சட்டை சூப்பரப்பு - பஞ்சாமிர்தம்

கடந்த மே மாதம் அண்ணனின் கல்யாணம் மதுரையில் நடந்தது. கல்யாணம் நடந்த அன்று காலை.......

"அடடே வாங்க வாங்க சின்ன மாப்ள, காபி சாப்பிட்டீங்களா? “

“சாப்பிட்டேன் மச்சான்” சிரித்தேன். அண்ணியின் பெரிய அண்ணன்.

இது தான் கல்யாண டிரஸா? சூப்பரா இருக்கு மாப்ள” என்றபடி அங்கிருந்து நகர்ந்து கல்யாண வேலையில் மூழ்கி போனார்.

“சின்ன மாப்ள......” சத்தம் கேட்டு திரும்பினேன்.

“வாங்க மாமா. வணக்கம்” பெரிய மாமா. அண்ணியின் பெரியப்பா.

“டிபன் சாப்பிட்டீங்களா மாப்ள?”

“இல்ல மாமா. நமெக்கென்ன அவசரம். வந்தவங்க மொதல்ல சாப்பிடட்டும். ஆமா காலையில டிபன் என்ன மெனு ”

“எல்லாம் இருக்கு மாப்ள. போய் மேல ஒரு எட்டு பார்த்துட்டு வந்திருங்க ரெடியாகிருச்சான்னு. அப்புறம் இது தான் கல்யாண சட்டையா?”

தலையை ஆட்டினேன். “சட்டை சூப்பரா இருக்கு மாப்ள” என்றபடி அவசரமாக சென்றார். சட்டை மேல் கொஞ்சம் கர்வம் வந்தது.

5 நிமிடம் கழித்து......

“அடடே வாங்க மாப்ள. குளிச்சு ரெடியாகிட்டீங்க போல?” சத்தம் கேட்டு திரும்பினேன். அண்ணியின் அப்பா

“ஆமாம் மாமா. காபி சாப்பிட்டீங்களா மாமா” இந்த தடவை நான் முந்தினேன்.

“அதெல்லாம் ஆச்சு மாப்ள. ஆமா இது தான் கல்யாண டிரஸா? “

”ஆமா மாமா”

செலக்‌ஷன் சூப்பர் மாப்ள. அருமையா இருக்கு” என்றபடி தலைக்கு மேல் இருக்கும் ஆயிரத்தில் ஒரு வேலையைப் பார்க்க சென்றார்.

மைல்டா டவுட் வர ஆரம்பிச்சது. இருந்தாலும் போய் வாசலில் நின்று வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தேன்.

“மாப்ளே......” அட சின்ன மச்சான். அண்ணியின் கடைசி அண்ணன்

“குட் மார்னிங் மாப்ள. என்ன இம்புட்டு லேட்டா எழுந்திருச்சிருக்கீக?”

“இல்ல மச்சான். நேத்து நைட்டு ப்ரெண்ட்ஸ ஹோட்டல்ல விட்டுட்டு வரலாம்னு போனேன். அவங்களோட ஓட்டல் ரூம்லயே தங்க வேண்டியதா போச்சு. காலையில நேரா எழுந்திருச்சு வாரேன்”

“சட்டை எங்க வாங்கினீக? துபாய்லயா?”

“இல்ல சென்னையில தான்.....” கொஞ்சம் டவுட்டோடு

இல்ல சூப்பரா இருக்கு. அதான் கேட்டேன்” அவ்வ்வ்வ்வ்வ்வ் கன்பார்ம்டு.......

ங்கு வந்து அந்த சட்டையை போடுவதே இல்லை. போன மாசம் ஒரு நாள் அதை எடுத்து அயர்ன் செய்யும் போது சேட்டன் வந்தார்.

“தம்பி ஷர்ட் புதுசா? எப்ப எடுத்த?”

“சென்னையில சேட்டா”

சூப்பரா இருக்கே..................

அவ்வ்வ்வ்வ்வ்வ்..... அப்படியே அயர்ன் செய்த சட்டையை மடித்து உள்ளே வைத்து விட்டேன்.
-------------------------------------------------------------------------------------------------
உலகத்தில் என்னென்ன படம் ரிலீசாகி இருக்கிறதோ அத்தனையும் பார்த்திருப்பார்கள் போல நம் பதிவுலகத்தில் சில மக்கள். சீனா, கொரியா, ஸ்பெயின், பிரஞ்ச் என பல மொழி படங்களின் மீதான இவர்களின் ஆர்வம் வியக்க வைக்கிறது. சென்ஷி, அய்யனார், கார்த்திகேயன், கலையரசன், ஹாலிவுட் பாலா போன்ற சிலர் சில நல்ல எடுத்துகாட்டு.

“old boy" என்கிற வித்தியாசமான கொரிய படத்தை கலையரசன் பரிந்துரைக்க இந்த வாரம் கண்டேன்.காரணமே தெரியாமல் நமது ஹீரோவை 15 வருடம் தனிமை சிறையில் அடைத்து வைக்கப்படுகிறான். தன்னுடைய மனைவியையும் மூன்று வயது குழந்தையையும் பிரிந்து வாடுகிறான். அவனுடைய மனைவி கொல்லப்படுகிறாள். அதன் பழி இவன் மேல் விழுவதுமில்லாமல் தலை மறைவாகிவிட்டான் என்ற பழியும் கிடைக்கிறது.

15 வருடம் கழித்து 5 நாட்களுக்கு மட்டும் விடுவிக்கப்படும் அவன் தன்னை அடைத்து வைத்தது யார்? ஏன்? என்ற கேள்விக்காக அலைகிறான். அவனுக்கு உதவியாக தன் பழைய நண்பனும், ஒரு 18 வயது பெண்ணும் இருக்கிறார்கள். அந்த பெண்ணும், ஹீரோவும் காதலில் விழுகின்றனர். அடைத்து வைத்தவனை கண்டுபிடிக்கிறான். ஆனால் காரணம் கண்டுபிடிக்க முயல்கிறான். காரணமும் கண்டுபிடிக்கிறான்.

உதவியாக இருந்ததற்காக நண்பனை இழக்கிறான். காதலியையும் கொலை செய்து விடுவேன் என வில்லன் மிரட்டுகிறான். ஆனால் முடிவு????? யாருமே எதிர்பார்க்காத முடிவு. disaster ending :( பழிவாங்குதலின் உச்சக்கட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

அந்த வித்தியாசமான முடிவை மிக லாவகமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். ஆனால் நாம் அதை ஏற்போமா? என்னால் ஜீரணிக்க கூட முடியவில்லை. மதில் மேல் பூனையாக நிற்க வைக்கப்படுகிறோம். உங்களால் முடிகிறதா என பார்த்துவிட்டு சொல்லுங்கள். சப்-டைட்டிலோடு பார்க்கவும்.
------------------------------------------------------------------------------------------------
நீண்ட நாள் ஆசையாக ஹிட்லரின் வாழ்க்கை வரலாரைப் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஹிட்லர் சிறையில் இருக்கும் போது எழுதிய “மெயின் காம்ப்”யை தமிழில் மொழி பெயர்த்து “எனது போராட்டம்” என ஸூப்பரமண்யம் எழுதியி்ருக்கும் புத்தகம் ஒரு மாதம் முன்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக செல்ல ஆரம்பத்த புத்தகம், 19ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய அரசியலை மிக விரிவாக விவரிக்க விவரிக்க...... கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை. ஐம்பது பக்கங்களை கூட தாண்டாமல் அப்படியே மூடி வைத்து விட்டேன். அதுவும் ஒரு வார காலமாக ஐம்பது பக்கங்கள் தான் படிக்க முடிந்தது. கொஞ்சம் சுருக்கியாவது எழுதியிருக்கலாம். அவர் எழுதியதை அப்படியே அச்சு பிசகாமல் மொழி பெயர்த்திருக்கிறார் போல. போதும்டா சாமி என்றாகிவிட்டது.

அதிலும் அதிகமான சமஸ்கிருத சொற்கள் வேறு. ஆசிரியர் பெயர் ஸ.ஸூப்பரமண்யம் என்றிருக்கும் போதே கொஞ்சம் உசாராகி இருக்க வேண்டும். மலேசியத்தமிழராம். நேர விரயம் தான் மிச்சம். ஹிட்லர் பற்றிய ஏதேனும் வேறு நல்ல புத்தங்கள் தமிழில் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
------------------------------------------------------------------------------------------------
இந்தியர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்திருக்கும் அடுத்த படம் ‘Paa’ என்ற ஹிந்தி படம். ஏற்கனவே இளையராஜாவின் பாடல்களும், தீம் மீயூஸிக்கும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்க, பி.சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் அனைவராலும் பாராட்டைப் பெற்றுள்ளது. தீம் பாடலாக அது ஒரு கனா காலம் படத்தில் வரும் “காட்டு வழி” என்ற பாடல்.

இன்னும் மூன்று தமிழ்பாடல்களையும் உபயோகித்துள்ளார். அமிதாப் இளையராஜாவை போகும் இடமெல்லாம் புகழ்ந்து தள்ளுகிறாராம். இயக்குனரும் தமிழர் தான். ஆக தமிழிலும் மொழிபெயர்க்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்த ஜோடி கொடுத்த “சீனி கம்” ஹிட். இதுவும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

வழக்கம் போல சில சர்ச்சைவாதிகள் இது பிராட் பிட்’டின் “பெஞ்சமின் பட்டன்” படத்தின் அப்பட்டமான காப்பி என புலம்பி வருகின்றனர். எதுவாக இருந்தாலும் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சிக்கலாம். சும்மா அடிச்சு விடக்கூடாது. அப்புறம் படத்தின் பட்ஜெட் 15 கோடி தானாம். மேக்கபிற்கு மட்டும் 4 கோடியாம். (கமல்ஹாசனைப் பார்த்தால் ஏனோ பாவமாகத்தான் இருக்கிறது)-------------------------------------------------------------------------------------------------
இது பல பேருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்காக இந்த செய்தி.
”நவீன தமிழ் இலக்கிய கர்த்தாக்களின் படைப்பு பெட்டகம்” என்ற தலைப்பில் ஒரு வலைப்பூவை ஒருவர் நடத்தி வருகிறார். பல இலக்கிய எழுத்தாளர்களின் அறிய எழுத்துகள் இங்கு கிடைக்கப்பெறுகின்றன. நகுலன், புதுமைப்பித்தன், மௌனி, சுரா, பா சிங்காரம் என பலரது கதைகள் இங்கு கிடைக்கின்றன.

மிகவும் சிரத்தையோடு பதிந்து வரும் அந்த அன்பருக்கு பாராட்டுகள். நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.
-------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ ஸ்ரீ மங்கள தினத்தில் ...................... இன்னாருடைய மகனுக்கும், இன்னாருடைய மகளுக்கும் என ஆரம்பிக்கும் கலயாணபத்திரிக்கையும், டஸ்ஸூ, புஸ்ஸூன்னு ஆங்கிலத்தில கவிதை பாடி அழைக்கும் பத்திரிக்கைகளையும் தூக்கி சாப்பிடுற மாதிரி ஒரு அழகான தமிழ் பத்திரிக்கை மின்னஞ்சல்ல வந்தது. ரொம்ப ரசிக்கத்தக்கதா இருந்தது இந்த பத்திரிக்கை.இதே மாதிரி தமிழ்ல இனி முயற்சி செய்யலாம் போலயே :)

குடிகாரன் பேச்சு அப்பவே போச்சு!

குடிப்பதும் நல்ல நாட்களின் சம்பிரதாயமாய் ஆகிவிட்ட காலத்தில் என் பிறந்தநாளை குடியோடு முடிக்கலாம் என சேட்டன்(கேரளா) விடுத்த கோரிக்கையை என்னால்(தமிழ்நாடு) நிராகரிக்க முடியவில்லை. மோகன்ரெட்டியும்(ஆந்திரா) அதை ஆமோதிக்க KFCயோடு ஒரு முழு பாட்டிலும், இரண்டு டின் பியரும் வாங்க ஆயுத்தமானோம். வாங்கினோம்.

முழு பாட்டிலை வாங்கி, அதை தொடங்கும் முன் மேசையின் நடுவே வைத்து விட்டு விதவிதமாக புகைப்படம் எடுப்பது அறையின் ஒரு வருட வழக்கமாகி விட்டது. எதற்காக படம் எடுக்கிறோம் என்று யாருக்கும் தெரியவில்லை. எடுத்த படத்தை என்ன செய்தோமென்றும் ஞாபகம் இல்லை. காரணமே இல்லாமல் அதுவும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆகிவிட்டுருந்தது.புகைப்படம் எடுத்துகொண்டிருக்கும் போதே ரெட்டியின் கைப்பேசி அழைக்க, அவன் நண்பன் அறைக்கு வருவதாக தெரிவித்துள்ளான். ’விருந்தோம்பலுக்கு’ மூன்று மாநிலமும் ஒன்றுக்கொன்று சலித்ததல்ல என்பதனால் அவனையும் கொண்டாட்டத்தில் சேர்த்துக் கொள்ள தீர்மானித்தோம். அதுமட்டும் காரணமா என்று சரியாக சொல்ல முடியவில்லை. தமிழர்கள் மட்டும், அல்லது மலையாளிகள் மட்டும் குடித்தாலும் குடிக்கும் நேரத்தில் யார் வந்தாலும் வற்புறுத்தி குடிக்க வைப்பதை கண்டிருக்கிறேன்.

ரெட்டியின் நண்பனுக்காக காத்திருந்தோம். வந்தான்.

நான்கு வருட அமீரக இயந்திரவாழ்க்கையில் என் அங்கமாகிவிட்ட மலையாள மொழியால், நானும் சேட்டனும் சரளமாக உரையாடியதை வைத்து அந்த ரெட்டியின் நண்பன் நாங்கள் இருவரும் மலையாளிகள் என்ற எண்ணத்திற்கு வந்திருக்க வேண்டும். இருந்த போதிலும் முடிந்த வரை அனைவருக்கும் பொதுவான ஹிந்தியில் உரையாடினோம். (உடனே ஹிந்தியின் மகத்துவத்தைப் பார்த்தாயா? என்றபடி யாரும் ஓடி வந்துவிட வேண்டாம்).

உடம்பில் கொழுப்புகள் எங்கிருந்தாலும் பிரச்சனை தான். முக்கியமாக வாய்கொழுப்பு. அது தமிழனுக்கு எவ்வளவு இருக்கிறதோ அதைவிட அதிகமாக மலையாளிகளுக்கும், தெலுங்கர்களுக்கும் இருக்கிறது என்பது கடந்த சில வருடங்களாக உணர முடிந்தது. இங்கே பிரிவினையை கொண்டு வராமல் தென்னிந்தியர்களுக்கு ‘வாய்கொழுப்பு அதிகம்’ என முடிக்கலாம் அனைவருக்கும் பொதுவாக.

”வாங்க ஆரம்பிக்கலாம்” என சேட்டன் அனைவரையும் அழைக்க, சற்றே தயங்கிய ரெட்டியின் நண்பன் “இல்லை எனக்கு வேண்டாம்” என்ற எதிர்பார்த்த பதிலை கொடுத்தான். “ஏன்” என்ற அடுத்த கேள்விக்கு “பழக்கமில்லை” என்ற பதில் வரலாம் என்று நினைத்த போது “அதிகம் பழக்கமில்லை” என்ற பதில் சற்றே அனைவருக்கும் ஒரு புன்னகையைத் தந்தது.

சேட்டன் அவன் குடிப்பதை உறுதி செய்தவராக நாலு கண்ணாடி க்ளாஸ்களில், அனைவருக்கும் ஒரே அளவாக ஊற்றினார். முதல் சுற்று முடிவடைந்தது.

வாய்கொழுப்பு ஆரம்பமானது இங்கு தான். “எனக்கு தெரிந்து தெலுங்கர்கள் அதிகம் குடிப்பார்கள். இதுவரை குடிக்காத தெலுங்கனை கண்டதில்லை. நீ வேண்டாம் என்ற போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது” சேட்டன் முந்திரியை எடுத்து வாயில் போட்டவாறு அவனைப் பார்த்தார். சேட்டன் ரெட்டியின் நண்பனுக்கு வைத்த ’ஆப்பு’ மிகச்சிறியதாக இருந்தாலும் கூராக இருந்ததது.

பொதுவாக எதுவும் குடித்திறாத போதே, நான் நாலு மலையாளிகளுடனோ, வட இந்தியர்களுடனோ பேசும் போது மாநிலம் சார்ந்த அரசியல் பேச்சுகளை தவிர்ப்பேன். முல்லை பெரியார், கருணாநிதி, ஹிந்தி திணிப்பு, ராஜ்&பால் தாக்கரே என பல விசயங்களில் ஒதுங்கி இருந்திருக்கிறேன். இப்போது அனைவரும் குடித்திருக்கிறோம்.

சேட்டனின் கேள்வியில் சற்றே நெளிந்த அவன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ரெட்டியைப் பார்க்க, ரெட்டியும் ஒரு வித சங்கோஜ நிலைக்கு போக கடைசியில் ரெட்டியின் நண்பன் ஒரு முடிவுக்கு வந்தவனாக “அப்படியெல்லாம் கிடையவே கிடையாது. எனது ஊரில் யாரும் அதிகமாக குடிப்பது கிடையாது.” என்று கூறி முடித்திருந்தால் அங்கேயே வேறு தலைப்புக்கு சென்றிருக்கலாம்.

ஆனால் யாரை திருப்தி படுத்துவதற்காக மேலும் இதைச் சொன்னானோ தெரியவில்லை “எனக்கு தெரிந்து தமிழர்கள் தான் அதிகம் குடிப்பவர்கள். அவர்களைப் போல் குடிக்கவே முடியாது” என்றான் . அதுவரை நான் தமிழன் என்று அவனுக்கு தெரியாது.

’ஆப்பு’ மிக அழகாக எனக்கும் அவனிடமிருந்து எடுத்து வைக்கப்பட்டது. கொஞ்சம் நானும் நெளிய தொடங்கினேன். என்னடா இவன் கேட்டததே கேனத்தனமான கேள்வி. அதற்கு பதில் சொல்லியே இருக்க கூடாது. சரி அப்படியே சொன்னாலும் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் என்ன? என்று எரிச்சலடைந்தேன்.

சேட்டனிடம் ஒரு உதட்டோர புன்னகையும், ரெட்டியின் நண்பன் பாரம் இறக்கி வைத்த நிம்மதியுடன் அடுத்த ‘ஸிப்’ பருகுவதையும் கண்டேன். ரெட்டி “யரா அத்தனு தமிழ்றா” என்னை நோக்கி கை காண்பித்து சிரித்தான். அவன் நண்பன் இதை எதிர்பார்க்கவில்லை.

அவசரமாக வாயறருகே கொண்டு சென்ற க்ளாஸை அப்படியே கீழே வைத்து “பாஸூ நான் பொதுவா தான் சொன்னேன். நான் சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரியில் தான் படித்தேன் அங்க நிறைய....” என நிறைய புலம்பினான்.

சில வினாடிகள் அறையே அமைதியாக இருந்தது. நான் “பரவாயில்லை பாஸூ. ” என்று ஆரம்பித்த நான் பின்பு “எனக்கு தெரிந்து மலையாளிகள் தான் நல்ல குடிப்பார்க்கள். இந்த ஓணத்திற்கு கூட விற்பனையில் கூட சாதனை படைத்ததாக டிவியில் சொன்னார்கள்” என்று ஆப்பு எங்கிருந்து வந்ததோ அங்கேயே வைத்தேன். சில ஆதாரத்தோடு.......

சபையில் சில நிமிட மவுனங்கள். பின்பு ஆப்பு இடம் மாறி பல இடங்களுக்கு சென்று மறுபடி என்னிடம் வந்து, நான் அதை திருப்பி விட்டு............ இப்படியே பல மணி நேரம் சென்றபோது தான் தெரிந்தது.......................... பாட்டில் காலி.

“தம்பி அடுத்த பாட்டில் வாங்காமோ” என சேட்டன் சோதிக்க வேகமாக அதை ஆமோதித்து நானும், ரெட்டியும் அவன் நண்பனும் தலையாட்டினோம்.

விவாதம் தொடர்ந்தது........

2012-இந்த கொசுங்க தொல்லை தாங்கமுடியல நாராயணனா!

உலகத்திற்கு ஏற்படும் ஆபத்தை முதலில் அறிவது அமெரிக்கர்கள் தான் என்ற முதல் விதியை மட்டும் தகர்த்து, இந்தியனுக்கு கொடுத்துவிட்டு மற்ற ஹாலிவுட் விதிகளை அப்படியே கடைபிடித்து வந்திருக்கிறது 2012.பயம்...கொசுகடித்தாலும் பயம், காகம் கரைத்தாலும் பயம், கழுதை உதைத்தாலும் பயம் என எதைக் கண்டாலும் பயம் என்பது இந்த அமெரிக்கர்களுக்கு. ஏற்கனவே உலகை அழிக்க (மிருகங்களும், இயற்கை சீற்றங்களும்) வந்த சுமார் 12058 படங்களும் சொல்லியதை, கூட கொஞ்சம் எக்ஸ்டாராவா பிட்ட போட்டு தந்திருக்கிற படம் தான் இது. பூமிக்கு ஆபத்து வருகிறது என்பதை முதலில் கண்டறிந்த இந்திய விஞ்ஞானி, இந்திய அரசாங்கத்திற்கு கூட சொல்லாமல் தனது அமெரிக்க நண்பரை அழைத்துச் சொல்கிறார். கண்ணு கரண்டி மாதிரி(அதாங்க பூந்தி கரண்டி) எக்கசக்க லாஜிக் ஓட்டைகளில் மிகப்பெரிய ஓட்டை இது.

அவர் அமெரிக்க ஜனாதிபதியிடம் சொல்ல, வழக்கம் போல நல்லவரான அமெரிக்க ஜனாதிபதி உலக பணக்கார நாடுகளின் உதவியோடு (இந்தியா இல்லை) மிக முக்கிய, அதுவும் பைசா உள்ள ஆட்களை மட்டும் காப்பாற்றிச் செல்ல ஒரு கப்பலை உருவாக்குகிறார் அதுவும் சீனாவில். இந்த விசயம் தெரிந்து வெளியே சொல்பவர்கள் கொல்லப்படுகிறார்கள். அடப்பாவி மக்கா இந்தியாவுல வேற விஞ்ஞானிகளே இல்லையா?

இது ஒரு ஆளுக்கு தெரிந்து அவன் ஒரு ரேடியோ அலைவரிசையை உருவாக்கி இதையெல்லாம் புலம்ப அவனை பைத்தியகாரனை போல் பார்கிறது அமெரிக்கா. ஆனால் அவன் நம்மூரு சாமியார் கெட்டப்பில் இருக்கிறான். அவனுக்கு அந்த கப்பல் எங்கு செய்கிறார்கள் என்ற மேப் கூட கிடைத்துவிடுகிறது என்பதெல்லாம் ஜல்லி கரண்டியில் பெரிய ஓட்டை. (டைரக்டரு தமிழ்படம் நிறைய பார்க்கிறாரோ?)

இதிலும் வழக்கம் போல ஹீரோ, விவாகரத்து, குழந்தைகள், பாசம் ஆகிய இத்யாகிகளுடன் சீனா செல்கிறார். அந்த பைத்தியகாரன் பேச்சை இவர் மட்டும் நம்புகிறார். அவனிடம் இருந்து மேப்பை வாங்கி சீன செல்ல தயாராகிறார். அதுவும் இன்ஸ்டெண்ட் பைலட்டோட்டு. அதாவது பகவதி படத்துல வடிவேலு டிரையின் ஓட்டுவாரே.... அந்த மாதிரி. கப்பலைத் தேடி சீனா வரை வந்து விடுகின்றனர்.

அந்த கப்பலில் திருட்டுதனமாக(!) நம் ஹீரோ குடும்பத்தினர் எல்லாரும் உள்ளே செல்கிறார்கள். பற்சக்கரத்தில் ஹீரோ ஒரு மெஷினை போட, கதவு அடைபடாமல் மொத்த கப்பலும் ஸ்டார்ட் ஆகாமல் நிற்கிறது. சுனாமி வேறு கன்னியாகுமரியில் இருந்து ஒட்டு மொத்த இந்தியாவையும் அழித்துவிட்டு நேரா இமயமலையை கடந்து சீனாவிற்கு வருகிறது. கதவு வேறு மூடாமல் நிற்கிறது. கடைசியில் ஹீரோ மட்டும் தண்ணீரிக்குள் சென்று பிரச்சனையை சரி செய்கிறார். இந்த காட்சி மட்டும் 10 நிமிடத்திற்கும் மேல் வருகிறது. தியேட்டரில் எல்லாரும் நெளிகிறார்கள். கடைசியில் கப்பல் எவரெஸ்ட் சிகரத்தில் மோதாமல் தப்பிகிறது. ஹீரோவைப் பார்த்து எல்லாரும் சந்தோசத்தில் ஆர்பரிக்கிறார்கள்(ங்கொய்யால இவனால தான் அந்த கதவே மூடாம போச்சு. அதுக்கு அவனை கொன்னே போட்டுருக்கனும்)

உலகத்தலைவர்களெல்லாம் உயிருக்கு பயந்து கப்பலில் சென்றுவிட, ரொம்ப நல்லவரான அமெரிக்க ஜனாதிபதி மட்டும் வர மறுத்து மக்களோடு மக்களாக சாகிறார் :) சிரிப்பு தான் வருகிறது.

உலகமே அழிந்து விட அந்த கப்பலில் உள்ளவர்கள் மட்டு ம் பிழைத்துக் கொள்கிறார்கள். மீண்டும் புதிய உலகம் பிறக்கிறது. இமயமலை ஆப்ரிக்காவுக்கு செல்கிறது. பாவம் ஆப்பிரிக்கா. பின்னே பிரச்சனையோட காஷ்மீரும் கூட போயிருச்சே!

ஆரம்பக்காட்சிகளில் கலிபோர்னியாவை நாசமாக்கும் காட்சிகளில் இமைக்க கூட மறக்கிறார்கள் ரசிகர்கள். அதையும் அதைத்தொடந்து வந்த சில நிமிடங்களிலும் ஒட்டுமொத்த ரசிகர்களும் பிரம்மிப்போடு பார்த்தக் காட்சிகள் அவை. ஆனால் அதில் ஹீரோவின் குடும்பம் தப்பிப்பது கார்டூன் சீனைப் போல் உள்ளது. செம மொக்கை. கடைசியில் சுனாமியும் வருகிறது. தசாவதாரத்தின் சுனாமியை விட பரவாயில்லை. ஆனால் ஏனோ இதில் செயற்கைதனமும் தெரிகிறது.

ஏன் இத்தனை கேரக்டர்கள் என்று தெரியவில்லை. இதில் செண்டிமெண்ட் காட்சிகள் வேறு. அமெரிக்கர்கள் இம்புட்டு செண்டிமெண்டாக ஆகிவிட்டார்களா என்ன? அப்பா, அம்மா, பேத்தி, மகள், மகன், மனைவி என நிறைய அழுகாச்சி காவியங்கள். சில நிமிசத்துல சுனாமி வரப்போகுது, ஹீரோ பற்சக்கரத்துல என்ன பிரச்சனைன்னு போகுறப்போ மனைவிக்கு முத்தம் கொடுத்துட்டுகிட்டு...ஸ்ப்ப்பா... முடியல.

லாஜிக் எதுவும் பார்க்காம, டைம் நிறைய இருக்குது போரடிக்குதேன்னு நினைக்குறவங்க மட்டும் போய் பார்க்கலாம். வெறும் 30 நிமிடகாட்சிகளுக்காக 2.15 கால் மணி நேரம் எல்லாம் இந்த கொடுமைய பார்க்குறது கொஞ்சம் கஷ்டம் தான்.

அய்யய்யோ அய்யய்யோ பிடிச்சிருக்கு!

அதாகப்பட்டது என்னவென்றால் நம்ம “பதிவுலக டாக்டர்” இளையபல்லவன் பிஸியான நேரத்துல தொடர்பதிவை மட்டும் போட்டுட்டு எஸ்ஸாகிடுறார். அப்படி எஸ்ஸாகும் முன்ன எனக்கான இந்த மாசத்துக்கான தொடர்பதிவை தொடர் பதிவை தொடங்க வச்சுட்டு போயிட்டார்.

மீதியை கீழே க்ளிக் பண்ணி தெரிஞ்சுக்கங்க....
இதை தொடர்வதற்காக(நேரமிருப்பின்) நான் அழைக்கும் நால்வர்.

1. ஆயில்யன் (நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் பாஸ்)

2. கலையரசன் (ஹி ஹி பழிவாங்க வேற வழி தெரியல)

3. வினோத்கௌதம் (டூருக்கு தான் வரல....இதையாவது ஒழுங்கா செய் :)

4. எவனோ ஒருவன் என்கிற அதி பிரதாபன் (அவ்வ்வ்வ்வ்வ்)

டிஸ்கி: ப்ளாஷ் செய்ய மிகவும் உதவியாய் இருந்த பினாத்தல் சுரேஷ்க்கு நன்றி :)

கற்றதது கடலளவு-பஞ்சாமிர்தம்

ரொம்ப நாளா மாத்தனும்னு நினைச்சுட்டு இருந்தேன். மாப்பி எவனோ ஒருவன் என்கிற அதி பிரதாபன் புண்ணியத்தால் தளத்தின் டெம்ப்ளேட் எந்தவித பிரச்சனையுமின்றி மாற்றப்பட்டுள்ளது. எப்படியிருக்குன்னு கருத்துல சொல்லுங்க மக்கா. அதுவுமில்லாம அவர் ப்ளாக்கர் சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்காக தனியா ஒரு தளம் நடத்துகிறார். அந்த பக்கமும் போய் உங்க சந்தேகங்களை தீர்த்துகிட்டு அவருக்கு ஆதரவு கொடுங்க மக்காஸ்.
---------------------------------------------------------------------------------------------------
போன வீக் எண்ட் மெஸ்ல தனியா சாப்பிட போனேன். அங்க விஜய் இரசிகர்கள் மலையாளீஸ் மூனு பேர் சாப்பிட்டுருந்தாங்க. நான் போனா ஏதாவது விஜயைப் பத்தி கேட்டுகிட்டே இருப்பாங்க. எனக்கும் சாப்பிடும் போது கொஞ்சம் டைம் பாஸா இருக்கட்டுமேன்னு அவங்க பக்கத்துல உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சேன்.

’வேட்டைகாரன் எப்ப ரீலீசு’னு ஒரு பக்கி கேட்க நான் தெரியாதுன்னேன். ஆலப்புலால விஜயையோட அடுத்த ஷூட்டிங்க நடக்குது, ஊர்லயிருந்து ப்ரெண்டு சொன்னான் அது என்ன படம்?னு கேட்டானுவ. நான் தெரியல ஒருவேளை ‘சுறா’வா இருக்கலாம்னு சொன்னேன்.

பயபுள்ளைக அன்னைக்கு தண்ணியடிச்சுட்டு இருந்துங்க. இது தெரியாம நான் வழக்கம் போல விஜயை ஓட்ட ஆரம்பிச்சேன். வேட்டைகாரன் எஸ் எம் எஸ் ல இருந்து ரெண்டு பிட்டை போட்டு ‘கக்க பொக்கே கக்க பொக்கே.....’ன்னு சிரிச்சேன். பயபுள்ளைங்க அமைதியா பார்த்துட்டே இருந்துங்க. ஏன் குறு குறுன்னு பார்க்குறானுங்க தெரியாம சிரிப்பை நிறுத்தினேன். “நீ இப்ப சொன்னது ஜோக்கா?”ன்னு கேட்டுட்டு பக்கத்துல இருந்தவன்கிட்ட “டேய் சூரியா இப்ப ஜோக்கு சொல்லப்போறான். சீக்கிரம் சாப்பிடு. கேட்டுட்டு சிரிக்கலாம்”னு சிரிக்காம சொன்னான். அவனும் வேகமா சாப்பிட ஆரம்பிச்சான். நான் கொஞ்சம் உசாராகி அதோட நிறுத்திட்டு வெளிய வந்தேன்.

ஆனா விடலயே அந்த மூனு பேரும். அரை மணி நேரம் பக்கிங்க மூனு பேரும் “ஜோக் இப்ப சொல்லு சிரிக்கிறேன். இப்ப சொல்லு”ன்னு ஒரே டார்ச்சர். டேய் விடுங்கடா நான் போறேன்னா, விடாம “இப்ப சொல்லு கண்டிப்பா சிரிக்கிறேன்”னு சிரிக்காம டார்ச்சர் பண்ணிட்டானுங்க. இனி விஜயை கிண்டல் பண்ணுவேன்???? ம்ஹூம்
------------------------------------------------------------------------------------------------
இப்பெல்லாம் வெட்டியா விட்டத்தப் பார்த்துட்டு இருக்கும் போதெல்லாம் ஒரு “ச்சே என்ன மனுசன் டா நீ? இப்படி சும்மா இருக்குற நேரத்துக்கு நாலு பேருக்கு உதவி பண்ணலாம்ல?” அப்படிங்கிற எண்ணம் வந்து, உடனே கம்யூட்டரை ஆன் செய்து facebookல் லாக ஆன் செய்து “farm ville" சென்று நண்பர்களின் வாய்க்கா வரப்பில் காக்கா, நரியை ஓட்டுகிறேன்.அவ்வ்வ்வ்வ்வ்
------------------------------------------------------------------------------------------------
“குறிப்பிட்ட காலத்துக்கு மேல் கரையில் வசிக்காமல், கடலிலேயே வாழ்க்கையைக் கழித்துவிட்டு வரும் கப்பல்வாசிகளின் சாட்சியத்தை “சராசரி மனிதன்” சொல்லும் சாட்சியாக, சில நாடுகளின் நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனென்றால் கப்பலில் ஒருவர் ஆறுமாசத்துக்கு மேல் வேலையில் இருந்தால், அவரது மனநிலை, சராசரி மனிதனின் மனநிலையில் இருக்காது.”

“கப்பலின் உள்ளே இன்ஜின் அறையில் தேங்கும் நீரை நேரடியாக வெளியேற்றக்கூடாது. “OILY WATER SEPARATOR" எனப்படும் கருவி வழியாக எண்ணெயைப் பிரித்து கிட்டத்தட்ட வெறும் தண்ணீரை மட்டும் கடலுக்குள் பம்ப் செய்ய வேண்டும். இல்லையேல் கப்பலைச் சிறைப்படுத்தி விடுவார்கள். உலக அளவில் கடல் நீர் மாசுபடாமல் இருக்க எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன்”

இவ்வாறு நம்மில் பலர் அறியப்படாத தகவல்களை தந்து ஆசிரியரின் கடல் பயணத்தையும் மிக எளிமையான தமிழில், சுவாரஸியமாக தந்திருக்கிறது “கற்றதது கடலளவு” புத்தகம். ஆசிரியர் து.கணேசன். 1987-88 ஆண்டு விகடன் மிகச்சிறந்த மாணவ நிருபராக தகுதி பெற்றவர்.

ஜூனியர் விகடனில் வெளிவந்த தொடர், புத்தகமாக வந்திருக்கிறது. அதனால் தான் என்னவோ சில இடங்களில் சினிமாத்தனங்களையும் மிஞ்சும் இடங்களும் இருக்கின்றன :) இதன் சிறப்பே மாணவர்களும் படித்து புரிந்து கொள்ளும் எளிய முறையில் தன் அனுபவங்களை கொடுத்திருக்கிறார் ஆசிரியர் கணேசன். கப்பலில் பணி செய்ய விரும்பவர்கள் முதலில் இதைப் படித்து கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. முக்கியமாக கிரேக்க கப்பல் கம்பெனிகளைப் பற்றி :)

நடுக்கடலில் கேப்டன், இன்ஜினியர்களுடன் இந்தியக் கப்பல் மூழ்குவதை விவரிக்கும் காட்சி ஆங்கில படத்தை நினைவூட்டுகிறது :) தொடர்ந்து மூன்று மணி நேரம் கிடைத்தால் இந்த புத்தகத்தை படித்து முடித்து விடலாம்.

சென்ஷியின் பின்னூட்டத்திற்கு பிறகே கணேசனும் ஒரு பதிவர் என தெரிந்தது. கூகுளாண்டவரின் உதவியோடு அவரின் வலைத்தளத்தையும் அறிந்து கொண்டேன். இங்கே சென்று “கற்றது கடலளவு” முழுதையும் வாசிக்கலாம்.
------------------------------------------------------------------------------------------------
சமீபத்தில் படித்த (அட சத்தியமா போன வாரம் தாங்க) ஜெயமோகனின் “ஓர் அக்னிப்பிரவேசம்” கட்டுரை சுப்புலட்சுமி பற்றி சில அறிய தகவல்களை அறிய முடிந்தது.

வெளிப்புற தோற்றத்தில் பிராணமப்பெண்ணாக எதற்காக தன்னை மாற்றிக்கொண்டார் அல்லது மாற்றப்பட்டார், அதற்கான நோக்கம் நிறைவேறியதா? அவரின் கடந்த கால வாழ்க்கை, காதல் என்ன? என மிக சுவாரஸியமான கட்டுரை அது. ஆனால் அந்த கட்டுரையே டி.ஜெ.எஸ். ஜார்ஜ் எழுதிய ‘எம்.எஸ்: இசையில் ஒரு வாழ்க்கை’ [MS - 'A Life in Music' ,T.J.S George ] என்ற நூலை அடிப்படையாக கொண்டது தான். அவர் பிராமணர் என்று எண்ணி அவரின் இசையைப் போற்றிய அவர் நண்பர் பின்பு அவரைப் பற்றி முழுதும் அறிந்து மாறியதைப் படித்து சிரிப்பை அடக்க முடியவில்லை.

சென்ற விடுமுறையில் “எம்.எஸ் சுப்புலெட்சுமி. வாழ்க்கை வரலாறு” (ஆசிரியர் நினைவில்லை) என்ற புத்தகத்தை வாங்கி வெயிட் அதிகம் இருந்ததால் நான்கைந்து புத்தகத்தோடு அதையும் அங்கேயே வைத்து வந்து விட்டேன். அடுத்த முறை படிக்க வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது.
------------------------------------------------------------------------------------------------
நண்பனின் அலுவலகத்தில்

“சார் இன்னைக்கு வெக்கேசன்ல போறேன்.”

“ஓக்கே. பை. ஹேவ் எ நைஸ் வெக்கேசன்?”

“இந்த தடவை எனக்கு தீடீர்னு கல்யாணம் நடநதாலும் நடக்கலாம் சார்”

“ஏன்யா என்னாச்சு பொண்ணு யாரையாவது லவ் பண்றயா?’

”ஹி ஹி ஹி”

“அப்ப ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க போறயா?”

“இல்ல சார். எங்க ரெண்டு பேரோட அம்மா அப்பா என எல்லார் முன்னாடியும் தான்”

“ஓ அப்ப குடும்பத்தோட ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?”

இவன் எரிச்சலுடன் “அதெல்லாம் இல்ல சார் சொந்த காரங்களெல்லாம் வருவாங்க”

“அப்புறம் எதுக்குய்யா ஓடிப்போய் கல்யாணம் பண்ணுற?”

இவன் தலையில் அடித்துக் கொள்ள, அவர் சிரித்துக்கொண்டே வாழ்த்து கூறியிருக்கிறார்.
Related Posts with Thumbnails