தாய்லாந்து ஸ்பெஷல்

கோரல் ஐலேண்ட்:

ஹோட்டலுக்கு எதிராகவே கடல் இருக்குறதால மறுநாள் காலையில பொடி நடையா நடந்து போனோம். அங்க எங்களுக்கான அதிவேக விசைப்படகு காத்துக்கொண்டிருந்தது. அந்த தீவிற்கான கைடாக ஒரு பெண் வந்திருந்தார். கிளம்பும் முன் அனைவரும் படம் எடுத்துக்கொள்ளலாம் என கரையின் அருகே நின்றோம். புகைப்படமும் எடுத்தோம்.

கரையில் யாரோ ஒருவர் “ஸ்மைல் ப்ளீஸ்” என கூறி வளைத்து வளைத்து எங்களை படம் பிடித்தார். யாருடா இவர் நம்மள எதுக்கு படம் பிடிக்கிறார் என நண்பனை பார்த்தேன். “தாய்லாந்து”ல எல்லாருமே நல்லவங்கடா என்றான் நண்பன். ஆமோதித்து நன்றியுடன் அவருக்கை கை கொடுத்துவிட்டு கிளம்பினோம். 

கடற்கரைக்கு நடுவே ஒரு பெரிய மேடை போல் அமைத்து ஸ்பீட் போட் மூலம் பாராசூட்டில் செல்ல பல மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. நம்ம பெண் கைடுக்கு "தேவைப்பட்ட" ஒரு மேடையில் எங்களது போட் நிறுத்தப்பட்டது. 500 பாத் செலவில் பாராசூட் மூலம் கடலின் மேல் பறக்க தயாரானோம்.  

கடலின் மேலே சுமார் இரண்டு நிமிடங்கள் பறக்கும் இந்த பாராசூட் அட்டகாசமான அனுபவம். மிகவும் குறைந்த விலையில் இது போன்று கிடைக்கும் வாய்ப்புகளை தவற விட கூடாது என்று நண்பர்கள் அனைவரும் ஆர்வம் காட்டினர். அங்கு செல்பவர்கள் இதை தவறாமல் அனுபவித்து வரவும். 


 (ஹி ஹி நானே தான்.)

பின்பு அங்கிருந்து கோரல் ஐலேண்டை நோக்கி எங்கள் பயணம் புறப்பட்டது. சுமார் 20 நிமிட பயணத்தில் கோரல் ஐலேண்டை அடைந்தோம். ஐந்து பேரும் இறங்கிவுடன் ஒரு லுக் விட்டோம். ஹி ஹி நினைத்ததிற்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது அந்தத்தீவு.

(குப்பைத்தொட்டி ரொம்ப டீசெண்டாக்கும். ஸோ ஒன்லி கார்டூன்)


சொர்க்கத்தை வெட்டி எடுத்ததை போல் உள்ளது அந்தத்தீவு. சுற்றிலும் யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் கவலையில்லா மனிதர்கள். அவர்களோடு கலக்க தயாரானோம். முதலில் கேட்பாராற்று கிடந்த “வாழைப்பழ படகை” தேர்ந்தெடுத்து போனோம். முன்னால் அதி வேகப்படகு இழுத்துச்செல்ல பின்னால் வாழைப்பழ படகு செல்லும். கடலுக்கு நடுவே சென்று முன்னால் போன படகு வேகமாக திரும்ப பிடிமானம் இல்லாமல் அனைவரும் கடலில் விழுந்தோம். ”வாழ்க்கை ரவிக்கை(life jacket)” போட்டிருந்ததால் தப்பித்தோம். இதே போல ஒரு அரை மணி நேரம். மிகவும் ஜாலியான விளையாட்டு இது. நாங்கள் செய்த கலாட்டாவைப் பார்த்து தொடந்து பல ஐரோப்பிய குடும்பங்கள் அதில் பயணம் செய்தன :) இதையும் தவற விட வேண்டாம். 
 (வாழைப்பழ படகு)

பின்பு நீஈஈஈண்ட நேர ஆனந்தக்குளியல் :) பாதுகாப்பான கடற்கரை. பயப்பட தேவையில்லை. நீச்சல் தெரியாத நாங்கள் எந்த வித பயமும் இல்லாமல் குளித்தோம். 
 (ஆனந்த குளியல்)

கரையிலிருந்து கைடு  மதிய உணவு உண்ண அழைக்க ஆரம்பித்தார். நல்ல பசியில் சென்றோம். ஐந்து பேரில் இரண்டு பேர் மட்டும் அசைவம். ”ஸ்பெஷல் sea food” உங்களுக்காக மதிய உணவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கைடு கூறினான். நல்ல பசியில் சென்று உட்கார்ந்தால் வாழ்க்கையே வெறுத்து போச்சு. எதுவும் நம்ம டேஸ்டுக்கு ஒத்து வரல.வெறும் சோறை மட்டும் தின்றோம். காலையில் தங்கியிருந்த ஹோட்டலில் வயிறு முட்ட தின்றது சற்றே ஆறுதல் :)

பக்கத்து டேபிள்ல இருந்த சைவத்தை பார்த்தால் எங்களை விட பாவமா இருந்துச்சு :) வெறும் சோறையும் மிளகாய் தண்ணீரையும் போட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். உணவு முறை மட்டுமே அங்கே பெரிய குறை.
(மீன்,சிக்கன்,ப்ரைடு ரைஸ்,இறால், ஷெல் etc..)

(Special sea foodஆம்ம்ம்ம்)

ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பினோம். கரைககு வந்ததும் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தவன் எடுத்த போட்டோவையெல்லாம் ஒரு ப்ளேட்ல ப்ரேமா போட்டு நம்மகிட்ட கொடுத்து 100 பாத் தாங்கன்னான். அடப்பாவி! திரும்பி நண்பனை பார்த்தேன். அவனும் என்னைய பார்க்க கடைசியில ஒரே ஒரு க்ரூப் போட்டோ மட்டும் 100 பாத் கொடுத்து வாங்கினோம் :)
(ஹி ஹி இதுக்கும் கார்டூன் போதும்)

அன்று மாலை உலகிலயே மிகப்பெரிய நகைக்கடையான "ஜெம்ஸ் ஜூவல்லரி" க்கு சென்றோம். வைரம்,பவளம்,முத்து தங்கம்,வெள்ளி, யானை தந்தம் என அனைத்தினால் செய்யப்பட்ட நகைகள் கிடைக்கும். அதுவுமில்லாமல்  உள்ளே நுழைந்ததும் ஒரு குகைக்குள் ரயில் மூலம் சிறு பயணம் ஏற்பாடு செய்கிறார்கள். அந்த குகையில் பல்வேறு கனிமங்களை எவ்வாறு வெட்டி எடுத்து நகைகளாக ஆக்கப்ப்டுகிறது என விளக்கம் கொடுக்கிறார்கள். தாய்லாந்தின் வரலாற்றில் அணிகலண்களின் பெருமையும் காண்பிக்கப்படுகிறது. மிக அருமையான பயணம் அது. பல கோடி செலவில் செயற்கையாக செய்யப்பட்ட குகை அது. அதில் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. :(பின்பு அவர்கள் வைரங்களை கொண்டு நகைகள் செய்யும் சிறிய தொழிற்சாலையும் காண்பிக்கப்படுகிறது. நேரடியாக அதை கண்ட போது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அங்கிருந்து சிரித்த முகத்துடன் உலகின் மிகப்பெரிய நகைக்கடைக்குள் பணிப்பெண் அழைத்துச்சென்றாள். வாங்குகிறோமோ இல்லையோ நமக்கு சிரித்த முகத்துடன் அனைத்து நகைகளைப் பற்றிய விளக்கம் கொடுக்கிறார்கள். வித்தியாசமான அனுபவம் அது. நண்பர்கள் சில வைர கற்களை வாங்கினார்கள். நாம எதுவும் வாங்கலைன்னா எப்படி? அதான் அடுத்த நாட்டாமை ஆகலாம்னு யானை தந்தத்துல செய்த இந்த டாலர் வாங்கிட்டேன் :) 
இனி பதிவுலகத்துக்கே நாட்டாமை நான் தான்டா.. ஏலே பசுபதி எட்றா வண்டிய

அன்று இரவே பேங்காங் நோக்கி பயணப்பட்டோம். காலையில் 8.30 க்கு கைடு வருவதாக போன் வந்தது. நேரம் தவறாமைக்கு ஜப்பானுக்கு அடுத்த படி இவர்கள் தான் போல. மிகச்சரியாக 8.30 மணிக்கு ஹோட்டல் லாபியில் வெயிட் செய்திருந்தார் கைடு.

ஆக்ஷ்னுடன் விளக்கும் கைடு, ஆர்வத்துடன் கேட்கும் நாங்கள்(வேற வழி!)

ங்கொய்யால கைடு என்னமோ நல்ல மனுசன் தான்.. ங்கொய்யால ஆனா..........

அவரை பத்தி அடுத்த பகுதியில சொல்றேன் :)

அல்கஸார் ஷோ - தாய்லாந்து

"உண்மையாலும் அது காப்ரேவா?"

"ஆமாம்" வேகமாக தலையாட்டினான் டூரிஸ்ட் கைடு.


மனதுக்குள் கொண்டாட்டம் தான். "தாய் பெண்கள் மட்டும் நடனமாடுவார்களா? இல்லை வேற்று நாட்டு அழகிக்கூட்டமும் உண்டா?" நண்பன் சோழப்பேரரசு ரேஞ்சுல கேட்க.

நமுட்டு சிரிப்பு சிரித்த அந்த கைடு "ஆடுவது பெண்கள் அல்ல" என்றான்.

அடப்பாவி "அவனா நீயி?" என்ற கேள்வியுடன் ஒருத்தொருக்கொருத்தர் முகத்தை பார்த்துக்கொண்டோம். "ஆடுவது திருநங்கைகள்" என்றான். "அட!" என அனைவரும் ஆச்சர்யமானோம். நண்பனொருவன் “அண்ணே உலகமும் உருண்டை தான் லட்டும் உருண்டை தான். ஆனா லட்டை மட்டும் தான் சாப்பிட முடியும் உலகத்தை சாப்பிட முடியாது. அது மாதிரி நாம இதையெல்லாம் ரசிக்க முடியுமா?” என்று தூய ஆங்கிலத்தில் சொன்னான். கைடுக்கு ஒன்னும் புரியாமல் முழிக்க “ஆத்து மீனு கடலுக்கு போனா செத்திடும் கடல் மீனு குளத்துக்கு போனா செத்துடும்”னு தொடங்க அவனை வாயை அடைத்து அழைத்துக்கொண்டு உள்ளே போனோம். “ஙே”வை விட மோசமாய் அந்த டூரிஸ்ட் கைடு பார்த்துக்கொண்டே இருந்தான்.

அந்த ஷோவின் பெயர் "அல் கஸார்(alcazar)" சிறுது நேரத்தில் அங்கு கூடிய அழகிய திருநங்கைகள் கூட்டம் புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்த வண்ணம் இருந்தது.

ஆம் ஆச்சர்யங்களின் தொகுப்பு தான் இந்த “அல்கஸார் ஷோ”. முழுக்க முழுக்க திருநங்கைகள் கொண்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி காண்போரின் கண்களை கட்டிப்போட்டு விடும். ஒரு மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் நடத்தும் இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி ஒவ்வொரு பாடல்களுக்கும் இடைவெளி இல்லாம மிக நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டு முழு மூச்சாக நடத்தப்படுகிறது. ஒன்பது அழகிய நங்கைகள். பல்வேறு நடன குழுவினருடன் ஆரம்பிக்க படுகிறது அந்த நிகழ்ச்சி. ஒன்பது திருநங்கைகளும் ஒவ்வொரு ரத்தினங்களாக சித்திரிக்கபடுகிறதாம். கண்ணை கவரும் ஒரு பிரம்மாண்ட அரங்கம். அந்த நங்கைகளுடன் அந்த அரங்கமே ஒளிர்கிறது. பிரம்மாண்டம் என வெறும் வார்த்தைகளால் அடைத்து விட முடியாத ஒரு பிரம்மாண்டம் அது. ஒவ்வொரு ரத்தினங்களும் கடவுள்களாக/அரசர்களாக காண்பிக்கபடுவதாக தெரிகிறது. பின்பு வேறொரு சக்திகளால் சூறையாடப்படுவதாக காட்சிகள் வருகின்றன.

பின்பு அதே நவரத்தின அழகிகளின் தனித்தனியான நடனங்களோடு ஒவ்வொரு நாட்டின் கலாச்சார அடையாளத்தோடு தொடர்கிறது நடனங்கள். இந்தோநேஷியா,தாய்லாந்து, சீனா, இந்தியா, ஜப்பான் என இது வரை கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் இன்னும் சில நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கண்ணியமான கலாச்சார நடங்கள் அரங்கேறின. நிற்க....

ஒவ்வொரு பாடல்களுக்கும் எந்த ஒரு இடைவெளிகளும் இல்லை. பார்வையாளர்களுக்கு சிறிதும் அலுப்பு தோன்றாத வண்ணம் மிக வேகமாக அரங்கேற்றப்பட்டது. வெளியரங்கத்தில் நடனமாடும் நேரம் திரைமறைவில் உள் அரங்கத்தின் கட்டமைப்பு மாற்றப்படுகிறது. ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அரங்கமும் பிரம்மிப்பூட்டுகிறது. அனைத்தும் பிரம்மாண்டம். வண்ணமயம். கண்கள் இமைக்க மறந்த காட்சிகள் அவை. இதில் அரை நிர்வாண பாடல்களும் இடம்பெறுகிறது. சிறுதும் கூச்சமில்லாமல் குழந்தைகளுடன் கண்டு ரசிக்கும் பாடல்களாக இருக்கிறது.ஆடல்களில் உடல் அசைவில் நேர்த்தியும் ஒழுங்கும், ஒரு பாடலுக்கும் மற்றொரு பாடலுக்கும் உள்ள தொடர்பும் மற்றும் நேரமும் என அந்த நங்கைகள் கடைப்பிடித்திருப்பவையை காணும் போது நம்மூர் “கெமிஸ்ட்ரி”யாவது மண்ணாங்கட்டியாவது என எண்ணத்தோன்றுகிறது. 10/15 நிமிடங்களில் ஒப்பனைகளை மாற்றி அடுத்த ஆட்டத்திற்கு புத்தணர்ச்சியோடு தயாராகி விடுகிறாள் ரத்தின திருநங்கை. கொடுத்த 600 பாத் பணத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாத ஒரு திருப்தியான நடனங்களை காண முடிகிறது.

ஒரு முழு திரைப்படத்தை கண்ட திருப்தியோடு மக்கள் வெளியேறுகின்றனர். வெளியே அத்திருநங்கைகளுடன் பணம் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். பண்ம் கொடுத்து நிறைய பலர் எடுத்துக்கொண்டனர்.


காப்ரே பற்றிய ஒரு தவறாத எண்ணம் அனைவருக்கும் முடிவுக்கு வந்திருந்தது. திருநங்கைகளுக்கான மரியாதை வியப்பளித்தது அனைவருக்கும்.

“நாளைக்கு எங்க போறோம்?”என்றேன் கைடுடன்

“கோரல் ஐலேண்ட். காலையில ரெடியாகிடுங்க” என்றான் நமுட்டு சிரிப்புடன் கண்ணை சிமிட்டியபடி. அச்சிரிப்பிற்கான அர்த்தம் மறுநாள் புரிந்தது :) கோரல் ஐலேண்ட் காத்திருந்தது எங்களுக்காக...

தொடரும்..

(கடைசி போட்டோவை தவிர அனைத்தும் எங்களால் எடுக்கப்பட்டதே)

தாயகம் மறக்க வைத்த தாய்லாந்து

கோவா? அப்படின்னு ஆரம்பிச்சு டெல்லி, சிம்லா, சிங்கப்பூர், மலேசியா, இல்ல இல்ல சுவிஸ் போலாம்னு எங்க எங்கயோ சுத்தி கடைசியா எல்லாரும் ஒன்னா வந்து நின்ன இடம் "தாய்லாந்து". (ஹி ஹி எல்லாம் ஒரே குட்டையாச்சே). இதில் இதைத் தேர்ந்தெடுக்க மிக முக்கிய காரணம் விசாவை அங்கு சென்று பெறலாம்.(on arrival visa)

ஒவ்வொரு ஈத் திருநாள் விடுமுறைக்கும் அமீரகத்திற்குள்ளாகவோ, வளைகுடாவிற்குள்ளாகவோ சுற்றி அலுத்து விட்டதால் இந்த தடவை தாய்லாந்தை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தோம். "தாய்லாந்தா? கலக்குற மச்சி.........." என ஆரம்பிக்கும் முன் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தாய்லாந்து கோவில்களை காண ஆர்வமிகுதியால் மட்டுமே இந்த பயணம். (அப்படின்னு சொன்னா மட்டும் நம்பவா போறீங்க?)

அமீரகத்தில் தாய்லாந்து செல்லவும் சுற்றலாவை மிக அருமையாக ஒருங்கிணைக்கவும் எந்த டிரவால்ஸ் சிறந்தது என ஆராய்ந்து, பணம் அதிகம் போகாமல் மிக அருமையாக ஒருங்கிணைத்த பெருமை நண்பர்களையே சேரும். நான் வெறும் "டேபிளை இங்க நகர்த்து, அந்த சொம்பை ஓரமா வை, காலிங் பெல் அடிக்குது பாரு" என்ற லெவலுக்கான வேலைகள் மட்டுமே செய்தேன். கூடுதலாக துளசி டீச்சர், கானா பிரபா, பினாத்தலார் என ஏற்கனவே சென்று வந்தவர்களிடம் ஆலோசனையைப் பெற்று நண்பர்களிடம் தெரிவித்ததோடு சரி.

கதார் ஏர்வேஸில் துபாய்-கதார்-பேங்காங்க் என பயணம் முடிவானது. பயணம் இனிதே தொடங்கியது. கிட்டதட்ட ஏழு மணி நேர பயணத்திற்கு பிறகு கண்கள் கசக்கிய ஒரு அழகிய காலைப் பொழுதில் விமானத்திலிருந்து தாய்லாந்தை காண முடிந்தது.

வளைந்தோடும் ஆறுகளிடையே பேங்காங்க் நகரம். சிறிது நேரத்தில் பச்சை பசேல் வயல்வெளி. கலந்து கட்டி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது தாய்லாந்து. பல நிமிட சுற்றலுக்குப் பிறகு “சுவர்ணபூமி” விமான நிலையத்திற்கு வந்தது விமானம். துபாய் விமானநிலையத்திற்க்கு சற்றும் குறைவில்லாத விமான நிலையம். “அந்நியன்” படத்தில் “கண்ணும் கண்ணும் நோக்கியா” பாடல் இங்கும் எடுக்கப்பட்டிக்கிறதாம். நல்லது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு விசா எடுப்பதற்காக வழிகாட்டி பலகையின் உதவியோடு சென்றோம். 10 நிமிசத்தில் விசா ரெடி!

சற்று நேரம் விமான நிலையத்தை நோட்டம் விட்டவாறு பொறுமையாக வெளியேறினோம். எங்கள் பெயர் தாங்கிய பலகையை தாங்கியவாறு ஒரு அழகிய தாய் பெண்மணி முகமெங்கும் சிரித்த முகத்தோடு காத்திருந்தார். இந்த சிரிப்பை பிறக்கும் போதே தாய்பாலுடன் தாய் புகட்டி விடுவாறா எனத் தெரியவில்லை. என் ஐந்து நாள் பயணத்தில் தாய்லாந்து மக்களிடையே சிரிப்பை எந்த சூழ்நிலையிலும் காண முடிந்தது! கலைநயமும் நவீனமும் கலந்த விமானநிலையம். அப்பெண்மணி எங்களை அழைத்து முன்பே போட்டிருந்த அட்டவணைப்படி “பட்டாயா” நகரத்திற்கு வாகனம் ஏற்பாடு செய்திருந்தார்.

வண்டி பட்டாயா நோக்கி புறப்பட்டது. இரண்டு மணி நேர பயணம். வேடிக்கையும், உறக்கமும், கேலியும், உற்சாகமும் என இரண்டு மணி நேர பயணம் இரண்டு நிமிடமானது. பட்டாயா நகரமும் வந்தது.

ஹோட்டலில் செக் இன் வேலையை முடித்தோம். அவர்களது நொறுங்கிய ஆங்கிலம் பாடாய் படுத்தியது. இருந்தாலும் அதுவும் இல்லையென்றால் தூர்தஷன் ஒன்றரை மணி செய்திகள் நிலைக்கு ஆளாகியிருப்போம்.
14வது மாடி. அதுவும் கடற்கரையை பார்க்கிற மாதிரியான அறை. என்னதான் அமீரகத்தில் சுதந்திரமாக இருந்தாலும் இங்கு வந்ததிலிருந்து ஒரு சுதந்திர உணர்வு. 5 நாட்கள் அலுவல்,நெட்,போன் என எந்த தொல்லையும் இல்லாமல் நான் நானாக இருக்க வேண்டிய நாட்கள்.


முதல் பிரச்சனை இப்போது தான் ஆரம்பமானது. நல்ல பசியில் இருந்தோம். ஹோட்டலில் லஞ்ச்(பேக்கேஜில்) கிடையாது. சரி காலாற நடந்து ஏதாவது ஒரு இந்தியன் ஹோட்டலில் போய் சாப்பிடலாம் என எண்ணினோம். ஹோட்டல் ரிசப்ஷனில் கேட்டு “அலிபாபா” என்ற இந்தியன் ரெஸ்டாரெண்ட் அட்ரஸை வாங்கினோம். வெளியில் வந்தது தான் தாமதம் டாக்ஸி காரர்கள் சுற்றிக் கொண்டார்கள். “அலிபாபா” போகனும் என செய்கையிலும் மொழியிலும் எடுத்துரைக்க “100 பாத்” என்றார் டாக்ஸி டிரைவர். எல்லாவற்றிக்கும் பேரம் பேசு என அறிந்தவர்கள் சொன்னதின் பேரில் பேரம் பேச... எதுவும் எடுபட வில்லை. ஐந்து விரலை மடக்கி மடக்கி அவன் ஏதோ சொல்ல. குத்தத்தான் வருகிறானோ என பயந்தால் மொத்தம் ஐந்து கிலோமீட்டர் தூரம் இருக்கிறதாம் அந்த ஹோட்டல். சரி இருக்கிற பசியில் பேரம் வேலைக்கு ஆகாது என டாக்ஸியில் அமர்ந்தோம்.

ஏறி இரண்டு அடி கூட நகர்ந்திருக்காது கண்ணெதிரே “மகாராஜா” இந்தியன் ஹோட்டல், சிறிது தூரத்தில் “சவுத் இந்தியன்” ஹோட்டல், இன்னும் சிறிது தூரத்தில் பாம்பே ஹோட்டல்... பவ்வ்வ் ஆகிட்டோம். சரி “அலிபாபா”விற்கே செல்லலாம் என நினைத்துக்கொண்டிருக்கும் போதே அலிபாபா வந்து விட்டது. அரை கிலோ மீட்டர் கூட கிடையாது. அடப்பாவிகளா இப்பவே ஏமாந்துட்டோமா? இனி என்னென்ன நடக்க போகுதோ என இறங்கினோம்.

 ஹோட்டலின் முன் ”நண்பேன்டா” :)
ஆனால் முதலும் கடைசியமாக ஏமாந்தது அது. அதன் பின் நடந்ததெல்லாம் ருசிகரம். அலிபாபா முன்பு இறக்கிவிட்டாலும்,வெளியில் இருந்த மெனு கார்டை பார்த்துவிட்டு பிடிக்காமல் அதற்கு அடுத்திருந்த மற்றொரு ஹோட்டலில் நுழைந்தோம். இங்கே பல ஹோட்டலில் இருக்கும் நல்ல பழக்கம் ஹோட்டலின் வெளியேவே மெனு கார்டை வைத்திருக்கிறார்கள். அதைப்படித்து பிடித்திருந்தால் உள்ளே செல்லலாம்.

அனைவரும் உள்ளே செல்ல ஆயத்தமான போது ஒரு தாய்லாந்து காரன் மட்டும் பின்னால் இருந்து நச்சரித்துக்கொண்டிருந்தான். அனைவரையும் போகச்சொல்லி விட்டு நான் அவனிடம் “என்னேடாஆஆஆ” என கேட்க அவன் கொடுத்த விளக்கத்தில் பதிலேதும் கொடுக்காமல் அங்கிருந்து நழுவினேன். பசங்க “யார்டா மச்சி அது?” என கேட்க “தாய்மாமாடா மச்சி” என்றேன்.

”அடப்பாவி உனக்கு இங்க தாய்மாமாவா? அதுவும் சப்ப மூக்கா இருக்கேடா மச்சி? உண்மைய சொல்லு யார் அவன்?”  நச்சரித்தனர்

”அடப்பாவிகளா அந்தாளு இந்த தாய்லாந்தோட “மாமா”டா அதான் சுருக்கி தாய்மாமான்னேன்.

அப்போது ஆரம்பித்த தாய்மாமா தொல்லைகள் பட்டாயா நகரம் வெளியேறும் வரை விடவில்லை :)

அன்று இரவு அட்டவணைப்படி “காப்ரே” நடனம் பார்பதாக இருந்தது. காப்ரேவா?????? என ஜொள்ளு விட்டபடி இரவு 8 மணி வரை காத்திருந்தோம்.....

(தொடரும்..)
படங்கள் அனைத்தும் எங்களால் எடுக்கப்பட்டவையே.

சேட்டன் அப்டேட்ஸ் - பஞ்சாமிர்தம்

"சொல்லத்தான் நினைக்கிறேன்.. சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது" ஏதோ ஒரு டிவியில் சிநேகா பாடிக்கொண்டிருந்தார். சேட்டன் கையில் சொடுக்கு போட்டுகொண்டே "தம்பி இ பெண்ண அறியோ?" என்றார். "என்னது தெரியுமாவா? இந்த கேள்விய மட்டும் வேற எவனா கேட்டிருந்தா நடக்குறதே வேற" என்றேன்.(வேறு எவன் கேட்டிருந்தாலும் என் பதில் இதுதான் என்பது வேறு விசயம்).

"ஏன் தம்பி?"

"சேட்டா இது தமிழ் நடிகை. சார்ஜால தான் பிறந்ததும் படிச்சதும். தெரியுமா?" என்றேன். சேட்டன் டென்சனாகி விட்டார். "தம்பி அவ மலையாளியானு. அவளு ஜனிச்சது படிச்சது எல்லாம் இவடயாக்கும்"

அறையில் ரெட்டி எங்கள் இருவருக்கிடையே உள்ள உரையாடல் புரிந்தாலும் என்ன பேசுகிறோம் என புரியாமல் முழித்திருந்தான்.

அவ்வ்வ் அல்ரெடி இதே மாதிரி ப்ரியாமணி, நாடோடிகள் அனன்யான்னு  தமிழ் பிகர்ஸ்னு நினைச்சுட்டு இருந்த என் நினைப்புல மண்ணள்ளி போட்டாங்க. இனி பாக்கி இருக்குறது த்ரிஷாவும் சிநேகாவும் தான். த்ரிஷா அல்ரெடி பாலக்காடுன்னு சொல்லி வேறொரு விவாதம் பெண்டிங்ல இருக்கு. இப்ப சிநேகாவுமா? இப்படி ஒவ்வொருத்தரையா இழந்துட்டு தமிழன் கடைசியில அநாதையா தான் நிக்கனுமா? உள்ளூர சிநேகா மலையாளியாக இருக்க கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கொண்டேன்.

"சேட்டா சிநேகா சுத்தமான தமிழச்சியாக்கும். அவ பேசுற தமிழ் கேட்டா அப்படி இருக்கும் தெரியுமா? எங்கயாவது மலையாளம் பேசி கேட்டிருக்கீங்களா?" நானும் கொஞ்சம் டென்சனாகி கேட்டேன். சேட்டன் முல்லை பெரியாரை விட்டு கொடுத்தாலும் கொடுப்பார் நடிகையை விட்டு கொடுக்க மாட்டார் போல. செம ரகளை யாகிடுச்சு. கடைசியா ஆண்டவர்கிட்டவே கேட்கலாம்னு கூகுளில் தேடினோம்.

பவ்வ் ஆகிட்டோம். சிநேகா தெலுங்காம் (நன்றி விக்கி). ஙே'ன்னு திரும்பி ரெட்டிய பார்த்தோம். ரெட்டி கேவலமா ஒரு லுக் விட்டுட்டு அவன் வேலைய பார்க்க ஆரம்பிச்சுட்டான்.
--------------------------------------------------------------------------------------------------------------
என் பையனை சேர்க்க 1 லட்சம் கொடுத்தேன். எம் எல் ஏவை பிடிச்சேன். அங்க பணத்தை கொடுத்தேன் இங்க பணத்தை கொடுத்தேன் என பல புலம்பல்களை படிக்க சிரிப்பாக இருக்கிறது (ஹி ஹி பேச்சுலர்) ஏன் இவ்வளவு பணம் கொடுத்து அந்த பள்ளியில் சேர்க்க வேண்டும்? அதுவும் ஒரு பள்ளியில் காலை 6 மணியிலருந்து  8 மணிவரை பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களும் 8 மணியிலருந்து  4 மணிவரை பதினொன்றாம் வகுப்பு பாடங்களும் பின்பு மாலை 4கிலிருந்து 6 மணி வரை பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்கள் என்று அடுத்த வருட பாடத்தை முன்கூட்டியே நடத்துகிறார்களாம். என்ன கொடுமை இது?

ஏன் யாருக்கும் மாநகராட்சி பள்ளியே நினைவிற்கு வர மாட்டேன் என்கிறது? அவ்வளவு கேவலமாக போய்விட்டதா? தற்காலத்தில் அங்கு மட்டுமே முழுக்க முழுக்க மாணவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து மூளையில் அனைத்தையும் திணிக்காமல் பாடங்கள் நடத்தபடுகிறது. குழந்தைத்தனத்துடன் குழந்தைகளை அங்கே தான் அதிகமாக பார்க்கமுடிகிறது. ஒரே ஒரு பின்னடைவு மட்டுமே. ஆங்கில அறிவு! அது அவசியமா இல்லையா என்ற மிகப்பெரிய சர்ச்சைக்குள் போகாமல் அவற்றை ஸ்போகன் இங்கிலீஷ் மூலமா கூட சரி பண்ணிடலாமே. யோசிங்க பெற்றோர்களே யோசிங்க...
----------------------------------------------------------------------------------------------------------------
நான் மகான் அல்ல பார்த்தேன். திரைக்கதை நேர்த்தி இருந்தா எதையும் ரசிக்க முடியுது. வன்முறைய கூட!. மாணவர்களை முக்கியமா அரசு கலைக்கல்லூரி மாணவர்களை அவ்வாறு காண்பித்து இயக்குனர் எதுக்காக தன்னை திருப்திபடுத்திகிட்டாருன்னு தெரியல. கொஞ்சம் வன்முறைய குறைச்சிருக்கலாம்.

காஜல் அகர்வாலுக்காகவே படத்துக்கு போனேன். இரண்டாம் பாதியில சரியா காண்பிக்கவே இல்லை :( ரொம்ப ஏமாத்தமா போச்சு. (இதுக்கு மேல இந்த படத்தை பத்தி பேசினா பஸ்ல கும்மின மாதிரி இங்க கும்ம வாய்ப்பிருக்கிறனால எஸ்கேப்ப்ப்ப்ப்)
-----------------------------------------------------------------------------------------------------------------
பதிவர்கள் கலந்து கொண்ட நீயா நானா பார்த்தேன். டெக்னாலிஜினால இரவு முழுக்க சாட்டிங்ல இருந்துட்டு தூக்கம் கெட்டு, படிப்பு கெட்டு தன்னை சார்ந்தவங்களையும் கெடுத்துகிறாங்கன்னு நிறைய பேர் சொன்னாங்க. எனக்கும் ஆமாம்னு தான் தோணுச்சு.  இதைப் பத்தி இன்னொரு பதிவரோட ரொம்ப காரசாரமா  இரவு ஒரு மணி வரை சாட்டிங்ல வாதாடி அவரையும் இது உண்மைன்னு ஒத்துக்க வச்சேன்.

அங்கு வந்த எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் மிக அழகா இணையத்தை ஒரு வரைமுறைக்கு கொண்டு வருவதை பத்தி எடுத்துரைத்தார். அவருக்கு போட்டியா வந்திருந்த சாம்சங் "மாணிக்கராஜ்" "வாலப்பல தோளை கீழ ஏன் போடுறாங்கன்ற ஆதங்கத்தை கூட நெட்ல,ப்ளாக்ல பதியலாம்" "தமிள் Resources இன்னும் அதிகமா வரும்காலங்கல்ல வரும்"னு அவரும் அலகா பேசினார்.

கலந்து கொண்ட பதிவர்கள அனைவருக்கும் வாழ்த்துகள்.
-----------------------------------------------------------------------------------------------------------------
தெரியாமல் காலை மிதித்த சேட்டன் 'ஸாரி" என்றார். "பரவாயில்லை" என கூறினேன். "அப்ப இன்னொரு தடவை மிதிச்சுக்கிறேன்" என்று இன்னொரு தடவை மிதித்து விட்டு, ஆள்காட்டி விரலை கொக்கி போல் மேலும் கீழும் வளைத்து ஒழுங்கு காட்டியபடி சென்றார் சேட்டன்.

அடுத்த நாள் அவர் காலை மிதித்து நான் "ஸாரி" என்றேன் "!@(*$&^@( (#*$&$^" என்றார் சேட்டன். "ஸேம் டூ யூ" என்றபடி நகர்ந்தேன். 

காலை எழுந்தவுடன் "பல்லு விளக்கியே தீரனுமா" என்றார் சேட்டன். சிங்கமெல்லாம் பல்லா விளக்குது என்றேன். வெக்கப்பட்டு சிரித்தபடி சாப்பிட கேண்டீனுக்குள் ஓடினார் சேட்டன். 

இப்பெல்லாம் அடிக்கடி இரவு கனவுல நீ வந்து தொல்லை கொடுக்குற என்றார் சேட்டன். இனி எனக்காக வாங்கி வச்ச சரக்கை அடிச்சுட்டு தூங்காத சேட்டா என்றேன். தெரிஞ்சுடுச்சா என கன்னத்தை கிள்ளியபடி ஓடினார் சேட்டன். 
ஆளாளுக்கு நிறைய அப்டேட்ஸ் போடுறாங்கப்பா. இனி நானும் 'சேட்டன் அப்டேட்ஸ்' போடலாம்னு இருக்கேன். சாம்பிள்ஸ் ஓக்கேவா?
Related Posts with Thumbnails