முதிர் கண்ணன்கள்

காலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் மேட்ரிமோனியல் வெப்சைட்டில் ஏதாவது ப்ரபோஸ் வந்திருக்கான்னு பார்ப்பவரா? ஜிமெயில் கணக்கின் பாஸ்வேர்டை கூட சில சமயம் மறந்து போய் மேட்ரிமோனியல் சைட்டின் பாஸ்வேர்டை ஞாபகம் வைத்திருப்பவரா? ஜாதியாவது மண்ணாங்கட்டியாவது என தீடீர் தீடீர் என்று புலம்புவரா? பேச்சு வாக்கில் கொட்டாவி விடும் அம்மாவிடம் “பாரு பேசும் போதே இருமுற... உனக்கு வேற உடம்பு சரியில்ல. உன்னை யாரு வீட்டு வேலை செய்ய சொன்னா. இதுக்கு தான் காலாகாலத்துல மருமக வரனும்”னு அடிக்கடி சொல்பவரா? (என்னென்னு சொல்லித்தொலடா)

கண்ணை மூடி கொண்டும் இல்லை ஒன்னரை கண்ணோடும் சொல்லலாம் அவர் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் முதிர்கண்ணன் என்று. ”இல்லைங்க நான் இங்க சும்மா ஒரு வருச காண்ட்ராக்ட்ல வந்தேன். இன்னும் மூனு மாசத்துல இந்தியா வந்திடுவேன். சென்னையில இருக்குற கம்பெனியில சேர்ந்திடுவேன்”னு கூசாம பொய் சொன்னாலும் “நீங்க இந்தியா வந்த பிறகே கால் பண்ணுங்க”ன்னு மனசாட்சியே இல்லாம போனை வச்சிடுறாங்க பெண்ணை பெத்தவங்க.

வெளிநாடு அதுவும் துபாய் மாப்பிள்ளைன்னா பின்னங்கால் முன்னங்கால் முட்டியை தொடுற அளவுக்கு ஓட்டமா ஓடுறாங்க பொண்ணு வீட்டுகாரங்க. கொஞ்ச நாள் முன்ன நண்பனுக்கு சென்னையிலிருந்து போன் செய்த ஒரு பெண்ணின் தாயார் எல்லாம் விசாரிச்சுட்டு, நீங்க இந்தியா வந்தா தான் பொண்ணு கொடுப்பேன்னு சொல்ல இவன் போன்லயே சூடாகி ”வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு வீட்டோட மாப்பிள்ளையா வரேன். காலம்புல்லா வச்சு சோறு போடுறீங்களான்”னு கேட்க அந்தம்மா டென்சனாகி போனை வச்சிருச்சு.

போட்டோ செஷனெல்லாம் முடிஞ்சு அப்பா அம்மாவுக்கு போட்டோவை அனுப்பின பின்னால போடுற கண்டிஷன் கொஞ்சம் டெரரா தான் இருக்கும். மாஸ்டர் டிகிரியோட பொண்ணு அழகா நச்சுன்னு இருக்கனும்னு மூனு வருசத்துக்கு முன்னால தேட தொடங்கினவங்க, மாஸ்டர் டிகிரி பேச்சுலராகி அழகு சுமாராகி, அப்புறம் நம்ம ஜாதியில ஏதோ பொண்ணு கிடைச்சா போதும்ன்ற நிலைமைக்கு மாறி இப்ப ஜாதியாவது  மண்ணாங்கட்டியாவதுன்னு பெரியாரிஸ்டா(நன்றி சாரு) மாறிட்டானுங்க.

பெரியாரிஸ்டா எல்லா நேரத்திலேயும் இருந்தா பரவாயில்ல நம்ம சாரு மாதிரி சில நாள் அப்படி இருந்துட்டு பொண்ணு கிடைக்காத காரணத்தை சாமிகிட்ட கேட்க ஆரம்பிச்சிருவாங்க.  ”டேய் மூனு வருசத்துக்கு முன்னால மேட்ரிமோனியல்ல இருந்த பொண்ணுங்க ப்ரொபலை எல்லாம் பார்த்து கிண்டல் பண்ணினோமே, அதோட பாவம் தான் இப்ப பொண்ணு கிடைக்க மாட்டேங்குதோ?”  ன்னு நெத்தியில விபூதியை பூசிக்கிட்டு கேட்கும் போது தான் அவனவன் எவ்வளவு மன உளைச்சல் இருக்கான்னு தெரியுது. ஊருக்கு போகும் போது காளஸ்தியும், திருப்பதியில ஒரு கோவிலும், கும்பகோணத்துல சில பல கோவிலும்னு பல டூர் இருக்கும். இப்ப புதுசா ரம்பாவுக்கு காஞ்சி காமாட்சினால தான் கண்ணாலம் ஆச்சுன்னு எங்கேயோ படிச்சதால அதுவும் லிஸ்ட்ல சேர்ந்திருச்சு.

சரி மேட்ரிமோனியல், கல்யாணமாலையில இருக்குற பொண்ணுங்களாவது கொஞ்சம் இரக்க சுவாபம் இருக்கும்னு பார்த்தா படிச்சது பிஏ ஆனா வேலை பார்க்கிறது சாப்ட்வேர் கம்பெனியில, நாங்க அணுகுண்டு குடும்பம்(Nuclear family யாம்) , வர்ரவன் குடும்பமும் அணுகுண்டா இருக்கனும், மாப்பிள்ளை மாஸ்டர் டிகிரியோட சாப்ட்வேர் கம்பெனியில் இருத்தல் உச்சிதம், சிகரெட்டை தொட்டிருக்கவே கூடாது, பாட்டிலை பார்த்தக்கவே கூடாதுன்னு பல கண்டிசன் போட்டிருக்க, பயலும் கட்டிகிட்டா உன்னைய தான் கட்டிப்பேன்னு ஒரு மெசேஜ் விட, பொண்ணு ஜாதகம் மட்டும் கேட்டு ரிப்ளே அனுப்பினா போதும் “என் காதல் சொல்ல நேரமில்லை, உன் காதல் சொல்லத்தேவையில்லை”ன்னு காதலியா இவனே முடிவு பண்ணிடுவான். அது கடைசியில நீ துபாயை விட்டு வந்தா தான் என் கழுத்துல மூணு முடிச்சு போடனும்னு வந்து நிக்கும்.

முன்னெச்சரிக்கையா சண்டை போட்டு ஆபிஸ்ல வாங்கி வச்ச பேமிலி ஸ்டேடசு விசாவும், கல்யாணம் பண்ணினா தான் கிடைக்கும் இன்னும் சில பல சலுகைகளையும் வெட்டியா வெறிச்சு பார்த்துகிட்டே இருக்கும் போதே வருசம் ஓடிப்போகும்.

கொஞ்சம் கொஞ்சமா எட்டிப் பாக்குற வெள்ளை முடிய கூட சமாளிச்சிரலாம். ஆனா ஒரேடியா போற தலைமுடிய ஒன்னும் பண்ண முடியாம பசங்க கண்ணாடி முன்னாடி நிக்கிறதை பார்த்தா அழுகை முட்டிகிட்டு வரும். ஒரு இனத்தோட ஒட்டு மொத்த கதறல் அது. கட்டி பிடிச்சு அழமுடியாதபடி தொப்பை வேற இடிக்கும். துபாய்கு வந்த புதுசுல நித்தியானந்தா மாதிரி துள்ளி குதிச்சு எழுந்திருச்ச பையலுக எல்லாம் இப்ப எழுந்திருக்காம உட்கார்ந்த இடத்திலேயே எல்லா வேலையும் பார்க்குறதுக்கு இந்த தொப்பை முக்கிய காரணம்.


கள்ளி பாலை மட்டும் கண்டுபிடிக்காமலே இருந்திருந்தா எண்பதுகளில் எக்கசக்க பிகர்ஸ் சாகாம காப்பாத்தியிருக்கலாம்னு குடிபோதையில நண்பன் சமூக பொறுப்போட பொலம்பினப்ப அவனை தேத்த முடியாம நானும் குலுங்கி குலுங்கி அழ வேண்டியதா போச்சு :( எவ்வளவு பெரிய உண்மை? ஒரு தலைமுறையே இதுனால பாதிக்க பட்டு நிக்குது.

பத்தாவது வரைக்கும் படிச்ச வொர்க் ஷாப்ல வேலை செய்யிற மலையாளிங்க எல்லாம் ஊர்ல இருந்து  பிஎஸ்சி நர்சிங்கோ, டீச்சர் டிரைனிங்கோ, அட்லீஸ் டிகிரி ஹோல்டர்ல அழகான பொண்ணுங்க கிடைச்சு கல்யாணம் பண்ணிகிட்டு வரும் போது தமிழ்நாட்டோட நிலைமையை நினைச்சு நொந்துக்க வேண்டியது தான்.

அதுவும் இப்ப நேர்முகத்தேர்வு ரேஞ்சுக்கு தான் எல்லாம் நடக்குது. நண்பரின் தந்தையை ஒரு பெண்ணோட தகப்பனார் அழைத்து பேசியிருக்கிறார். ”பையனுக்கு டேக் ஹோம் சம்பளம் எவ்வளவு? என்னென்ன லோன் வாங்கியிருக்கான்? எப்ப முடியும்? இப்ப இருக்குற வீடு சொந்த வீடா? நாங்க வரதட்சனையா கொடுக்குற பணத்தை என்ன பண்ணுவீங்க?”ன்னு அடுக்கடுக்கா கேள்வி கேட்க பையனோட அப்பா “ஆணியே புடுங்க வேணாம்”ன்னு கிளம்ப்பி வந்துட்டார். இன்னொருத்தனுக்கு கிட்டதட்ட அமெரிக்காவுல வேலை கிடைட்டிருச்சு. அதாவது பொண்ணு அமெரிக்கா இன்னும் கொஞ்ச நாள்ல போயிடுமாம். அப்பா அம்மாவும் போயிடுவாங்களாம். பொண்ணோட அண்ணன் அங்க தான் இருக்கானாம். இப்ப நீ வேலை பார்க்கிற ஃபீல்டுல அங்க நல்ல வேலை கிடைக்கும். அதுனால உன்னைய செலக்ட் பண்ணியிருக்கோம்னு சொல்ல.... பையன் சன் மியூஸிக்ல லைவ் டெலிசாய்ஸ்ல வேலை பார்த்து வயித்தை கழுவுனாலும் கழுவேனே தவிர உன் பொண்ணுக்கு புருசனா வேலை பார்க்க மாட்டேன் சொல்லிட்டான். ம்ம்ம் அது நடந்து ரெண்டு வருசம் ஆச்சு. இப்ப ஃபீல் பண்றான் ஒழுங்கா அந்த பொண்ணையே கண்ணாலம் கட்டியிருக்கலாம்னு.

இதுல சானியாவும், சோயப்பும் கல்யாணம் ஆகி துபாய் வந்து குடியேறப்போவதாக செய்தியை படிச்சதும் பல நண்பர்கள் கறுப்பு கொடியை சட்டையில் குத்திக்கொண்டு விமானநிலையத்திற்கு போகப்போவதாக முடிவு பண்ணிட்டாங்க. புதுசா எந்த கன்ஸ்ட்ரக்‌ஷன் வேலையும் நடக்காமல் கட்டி முடித்த கட்டடத்தையே இடிச்சுட்டு இருக்குறவங்களை தொறத்திட்டு இருக்குற இந்த நேரத்துல கறுப்புக்கொடிய காண்பிக்க போறதா சொன்னதும் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.

பாக்கிஸ்தான்ல இருந்து ஒரு பையனுக்கு நம்ம சானிய கல்யாணம் பண்ணி வச்சு இன்னொரு நம்ம நாட்டு பையனுக்கு கிடைக்க இருந்த வாழ்க்கையில மண்ணள்ளி போட்டவன சும்மா விடலாமா?

இப்படி புலம்ப எக்கசக்க கதைகள் வளைகுடால இருக்குது. இதெல்லாம் கண்டுக்க ஆள் தான் இல்ல.


ஹி ஹி பை தி வே என்னோட ஃபைலை இன்னும் திறக்கவே இல்லை. இது முழுக்க முழுக்க நண்பர்களோட அனுபவம் தான். நமக்கு இன்னும் அந்த அளவுக்கு வயசாகல. நம்பாதவங்க என்னோட ப்ரொபைலை போய் பார்த்துக்கங்க :)
Related Posts with Thumbnails