ஒய் ப்ளட்?...சேம் ப்ளட்

இந்தப்பக்கம் அப்துல்கலாம் “கனவு காண்”ன்னு சொல்லி சிரிக்கிறார். அந்த பக்கம் பில்கேட்ஸ் “நீ ஜெயிக்கலைன்னா வேறு யாரு கண்ணு ஜெயிக்கா போறா?”ன்னு சொல்லி சிரிக்கிற போட்டோ, அப்படியே லெப்ட் பக்கமா திரும்பினா கையில கிடாரோட லஷ்மியும் அம்புலி மாமா விநாயகரும் சிரிச்சுகிட்டே இருக்க, அப்படியே மேலாப்ல பார்த்தா நம்ம முருகன் “யாமிருக்க பயமேன்”ன்னு சும்மா மயிலு மேல உட்கார்ந்துகிட்டு சிரிச்சுகிட்டுருக்கார், அப்படியே கவனத்தை திருப்பி  இங்கிலீஷ் புத்தகத்து மேல கண்ணை வச்சோம்னா மட்டும் சும்மா தூக்கம் சொக்கிட்டு வரும்.

ஒன்னாப்பு படிக்கிறதுல இருந்து பத்தாவது படிக்கிற வரைக்கும் ஆங்கிலம்னாலே ‘ஆ’ன்னு வாயப்பிளக்குற விசயமாவே இருந்துச்சு (எவன் டா அது இப்பவும் அப்படி தானேன்றது? ராஸ்கல் பிச்சு புடுவேன் பிச்சு). ஐஞ்சாவதோ ஆறாவதோ  படிக்கும் போது தான் அந்த சம்பவம் நடந்துச்சு. ஒரு கேள்விக்கு விடை தெரியாம முழிக்காத அட்லீஸ் தெரிஞ்ச கேள்வி பதிலாவது எழுதிட்டு வான்னு அக்கா அட்வைஸ் பண்ணினாங்க.

அக்கா சொன்ன மாதிரி ஒரு கேள்விக்கும் விடை தெரியில. அக்கா சொல்லிகொடுத்ததும் மறந்து போச்சு. அப்புறம்  “what is your name?" "how old are you?" "what is your father?"ன்னு  தெரிஞ்ச கேள்வி பதிலை எழுதி வச்சுட்டு வந்தேன். அப்பவே அக்கா சொல்லிட்டாங்க இங்கிலாந்து சரஸ்வதியே உன் நாக்குல எழுதினாலும் உனக்கு இங்கிலீஷ் வராதுடா தம்பின்னு. பத்தாவது வரைக்கும் அது தொடந்துச்சு.

அதுக்கேத்த மாதிரி என் வீட்ல யாரும் என்னைய படின்னு வற்புறுத்தியதே இல்ல. அம்மா எப்பவும் “படிக்கிற புள்ளை எங்கிருந்தாலும் படிக்கும், நான் சொல்லி தான் படிக்க போகுதா?”ன்னு எப்பவும் படின்னு சொல்லியதில்லை. பன்னிரண்டாவது எக்ஸாம் டைம்ல கூட சீரியல் ஓடிச்சு வீட்ல. அப்பா “ நீ படிக்க விருப்பமில்லைன்னு சொன்னா ஏதாவது மெக்கானிக்கல் ஷாப்ல சேர்த்திடலாம். தொழிலாவது கத்துகிடுவ”னு சொல்லிட்டாரு. ஸ்கூல்ல சுத்தம்.......... மாணவர்கள் வந்திருகாங்களா இல்லையான்னும் பார்க்கிறது கிடையாது. எப்ப வேணா போகலாம் எப்ப வேணா வரலாம். ஒரு சில வாத்தியார் வருவாங்க. மாநகராட்சி பள்ளிகூடம் அப்ப கொஞ்சம் மோசமான நிலைமையில இருந்துச்சு.

பத்தாவது வரைக்கும் எப்ப படிச்சேன்னு எனக்கு ஞாபகமே இல்லை. மதியம் 1 மணி வரை பள்ளிகூடம். அப்புறம் மூனு மணியில இருந்து எட்டு மணி வரை ஒரு இடத்துல வேலை. ஏதோ அப்பப்ப படிச்சாலும் இந்த இங்கிலீஷ் பாடம் மட்டும் சுத்தமா மண்டையில ஏறல. அப்ப தான் அப்பா ஒரு ஐடியா சொன்னாரு.

தீபம்

”சப்பளங்கால் போட்டு தியானம் பண்ற மாதிரி உட்கார்ந்து கிட்டு இந்த விளக்கை கொஞ்ச நேரம் பாரு. அப்புறம் கண்ணை மூடு. ஆனா உன் மனசுக்குள்ள அந்த விளக்கு எரியிறது தெரியனும். அப்படி எரியிறது கொஞ்சம் நேரத்துல அணைஞ்சுட்டா திரும்பவும் கண்ணை திறந்திட்டு உத்துப்பாரு. கொஞ்சநாள்ல மனசு ஒருநிலைப்படும். படிச்சது மனசுல நிக்கும்”. முதல்ல சிம்ரன், ரம்பா அணைஞ்சு எரிஞ்சு வந்தாலும்  அப்புறம் ஆச்சர்யம்!. இது வொர்கவுட் ஆச்சு. கொஞ்சமே படிச்சாலும் மனசுல பச்சக்குன்னு ஒட்டிகிச்சு. 

ரம்பத்திலேயே படிக்காம கடைசி நேரம் எக்ஸாம் டைம்ல நாம பண்ற அலப்பறைகளும் கொஞ்ச நஞ்சமல்ல... வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருக்கப்ப தான் நாமும் சத்தம் போட்டு ”if u put a rice on the terrace thousand crow will come....♫ if u put a rice...♫ if u putttt a rice...♫ if u puttu ♫” ன்னு  ராகத்தோட இழுத்து இழுத்து பாடிகிட்டே படிக்கும் போது (ராஸ்கல்ஸ்ஸ்ஸ் இதுக்கெல்லாம அர்த்தம் கேட்பீங்க? ஓட்டுல சோத்தப்போட்டா ஆயிரம் காக்கான்னு சொன்னேன்) “பரவாயில்லையே பையன் படிக்கிறான் போலயே! நல்லா படிப்பா தம்பி.... இப்பெல்லாம் படிப்பு தான் எல்லாம்.....”ன்னு ஏதேதோ உளறிட்டு பெரிசானா கலெக்டர் வேலை வாங்கி தரேன்னு அம்மாகிட்ட உறுதிமொழி செஞ்சுட்டு போவாங்க.

நாலு மணிக்கு எழுப்பலைன்னா அப்புறம் உனக்கு நான் பிள்ளையும் இல்ல நீ அம்மாவும் இல்லன்னு பத்து மணிக்கு தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாம வீராப்பா சொல்லிட்டு படுப்போம். மத்தவீட்ல எப்படின்னு தெரியாது. எங்கம்மா க்ரெக்டா நாலுமணிக்கு கையில ஒரு டம்ளரோட வந்து “சுளீர்”னு தண்ணிய என் முகத்துல தெளிச்சுட்டு....... “எழுந்திருச்சு படிடா தம்பி”னு சொல்லிட்டு அவங்க தூங்க ஆரம்பிச்சுடுவாங்க.

ஆரம்பத்துல உட்கார்ந்து படிச்சாலும், கொஞ்சம் கொஞ்சமா தூக்கம் வர ஆரம்பிச்சு, பணக்கார சினிமா ஹீரோயின்  கட்டில்ல குப்பறபடுத்துகிட்டு கால ஆட்டிகிட்டு கன்னுத்துல கையை வச்சுகிட்டு ஹீரோவை நினைக்குமே? அந்த பொஸிஷனுக்கு வந்திடுவேன். அப்புறம் கன்னத்துல இருக்குற கை தரைக்கு வந்திடும். ஆடிகிட்டு இருந்த காலும் தரைக்கு வந்திடும். அப்புறம் குப்பறபடுத்து நல்லா தூங்குவேன். அப்பவே குறட்டை விடுவேன் போல சரியா அம்மா பத்து நிமிசத்துல அதே டம்ளர்ல இருக்குற தண்ணியோட முகத்துல தெளிச்சு “தூங்காம படிடா தம்பி”ன்னு சொல்லிட்டு மறுபடியும் தூங்க ஆரம்பிச்சுடுவாங்க. (ஒரு நாள் தூங்காம படிச்சுகிட்டு இருந்தப்ப அம்மா ஒவ்வொரு 15 நிமிசத்துக்கும் முழிச்சு டம்ளரை கையெலெடுத்து தண்ணியை என் மேல தெளிக்க ரெடியாகுறாங்கன்றது அப்ப தான் தெரிஞ்சது!)

என்ன தான் படிக்காம பரிட்சைக்கு போனாலும் காப்பி அடிக்க மட்டும் மனசே வரல. மத்த பாடத்தையெல்லாம் அழகா எழுதிட்டு ஆங்கிலத்துல திக்கி திணறி  எக்ஸாம் முடிச்சேன்.

பரிட்சையெல்லாம் முடிஞ்சி அடிக்கடி தூங்கிட்டு எழுந்திருக்கும் போது, தீடீர்னு பத்திரிக்கையாளர்கள் எல்லாம் வந்து “நீங்க ஸ்டேட் பர்ஸ்ட் எடுத்ததுக்கு யார் காரணம்?”ன்னு கேட்குற மாதிரியெல்லாம் அடிக்கடி நினைச்சுப் பார்க்கிறப்ப தான் அம்மா அன்னைக்கு ஒரே ஒரு கேள்வி கேட்டாங்க. “ஏன்டா தம்பி அக்கா நோட்டெல்லாம் எடைக்கு போடுறேன். நீ பாஸாவையா? பெயிலாவையா? உன் நோட்டை போடட்டுமா வேணாமா?”ன்னு. 

ப்படியோ பத்தாப்புல பள்ளிகூடத்துல முதல் ஐஞ்சு இடத்துல வந்து பதினொன்னாம் வகுப்பு வேற பள்ளிகூடத்துல இங்கிலீஷ் மீடியத்துல சேர்த்துவிட்டாங்க. ஒரே வாரம் தான் போயிருப்பேன். புத்தகத்தை எல்லாம் பார்த்துட்டு பயந்து போகவே மாட்டேன் கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன். அம்மாவும் அப்பாவும் அப்பவும் நிதானம் இழக்காம சொன்னார் “உன்னால படிக்க முடியலைன்னாலும் சும்மா போ. பீஸ் கட்டியாச்சு. உன்னையாரும் படிக்க சொல்லல. கட்டின பீசுக்காக ஒரு வருசம் சும்மா போயிட்டு வாயேன்”.(cool dad!)

நல்ல ஐடியாவே இருக்கேன்னு போக ஆரம்பிச்சேன்.ஆனா போன பொறவு தான் தெரிஞ்சது நான் தான் வெளிப்படையா அழுதிருக்கேன். பல பயலுவ பாத்ரூம்ல குழாயை திறந்துவிட்டுகிட்டு அழுதிட்டு இருக்கானுவன்னு. அதுவும் கணக்கு வாத்தியார்கிட்டயும் தமிழ் வாத்தியாகர்கிட்டயும் பசங்க அடிவாங்குறதை நினைச்சா செம காமெடியா இருக்கும். தமிழ் வாத்தியார் மனப்பாடச்செய்யுள் ஒவ்வொரு வரியையும் படிச்சு திரும்ப சொல்லச்சொல்லி அடிப்பாரு. பயபுள்ளைங்களுக்கு தமிழ் செய்யுளே படிக்க வரல!

ஒரு கட்டத்துல தான் அந்த ஆச்சர்யம் நடந்துச்சு..... தேர்வு அறையில நான் எழுதுற பேப்பர நாலு பசங்களாவது வாங்கி எழுத ஆரம்பிச்சாங்க. அடப்பாவிகளா என் பேப்பரையே பார்த்து எழுதுறதுக்கு நாலு பேரா? கண்ல தண்ணியே வந்திடுச்சு. அம்மாகிட்ட கூட பெருமையா சொன்னேன். அம்மாகூட ’ஆத்துல போற தண்ணிய அய்யா குடி அம்மா குடி’ மாதிரி போனா போகுது கொடுடா தம்பின்னாங்க.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரைக்கும் மத்த பசங்களுக்கு பேப்பர் கொடுத்து ஹெல்ப்(?) பண்றதை பழக்கமா வச்சிருந்தேன். படம் நல்லா வரைவேன்றதால சில பேருக்கு தேர்வு அறையில அவங்க பேப்பரை வாங்கி படம் கூட வரைஞ்சு கொடுத்திருக்கேன். 

அதே மாதிரி எக்ஸாம்.... அதே விளக்கு, ராகத்தோட மனப்பாடம், காலையில நாலு மணிக்கு தண்ணிதெளிச்சு எழுப்பி விடுற அம்மா.......... ஒரு வழியா பன்னிரெண்டாம் வகுப்பும் முடிஞ்சது. இந்த தடவையும் காப்பி அடிக்க மனசு வரல. மனசு வரலைன்றதை விட அதற்குண்டான வாய்ப்பை கொடுக்கல.

ரிசல்ட் வருவதற்கு முன்தினம் இரவு அம்மாகிட்ட “மேல இன்ஜியரிங் படிக்கனும்மா. கோயமுத்தூர்க பிஎஸ்ஜி’ன்னு ஒரு காலேஜ். டூர் போனப்ப பார்த்தேன். அங்க படிக்கனும்மா. அப்புறம் அண்ணா யுனிவர்சிட்டியில எம்.ஈ படிக்கனும்மா.... ”ன்னு இன்னும் நிறைய சொல்லிகொண்டே இருந்த ஞாபகம். இடைமறித்து அம்மா ஒரு கேள்வி கேட்டது இப்பவும் ஞாபகம் இருக்கிறது. 

”அப்ப உண்மையாலும் பாசாகிடுவயாடா தம்பி?”. 


 என்னது காலேஜ்ல எப்படி படிச்சயா?
அட போங்க பாஸ் போங்க... காலேஜ்லயாவது படிக்கிறதாவது... மரத்துல ஏறுமா நாய் நின்னுகிட்டு வேடிக்கை பார்க்குமா பேய் (பழமொழிக்கெல்லாம் அர்த்தம் கேட்டு பின்னூட்டம் போடுபவர்கள் அக்கௌவுண்ட் நம்பருக்கு 1000 ரூவா அனுப்பி வைக்கவும்)

------------------------------------------------------------------------------------------------------------- 

தனிப்பட்ட ஆணி இருந்து பதிவே போட முடியாம இருக்குறப்ப இப்படி ஒரு அருமையான தேர்வு பற்றிய தொடர் பதிவு வாய்ப்பைக் கொடுத்த சந்தனமுல்லைக்கு நன்றி. 

இதைத்தொடர நான் அழைப்பது

நான் இன்னும் பதிவர் தான்பா - பஞ்சாமிர்தம்

ஒவ்வொரு தடவையும் கொஞ்சம் இடைவெளி விட்டு எழுதாம இருக்கும் போதும் ஏதாவது ரசிகர்களும், (முக்கியமாக) ரசிகைகளும், எங்க உங்க போஸ்ட்?  இன்னும் ஏன் எழுதல? உங்க எழுத்தை படிக்காம பைத்தியம் பிடிச்சமாதிரி இருக்கு! அப்படின்னு ஒரு கடுதாசியாவது வரும்னு பார்க்கிறேன்...ம்ஹூம். சரி இப்படி எதுவும் நடக்கலைனாலும் பரவாயில்ல, கொஞ்ச நாள் எழுதாம விட்டா நீங்களும் பதிவரா?னும், எங்கயாவது கமெண்ட் போட்டா நீங்க புது பதிவரா?ன்னு கேட்க ஆரம்பிச்சுடுறாங்க :(  நடுவுல சங்கம் வேற ஆரம்பிக்கிறதா பேச்சு வந்திருக்கு. ஆக்டிவா இல்லைன்னா பின்னால சங்கம் ஆரம்பிச்சாலும் சேர்க்க மாட்டாங்க. அதுனால........

ss

கால் ஆட்டிகிட்டே தூங்கறத போல இனிமே இந்த மாதிரி ஒன்னுத்துக்கும் உதவாத பதிவா ஒன்னுரெண்டாவது போடனும். இல்லைன்னா நீ பதிவரா?ன்னு ஒட்டுமொத்த பதிவுலகமும் கேட்க ஆரம்பிச்சிரும்.
-------------------------------------------------------------------------------------------------------------
வழக்கம் போல் சுறா படத்தை முதல் நாளாக பார்த்தாயிற்று. சார்ஜா திரையரங்கத்தில் உள்ள ஒரு வசதி தமிழ்நாட்டு திரையரங்களை போலவே விசில் சத்தமும், ’டைமிங் கமெண்ட்’ சரளமாக வரும். திரையரங்கு உரிமையாளர்கள் எதுவும் கண்டுகொள்ளவதில்லை. அவ்வாறு மட்டும் இல்லையென்றால் “வேட்டைகாரன், வில்லு, அசல், ஆதவன், கந்தசாமி, விண்ணை தாண்டி வருவாயா” இப்போது சுறா என தொடந்து மொக்கைபடங்களை இரண்டரை மணி நேரம் பார்க்க முடியாது. அதுவும் இந்த தடவை சுறாவிற்கு வந்த டைமிங் கமெண்ட்களை கேட்டு சிரித்து சிரித்து வயிறு வலித்தது. நல்ல டைம் பாஸ்.

”என் மக்களுக்கு வீடு கட்டி தரனும்”னு விஜய் சொல்லும் போதே அது தான் க்ளைமாக்ஸாக இருக்கும்னு தெரியாதவன் தமிழனாக இருக்கவே முடியாது. சரியாக அந்த நேரத்தில் “இப்பவே தியேட்டர்ல இருக்குறவங்க எல்லாரும் காசு கொடுத்து அந்த வீடை கட்டி கொடுக்குறோம் படத்தை இதோட முடிச்சிரு” என்று எவனோ கத்த, தியேட்டரில் சிரிப்பலை அடங்க நேரமானது. அதுவும் கலெக்டர் “எரிமலை மாதிரி உட்கார்ந்து இருக்கான் பாரு”ன்னு பேசும் இடத்தில் தியேட்டரே சிரித்து சிரித்து அடுத்தடுத்த டயலாக் சுத்தமாக கேட்கவே இல்லை. 

அவ்வளவு நேரம் பொறுமையாக பார்த்ததற்கு கடைசி பாட்டு “பஞ்சாமிர்தம்”

விஜயோட அடுத்த படம் மலையாளம் படத்தோட ரீமேக்ன்னு கேள்விபட்டேன். தீலீபன் நடிச்சு வெளிவந்த ’பாடிகாட்’ படம் ‘காவல்காரன்’னா வெளிவர போகுதுன்னு விஜய் ரசிகர்கள் சொல்லிக்கிறாங்க. கண்டிப்பா இந்த ஹிட் ஆக சான்ஸ் இருக்கு (அதே நயன் தாராவை மட்டும் கதாநாயகியா இல்லாம இருந்தா கண்டிப்பா ஹிட் தான்). அந்த படம் ரொம்ப சூப்பர்னெல்லாம் இல்ல. ஆனால் விஜய்கு கண்டிப்பா பொருந்தி போகிற வேடம்.
--------------------------------------------------------------------------------------------------------------

முப்பரிமாணம் படம் என்றாலே கண்முன்னே வரும் ஆசை காட்டும் பொருட்கள், பயமுறுத்தும் காட்சிகள் என இருந்த எனக்கு அவதார் புதிய பரிணாமத்தை காட்டியது. காட்சியமைப்பில் துல்லியங்களும் தனித்து தெரியும் சில நுண்ணிய விசயங்களும் ஆச்சர்யப்படுத்தின. அதே அளவிற்கு ஆச்சர்யத்தை அளித்தது ‘Clash of the Titans". 


எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் எதையும் எதிர்பார்க்காமல் சாதாரணமாக சென்ற எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவதாரில் நடித்த அதே கதாநாயகன் தான்.  இரண்டும் ஒரே நாயகனையும், முப்பரிமாண படமாகவும் இருந்தாலும் காட்சியமைப்பில் வெவ்வேறு தளங்களில் இருப்பதால் சிறு அளவில் கூட அவதார் ஞாபகம் வரவில்லை என்பதே ஆறுதலாக இருந்தது.


இனி 3Dயில் அடுத்தடுத்து கார்டூன் படங்களான "sherk" "Toy story 3" என வரிசைகட்டி படங்கள் வருகிறது. மீ த வெயிட்டிங் :)


இதுமட்டுமில்லாமல் ஏற்கனவே வந்த கார்டூன் படங்களை 3Dயிலும் வெளியிட்டு வருகிறார்கள். இதைப் பற்றி விரிவாக யாரேனும் பதிவிடலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------

கடந்த மாதம் மம்மூட்டி நடித்த ‘மிருகயா (Mrigaya (1989)” என்ற மலையாள படத்தை ஏசியாநெட்டில் பார்க்க நேர்ந்தது. ஐ.வி சசி இயக்கிய படம்.

முதல் பாதி முழுவதும் மம்மூட்டியின் அட்டகாசம் தான். சிரித்து சிரித்து வயிறு வலி தான் வந்தது. இப்படி பட்ட கேரக்டரில் தயக்கமே இல்லாம எப்படி நடித்திருக்கிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது.

ஊருக்குள் வந்த புலியை சுட்டு வீழ்த்த மம்முட்டி வரவழைக்கபடுகிறார். வந்தவர் ஊரில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் வம்புக்கு இழுப்பது, குளிக்கும் போது மறைந்திருந்து காண்பது, எதிர்த்து பேசுபவரை அடிப்பது என ஏகத்துக்கும் ரகளை செய்கிறார்.  புலியை மட்டும் பிடிக்க காணோம். அந்த காலத்து சத்தியராஜ் கேரக்டர் தான் ஞாபகம் வந்தது. ஊர்மக்கள் புலியே பரவாயில்லை இவனை ஊரை விட்டு துறத்த வேண்டும் என முடிவு செய்கிறது.  எதற்கும் அசைந்து கொடுக்காமல் ஊரை விட்டு நகல மறுக்கிறான். இடையில் கொஞ்சம் காதல், கொலை என விரிந்து படம் முடிகிறது. 

இந்த படம் வந்த போதே சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் தான் மம்முட்டி இருந்திருக்க வேண்டும். இருந்தும் இது போல் கேரக்டரில் நடித்த தைரியம் ஆச்சர்யமானது. பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது நழுவ விடமால் பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------


ரொம்ம்ம்ம்ம்ப அழகா இருக்கேன்னு samsung மொபைல்ல  Samsung S5620 Onix மாடல் வாங்கினேன். அதுவும் ரொம்ப நல்லாத்தான் இருக்கு. ஆனா gtalk மட்டும் வரவே இல்ல. தெரிஞ்சவங்க கிட்ட கேட்ட வரைக்கும் யாருக்கும் எதுவும் தெரியல. உங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன். அப்படியே அதுல தமிழ் ஃபாண்ட் எப்படி சேர்க்கிறதுன்னும் சொன்னா புண்ணியமா போகும்.---------------------------------------------------------------------------------------------------------------

Related Posts with Thumbnails