இச்சிரி சவுந்தர்யம் குறைவுண்டெங்கிலும்....

இரண்டு கன்னங்களையும் காற்றால் அடைத்து “உஃ(f)ப்ப்" என்று வைத்துப் பார்த்தேன். ஓரளவு பரவாயில்லை. நாக்கால் ஒரு பக்க கன்னத்தில் கீழே சுருத்தி கொண்டே வந்து ஒரு இடத்தில் நிறுத்தினேன்.... இது கூட ஓரளவு பரவாயில்லை. இரண்டு புருவங்களை நன்றாக சுருக்கி கண்களை கூர்மையாக்கினேன். ம்ஹீம்ம் சரியில்லை. நெற்றியில் வேறு கோடுகள் வருகிறது. மேல் உதடை கொஞ்சம் காற்றால் நிரப்பி தாடையை கீழே வைத்துப் பார்த்தேன், அய்யோ சகிக்கல. முதலில் செய்தது போல கன்னங்களில் காற்றை நிரப்பி கொண்டே எவ்வளவு நேரம் தான் வெளியே செல்வது? . வாய் வலிக்குமே!

குழம்பித்தான் போனேன். தலையை கொஞ்சம் சாய்த்து வைத்துப் பார்த்தேன். எந்த முன்னேற்றமும் இல்லை. சாய்த்து வைத்துக் கொண்டே ஒரு கண்ணை மூடினாற் போல் லைட்டாக திறந்து பார்த்தேன். இது பரவாயில்லை தான். ஆனால் கொஞ்சம் இருட்டாக இருக்கிறதே! எங்காவது முட்டி மோதி கீழே விழுந்து விட்டால்?

பின்பு என்ன கோளாறாக இருக்கும்? சட்டென்று ஞாபகம் வந்தது. ரொம்பச்சரி தலைமுடியே தான். கண்டிப்பாக அதுவே தான்.பரபரவென்று தலையை கலைத்தேன். இது கொஞ்சம் பரவாயில்லை. கையில் பார்த்தால் எக்கசக்க முடி! அய்யோ முடி என்ன இப்படி கொட்டுது. ச்சே வேண்டாம் முடியை முன்பு   போலவே செய்துவிடலாம். சீப்பை எடுத்து வாரினேன். தண்ணீர் நன்றாக விட்டு தூக்கி வாரிய போது தான் கவனித்தேன். நெற்றிக்கு கீழே ஒரு வடு.

முடிவே செய்து விட்டேன் இது தான் காரணமென்று. ஆனால் எப்பொழுது இந்த வடு வந்ததென்று சரியாக ஞாபகம் இல்லை. ஆறேழு வயசில் அடி பட்டு இருக்கலாம். பத்து பதினைந்து வயதில் இதனை காண்பித்து வந்து அம்மாவிடம் கவலையுடன் கூறியது ஞாபகம் வந்தது.  “அதுகெடக்குது...உனெக்கன்ன ராசா. அழகா இருக்க” டக்கென்று பத்து விரல்களில் ஐஸ் மழை போல சட சடவென்று சத்தம் வர திருஷ்டி கழிப்பாள். ப்ச் பழைய ஞாபகம்!.

சரி இதுதான் காரணமென்றால் ஏன் இத்தனை நாள் தெரியவில்லை? வாரிய தலைமுடியை இறக்கி நெற்றி வரை விட்டேன். அட இப்போது வடு தெரியவில்லை. வாயை கொஞ்சமாக ஒரு பக்கம் இழுத்து சிரித்தவாறு வைத்து இப்பொழுது கண்ணாடியை பார்த்தேன். இதுவும் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் எப்போதும் ஒரு பக்கம் சிரித்தவாறு வைத்திருந்தால் கோணவாயனாகி விடுவேனே? வேண்டாம் வேறெதாவது முயற்சிக்கலாம்.

வேறு என்ன தான் செய்வது. எப்படி பார்த்தாலும் முகம் அழகாக இல்லையே? அவள் திட்டியது போல் தான் இருக்கிறேன். இப்பொதெல்லாம் யாராவது என்னைப்பற்றி சொன்னால் உடனே அதனைப் பற்றிய கவலைகளில் மூழ்கி விடுகிறேன்.

பிடிமானம் சரியில்லாமல் கண்ணாடி ஆடியது. ஒருவேளை கண்ணாடியில் ஏதாவது கோளாறு இருக்குமா? ச்சே இது எனக்கான ஆறுதலை ஆழ் மனது எனக்கே தெரியாமல் கிளப்பி விடுகிறது.

மற்றவர்களின் ஐடியா கேட்பதை நிறுத்த வேண்டும். இதுவரை வாங்கிய குழாய் க்ரீம்களை ஒன்றாக சேர்த்திருந்தால் இந்தியா-ஈரான் குழாய் மூலமாக எண்ணெய் கொண்டு வரும் திட்டத்தையே செயல்படுத்தியிருக்கலாம். ரூம் சேட்டன் அறிவுரைப்படி லாலேட்டன் தொட்டு காவ்யா மாதவன் வரை விளம்பரங்களில் வந்த அழகு சாதனங்களை எல்லாம் பயன்படுத்தியாயிற்று. இதாவது பரவாயில்லை.... காலையில் கக்கா ஒழுங்காக, சீராக போனால் அன்றைய தினம் முகம் அழகாக இருக்கும் என்று ஒரு முறை சேட்டன் கூறியதை அப்பாவியாய் நான் ”ஆனோ சேட்டா?” என்று கேட்டதை இப்போது நினைத்தாலும் சேட்டனை மூக்கு மேல் குத்த வேண்டும் போல் உள்ளது. 

சின்ன வயது போட்டாக்களிலெல்லாம் அழகான தான் தெரிகிறேன். இப்போது மட்டும் ஏன் இப்படி தோன்றுகிறது? ஒருவேளை மனபிராந்தியா? அதுவும் தனியாக இருக்கும் பொழுது தான் இதுபோல் தோன்றுகிறது. ஆம் தனியாக... இப்போது இந்த தனிமையை கலைப்போம். இப்போது எங்கே செல்வது? தாமஸ் ரூமுக்கு செல்லலாமா? வேண்டாம் போன முறை கண்ணாடியை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏதோ நினைத்தவன் தீடீரென்று “இச்சிரி சவுந்தர்யம் குறைவுண்டெங்கிலும் நீ செரிக்க புத்திஜீவியானு”ன்னான். இவன்கிட்ட கேட்டேனா நான்? இது தான் ஏத்துற மாதிரி ஏத்தி இறக்கிவிடுறது. அவனையும் மூக்குலயே குத்த வேண்டும்.

கண்ணாடி ஆடிக்கொண்டே இருந்தது.

ஒரு வேளை நிறம் காரணமாக இருக்கலாமா? ச்சேச்சே அப்படியெல்லாம் இருக்கவாய்பில்லை.

மெசேஜ் வந்திருந்தது. சென்னையிலிருந்து தோழி. “டேய் வீட்ல ஒரே பிரச்சனை. யார்கிட்ட சொல்றதுன்னே தெரியல. ரமெஷை நான் லவ் பண்றது தெரிஞ்சு போச்சு. நீ பக்கத்துல இருந்தேன்னா ரொம்ப தைரியமா இருக்கும். உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். சீக்கிரம் வாடா. இப்போ ப்ரீயா இருந்தா கால் பண்ணு..” படார் என்று சப்தம். திரும்பினேன்.

கண்ணாடி கீழே விழுந்து உடைந்திருந்தது. உடைந்த துண்டுகளில் எல்லாம் நான் தெரிந்தேன் மிக அழகாக.

Please check my blog


ப்ளீஸ் செக் மை ப்ளாக் :)))
துபாயைப் பற்றி இதை விட எளிமையா சொல்லமுடியாது மக்கா. வீடியோவைப் பார்த்து துபாயைப் பற்றி தெரிஞ்சுக்கங்க

ஈஸ்வரி

”என்ன சூரி படிக்கலையா?” இந்த கேள்வியை என் பெற்றோரையும் விட அதிகமாக கேட்டவள் ஈஸ்வரி. அழகான பல்வரிசையும், ரெட்டை சடை பின்னலும் ஒல்லியான உருவமும், களையான முகமும் கொண்ட ஈஸ்வரி.  அந்த அழகான பற்வரிசை தெரிய எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பாள். தோழமைக்கு ஆண் பெண் பேதமில்லை என்று கற்றுத்தந்தவள். எட்டாவது படிக்கும் போது நடந்த பேச்சு போட்டியில் அறிமுகமானாள் என்று நினைக்கிறேன். முதல் பரிசு பெற்ற என்னை “எனக்கு தெரியும் நீ தான் வின் பண்ணுவன்னு. வாழ்த்துகள்” என்று கைக்குலுக்கியது ஞாபகங்களில் வந்த முதல் கீறல்.

கரும்பலகையில் அழகாக எழுதுவது ஒரு கலை. அச்சிறுவயதில் மிக நேர்த்தியாக எழுதுவதில் ஆசிரியர்களையே மிஞ்சுபவள். அனைத்து ஆசியர்களுக்கும் கரும்பலகைகளில் எழுத இவளையே அழைப்பார்கள். சீராக வளைந்தோடும் நதியைப் போல், கைவளையோசை கிலுகிலுக்க எழுதிகொண்டே இருப்பாள். எழுதும் போதும் நடுவே சிரிப்பாள். எதற்காக சிரிக்கிறாள் என்று அவளுக்கே தெரியாது. பின்கேட்டாலும் சிரிப்பாள்.

எங்கள் தெருவில் டியூசன் படிக்க வருவாள். எந்நேரமும் தெருவில் விளையாடி கொண்டிருக்கும் என்னைப் பார்த்து “என்ன சூரி படிக்கலையா?” என்று தினமும் கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தாள். சிலநாள் அவள் வந்தால் ஒளிந்துகொள்ளக்கூட தொடங்கினேன். ஒரு நாள் என் கையைப் பிடித்து என் வீட்டிற்கு சென்று ”உட்காரு, இன்னைக்கு சேர்ந்தே படிக்கலாம்” என்று கட்டளையிட்டாள். அவள் படித்தாள்...என்னால் முடியாமல் “உனக்கு படிக்கனும்னா படி என்னை ஆள விடு” என்று கையை உதறி ஓடினேன்.  என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள் ஏதோ நினைத்தவாறு என் வீட்டிலேயே அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள். அவள் போகும் வரை நான் செல்லவில்லை. அன்றிலிருந்து அவள் என் வீட்டிற்கு வரவில்லை.

ஒன்பதாவது படிக்கும் போது ஒருநாள் கரும்பலகையில் எழுத சொல்லிவிட்டு ஆசிரியர் வெளியேற, வகுப்பு மாணவன் ராஜா ஈஸ்வரியின் தாய் எவ்வாறு மீன் விற்கிறாள் என செய்து காண்பிக்க, வகுப்பறை கொஞ்சம் கலகலத்தது. அவள் கண்கலங்கி “அது அவங்க தொழில், அதுக்கேன் என்னைய கிண்டல் பண்ற” என்றபோது தான் முதன்முதலாக கண்டேன் அவள் கண்கலங்கி நின்றதை. அதன்பிறகு கிண்டல் செய்த ராஜாவுடன் அடிக்கடி அவளை வெளியே காணமுடிந்தது.

பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்திற்காக ஒரே டியூசனில் நானும் அவளும் சேர்ந்திருந்தோம். இன்னும் கொஞ்சம் அழகாகியிருந்தாள். தீடீர் பருவ மாற்றம் அனைவருக்கும் இடையே மெலிதான ஒரு இடைவெளியை ஏற்படுத்தியது. தினமும் அவள் பின்னே பையன்கள் சுற்றுவதும் வாடிக்கையானது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிரித்தபடியே செல்வாள்.

அதிகம் படிக்கச் சொல்லி வற்புறுத்தாமல்  முழு சுதந்திரம் கொடுத்த அரசாங்க பள்ளிகூடம் அது. பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். கிட்டதட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் பரிச்சயமாகி இருந்தாள். இப்போதெல்லாம் என்னை காணும் போது குறிப்பிட்ட ஏதாவது பாடத்தின் ஒரு பகுதியைக் கேட்டு “படிச்சுட்டயா சூரி?” நான் இன்னும் படிக்கவே இல்லை” என்று கூறுவதை வழக்கமாக கொண்டாள். என்னைத் தவிர வேறு யாரிடமும் இது போல் கேட்டுருக்கிறாளா என்று, அவள் ஞாபகம் வரும் போது அருகில் இருக்கும் நண்பர்களையெல்லாம் கேட்டிருக்கிறேன். வேறு யாரையும் இதே போல் தொடர்ந்து கேட்டதில்லை என்று மட்டும் தெரிந்தது. நண்பர்களும் என்னை கிண்டல் செய்ய “படிக்கலையாடா”வையே உபயோகிக்கத் தொடங்கினர்.

பரிட்சையும் முடிந்தது. மொத்த பள்ளியில் தேர்ச்சி பெற்றோர் மிகக்குறைவு. அவள் 75 சதவிகிதத்திற்கு மேல் எடுத்ததாக ஞாபகம். அதிகம் கவலைப்படவில்லை. அதற்கு பிறகு அவளை பார்க்கவில்லை. எங்கே சென்றாள் எனவும் தெரியவில்லை. நண்பர்கள் மூலமாக அவள் வேறு எங்கோ பதினொன்னாம் வகுப்பு படிப்பதாக மட்டும் கேட்டேன். அவளை அதோடு நினைத்துப்பார்த்திருக்கிறேனா என்று கூட ஞாபகம் இல்லை.

”ஏய்..ஏய்ய்ய்ய் சூரி” குரல் கேட்டு திரும்பியவன் சத்தியமாக அது ஈஸ்வரி என்று அடையாளமே தெரியவில்லை. அவள் எப்படி என்னை ஞாபகம் வைத்திருக்கிறாள் என்று தெரியவில்லை.  அதே ஒல்லியான தேகம், அதே பல்வரிசை, ஆனால் வசீகரம் இழந்த சிரிப்பு. விடுமுறைக்கு ஊருக்கு சென்றவன் இவளைப் இப்படி சந்திப்பேன் என நினைக்கவில்லை. “எப்படி இருக்க?” என்று கேட்டவள் இடைவெளியே விடாமல் “என்ன படிச்சிருக்க?” என்றாள். நல்லாயிருக்கேன் என்று சொல்லத்தோணாமல் டிப்ளமோ படித்ததை மட்டும் சொன்னேன். “மேல படிக்கல?” என்று கேட்டு இடது புறம் திரும்பி ஓடியவள் ஆறு வயசு சிறுவனை தர தர வென்று இழுத்து வந்தாள். “எங்கன்னா சொல் பேச்சு கேட்குதா பாரு... ஆமா நீ மேல படிக்கலயா என்ன?” அவன் தலையை இழுத்து வ்யிறோடு அணைத்தவாறு கேட்டாள். ”ம்ம்ம் கரஸ்ல பண்றேன்” தலையாட்டினேன்.

சிரித்தாள். பழைய சிரிப்பிற்கும் இப்பொழுதிற்கும் ஏழு கடல், மலை தொலைவு தூரம் இருந்தது. “எனக்கு பத்தாவது முடிச்சு ஒரு வருஷத்திலேயே கல்யாணம் ஆகிடுச்சு. என் பையன் தான் இது. இவனும் எப்பவும் வெளிய வெளாட்டுதான். படிக்கவே மாட்டேங்கிறான். ஆனா எப்படியும் பெரிய படிப்பு படிச்சிருவானு நம்பிக்கை இருக்கு. ஆம்பள புள்ள பாரு” இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாள். எதுவும் என் காதில் விழவில்லை...”........அங்க தான் மீன் கடை வச்சிருக்கேன்” முடித்தாள். சிரித்தேன். பின்பு விடைபெற்றாள்.

நினைவுகளில் மூழ்கி மறைந்து போன யாரையாவது சந்தித்து மங்கிய நினைவுகளை துடைக்கும் போது கீறல் விழத்தான் செய்கிறது.  எவரது நினைவுகளை புதைக்கவும் முடியுவில்லை. தனிமை எதையும் மீட்டெடுக்கும் வலிமையுள்ளதாக இருக்கின்றது. முடிவில் வலியை மட்டுமே தருகிறது.

விஷக்கிருமிகள்

லை வலியை இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை ’அது’க்கு. சிலிர்த்துக் கொண்டது தலையை. முன்மண்டையை பக்கத்தில் இருந்த கடினமான பொருளில் தலையைத் தேய்த்து கொண்டே இருந்தது. மூர்க்கமான ஒலியை எழுப்பி அச்சூழலை விநோதமாக ஆக்க முயன்றது. தன் கை அல்லது கால் கொண்டு தன் தலையில் அடித்துக் கொண்டது. அங்கிருந்த மற்றவைகளுக்கு ஏதோ அசம்பாவிதம் அதுக்கு நடக்கிறது என்று மட்டும் தெரிந்தது. என்னவென்று புரியவில்லை.

ராம் தன்னிலையை மறந்தவராக பிரமிப்பாக அதையே பார்த்துக்கொண்டிருந்தார். நாசாவிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பாக இந்த பிரபஞ்சத்தில் பூமியிலிருந்து வெகு தொலைவில் மனிதன் வாழ வேறு எதுவும் சாத்தியமுள்ள கிரகம் இருக்கிறதா என ஆராய அனுப்பபட்ட  செயற்கைகோளை கண்காணிக்கும் தலைமை பொறுப்பில் இருப்பவர் ராம்.

கிரிஸ்டோபர் பிரமிப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவனாக “இப்போது என்ன செய்வது?” என்று ஆங்கிலத்தில் வினவினான்.

”அது என்னவாக இருக்கும்?” ராம்

“தெரியவில்லை...பார்க்கும் போது ஒரு முனை மிகக்கூர்மையா இருக்கு. எவ்வளவு நீளம் இருக்கிறதென்று தெரியவில்லை” கிரிஸ்டோபர்

“வேகம்?” ராம்

”ஒரு மணி நேரத்திற்கு 1688 கிலோமீட்டர் வேகம். இடையிடையே வேகம் மாறுபடுகிறது” கிரிஸ்

“வரும் பாதை பூமியின் நேர்கோடு தானா?” ராம்

“இப்போது வரை ஆம். ஆனால் இடையில் மாறலாம்.”

“அது பூமியைத்தாக்க எவ்வளவு நாள் எடுக்கும்?” ராம்

“சுமார் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகலாம்” கிரிஸ்

“தாக்கும் போது பூமியின் எல்லா பகுதியும் சேதமடையுமா?”

“அதன் மொத்த நீளம், அகலம் இதுவரை கிடைக்கவில்லை. அதைப்பொருத்தே முடிவு செய்யமுடியும்” கிரிஸ்

"நமது விண்கலத்திற்கு ஏதும் ஆபத்து இருக்குமா?”

“இப்போது எதுவும் இல்லை. ஆனால் இன்னும் ஒரு சில நாட்களில் தொலைதொடர்பு துண்டிக்கலாம். அதனோடு வருகின்ற சிறு சிறு கற்கள் அதன் மீது மோத வாய்ப்புண்டு” க்ரிஸ்

மறுபடியும் கவலையோடு அந்த புகைப்படத்தை பார்க்க தொடங்கினார் ராமானுஜம்.

 ”ஏதாவது கவிதை சொல்லுங்களேன்” முத்தமிட எத்தனித்தவனை அழகாக தவிர்த்து திசை திருப்பினாள். உடன்வாயை திறந்தவனின் உதடுகளை கைகளால் தொட்டு மூடி “உடனே என் பெயரை சொல்லுவீங்களே?” நகைத்தாள்.

விரல்களை உதடுகளிலிருந்து மாற்றி வலக்கையில் பத்து விரல்களாக்கினான். இரவும் துணை புரிந்தது. ”பிடிச்சதை தானே சொல்ல முடியும்?” என்றான்

“என்னைய ரொம்ப பிடிக்குமா?” புருவங்களை உயர்த்தினாள்.

“உன்னை எவ்வளவு
பிடிக்கும்
என்று கேட்டால்
சொல்ல தெரியாது..
ஆனால் மறுகேள்வி
இல்லாதவாறு
கட்டிப் பிடிக்க
தெரியும்”

என்றவன் ஆயுத்தமானான்.  வெட்கத்தில் சிரித்தபடி ஓடினாள், மறைந்திருந்து எதிரே வந்த நால்வர் கன்னத்தில் அறையும் வரை. இருவர் அவனைப் பிடித்து இழுத்துச்செல்ல, மற்ற இருவரில் ஒருவன் “அடியே ஈனச்சாதியிள பொறந்த சிறுக்கி... உனக்கு எங்க ஜாதியில பையன் கேட்குதா. இதுக்கு தேவிடியா பொழப்பு பொழைக்கலாம்டி...” கொண்டு வந்த ஆயுதத்தை எடுத்தான்.

து மயக்கமடைந்திருந்தது. சுயநினைவு வந்தபொழுது 
தன்னை விட வயதில் மூத்தது அருகில் இருப்பது தெரிந்தது. ஆறுதலாகவும் இருந்தது. மயக்கத்திலிருந்து இன்னும் விடுபட முடியாமல் மறுபடி கண்ணயர்ந்தது.

வெட்ட வேண்டும்...குறைந்தது, அதிகபட்சம் என்றெல்லாம் இல்லை. பார்க்கும் எல்லோரையும் வெட்ட வேண்டும். அந்த மதத்தை காண்போரையெல்லாம் வெட்ட வேண்டும். ஏன் அதே போல் அடையாளம் உள்ளவர்களை கூட விட்டு வைக்க கூடாது. நான் தனியாக இல்லை. என்னுடன் என்னைப் போலவே  இழப்புகளை சந்தித்தவர்களும் உண்டு. அதை விட அதிகமாய் ஏற்கனவே இவர்கள் மீது வெறுப்பிலுள்ளவர்களும் உண்டு. உடலெங்கும் வீழ்த்திய உடல்களின் குருதி வழிய கத்தியோடு திரிகிறேன்.


எனக்கொன்றும் ஆகாது. ஆனாலும் கவலைபட ஒன்றும் இல்லை. ஒரே நேரத்தில் மனைவியையும், ஒரே குழந்தையும் பறிகொடுத்த பிறகு வாழ என்ன இருக்கிறது.  மனதில் தீ இன்னும் அணையவில்லை. அதே தீயுடன் நான்கு வயது சிறுமியை குடிசையில் வைத்து தீ வைத்திருக்கிறேன். அவள் அந்த வலியை உணர்ந்திருப்பாளா?  இந்நேரம் கருகி இருப்பாள். போகட்டும்.... என் மகனின் பிஞ்சு உடல் மட்டும் வெடிகுண்டை தாங்கும் சக்தியுள்ளதா என்ன?

என்னுடன் வந்தவன் அச்சிறுமியின் தாயை வெறித்தனமாக புணர்ந்தே கொன்றான். ம்ம்...மகளுக்கும் சேர்த்து அவள் வலியை உணர்ந்திருப்பாள். ஆம் புணர்ந்தே கொல்லுதல் தான் மிகச்சிறந்த பழிவாங்கல். அதோ ஒருத்தி ஓடுகிறாள்....வேறு எவனும் வரும் முன் நான் முந்த வேண்டும். தலை மயிறை பிடித்து இழுத்து கீழே தள்ளினேன்.கர்பிணி........ இருந்தால் என்ன?


னைத்து நாடுகளின் விஞ்ஞானிகளும் அந்த அறையில் குழுமியிருந்தனர். விசயம் அரசல் புரசலாக மீடியாவிற்கும் தெரிந்து கசியத்தொடங்கியிருந்தன.

“இதுவரை நமக்கு வந்த தகவல்படி  ஒரு மிகப்பெரிய கல் சூரிய குடும்பத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. அதன் நேர்கோடு பூமியை நோக்கியே இருக்கிறது. அதன் நீளம் நம்மால் கணக்கிட முடியாதபடி மிக நீளமாக இருக்கிறது. அது வரும் வேகம், வடிவமைப்பு இதை பார்க்கும் போது, பூமியின் மீது மோதினால் கண்டிப்பாக ஒரு உயிர் கூட மிஞ்சாது.” ராம் ஒரு சில விஞ்ஞான மொழிகளினூடே அனைவருக்கும் புரியும்படியான ஆங்கிலத்தில் விளக்கிக்கொண்டிருந்தார்.

 இதை தடுக்க வழி? நடுவில் அமர்ந்திருந்த அதிபர் கேட்க விடையில்லாமல் விஞ்ஞானிகள் மௌனத்தையே பதிலாக அளித்தனர். சிறிது நேரம் மௌனமாக இருந்த அதிபர் “சிறிது ஆண்டுகளுக்கு முன்னர் நாம் கண்டுபிடித்த சிவப்புச்சூரிய குடும்பத்தில் வாழ முடியும் அல்லவா? சாத்திய கூறுகள் எந்த அளவில் இருக்கின்றன?”

“60% சதவ்கிதம் சாத்தியகூறுகள் இதுவரை உள்ளன. அங்கு சென்று சில ஆண்டுகள் எடுத்தால் இன்னும் சாத்தியப்படலாம். ஆனால் அங்கு அனைத்து மக்களும் குடியேற இப்போது கால அவகாசம் இல்லையே? விண்கலமும் நம்மிடையே குறைவு தான்” தலைமை விஞ்ஞானி எடுத்துரைத்தார்.


“இருக்கும் விண்கலத்தை பயன்படுத்துங்கள், மிக முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள், அறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் தேவைப்படும் தொழிலாளர்கள் ஆகியோர்கள் மட்டும் போகுமளவிற்கு தயார் செய்தால் போதும். மற்றவர்களைப் பற்றி கவலை இல்லை. பல ஆண்டுகளுக்கு தேவையான உணவு வகைகள், மற்றும்.....” அடுக்கி கொண்டே அதிபர் சொல்ல அனைவரும் வாயடைத்து நின்றனர்.

போகும் போது ராம்மை ஓரக்கண்ணால் பார்த்தபடி “அமெரிக்கர்கள் மட்டும் விண்கலத்தில் இருந்தால் போதும். முக்கியமாக வெள்ளையர்கள்” என்று தலைமை விஞ்ஞானியிடம் கிசுகிசுத்தபடி சென்றுகொண்டிருந்தார்.

து மயக்கம் தெளியும் போது வயதில் மூத்தது உணர்வுகளால் ஆன பாஷையில் அதன் பிரச்சனையை விளக்கிக்கொண்டிருந்தது. அதன் தலையின் ஒரு பகுதி கிருமிகளால்  பாதிப்படைந்துள்ளது. மோசமான அந்த கிருமிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளன. அது மேலும் பரவாமல் இருக்க அந்த பகுதியை எடுக்க வேண்டும்” என்று கூற, அது கவலையோடு ஒத்துக்கொண்டது.

கிருமிகளால் பாதிக்கப்பட்ட பகுதியை நீக்க அதன் தலையை பிரித்து கூரான கத்திமுனையை செலுத்தியது மற்றது...

ஙே!

வள் போனை வைத்துவிட்டாள். ஆனாலும் அப்படியே ஒருநிமிசம் போனை வைத்துகொண்டு “ம்ம்...ம்ம்” முணங்கி கொண்டே யோசிக்கிறேன். அப்பா என்னையே பார்த்துக்கொண்டு நிற்கிறார். ஆஹா போனை கீழ வச்சா இன்னைக்கு கச்சேரி இருக்குதுடான்னு எச்சரிக்கை மணி அடிச்சாலும் வேற வழி இல்லை. போனை வச்சுட்டு பாட்டு பாடி கொண்டே கொஞ்சம் வேகமாக எஸ்ஸானேன்.

“டேய் தம்பி நில்லுய்யா”

”என்னப்பா”

“யார்கூட பேசிகிட்டுயிருந்த இவ்வளவு நேரமா?”

“ப்ரெண்டு கூட”

“பொம்மள புள்ளையா?”

“... ம்...ஆமாப்பா. ஏன் கேட்குறீங்க”

”டேய் ராசா பேசுறது தப்பில்லடா இப்படி ஒன்றமணி நேரமா பேசுறயே இது உனக்கு ஓவரா தெரியல?  அதுவும் அப்பா அம்மா பக்கத்துல இருக்கும் போதே” ஆஹா அப்பா ஆரம்பிச்சுட்டாரே.... இன்னைக்கு பயந்த மாதிரியே அட்வைஸ் பண்ண போறாரோ?

”இல்லப்பா ஒரு முக்கியமான விசயம். பேசுனது நேரம் போனதே தெரியல...அதான்”

“நீ லவ் கூட பண்ணு தப்பில்லை....ஆனா உனக்குன்னு ஒரு நல்ல..........” டண்டணக்கா டணக்குடக்கான் டண்டணக்கான் டணக்குடக்கான் ஏய்ய்ய் டண்டனக்கான் டணக்குடக்கான் (அட்வைஸ்ஸ்ஸ்ஸ்ஸ்) தலையாட்டிக்கொண்டேஏஏஏஏஏஏயிருந்தேன். முடிந்தது. “சொன்னதை காதுல வாங்கினயா ராசா?” ம் என்றேன். அடுத்த அறைக்கு வந்தேன்.

திரும்ப உள்ளே சென்றபோது அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டது கேட்டது. “யாரடி அது? இவ்ளோ நேரம் இவன்கிட்ட பேசிகிட்டு இருக்கு? யாரந்த பொண்ணு” “யாருன்னு தெரியலைங்க. போன்ல தான் பேசிக்கிட்டுருக்கான். நேர்ல இன்னும் பார்க்கலைன்னான்” அம்மா.

அப்பா “ஓ....அதானே பார்த்தேன்....”


ஙே! 
இப்படி தான் என் டீன் ஏஜ் சோகமா முடிஞ்சது.... சரி தொடங்கினதாவது நல்லபடியா தொடங்குச்சா... ம்ஹூம்ம் வாங்க அதையும் பார்ப்போம்.

வயசு பதினாலு.... (அடுத்த தடவை சைக்கிள் பெடல் சுத்துறமாதிரி அனிமேசன் பணணிடுறேன். இந்த தடவை கொசுவத்திய அட்ஜஸ் பண்ணிக்கங்க)

புது கொசுவத்தி

+1 படிக்கிறேன். ரெண்டு கைய விட்டு சைக்கிளை ஓட்டுவேன். ட்ரிப்ள்ஸ் அடிப்பேன். சைக்கிள்ல ஸ்கிட்  அடிப்பேன். இது எல்லாத்துக்கும் மேல மொக்க சோக்கு நல்லா சொல்லுவேன். இது போதாது லவ் பண்ண?

மாலையில் பள்ளிகூடம் முடிஞ்சு சைக்கிளை அந்த மகளிர் பள்ளிகூடம் முன்ன நிறுத்திட்டு, சிரிச்சுகிட்டு தலைய ஆட்டிகிட்டேஏஏஏஏஏஏஏ(வண்ணாரப்பேட்டை புரம்) இருக்குறது கொஞ்ச நாள் வேலையா இருந்தது. கொஞ்சமே கொஞ்ச நாள் தான்.

இரண்டு பொண்ணுங்க. ரெண்டும் சோடியா தான் எப்பவும் போகும். அதிகமா ஆசை படாததால ஒரு பொண்ணை தான் சைட் அடிச்சேன். நல்லா தான் பேசுவாங்க ரெண்டு பேரும்.

ஒரு நாளு மணப்பெண்ணோட தோழி மணவாளனான என்கிட்ட கால்ல கோலம் போட்டுகிட்டே ”மணப்பெண் உன்கிட்ட ஏதோ சொல்லனும்னா”ன்னு சொல்ல..... பிபி எகிறி ”எதுவா இருந்தாலும் அவளையே சொல்லச்சொல்லு ” அப்படின்னு திரும்பவும் சிரிச்சுகிட்டே தலையாட்டிகிட்டுருந்தேன்.(வ.புரம்)

பக்கி மணப்பெண்ணை கூட்டி வந்துச்சு, மணப்பெண்ணும் ரொம்ப வெக்கபட்டுகிட்டே “இல்ல வந்து வந்து.......”ன்னு இழுக்க...

“பரவாயில்லை மணப்பெண்ணே சொல்லு வெட்கபடாத” மணாளன்.

“நம்ம ***** இல்ல.... அவனை லவ் பண்றேன்...எனக்கு ஹெல்ப் பண்ணுவயா ?” மணப்பெண்


ஙே! 
எங்கிருந்தாலும் வாழ்க....... (இளம் விதவன்!)

”ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்  *&^$*^$#% ஒழுங்கா ஓட்டுட்டு போடா பைக்க” இதுல என்ன தப்பிருக்குன்னு நீங்களே சொல்லுங்க? என்ன கொஞ்சம் அசிங்கமா ஒரே ஒரு வார்த்தை மட்டும் தான். காலேஜ் பைனல் ஹியர் முதல் நாள். இனி நாங்க தான் சீனியர்....காலரை தூக்கி விட்டுட்டு பத்து பேரு ஒன்னா போனப்ப ஒரு மூனு பேர் ஸ்பீடா போன பைக்கை பார்த்து கத்தினோம். அம்புட்டு தான்.

வந்தானுவ.... ”எவண்டா கத்தினது?” நமக்கு தான் வாய்கொழுப்பு அதிகமாச்சே.. “நீ ஏண்டா பைக்கை அப்படி ஓட்டிட்டு போன?”

“உன் மேல மோதினேனா? அப்புறம் உனக்கென்ன? எந்த ஹியர் நீங்கெல்லாம்?”

“ஐதோடா யார்கிட்ட கேக்குற? நீ யார்டா?” அமைதியா முறைத்துக்கொண்டே சென்றான்.

சாயங்காலம் நண்பர்கள் ஐந்து பேர் பஸ் ஸடாண்டிற்கு சென்றுக்கொண்டிருந்த போது எங்கிருந்து தான் பத்து பதினைந்து பேர் வந்தானுங்களோ.....டமால் டூமீல் டமால் டூமீல்

“சீனியர் கிட்டவே உங்க வேலைய காட்டுறீங்களா?”

ஙே!
இன்னும் ஆறு மாசம் கோர்ஸ் இருக்காம் அந்த பயலுவலுக்கு.....அவ்வ்


”இந்த தியேட்டருக்கு தான் நான் வாராவாரம் வருவேனே” பெண்கள் நாம சொல்ற பொய்ய உடனே நம்புவாங்க. ஆனா பொய் சொல்றோம்னு தெரிஞ்சா அப்புறம் உண்மைய சொன்னாலும் நம்ம மாட்டாங்க. தேவி தியேட்டர்ல படம் பார்க்குறதுன்னா கொஞ்சம் பெரிய விசயமா இருந்த காலம் அது. தோழிகளோடு படம் போன போது விட்ட டயலாக் தான் அது.

தேவிபாலாவுல படம். எல்லோரும் உள்ள போகும் போதே ’லிப்ட்லயே போலாமே?” என்றேன். கும்பலில் ஒருமாதிரி பார்த்த ஒருத்தி ’எதுக்கு? தியேட்டர் கீழ இருக்குன்னு நினைக்கிறேன்?”ன்னு சொல்ல அப்பயே மாட்டிகிட்டேன். இருந்தாலும் மேனேஜ் பண்ணி ’எனக்கு தெரியும்’ சிரித்துகொண்டே அங்கிருந்து நைஸாக நழுவி அவர்கள் பார்க்காத போது ஒரு ஆளிடம் “தேவிபாலாவுக்கு எப்படி போகனும்?”ன்னு மட்டும் தான் கேட்டேன்.

பயபுள்ள ஊருக்கே கேட்குறமாதிரியும், ஒன்றமணி செய்தி போலவும் கையையும் காலையும் ஆட்டி சொல்லுச்சு. பெரிய கும்புடு போட்டு நன்றி சொல்லிட்டு திரும்பினா.......... எல்லாரும் நிக்குறாங்க

ஙே!

புது கொசுவத்தி


இதை எழுதும் போதே பல நினைவுகள் வருகிறது. போன வருடம் வ.வா சங்கத்துல எழுதின இந்த பதிவும் கிட்டதட்ட இதே மாதிரியான பதிவு தான்.

நிறைய கோல் வாங்கின கதை இருந்தாலும் டீன் ஏஜ் ஒரு ரசிக்கதக்க ஒரு காலமா, எளிதில் மறக்க முடியாத நிகழ்வுகளா, நண்பர்களின் பேருந்து காதல், சண்டை, சச்சரவு, பார்ட்டி, படிக்க போட்டி போட்டது, கேம்பஸ்ல பெரிய கம்பெனியில செலக்ட் ஆனது, அது பிடிக்காம வேலைய விட்டு வேற வேலை கிடைக்காம நாயா அலைஞ்சதுன்னு காக்டெயிலா இருந்தது. இதை ஞாபகப்படுத்துற ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்த சின்ன அம்மணிக்கு நன்றி.

இதை தொடர நண்பர்கள் இளையபல்லவன்,ஆயில்யன், வினோத்கௌதம், நாஞ்சில் பிரதாப், கார்த்திகேயன்  அழைக்கிறேன். நேரமிருப்பின் பதிவிடலாம். விருப்பமுள்ள நண்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவிஞ்சா அவங்க பேரையும் சேர்த்து விடுவேன்.  அருமையான, சுவாரசியமான நிகழ்வுகள், நினைவுகள் பகிரலாம்.


Related Posts with Thumbnails