேம்"ஐ 'ப்ரா"ன்னு சொல்லியாது கேவலப்படுத்தலாம்ல)

அப்போது சேட்டன்  அதி புத்திசாலித்தனமான காரியம் செய்தார் . நேராக துபாய் மன்னர் போட்டோபை காட்டி இது என்ன? என்றார்.

அரபி "கிங்... துஃபை கிங்" என்றான்

"நோ நோ இது இது என்ன பெயர்?" என்றான்

அரபி "ஃபோட்டோ?"

"யெஸ் அதே தான். பட் இதுக்கு பேர் என்ன?" என்றான்

அரபி பயங்கர சந்தோசத்துடன் "ஃபோட்டோ 'ப்ரேம்'" என்றான்

"yes . this is wat my name " என்றார் சேட்டன் (திஸ் பீஸ்? க்ரேஸி பக்கர்ஸ்)

"funny name" என்றபடி அரபி கிளம்பினான். சேட்டான் "எப்பூடி" என்ற ரீதியில் என்னை லுக் விட்டார்.

இந்த வாரம் திடீரென்று அலுவலகம் வந்த அந்த அரபி "ஹாய் சுறா" "ஹாய் ஃபோட்டோ ப்ரேம்" என்று சொல்லிக்கொண்டே வேகமாக மேனேஜர் ரூமுக்கு சென்றுவிட்டான்.

சேட்டனிடம் "என் பேர் எவ்வளவோ பரவாயில்ல" சிரித்தேன். (எப்பூடி?)

"தம்பி என்ட மாலையை(chain) காணோம்." குளிச்சுட்டு வந்த சேட்டன் மூனு சவரன் மாலையை எங்கோ தொலைத்து விட்டார். கட்டிலின் அடியில், ப்ளாங்கெட்டை உதறி, பாத்ரூம வரை பார்த்துவிட்டு கடைசியாக டாய்லெட் ஓட்டையை ஏக்கத்துத்துடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்தார்.

காலையில் எழும் போது தூக்க கலக்கத்தில் கவனிக்க வில்லை போலும். கடைசியாக என்னிடம் சொன்னார். நாம தான் *சூர்யா*வாச்சே :)

"கடைசியா மாலையை எப்ப பார்த்தீங்க?'

"இந்நள(நேத்து) நைட்டு"

"ஜன்னலை திறந்திருந்ததா?"

"என்ன தம்பி புதுசா கேட்குற? நம்ம ஜன்னல் எப்ப திறந்திருக்கு? அதுவும் ரெண்டாவது மாடியில இருக்கோம். யாரு வந்து ஜன்னல் வழியா எடுப்பா?"

"அவ்வ்வ் ஆர்டர் மாத்தி எல்லாம் கேட்க முடியாது சேட்டா.. அப்புறம் மறந்திடும்"

"சரி சரி கேளு"சேட்டன்

"நீங்க நைட்டு போட்ட அந்த முண்டா பனியனை எப்படி கழட்டுவீங்க? இப்படி மேல நோக்கியா?" செய்து காண்பிக்கிறேன்.

"தம்பிக்கு எந்த வட்டானோ? அப்படி கழட்டாம வேற எப்படி கழட்டுவாங்க? வேற வழி கிழிச்சு தான் போடனும் பனியனை"

"அப்ப அந்த பனியனை செக் பண்ணுங்க. தூக்க கலக்கத்துல செயின் வந்தது தெரியாம போயிருக்கும்"

பழைய துணி கூடையில் பனியனை எடுத்து செக் செய்தார். செயின் இருந்தது. சந்தோசமாகி நன்றி சொன்னார். சிரித்துக்கொண்டே சென்றேன். முறுக்கு மீசை இருந்தால் தடவி விட்டுக்கொண்டு சிங்கம்ல கர்ஜித்திருக்கலாம். ம்ம்ம்ம்

சொப்ன சுந்தரன்

வாவ்! என்ன அழகா இருக்கு. நல்லா கொழுக் மொழுக்னு ஒரே சீராக ஓடுகிறது. எட்டு கால் பூச்சிக்கு இருக்கும் காலை விட இதுக்கு அதிகமாக கால் இருக்குமோ? சந்தேகத்தில் அதை குப்பற கிடத்தி எத்தனை கால் இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக பிடித்து குப்பற போட முயற்சித்தேன். கை விரலில் ஒட்டிக் கொண்டு வர வரவே இல்லை. அலர்ஜி வேறு. கடிக்குமோ என்ற பயம் வேறு. பதட்டத்தில் கையை கொஞ்சம் உதற வேறு எங்கோ போய் விழுந்து மறைந்து போனது.

கையில் லைட்டரோடு பிரபு வந்தார். “யோவ் எங்கய்யா அந்த மூட்டைப்பூச்சி?” என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தேன். “யோவ் மம்டி அதை பிடிச்சு வச்சிரு போய் லைட்டர் எடுத்து வந்து பொசுக்கிறலாம்னு சொன்னா அதுக்குள்ள அதை மிஸ் பண்ணிட்டயேய்யா. உனக்கெல்லாம் கல்யாணம் பண்ணி என்னய்யா பண்ண போற மம்டி”

“பிரபு இதுக்கும் கல்யாணத்துக்கும் என்னய்யா சம்பந்தம்? சரி கேட்கனும்னு நினைச்சேன். இந்த ரூம்ல மூட்டைப்பூச்சி ரொம்ப அதிகமோ?”

“ஏன் அதிகமா இருந்தா என்ன பண்ணுவ? உன் ரூமுக்கு எடுத்துட்டு போவப்போறயா? பேசாம படுய்யா மம்டி. நாளைக்கு முக்கியமான வேலையா தானே இங்க வந்த? பேசாம படு” தலைகானியை ஒரு நோட்டம் விட்டு ப்ளாங்கெட்டை நன்றாக உதறி படுக்க தயாரானார்.

“இல்ல பிரபு உங்களுக்கு பழகியிருக்கலாம். மூட்டைபூச்சின்னா எனக்கு கொஞ்சம் அலர்ஜி...”

“இல்ல எனக்கு ரொம்ப நெருங்கின சொந்தம் பாரு, பேசாம படுய்யா”

“காலையில சீக்கிரம் எழுந்து வேற போகனும். இண்டெர்வியூ இருக்கு.”

“நாங்கெல்லாம் காலையில எழுந்து என்ன பிச்சையா எடுக்க போறோம். அட ராமா.......... பேசாம படுய்யா”

“அதான் பிரபு சரியா தூங்கலைன்னா காலையில முகம் கொஞ்சம் டல்லா இருக்கும். அதான் சொன்னேன்”

“இப்ப படுக்க போறயா இல்ல வெளிய போறயா? பாலாஜி சொன்னான்றதுக்காக தான் இந்த ரூம்ல உன்னை இன்னைக்கு தங்க வச்சேன். நீ என்னடான்னா நொய் நொய்யின்னு கேள்வி கேட்டு தூங்க விடமாட்டேங்கிற. மணி அல்ரெடி 12 ஆகப்போகுதுடா ஆதவா. பேசாம படு. நெக் பனியன் போட்டவங்களையெல்லாம் மூட்டை பூச்சி கடிக்காது. நிம்மதியா தூங்கு” அவ்வளவு தான். மெலிதான குறட்டையில் செட்டிலாகி விட்டார்.

என் கண்களும் சொக்கி கொண்டு எங்கோ இழுத்து சென்று, கடைசியில் இண்டெர்வியூ பயம் காட்சிகளாக விரிந்தது.

தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. பதில்கள் தெரிந்தும் பதட்டமடைகிறேன். உடல் முழுவது மூட்டைப் பூச்சி ஊர்கிறது. ’சுருக்’ என்று கடிக்கிறது. நகைக்கிறது. வேகமாக ஊர்ந்து கழுத்தின் மேல் ஏறி, கன்னத்தை தாண்டி கண்களின் முன்னே அட்டாகாசமாக சிரித்து தன் கொடுக்கை கொண்டு கொட்ட வருகிறது........ வேகமாக கண்களை மூடி பின்பு மெதுவாக திறந்தால் ஆளுயிற மூட்டை பூச்சி ஆனால் அந்த முகம் மட்டும் மனித முகம். அதுவும் பரிச்சயப்பட்ட முகம். அது சிரித்து கொண்டே ராட்சஷ் கொடுக்கை கொத்த என்னருகில் வர  “அம்மாஆஆஆஆஆஆஆஆஆ” என கத்திய கத்தில் பிரபுவும் கத்த ஆரம்பித்தான். இருவரும் கத்திக்கொண்டிருக்கும் போதே அடுத்த ரூமிலிருந்த பாலாஜியும், கார்த்தியும் ஓடி வர அவர்களும் “என்னாச்சு”ன்னு கத்த... க்ளைமாக்ஸ்.

“அட பிரபுவா அது? அவ்ளோ பெரிய மூட்டைப் பூச்சியா? தலை மட்டும் பிரபுவா? மச்சி நினைச்சு பார்க்கவே செம காமெடியா இல்ல? ஹா ஹா ஹா” கார்த்தியும், பாலாஜியும் சிரித்துக்கொண்டே சென்றனர்.  போகும் போது “ஆதவா குட் நைட், டேய் மூட்டை பூச்சி  குட் நைட்” என்றவாறு சென்றனர். ம்ம்ம். உங்கள் யூகம் சரி தான். அன்றிலிருந்து மூட்டைப்பூச்சி பிரபு ஆகிவிட்டர்.

ப்போதும் கனவுகள் வருவதில்லை. எப்போது வருகிறது என்றும் தெரியவில்லை.  வராமல் இருப்பதுமில்ல (அடி தான் வாங்க போற) சிரித்து சிரித்து வயிறு வலியில் தூக்கத்திலிருந்து எழுந்த சம்பவங்களும் உண்டு. எதற்கென, யாருக்காகவென தெரியாமல் வழிந்த கண்ணீர் தடத்தை காலையில் அழித்ததும் உண்டு. வீறுகொண்டு எழுந்து பீரோவில் மோதியதும் உண்டு. ஜப்பானிய அமானுஷப்படங்களை கண்டு வீரிட்டு அலறி அனைவரையும் எழுப்பியதுமுண்டு. வருடங்களாக தொடர்ந்து வரும் கனவுகள் உண்டு.

பல்லுடைந்து பொக்கை வாயோடும்  “இது கனவு தான்.. இது கனவு தான் நம்பாதே. உன் பல் உடையவில்லை” என உறக்கத்தில் எனக்கு நானே ஆறுதல் சொன்னதும் உண்டு. ஆனா மத்தவன் கனவுல வந்ததுக்காக திட்டு வாங்கினது மட்டும் நடக்கல... இப்ப அதுவும் நடந்திருச்சு. 

சென்ற மாதம் நண்பனிடமிருந்து போன்!. மிஸ்டு காலே இருந்தாலும் ஒரு ரிங் மேல கொடுக்க மாட்டான்.  போனே செய்தது ஆச்சர்யம் எனக்கு. எடுத்ததும் “@($*&$&#)*$($)$” அர்ச்சனை செய்தான். "நிறுத்துடா. என்னடா நினைச்சுகிட்டு இருக்கீங்க.ஆளாளுக்கு கும்முறீங்க. எதுக்கு திட்டுறன்னு சொல்லிட்டு திட்டு" என்றேன்

"ரெண்டு நாள் முன்ன என் கனவுல நீ வந்த"

"அடச்சீ. அதுக்கேன் திட்டுற? நல்ல விசயம் தானே"

"@($*&$&#)*$($)$"

 "ரைட்டு என்ன கனவுன்னு மட்டும் சொல்லு"

"நீயும் நானும் அடர்ந்த காட்டுக்கு போறோம்..."

"சூப்பர். கூட பிகர் எதுவும் இல்லையா?"

"@($*&$&#)*$($)" வார்த்தை மாறாம அப்படியே திட்டுறானே!

"சரி சரி சொல்லு. உனக்கு பில்லு ஏறபோகுது" டைவர்ட் செய்தேன்

"நல்ல அடர்ந்த காடு. வழி வேற தவறிட்டோம். நல்ல பசி ரெண்டு பேருக்கும். ஏதாவது சாப்பிட கிடைக்குமான்னு தேடிகிட்டே போறோம். தீடீர்னு புலி ஒன்னு பயங்கர பசியில எதிர்தாப்புல நிக்குது"

"அய்யய்யோ. அப்புறம் என்ன ஆச்சு?"

"அது நம்மள துரத்த வர...நாம ஓட...அது துரத்தன்னு ரொம்ப தூரம் ஓடுறோம். அப்ப அங்க குடிசை இருக்கு. நீ அந்த குடிசைக்குள்ள போலாம்ன்ற. நான் வேணாம் வேற வழியில போகலாம்ன்றேன். ஆனா நீ கேட்காம  குடிசைக்குள்ள போற. நானும் வேற வழியில்லாம செத்தாலும் பிழைச்சாலும் நம்ம ரெண்டு பேருக்கும் ஒன்னாவே நடக்கட்டும்னு உன் பின்னாலயே ஓடுறேன்."

"என் செல்லம். நீயல்லவா நண்பன். கண்டிப்பா ரெண்டு பேரும் பிழைச்சிருப்பமே?"

"வெண்ணை வெட்டி மேல கேளு. குடிசைக்குள்ள ஒன்னுமே இல்ல. புலி வேற துரத்திகிட்டு குடிசை நோக்கி வருது. இனி வாசல் வழியா கூட ஓட முடியாத படி அது வாசலை நோக்கி வர ஆரம்பிச்சிருச்சு. குடிசையில வேற வழி வேற இல்ல."

"அடக்கடவுளே. அப்புறம் என்னாச்சு?"

"ம்க்கும். மேல மூங்கிள் கம்பு குடிசைக்கு சப்போர்டா குறுக்கால போய் கிட்டு இருந்துச்சு. நீ அதை பார்த்த. பார்த்துட்டு எகிறி அதை பிடிச்சு தொங்கிட்ட. அப்புறம் காலையும் அதுல தூக்கி மாட்டிகிட்டு காட்டுவாசிங்க கையும் காலையும் கட்டிட்டு கொண்டு போவாங்களே? அந்த பொஸிஷனுக்கு வந்துட்ட. நானும் அதே மாதிரி நானும் பண்ணிட்டேன்"

"ஹா ஹா பார்த்தயா அந்த சமயத்துல எப்படி புத்திசாலி தனமா நடந்திருக்கேன்னு"

"வாய்ல கத்தி விட்டு சுழட்டிருவேன். கேளு ஒழுங்கா. கீழ இருந்த புலி எகிறி குதிச்சு நகத்தால நம்ம டிக்கியை தாக்க வந்துச்சு. நீ புலி எகிறிம் போது டக்குன்னு டிக்கியை தூக்கி எம்பிகிட்டே இருந்த. நானும் அதே மாதிரி பண்ணினேன்."

"அடடா நல்லா தான் தப்பிச்சிருக்கேன். இதுக்கேன் என்னை திட்டுற"

"எழவெடுத்தவனே. கட்டில்ல மல்லாக்க படுத்துகிட்டு இருந்த நான் கனவுல பண்றதை  போல துக்கத்துல பயந்து எம்பி எம்பி குதிச்சிருக்கேன். கூட வேற பயத்துல சத்தம் வேற போட்டிருக்கேன். எங்கப்பா வேற கீழ படுத்துகிட்டு இருந்தாரு. முதல்ல பார்த்துட்டு அதிர்ச்சியாகி அப்புறம் என்னை அதட்டி எழுப்பி தறுதலை எங்க இது உருப்பட போகுதுன்னு திட்டிகிட்டே படுத்துட்டார்"

"ஙே!"
Related Posts with Thumbnails