சாமியே சரணம்

”என்னது முத்தமா?” வாயில் ஊற்றிய சரக்கை பாதி மேசையின் மீதும் பாதி சட்டையின் மீதும் தெறிக்க, நான் கேட்டதை பெரிதாக பொருட்படுத்தாமல் தலையை பலமாக ஆட்டினான் சரவணன்.

இன்றோடு இவன் சங்காத்தமே வேண்டாம் என்று முடிவே செய்து விட்டேன். ஓசியில் சரக்கு வாங்கி கொடுப்பதால் இவன் ஐடியாவென உளறும் அனைத்தையும் கேட்க முடியாது. ஆனால் இவன் போதையில் உளறவும் வாய்ப்பு இல்லை. இரண்டாவது பெக்கைத்தாண்டவில்லை இன்னும். எப்போதும் நான்கு தான். அதுவும் அடித்து விட்டு தெளிவாக பைக் ஓட்டுபவன். அப்படியென்றால் சீரியஸாகத்தான் சொல்கிறானா? முத்தம் கொடுப்பது தான் பந்தயமா? அடச்சே நான் எப்படி!

இவனோடு இன்றைக்கு தண்ணியடிக்க வந்திருக்கவே கூடாது. எல்லாம் அப்பாவால் வந்தது. இன்றைக்கும் காலையில் அப்பாவோடு சண்டை. முதலில் கை ஓங்கியது நான் தான். அப்பாவை அடிக்க கை ஓங்கினாயா? என யாரும் கோபப்படவேண்டாம். ஓங்கின கையை மடக்கி, அப்படியே திருகி என் முதுகோடு வைத்து ‘சுளீர்’ என்று இரண்டு அடி முதுகில் அடித்தவர் என்னவோ அவர் தான். வலியில் பொங்கிய அழுகையை அடக்க மாட்டாமல் மதிய சாப்பாடை கூட எடுக்காமல் கல்லூரிக்கு ஓடி வந்துவிட்டேன். இது  எனக்கும் அப்பாவுக்கும்  இப்போது ஆரம்பித்த சண்டையல்ல. பன்னிரெண்டு வருடங்களாக இருக்கும் பிரச்சனை.

அப்பாவுக்கு அரசு மருத்துவமனையில் பிணவறையில் வேலையாம். இதுவரை அந்த மருத்துவமனைக்கு நான் சென்றதில்லை. மிகவும் ஆஜானுபாக உடம்பு அப்பாவுக்கு. ஆனால் அம்மா தான் நடிகை கமலா காமேஷை பத்து நாள் பட்டினி போட்டது போல் இருப்பாள். நானும் அம்மாவைப்போலவே. இருவருக்கும் எப்படி திருமணம் நடந்தது என்ற இடியாப்பத்தின் முனையை தேடுவது அநாவசியம். அம்மாவை அடித்து அடித்து போரடித்து போய் கடைசியில் ஏழு வயதில் என்னை அடிக்க தொடங்கினார் அப்பா. ஏழு வயதில் பீடி வாங்கிவர தாமதமானதால் விழுந்த அடி, இன்று வரை தொடர்கிறது. மதிப்பெண் குறையும் போதும், எதிர்வீட்டு பெண்ணுடன் பேசும் போதும், தெருமுனை கடையில் தம்மடிக்கும் போதும் அடி சற்று அதிகமாகவே விழும். ஏன் என்னையும்,அம்மாவையும் அடிக்கிறார் என எனக்கு புரியாத புதிராகவே இருந்தது. அவருக்கு குடிப்பழக்கம் கூட கிடையாது.

அப்பா என்னை அடிக்கும் போதெல்லாம் அப்பாவை தடுப்பது ரயில் ஓடும் போது குறுக்கே பாய்வதற்கு சமமாததால் ஒரு ஓரமாக  நின்று கவலையுடன் வேடிக்கை பார்ப்பாள் அம்மா. பின்பு அடி நின்றவுடன் அழுகையுடன் சமாதானமும் செய்வாள். வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் ஒட்டு மொத்த காலணியே வேடிக்கை பார்க்கும்.

நானும் சலித்தவனல்ல..... என் பதினைந்தாவது வயதில் தான் முதல் முறையாக அப்பாவை அடித்தேன். அவர் என்னை அடித்தபோது கூட பொறுத்துக்கொண்டிருக்கிறேன். அன்று அம்மாவை அடித்த அடியை கண்டு பொறுக்க மாட்டாமல் முதல் முறையாக அப்பாவை பின்னாலிருந்து அடித்து விட்டு தலைதெறிக்க ஓடியதில் கால் தடுக்கி விழுந்து தலையில் நாலு தையல் போடுமளவிற்கு நல்ல அடி. தலையில் இரத்தம் சொட்ட சொட்ட நான் நின்றதைப் பார்த்த அவர்  திருப்பி அடிக்காமல் சென்று விட்டார். அதற்கு பிறகு கையை ஓங்கினால் கையை முறுக்கி முதுகில்  ‘பளீர்’ என்று அடி விழும். பொறுமிக்கொண்டே வெளியே வந்து விடுவேன். இன்றும் அது போலத்தான்.

எப்போது அடி கிடைத்தாலும் சரவணனிடம் வந்து சொல்வது வழக்கம். என் பால்யகால நண்பன். சில சமயம் அடி பலமாக இருந்தால் சரக்கு வாங்கி தருவான். பல நேரங்களில் ஆறுதல்களும் சில நேரங்களில் தீர்வுகளும் சொல்பவன். இன்றும்.

முதல் பெக் அழுகையுடன் போனது. “படிப்பெல்லாம் வேணாம் சரவணா. உங்கப்பாகிட்ட சொல்லி துபாய்ல ஒரு வேலை வாங்கி கொடுக்க சொல்லு. இந்தாள் கூட இருந்து அடிவாங்கி சாக முடியாது. எங்கையாவது ஓடி போலாம்னா அம்மாவை நினைச்சா கவலையா இருக்கு. அடிச்சே கொன்றுவான் அந்தாளு. துபாய்ல வேலை கிடைச்சா அம்மாவையும் கொஞ்ச நாள்ல துபாய் கூட்டிட்டு போயிடுவேன்”. “ம்ம்” தலையாட்டினான் சரவணன். இன்று இரண்டு பெக் முடிந்த பிறகு வழக்கம் போல் குருட்டு தைரியத்தில் அப்பாவை ஆள் வைத்தாவது அடிப்பதாக உறுமினேன். கேலிப்புன்னகையை விட்டான். ”அடிச்சா பிரச்சனை தீர்ந்திடுமா? அதுவுமில்லாம நீ அடிக்க போறயா? உன்னால முடியாது. பயந்தா கொள்ளிடா நீ ” என்றான். வேற என்ன செய்வது?. “சொன்னா நீ செய்ய மாட்ட. விட்டுரு"

போதையும், காலையில் ஏற்பட்ட அவமானமும் தலைக்கேறி இறங்க மறத்தது. சரவணனின் வார்த்தைகள் சூடேற்றியது. "நான் செய்வேன் டா. என்ன செய்யனும்னு சொல்லு.”

”உங்கப்பாவை கட்டி பிடிச்சு ஒரு முத்தம் கொடுக்க முடியுமாடா உன்னால? ஒரு வாரம் டைம். உனக்கு துபாய் வேலை ரெடி பண்றேன்”

ரண்டு நாட்கள் கடந்துவிட்டது. எப்படியாவது அப்பாவுக்கு முத்தம் கொடுக்க வேண்டும். சரவணன் வாக்கு தவறுவதில்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் முத்தம் ஏன் கொடுக்க சொல்கிறான்? ஒரு வேளை என் தைரியத்தை சோதிக்க இருக்கலாம். எதுவாக இருந்தாலும் எனக்கு துபாய் செல்ல வேண்டும். நடந்தால் சரி.

அப்பாவின் அருகே நெருங்கவே தயக்கமாக இருந்தது. வழக்கமாக இருக்கும் பயம் போய் கூச்சமாக இருந்தது. ஏன் என்று தெரியாத கூச்சம். இதுவரை அவர் என்னை தூக்கி கொஞ்சியதாகவோ இல்லை முத்தம் கொடுத்ததாகவோ ஞாபகம் இல்லை. நான் அவரை முகம் நோக்கி கூர்ந்து கவனித்தே வருடம் பல ஆயிற்று. நேற்று மதியம் கட்டிலில் அவர் உறங்கி கொண்டிருந்த போது முத்தம் கொடுக்கலாமா என அருகில் சென்றேன். லேசான சுருக்கங்களோடான முகம். நெற்றியின் அருகே ஒரு வடு. காதுகளில் முடி. மீசையில் வெள்ளை முடி நிறைய வந்திருக்கிறது. அருகே சென்றால் ஒரு வாசனை. இல்லை நாற்றம். என்ன வாசனை/நாற்றம் என்று தெரியவில்லை. ஒருவேளை இது பிண வாசனையாக இருக்குமோ? பிணங்களை தூக்கி தூக்கி அப்பாவிற்கும் பிண வாசனை ஒட்டிக்கொண்டதோ? குமட்டிக்கொண்டு வந்தது. வாயை பொத்திக்கொண்டு கழிவறைக்குள் ஓடினேன்.

நான்கு நாள் ஆயிற்று. அப்பாவை நெருங்க முடியவில்லை. இன்று சுவரை பார்த்தப்படி சட்டைபையில் துளாவி பணத்தை எண்ணிக்கொண்டிருந்த சமயம் பின்பக்கமாக கட்டிபிடிக்கலாம் என்று மெதுவாக சென்றேன். இருகைகளையும் விரித்தபடி அடி மேல் அடி வைத்து அவரை நெருங்கினேன். எனக்கு முன்னால சென்ற என் நிழல் விரித்த படி சென்ற என் கைகளை அடிக்க பாய்வதாக காண்பித்திருக்க கூடும். வெருட்டன திரும்பிய அப்பா கையை லாவமாக பிடித்து, வளைத்து கன்னத்தின் தாடையில் சுரீரென்று மாறி மாறி அறை விட்டார். அவமானம் மேலோங்கி அந்த இடத்திலேயே உட்கார்ந்து அழத்தொடங்கினேன். அப்பா ஒன்றும் புரியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.

ந்தாம் நாள். இது சரிப்பட்டு வராது என்ற முடிவுக்கு வந்தேன். அப்பா கழிவறைக்குள் உள்ளே சென்ற சமயம் வெளியே காத்திருந்தேன். வெளியே வர கதவை திற்க்கும் சமயம் கட்டி பிடிக்கலாம் என்பது திட்டம். அவர் முன் நிற்கும் போது இருக்கும் பலம் முழுதும் இழந்து விடுகிறேன். கண்ணை இறுக்க மூடி காரியத்தை சாதிக்க முடிவெடுத்தேன். கதவு திறக்கும் சப்தம் கேட்டது. தயாரானேன். தலையை துவட்டியபடி செருமிக்கொண்டே வந்தார். கண்ணை மூடிக்கொண்டு முன்னே செல்ல... நிமிர்ந்தார். படப்படப்பு அதிகமாகி கையை விரித்தபடி நின்றேன். கண் திறந்த போது நேரெதிரே உற்று நோக்கிக்கொண்டிருந்தார். மிகக்கூர்மையான பார்வை. பல நொடிகளுக்கு பிறகு வாய் நடுக்கத்துடன் “அது வந்து...அப்பா...இல்ல வந்து” உளறினேன். நெற்றியை சுருக்கி புருவங்களை உயர்த்தி “என்னது அப்பாவா?” கரகரத்த குரலில் கேட்டார். அப்போது தான் உறைத்தது. இந்தாளை அப்பா என்று அழைத்து வருடங்கள் பல ஆயிற்று என்று. எதுவும் புரியாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன். ஓடினேன் என்பது பொருத்தமாக இருக்கும்.


துபாயும் வேணாம் ஒன்னும் வேணாம் இப்படியே இந்தாளோடு அடிவாங்கியும் திட்டுவாங்கியும் காலம் ஓடட்டும். என்றாவது இங்கேயே நல்ல வேலை கிடைத்து அம்மாவை நல்ல படியாக பார்த்துக்கொள்ளவேண்டும். சரவணனை அழைத்தேன். என்னால் முடியாது பந்தயத்தில் இருந்து விலகுவதாக சொன்னேன். சிரித்தான். “இன்னும் ஒரு நாள் பாக்கி இருக்குடா. நாளைக்கும் ட்ரை பண்ணு. இல்லைன்னா தோத்ததை ஒத்துக்கோ.” என்றான்.

”என்ன எழவு பந்தயம்டா இது? எதுக்காக என்னை முத்தம் கொடுக்க சொல்ற? சொர சொரன்னு அந்த முகம், ஒரே சுருக்கம்... அந்தாள் மேல ஒரு வாசனை வேற. பொண வாசனைன்னு நினைக்கிறேன். பாவம் எங்கம்மா எப்படி இத்தனை நாள் இந்தாளோட குப்பை கொட்டினாங்களோ. என்னால கிட்ட போக முடியலடா சரவணா. மனசெல்லாம் குறு குறுன்னு இருக்கு. படபடன்னு அடிச்சுகிறது. பயம் இல்லடா சரவணா. ஒரு அருவருப்பு.... இல்ல இல்ல ஒரு தயக்கம். இல்ல ஒரு அகம்பாவம். ஒரு ஈகோ. எது வேணா வச்சுக்கோ. என்னால முடியலடா. கிட்ட போனாலே என்னையும் அம்மாவையும்  இத்தனை நாளா அடிச்சதும் இந்தாளு பொணத்தை க்ளீன் பண்றதும் தான் ஞாபகம் வருது. அதோட எப்படி என்னால முத்தம் கொடுக்க முடியும்? சின்ன வயசுல இருந்து அந்தாளு என்னைய தூக்கி கொஞ்சினதே இல்ல தெரியும்ல உனக்கு. ஏன் எங்கம்மாகிட்ட கூட ஆசையா பேசி பார்த்ததில்ல. அப்படி இருக்குற ஆளுகிட்ட கட்டிபிடிக்க சொல்றயே? என்னால முடியலடா. எனக்கு துபாய் வேலை வேணாம். நாங்க இங்கயே இருந்துக்கிறேன்.நீ புத்திசாலிடா சரவணா நீ எதுக்கு இந்த மாதிரி பந்தயம் கட்டினேன்னு தெரியல. ஆனா என்னை புரிஞ்சுப்பன்னு நினைக்கிறேன்” போனை வைத்தேன்.


மீசையை சீப்பைக்கொண்டு வாரிக்கொண்டிருந்தார் அப்பா. அம்மா அடுப்பங்கரையில் வேலைப்பார்த்து கொண்டிருந்தாள். குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த என்னை கண்ணாடியின் வழியே அப்பா கவனித்துக்கொண்டிருந்தார். சிறிது நேர நடைக்கு பிறகு தைரியம் வரவழைத்துக்கொண்டு “அப்பா”என்றேன். அடுப்பங்கரையில் இருந்த அம்மாவும் அப்பாவும் ஒரு சேர திரும்பினார்கள். வேகமாக சென்று “என்னை மன்னிச்சிருங்கப்பா” என்று கட்டிப்பிடித்து கன்னத்தில் இறுக்க “இச்ச்ச்” என்று ஒரு முத்தம் கொடுத்தேன். விறு விறு வென வெளியேறி சரவணன் வீட்டுக்கு சென்றேன்.

ரவாயில்லயே சொன்ன மாதிரி கொடுத்துட்டயே...”டப்”பென கடலை பாக்கெட்டை பிரித்தான் சரவணன்.

பொறுமை இல்லாமல் ஒரே மடக்கில் சரக்கை அடித்தேன். “துபாய் எப்ப கூட்டிட்டு போவ?”

“இருடா கொஞ்சம் பொறு. பட்டுன்னு நடக்குற விசயமா இது? ஒரு மூனு மாசம் போகட்டும்”

இருந்த கடைசி பெக்கையும் ஒரே மடக்காம குடித்தேன். “என்னது மூனு மாசமா? எனக்கு அதெல்லாம் தெரியாது. இன்னும் ஒரே மாசத்துல நான் துபாய் போகனும். எப்படியாவது ஏற்பாடு செய்” என்று எழுந்து சென்றேன். தள்ளாடிய நடை கண்டு சரவணன் அழைத்தான் “இருடா நான் கொண்டு விடுறேன்” தலையை திருப்பாமல் கையை மட்டும் உயர்த்தி வேண்டாம் என சைகை செய்து வீட்டை நோக்கி நடந்தேன்.


“ஹரிவராசனம் விஷ்வமோஹனம்
ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா”

என்றைக்கும் இல்லாமல் இன்று காலையில் வீட்டில் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. சிறிது கண்கள் திறந்தேன். அப்பா கருப்பு சட்டை அணிந்திருக்கிறார் போல. பாடல் வரிகளை  முழுவதுமாக பாடத்தெரியாமல் சரணத்தின் “சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா” என முணங்கிய படி சாமி படத்தின் முன் நின்றிருந்தார். விபூதியை எடுத்து ஏற்கனவே சந்தனம் இருந்த நெற்றியில் பட்டையாக இட்டுக்கொண்டார். என் பக்கம் திரும்பினார். கண்களை மூடினேன். நெற்றியில் விபூதியை வைத்துவிட்டு “சாமியே சரணம்” என்றார். “லலிதா வேலைக்கு போயிட்டு வரேன் வீட்டை பார்த்துக்கோ. பையன் தூங்குறான் அந்த ரேடியோ பெட்டியை அமத்திடு” என்ற படி செருப்பு இல்லாமல் தெருவில் இறங்கி நடக்க துவங்கினார். கையில் சட்டியில் புளியை கரைத்துக்கொண்டிருந்த அம்மா சிலையாகி நின்று கொண்டிருந்தார். தலையை தூக்கி ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“என்னது துபாய் வேலை வேணாமா? ஏன்?” சரவணன்

”இல்ல... வந்து.... எனக்கு புடிக்கல” இழுத்தேன்.  எதிர்முனையில் சரவணன் ஏதோ புரிந்த போல சிரித்துக்கொண்டிருந்தான்.

“சாமியே சரணம்!” என்றபடி போனை வைத்தேன்.

18 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஜீவன்பென்னி said...

இந்த மாதிரி ஆளு எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்தாங்க. பிரச்சனைனா அப்பாவும் பையனும் ஆளுக்கொரு கத்திய எடுத்துக்கிட்டு ரோட்டுல நின்னூ சண்டைய போடுவாங்க. ஆனா ஒரு கட்டத்துல கதைல வர்ற மாதிரியே மாறிப்போனாங்க.

ஹுஸைனம்மா said...

வித்தியாசமாருக்கு.. வித்தியாசமான நண்பர்.. இன்டைரக்டா சைக்காலஜிக்கல் கவுன்ஸலிங் கொடுத்திருக்கார் நண்பருக்கு. அப்பாவை விவரிச்சிருக்கிறது நல்லாருக்கு.

//அப்பாவை தடுப்பது ரயில் ஓடும் போது குறுக்கே பாய்வதற்கு சமமாததால்//
நல்ல உவமை!!

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

கோபிநாத் said...

ம்ம்ம்...எப்படியே அந்த பையனை அவனா நீ அப்படிங்க அளவுக்கு ஆக்கிட்ட ;))

கார்த்திகைப் பாண்டியன் said...

நிறைய யோசிச்சு எழுதியிருக்க ஆதவா.. நல்லாயிருக்குப்பா.. இன்னும் கொஞ்சம் சுருக்கி இருக்கலாமோன்னு ஒரு சின்ன அபிப்பிராயம் எனக்கு..:-))

☀நான் ஆதவன்☀ said...

@ஜீவன்பென்னி

:) நன்றி ஜீவன் பென்னி
---------------------------------
@ஹூஸைனம்மா

நன்றிங்க ஹூஸைனம்மா.:)
----------------------------------
@ers - ரைட்டு :)
-----------------------------------
@கோபிநாத்

அவ்வ்வ்வ் உமக்கு இருக்கையா அப்பாலிக்கா :)
-----------------------------------
@காபா

நன்றிங்க காபா :)எழுதினதை திருப்பி படிச்சு பார்க்கல. அப்படியே போஸ்ட்டிட்டேன் :)

Gayathri said...

அப்பா பையன் உறவு இப்படி கூட
இருக்கும்ன்னு இப்போதான் தெரியுது..
நீங்கள் எழுதிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது..
"அம்மா தான் நடிகை கமலா காமேஷை பத்து நாள் பட்டினி போட்டது போல் இருப்பாள்"

ஹாஹா ஒல்லின்னு இப்படிகூட சொல்லலாமா !!

வாழ்த்துக்கள் நல்ல கதை

பொன்கார்த்திக் said...

:)

நாஞ்சில் பிரதாப்™ said...

மேலேருந்து கீழை வரைக்கும் மவுசை உருட்டிட்டேன்...
என்னது படிக்கனுமா??? முதல்ல சிறுகதைன்னா சின்னதா எழுதிப்பழகுடே...
ஒரு நாள ஃபுல்லா ஒரே பதிவை வாசிக்க முடியுமா??? ஆணியை யாரு புடுங்கறது...:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு ஆதவன்..அதும் கதையில் விவரிப்பெல்லாம் ரொம்பவே நல்லாருக்கு..

இளைய பல்லவன் said...

நல்லா இருக்கு ஆதவன். தொடருங்கள்.

☀நான் ஆதவன்☀ said...

@காயத்ரி

நன்றி காயத்ரி :)
------------------------------------
@ நன்றி பொன் கார்த்திக்
------------------------------------
@நாஞ்சில் பிரதாப்பு

ஏலேய் ஆபிஸ்ல ஆணி புடுங்குறயா? நம்ப சொல்றயா இதை? :)
-----------------------------------
@முத்தக்கா

நன்றிக்கா
-----------------------------------
@இளைய பல்லவன்

வாங்க பல்லவன். நன்றி :)

சிட்டுக்குருவி said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஆதவன்

வாழ்த்துகள்

சுல்தான் said...

விவரிப்புகள் மிகையில்லாமல், சிறப்பாய் தோன்றுகின்றன.
மனதுக்கு பிடிப்பது போல, நல்ல கதை.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

Prasanna Rajan said...

உண்மையிலேயே நல்ல சிறுகதை ஆதவன். வலைப்பதிவில் எழுதுவதை விட ஏதேனும் வார, மாத அல்லது குறைந்தபட்சம் இணைய இதழ்களுக்கு அனுப்பலாமே?

Anonymous said...

கதை நல்ல இருக்கு! முன்னமே பின்னூட்டம் இட்டவர்கள் சொன்னது போல சிறுகதை கொஞ்சம் நீண்டதா இருக்கு; சற்றே நீண்ட சிறுகதை இன்னு போட்ருங்க!! அடுத்து ஒரு காமெடி பதிவை எதிர் பார்க்கிறேன்!!!
-
வெங்கடேஷ்

க.பாலாசி said...

ரொம்ப நல்லாயிருக்குங்க கதை...ஆதவன்.. இயல்பான வடிவம்... தமிழ்மணம் இரண்டாவது சுற்றிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்..

Related Posts with Thumbnails