பரமு (எ) பரந்தாமன் (சவால் சிறுகதை)

”பேஷ்டா பரமு, கதை நன்னா வந்திருக்கு. யார் யாரெல்லாம் நடிக்க போறா இதுல?” பரமு முகத்தை மிக சீரியஸாக வைத்துக்கொண்டான். மீசையில்லாத மொழு மொழு முகமும் எண்ணெய் தடவி நன்றாக படிய வகிடெடுத்து வாரிய தலையுமாய் இருந்த அவனுக்கு அந்த சீரியஸாக வைத்துக்கொண்ட முக பாவம் ஒத்து வரவில்லை. சிரிப்பாக வந்தது ராகவனுக்கு.

வருடா வருடம் நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாளும் அந்த அக்ரஹாரத்தில் இரவுகள் ஆடல், பாடல், நாட்டியம், நாடகம் என ஒவ்வொரு வீட்டு பிள்ளைகளும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவர். சென்ற வருடம் போல இந்த வருடமும் நாடகம் நடத்த பரமுவும் ராகவனும் ஆலோசிக்க தொடங்கினர். சென்ற வருடம் ”வாமு க்ரூப்” அள்ளிய பாராட்டுகளை இந்த வருடம் தட்டிச்செல்ல உறுதிமொழிகள் சென்ற வருடமே எடுத்துக்கொள்ளப்பட்டன. வருங்கால பாலசந்தராகவோ பாரதிராஜாவாகவோ வளரத்துடிக்கும் அஹ்ரகாரத்து இளைஞர்கள்.


“நீ ஏண்டா ராகவா இதுக்கு சிரிக்கிற. க்ரைம் கதையாக்கும். காமெடி சீன் இல்லையே இதுல. போன வருசம் மாதிரி இந்த வருசமும் நீ ஸ்பான்ஸர் பண்ணனும் ராகவா. அப்புறம் எங்காத்துல பட்டாபி இருக்கான்ல அவனை அந்த போலீஸ் கேரக்டர்ல வச்சுக்கலாம்”

”அவனா? அவன் சரியான கும்பகர்ணனாச்சேடா பரமு. ஒத்து வருவானா?”

“சரியா போச்சு போ. முந்தா நாள் கோமு மாமி அவனுக்கு கொடுத்த சீடைய யாரோ எடுத்து தின்னுட்டா. இவனுக்கு வந்துதே கோபம். ஒவ்வொருத்தர் வாயையும் திறந்து பார்த்து தின்னது நம்ம ரங்கு மாமான்னு கண்டுபிடிச்சுட்டாண்டா. அவன் போலீஸ் கேரக்டருக்கு கரக்டா சூட் ஆவான்” பரமு முகத்தில் பிரகாசம்.

” சரி. அப்புறம்?”

“அப்புறம் என்ன கீழ உருண்டு புரண்டு அழுது ரங்கு மாமா கிட்ட இருந்தே 2 ரூபா வாங்கிட்டான். கெட்டிக்கார பயல்”

“டேய் தத்தி, அப்புறம் அடுத்த கேரக்டருக்கு யாருன்னு கேட்டா என்னன்னமோ சொல்ற?”

“அதை கேட்குறயா... நம்ம காயத்ரி மாமி பொண்ணு காமினி இருக்காளோல்லயோ? அவளையும் அழைச்சுண்டா போச்சு. ”

“டேய் அவளா? அவ சரியான அழு மூஞ்சியாச்சேடா?”

”அதெல்லாம் முடியாது. காயத்ரி மாமி நம்ம நாடகத்த பார்க்க வர்ரவாளுக்கு  அவா ஆத்துலருந்து  முந்திரி பாயாசமும் கை முறுக்கும் தரேன்னுருக்கா. அதுனால அவா பொண்ணு தான் அந்த ரோலுக்கு. நான் போன வருசம் நாடகம் நடத்துனேனோல்லயோ? அப்பேர்லந்து  மாமி என் மேல ரொம்ப ப்ரியமாகிட்டா?” அசடு வழிந்தான். அவன் உண்மையான முகமே இது தான்.

“என்னடா இது? கருமம் காம்பினேஷனே சரியில்லையே?”

“வாயை ஜலம் போட்டு அலம்புடா. ஏன் உன் புத்தி இப்படி போகுது?”

“அட! நான் முந்திரி பாயாசத்தையும், கை முறுக்கையும் சொன்னேன். நீ என்ன நினைச்ச?”

“நான் ஒரு அசடு...ஒன்னுமில்ல...விடு.”

த்ரில்லர் கதை தான் என முடிவான பிறகு தமிழின் முண்ணனி இயக்குனர் ஒருவர் சமீபத்தில் எடுத்த ஒரு த்ரில்லர் படத்தை தழுவி எடுத்து நாடகமாக்கினால் கண்டுபிடிக்க வாய்ப்பிருப்பதாக நிரந்தர தயாரிப்பாளர் ராகவன் கூறிய அறிவுரையால் வெறும் கைகுலுக்கி எடுத்த கதை தான் அந்த நாடகம்.


“நவராத்திரியில எந்த நாள்டா நம்ம நாடகம்?” ராகவன்.

“அந்த வாமு க்ரூப் அஞ்சாம் நாள் நாடகம் பண்றா. நாலாம் நாள் கல்யாணியோட பரதம் இருக்கு...நேக்கு ஒத்தப்படை தான் ராசி அதுனால மூணாம் நாள் பண்ணலாம்னு இருக்கேன். போன வருசம் மாதிரி இந்த வருசம் அந்த வாமு க்ரூப்புக்கு கைதட்டல் கிடைக்க கூடாது ராகவா. நாம இந்த தடவை நன்னா பண்ணனும்”

“சரிடா பரமு ஆனா அந்த வில்லன் கேரக்டருக்கு நல்ல ஒரு ஆள் வேணுமே. கதையோட பலமே அந்த கேரக்டர் தானே.என்ன பண்றதா உத்தேசம்?”

”ஏன் டா ராகவா என்னைப் பார்த்தா உனக்கு நல்ல வில்லனா தெரியல?”  பரமு முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டான்.


“கஷ்டகாலம்... முருங்கைக்கா கீழ் பகுதிய ரெண்டா உரிச்சு பேண்ட் போட்ட மாதிரி இருக்க. உன்னையெல்லாம் எப்படி வில்லனா ஆடியன்ஸ் ஏத்துப்பா?”

“டேய் ராகவா கதை தாண்டா முக்கியம். நம்ம கதையில இருக்குற த்ரில் பார்த்தே இல்ல? நாடகம் ஆரம்பிக்கச்ச இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்னு விளம்பரம் போடனும்டா. அப்ப தான் சரியாகும். யாருக்காச்சும் ஒன்னு கெடக்க ஒன்னு ஆகிப்போச்சுன்னா கஷ்டமாகிடும் ஆமா”

“ம்க்கும். இப்படி தான் போன தடவை காமெடி நாடகம் போடுறேன்னு "சிரித்து சிரித்து வயிறு வலித்தால் கம்பெனி பொறுப்பல்ல” ன்னு சொன்ன.. கடைசியில நாலைஞ்சு ஜோடி செருப்பு  தான் கிடைச்சுது.. அதுவும் எனக்கு தான்  கிடைச்சது அந்த செருப்படி. நீ ஓடிட்ட" ராகவன்.

விவாதம் ஒத்திகைக்கு சென்றது.

”டேய் பரமு மாமா  எங்கடா அதிர்சம்? தரேன்னு சொல்லி தானே அழைச்சுண்டு வந்த? கொடுடா” பரமுவின் வேட்டியை பிடித்து பட்டாபி கத்திக் கொண்டிருந்தான். நம் கணிப்பு சரியானால் அடுத்த இரண்டு நிமிடங்களில் அவன் தரையில் புரண்டு அழ வேண்டு... விழுந்தே விட்டான்.
அவன் அழுவதைப் பார்த்த காமினிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஓட்டைப் பல் தெரிய சப்தமாக சிரித்தாள். அவளை நறுக்கென தலையில் ஒரு கொட்டு வைத்த பரமு “சிரிக்காதே அசடு. நான் கொடுத்த டயலாக்கை மனப்பாடம் செய். செத்த நாழில்ல நான் வந்து கேட்பேன்” என்றான். அவள் அழுது கொண்டே டயலாக்கை படித்தாள். அய்யோ அழத்தொடங்கி விட்டாளே? எப்போது நிறுத்துவாளோ!

மேல் சட்டை பாக்கெட்டில் எண்ணெய் வழிந்த காகிதத்தில் தயாராக சுருட்டி வைத்திருந்த பொட்டலத்தை பட்டாபியிடம் கொடுத்தான் பரமு. கொடுக்கும் முன் “என் செல்லம்ல பட்டாபி, மாமா நோக்கு கூலிங்கிளாஸ் வாங்கி தரேண்டா. இந்த டயலாக்கை மட்டும் சொல்லிடுடா”

“ம்ம் ஷொல்லு” அதர்சத்தை மென்று கொண்டே பட்டாபி.

“’ஹா ஹா ஹா காமினி என்கிட்ட வசமா மாட்டினயா?. ஒழுங்கா பரந்தாமன் எங்கிருக்கான்னு சொல்லு’ எங்க இதை சொல்லுடா பட்டாபி.

கவனமாக கேட்டுக்கொண்ட பட்டாபி “ ஹா ஹா ஹா...”என்ற போது வாயிலிருந்த அதிரச துண்டு கீழே விழுந்தது. அதை எடுக்க ஓடினான் பட்டாபி.

“டேய் பரமு இந்த கும்பகர்ணன் வேண்டாம்னு சொன்னேன்ல. இப்ப பாரு.. படுத்தி எடுக்குறான்” ராகவன் புலம்பினான்.


“இனி வேற யாரை தேடுறது.. இவனை வச்சு தான் சமாளிக்கனும். டீ.. காமினி நீயாவது படிச்சயா? எங்க அந்த டயலாக்கை சமத்தா சொல்லு பார்க்கலாம்” காமினி பக்கம் திரும்பினான் பரமு

அழுது கொண்டே வந்தாள் காமினி “ம்ம் இன்ஸ்பெக்டர் சிவா ம்ம்ம்....இன்ஸ்பெக்டர் சிவா.... வந்து சிவா. சிவா......” ஓ வென அழ ஆரம்பித்தாள்.
பரமுவை பார்த்தான் ராகவன். உண்மையாலும் பரமு முகம் வில்லைனைப் போல்  இருந்தது.

ரமு தாவாங்கட்டையை சொறிந்தவாறு அந்த பையனை மேலும் கீழும் பார்த்தான். பட்டாபியின் வயது தான் இருக்கும். பெட்டிகடை கண்ணன் ரெக்கமண்டேசனில் ஏதாவது ஒரு கேரக்டர் கேட்டு வந்திருக்கிறான். கண்ணன் வாங்கி வந்த லட்டு பொட்டலத்திலிருந்து ஒரு லட்டை வாயில் போட்டவாறு பட்டாபியும் அந்த பையனை மேலும் கீழும் பார்த்தான்.

"உன் பேர் என்னடா அம்பி"பரமு

அவன் நிதானமாக கண்ணாடியை சரி செய்தவாறு "ஹரி..... டாக்டர் ஹரி" என்றான்.
 
"என்னது டாக்டரா?"

"ஆமான்டா பரமு இப்பவே பெருசானா டாக்டரா ஆகனும்னு வைராக்கியம் வச்சுண்டு இருக்கான். அதான் யார் பேர் கேட்டாலும் டாக்டர் ஹரின்னு சொல்றான். இவனை எப்படியாவது டாக்டராக்கிடுடா பரமு" கண்ணன்

"என்னடா உளர்ற"

"உன் நாடகத்துல டாக்டர் வேஷம் இருக்குன்னயே பரமு. அதான் இவனை அழைச்சுண்டு வந்தேன்"

பரமு அவனை ஏற இறங்க பார்த்தான். "அம்பி இந்த டயலாக்கை படிச்சு மாடுலேசனோட சொல்லு பார்ப்போம்." என்றவன் காமினி பக்கம் திரும்பி "காமினி இந்த சீன்ல நீ பெட்ல படுத்துகனும். படுடி."அவ்ளை பெட்டில் படுக்க வைத்து மூக்கில் மாஸ்கை பொருத்தினான். 

"அப்ப நான் கிளம்பட்டா பரமு?" கண்ணன் போகமனமில்லாமல் கேட்டான்.

"இருடா பக்கத்தாத்துல குழந்தை பொறந்திருக்கு. குழந்தைக்கு பேரு வச்சுட்டு போயேன்." பரமு

"ஹி ஹி இல்ல செத்த நாழி ஒத்திகை பார்க்கலாம்னு....."

"தொந்தரவு பண்ணாம இங்கிருந்து போடா முதல்ல" பரமு கத்தத்தொடங்கினான். "என்ன டாக்டர் அம்பி... ரெடியா?"

டாக்டர் சிறுதி நேரம் இங்கும் அங்கும் நடந்து அதை மனப்பாடம் செய்து விட்டு "ம்ம்ம்" என்றபடி காமினியிடம் வந்தான்.

"இன்ஸ்பெக்டர் சிவா இவங்களுக்கு தலையில அடிப்பட்டதால எதுவா இருந்தாலும் 24 மணி நேரம் கழிச்சு தான் சொல்ல முடியும். இப்ப இவங்களுக்கு நிறைய ஊசி போடனும்" என்றவாறு கண்ணாடி கழட்டினார் டாக்டர்.

"சபாஷ்டா அம்பி" பரமுவுக்கு சந்தோஷம்.

"என்னது ஊசியா?" பயத்தில் அழத்தயாராகினாள். டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். ஒரே ஓட்டமாக அழுதவாறு ஓடினாள். 


"மாமாஆஆஆஆஆஆஆ காமினி ஓடுறா"


“பிடிடா அந்த அழுமூஞ்சிய” 

லட்டு வாயுடன் பின்னால் பட்டாபியும் ஓடினான். 

பரமுவை பார்த்தான் ராகவன். இப்போதும் பரமு முகம் வில்லனைப்போல் தான் இருந்தது.


"காமினி இங்க வாடி. நம்ம பரமு மாமா டி. ஏன் பயப்படுற. வா நான் இருக்கேன்ல" வாசலில் காயத்ரி மாமி நின்று கொண்டு காமினியை அழைத்துக்கொண்டிருந்தார்.

"மாமி காமினி இனி வேண்டாம். நாங்க வேறாளை பார்த்திக்கிறோம். சீனு மாமா பொண்ணு நாலாங்கிலாஸ் படிக்கிறா. அவளை நடிக்க சொல்லி கேட்டிருக்கோம். என்ன தத்தக்கா பித்தக்கான்னு பேசுவா. ஆனா கற்பூர புத்தி.. சொன்ன படியே நடிப்பா" பரமு கோபத்தில் படபடவென பொறிந்தான்.

"என்னடா கண்ணா கோவிச்சுக்கிற." என பரமு கன்னத்தை லேசாக கிள்ளிய மாமி " சின்ன வயசுலயே நான் சரோஜா தேவி மாதிரி ஆகனும்னு நினைச்சேன். எனக்கெங்க கொடுப்பினை இருக்கு. சின்ன வயசுல நான் இருக்குற இடமே தெரியாது”

”அப்போ அவ்ளோ ஒல்லியா மாமி நீங்க?” சுற்றளவை நோட்டம் விட்டவாறு ராகவன் இடைமறித்தான். 

”இல்லடா அம்பி.. எனக்கு இந்த நாடகம், சினிமான்னு அப்ப ஒன்னும் தெரியாதுன்னு சொல்ல வந்தேன். என் தோப்பனார் ரொம்ப ஆச்சாரம் வேற.. ஒரு போட்டோ கூட எடுக்க விடமாட்டார்னா பார்த்துக்கோயேன்.”
“ஏன் மாமி ஆச்சாரமா இருக்குறவாள போட்டோ எடுக்குறதில்லன்னு போட்டோகிராபர் சொல்லிட்டாரா?” ராகவன்

”நீ செத்த நாழி சும்மா இருடா.. நான் பரமுட்ட தானே பேசிட்டு இருக்கேன். பரமு இவளையாச்சும் ஸ்ரீதேவி மாதிரி வரனும்னு நினைச்சு இப்பவே நடிக்க கத்துகொடுத்துண்டு வரேன். இவளோட தோப்பனார் "காஞ்சனா"ன்னு வச்ச பேரையே சினிமாவுக்காக "காமினி" மாத்திட்டேன். அவளை பெரிய நடிகையாக்க வேண்டியது உன் கையில தான் பரமு இருக்கு. இப்ப கூட உன் நாடகத்துக்காக முந்திரி பாயாசம், கைமுறுக்கோட பனியாரமும் செஞ்சு தரலாம்னு இருக்கேன் பரமு. ஆனா நீ என்னடான்னா...." விம்மலுடனும் லேசாக கலங்கிய கண்களுடன் பொருமி நிறுத்தினாள் காயத்ரி மாமி.

"அய்யோ மாமி இப்ப ஆச்சுன்னு கண்கலங்கிறேள். காமினி நல்லா தான் நடிக்கிறா... ஆனா என்ன செல்லம் ஜாஸ்தி. ஒரு சொல்லு பொறுக்க மாட்டேங்கிறா காமினிய நல்லா நடிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு."பரமுவும் உணர்ச்சி வசப்படலானான்.
“ தாங்ஸ்டா பரமு. காமினி அப்பாக்கு கிடைச்ச மாதிரி உனக்கும் அழகும் அறிவோட நல்ல மாட்டு பொண்ணு கிடைக்கனும்னு நான் ஸ்ரீரங்கநாதனை சேவிச்சுகிறேண்டா”

“மாமி என்ன சொல்றேள்? மாமா உங்க சம்மதத்தோட சின்ன வீடு வச்சிருக்காறா? ராகவன் பதறினான்.

“அபிஷ்டு வாயை அலம்புடா... நான் என்னைய தான் சொன்னேன். பரமு உன் சமத்து ராகவனுக்கு வராதுடா” பரமுவின் கையை பிடித்தவாறு மாமி உணர்ச்சிவசப்பட்டாள்.

"என்ன எழவு காம்பினேசன் இது? கருமம்" ராகவன் தலையில் அடித்துக்கொண்டான்.


மாமி "ஏன்டா அம்பி? என்ன சொல்ற நீ?"


"அவன் கைமுறுக்கையும் பனியாரத்தையும் சொல்றான் மாமி. நீங்க கிளம்புங்கோ" பரமு ராகவனை முறைத்தான். 


ந்த தடவை ஒத்திகையை ராகவன் கவனித்துக்கொண்டான். பரமு ஒரு ஓரமாக உத்திரத்தைப் பார்த்தவாறு உட்காந்திருந்தான். யோசிக்கிறான் போல என்று ராகவன் ஒத்திகை வேலையை பார்த்தான். "பட்டாபி அடுத்த சீனை படி"

"“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா." பட்டாபி வாசித்தான்.  

"மாமா எனக்கு ஒரு சந்தேகம்"  பட்டாபி. 
"சொல்லுடா பட்டாபி. சந்தேகம் வந்தா அப்பப்ப கேட்டு தெளிவாக்கிடனும். அதான் சமத்து." ராகவன் சிரித்தவாறு பரமுவை பார்த்தான். பரமுவும் சிரித்தான்.

"நெத்தியில தானே பொட்டு வைப்பா? அப்புறேன் நெற்றிப்பொட்டுன்னு சேர்த்து சொல்றா? பொட்டுல துப்பாக்கிய வைன்னு சொன்னா போதாதா?

"படுத்தாதடா பட்டாபி இதை மட்டும் செய்” ராகவன்

"காமினி இன்னைக்கு பொட்டே வைக்கலயே? அப்போ நான் துப்பாக்கிய எங்க வைக்கனும்?" பட்டாபி

“ம்ம்ம்ம்ம்..என் தலையில வைச்சு தொலடா அபிஷ்டு” ராகவனும் கத்தத்தொடங்கினான்.

“உங்களுக்கும் பொட்டு இல்லையே மாமா. சரி ஓக்கே. ஆனா எட்டாதே மாமா. கொஞ்சம் குனியிரேளா?” பட்டாபி

“டேய் பட்டாபி என்னைய இம்சை படுத்தி கொல்லாதடா” ராகவன் எரிச்சலில் சிணுங்க தொடங்கினான்.

“சரி மாமா கொல்லல..” பட்டாபி துப்பாக்கியை கீழே போட்டான்.

“அய்யோ அய்யோ அய்யோ” என்றபடி ராகவன் லெட்டர் பேடில் தலையில் அடித்துக்கொண்டான்.

"நோக்கு பசிக்கிறதா செல்லம்?” பரமு
“எப்படி மாமா கண்டு பிடிச்ச?” சந்தோஷமானான் பட்டாபி.

”போய் ஆத்துக்கு போய் சாப்பிட்டு வா பட்டாபி. பசியில இந்த மாதிரி எடக்குமடக்கா யோசிச்சு கேள்வி கேட்காத சரியா? ஆத்துக்கு போ" பல்லை கடித்துக்கொண்டு பரமு சொன்னான். 
"ம்ம் சரி மாமா"  பட்டாபி ஒரே ஓட்டமாக ஓடினான்.

ராகவனின் முகம் பார்த்தான் பரமு. ராகவன் முகம் இப்போது வில்லனை போலவே இருந்தது.

"ராகவா டென்சனா இருக்குடா. எல்லாம் ஷேமமா நடக்கும்ல? அந்த வாமூ க்ரூப் ஆளுங்க நம்ம கண்ணன் கடையில முட்டை  வாங்கிட்டு போனாங்களாம். நம்ம நாடகத்துல அடிக்க தான் கண்ணன் அடிச்சு சொல்றான்" பரமு டென்சனாக இருந்தான்.

"பரமு வீணா அலட்டிக்காதடா. நாம நல்லா நடிச்சா யார் என்ன பண்ண முடியும்."

எல்லா வருடமும் கொலுவின் போது இரவு நிகழ்ச்சிகள் நடக்கும் அஹ்ரகாரத்தின் கிழக்கு தெரு மண்டபத்தின் திண்ணை போன்ற மண்மேடையில் இங்குமங்கும் பரமு ஓடி  கொண்டே இருந்தான்.

"ராகவா ஆள் நிறைய பேர் வந்தாச்சு நாடகம் ஆரம்பிக்கனும். காயத்ரி மாமியை பாயாசம் எடுத்துண்டு வரச்சொல்லு. எல்லாருக்கும் கொடுத்திறலாம்.
நாடகம் ஆரம்பமானது. பரமு மேடையில் தோன்றி "நாடகம் திகிலாக இருக்குமென்பதால் ஹிருதய பலமீனமானவர்கள் பார்பதை தவிர்க்கவும்" என தொடங்கினான். கூட்டத்தில் ஒரே சலசலப்பு. ஒருத்தொருக்கொருத்தர் கிசுகிசுத்துவிட்டு எல்லோரும் எழுந்து கிளம்ப தயாராயினர். 

அலறி அடித்துக்கொண்டு ராகவனும், பரமுவும் அனைவரையும்  "ஏன்னா அவ்ளோ திகில் இருக்காது சும்மா சொன்னேன். பயம் வேண்டாம். உட்காருங்கோ" என கெஞ்சி தொடங்கினார்கள்.

வேண்டா வெறுப்பாக அனைவரும் அமர்ந்தனர்.
நாடகம் ஆரம்பமானது.
பட்டாபிக்கு ஆரம்பத்தில் முதல் இரண்டு காட்சிகள். இரண்டும் போலீஸ்காரனின் சாகச காட்சிகள். கைதட்டல்கள் அமோகமாக இருந்தது.  
காமினியுடன் அடுத்தடுத்த காட்சிகள். 

"ஹா ஹா ஹா காமினி என்கிட்ட வசமா மாட்டினயா?. ஒழுங்கா பரந்தாமன் எங்கிருக்கான்னு சொல்லு" பட்டாபி அந்த கேரக்டராகவே மாறினான். "சொல்லு... சொல்லு வைரம் எங்க?" அதிக அழுத்தம் கொடுக்கவே... காமினி மிரள ஆரம்பித்தாள். "சொல்லுடின்னா"என்று கன்னத்தில் பளாரென ஒரு அறை கொடுக்க. "போடா கும்பகர்ணா.." அழுத படி கீழே இறங்கினாள். "எங்கடி போற?" அவளது சடையை பிடித்து இழுத்தான். 

"போடா பைத்தியம், மக்கு, முண்டம்" என்றபடி கீழே கிடந்த மண்,கல்லை தூக்கியெறிந்து அம்மா என அழுதபடி சென்றாள்.

"அய்யய்யோ ராகவா அவ அழ ஆரம்பிச்சுட்டாளேடா ... என்ன டா பண்றது?" 

"சரி நீ அந்த சீன்ல போய் எப்படியாவது சமாளிடா பரமு" துரத்தினான் ராகவன்
"என்னோட சீன் அடுத்து தானேடா?" 

"இப்ப போய் சமாளிடா போ" பரமுவை விரட்டினான் ராகவன்.

சடாரென ஸ்டேஜில் தோன்றி “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன். 

"ச்சீ போடா. என் அப்பாகிட்ட சொல்றேன் இரு " எனத்தள்ளிவிட்ட படி அழுதுகொண்டே கீழே இறங்கினாள் காமினி. 

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த ராகவன் மேடை மேல் ஏறி "தடங்கலுக்கு வருந்துகிறோம். சிறிது நேர இடைவேளைக்கு..... " என கூறிக்கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் எங்கிருந்தோ பரமுவை நோக்கி வந்த முட்டை குறி மாறி "நச்" என ராகவன் தலையில் மோதி உடைந்தது. பரமு அதை பார்த்ததும் "உவ்வேக்க்க்க்" என குமட்டியவாறு ராகவன் பின்னால் ஒழிந்தான். சர சர வென்று கூட்டத்தின் நாலா புரத்திலிருந்தும் பறந்து வந்த முட்டைகள் ராகவன் முகத்தை மஞ்சளாக்கியது. 

ராகவன் ரியாக்‌ஷன் எதுவும் இல்லாமல் மெதுவாக மேடையிலிருந்து இறங்கினான்.  அவனை கவசமாக்கி பரமுவும் இறங்கினான். 

ராகவன் தலை குனிந்தவாறு நடந்து கொண்டிருந்தான் இரண்டடி தள்ளி வந்து கொண்டிருந்த பரமு "என்னடா ராகவா இது இந்த முட்டை இப்படி கொமட்றது? சரி சரி விட்றா ராகவா குளத்துல முங்கி எழுந்தா சரியாகிடும். எல்லாம் அந்த வாமூ க்ரூப் ஆளுங்க பண்ணினது தான். அவன்களை விட பிரமாதமா நாடகம் பண்ணினோம் பொறாமைடா அவன்களுக்கு. அடுத்த வருசம் நாடகத்துல ஜமாச்சிரனும்டா. எவ்ளோ செலவானாலும் பரவாயில்லடா. நீ இருக்கேல்ல நேக்கு..." ராகவன் தலை நிமிர்ந்து பரமுவை அதிர்ச்சியுடன் பார்க்க..  

முட்டை தன் கையில் படாதவாறு ராகவன் தோளை உலுக்கி "நீ என் நண்பேன்டா" என்றான் 'பரமு (எ) பரந்தாமன்'.

24 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கவிதா | Kavitha said...

பேஷ் பேஷ் நன்னா இருக்குடா கொழந்த.. !! உனக்கே ப்ரைஸ் கிடைக்க வாழ்த்தறேண்டா....

Balaji saravana said...

பாஸ்! கதை கலக்கல் :)
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

Chitra said...

நல்லா இருக்குதுங்க.... பாராட்டுக்கள்!

தாரணி பிரியா said...

நல்லா இருக்கு ஆதவன் வெற்றி பெற வாழ்த்துக்கள் :)

☀நான் ஆதவன்☀ said...

@கவிதாக்கா

:))) நன்றிக்கா
-------------------------------
@பாலாஜி சரவணா

ரொம்ப நன்றி பாஸ் :)
--------------------------------
@சித்ரா

நன்றிங்க சித்ரா :)
--------------------------------
@தாபி

நன்றி பாஸ் :)

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ் கடை காத்து வாங்குதே! சொக்கா எனக்கில்ல எனக்கில்ல....

ஹுஸைனம்மா said...

ஆதவன்.. ரொம்ப நல்லா இருக்கு.. கிரைம் கிரைம்னு எல்லாரும் அரைச்ச மாவையே அரைக்க.. நீங்க சூப்பர்பா இன்னொரு களத்துல வெளுத்து வாங்கிருக்கீங்க.. காமெடி கதைன்னாலும், வசனங்கள் கரெக்டா மாட்ச் ஆகுது..

பரிசாக் கிடைக்கிற புத்தகங்களை (கவுஜ, பி.ந.க்களா இல்லாத பட்சத்தில்) படிக்க இரவல் கொடுக்கணும் சரியா? :-)))

தியாவின் பேனா said...

கலக்கல் கதை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

க்ரைமுக்கு பதில் நகைச்சுவையில் சவால் கதை நல்ல முயற்சி..

அதுக்குள்ள புத்தகத்தை இரவல் வான்ங்க வே ஆள் ரெடியாகிட்டாங்களே.. ;)

கோபிநாத் said...

;))

எஸ்.கே said...

கதை மிக நன்றாகவே உள்ளது! வாழ்த்துக்கள்!

வித்யா said...

போட்டியா??

அப்ப நான் இன்னொன்னு.

Ponkarthik said...

:)

*இயற்கை ராஜி* said...

கலக்கல் கதை .

பேஷ் பேஷ் நன்னா இருக்கு

*இயற்கை ராஜி* said...

:-))

siva said...

பேஷ் பேஷ் நன்னா இருக்கு annaa.. !! ப்ரைஸ் கிடைக்க வாழ்த்தறேண்....repeatu..

sakthi said...

அருமை ஆதவா!!!

வெற்றியடைய வாழ்த்துக்கள் !!!

Madhavan said...

காலேஜு டேஸ்ல, ஸ்டேஜ் டிராமா போட்டப்ப.. நா ஒரு சமயம் ஆறாவது சீனுக்கு பதிலா எட்டாவது சீனு டயலாக்க ஆரம்பிக்க.. பத்த காறேக்டர்லாம் என்ன செயுரதுன்னே தெரியாம முழிக்க.. டைரேக்டரே வந்து.. சமாளிச்சாரு.. மறக்கவே முடியாது அந்த நாடகம்..

நல்லாத்தான் இருக்கு..

என்னோட கதையையும் படிச்சிட்டு கமெண்டு போடுங்க.. இன்ட்லில ஒட்டு போடுங்க..
நன்றி

aru(su)vai-raj said...

கதை நல்லா இருக்கு . வாழ்த்துகள்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

ரொம்ப பேஷாருக்கு தேவுடு

Abhi said...

நலலா எழுதியிருக்கீங்க! வெற்றி பெற வாழ்த்துக்கள்! நானும்எழுதியிருக்கேன் ... வைரம் உன் தேகம் ங்கற தலைப்பில்... http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html

Gopi Ramamoorthy said...

எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. சரியான காமெடி. உங்களுக்குப் பரிசு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

கோமதி அரசு said...

ஆதவன்,உங்களுக்கு நகைசுவை இயல்பாய் வருகிறது என்று முன்பே சொன்னேன்,அதையே இப்போதும் சொல்கிறேன்.

கிரேஷி மோகன் மாதிரி நகைசுவை கதைகள் எழுதலாம்.

கதை ஒட்டம் நல்லா இருக்கு.

இளமை காலக் நினைவுகளை கொண்டு வருகிறது.

வாழ்த்துக்கள்!

ஈரோடு தங்கதுரை said...

supper

Related Posts with Thumbnails