கலக்கும் பதிவர்கள் - பஞ்சாமிர்தம்

தொடர்ச்சியாக பல பதிவர்கள் அச்சு ஊடகங்களில் தங்கள் பங்களிப்பை கொடுத்துக் கொண்டிருக்கும் போது அடுத்ததாக அய்யனாரும் இதில் தன் பங்களிப்பை கொடுத்துள்ளார். அவருடைய மூன்று புத்தங்கள் சென்னை புத்தக கண்காட்சியில் வெளிவர இருக்கின்றன. அவருக்கு என் வாழ்த்துகள். விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும்.

பழைய கிசுகிசு: பதிவர் மாதவராஜ் பல பதிவர்களின் சிறுகதைகளையும் கவிதைகளையும் தொகுத்து “கிளிஞ்சல்கள் பறக்கின்றன - தொகுப்பு மாதவராஜ்(வலைபதிவுகளிலிருந்து நூறு கவிதைகள்)” மற்றும் “மரப்பாட்சியின் சில ஆடைகள் - தொகுப்பு மாதவராஜ்(வலைபதிவுகளிலிருந்து சில நவீன சிறுகதைகள்)” என இரண்டு புத்தகங்களாக வம்சி புக்ஸ் மூலமாக வெளியிடுகிறார். இதில் பல பதிவர்களின் கவிதைகளும், கதைகளும் வருகிறதாம். இடம்பெறும் அனைத்து பதிவர்களுக்கும் என் வாழ்த்துகளும், பாராட்டுக்களும் :)
--------------------------------------------------------------------------------------------------------------
மனோனரமா நியூஸ் சேனலில் இந்த வருடத்தின் அரசியல் காமெடிகள் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி வந்தது. சேட்டன் பரிந்துரைசெய்து பார்க்கச் சொன்னார். கேரள சுதாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீமதி ஒரு மருத்துவகல்லூரி விழாவிற்கு சென்ற போது பேசிய ஆங்கில உரையின் தொகுப்பை வெளியிட்டுருந்தார்கள்.பார்க்க வெடிச்சிரிப்பாக இருந்தது அந்த உரை. அவருக்கு ஆங்கிலம் வரவில்லை. வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தை கொத்து பரோட்டா போட்டுக்கொண்டிருந்தார். சேட்டன் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார். எனக்கு பாவமாக போய்விட்டது.“சிரிக்க வேண்டாம் சேட்டா” என்ற போது, அந்த நிகழ்ச்சி கேரளத்தில் ஒரு மருத்துவ கல்லூரியில் நடப்பதாகவும், மலையாளத்திலேயே பேசலாம் என்றாலும் அமைச்சர் வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் பேசினார் என்றும் கூறினார். “இருந்தாலும்...” இழுத்த போது அந்த அமைச்சரைப் பற்றி ஒரு விசயம் கூறினார் சேட்டன்.


அமைச்சர் ஸ்ரீமதி 2006ல தான் மந்திரி பதவி ஏற்றதும் தன் மருமகளை தனக்கு சமையல்காரியாக அரசாங்க உத்தியோகத்தில் அமர்த்தினாராம். என்னது தன் மருமகளையா? என அதிர்ச்சியடைய வேண்டாம். பின்பு ஒரு வருடம் கழித்து 2007ல ஒரேடியாக கெஜட்டட் ஆபிஸராக( gazetted officer-தமிழ்ல என்ன?) பதவி உயர்வு கொடுத்திருக்காங்க இந்த அம்மா. ஏற்கனவே அந்த பதவியில இருந்தது இந்த அம்மாவோட உறவினர் தானாம். விசயம் பெரிசாகி எதிர்கட்சியில் பிரச்சனை பண்ண ஆரம்பிச்சுட்டாங்களாம். ஆனா இப்ப அந்த மருமகளை வேலைய விட்டு தூக்கினாலும், ரெண்டு வருசம் வேலை பார்த்ததால பென்சன் பணம் கண்டிப்பா வருமாம். என்ன கொடுமை சார் இது? 


அப்புறம் இன்னொன்னு காமெடியும் சொன்னாங்க கேரளத்தின் உள்துறை அமைச்சரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான கொடியூர் பாலகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போலீஸ் துறையில் தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட புதியதுறையை தொடஙகி வைக்கவந்தபோது எழுதினது :)


 யாரையும் எங்கேயும் ஆங்கிலத்தில பேசச்சொல்லி கட்டாயப்படுத்தல. நாடாளுமன்றத்திலேயே நம்ம எம்பிக்கள் ஆங்கிலம் தெரியலைன்னா தமிழ்ல தான் பேசுறாங்க. இல்லைன்னா மொழி பெயர்ப்பாளர் வச்சுகிறாங்க.
--------------------------------------------------------------------------------------------------------------
”என் பெயர் ராமேஷேசன்” படிச்சதிலிருந்து ஆதவன் மேல கொஞ்சம் பித்து பிடிச்ச மாதிரி ஆகிடுச்சு. அவரோட சிறுகதைகளோட(அநேகமா மொத்த சிறுகதைகளும்) தொகுப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுயிருக்கு.  ஆர். வெங்கடேஷ் என்பவர் தொகுத்திருக்கார்.தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளாக பல கதைகளை உள்ளடக்கியது இந்த தொகுப்பு.

மொத்தம் 800 பக்கங்கள். இதுவரை பகுதிக்கும் மேல் முடித்தாயிற்று. ஒவ்வொரு மத்திய தர , அல்லது அதற்கும் மேலே உள்ள மனிதனின் பிரச்சனைகளையும், உள்ளக்குமுறல்களையும், விருப்பு வெறுப்புகளையும், அவரின் வாழ்க்கைக்கான உண்மையான சுயதேடல்களையும், தன் இரத்த பந்தங்களிடையே  கூட இடும் மூகமூடித்தனத்தையும் வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது ஒவ்வொரு சிறுகதையும். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு தளத்தில் பின்னப்பட்டிருந்தாலும் ஒரேவிதமான பாதிப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்த தவறவில்லை.முழுதும் படித்து முடித்த பின் சற்றே விரிவாக காணலாம்
---------------------------------------------------------------------------------------------------------------
”அவதார்-3டி” ஒருவழியா போன வாரம் பார்த்துட்டேன். நிறைய விமர்சனம் படிச்சிருப்பீங்க.  சின்ன சின்ன விசயங்களை பார்த்து பார்த்து பண்ணினவங்க கதையிலும், திரைக்கதையிலும் கவனம் செலுத்தாம விட்டுட்டாங்க. 2.45 மணி நேரம். கொட்டாவி வந்திடுச்சு. இருந்தாலும் சில விசயங்கள் பாராட்டாம இருக்க முடியல. குழந்தைங்களோட 3டியில் கண்டிப்பா பார்க்கலாம். உலக சினிமா தொழில்நுட்பத்துல ஒரு மைல் கல் இந்த படம்.

நைட்டு பார்த்துட்டு வந்து மொட்டு வளையத்தைப் பார்த்து யோசிச்சுட்டு இருந்தப்ப ஒரு விசயம் தோணிச்சு. இதில் சொல்ல வந்த விசயத்தை கவனிக்கனும். “நாவி” என்ற வேற்று கிரக வாசிகளோட உருவ அமைப்பு, வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பார்க்கும் போது இந்தியத்தாக்கம் அதிகமா தெரியுது. கடவுள் பக்தி மற்றும் இயற்கையான விசயங்களான மரம் செடிய கூட வழிபடுறதுன்னு நிறைய விசயம் ஒத்து போச்சு. அதாவது நாம தான் உலகத்துல முதலில் தோன்றிய மனித இனம், அப்படி இன்னொரு கிரகம் இருந்ததுன்னா அதுவும் இந்தியர்கள் போலத்தான் இருக்கும்னு சொல்ல வர்ர மாதிரி இல்ல? (ஹிஹி நைட் ஷோ பார்த்துட்டு தூக்கம் வரலைன்னா எப்படி எல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு)
--------------------------------------------------------------------------------------------------------------
“இன்னொரு முறை ரூம்ல கால் வச்ச காலை ஒடுச்சு போட்டுருவேன்” நண்பனின் அறைக்கு சென்றபோது இதை கேட்டு ஜர்க்கானேன்.

நண்பன் ஒருவன் வேறொரு நண்பனை திட்டிகொண்டிருந்தான். “என்ன மச்சி ஆச்சு?”என்றேன்

திட்டு வாங்கியவன் “டாய்லெட்டிலிருந்து வர்ரதுக்கு ஒரு அரைமணி நேரம் ஆச்சுடா. அதுக்கு போய் திட்டுறான்” என்றான்

திட்டியவன் “எதுக்கு லேட்டாச்சுன்னு கேளுடா”

திட்டு வாங்கியவன் “காலையில பேப்பர் படிச்சாதான் எனக்கு கக்கா வரும். அதுனால லேட்டாச்சுடா”என்றான். நான் அவன் பக்கம் திரும்பினேன்

“பேப்பர் படிச்சது குத்தமாய்யா” என்றேன்

திட்டியவன் “அதெல்லாம் குத்தமில்ல... “ஈ-பேப்பர்” படிச்சா குத்தமா இல்லையா? அதுவும் என் லேப்டாப்ல” என்றான் கோவம் மாறாமல்.

ங்கொய்யால.....
--------------------------------------------------------------------------------------------------------------
அனைவருக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)

ஊருவிட்டு ஊரு வந்து....

ஒரே வயதொத்த(?) பதிவர்களுடனும், அனைத்து பதிவர்களுடனும் என இரு தினங்களாக  நடைபெற்ற பதிவர் சந்திப்பை முடித்துவிட்டு நேற்று என் அறைக்கு திரும்பாமல் நண்பனை காணச் சென்றிருந்தேன். பதிவுலகம் அறியாத என் சென்னை நண்பர்களின் அறை அது. அலுப்பும் உடல் வலியோடு அந்த அறைக்கு சென்றால் அங்கே நடக்கும் பேச்சுக்களும், அரட்டைகளும் அனைத்தையும் மறக்கச் செய்யும்.  ஆனால் நேற்று நடந்ததோ வேறு!

படுக்கை அறையில் தலையை தலையணையில் புதைத்து கூனிக்கொண்டு படுத்திருந்தான் தணிகைவேலன்.நெற்றியில் விபூதி பட்டையை இட்டுருந்தான். அவனை அந்த கோலத்தில் பார்க்க சற்று சிரிப்பாக இருந்தாலும் சூழ்நிலை அவனுக்கு ஏதோ உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக காட்டவே படுக்கை அறையை விட்டு வெளியே வந்தேன்.

விஷயம் ஏதுமறியாமல் சாதாரணமாக நினைத்து வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்றுமில்லாமல் அன்று நண்பனின் அறை சூன்யம் பிடித்தது போல் இருந்தது. அருகில் அமர்ந்து தொலைக்காட்சியில் கண்களை மட்டும் செலுத்தியிருந்த பிரபு கூட ஏதும் சொல்லாமல் இருந்தான்.

“என்னடா ஆச்சு. ஏன் எல்லாம் உம்முன்னு இருக்கீங்க? அவன் என்னடான்னா அப்படி சுருண்டு படுத்திருக்கான்? என்னாச்சு எல்லாருக்கும்?” என்றேன்.

பிரபு பாலாஜியைப் பார்க்க, பாலாஜி ஒன்றும் சொல்லாமல் தலையை கவிழ்ந்து கொண்டான். ஏற்கனவே அசதியில் இருந்த எனக்கு இவர்களின் செயல் கோபத்தையே வரவழைத்தது. என் கோபத்தின் விளைவு அனைவருக்கும் தெரியுமாததால் பிரபு தான் மெல்ல ஆரம்பித்தான்.

“இல்ல...வந்து. இன்னைக்கு....” பிரபு

“டேய் சும்மா இரு. ஒன்னுமில்ல சூர்யா. அப்புறமா சொல்றேன்” என்றான் பாலாஜி.

“இப்ப சொல்ல போறீங்களா இல்லையா?” நான்

“இல்லைடா இன்னைக்கு தணிகை ரொம்ப நச்சரிச்சான் அதான் நாங்க மூனு பேரும் அங்க போனோம்டா”  பிரபு

“அங்கன்னா....... எங்க?” சந்தேகம் வர ஆரம்பித்தது.

“அங்க தான். நாங்க மூனு பேரு தான். உன்கிட்ட சொல்ல வேணாம்னு நினைச்சோம். ஆனா.....”

நாற்காலியை பின்னால் தள்ளி விருட்டென எழுந்தேன். சந்தேகம் சரி தான்.

“!@#$%.. அப்புறம் எதுனா சொல்ல போறேன். அசிங்கமா இல்லைடா உங்களுக்கு?”

“இல்லடா தணிகை ரொம்ப வற்புறுத்தினான். ஆசைய அடக்கமுடியலைன்னு ஏதேதோ சொல்லி எங்க மனசையும் கொஞ்சம் கொஞ்சமா மாத்திட்டான். யோசிக்காம போயிட்டோம்டா. ஏதேதோ நடந்து போச்சு மச்சி. இப்ப தணிகை போன தடவை போல பயந்து படுத்திருக்கான். ” தலையில் அடித்துக்கொண்டான் பிரபு.

” ம*று அன்னைக்கு தான் அங்க எல்லாம் போக மாட்டோம்னு சாமி படம் முன்ன சத்யம் பண்ணீங்க?  போன தடவை போயிட்டு வந்தப்பவே ரொம்ப பயந்து போய் ஒரு மாசம் வரை எப்படி இருந்தீங்கன்னு ஞாபகம் இல்லையா? அதுக்குள்ள என்னடா அவசரம் உங்களுக்கு? நம்பள நம்பி தானே நம்ப வீட்ல இங்க அனுப்பியிருக்காங்க. நமக்கு ஏதாவது ஏடாகூடமா ஆகிப்போச்சுன்னா அவங்க நிலைமைய நினைச்சுப் பார்த்தயா?”

“ஸாரிடா.. சத்தியமா இனிமே இந்த தப்பு பண்ண மாட்டோம்டா. அந்த போன் நம்பரை கூட டெலிட் பண்ணிட்டோம். வேணும்னா செக் பண்ணி பாரு. ஆனா தணிகைக்கு மட்டும் கொஞ்சம் தைரியம் சொல்லு. அவனுக்கு.......”

“அவனுக்கு....? அவனுக்கு என்ன?”

“அவனுக்கு ஸேப்ட்டிக்காக கொடுத்ததை அவன் யூஸ் பண்ணல. போயிட்டு வந்து இப்ப  பயப்பட்டுகிட்டு இருக்கான். பாவம் கண்டதை நினைச்சு கற்பனை பண்ணிட்டு இருக்கான் மச்சி. இப்ப ஆறுதலா எது சொன்னாலும் காதுல விழாத மாதிரியே இருக்கான். பயமா இருக்குடா” பாலாஜி.

“அடப்பாவிகளா! அதான் டிவியில பத்திரிக்கையில, நெட்லன்னு எத்தனை விழிப்புணர்வை படிக்கிறீங்க? அப்படி இருந்துமாடா? எத்தனை முறைடா உங்களுக்கு சொல்றது? நாடு விட்டு நாடு பொழைக்க வந்த இடத்துல கையையும் காலையும் வச்சுட்டு சும்மா இருக்க முடியலல்ல உங்களுக்கு? ஒழுங்கா ஊரு போய் சேருற ஐடியா எல்லாம் இல்ல போல. உங்க அம்மா அப்பாவுக்கெல்லாம் தெரிஞ்சா எவ்வளவு கஷ்டபடுவாங்க” என்றேன்.

“யோக்கியன் மாதிரி பேசாதடா. நீ தானே அந்த நம்பர கொடுத்ததே. இப்ப நடக்க வேண்டியதைப் பத்தி மட்டும் பேசு. தணிகை ரொம்ப பயந்து போயிருக்கான். எப்ப என்ன பண்றதுன்னு மட்டும் சொல்லு” பாலாஜி

“ஓ நம்பர் கொடுத்தா எல்லாத்துக்கும் காரணம் நான் ஆகிடுவேன்னா? நீங்கெல்லாம் கேட்டதால தானே நான் என் இன்னொரு நண்பன் கிட்ட இருந்து வாங்கி கொடுத்தேன். உங்களுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வச்சா தான் சரிப்பட்டு வரும்” என்மீதே பழி வந்த போது கொஞ்சம் அதிர்ச்சியடைந்து தான் போனேன். இருந்தாலும் அந்த சூழ்நிலையின் கைதியாகி அவர்களின் குற்ற உணர்ச்சிக்கு ஆறுதலாக இருந்திருக்கலாம் தான். ஆனால் அது முடிவாகாது. தீயை அணைக்காமல் கங்காக இருக்க விடுவது அடுத்து தீயை மூட்ட வசதியாகவும் இருக்கலாம்.

”சரி இப்ப என்ன செய்யனும்னு சொல்லு மச்சி? அவனை கூட்டுட்டு ஆஸ்பிட்டல் போகலாமா?”

“டாக்டர்கிட்ட  என்னென்னு சொல்லுவ?” கேலிப்புன்னகையை உதிர்த்தேன்.

“உண்மைய தான். அவர்கிட்ட பொய் சொல்லி என்னாகப்போகுது?” பிரபு கூறியதும் உண்மை தான்.

ணிகை படுத்திருக்கும் கட்டிலில் அமர்ந்து அவன் மெதுவாக எழுப்பினேன். மெதுவாக திரும்பினான். அழுதிருப்பான் போல. அவனை அந்த கோலத்தில் பார்க்க பார்க்க சிரிப்பு தான் வந்தது. அடக்கிக்கொண்டேன்.

“அப்படி என்னடா ஆசை. கொஞ்சம் பொறுத்திருக்க கூடாதா? இல்ல ஸேப்டியா இருந்திருக்கலாம்ல”

“ஸாரி மச்சி. உன்னையயும் கூட்டுட்டு போயிருந்தா இப்படி நடந்திருக்காதுன்னு நினைக்கிறேன்.” தணிகை

“அடிங்க.... இதுல நான் வேறயா?”

“ஏன் மச்சி. அனுஷ்க்காவுக்காக ஒரு தடவை பார்க்கலாம்டா.”

“அப்படிங்கிற.........” இழுத்தேன்

” ஆமாடா. செமயா இருக்காடா. ஸேப்டிக்கு காதுல வைக்கிறதுக்கு பஞ்சை எடுத்திட்டு போக மறந்திராத?”

ம்ம் என்றபடி தலையை ஆட்டினேன்.

”ஓடு ஓடு ஓடு...................... வரான் பாரு வேட்டைகாரன்” பாலாஜியின் ரிங் டோன் அடித்தது.

கூடு

ண்ணீர் பாட்டிலை வாங்கிவிட்டு திரும்பும் போது எதிர்பாராத விதமாக அவள் மீது மோதினான். “ஸாரி...” என்றான். “இட்ஸ் ஓக்கே.. இட்ஸ் ஓக்கே"" என்று முறைத்தபடி அவள் கடந்து சென்றாள். அவள் அழகைக் கண்டு நினைவிழந்து நின்ற போது ஒரு வயதானவர் தன்னை பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. “மை காட்... என்ன பார்வை இது. எப்படி முறைக்கிறான். ஒரு வேளை அவள் சொந்தகாரனாக இருப்பானோ” என்றவாறு மூன்றாம் ப்ளாட்பாரத்தை நோக்கி நகர்ந்தான் ரவிஸ்ரீநிவாஸ் என்கிற ரவி.

எங்கு பார்ப்பினும் கூட்டம்... ஹவுரா இரயில் நிலையத்தின் ஜன நெரிசலை எதிர்கொண்டவாரே கொரமண்டல் எக்ஸ்பிரஸில் தன் கம்பார்ட்மெண்ட் அருகில் வந்து நின்றான். எத்தனை விதமான மனிதர்கள்.... பாசம், காதல், பிரிவின் சோகம், சந்தோஷம் என பலவிதமான முகங்கள். இவர்களின் நடுவே தன் முகம் எவ்வகையான உணர்வை வெளிப்படுத்துகிறது என நினைத்து, தன் முகத்தைத் தொட்டு பார்த்துக் கொண்டான். பயணம் பற்றிய எண்ணம் வந்தது. எரிச்சலே மிஞ்சியது. முணுமுணுக்க தொடங்கினான். ”ச்சே இந்த அம்மாவுக்கு என்ன அவசரம். ரெண்டு வாரத்துல ஆடிட்டிங் வேற இருக்கு....” சட்டென யாரும் தன்னை கவனிக்கிறார்களா என திரும்பிய போது, மோதிய அப்பெண், இவனைப் பார்த்தவாறு அடுத்த கம்பார்ட்மெண்டில் ஏறினாள்.

கைப்பேசி ஒலித்தது. "amma calling.." ப்ச்....  எத்தனை முறை போன் செய்வாள் அம்மா. பதில் சொல்லி மாளல. “அம்மா ரயில்ல இப்ப தான் ஏறப்போறேன். நாளைக்கு சாயங்காலம் இறங்கிடுவேன்மா.... ப்ளைட்ல டிக்கெட் கிடைக்கலம்மா.... நேக்கு தெரியும் தெரியும்... பூஜையை நாளைக்கு சாயங்காலம் தள்ளி வச்சுக்கோயேன்...சரி வந்திடுறேன். பை” இந்த காலத்தில் பூஜை, ராசி என்று ச்சே என்று நினைத்தவாறு கைப்பேசியை அணைத்தான்.

இருக்கைக்கு வந்து ”The Exorcist" புத்தகத்தில் மூழ்கினான். ஒரு கட்டத்துக்கு மேல் படிக்க முடியாமல் புத்தகத்தை மூடினான். என்ன ஒரு முட்டாள் தனம். ஒரு பக்கம் பேய் என்று பயமுறுத்துகிறார்கள் மற்றொரு பக்கம் கடவுள்,பூஜை என்று அம்மாவை யாரோ அங்கு ஏமாற்றுகிறார்கள். நாளை பூஜைக்கு நான் இருந்தே ஆகவேண்டுமாம். என்ன ஒரு ஏமாற்று வேலை.

யில் ஒரிசாவிற்குள் நுழைந்தது. புவனேஸ்வரை தாண்டிய போது தான் கவனித்தான்.  மொத்தம் இருபது பேர் கூட இருக்கவில்லை இந்த கம்பார்ட்மெண்டில். ஏறிய அனைவரும் இறங்கி விட்டார்களா? அடுத்த கம்பார்ட்மெண்ட் வரை போய் வரலாமா? அவள் இருந்தால் பேசலாமே. பார்க்க தமிழ் பெண் போல தான் இருக்கிறாள். ஒரு வேளை தெலுங்காக இருக்குமோ? தெலுங்காக இருந்தால் இடையே இறங்கிவிட்டால்? ரயிலுக்கு நிகரான எண்ண ஓட்டங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் எழுந்து அடுத்த கதவருகே நின்று சிகரெட்டை எடுத்தான்.

நிலவு இல்லாமல் தாரை இழுத்து போர்த்தியிருந்தது இரவு. ரயில் பெட்டிகளின் வெளி்ச்சங்கள் தண்டவாள கற்களை கூட தாண்டாமல் சுருங்கியிருக்கவே, இருக்கைக்கு வர திரும்பியவன் ஒரு கணம் அதிர்ந்து தான் போனான்.

வெளியே கிடைக்காத முழு நிலவு மதியம் மோதிய பெண்ணின் வடிவில் நிற்க ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நின்றான்.

"ஸாரி...”

“எதற்கு. மதியம் என் மீது மோதியதற்கா?”

“இல்ல... வந்து .... அட நீங்க தமிழா?”

சிரித்தாள். அந்த குளிரிலும் அவனுக்கு வியர்த்து போனது. ”என்ன ஒரு வசீகர சிரிப்பு. இவள்.. இந்த தேவதை என்னிடம் பேசுவது உண்மையா? தேங் காட்” என கடவுளுக்கு நன்றி சொன்னான். அட கடவுள்!

“நீங்களும் சென்னை தான் போறீங்களா?”

“இல்லை. நான் இடையே இறங்கி விடுவேன்”

”ஓ.. பை தி வே என் பேரு ரவி. உங்க பேரு என்ன?”

“பூஞ்செல்வி”

“வாவ். அருமையான பெயர். இந்தகாலத்துல கூட இந்தமாதிரி பெயர் வைக்கிறாங்களா என்ன? உங்க தமிழ் கூட ரொம்ப சுத்தமான தமிழா இருக்கே?”

அதற்கும் சிரித்தாள். இன்னும் கொஞ்சம் சிரிக்க வேண்டி காலைப்பிடித்து கெஞ்ச வேண்டும் போல் இருந்தது. சில்லென்ற காற்றும் அவளிடமிருந்த வந்த வாசமும் நாடி நரம்புகளில் ஒரு வித கிளர்ச்சியை ஏற்படுத்த என்ன சொல்வது என்ன செய்வது எனத்தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தவனை ஒரு குரல் அவனை அவனுக்கு மீட்டுத்தந்தது.

”சார். நீங்க டாக்டரா?” கேண்டீனில் டீ விற்கும் பையன் ஹிந்தியில் வினவினான்.

“இல்லப்பா. ஏன் என்னாச்சு?”

“S4 கம்பார்ட்மெண்ட்ல ஒரு பாட்டி ஒருத்தங்க பேச்சு மூச்சு இல்லாம இருக்காங்க. கண்ணு மட்டும் திறந்திருக்கு. கண்ணுல இருந்து தண்ணி தண்ணியா வந்துகிட்டு இருக்கு. ஏறும் போது நல்லா தான் இருந்தாங்களாம். டீ டீ ஆர் யாராவது டாக்டர் இருக்காங்களான்னு பார்க்கச் சொன்னாங்க. அவர் அந்த பக்கம் தேடி போயிருக்காரு” என்றவாறு அவளைப் பார்த்தான். பிறகு ரவியையும் பார்த்தான்.

“இல்லப்பா அடுத்த கம்பார்ட்மெண்ட் போய் பாரு” என்று அவனை துரத்தினான். சரியான கரடி அதுவும் சிவபூஜையில். அட மறுபடியும் கடவுள்!. தனுக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.

“ஏன் சிரிக்கிறீங்க?”

“நான் சிரிச்சேன்னா? இல்லையே?”

“இல்லை உங்க கண்ணும் உதடும் நீங்க சிரித்ததை சொல்லிற்று. பொய் சொல்ல வேண்டாம்” என சிரித்தாள்.

“நீங்க சைக்காலஜி படிக்கிறீங்களா என்ன? எப்படி கண்டுபிடிச்சீங்க?....” நிறுத்தினான் பிறகு “கொஞ்ச நேரம் வரைக்கும் கடவுள், பூஜை,  ராசி, பேய்ன்னு எதுமேலயும் எனக்கு நம்பிக்கை இல்லாம இருந்தது. உங்கள பார்த்த பிறகு  என்னையறியாம கடவுளை நினைக்க ஆரம்பித்துவிட்டேன். இனி பொய்யெல்லாம் மெய்யெனத் தெரியும் போல”

“கடவுள் மேல நம்பிக்கை இல்லையா? ஹா ஹா ஹா” வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள். ஏதோ பெரிதாக சொல்ல வருகிறாள் என நினைத்தவனுக்கு அவள் ஒரு குழந்தை போல் கைகளைக் இருக்க கட்டிக் கொண்டு ”எனக்கு இங்கே மிகவும் குளிர்கிறது . வாங்களேன் என் இருக்கைக்கு போகலாம்.” அழைத்தாள்.

அழைத்தாளே தவிர இவன் பதிலுக்கு காத்திராமல் அடுத்த கம்பார்ட்மெண்டில் நுழைய இவன் காந்தத்திடம் ஈர்க்கப்பட்ட இரும்பு போல சென்றான்.

டுத்த கம்பார்ட்மெண்டில் பத்து பேர் கூட இருக்கவில்லை. ஆட்கள் இல்லாத இருக்கைகளில் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தது. ஆட்கள் இருந்த இருக்கைகளிலும் உறக்கத்திற்காக விளக்குகள்  அணைக்கப்பட்டு அங்கொன்று இங்கொன்றுமாக எரிந்து கொண்டிருந்தது. காற்றோடும், அவளின் வாசத்தோடும் இந்த கருமையும் சேர்ந்துகொள்ள அவன் மனது சில வாலிப சூத்திரங்களுக்குட்பட்ட கணக்குகளை போடத் தொடங்கியது.

“இங்கே உட்காருங்கள்” என்ற அவள் காட்டிய இருக்கையின் அருகே இருந்தவரைப் பார்த்து கொஞ்சம் அதிர்ந்து தான் போனான். இதுவரை போட்ட கணக்குகள் எல்லாம் தப்பு கணக்காக மாற ஆரம்பித்தது. அவளை மோதிய போது தன்னை வெறித்துப் பார்த்த அந்த வயதானவர். சுருட்டை புகைத்துக்கொண்டிருந்தார்.

வர் இருமியதை கண்டபோது உடலாரோக்கியம் பற்றி தெரிந்தாலும்,   கண்களில் இருந்த ஒரு வித ஈர்ப்பு, முகமெல்லாம் சுருக்கம், கழுத்தில் இருந்த சிவலிங்கம், நெற்றியில் விபூதியினூடே வரைந்த சூலம், கைகளில் கட்டியிருந்த பல வண்ணக்கயிறுகள் என அவரது தோற்றம் அவனைச் சற்றே பிரமிக்க வைத்தது.

“உன்னால் இந்த சுருட்டை சிறுது நேரம் கூட பிடிக்காமல் இருக்க முடியாதே” என்றவாறு அவர் கையில் இருந்த சுருட்டை எடுத்து ஜன்னலின் வெளியே வீசினாள்.

“இது..... உங்க தாத்தாவா?”

சிரித்தாள். கொல்கிறாள் இவள். இவளை சிரிக்க வேண்டாமென சொல்ல வேண்டும். இவள் சிரித்தால், மற்றதை மறந்து விடுகிறேன். அவரும் சிரித்தார்.

“நீங்க ஏன் சிரிக்கிறீங்க?”

“அவள் சிரிப்பை நிறுத்த முடியாது. அலைகடலைப் போன்றது அது!” இருமினார்

”மைகாட்! சரியான சைக்காலிஜிகல் குடும்பமா இருக்கும் போலயே? மனசுல நினைக்குறதை அப்படியே சொல்றீங்க. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல”

“மந்திரங்கள் சொல்”

“வாட்!?”

“மந்திரங்கள்.” அழுத்திச் சொன்னார். ரயில் சென்ற வேகத்தில் காற்றும் சிறிது நின்று அவர் சொல்வதை கேட்டது போன்ற கணீர் குரல்.

“எதுக்கு? மந்திரங்கள் எதுக்கு நான் சொல்லனும்? மந்திரம் சொன்னால் என்ன ஆகும்”

”ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஓம் வகார மகார நகார
நமஹா சிவாய நமஹ........... மந்திரங்கள் சொன்னால் நடக்காதது எதுவும் இல்லை. காற்றை நிறுத்தலாம். புயலையும்  மழையையும் வரவழைக்கலாம், பூமியை பிளக்க வைக்கலாம், ஏன் கடல் அலைகளையும் நிறுத்தலாம்....இவள் சிரிப்பையும் கூட நிறுத்தலாம்."

"என்னை பார் இந்த உடல் என்னும் கூடுக்கு 90 வயது ஆனால் என் ஆத்மாவுக்கு வயதில்லை. எல்லாம் மந்திரங்களினால் மட்டுமே சாத்தியம்”

“எனக்கு ஒன்னும் புரியல. நீங்க யாரு? என்ன சொல்ல வரீங்க?”

“உன்னைப்போல் பிறந்த தேதியும் ராசியும் உள்ளவன், மேலும் எழுபது  ஆண்டுகளுக்கும் அதிகமான வருடங்களுக்கு பிறகு இன்று வரும் கிரகணத்தில் மந்திரம் சொன்னால் நடக்காதது எதுவும் கிடையாது”

“நோ....நோ ஐம் கன்பியூஸ்டு. நான் போறேன். எனக்கு தூக்கம் வர்ர மாதிரி இருக்கு” நாக்கும் அவன் மனதை போல் தள்ளாடியது

“உட்காருங்கள் பிறகு போகலாம்.” இடைவெளி விட்டு  ”இருவரும்” என்ற படி சிரித்தாள். கடவுளே இவளை சிரிக்க வேண்டாமென சொல். என் மதியை மயக்குகிறாளே. காலில் விழுந்து “சிரிப்பதை நிறுத்து பெண்ணே. என்னை நானாக இருக்க விடு” கெஞ்ச வேண்டும் போலிருந்தது.

சிரித்தார்கள் இருவரும். ஓ! இதுவும் அவர்களுக்கு தெரிந்துவிட்டதா. அந்த இரயில்பெட்டியில் எரிந்த ஒன்றிரண்டு விளக்குகளும் அணைந்திருந்தன. அந்த இருட்டில் இவர்களின் முகம் மட்டும் சர்பவிஷத்தை கலந்த பாலின் நிறத்தில் மிகத்தெளிவாக அவனுக்கு தெரிந்தது.

ரயிலின் ஓடும் சப்தம் மெதுவாக குறைந்து கொண்டே வந்தது. இப்போது அவர் குரல் மட்டும் அதிரும் வண்ணம் மிக பிரம்மாண்டமாய் ஒலிக்கத்தொடங்கியது.

வஸ்த்ரம் ஸூக்ஷ்மம் துகூலே ச தேவாநாமபி துர்லபம் | 
 க்ருஹாண த்வம் உமாகாந்த ப்ரஸந்நோ பவ ஸர்வதா || 
  உமாமஹேச்வராய நம:, வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி

மகுடியாய் கிழவன் குரல் ஒலிக்க நாகமாய் அவன் ஆழ்மனதிலிருந்து திரும்ப திரும்ப  அந்த மந்திரத்தைச் சொல்ல, உலகமே இருளத் தொடங்கியது. அந்த இருளில் யாரோ ருத்ர தாண்டவம் ஆட கண்கள் நிலைகுத்தி வாய் ஒட்டி, அந்த ஆட்டத்தின் ருத்ரத்தை கண்டவன்  ஆடியவனின் காலில் கண்ணீருடன் விழுந்தான்.

யக்கம் தெளிந்த போது அவள் மடியில் படுத்திருந்தான். 

“எழுந்து விட்டாயா?” என்றபடி வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்தாள். ”இப்போது எப்படி இருக்கிறது”

“பரவாயில்லை.....” என்றபடி எழுந்தான். “இறங்கும் இடம் வந்து விட்டதா?” இரயில் தன் நிலையம் இல்லாத ஒரு காட்டில் நின்றிருந்தது.

“ம். வா போகலாம்” என்ற படி அழைத்துச் சென்றாள்.

பாதி தூரம் சென்றவன் “அய்யோ சுருட்டை எடுக்க மறந்து விட்டேனே” என்றபடி கிழவனை நோக்கினான்.

கிழவனின் உடல் அசைவின்றி கிடந்தது. கண்கள் மட்டும் திறந்திருந்தது.  கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

“உன்னால் இந்த சுருட்டை சிறிது நேரம் கூட  பிடிக்காமல் இருக்க முடியாதே” என்ற படி அவனை இழுத்துச் சென்றாள்.

இதமுபாயநம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸாம்பசிவ ப்ரீதிம் 
  காமயமாந: துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம||
முணுமுணுத்தபடி அவளுடன் கைக்கோர்த்தபடிச் சென்றான். 
 --------------------------------------------------------------------------------------------------------------

“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதை.

ப்ப்ப்ப்பா.....

’பா’ - படத்தின் பெயர் போடும் விதத்திலேயே அனைவரையும் நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குனர். ஜெயாபச்சன் அனைவரின் பெயரையும் சொல்லி, அறிமுகம் ‘அமிதாப் பச்சன்’ என சிரித்துக் கொண்டே கூறுவது ரசிக்கமுடிகிறது. ‘அறிமுகம்’ என்பது முழுக்க முழுக்க உண்மை என்பது படத்தைப் பாத்ததும் உணர முடிகிறது.ஆரம்பகாட்சியில் அபிஷேக் கையில் விருது வாங்க Auroவாக அமிதாப் வரும் போது,  இது அழுகாச்சி படமோ என நினைத்துக் கொண்டிருக்கும் போதே தன் கிங்காங் சேட்டையை ஆரம்பித்து நம்மை கலகலப்பூட்டுகிறார். Auro அபிஷேக் மகனா? வித்யாபாலனும் அபிஷேக்கும் காதலர்களா? ஏன் பிரிந்தார்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளையும், திடீர் திருப்பங்களையும் வைக்காமல் முதல் 10 நிமிடத்தின் பாடலில் அனைத்தையும் தெளிவாக்கிவிடுவது புதுமை.

பின்பு Auro தன் அப்பா அபிஷேக் எனத் தெரிவது தான் பெரிய திருப்பமாக இருக்கும் என நினைத்தால் அதுவும் முதல் பாதியிலேயே மிகச் சாதாரண காட்சியிலேயே சொல்லப்படுகிறது. அதுவும் புதுமை. பின்பு கதை எதை நோக்கி தான் செல்கிறது? என கேள்வியை வைத்தால் மிகச்சாதாரணமான அல்லது எதிர்ப்பார்த்த இலக்கை நோக்கியே செல்கிறது.

அமிதாப் சிறுவனாக நடித்துள்ளார் என்பதை தவிர இப்படம் முழுக்க முழுக்க மசாலாப்படமே. கண்டதும் காதல், அரசியல்வாதியாக குடிசைவாசிகளுக்கு நல்லது செய்வது, கேமரா முன் வீரவசனம் பேசுவது, சிறுவன் வயதுக்கு மீறின வசனம் பேசுவது என ஒரு மசாலாப்படத்திற்கான அனைத்து அம்சங்கள் இருந்தும் படத்தை வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்வது அமிதாப்.

’அமிதாப்’ அனைவரும் சொல்வது போல திரையில் இவரை பார்க்கமுடியவில்லை. அந்த ஆளுமையென்ற கிண்ணம், பன்னிரெண்டு வயது சிறுவனாக, நடை, பாவனை என நிற்கும் போது  நிரம்பித்தான் போகிறது. அதற்கு மேல் நடிக்கும் போது கிண்ணத்திலிருந்து வழிந்தோடுவது போல மனதில் எதுவும் நிற்கவில்லை. அமிதாப் தான் அந்த சிறுவன் என்ற எண்ணம் திரையில் காணும் போது வர மறுக்கிறது. ஆனால் பன்னிரெண்டு வயது சிறுவனாக அவர் பேசும் வசனங்கள், அதிலுள்ள நக்கல்கள் என எதையும் ஏற்கமுடியவில்லை. அதிகபிரசங்கிதனமாகத்தான் தோன்றுகிறது. அச்சமயத்தில்(மட்டும்) இது அமிதாப் என்கிற எண்ணம் வந்து சமாதானம் செய்கிறது :)

வித்யாபாலன். இவரை முதன் முதலில் ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தம் இட்டு பின்பு நடிக்க தெரியவில்லை என்று மாற்றிவிட்டார்களாம். பின்பு தான் ஹிந்தி திரையுலகிற்கு சென்றிருக்கிறார். இப்படத்தை மட்டும் அவரை நிராகரித்த இயக்குனர் பார்த்தால் நிச்சயம் வருத்தப்பட வாய்ப்புண்டு. பல பக்கங்கள் பேச வேண்டியதை இவரின் முகபாவங்களும், கண்களும் நமக்கு உணர்த்துகின்றன. பக்குவப்பட்ட நடிப்பாக தோன்றுகிறது. தொய்வான பல காட்சிகளில் இவர் தூக்கி நிறுத்துகிறார்.

அபிஷேக் சொல்லிக்கொள்ளும்படியான நடிப்பு இல்லையென்றாலும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இவரின் அரசியல் சார்ந்த காட்சிகள் படத்தின் வேகத்தை குறைக்கின்றன. இவ்வளவு விரிவாக அக்காட்சிகள் தேவையா என தோன்றுகிறது.

இசை & பின்னணி இசை...... சொல்ல வார்த்தைகள் இல்லை. கண்டு  கேட்டு அனுபவியுங்கள் :)

படம் முழுதும் கூர்மையான மற்றும் நகைச்சுவையான வசனங்கள். ஒவ்வொரு காட்சிக்கும் சிரிக்க முடிகிறது. பாரெஷ் ராவல், அருந்ததி ஆகியோரின் நடிப்பும் குறிப்பிடும்படி உள்ளது.

"The very rare Father-son Son-father story..." என்று சொல்லி அதற்குண்டான ஒரு அடர்த்தியான காட்சியமைப்புகள் இல்லாமல் இருப்பது படத்தின் பலவீனம். இரண்டு நாட்கள் தந்தையோடு வெளியே சுற்றுகிற போது வருகிற  ஒரு பாடலின் நடுவே காண்பிக்கப்படும் காட்சிகளை தவிர வேறு எந்த இடத்திலும் ஈர்ப்பு இல்லை.

ஒரு சிறுமியை வைத்து மிக எளிமையாக க்ளைமாக்ஸை முடித்திருப்பது மிக அழகு. புத்திசாலிதனமும் கூட. இயக்குனருக்கு பாராட்டுக்கள்.  க்ளைமாக்ஸ் அனைவரையும் நெகிழச் செய்யும் காட்சி. அதற்கு மிகமுக்கிய காரணம் இளையராஜா. முன்னிருக்கையில் இருந்த பெண்மணி படம் முடிந்தும் எழுந்து வர மனமில்லாமல் அழுதுகொண்டே இருந்தார்.

படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

டிஸ்கி: எவன்யா இது “பெஞ்சமின் பட்டன்” கதைன்னு சொன்னது? போஸ்டர் பார்த்து கதை சொல்ற க்ரூப்பா இருக்குமோ? அதுக்கும் இதுக்கும் அணு அளவு கூட சம்பந்தம் கிடையாது.

மாட்டு கொட்டா வீடு!

ள்ளி மாணவிகள் முதற்கொண்டு கல்லூரி மாணவிகள் வரை அந்த வீட்டை கடக்கும் போது துப்பட்டாவின் உதவியோடு மூக்கைப் பொத்திச் செல்லவதை காணலாம். ஆனால் பதினைந்து வருடங்களாக அதே தெருவில் வசித்தும், ஒரு தடவை கூட எனக்கு அந்த ”வாசனை” முகம் சுளிக்க வைத்தது இல்லை.

இரண்டுபக்கமும் மூன்று மாடி கட்டிடங்கள், நடுவே ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் இட்ட கொட்டகையாக இருந்தது அந்த “மாட்டு கொட்டகை”. அதனுள்ளேயே அவர்களின் வீடு. மலையாளி. எனது வீட்டுற்கு எதிரே சரியாக மூன்று வீடுகள் தள்ளி இருக்கிறது அந்த வீடு. பரப்பரப்பான சென்னையில், அதுவும் அடுத்தடுத்து குடியிருப்பு இருக்கும் ஒரு தெருவில் எப்படி இவ்வளவு பெரிய கொட்டகை இருந்தது என்பது இப்போது ஆச்சர்யம் அளிக்கிறது.தெருவில் சில நேரங்களில் சில மாடுகள் உலவும். இங்கு கிடைக்கும் வைக்கோலுக்காக சில நேரம் வெளியே  காத்திருக்கும்.

சிறு வயதில் தெருவினில் பந்தை வைத்து விளையாடும் ஆட்டத்தில் எப்படியும் அந்த கூரையின் மேல் பந்து விழும். பந்தை அடித்தவர்கள் கூரை மேல் ஏறி எடுக்க வேண்டும் என்ற கட்டுபாடு எங்களுக்குள் இருந்தது. அப்படி அதன் மேல் ஏறி எடுக்கும் போது மிகச்சரியாக மாட்டை அடிக்கும் பிரம்புடன் வெளியே வருவார் அந்த மலையாளி. ஆனால் இதுவரை யாரையும் அடித்ததில்லை. பார்க்க மலையாள நடிகர் திலகன் போலவே இருப்பார். எப்பொழுதும் ஆறாவது விரலோடு இருப்பார்.

“ஓய்ய்ய்ய்ய் மாட்டு கொட்டா காரன் வந்துட்டான் ஓடுங்கடா...” என்றபடி ஓடுவோம். கோரஸாக “மாட்டு கொட்டா வீடு...ஓய்ய் மாட்டு கொட்டா வீடு” என கத்துவோம். அப்படி கத்துவது அவருக்கு பிடிக்காது என்பது மட்டும் எங்களுக்கு தெரியும். மலையாளத்தில் ஏதோ திட்டுவார்.

”ஏம்பா மாட்டு கொட்டா வீட்டுல காசு வாங்கிட்டயா?” “மாட்டு கொட்டா வீடு பக்கத்துல ஒரு பொண்ணு குடி வந்திருக்காடா” “நேரா போனீங்கன்னா ஒரு மாட்டு கொட்டா இருக்கும். அங்கிருந்து நாலாவது வீடு” ”எது அந்த மாட்டு கொட்டா தெருவா? அது அடுத்த தெருல்ல..” இப்படி எங்கள் தெருவிற்கு ஒரு அடையாள சின்னமாக மாறி போனது.

ல்லூரி செல்லும் நாட்களில் சிநேகப் புன்னகையை உதிர்ப்பார். ஒப்புதல் புன்னகையும் செலுத்துவேன். ஒருநாள், பெட்டி கடையில் என் சிகரெட்டை வாங்கி நெருப்பை பற்ற வைத்த அவர், தன் மகன் அஜித்தும் கல்லூரி படிப்பை கேரளாவில் எங்கோ படித்துவிட்டு வந்திருப்பதாக கூறினார். விசாரித்ததில் “மெரைன் இன்ஜினியரிங்” சம்மந்தமாக ஏதோ படித்து விட்டு வேலைக்காக காத்திருப்பதாக தகவல் வந்தது.

“ஏன்யா அந்த மாட்டு கொட்டா வீட்டு பையன் ஏதோ கப்பல்ல வேலைக்கு சேர்ந்திருக்கானாம். ஒரு லட்சம் சம்பளமாமே? நீயும் அதெல்லாம் படிக்கலாமாய்யா” அப்பா வீட்டில் இருக்கும் போது, அவர் காதில் விழுமாறு அம்மா கேட்ட போது தான் எனக்கு அவனுக்கு வேலை கிடைத்தது தெரிந்தது.
”அம்புட்டு பணத்துக்கு எங்க போகுறது? அதுக்கெல்லாம் நிறைய செலவாகுமாம். அவன் எருமை மாட்டை வச்சே பணம் பண்ணிட்டான்” அப்பாவின் இயலாமை கோபம் செறிந்த வார்த்தையாக விழும்.

பெட்டி கடையின் முன் நண்பர்கள் வழக்கம் போல் பேசிக்கொண்டிருந்த அன்று, மாட்டுகாரர் சிகரெட் வாங்க வந்திருந்தார். சிரித்த அவரை தினேஷ் “என்ன சேட்டா வீடெல்லாம் இடிக்கிறீங்க? மாடுகள வேற கொஞ்ச நாளா காணோம்? என்னாச்சு?” பேசி வைத்தபடி கேட்டான்.

“ஆங்.... வீடு கட்ட போறோம். இனி மாட்டு கொட்டா வீடு இல்ல அது” என்று சிரித்தபடி சிகரெட்டை வலித்துக் கொண்டு சென்றார் மாட்டுகாரர்.

“பார்றா மாட்டுகாரனுக்கு வந்த வாழ்வ. மகனுக்கு கப்பல்ல வேல கிடைச்சவுடனே ரொம்ப தான் பிகு பண்ணிகிறான்” தினேஷ் வெம்மினான்.
“உனக்கேன் காண்டு? விடுடா மச்சி”
“இல்ல மச்சி, நேத்து அவன்கிட்டயே வந்து ஒருத்தன் மாட்டுகொட்டா வீடு எங்க இருக்குனு கேட்டிருக்கான். அதுக்கு இந்தாளு சண்டை போட்டிருக்கான். அதான் இப்ப மாடெல்லாம் இல்லையே இப்ப எதுக்கு அப்படி கூப்பிடுறீங்கனெல்லாம் கேட்டிருக்கானாம்” சிரித்துக் கொண்டே கூறினான்.
“நாலு மாடி வீடு கட்ட போறானாம். எல்லாம் கப்பல்ல இருந்து மகன் அனுப்புற காசுடா மச்சி” எல்லாருக்கும் பெருமூச்சு தான் வந்தது. வேலை கிடைக்காமல் கம்யூனிசம் பேசி அரசாங்கத்தை திட்டி கொண்டிருந்த நாட்கள் அவை.

”இங்க கண்ணையன் வீடு எங்க இருக்கு?” கரை வேஷ்டியுடன் அம்பாஸிடர் காரில் இருந்து இறங்கியவரைப் பார்த்தவுடன் எந்த கட்சி என்று தெரிந்தது. சிகரெட்டை தூரப் போட்டுவிட்டு தினேஷ் பொட்டி கடை திண்ணையிலிருந்து எழுந்தான்.  “நேர போனீங்கன்னா ரைட் சைடுல ஒரு மாட்டுகொட்டா வீடு வரும். புதுசா கட்டியிருக்குற நாலு மாடி வீடு. முன்னாடி ”அஜித்”னு போர்டு இருக்கும். யாரை கேட்டாலும் சொல்லுவாங்க. அதுக்கு எதித்தாப்புல தான் கண்ணையன் வீடு இருக்கு”.
கார் சென்றவுடன் ”டேய் கண்ணயன் எப்படா இந்த கட்சியில சேர்ந்தாரு” என்றபடி தூரப்போட்ட சிகரெட்டை தேடினான். சிகரெட் விழுந்த இடத்தில் மாட்டுகாரர் நின்று கொண்டிருந்தார். இவனை வெறித்துப் பார்த்தபடி.

மூன்று வருடங்களுக்கு பிறகு விடுமுறையில் சென்னை சென்றிருந்த போது, பெட்டிக்கடை திண்ணையில் உட்கார்ந்து சசியுடன் பேசிகொண்டிருந்தேன். பெட்டிக் கடைக்காரர் வாசலில் நின்று கடையை வெறித்துப் பார்த்து கொண்டிருந்த ஒரு மாட்டை விரட்டிக்கொண்டிருந்தார்.

“ஒரு பாக்கெட் சிகரெட்” சத்தம் கேட்டு திரும்பினேன். மலையாள மாட்டுகாரர். “அப்படியே இரண்டு வாழைப்பழம்...........”

அதற்குள் என்னை அடையாளம் கண்டுகொண்டார். வழக்கமாக உதிர்கும் அதே சிரிப்பு. சிநேகமா, கடமையா என அடையாளம் காண முடியாத சிரிப்பு அது. கண்ணாடி அணிந்திருந்தார். கைகளில் தங்கத்தில் வளையல் போல ஏதோ அணிந்திருந்தார்.

“என்ன சேட்டா. எப்படி இருக்கீங்க?. வீடை விக்க போறதா சொன்னாங்க?” என்றேன்

“ஆமாப்பா. 25 லட்சம் தான். வாங்கிறயா? நீதான் துபாய்ல வேலை பாக்குறேயே. சம்பளம் என்ன ஒரு 50ஆயிரம் இருக்குமா மாசம்” என்றபடி சிகரெட்டை பற்ற வைத்தார்.

சிரித்தேன். “எதுக்காக விக்குறீங்க?”

“ம்ம்ம்ம்ம் அடையாறுல வீடு வாங்கிட்டான் என் பையன். அங்க போகப்போறோம்.” என்றபடி உத்துப்பார்த்தவர் “இனி மாட்டு கொட்டா வீடு கிடையாது அது” என்று சிரித்தார். விரக்தியா சந்தோசமா என தெரியாமல் இருந்த அந்த சிரிப்புக்கும் ஒரு புன்னகையே பதிலளித்தேன்.

வாங்கிய இரண்டு வாழைப்பழைத்தை கடையின் வாசலில் நின்றிருந்த அந்த மாட்டுக்கு கொடுத்து அதன் நெற்றியை தடவிக் கொண்டிருந்தார்.
Related Posts with Thumbnails