தி கிங் (சல்மான்)கான்

ஒருநாளில் எத்தனை பேருக்கு பாடம் எடுக்க முடியும்?  100? 200? 500? ஆனால் கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு மேல் பாடம் எடுக்கிறார் கலிபோர்னியாவில் வசிக்கும் 33 வயது இளைஞர் சல்மான் கான். நேரில் அல்ல.  கணினி மூலமாக. இவரைப் பற்றி இணையத்தில் புழங்கும் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். khan academy என்ற பெயரில் ஒரு சிறிய கல்வி கூடமே இணையத்தில் இலவசமாக நடத்துகிறார். இவரது முயற்சியால் மாதம் 10 லட்சம் மாணாக்கர்கள் பயன் பெறுவதாக கூறப்படுகிறது. (10 லட்சத்தில் ஒருவன் ஹி ஹி)


1+1=2 என்பதில் இருந்து தொடங்கி laplace transform வரை, மிக எளிமையாக படிக்கும் மாணவனின் மனநிலைக்கு வந்து சொல்லி கொடுக்கும் விதம் மாணவனை பாடத்தோடு ஒன்றச்செய்கிறது. வியாபாரமாகி போன கல்விச்சூழலில் இலவசமாக மாணவர்களுக்கு இவர் செய்து வரும் தொண்டு விலைமதிக்க முடியாதது. அதற்கான அவர் உழைப்பு ஆச்சர்யப்படவைக்கிறது.

இதுவரை 1400 காணொளிகள் பாடங்களாக இவர் கொடுத்திருக்கிறார்.
இவரின் எளிமையான பாடங்களை  youtube வாயிலாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து பயன்பெறுகிறார்கள்.

அனைத்து ஆசிரியர்களும் அனைத்து மாணவர்களுக்கு தெளிவாக புரியவைக்கமுடியவதில்லை. ஆதலால் கல்லூரியில் பாடத்தை கவனித்த பின் அதை இங்கே காணொளி மூலமாக காணும் போது இன்னும் தெளிவாவதாக மாணவர்கள் கூறியுள்ளனர். 10 நிமிட காணொளியில் சிறிய சிறிய சந்தேகங்கள் கூட நாம் கேட்காமலயே தெளிவாக்கி விடுகிறார்

தன் 33 வயதிற்குள் B.S in mathematics, B.S in electrical engineering, B.S in computer science, M.S. in electrical engineering, M.S in  computer science மற்றும் MBA வரை படித்திருக்கும் இவர் நான்கு வருடங்களுக்கு முன் தன் உறவினரின் குழந்தை கணக்கு பாடம் மிகவும் கடினமாக இருப்பதாக கூற, அக்குழந்தைக்கு கணக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தவர் தான்...... அதன் மூலம் கிடைத்த ஆதரவுகள் மற்றும் கடிதங்கள் அவரை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. வெறும் கணக்கு பாடத்திற்கு மட்டும் மாதம் கட்டணங்களை உருவும் ஆசிரியர்களுக்கிடையே இவர் இலவசமாக கற்றுக்கொடுக்க தொட்டிருக்கும் பாடங்களை பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. Algebra, biology, physics, history, chemistry, linear algebra, trigonometry, arithmetic, pre calculus, statistics, geometry, probability, calculus, brain teasers, current economics, banking and money, finance, physics, differential equation இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

எலக்ட்ரானிக் கரும்பலகை மூலம் இவர் நம் தோள்களுக்கு பின்னே பாடத்தை நடத்துவது ஒன்றும் இணைய உலகிற்கு புதிதானது அல்லவே. ஆனால் மாணவரை தன் பக்கம் ஈர்த்து பாடத்தின் மீது கவனம் கொண்டு வர இவர் செய்யும் எளிமையான வழிமுறைகளை கண்டு பல பல்கலை கழகங்களே மூக்கின் மேல் விரலை வைக்கின்றன.  பல பல்கலை கழகங்களும், கல்லூரிகளும் மாணவர்களுக்காக இவரை உரையாற்ற அழைத்துள்ளனர்.

யூடியூப் தளம் கொடுத்துள்ள வெறும் 10 நிமிடங்களில் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு எளிமையாக கற்றுக்கொடுப்பது சவாலாக இருப்பதாக கூறும் இவர், வகுப்பறையில் மாணவர்களை திசைதிருப்பாமல் பாடம் எடுப்பதை போலவே இதுவும் கடினம் என்கிறார். ஆசிரியர் பணியை மிகவும் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார். மேலும் ஆப்ரிக்க கண்டங்களில் இணைய வசதி கூட இல்லாத கிராமங்களுக்கு கல்வியறிவு அளிக்க சென்ற குழுக்களுக்கு மிகவும் உதவி புரிந்துள்ளார்.இந்தியா,ஆப்பிரிக்கா,அமெரிக்கா,வளைகுடா,இங்கிலாந்து என உலகம் முழுவதும் விரிந்துள்ள இவருடைய மாணவர்கள் இவரை தலையில் வைத்து கொண்டாடாத குறையாக பேட்டிகளும், பின்னூட்டங்களும் கொடுத்துள்ளனர். வகுப்பறையில் கேள்வி கேட்க கூச்சப்படும் பல மாணவர்கள் இவரது தளத்திற்கு உடனடியாக சென்று தங்களின் சந்தேகங்களை தீர்த்து கொள்கின்றனர். மைக்ரோசாஃட் இவருக்கு Microsoft education award (tech) கொடுத்துள்ளது. இவர் ஒரு இந்திய வம்சாவளியாக இருப்பது கொஞ்சம் நமக்கு பெருமையளிக்க கூடியதாகவும் உள்ளது.

இது இவரின் தளம்

CNN-ல் சல்மான் கான்


அவரது தளத்தை தெரிந்த மாணாக்கர்களுக்கு தெரிவியுங்கள். பயனடையட்டும்.
Related Posts with Thumbnails