தமிழ்நாட்டை பிடித்திருக்கிற கிரகம் உங்களுக்கும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை நினைக்கும் போது கொஞ்சம் சந்தோஷமா தான் இருக்கு :)
-------------------------------------------------------------------------------------------------
இரண்டாம் நாளே “உன்னைப் போல் ஒருவன்” படத்தைப் பார்த்துவிட்டாலும் மூன்று நாட்கள் விடுமுறையில் பதிவேதும் எழுதவில்லை. நேற்று தமிழ்மணத்தை திறந்ததும் கண்ணில் படுவதெல்லாம் விமர்சனப்பதிவுகளே. இனி எனது பாணியில் எழுதினாலும் கும்பலில் போடும் கோவிந்தாவாக மாற வாய்ப்புண்டு.
ரம்ஜான் மாதத்தின் மதிய வேளையில் படம் பார்த்ததால் இடைவேளையே வரவில்லை. இடைவேளை பற்றிய எண்ணம் வராமல் ஒரு தமிழ் படத்தைப் பார்த்த மக்களை காண்பது இதுவே முதல்முறை. அதே போல் படத்தை முடித்து வெளிவரும் போது அனைவரின் முகத்திலும் ஒரு நிம்மதியை பார்க்கமுடிந்தது. அவசரம் அவசரமாக எடுக்கப்பட்ட படத்தில் எக்கசக்க லாஜீக் உதைகள், தில்லாலங்கடித்தனங்கள் இருந்தாலும் படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஆயிரம் பேருக்கும் குறைவாக படிக்கும் வலைப்பதிவில் தனது கருத்தை வெளியிடுவது தவறில்லை அதுவும் படத்தைப் பார்த்துவிட்டு...... ஆனால் படத்திற்கு இதுவும் ஒருவகையில் வெற்றியே!
அது சரி கேரளாவுல கோழிகோட்டில் இந்த படத்தை ரீலீசாகவே விடலையாமே? இந்த பிரச்சனையைப் பற்றி யாரும் பேசவே மாட்டேங்கிறாங்களே. ஏன்?
------------------------------------------------------------------------------------------------
நண்பர் ஒருவர் ”இந்த படத்தில் கமலை ஒரு முஸ்லீமாக காட்டியிருக்கலாம். இது போன்ற பிரச்சனையே வராது இருந்திருக்கும்” என்றார்.
எனக்கென்னவோ விஜயகாந்தின் “கள்ளழகர்” படம் ஞாபகம் தான் வந்தது. (ஹலோ பாஸ் சிரிக்காதீங்க!)
------------------------------------------------------------------------------------------------
”எவ்வளவு நாள் தான்பா அங்கேயே வேலை பார்ப்ப, இங்க வந்திரு இராசா” என்று போன வாரம் அப்பா தொலைபேசியில் பேசும் போது கூறினார். இதுவரை இப்படி கூறியதில்லை.
கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. “கண்டிப்பா அடுத்த வருசம் வந்திடுறேன்ப்பா” என்றேன்.
“ஏன் இங்க வந்தா நல்ல வேலை கிடைக்காதா தம்பி?” என்றார்
“கிடைக்கும்ம்ம்ம்ம்..” இழுத்தேன்
“இல்ல சொந்தமா ஏதாவ்து செய்யுப்பா. நாலைஞ்சு கம்யூட்டர வாங்கி போட்டு எதுவும் செய்ய முடியாதா? குடிசைத்தொழில் மாதிரி?”
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
------------------------------------------------------------------------------------------------
சமீபத்தில் நெஞ்சை உருக்கிய வாழ்க்கை வரலாறு “கோபி கிருஷ்ணனு”டையது. தூயோன் படிக்க ஆரம்பித்து ஒருவகை கிறக்கத்தில் கோபி கிருஷ்ணனை தேடி அலைந்த போது கிடைத்தது தான் ஜ்யோராம் சுந்தர் இட்டுள்ள தொடர் பதிவான கோபி கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு.
இது எப்படி படிக்காமல் விட்டேன் என்று தெரியவில்லை. இலக்கியவாதி என்பதின் முழு அர்த்தம் ஓரளவு புரிபட தொடங்கியது :) ஒரு நேர்மையை அவரின் எழுத்துக்களில் காணமுடிகிறது. தனக்கு ஏற்பட்ட மனரீதியான பிரச்சனையை கூட நேர்மையாக கூறிய விதமும் அவர்மேல் மரியாதையையே கூட்டுகிறது.
தூயோனில் பல இடங்களில் இயல்பான புன்னகையை வரவழைக்கிறது கோபி கிருஷ்ணனின் எழுத்துக்கள். ஆனால் அவரின் முரணான நிஜ வாழ்க்கை இலக்கிய உலகிற்கு கிடைத்த சாபமாக தான் எண்ணத்தோன்றுகிறது.
------------------------------------------------------------------------------------------------
ஒரு மதிய உணவு இடைவேளையின் போது டேமேஜர், சுமாரான அறிவாளி, சூப்பரான அறிவாளி மூனு பேரும் வெளிய வாக்கிங் போறாங்க. தீடீரென்று அங்கிருந்த கல் இடறி மூன்று பேரும் கீழே விழுந்த போது கடவுள் தோன்றினாராம்.
மூன்று பேருக்கும் தனித்தனியே வரம் கொடுப்பதாக கடவுள் கூறினாராம். சுமாரான அறிவாளி “ஒரு நல்ல கம்பெனியில நல்ல வேலை கிடைக்கனும், வேலையே செய்யலனாலும் சம்பளம் வரனும். யாரும் எந்த கேள்வியும் கேட்க கூடாது”ன்னு கேட்டானாம்
சூப்பரான அறிவாளி“கேரளாவுல மலை மேலே ஒரு பெரிய வீடும், பணத்தை பற்றிய கவலையும் இல்லாம, என்னை சுத்தி நிறைய அழகான பெண்களும் இருக்கனும்”ன்னு கேட்டானாம்.
டேமேஜர் “ லஞ்ச் முடிய நேரமாச்சு அந்த ரெண்டு பேரையும் மறுபடியும் ஆபிஸூக்கு கொண்டு வாங்க”ன்னு கேட்டானாம்.
இப்படிக்கு
ரம்ஜானின் நாலு நாள் லீவு முடிந்து இன்று வேலைக்கு சேர்ந்திருக்கும் சூப்பரான அறிவாளி
நான் ஆதவன்























