சாமியே சரணம்

”என்னது முத்தமா?” வாயில் ஊற்றிய சரக்கை பாதி மேசையின் மீதும் பாதி சட்டையின் மீதும் தெறிக்க, நான் கேட்டதை பெரிதாக பொருட்படுத்தாமல் தலையை பலமாக ஆட்டினான் சரவணன்.

இன்றோடு இவன் சங்காத்தமே வேண்டாம் என்று முடிவே செய்து விட்டேன். ஓசியில் சரக்கு வாங்கி கொடுப்பதால் இவன் ஐடியாவென உளறும் அனைத்தையும் கேட்க முடியாது. ஆனால் இவன் போதையில் உளறவும் வாய்ப்பு இல்லை. இரண்டாவது பெக்கைத்தாண்டவில்லை இன்னும். எப்போதும் நான்கு தான். அதுவும் அடித்து விட்டு தெளிவாக பைக் ஓட்டுபவன். அப்படியென்றால் சீரியஸாகத்தான் சொல்கிறானா? முத்தம் கொடுப்பது தான் பந்தயமா? அடச்சே நான் எப்படி!

இவனோடு இன்றைக்கு தண்ணியடிக்க வந்திருக்கவே கூடாது. எல்லாம் அப்பாவால் வந்தது. இன்றைக்கும் காலையில் அப்பாவோடு சண்டை. முதலில் கை ஓங்கியது நான் தான். அப்பாவை அடிக்க கை ஓங்கினாயா? என யாரும் கோபப்படவேண்டாம். ஓங்கின கையை மடக்கி, அப்படியே திருகி என் முதுகோடு வைத்து ‘சுளீர்’ என்று இரண்டு அடி முதுகில் அடித்தவர் என்னவோ அவர் தான். வலியில் பொங்கிய அழுகையை அடக்க மாட்டாமல் மதிய சாப்பாடை கூட எடுக்காமல் கல்லூரிக்கு ஓடி வந்துவிட்டேன். இது  எனக்கும் அப்பாவுக்கும்  இப்போது ஆரம்பித்த சண்டையல்ல. பன்னிரெண்டு வருடங்களாக இருக்கும் பிரச்சனை.

அப்பாவுக்கு அரசு மருத்துவமனையில் பிணவறையில் வேலையாம். இதுவரை அந்த மருத்துவமனைக்கு நான் சென்றதில்லை. மிகவும் ஆஜானுபாக உடம்பு அப்பாவுக்கு. ஆனால் அம்மா தான் நடிகை கமலா காமேஷை பத்து நாள் பட்டினி போட்டது போல் இருப்பாள். நானும் அம்மாவைப்போலவே. இருவருக்கும் எப்படி திருமணம் நடந்தது என்ற இடியாப்பத்தின் முனையை தேடுவது அநாவசியம். அம்மாவை அடித்து அடித்து போரடித்து போய் கடைசியில் ஏழு வயதில் என்னை அடிக்க தொடங்கினார் அப்பா. ஏழு வயதில் பீடி வாங்கிவர தாமதமானதால் விழுந்த அடி, இன்று வரை தொடர்கிறது. மதிப்பெண் குறையும் போதும், எதிர்வீட்டு பெண்ணுடன் பேசும் போதும், தெருமுனை கடையில் தம்மடிக்கும் போதும் அடி சற்று அதிகமாகவே விழும். ஏன் என்னையும்,அம்மாவையும் அடிக்கிறார் என எனக்கு புரியாத புதிராகவே இருந்தது. அவருக்கு குடிப்பழக்கம் கூட கிடையாது.

அப்பா என்னை அடிக்கும் போதெல்லாம் அப்பாவை தடுப்பது ரயில் ஓடும் போது குறுக்கே பாய்வதற்கு சமமாததால் ஒரு ஓரமாக  நின்று கவலையுடன் வேடிக்கை பார்ப்பாள் அம்மா. பின்பு அடி நின்றவுடன் அழுகையுடன் சமாதானமும் செய்வாள். வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் ஒட்டு மொத்த காலணியே வேடிக்கை பார்க்கும்.

நானும் சலித்தவனல்ல..... என் பதினைந்தாவது வயதில் தான் முதல் முறையாக அப்பாவை அடித்தேன். அவர் என்னை அடித்தபோது கூட பொறுத்துக்கொண்டிருக்கிறேன். அன்று அம்மாவை அடித்த அடியை கண்டு பொறுக்க மாட்டாமல் முதல் முறையாக அப்பாவை பின்னாலிருந்து அடித்து விட்டு தலைதெறிக்க ஓடியதில் கால் தடுக்கி விழுந்து தலையில் நாலு தையல் போடுமளவிற்கு நல்ல அடி. தலையில் இரத்தம் சொட்ட சொட்ட நான் நின்றதைப் பார்த்த அவர்  திருப்பி அடிக்காமல் சென்று விட்டார். அதற்கு பிறகு கையை ஓங்கினால் கையை முறுக்கி முதுகில்  ‘பளீர்’ என்று அடி விழும். பொறுமிக்கொண்டே வெளியே வந்து விடுவேன். இன்றும் அது போலத்தான்.

எப்போது அடி கிடைத்தாலும் சரவணனிடம் வந்து சொல்வது வழக்கம். என் பால்யகால நண்பன். சில சமயம் அடி பலமாக இருந்தால் சரக்கு வாங்கி தருவான். பல நேரங்களில் ஆறுதல்களும் சில நேரங்களில் தீர்வுகளும் சொல்பவன். இன்றும்.

முதல் பெக் அழுகையுடன் போனது. “படிப்பெல்லாம் வேணாம் சரவணா. உங்கப்பாகிட்ட சொல்லி துபாய்ல ஒரு வேலை வாங்கி கொடுக்க சொல்லு. இந்தாள் கூட இருந்து அடிவாங்கி சாக முடியாது. எங்கையாவது ஓடி போலாம்னா அம்மாவை நினைச்சா கவலையா இருக்கு. அடிச்சே கொன்றுவான் அந்தாளு. துபாய்ல வேலை கிடைச்சா அம்மாவையும் கொஞ்ச நாள்ல துபாய் கூட்டிட்டு போயிடுவேன்”. “ம்ம்” தலையாட்டினான் சரவணன். இன்று இரண்டு பெக் முடிந்த பிறகு வழக்கம் போல் குருட்டு தைரியத்தில் அப்பாவை ஆள் வைத்தாவது அடிப்பதாக உறுமினேன். கேலிப்புன்னகையை விட்டான். ”அடிச்சா பிரச்சனை தீர்ந்திடுமா? அதுவுமில்லாம நீ அடிக்க போறயா? உன்னால முடியாது. பயந்தா கொள்ளிடா நீ ” என்றான். வேற என்ன செய்வது?. “சொன்னா நீ செய்ய மாட்ட. விட்டுரு"

போதையும், காலையில் ஏற்பட்ட அவமானமும் தலைக்கேறி இறங்க மறத்தது. சரவணனின் வார்த்தைகள் சூடேற்றியது. "நான் செய்வேன் டா. என்ன செய்யனும்னு சொல்லு.”

”உங்கப்பாவை கட்டி பிடிச்சு ஒரு முத்தம் கொடுக்க முடியுமாடா உன்னால? ஒரு வாரம் டைம். உனக்கு துபாய் வேலை ரெடி பண்றேன்”

ரண்டு நாட்கள் கடந்துவிட்டது. எப்படியாவது அப்பாவுக்கு முத்தம் கொடுக்க வேண்டும். சரவணன் வாக்கு தவறுவதில்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் முத்தம் ஏன் கொடுக்க சொல்கிறான்? ஒரு வேளை என் தைரியத்தை சோதிக்க இருக்கலாம். எதுவாக இருந்தாலும் எனக்கு துபாய் செல்ல வேண்டும். நடந்தால் சரி.

அப்பாவின் அருகே நெருங்கவே தயக்கமாக இருந்தது. வழக்கமாக இருக்கும் பயம் போய் கூச்சமாக இருந்தது. ஏன் என்று தெரியாத கூச்சம். இதுவரை அவர் என்னை தூக்கி கொஞ்சியதாகவோ இல்லை முத்தம் கொடுத்ததாகவோ ஞாபகம் இல்லை. நான் அவரை முகம் நோக்கி கூர்ந்து கவனித்தே வருடம் பல ஆயிற்று. நேற்று மதியம் கட்டிலில் அவர் உறங்கி கொண்டிருந்த போது முத்தம் கொடுக்கலாமா என அருகில் சென்றேன். லேசான சுருக்கங்களோடான முகம். நெற்றியின் அருகே ஒரு வடு. காதுகளில் முடி. மீசையில் வெள்ளை முடி நிறைய வந்திருக்கிறது. அருகே சென்றால் ஒரு வாசனை. இல்லை நாற்றம். என்ன வாசனை/நாற்றம் என்று தெரியவில்லை. ஒருவேளை இது பிண வாசனையாக இருக்குமோ? பிணங்களை தூக்கி தூக்கி அப்பாவிற்கும் பிண வாசனை ஒட்டிக்கொண்டதோ? குமட்டிக்கொண்டு வந்தது. வாயை பொத்திக்கொண்டு கழிவறைக்குள் ஓடினேன்.

நான்கு நாள் ஆயிற்று. அப்பாவை நெருங்க முடியவில்லை. இன்று சுவரை பார்த்தப்படி சட்டைபையில் துளாவி பணத்தை எண்ணிக்கொண்டிருந்த சமயம் பின்பக்கமாக கட்டிபிடிக்கலாம் என்று மெதுவாக சென்றேன். இருகைகளையும் விரித்தபடி அடி மேல் அடி வைத்து அவரை நெருங்கினேன். எனக்கு முன்னால சென்ற என் நிழல் விரித்த படி சென்ற என் கைகளை அடிக்க பாய்வதாக காண்பித்திருக்க கூடும். வெருட்டன திரும்பிய அப்பா கையை லாவமாக பிடித்து, வளைத்து கன்னத்தின் தாடையில் சுரீரென்று மாறி மாறி அறை விட்டார். அவமானம் மேலோங்கி அந்த இடத்திலேயே உட்கார்ந்து அழத்தொடங்கினேன். அப்பா ஒன்றும் புரியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.

ந்தாம் நாள். இது சரிப்பட்டு வராது என்ற முடிவுக்கு வந்தேன். அப்பா கழிவறைக்குள் உள்ளே சென்ற சமயம் வெளியே காத்திருந்தேன். வெளியே வர கதவை திற்க்கும் சமயம் கட்டி பிடிக்கலாம் என்பது திட்டம். அவர் முன் நிற்கும் போது இருக்கும் பலம் முழுதும் இழந்து விடுகிறேன். கண்ணை இறுக்க மூடி காரியத்தை சாதிக்க முடிவெடுத்தேன். கதவு திறக்கும் சப்தம் கேட்டது. தயாரானேன். தலையை துவட்டியபடி செருமிக்கொண்டே வந்தார். கண்ணை மூடிக்கொண்டு முன்னே செல்ல... நிமிர்ந்தார். படப்படப்பு அதிகமாகி கையை விரித்தபடி நின்றேன். கண் திறந்த போது நேரெதிரே உற்று நோக்கிக்கொண்டிருந்தார். மிகக்கூர்மையான பார்வை. பல நொடிகளுக்கு பிறகு வாய் நடுக்கத்துடன் “அது வந்து...அப்பா...இல்ல வந்து” உளறினேன். நெற்றியை சுருக்கி புருவங்களை உயர்த்தி “என்னது அப்பாவா?” கரகரத்த குரலில் கேட்டார். அப்போது தான் உறைத்தது. இந்தாளை அப்பா என்று அழைத்து வருடங்கள் பல ஆயிற்று என்று. எதுவும் புரியாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன். ஓடினேன் என்பது பொருத்தமாக இருக்கும்.


துபாயும் வேணாம் ஒன்னும் வேணாம் இப்படியே இந்தாளோடு அடிவாங்கியும் திட்டுவாங்கியும் காலம் ஓடட்டும். என்றாவது இங்கேயே நல்ல வேலை கிடைத்து அம்மாவை நல்ல படியாக பார்த்துக்கொள்ளவேண்டும். சரவணனை அழைத்தேன். என்னால் முடியாது பந்தயத்தில் இருந்து விலகுவதாக சொன்னேன். சிரித்தான். “இன்னும் ஒரு நாள் பாக்கி இருக்குடா. நாளைக்கும் ட்ரை பண்ணு. இல்லைன்னா தோத்ததை ஒத்துக்கோ.” என்றான்.

”என்ன எழவு பந்தயம்டா இது? எதுக்காக என்னை முத்தம் கொடுக்க சொல்ற? சொர சொரன்னு அந்த முகம், ஒரே சுருக்கம்... அந்தாள் மேல ஒரு வாசனை வேற. பொண வாசனைன்னு நினைக்கிறேன். பாவம் எங்கம்மா எப்படி இத்தனை நாள் இந்தாளோட குப்பை கொட்டினாங்களோ. என்னால கிட்ட போக முடியலடா சரவணா. மனசெல்லாம் குறு குறுன்னு இருக்கு. படபடன்னு அடிச்சுகிறது. பயம் இல்லடா சரவணா. ஒரு அருவருப்பு.... இல்ல இல்ல ஒரு தயக்கம். இல்ல ஒரு அகம்பாவம். ஒரு ஈகோ. எது வேணா வச்சுக்கோ. என்னால முடியலடா. கிட்ட போனாலே என்னையும் அம்மாவையும்  இத்தனை நாளா அடிச்சதும் இந்தாளு பொணத்தை க்ளீன் பண்றதும் தான் ஞாபகம் வருது. அதோட எப்படி என்னால முத்தம் கொடுக்க முடியும்? சின்ன வயசுல இருந்து அந்தாளு என்னைய தூக்கி கொஞ்சினதே இல்ல தெரியும்ல உனக்கு. ஏன் எங்கம்மாகிட்ட கூட ஆசையா பேசி பார்த்ததில்ல. அப்படி இருக்குற ஆளுகிட்ட கட்டிபிடிக்க சொல்றயே? என்னால முடியலடா. எனக்கு துபாய் வேலை வேணாம். நாங்க இங்கயே இருந்துக்கிறேன்.நீ புத்திசாலிடா சரவணா நீ எதுக்கு இந்த மாதிரி பந்தயம் கட்டினேன்னு தெரியல. ஆனா என்னை புரிஞ்சுப்பன்னு நினைக்கிறேன்” போனை வைத்தேன்.


மீசையை சீப்பைக்கொண்டு வாரிக்கொண்டிருந்தார் அப்பா. அம்மா அடுப்பங்கரையில் வேலைப்பார்த்து கொண்டிருந்தாள். குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த என்னை கண்ணாடியின் வழியே அப்பா கவனித்துக்கொண்டிருந்தார். சிறிது நேர நடைக்கு பிறகு தைரியம் வரவழைத்துக்கொண்டு “அப்பா”என்றேன். அடுப்பங்கரையில் இருந்த அம்மாவும் அப்பாவும் ஒரு சேர திரும்பினார்கள். வேகமாக சென்று “என்னை மன்னிச்சிருங்கப்பா” என்று கட்டிப்பிடித்து கன்னத்தில் இறுக்க “இச்ச்ச்” என்று ஒரு முத்தம் கொடுத்தேன். விறு விறு வென வெளியேறி சரவணன் வீட்டுக்கு சென்றேன்.

ரவாயில்லயே சொன்ன மாதிரி கொடுத்துட்டயே...”டப்”பென கடலை பாக்கெட்டை பிரித்தான் சரவணன்.

பொறுமை இல்லாமல் ஒரே மடக்கில் சரக்கை அடித்தேன். “துபாய் எப்ப கூட்டிட்டு போவ?”

“இருடா கொஞ்சம் பொறு. பட்டுன்னு நடக்குற விசயமா இது? ஒரு மூனு மாசம் போகட்டும்”

இருந்த கடைசி பெக்கையும் ஒரே மடக்காம குடித்தேன். “என்னது மூனு மாசமா? எனக்கு அதெல்லாம் தெரியாது. இன்னும் ஒரே மாசத்துல நான் துபாய் போகனும். எப்படியாவது ஏற்பாடு செய்” என்று எழுந்து சென்றேன். தள்ளாடிய நடை கண்டு சரவணன் அழைத்தான் “இருடா நான் கொண்டு விடுறேன்” தலையை திருப்பாமல் கையை மட்டும் உயர்த்தி வேண்டாம் என சைகை செய்து வீட்டை நோக்கி நடந்தேன்.


“ஹரிவராசனம் விஷ்வமோஹனம்
ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா”

என்றைக்கும் இல்லாமல் இன்று காலையில் வீட்டில் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. சிறிது கண்கள் திறந்தேன். அப்பா கருப்பு சட்டை அணிந்திருக்கிறார் போல. பாடல் வரிகளை  முழுவதுமாக பாடத்தெரியாமல் சரணத்தின் “சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா” என முணங்கிய படி சாமி படத்தின் முன் நின்றிருந்தார். விபூதியை எடுத்து ஏற்கனவே சந்தனம் இருந்த நெற்றியில் பட்டையாக இட்டுக்கொண்டார். என் பக்கம் திரும்பினார். கண்களை மூடினேன். நெற்றியில் விபூதியை வைத்துவிட்டு “சாமியே சரணம்” என்றார். “லலிதா வேலைக்கு போயிட்டு வரேன் வீட்டை பார்த்துக்கோ. பையன் தூங்குறான் அந்த ரேடியோ பெட்டியை அமத்திடு” என்ற படி செருப்பு இல்லாமல் தெருவில் இறங்கி நடக்க துவங்கினார். கையில் சட்டியில் புளியை கரைத்துக்கொண்டிருந்த அம்மா சிலையாகி நின்று கொண்டிருந்தார். தலையை தூக்கி ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“என்னது துபாய் வேலை வேணாமா? ஏன்?” சரவணன்

”இல்ல... வந்து.... எனக்கு புடிக்கல” இழுத்தேன்.  எதிர்முனையில் சரவணன் ஏதோ புரிந்த போல சிரித்துக்கொண்டிருந்தான்.

“சாமியே சரணம்!” என்றபடி போனை வைத்தேன்.

ஆதவன் சிறுகதைகள்

”ஆதவன்” இந்த பெயர் மீது இயல்பாகவே இளம் வயதுதொட்டு ஒரு ஈர்ப்பு இருந்தது. இருக்கிறது. ஏன் என்ற காரணம் இல்லாமல், கேட்க தோன்றாமல் சில விஷயங்கள், நபர்கள் பிடிக்கும். அப்படி பிடித்தது தான் இந்த பெயர். வலைப்பூ ஆரம்பிக்கும் போது ’சூர்யா’ என்ற பெயரில் சில பதிவர்களை கண்ட பிறகு, புனைப்பெயரை தேர்ந்தெடுக்க குழப்பமே இல்லாமல் வந்த பெயர் இது. (பின்பு ஆதவன் என்ற பெயரில் ஒரு பதிவரை கண்ட பிறகு இனியொரு பெயரை தேடாமல் “நான் ஆதவன்” ஆனேன்.)

ஆரம்பத்தில் இணையத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இவரது சிறுகதைகளை படித்து ஈர்க்கப்பட்டு முதலில் வாங்கிய புத்தகம் "என் பெயர் இராமசேஷன்".

 ஒருவரின் உணர்ச்சிகளை,கூடவே வாழ்ந்தாலும் புரிந்து கொள்ள முடியாத நிலையில்,உணர்ச்சிகளுக்கு துளியும் மாற்றமில்லாத எழுத்து வடிவம் தர முடியுமென்றால் அது இவரால்தான் முடியும்.

அதாவது என் போன்ற மிடில் க்ளாஸ் மேனின் பாசத்திற்கு உங்களால் எழுத்து வடிவம் தர முடியுமா? எத்தகைய எழுத்து வடிவம்? என் மனகுமுறலுக்கு? என் நிறைவேதாத ஆசைகளுக்கு? என் பொருமலுக்கு? நான் தினம் அணியும் முகமூடிக்கு? இவ்வளவு ஏன்..... செக்ஸ் ஆசைகளுக்காக நான் அணியும் முகமூடித்தனத்திற்கு? இது அனைத்தையும் ஒரு சேர முகம் சுளிக்காமல் உங்களால அளிக்க முடியுமா? ஆனால் இவை அனைத்தையும் வீட்டின் வரையேற்பைரையில் படித்துகொண்டிருக்கும் போது மற்றொருவர் அருகில் அமர்ந்திருந்தாலும் எவ்வித தடங்கலும் இல்லாமல், சிறிதும் பிசிறில்லாமல் நமக்களிக்கிறார்  ஆதவன்.


ஒரு பித்து பிடித்த நிலைக்கு தள்ளப்பட்டேன் அவர் “என் பெயர் இராமசேஷன்” படித்தபிறகு.  பாலைவனத்திலுள்ளே அவர் எழுத்தை தேடத்தொடங்கிய போது கிடைத்தது வெறும் கானல் நீரே. இணையத்திலும் இவர் எழுத்துக்கள் அதிகமாக கிடைக்கவில்லை. அதியசமாய் கிடைத்தது அவர் எழுதிய அனைத்து சிறுகதைகளும் ஒரு சேர.... உயிர்மெய் பதிப்பகம் மூலமாக. பல்வேறு இலக்கிய பத்திரிக்கைகளிலும், பல்வேறு காலங்களிலும் அவர் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் (60 சிறுகதைகள்) மிகவும் சிரமப்பட்டு தொகுத்திருக்கிறார் ஆர் வெங்கடேஷ்.என் உள்ளக்குமுறலை, என் பகுத்தறிவினை, என் காதலை, என் காமத்தை என அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்தளித்தது இந்த சிறுகதை தொகுப்பு.
பதினென்ம காலம் வரை எனக்கும் என் அப்பாவிற்குமான ஒரு நிலை மிக ஆச்சர்யமானது. என் அப்பாவை மிக பிடிக்கும் எனக்கு. என் அனுமானத்தின் படி அப்போது என்னையும் என் அப்பாவுக்கும் மிக பிடிக்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் இருவரும் முகம் நோக்கி பேசிக்கொண்ட வார்த்தைகளை ஒரு பக்கத்தில் எழுதி விடலாம். மரியாதையா பயமா என தெரியாத  என் மனநிலையும், கூச்சமா இல்லை அகம்பாவமா என தெரியாத அவர் மனநிலையும் என இவ்விரு மனோநிலையையும் ஒரு சேர எழுதுவது முடியாத காரியம். அவ்விரு மனநிலையும் படம் பிடிக்க ஒரு விசேஷ ஞானத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆதவனுக்கு இருந்திருக்கிறது. இந்த சிறுகதைகளை படிக்கும் போது அவ்வயதில் என் நிலையையும் என் அப்பாவின் மன ஓட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

பெரும்பாலும் ஆதவன் கதைகள் பிராமண பிரிவை சேர்ந்திருந்தாலும் படிக்கும் போது அதை மறந்து நம்மை கதை மாந்தரோடு ஒன்றச் செய்து அனைத்து வேறுபாடுகளையும் மறக்க செய்கிறது ஆதவன் எழுத்துக்கள். இதை விட சிறப்பாய் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின், அல்லது நடுத்தர குடும்பத்து முதியவரின் எண்ண ஓட்டங்களை நம்முள் ஓடச்செய்து  அவரை எண்ணங்களை நியாயப்படுத்தியும், அதே சமயம் மற்றொரு கதாபாத்திரம் கொண்டு அநியாயப்படுத்தியும் நம்மை ஒரு வித தராசின் மனநிலைக்கு கொண்டு வரச்செய்திருப்பது ஆசிரியரின் வெற்றி.

ஒவ்வொரு கதைகளின் நாயகனையும் வாசகனை/என்னை வெவ்வேறு தருணங்களில் உணர வைத்திருக்கும் இல்லையேல் அந்த கதாபாத்திரங்களை கண்டிருப்போம். பெரும்பாலும் ஆரம்பிக்கும் கதைகளுக்கு முடிவும் இல்லை தொடக்கமும் இல்லை. மனித வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் பயணிப்பதை வாசகன் உணர முடிவதால் தொடக்கத்தையும் முடிவையும் பற்றி கவலைகளில்லா ஒரு உன்னத நிலையில் வாசகன் இருக்க முடியும். காற்றுக்கும் எனக்கும் இடையே உள்ள இடைவெளி போல் ஆகிவிட்டது ஒவ்வொரு கதைகளும். வாத்திய கருவிகளின் கம்பிகளை யாருமில்லா/எதுவுமில்லா அறையில்  மீட்டெடுக்கும் போது ஏற்படும் நுண்ணிய அதிர்வுகள் போல் மனதோரம் ஒவ்வொரு கதைகளின் அதிர்ச்சியற்ற அதிர்வுகளையும் உணர முடிகிறது.


பெரும்பாலும் இவரது சிறுகதைகளை படிக்க இரவுகளே என்னையும் அறியாமல் தேர்ந்தெடுத்திருக்கிறேன். உறங்குவதே உன்னத நிலை ஆகிப்போன இயந்திர வாழ்வில் இக்கதைகளைப் படிப்பதால் தானாக அவிழும் எனது முகமூடிகள் சந்தோஷத்துடன் கூடிய உறக்கத்தை அளித்தன. கனவுகளற்ற ஒரு ஆழ்ந்த தூக்கத்தை பெறவும் செய்திருக்கிறேன்.

 பெரும்பாலான கதைகள் என்பதை விட அனைத்து கதைகளும் வாழும் இடம் டெல்லியாகவே இருக்கின்றன.  உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்ட இந்த கதைக்களுக்காக பெரிதாக மெனக்கெடாமல் தன்னிடமிருந்தும் சுற்றத்திடமிருந்தும் எடுத்தாண்டிருக்கிறார் போலும். அப்பர் பெர்த்’லிருந்து தொடங்குகிறது சிறுகதைகள். வழக்கம் போல மிடில் க்ளாஸ் கதாநாயகன். ’எப்படியாவது’ முன்னேறி உயர்தர வாழ்க்கையை வாழத்துடிக்கும் நாயகன். அவன் எண்ண ஓட்டங்களை நம் முன் விரிய வைக்கிறார். நமக்குள் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கும் அதே கதாநாயகன் தான் அவன். படிக்கும் நம்மை கொண்டே அவரின் வார்த்தை ஜாலங்களை கொண்டு கதை நாயகனின் எண்ணங்களுக்கு நியாயம் கற்பிக்க வைக்கிறார். மெலிதான புன்னைகையோடு படித்து முடித்தேன்.
”இல்லாதது” - இருக்கிற அறுபது கதைகளில் மிகச்சிறிய கதை இதுவாக தான் இருக்க முடியும். மிக எளிமையாக கொண்டு சென்று சிறு அதிர்ச்சியோடு முடிக்கிறார். முடிவில் சிரிப்பை அடக்கவும் முடிய வில்லை. 

 எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக “சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்...” கதை இருக்கிறது. ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் இளைஞன் இளைஞியிடையே ஏற்படும் ஈர்ப்பு,  அவளை தன் பக்கம் ஈர்க்க அவனும் அவனை தன் பக்கம் ஈர்க்க அவளும் செய்யும் நிகழ்வுகளை சுவாரஸியமாக சொல்கிறார். இருவரும் தானாக ஏற்படுத்திய நிகழ்வுகள் இருவருக்கும் இடையே “ஈகோ க்ளாஷாக”  மாறுகிறது. இருவரில் ஜெயிப்பவர் யார் என நம்மை கதையில் ஆழ்த்தி கடைசியில் தன் நிலையை உணர்ந்து இருவரும்  தோற்றுப் போய் நம்மை நிம்மதி பெரு மூச்சு விட வைக்கிறார். இந்த கதை எழுதும் போது 80களின் தொடக்க மாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போதும் இக்கால என்னைப் போன்ற இளைஞர்களுக்கும் பொருந்துப்போவது ஆச்சர்யம்.

இக்கதை மட்டுமல்ல கருப்பு அம்பா கதை, ’இண்டர்வியூ, புதுமைப்பித்தனின் துரோகம், நிழல்கள் என அனைத்து கதைகளும் மிக நேர்த்தியாக பதிந்திருக்கிறார். முப்பது வருடங்கள் கழித்து படித்த எனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை வைத்து பார்க்கும் போது அப்போது இக்கதைகள் என்னவிதமான அதிர்வுகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தி இருக்கும் என யோசிக்க வைக்கிறது.
எண்ணூறு பக்கங்கள் கொண்ட அறுபது கதைகளையும் படிக்க நேரம் மிக அதிகமாக எடுத்தாலும், ஒரே முழு மூச்சில் கதைகளை படிக்க முடியவில்லை. ஒவ்வொரு கதைகளுக்கும் சிறிது நேரம் இடைவெளி விட்டு, லயித்தே செல்லத்தோன்றுகிறது. ஒரு தலைமுறையையே பாதித்த எழுத்து என கூறப்படுகிறது. தலைமுறை தாண்டிய பாதிப்புகளை கூட ஏற்படுத்துகிறது இப்புத்தகம். மிக இளவயதில் மறைந்து போன இவரது இழப்பு தமிழ் எழுத்துலகில் மிகப்பெரிய இழப்பாக இருந்திருக்கும். பல்வேறு சிரமங்கள் எடுத்து அவரது அனைத்து சிறுகதைகளையும் தொகுத்த ஆர் வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

பரமு (எ) பரந்தாமன் (சவால் சிறுகதை)

”பேஷ்டா பரமு, கதை நன்னா வந்திருக்கு. யார் யாரெல்லாம் நடிக்க போறா இதுல?” பரமு முகத்தை மிக சீரியஸாக வைத்துக்கொண்டான். மீசையில்லாத மொழு மொழு முகமும் எண்ணெய் தடவி நன்றாக படிய வகிடெடுத்து வாரிய தலையுமாய் இருந்த அவனுக்கு அந்த சீரியஸாக வைத்துக்கொண்ட முக பாவம் ஒத்து வரவில்லை. சிரிப்பாக வந்தது ராகவனுக்கு.

வருடா வருடம் நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாளும் அந்த அக்ரஹாரத்தில் இரவுகள் ஆடல், பாடல், நாட்டியம், நாடகம் என ஒவ்வொரு வீட்டு பிள்ளைகளும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவர். சென்ற வருடம் போல இந்த வருடமும் நாடகம் நடத்த பரமுவும் ராகவனும் ஆலோசிக்க தொடங்கினர். சென்ற வருடம் ”வாமு க்ரூப்” அள்ளிய பாராட்டுகளை இந்த வருடம் தட்டிச்செல்ல உறுதிமொழிகள் சென்ற வருடமே எடுத்துக்கொள்ளப்பட்டன. வருங்கால பாலசந்தராகவோ பாரதிராஜாவாகவோ வளரத்துடிக்கும் அஹ்ரகாரத்து இளைஞர்கள்.


“நீ ஏண்டா ராகவா இதுக்கு சிரிக்கிற. க்ரைம் கதையாக்கும். காமெடி சீன் இல்லையே இதுல. போன வருசம் மாதிரி இந்த வருசமும் நீ ஸ்பான்ஸர் பண்ணனும் ராகவா. அப்புறம் எங்காத்துல பட்டாபி இருக்கான்ல அவனை அந்த போலீஸ் கேரக்டர்ல வச்சுக்கலாம்”

”அவனா? அவன் சரியான கும்பகர்ணனாச்சேடா பரமு. ஒத்து வருவானா?”

“சரியா போச்சு போ. முந்தா நாள் கோமு மாமி அவனுக்கு கொடுத்த சீடைய யாரோ எடுத்து தின்னுட்டா. இவனுக்கு வந்துதே கோபம். ஒவ்வொருத்தர் வாயையும் திறந்து பார்த்து தின்னது நம்ம ரங்கு மாமான்னு கண்டுபிடிச்சுட்டாண்டா. அவன் போலீஸ் கேரக்டருக்கு கரக்டா சூட் ஆவான்” பரமு முகத்தில் பிரகாசம்.

” சரி. அப்புறம்?”

“அப்புறம் என்ன கீழ உருண்டு புரண்டு அழுது ரங்கு மாமா கிட்ட இருந்தே 2 ரூபா வாங்கிட்டான். கெட்டிக்கார பயல்”

“டேய் தத்தி, அப்புறம் அடுத்த கேரக்டருக்கு யாருன்னு கேட்டா என்னன்னமோ சொல்ற?”

“அதை கேட்குறயா... நம்ம காயத்ரி மாமி பொண்ணு காமினி இருக்காளோல்லயோ? அவளையும் அழைச்சுண்டா போச்சு. ”

“டேய் அவளா? அவ சரியான அழு மூஞ்சியாச்சேடா?”

”அதெல்லாம் முடியாது. காயத்ரி மாமி நம்ம நாடகத்த பார்க்க வர்ரவாளுக்கு  அவா ஆத்துலருந்து  முந்திரி பாயாசமும் கை முறுக்கும் தரேன்னுருக்கா. அதுனால அவா பொண்ணு தான் அந்த ரோலுக்கு. நான் போன வருசம் நாடகம் நடத்துனேனோல்லயோ? அப்பேர்லந்து  மாமி என் மேல ரொம்ப ப்ரியமாகிட்டா?” அசடு வழிந்தான். அவன் உண்மையான முகமே இது தான்.

“என்னடா இது? கருமம் காம்பினேஷனே சரியில்லையே?”

“வாயை ஜலம் போட்டு அலம்புடா. ஏன் உன் புத்தி இப்படி போகுது?”

“அட! நான் முந்திரி பாயாசத்தையும், கை முறுக்கையும் சொன்னேன். நீ என்ன நினைச்ச?”

“நான் ஒரு அசடு...ஒன்னுமில்ல...விடு.”

த்ரில்லர் கதை தான் என முடிவான பிறகு தமிழின் முண்ணனி இயக்குனர் ஒருவர் சமீபத்தில் எடுத்த ஒரு த்ரில்லர் படத்தை தழுவி எடுத்து நாடகமாக்கினால் கண்டுபிடிக்க வாய்ப்பிருப்பதாக நிரந்தர தயாரிப்பாளர் ராகவன் கூறிய அறிவுரையால் வெறும் கைகுலுக்கி எடுத்த கதை தான் அந்த நாடகம்.


“நவராத்திரியில எந்த நாள்டா நம்ம நாடகம்?” ராகவன்.

“அந்த வாமு க்ரூப் அஞ்சாம் நாள் நாடகம் பண்றா. நாலாம் நாள் கல்யாணியோட பரதம் இருக்கு...நேக்கு ஒத்தப்படை தான் ராசி அதுனால மூணாம் நாள் பண்ணலாம்னு இருக்கேன். போன வருசம் மாதிரி இந்த வருசம் அந்த வாமு க்ரூப்புக்கு கைதட்டல் கிடைக்க கூடாது ராகவா. நாம இந்த தடவை நன்னா பண்ணனும்”

“சரிடா பரமு ஆனா அந்த வில்லன் கேரக்டருக்கு நல்ல ஒரு ஆள் வேணுமே. கதையோட பலமே அந்த கேரக்டர் தானே.என்ன பண்றதா உத்தேசம்?”

”ஏன் டா ராகவா என்னைப் பார்த்தா உனக்கு நல்ல வில்லனா தெரியல?”  பரமு முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டான்.


“கஷ்டகாலம்... முருங்கைக்கா கீழ் பகுதிய ரெண்டா உரிச்சு பேண்ட் போட்ட மாதிரி இருக்க. உன்னையெல்லாம் எப்படி வில்லனா ஆடியன்ஸ் ஏத்துப்பா?”

“டேய் ராகவா கதை தாண்டா முக்கியம். நம்ம கதையில இருக்குற த்ரில் பார்த்தே இல்ல? நாடகம் ஆரம்பிக்கச்ச இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்னு விளம்பரம் போடனும்டா. அப்ப தான் சரியாகும். யாருக்காச்சும் ஒன்னு கெடக்க ஒன்னு ஆகிப்போச்சுன்னா கஷ்டமாகிடும் ஆமா”

“ம்க்கும். இப்படி தான் போன தடவை காமெடி நாடகம் போடுறேன்னு "சிரித்து சிரித்து வயிறு வலித்தால் கம்பெனி பொறுப்பல்ல” ன்னு சொன்ன.. கடைசியில நாலைஞ்சு ஜோடி செருப்பு  தான் கிடைச்சுது.. அதுவும் எனக்கு தான்  கிடைச்சது அந்த செருப்படி. நீ ஓடிட்ட" ராகவன்.

விவாதம் ஒத்திகைக்கு சென்றது.

”டேய் பரமு மாமா  எங்கடா அதிர்சம்? தரேன்னு சொல்லி தானே அழைச்சுண்டு வந்த? கொடுடா” பரமுவின் வேட்டியை பிடித்து பட்டாபி கத்திக் கொண்டிருந்தான். நம் கணிப்பு சரியானால் அடுத்த இரண்டு நிமிடங்களில் அவன் தரையில் புரண்டு அழ வேண்டு... விழுந்தே விட்டான்.
அவன் அழுவதைப் பார்த்த காமினிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஓட்டைப் பல் தெரிய சப்தமாக சிரித்தாள். அவளை நறுக்கென தலையில் ஒரு கொட்டு வைத்த பரமு “சிரிக்காதே அசடு. நான் கொடுத்த டயலாக்கை மனப்பாடம் செய். செத்த நாழில்ல நான் வந்து கேட்பேன்” என்றான். அவள் அழுது கொண்டே டயலாக்கை படித்தாள். அய்யோ அழத்தொடங்கி விட்டாளே? எப்போது நிறுத்துவாளோ!

மேல் சட்டை பாக்கெட்டில் எண்ணெய் வழிந்த காகிதத்தில் தயாராக சுருட்டி வைத்திருந்த பொட்டலத்தை பட்டாபியிடம் கொடுத்தான் பரமு. கொடுக்கும் முன் “என் செல்லம்ல பட்டாபி, மாமா நோக்கு கூலிங்கிளாஸ் வாங்கி தரேண்டா. இந்த டயலாக்கை மட்டும் சொல்லிடுடா”

“ம்ம் ஷொல்லு” அதர்சத்தை மென்று கொண்டே பட்டாபி.

“’ஹா ஹா ஹா காமினி என்கிட்ட வசமா மாட்டினயா?. ஒழுங்கா பரந்தாமன் எங்கிருக்கான்னு சொல்லு’ எங்க இதை சொல்லுடா பட்டாபி.

கவனமாக கேட்டுக்கொண்ட பட்டாபி “ ஹா ஹா ஹா...”என்ற போது வாயிலிருந்த அதிரச துண்டு கீழே விழுந்தது. அதை எடுக்க ஓடினான் பட்டாபி.

“டேய் பரமு இந்த கும்பகர்ணன் வேண்டாம்னு சொன்னேன்ல. இப்ப பாரு.. படுத்தி எடுக்குறான்” ராகவன் புலம்பினான்.


“இனி வேற யாரை தேடுறது.. இவனை வச்சு தான் சமாளிக்கனும். டீ.. காமினி நீயாவது படிச்சயா? எங்க அந்த டயலாக்கை சமத்தா சொல்லு பார்க்கலாம்” காமினி பக்கம் திரும்பினான் பரமு

அழுது கொண்டே வந்தாள் காமினி “ம்ம் இன்ஸ்பெக்டர் சிவா ம்ம்ம்....இன்ஸ்பெக்டர் சிவா.... வந்து சிவா. சிவா......” ஓ வென அழ ஆரம்பித்தாள்.
பரமுவை பார்த்தான் ராகவன். உண்மையாலும் பரமு முகம் வில்லைனைப் போல்  இருந்தது.

ரமு தாவாங்கட்டையை சொறிந்தவாறு அந்த பையனை மேலும் கீழும் பார்த்தான். பட்டாபியின் வயது தான் இருக்கும். பெட்டிகடை கண்ணன் ரெக்கமண்டேசனில் ஏதாவது ஒரு கேரக்டர் கேட்டு வந்திருக்கிறான். கண்ணன் வாங்கி வந்த லட்டு பொட்டலத்திலிருந்து ஒரு லட்டை வாயில் போட்டவாறு பட்டாபியும் அந்த பையனை மேலும் கீழும் பார்த்தான்.

"உன் பேர் என்னடா அம்பி"பரமு

அவன் நிதானமாக கண்ணாடியை சரி செய்தவாறு "ஹரி..... டாக்டர் ஹரி" என்றான்.
 
"என்னது டாக்டரா?"

"ஆமான்டா பரமு இப்பவே பெருசானா டாக்டரா ஆகனும்னு வைராக்கியம் வச்சுண்டு இருக்கான். அதான் யார் பேர் கேட்டாலும் டாக்டர் ஹரின்னு சொல்றான். இவனை எப்படியாவது டாக்டராக்கிடுடா பரமு" கண்ணன்

"என்னடா உளர்ற"

"உன் நாடகத்துல டாக்டர் வேஷம் இருக்குன்னயே பரமு. அதான் இவனை அழைச்சுண்டு வந்தேன்"

பரமு அவனை ஏற இறங்க பார்த்தான். "அம்பி இந்த டயலாக்கை படிச்சு மாடுலேசனோட சொல்லு பார்ப்போம்." என்றவன் காமினி பக்கம் திரும்பி "காமினி இந்த சீன்ல நீ பெட்ல படுத்துகனும். படுடி."அவ்ளை பெட்டில் படுக்க வைத்து மூக்கில் மாஸ்கை பொருத்தினான். 

"அப்ப நான் கிளம்பட்டா பரமு?" கண்ணன் போகமனமில்லாமல் கேட்டான்.

"இருடா பக்கத்தாத்துல குழந்தை பொறந்திருக்கு. குழந்தைக்கு பேரு வச்சுட்டு போயேன்." பரமு

"ஹி ஹி இல்ல செத்த நாழி ஒத்திகை பார்க்கலாம்னு....."

"தொந்தரவு பண்ணாம இங்கிருந்து போடா முதல்ல" பரமு கத்தத்தொடங்கினான். "என்ன டாக்டர் அம்பி... ரெடியா?"

டாக்டர் சிறுதி நேரம் இங்கும் அங்கும் நடந்து அதை மனப்பாடம் செய்து விட்டு "ம்ம்ம்" என்றபடி காமினியிடம் வந்தான்.

"இன்ஸ்பெக்டர் சிவா இவங்களுக்கு தலையில அடிப்பட்டதால எதுவா இருந்தாலும் 24 மணி நேரம் கழிச்சு தான் சொல்ல முடியும். இப்ப இவங்களுக்கு நிறைய ஊசி போடனும்" என்றவாறு கண்ணாடி கழட்டினார் டாக்டர்.

"சபாஷ்டா அம்பி" பரமுவுக்கு சந்தோஷம்.

"என்னது ஊசியா?" பயத்தில் அழத்தயாராகினாள். டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். ஒரே ஓட்டமாக அழுதவாறு ஓடினாள். 


"மாமாஆஆஆஆஆஆஆ காமினி ஓடுறா"


“பிடிடா அந்த அழுமூஞ்சிய” 

லட்டு வாயுடன் பின்னால் பட்டாபியும் ஓடினான். 

பரமுவை பார்த்தான் ராகவன். இப்போதும் பரமு முகம் வில்லனைப்போல் தான் இருந்தது.


"காமினி இங்க வாடி. நம்ம பரமு மாமா டி. ஏன் பயப்படுற. வா நான் இருக்கேன்ல" வாசலில் காயத்ரி மாமி நின்று கொண்டு காமினியை அழைத்துக்கொண்டிருந்தார்.

"மாமி காமினி இனி வேண்டாம். நாங்க வேறாளை பார்த்திக்கிறோம். சீனு மாமா பொண்ணு நாலாங்கிலாஸ் படிக்கிறா. அவளை நடிக்க சொல்லி கேட்டிருக்கோம். என்ன தத்தக்கா பித்தக்கான்னு பேசுவா. ஆனா கற்பூர புத்தி.. சொன்ன படியே நடிப்பா" பரமு கோபத்தில் படபடவென பொறிந்தான்.

"என்னடா கண்ணா கோவிச்சுக்கிற." என பரமு கன்னத்தை லேசாக கிள்ளிய மாமி " சின்ன வயசுலயே நான் சரோஜா தேவி மாதிரி ஆகனும்னு நினைச்சேன். எனக்கெங்க கொடுப்பினை இருக்கு. சின்ன வயசுல நான் இருக்குற இடமே தெரியாது”

”அப்போ அவ்ளோ ஒல்லியா மாமி நீங்க?” சுற்றளவை நோட்டம் விட்டவாறு ராகவன் இடைமறித்தான். 

”இல்லடா அம்பி.. எனக்கு இந்த நாடகம், சினிமான்னு அப்ப ஒன்னும் தெரியாதுன்னு சொல்ல வந்தேன். என் தோப்பனார் ரொம்ப ஆச்சாரம் வேற.. ஒரு போட்டோ கூட எடுக்க விடமாட்டார்னா பார்த்துக்கோயேன்.”
“ஏன் மாமி ஆச்சாரமா இருக்குறவாள போட்டோ எடுக்குறதில்லன்னு போட்டோகிராபர் சொல்லிட்டாரா?” ராகவன்

”நீ செத்த நாழி சும்மா இருடா.. நான் பரமுட்ட தானே பேசிட்டு இருக்கேன். பரமு இவளையாச்சும் ஸ்ரீதேவி மாதிரி வரனும்னு நினைச்சு இப்பவே நடிக்க கத்துகொடுத்துண்டு வரேன். இவளோட தோப்பனார் "காஞ்சனா"ன்னு வச்ச பேரையே சினிமாவுக்காக "காமினி" மாத்திட்டேன். அவளை பெரிய நடிகையாக்க வேண்டியது உன் கையில தான் பரமு இருக்கு. இப்ப கூட உன் நாடகத்துக்காக முந்திரி பாயாசம், கைமுறுக்கோட பனியாரமும் செஞ்சு தரலாம்னு இருக்கேன் பரமு. ஆனா நீ என்னடான்னா...." விம்மலுடனும் லேசாக கலங்கிய கண்களுடன் பொருமி நிறுத்தினாள் காயத்ரி மாமி.

"அய்யோ மாமி இப்ப ஆச்சுன்னு கண்கலங்கிறேள். காமினி நல்லா தான் நடிக்கிறா... ஆனா என்ன செல்லம் ஜாஸ்தி. ஒரு சொல்லு பொறுக்க மாட்டேங்கிறா காமினிய நல்லா நடிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு."பரமுவும் உணர்ச்சி வசப்படலானான்.
“ தாங்ஸ்டா பரமு. காமினி அப்பாக்கு கிடைச்ச மாதிரி உனக்கும் அழகும் அறிவோட நல்ல மாட்டு பொண்ணு கிடைக்கனும்னு நான் ஸ்ரீரங்கநாதனை சேவிச்சுகிறேண்டா”

“மாமி என்ன சொல்றேள்? மாமா உங்க சம்மதத்தோட சின்ன வீடு வச்சிருக்காறா? ராகவன் பதறினான்.

“அபிஷ்டு வாயை அலம்புடா... நான் என்னைய தான் சொன்னேன். பரமு உன் சமத்து ராகவனுக்கு வராதுடா” பரமுவின் கையை பிடித்தவாறு மாமி உணர்ச்சிவசப்பட்டாள்.

"என்ன எழவு காம்பினேசன் இது? கருமம்" ராகவன் தலையில் அடித்துக்கொண்டான்.


மாமி "ஏன்டா அம்பி? என்ன சொல்ற நீ?"


"அவன் கைமுறுக்கையும் பனியாரத்தையும் சொல்றான் மாமி. நீங்க கிளம்புங்கோ" பரமு ராகவனை முறைத்தான். 


ந்த தடவை ஒத்திகையை ராகவன் கவனித்துக்கொண்டான். பரமு ஒரு ஓரமாக உத்திரத்தைப் பார்த்தவாறு உட்காந்திருந்தான். யோசிக்கிறான் போல என்று ராகவன் ஒத்திகை வேலையை பார்த்தான். "பட்டாபி அடுத்த சீனை படி"

"“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா." பட்டாபி வாசித்தான்.  

"மாமா எனக்கு ஒரு சந்தேகம்"  பட்டாபி. 
"சொல்லுடா பட்டாபி. சந்தேகம் வந்தா அப்பப்ப கேட்டு தெளிவாக்கிடனும். அதான் சமத்து." ராகவன் சிரித்தவாறு பரமுவை பார்த்தான். பரமுவும் சிரித்தான்.

"நெத்தியில தானே பொட்டு வைப்பா? அப்புறேன் நெற்றிப்பொட்டுன்னு சேர்த்து சொல்றா? பொட்டுல துப்பாக்கிய வைன்னு சொன்னா போதாதா?

"படுத்தாதடா பட்டாபி இதை மட்டும் செய்” ராகவன்

"காமினி இன்னைக்கு பொட்டே வைக்கலயே? அப்போ நான் துப்பாக்கிய எங்க வைக்கனும்?" பட்டாபி

“ம்ம்ம்ம்ம்..என் தலையில வைச்சு தொலடா அபிஷ்டு” ராகவனும் கத்தத்தொடங்கினான்.

“உங்களுக்கும் பொட்டு இல்லையே மாமா. சரி ஓக்கே. ஆனா எட்டாதே மாமா. கொஞ்சம் குனியிரேளா?” பட்டாபி

“டேய் பட்டாபி என்னைய இம்சை படுத்தி கொல்லாதடா” ராகவன் எரிச்சலில் சிணுங்க தொடங்கினான்.

“சரி மாமா கொல்லல..” பட்டாபி துப்பாக்கியை கீழே போட்டான்.

“அய்யோ அய்யோ அய்யோ” என்றபடி ராகவன் லெட்டர் பேடில் தலையில் அடித்துக்கொண்டான்.

"நோக்கு பசிக்கிறதா செல்லம்?” பரமு
“எப்படி மாமா கண்டு பிடிச்ச?” சந்தோஷமானான் பட்டாபி.

”போய் ஆத்துக்கு போய் சாப்பிட்டு வா பட்டாபி. பசியில இந்த மாதிரி எடக்குமடக்கா யோசிச்சு கேள்வி கேட்காத சரியா? ஆத்துக்கு போ" பல்லை கடித்துக்கொண்டு பரமு சொன்னான். 
"ம்ம் சரி மாமா"  பட்டாபி ஒரே ஓட்டமாக ஓடினான்.

ராகவனின் முகம் பார்த்தான் பரமு. ராகவன் முகம் இப்போது வில்லனை போலவே இருந்தது.

"ராகவா டென்சனா இருக்குடா. எல்லாம் ஷேமமா நடக்கும்ல? அந்த வாமூ க்ரூப் ஆளுங்க நம்ம கண்ணன் கடையில முட்டை  வாங்கிட்டு போனாங்களாம். நம்ம நாடகத்துல அடிக்க தான் கண்ணன் அடிச்சு சொல்றான்" பரமு டென்சனாக இருந்தான்.

"பரமு வீணா அலட்டிக்காதடா. நாம நல்லா நடிச்சா யார் என்ன பண்ண முடியும்."

எல்லா வருடமும் கொலுவின் போது இரவு நிகழ்ச்சிகள் நடக்கும் அஹ்ரகாரத்தின் கிழக்கு தெரு மண்டபத்தின் திண்ணை போன்ற மண்மேடையில் இங்குமங்கும் பரமு ஓடி  கொண்டே இருந்தான்.

"ராகவா ஆள் நிறைய பேர் வந்தாச்சு நாடகம் ஆரம்பிக்கனும். காயத்ரி மாமியை பாயாசம் எடுத்துண்டு வரச்சொல்லு. எல்லாருக்கும் கொடுத்திறலாம்.
நாடகம் ஆரம்பமானது. பரமு மேடையில் தோன்றி "நாடகம் திகிலாக இருக்குமென்பதால் ஹிருதய பலமீனமானவர்கள் பார்பதை தவிர்க்கவும்" என தொடங்கினான். கூட்டத்தில் ஒரே சலசலப்பு. ஒருத்தொருக்கொருத்தர் கிசுகிசுத்துவிட்டு எல்லோரும் எழுந்து கிளம்ப தயாராயினர். 

அலறி அடித்துக்கொண்டு ராகவனும், பரமுவும் அனைவரையும்  "ஏன்னா அவ்ளோ திகில் இருக்காது சும்மா சொன்னேன். பயம் வேண்டாம். உட்காருங்கோ" என கெஞ்சி தொடங்கினார்கள்.

வேண்டா வெறுப்பாக அனைவரும் அமர்ந்தனர்.
நாடகம் ஆரம்பமானது.
பட்டாபிக்கு ஆரம்பத்தில் முதல் இரண்டு காட்சிகள். இரண்டும் போலீஸ்காரனின் சாகச காட்சிகள். கைதட்டல்கள் அமோகமாக இருந்தது.  
காமினியுடன் அடுத்தடுத்த காட்சிகள். 

"ஹா ஹா ஹா காமினி என்கிட்ட வசமா மாட்டினயா?. ஒழுங்கா பரந்தாமன் எங்கிருக்கான்னு சொல்லு" பட்டாபி அந்த கேரக்டராகவே மாறினான். "சொல்லு... சொல்லு வைரம் எங்க?" அதிக அழுத்தம் கொடுக்கவே... காமினி மிரள ஆரம்பித்தாள். "சொல்லுடின்னா"என்று கன்னத்தில் பளாரென ஒரு அறை கொடுக்க. "போடா கும்பகர்ணா.." அழுத படி கீழே இறங்கினாள். "எங்கடி போற?" அவளது சடையை பிடித்து இழுத்தான். 

"போடா பைத்தியம், மக்கு, முண்டம்" என்றபடி கீழே கிடந்த மண்,கல்லை தூக்கியெறிந்து அம்மா என அழுதபடி சென்றாள்.

"அய்யய்யோ ராகவா அவ அழ ஆரம்பிச்சுட்டாளேடா ... என்ன டா பண்றது?" 

"சரி நீ அந்த சீன்ல போய் எப்படியாவது சமாளிடா பரமு" துரத்தினான் ராகவன்
"என்னோட சீன் அடுத்து தானேடா?" 

"இப்ப போய் சமாளிடா போ" பரமுவை விரட்டினான் ராகவன்.

சடாரென ஸ்டேஜில் தோன்றி “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன். 

"ச்சீ போடா. என் அப்பாகிட்ட சொல்றேன் இரு " எனத்தள்ளிவிட்ட படி அழுதுகொண்டே கீழே இறங்கினாள் காமினி. 

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த ராகவன் மேடை மேல் ஏறி "தடங்கலுக்கு வருந்துகிறோம். சிறிது நேர இடைவேளைக்கு..... " என கூறிக்கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் எங்கிருந்தோ பரமுவை நோக்கி வந்த முட்டை குறி மாறி "நச்" என ராகவன் தலையில் மோதி உடைந்தது. பரமு அதை பார்த்ததும் "உவ்வேக்க்க்க்" என குமட்டியவாறு ராகவன் பின்னால் ஒழிந்தான். சர சர வென்று கூட்டத்தின் நாலா புரத்திலிருந்தும் பறந்து வந்த முட்டைகள் ராகவன் முகத்தை மஞ்சளாக்கியது. 

ராகவன் ரியாக்‌ஷன் எதுவும் இல்லாமல் மெதுவாக மேடையிலிருந்து இறங்கினான்.  அவனை கவசமாக்கி பரமுவும் இறங்கினான். 

ராகவன் தலை குனிந்தவாறு நடந்து கொண்டிருந்தான் இரண்டடி தள்ளி வந்து கொண்டிருந்த பரமு "என்னடா ராகவா இது இந்த முட்டை இப்படி கொமட்றது? சரி சரி விட்றா ராகவா குளத்துல முங்கி எழுந்தா சரியாகிடும். எல்லாம் அந்த வாமூ க்ரூப் ஆளுங்க பண்ணினது தான். அவன்களை விட பிரமாதமா நாடகம் பண்ணினோம் பொறாமைடா அவன்களுக்கு. அடுத்த வருசம் நாடகத்துல ஜமாச்சிரனும்டா. எவ்ளோ செலவானாலும் பரவாயில்லடா. நீ இருக்கேல்ல நேக்கு..." ராகவன் தலை நிமிர்ந்து பரமுவை அதிர்ச்சியுடன் பார்க்க..  

முட்டை தன் கையில் படாதவாறு ராகவன் தோளை உலுக்கி "நீ என் நண்பேன்டா" என்றான் 'பரமு (எ) பரந்தாமன்'.
Related Posts with Thumbnails