புனைவு எழுதுவது எப்படி?

”என்னை எப்படித் தெரியும்?” என்ற முதல் கேள்விக்கு ”அடுத்த ஜென்மத்துல உனக்கு ரொம்ப நெருக்கமானவளா இருக்கப் போறேன். அதற்காக இந்த ஜென்மத்துல சும்மா உன்கிட்ட இண்ட்ரோ பண்ணிக்கலாம்னு வந்தேன்” உடன் ஸ்மைலியோடு அந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. உரையாடல் பெட்டியில் அந்த பொம்மை என்னை கேலியோடு சிரிப்பது போல் இருந்தது. தொடர்ந்து :))))))))))))))) வந்துகொண்டே இருந்தது. அப்’ புறம் சிரிக்கிறாள் போல. கலகலவென்று சிரிக்கிறாளோ? இல்லை இந்த 12.30 இந்திய மணிக்கு யாரேனும் எழக்கூடும் என உணர்வில் வாயைப் பொத்தி சிரிக்கக்கூடும். நானும் சிரித்தேன். அது பெண் தான் எனவும் அவள் இந்தியாவில் தான் இருக்கிறாள் எனவும் வெறும் முதல் கேள்வியில் எப்படி என்னால் உறுதியாக நினைக்கமுடிந்தது? சிரிக்கிறேன். பதிலுக்கு நானும் :))))))))))))))))) இடுகிறேன். சேட்டன் சிரிப்பின் ஒலியினால் கணைப்புடன் புரண்டு படுக்கிறார்.

”நீ ஏன் சிரிக்கிற?” என்று அழகுத்தமிழில் வார்த்தை பெட்டியில் விழுந்தது. ”நீ எப்படி சிரிப்பன்னு நினைச்சுப் பார்த்தேன்”

“அதுக்கேன் நீ சிரிக்கிற? நீ என்ன லூசா?”

”கூடிய சீக்கிரம் ஆகிடுவேன்”. அப்படித்தான் இருந்தது. மூன்று முறை மடல் அனுப்பியிருந்தாள். உடன் பிறந்த சோம்பேறித்தனம் எந்த மடலையும் பார்க்க விட வில்லை. வெக்கையும் வேலையும் உடம்பை இரண்டாக கிழிந்திருந்தது.  நண்பர்களுடன் மனம் விட்டு உரையாடி நாட்கள் பல ஆகின்றன. மனம் முழுவதும் வெப்பமாக இருப்பதாகவே தோன்றியது. பியர் பாட்டிலுடன் நேற்று தான் அனைத்து மடல்களையும் படிக்க தொடங்கினேன். அவளா? அவனா? எனத்தெரியாத ஒரு பொதுவான மடல். முதல் மடலில் பொதுவாக நன்றாக எழுதுவதாகவும்  ஏன் இப்போதெல்லாம் எழுதுவதில்லை எனவும் கேட்டிருந்தாள்/ன். இரண்டாவது மடலில் ”பிசியா?” என்ற ஒற்றை வார்த்தையோடு நிறுத்தியிருந்தாள்/ன். மூன்றாவது மடலில் “ஐயா ரிப்ளே அனுப்ப மாட்டீகளோ?”ன்றருந்தது. வழக்கம் போல் பதில் எதுவும் அனுப்பாமல் இருந்தேன்.

நேற்று இரவு நான்காவது மடலும் வந்தது. ”டேய் பிசாசே மெயில் அனுப்பினா ரிப்ளே பண்ண மாட்டயா? ஒழுங்கா ரிப்ளே பண்ணு. அப்படியே சாட் ரிக்வெஸ்டும் அக்ஸெப்ட் பண்ணிக்கோ. இல்லைன்னா மூக்கு மேல குத்துவேன் :)”. அனைவரும் விலகி இருப்பதாக நினைத்து இருந்ததில் இவளின் நெருக்கமான மடல் என் வெப்பத்தை குறைத்தது. உடனே அவளின் உரையாடல் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அவளும் ஆன்லைனில் இருந்தாள். யார் முதலில் அழைப்பது என்ற இருவருக்குமான போட்டியில் நானே தோற்றேன். சில நொடிகள் அமைத்திக்கு பிறகு  ”என்னை எப்படித் தெரியும்?” என்றேன். பின் நடந்தது தான் முதல் பத்தி.

டுத்தநாள் அலுவலக ரிசப்ஷனிஸ்ட் புருவங்களையும், இடையே க்ளைண்ட் மீட்டிங்கில் வந்த பெண் சிவில் இன்ஜினியர் வழு வழுப்பான கன்னங்களையும்,  மதிய உணவு இடைவேளையில் தொலைக்காட்சியில் கண்ட சிநேகாவின் கண்களையும் ஹலோ எப் எம் தொகுப்பாளினி குரலையும் இடையிடையே கண்ட அரபுப்பெண்களின் அங்கங்களும் என கூட்டாக சேர்த்து அந்த சிநேகிதிக்கு உருவம் கொடுத்திருந்தேன்.  இப்போது எப்படி சிரித்திருப்பாள் என யோசித்துப்பார்த்தேன். மிக அழகாக இருந்தாள்.

இன்று மாலை   பச்சை நிறத்தில் உரையாடியில் வந்தேன். வந்ததும் “ம்” என்ன வார்த்தை அவளிடம் இருந்து உடனே வந்தது.

என்ன ‘ம்’?

“ஹாய்”

“ஹாய்”

”நீ எப்படி புனைவு எழுதுற? என்றாள்.

”நான் என்னைக்கு புனைவு எழுதினேன்? எனக்கு மொக்கையை தவிர ஒன்னுமே தெரியாதே!”

“இல்ல ஒன்னுரெண்டு பார்த்தேன். நல்லாயிருந்தது. எப்படி அதெல்லாம் எழுதுற?”

 எனக்குள் இருந்த கதநாயகன் உச்சத்தில் ஏறினான். “புனைவுகளும் குழந்தைகள் மாதிரி தான். ஆனா தானா பிறக்கும்” கதாநாயகன் உளறினான்.

“புனைவுகள் பிறக்குமா? எப்படி?”

“உன்னை சுத்தி இருக்குறதை இப்ப வரைய சொன்னா வரைவையா?” கதநாயகனுக்கு என்ன பேசுகிறோம் என்றே தெரியவில்லை. தன்னிடம் மாட்டிக்கொண்ட நாயகியை கவர ஏதேதோ உளறினான்.

“ம்ம் வரைவேனே..... ஆனா அச்சு அசலா எனக்கு வரைய தெரியாதே...இப்ப வரைஞ்சா அலங்கோலமா இருக்குமே!” கொஞ்சினாள்.


 ”ம்ம் அது தான் புனைவு”

“அட.. அப்படியா?!” ஆச்சர்யப்பட்டாள். கதாநாயகனுக்கு ஒரு அணையை கட்டிமுடித்த பெருமிதம் வந்தது.

“எனக்கு அது அப்படின்னு ஏதாவது இப்ப எழுதி காண்பியேன்”

“கண்டிப்பா நாளை எழுதிட்டு அனுப்புறேன்” கதாநாயகன்

நெடுநேர ‘ம்’ அமைதிக்கு பிறகு. ”உனக்கு என்னை பிடிச்சிருக்கா?” என்றாள்.

கேள்வியின் தோரணை பல படிமங்களை கொண்டிருப்பதால் கதாநாயகனை விரட்டினேன். அவன் இதற்கு மேல் இருந்தால் என் வாழ்க்கையையே நாடகமாக்க வாய்ப்புண்டு.

சிரிப்பான் ஒன்றை பதிலளித்தேன்.

”என் கூட பேசனுமா?” என்றாள்.


அவளின் கற்பனை குரலான ஹலோ எப்.எம் தொகுப்பாளினியின் குரல் மிகவும் பிடிந்திருந்தது. அதை மாற்ற மனமில்லாம்ல் சிரிப்பானையே இதற்கும் பதிலளித்தேன். என்ன நினைத்திருப்பாள் என தெரியவில்லை. ஜிமெயிலின் வாய்ஸ் சேட்டில் திடீரென அழைத்துவிட்டாள்.

எடுத்தேன்.

முதல் இரண்டு நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. அவளும். பின்பு சிரித்தாள். என்னவொரு சிரிப்பு! நாளை முதல் அந்த ஹலோ எப் எம் கேட்பதில்லை என முடிவெடுத்தேன். நிற்க போகிற மழை போல் மெது மெதுவாக அமைதியானாள். இன்னும் சிரிப்பு வருகிறது போல. அடக்கி கொண்டே பேசுகிறாள். “எப்படிடா செல்லம் இருக்க?”

சிரித்தேன். ”அடுத்த ஜென்மம் என்றாயே? அதை பொய்யாக்கிவிடு. இப்பவே உன்னை பார்க்கனும்.” என்றேன்

சிரித்தாள் ”ம்ம்ம்ம்... ஆசை தோசை”

“ஏன் முடியாதா?”

“ச்சீ போ. நான் கட் பண்ண போறேன்”

”ஏஏஎய்ய்ய் உன் பேர் சொல்லாம போற?”

”ம்ம்ம்ம்ம் ராட்சஷி “ என சிரித்து உரையாடலை அணைத்தது தேவதை.

ன்று  எனக்கு புனைவு எழுத தெரியாது என இந்தப் பதிவை படித்து தெரிந்து கொள்ளட்டும் அந்த ராட்சஷி.
Related Posts with Thumbnails