நேற்று காலை வழக்கம் போல எழுந்து குளித்து விட்டு ரூமிற்குள் நுழையும் போது வழக்கம் போல ஏசியா நெட் நீயூஸ் சேனல் ஓடிக்கொண்டிருந்தது.
இந்த சேனலுக்கு ஏதாவது ஒரு சின்ன விஷயம் கிடைத்தால் போதும். அன்றைய பொழுது முழுதும் "சர்ச்சை" என்ற பெயரில் ஒரு நாள் முழுதும் ஏதாவது ஓட்டி விடுவார்கள். நம்ம மலையாள நண்பர்களும் அதையும் கேட்டு சீரியஸாவார்கள்.
ஒருமுறை "முல்லை பெரியாறு" பிரச்சனையைப் பற்றி சர்ச்சை என்ற பெயரில் சேனல் ஏதேதோ உளறி கொண்டிருக்க, நமக்கு அதையெல்லாம் கேட்டு வேறு எதுவும் பேசாமல் அடக்கிவாசிக்கவேண்டியிருந்தது. நம்ம ரூமில் உள்ள சேட்டன் மார்கள் அப்பொழுது தான் அவர்கள் தரப்பு நியாத்தை நம்மிடம் சொல்வார்கள். யோவ் நான் எதுனா கேட்டேனா? பேசாம இருங்கைய்யான்னா கேட்க மாட்டானுங்க.
என்னிடம் சொல்லி எந்த பிரச்சனையும் தீரப்போவதில்லை என்று நன்றாக தெரிந்தும் என்னவோ நான் தான் தமிழக முதல்வர் மாதிரி என்னிடம் சொல்லவதுண்டு.
நேற்று இடுக்கி அருகில் உள்ள நிறைய சிறிய மருத்துவமனையில் உபயோகப்படுத்திய "சிரெஞ்சு"களை தமிழகத்திலிருந்து வரும் ஆட்கள் வாங்கி செல்வதாக ஒரு சிறிய "சர்ச்சை" ஏசியாநெட் நியூஸ் சேனலில் தெரிவிக்கப்பட்டது.
மிகவும் அதிர்ச்சிகரமான ரிப்போர்ட் அது. ஒருதடவை உபயோகப்படுத்திய ஊசிகளை திரும்ப உபயோகிக்ககூடாதென்று சட்டம் இருப்பதாகவும், மேலும் உபயோகப்படுத்திய சிரெஞ்சுகளை முறைப்படி களைய வேண்டுமென்றும் சிறிய விளக்கமும் அதே சேனலில் வழியே தெரிவிக்கப்பட்டது.
மிகவும் சோகமான விஷயம் என்பதாலும், மேலும் அது தமிழ்நாட்டுக்கு அனுப்படுவதாலும் என் முகத்தில் கவலை ரேகை தெரியதொடங்கியது. என்ன கொடுமை இது. அங்கிருக்கும் பஞ்சாயத்து யூனியன் இதெயெல்லாம் கவனிப்பதில்லையா? என்று சேட்டனிடம் கவலையோடு வருத்தத்தை தெரிவித்தேன்.
டி.வியில் ஊசியை அள்ளி போகும் ஒரு தமிழ் ஆள் பேட்டி ஒன்றையும் வெளியிட்டார்கள். அவர் "கடந்த பல வருடங்களாக இதே தொழிலில் ஈடுபட்டிருப்பதாகவும் அவரிடம் இருந்து ஒரு கும்பல் வாங்கி செல்வதாகவும்" மிகத் தெளிவான தமிழில் பேட்டி கொடுத்திருந்தார்.
ரூமில் ஒரு சேட்டன் "தம்பி இதையெல்லாம் எடுத்து அவர் எந்து செய்யும்?. தம்பி நாட்டுக்கு போகும் போல் கொரஞ்சு சூசிச்சு போகனும்" கக்கே பொக்கே கக்கே பொக்கேன்னு வழக்கம் போல சிரிப்பு.
அடங்கொக்க மக்கா இதுக்கெல்லாமா நம்மள கிண்டல் ஏத்துவானுங்க, சரி விடு நம்ம இத விட பயங்கரமா நம்ம கிண்டல் ஏத்தி இரண்டு நாள் நம்மகிட்ட பேசாம கூட இருந்திருக்கானுங்க. இதெல்லாம் சகஜம்.
அப்படி நினைச்சுகிட்டே ஆகா நம்ம மக்கள் இந்த ஊசியை மறுபடி உபயோகிச்சா என்னென்ன நோய் வருமோன்னு கவலையோட நியூஸை பார்த்துகிட்டு வந்தேன்.
நியூஸ்ல கடைசியா "தமிழ்நாட்டுல இதை கடத்தி கொண்டு போய் கொஞ்சம் சுத்தப்படுத்தி திரும்பவும் கேரளாவுக்கே விற்பதாக" சேனலில் சொல்ல, ங்கொக்கா மக்கா சின்ன கேப்பு கிடைச்சா லாரியே ஓட்டலாம் இத விடுவேனா.... நான் சேட்டன் பக்கம் திரும்பினேன் வழக்கம் போல....
நான் சிரிக்காமஎன்ன சொல்லி வெறுப்பேத்தியிருப்பேன்னு உங்களுக்கே தெரியும். இன்னைக்கு காலையில இந்த பதிவ போடுற வரைக்கும் சேட்டன் என்கிட்ட சரியா பேசல. விடு கழுதைய....
நிலைமை ரொம்ப மோசம் தான். ஆனா இத யார் தடுப்பது? டி.வி வரைக்கும் வந்தும் யாரும் ஏதாவது செஞ்சாங்களானு தெரியல? இது நம்ம தமிழகமும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக வேறு சொல்கிறார்கள்.
அப்படியென்றால் அது தமிழ்நாட்டுக்கும் விற்பனை செய்யப்படாமலா இருக்கும்?. இது தமிழக சுகாதாரத்துறைக்கு தெரிந்திருக்குமா? இல்லையென்றால் எப்படி, யாரிடம் தெரியப்படுத்துவது?
பல கேள்விகள் விடை தெரியாமல் இருக்கிறேன். சேட்டன் என்னிடம் பேசாமல் இன்று காலையும் நீயூஸ் சேனல் பார்த்துகொண்டிருந்தார் ....






































