"அடடே வாங்க வாங்க சின்ன மாப்ள, காபி சாப்பிட்டீங்களா? “
“சாப்பிட்டேன் மச்சான்” சிரித்தேன். அண்ணியின் பெரிய அண்ணன்.
“இது தான் கல்யாண டிரஸா? சூப்பரா இருக்கு மாப்ள” என்றபடி அங்கிருந்து நகர்ந்து கல்யாண வேலையில் மூழ்கி போனார்.
“சின்ன மாப்ள......” சத்தம் கேட்டு திரும்பினேன்.
“வாங்க மாமா. வணக்கம்” பெரிய மாமா. அண்ணியின் பெரியப்பா.
“டிபன் சாப்பிட்டீங்களா மாப்ள?”
“இல்ல மாமா. நமெக்கென்ன அவசரம். வந்தவங்க மொதல்ல சாப்பிடட்டும். ஆமா காலையில டிபன் என்ன மெனு ”
“எல்லாம் இருக்கு மாப்ள. போய் மேல ஒரு எட்டு பார்த்துட்டு வந்திருங்க ரெடியாகிருச்சான்னு. அப்புறம் இது தான் கல்யாண சட்டையா?”
தலையை ஆட்டினேன். “சட்டை சூப்பரா இருக்கு மாப்ள” என்றபடி அவசரமாக சென்றார். சட்டை மேல் கொஞ்சம் கர்வம் வந்தது.
5 நிமிடம் கழித்து......
“அடடே வாங்க மாப்ள. குளிச்சு ரெடியாகிட்டீங்க போல?” சத்தம் கேட்டு திரும்பினேன். அண்ணியின் அப்பா
“ஆமாம் மாமா. காபி சாப்பிட்டீங்களா மாமா” இந்த தடவை நான் முந்தினேன்.
“அதெல்லாம் ஆச்சு மாப்ள. ஆமா இது தான் கல்யாண டிரஸா? “
”ஆமா மாமா”
“செலக்ஷன் சூப்பர் மாப்ள. அருமையா இருக்கு” என்றபடி தலைக்கு மேல் இருக்கும் ஆயிரத்தில் ஒரு வேலையைப் பார்க்க சென்றார்.
மைல்டா டவுட் வர ஆரம்பிச்சது. இருந்தாலும் போய் வாசலில் நின்று வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தேன்.
“மாப்ளே......” அட சின்ன மச்சான். அண்ணியின் கடைசி அண்ணன்
“குட் மார்னிங் மாப்ள. என்ன இம்புட்டு லேட்டா எழுந்திருச்சிருக்கீக?”
“இல்ல மச்சான். நேத்து நைட்டு ப்ரெண்ட்ஸ ஹோட்டல்ல விட்டுட்டு வரலாம்னு போனேன். அவங்களோட ஓட்டல் ரூம்லயே தங்க வேண்டியதா போச்சு. காலையில நேரா எழுந்திருச்சு வாரேன்”
“சட்டை எங்க வாங்கினீக? துபாய்லயா?”
“இல்ல சென்னையில தான்.....” கொஞ்சம் டவுட்டோடு
“இல்ல சூப்பரா இருக்கு. அதான் கேட்டேன்” அவ்வ்வ்வ்வ்வ்வ் கன்பார்ம்டு.......
இங்கு வந்து அந்த சட்டையை போடுவதே இல்லை. போன மாசம் ஒரு நாள் அதை எடுத்து அயர்ன் செய்யும் போது சேட்டன் வந்தார்.
“தம்பி ஷர்ட் புதுசா? எப்ப எடுத்த?”
“சென்னையில சேட்டா”
” சூப்பரா இருக்கே..................”
அவ்வ்வ்வ்வ்வ்வ்..... அப்படியே அயர்ன் செய்த சட்டையை மடித்து உள்ளே வைத்து விட்டேன்.
-------------------------------------------------------------------------------------------------
உலகத்தில் என்னென்ன படம் ரிலீசாகி இருக்கிறதோ அத்தனையும் பார்த்திருப்பார்கள் போல நம் பதிவுலகத்தில் சில மக்கள். சீனா, கொரியா, ஸ்பெயின், பிரஞ்ச் என பல மொழி படங்களின் மீதான இவர்களின் ஆர்வம் வியக்க வைக்கிறது. சென்ஷி, அய்யனார், கார்த்திகேயன், கலையரசன், ஹாலிவுட் பாலா போன்ற சிலர் சில நல்ல எடுத்துகாட்டு.
“old boy" என்கிற வித்தியாசமான கொரிய படத்தை கலையரசன் பரிந்துரைக்க இந்த வாரம் கண்டேன்.

காரணமே தெரியாமல் நமது ஹீரோவை 15 வருடம் தனிமை சிறையில் அடைத்து வைக்கப்படுகிறான். தன்னுடைய மனைவியையும் மூன்று வயது குழந்தையையும் பிரிந்து வாடுகிறான். அவனுடைய மனைவி கொல்லப்படுகிறாள். அதன் பழி இவன் மேல் விழுவதுமில்லாமல் தலை மறைவாகிவிட்டான் என்ற பழியும் கிடைக்கிறது.
15 வருடம் கழித்து 5 நாட்களுக்கு மட்டும் விடுவிக்கப்படும் அவன் தன்னை அடைத்து வைத்தது யார்? ஏன்? என்ற கேள்விக்காக அலைகிறான். அவனுக்கு உதவியாக தன் பழைய நண்பனும், ஒரு 18 வயது பெண்ணும் இருக்கிறார்கள். அந்த பெண்ணும், ஹீரோவும் காதலில் விழுகின்றனர். அடைத்து வைத்தவனை கண்டுபிடிக்கிறான். ஆனால் காரணம் கண்டுபிடிக்க முயல்கிறான். காரணமும் கண்டுபிடிக்கிறான்.
உதவியாக இருந்ததற்காக நண்பனை இழக்கிறான். காதலியையும் கொலை செய்து விடுவேன் என வில்லன் மிரட்டுகிறான். ஆனால் முடிவு????? யாருமே எதிர்பார்க்காத முடிவு. disaster ending :( பழிவாங்குதலின் உச்சக்கட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும்.
அந்த வித்தியாசமான முடிவை மிக லாவகமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். ஆனால் நாம் அதை ஏற்போமா? என்னால் ஜீரணிக்க கூட முடியவில்லை. மதில் மேல் பூனையாக நிற்க வைக்கப்படுகிறோம். உங்களால் முடிகிறதா என பார்த்துவிட்டு சொல்லுங்கள். சப்-டைட்டிலோடு பார்க்கவும்.
------------------------------------------------------------------------------------------------
நீண்ட நாள் ஆசையாக ஹிட்லரின் வாழ்க்கை வரலாரைப் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஹிட்லர் சிறையில் இருக்கும் போது எழுதிய “மெயின் காம்ப்”யை தமிழில் மொழி பெயர்த்து “எனது போராட்டம்” என ஸூப்பரமண்யம் எழுதியி்ருக்கும் புத்தகம் ஒரு மாதம் முன்பு கிடைத்தது.
ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக செல்ல ஆரம்பத்த புத்தகம், 19ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய அரசியலை மிக விரிவாக விவரிக்க விவரிக்க...... கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை. ஐம்பது பக்கங்களை கூட தாண்டாமல் அப்படியே மூடி வைத்து விட்டேன். அதுவும் ஒரு வார காலமாக ஐம்பது பக்கங்கள் தான் படிக்க முடிந்தது. கொஞ்சம் சுருக்கியாவது எழுதியிருக்கலாம். அவர் எழுதியதை அப்படியே அச்சு பிசகாமல் மொழி பெயர்த்திருக்கிறார் போல. போதும்டா சாமி என்றாகிவிட்டது.
அதிலும் அதிகமான சமஸ்கிருத சொற்கள் வேறு. ஆசிரியர் பெயர் ஸ.ஸூப்பரமண்யம் என்றிருக்கும் போதே கொஞ்சம் உசாராகி இருக்க வேண்டும். மலேசியத்தமிழராம். நேர விரயம் தான் மிச்சம். ஹிட்லர் பற்றிய ஏதேனும் வேறு நல்ல புத்தங்கள் தமிழில் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
------------------------------------------------------------------------------------------------
இந்தியர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்திருக்கும் அடுத்த படம் ‘Paa’ என்ற ஹிந்தி படம். ஏற்கனவே இளையராஜாவின் பாடல்களும், தீம் மீயூஸிக்கும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்க, பி.சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் அனைவராலும் பாராட்டைப் பெற்றுள்ளது. தீம் பாடலாக அது ஒரு கனா காலம் படத்தில் வரும் “காட்டு வழி” என்ற பாடல்.
இன்னும் மூன்று தமிழ்பாடல்களையும் உபயோகித்துள்ளார். அமிதாப் இளையராஜாவை போகும் இடமெல்லாம் புகழ்ந்து தள்ளுகிறாராம். இயக்குனரும் தமிழர் தான். ஆக தமிழிலும் மொழிபெயர்க்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்த ஜோடி கொடுத்த “சீனி கம்” ஹிட். இதுவும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
வழக்கம் போல சில சர்ச்சைவாதிகள் இது பிராட் பிட்’டின் “பெஞ்சமின் பட்டன்” படத்தின் அப்பட்டமான காப்பி என புலம்பி வருகின்றனர். எதுவாக இருந்தாலும் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சிக்கலாம். சும்மா அடிச்சு விடக்கூடாது. அப்புறம் படத்தின் பட்ஜெட் 15 கோடி தானாம். மேக்கபிற்கு மட்டும் 4 கோடியாம். (கமல்ஹாசனைப் பார்த்தால் ஏனோ பாவமாகத்தான் இருக்கிறது)

-------------------------------------------------------------------------------------------------
இது பல பேருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்காக இந்த செய்தி.
”நவீன தமிழ் இலக்கிய கர்த்தாக்களின் படைப்பு பெட்டகம்” என்ற தலைப்பில் ஒரு வலைப்பூவை ஒருவர் நடத்தி வருகிறார். பல இலக்கிய எழுத்தாளர்களின் அறிய எழுத்துகள் இங்கு கிடைக்கப்பெறுகின்றன. நகுலன், புதுமைப்பித்தன், மௌனி, சுரா, பா சிங்காரம் என பலரது கதைகள் இங்கு கிடைக்கின்றன.
மிகவும் சிரத்தையோடு பதிந்து வரும் அந்த அன்பருக்கு பாராட்டுகள். நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.
-------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ ஸ்ரீ மங்கள தினத்தில் ...................... இன்னாருடைய மகனுக்கும், இன்னாருடைய மகளுக்கும் என ஆரம்பிக்கும் கலயாணபத்திரிக்கையும், டஸ்ஸூ, புஸ்ஸூன்னு ஆங்கிலத்தில கவிதை பாடி அழைக்கும் பத்திரிக்கைகளையும் தூக்கி சாப்பிடுற மாதிரி ஒரு அழகான தமிழ் பத்திரிக்கை மின்னஞ்சல்ல வந்தது. ரொம்ப ரசிக்கத்தக்கதா இருந்தது இந்த பத்திரிக்கை.

இதே மாதிரி தமிழ்ல இனி முயற்சி செய்யலாம் போலயே :)




