எவனைப் போலவும் எவனும் இல்லை-பஞ்சாமிர்தம்

கடந்த வெள்ளிக்கிழமை உன்னைப்போல் ஒருவன் டிரைலர் ஒரு மலையாள டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. கமல் பேசும் வசனம் “சிட்டியில அஞ்சு இடத்துல பாம் வச்சிருக்கேன்...” என்ற காட்சி வரும் போது என் கூட வேலை செய்யும் என்வயதையொத்த மலையாள நண்பர் “நீ பத்து இடத்துல வேணா வச்சுக்கோ, அதை எங்க லாலேட்டன் எப்படியும் எடுத்துருவார்” என்று என்னை நோக்கி சீரியஸாக வசனம் பேசினார். முதலில் ஒன்றும் புரியாமல் முழிக்க, பின்பு அதிலிருந்த உள்குத்து புரிந்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

தமிழ்நாட்டை பிடித்திருக்கிற கிரகம் உங்களுக்கும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை நினைக்கும் போது கொஞ்சம் சந்தோஷமா தான் இருக்கு :)
-------------------------------------------------------------------------------------------------
இரண்டாம் நாளே “உன்னைப் போல் ஒருவன்” படத்தைப் பார்த்துவிட்டாலும் மூன்று நாட்கள் விடுமுறையில் பதிவேதும் எழுதவில்லை. நேற்று தமிழ்மணத்தை திறந்ததும் கண்ணில் படுவதெல்லாம் விமர்சனப்பதிவுகளே. இனி எனது பாணியில் எழுதினாலும் கும்பலில் போடும் கோவிந்தாவாக மாற வாய்ப்புண்டு.

ரம்ஜான் மாதத்தின் மதிய வேளையில் படம் பார்த்ததால் இடைவேளையே வரவில்லை. இடைவேளை பற்றிய எண்ணம் வராமல் ஒரு தமிழ் படத்தைப் பார்த்த மக்களை காண்பது இதுவே முதல்முறை. அதே போல் படத்தை முடித்து வெளிவரும் போது அனைவரின் முகத்திலும் ஒரு நிம்மதியை பார்க்கமுடிந்தது. அவசரம் அவசரமாக எடுக்கப்பட்ட படத்தில் எக்கசக்க லாஜீக் உதைகள், தில்லாலங்கடித்தனங்கள் இருந்தாலும் படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆயிரம் பேருக்கும் குறைவாக படிக்கும் வலைப்பதிவில் தனது கருத்தை வெளியிடுவது தவறில்லை அதுவும் படத்தைப் பார்த்துவிட்டு...... ஆனால் படத்திற்கு இதுவும் ஒருவகையில் வெற்றியே!

அது சரி கேரளாவுல கோழிகோட்டில் இந்த படத்தை ரீலீசாகவே விடலையாமே? இந்த பிரச்சனையைப் பற்றி யாரும் பேசவே மாட்டேங்கிறாங்களே. ஏன்?
------------------------------------------------------------------------------------------------
நண்பர் ஒருவர் ”இந்த படத்தில் கமலை ஒரு முஸ்லீமாக காட்டியிருக்கலாம். இது போன்ற பிரச்சனையே வராது இருந்திருக்கும்” என்றார்.

எனக்கென்னவோ விஜயகாந்தின் “கள்ளழகர்” படம் ஞாபகம் தான் வந்தது. (ஹலோ பாஸ் சிரிக்காதீங்க!)
------------------------------------------------------------------------------------------------
”எவ்வளவு நாள் தான்பா அங்கேயே வேலை பார்ப்ப, இங்க வந்திரு இராசா” என்று போன வாரம் அப்பா தொலைபேசியில் பேசும் போது கூறினார். இதுவரை இப்படி கூறியதில்லை.

கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. “கண்டிப்பா அடுத்த வருசம் வந்திடுறேன்ப்பா” என்றேன்.

“ஏன் இங்க வந்தா நல்ல வேலை கிடைக்காதா தம்பி?” என்றார்

“கிடைக்கும்ம்ம்ம்ம்..” இழுத்தேன்

“இல்ல சொந்தமா ஏதாவ்து செய்யுப்பா. நாலைஞ்சு கம்யூட்டர வாங்கி போட்டு எதுவும் செய்ய முடியாதா? குடிசைத்தொழில் மாதிரி?”

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
------------------------------------------------------------------------------------------------
சமீபத்தில் நெஞ்சை உருக்கிய வாழ்க்கை வரலாறு “கோபி கிருஷ்ணனு”டையது. தூயோன் படிக்க ஆரம்பித்து ஒருவகை கிறக்கத்தில் கோபி கிருஷ்ணனை தேடி அலைந்த போது கிடைத்தது தான் ஜ்யோராம் சுந்தர் இட்டுள்ள தொடர் பதிவான கோபி கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு.

இது எப்படி படிக்காமல் விட்டேன் என்று தெரியவில்லை. இலக்கியவாதி என்பதின் முழு அர்த்தம் ஓரளவு புரிபட தொடங்கியது :) ஒரு நேர்மையை அவரின் எழுத்துக்களில் காணமுடிகிறது. தனக்கு ஏற்பட்ட மனரீதியான பிரச்சனையை கூட நேர்மையாக கூறிய விதமும் அவர்மேல் மரியாதையையே கூட்டுகிறது.

தூயோனில் பல இடங்களில் இயல்பான புன்னகையை வரவழைக்கிறது கோபி கிருஷ்ணனின் எழுத்துக்கள். ஆனால் அவரின் முரணான நிஜ வாழ்க்கை இலக்கிய உலகிற்கு கிடைத்த சாபமாக தான் எண்ணத்தோன்றுகிறது.
------------------------------------------------------------------------------------------------
ஒரு மதிய உணவு இடைவேளையின் போது டேமேஜர், சுமாரான அறிவாளி, சூப்பரான அறிவாளி மூனு பேரும் வெளிய வாக்கிங் போறாங்க. தீடீரென்று அங்கிருந்த கல் இடறி மூன்று பேரும் கீழே விழுந்த போது கடவுள் தோன்றினாராம்.

மூன்று பேருக்கும் தனித்தனியே வரம் கொடுப்பதாக கடவுள் கூறினாராம். சுமாரான அறிவாளி “ஒரு நல்ல கம்பெனியில நல்ல வேலை கிடைக்கனும், வேலையே செய்யலனாலும் சம்பளம் வரனும். யாரும் எந்த கேள்வியும் கேட்க கூடாது”ன்னு கேட்டானாம்

சூப்பரான அறிவாளி“கேரளாவுல மலை மேலே ஒரு பெரிய வீடும், பணத்தை பற்றிய கவலையும் இல்லாம, என்னை சுத்தி நிறைய அழகான பெண்களும் இருக்கனும்”ன்னு கேட்டானாம்.

டேமேஜர் “ லஞ்ச் முடிய நேரமாச்சு அந்த ரெண்டு பேரையும் மறுபடியும் ஆபிஸூக்கு கொண்டு வாங்க”ன்னு கேட்டானாம்.

இப்படிக்கு
ரம்ஜானின் நாலு நாள் லீவு முடிந்து இன்று வேலைக்கு சேர்ந்திருக்கும் சூப்பரான அறிவாளி

நான் ஆதவன்

பெசிர பப்பு

"பெசிர பப்பு? பெயர் ரொம்ப வித்தியாசமா இருக்கே பிரபு”

“ஆமாம். ஆனா ரொம்ப சூப்பரா இருக்கும். ரொம்ப வித்தியாசமான டிஷ் இது”

ஆகா இதை கத்துகிட்டு சுடு தண்ணி கூட வைக்கத் தெரியலைன்னு கிண்டல் பண்ணின அம்மாவுக்கு செய்து கொடுத்து அசத்தலாம். அக்காவுக்கும் கொஞ்சம் பிகு பண்ணி அப்புறம் எப்படின்னு சொல்லி கொடுக்கலாம். எல்லாத்துக்கும் மேலே இத ஒரு பதிவா போட்டு “ரொம்ப நன்றி ஆதவன். சூப்பர் சமையல் குறிப்பு இது”ன்னு தூயாவையே பின்னூட்டமிடவைக்கலாம். பெண் பதிவர்கள் பல பேர் வீட்டுல இத செய்துட்டு கணவர்மார்கள் பாராட்டும் போது இதுக்கெல்லாம் காரணம் நான் ஆதவன் தான்னு சொல்ல வைக்கலாம்... கட்.. கட் ...கட்.. கட்..

“என்ன யோசனைடா” பிரபு

“ஒன்னுமில்லை இது எப்படி செய்யுறதுன்னு சொல்லிகிட்டே செய்றீங்களா? நானும் கத்துக்கனும்” நான்

“ஓக்கே”

படம் பிடிப்பதற்காக செல்போனை எடுத்துக் கொண்டேன்.

“இந்த பாசி பருப்பு உள்ளங்கையில எட்டு தடவை எடுத்துப் போட்டுக்கங்க. நல்லா கழுவிகங்க” பிரபு

“இருங்க போட்டோ எடுத்துக்கிறேன்”

“யோவ் இத எதுக்குய்யா போட்டோ எடுக்குற?” பிரபு

“அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? நீங்க சொல்லிகிட்டே செய்யுங்க. நான் என் வேலைய பார்க்குறேன்”
“பெரிய வெங்காயம் மூனு, தக்காளி அஞ்சு, பூண்டு ரெண்டு, பச்சை மிளகாய் அஞ்சு, கொஞ்சம் கொத்தமல்லி இதெல்லாம் எடுத்து ரெடியா வச்சுக்கனும்”

“பிரபு இவ்வளவு தான் தேவைப்படுமா? ஆச்சர்யமா இருக்கே? இதுக்குள்ள எப்படி வித்தியாசமா பண்ணுவீங்க?”

“யோவ் சும்மா நொய், நொய்ன்னு கேள்வி கேட்காம பேசாம நோட் பண்ணு.
பாசி பருப்பை நல்லா கழுவிட்டு தக்காளி கட் பண்ணி போட்டு குக்கர்ல வச்சு அஞ்சு விசில் வருகிற வரைக்கும் அடுப்புல வைக்கனும்.”

“ஓக்கே” என்றேன். ஒரு 15 நிமிடம் ஆனது. அதற்குள் என்னை கொண்டே வெங்காயத்தை வெட்ட வைத்தார், பூண்டையும் உரிக்க வைத்தார்.


விசில் வந்ததும் இறக்கி வைத்தார். “இதுல ஒரு ஸ்பெஷல் இருக்கு ஆதவா. இப்ப இதுல நிறைய தண்ணி இருக்குல்ல இதை சூப்பா கூட நாம குடிக்கலாம். மிளகை கொஞ்சம் போட்டோம்னா சூப்பு சூப்பரா இருக்கும்” என்றார்.”அட பரவாயில்லையே” என்றேன் ஆச்சர்யத்துடன். சூப் சுமாராக இருந்தது.

“இப்ப கடாயை அடுப்புல வச்சு கொஞ்சமா எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, கடுகு எல்லாம் போட்டு தாளிக்கனும். அதே நேரத்துல பருப்பையும் தக்காளியையும் கடையனும்”

“ஓ”

“இப்ப தாளிச்சதை எடுத்து இந்த பருப்புல போட்டுட்டு 10 நிமிசம் அடுப்புல கொதிக்க விட்டோம்னா “பெசிர பப்பு” ரெடி” என்றார்.


“அவ்வளவு தானா? இது வேற மாதிரி இருக்கே பிரபு”

“வேற மாதிரின்னா?”

“யோவ் இத தான்யா எங்க வீட்டுல பருப்பு கடைஞ்சதுன்னு வைப்பாங்க. அதுல துவரம் பருப்பு இருக்கும். இதுல பாசி பருப்பு இருக்கு.” என்றேன்

“ஆமா. அதுக்கென்ன இப்ப” பிரபு

“அப்புறம் அது என்னைய்யா “பெசிர பப்பு””?

“தெலுங்குல அதுக்கு பாசி பருப்புன்னு பேரு. நான் ஹதைராபாத்ல இருக்கும் போது செய்ய கத்துக்கிட்டேன்.”

“அடப்பாவி இத வேற கத்துகனுமா? இதுல என்னய்யா வித்தியாசம்? என்னவோ வித்தியாசமான டிஷ்ன்னு சொன்ன? இதுக்கு போட்டோவெல்லாம் எடுத்தேனே”

”நானா போட்டோ எடுக்க சொன்னேன்? வேணும்னா நாளைக்கு இன்னொரு வித்தியாசமான டிஷ் பண்றேன். அதையும் ட்ரை பண்ணி பாரு” பிரபு

அடிங்ங்ங்ங்ங்ங்...

எடுத்த போட்டோவெல்லாம் வீணா போயிடுமேன்னு தான் இந்த பதிவு.

நீங்களும் டிரை பண்ணி பாருங்க.

மலையாளக் கரையோரம்

இப்பெல்லாம் நான் கூட “ஸ்ருதி விட்டு போயி” “சங்கதி இல்லா” “பிட்ச் லோ ஆயி” இப்படியெல்லாம் ஒரு பாட்டைக் கேட்டுட்டு உளறுறேன்னா அதுக்கு காரணம் ஏசியாநெட்ல வெளிவந்த, வெளிவரும் “ஐடியா ஸ்டார் சிங்கர்”.

ஏசியாநெட்டை மலையாளத்தில் பொழைக்க தெரிந்த டிவி சேனல்னு சொல்லலாம். நான்கு வருடத்துக்கு முன்னால ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தென்னிந்திய சேனல்களில் முதலில் பெரிய பரிசோட (ஒரு கோடி) ஆரம்பிக்கப்பட்டதுன்னு சொல்லலாம். அந்த நிகழ்ச்சியில போட்டியிட்ட அந்த வருடத்தின் போட்டியாளர்களை கொண்டே இன்னமும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது (காசெல்லாம் கொடுக்குதான்னு தெரியல). அந்த நிகழ்ச்சி தொகுப்பாளராட இருந்த “மீரா நந்தன்” வால்மீகி படத்தோட கதாநாயகி.

இப்ப மேட்டர் என்னான்னா நம்ம தமிழ்ல பாலான்னு ஒரு நடிகர் இருந்தாரு ஞாபகம் இருக்கா?. அன்பு, காதல்கிசுகிசு படத்திலயெல்லாம் நடிச்சிருப்பாரு. இங்க படம் ஒன்னும் ஹிட்டாகலைன்னு கேரளா பக்கம் ஒதுங்கினாரு. அதிசயமா பாரபட்சம் பார்க்காம நம்ம கேரளா ரெண்டு மூனு ஹிட் படம் அவருக்கு கொடுத்தது. இப்ப அங்க பாலா ஓரளவு சொல்லிக்கிற மாதிரி கதாநாயகன் ஆகிட்டாரு.

ஒரு தடவை இந்த நிகழ்ச்சியில கெஸ்டா பங்கெடுக்குறதுக்காக போனாரு பாலா. அங்க போட்டியாளர் அமிருதாவோட பாட்டுல மட்டும் இல்லாம அழகிலயும் மயங்கி காதலிக்க தொடங்கிட்டாரு. அம்மணியும் பச்சை சிக்னல் கொடுத்துட்டாங்க.


இப்ப இந்த ரெண்டு பேரும் தான் போன ஓணத்தில ”ஹாட் டாக்”. ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் ஆகிடுச்சு.
-------------------------------------------------------------------------------------------------
அந்த வருடத்தின் இதே நிகழ்ச்சியில என் மனசை கொள்ளைக் கொண்டவள் வாணி ஜெயராம். வாணி அப்போ டாக்டருக்கு படிச்சுட்டு இருந்தாங்க. இப்ப டாக்டரா ஆகிட்டாங்க.

கேரளாவுல வாணிக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கு. நெட்லயே நிறைய ஃபாரம் வாணிக்காக இருக்கு. இவங்க பாடின ஒரு பாடலை கூட நான் பார்க்காம விட்டதே கிடையாது.

டிவெண்டி-டிவெண்டி முதல் உலக கோப்பையின் இந்தியா-பாக் ஃபைனல் மேட்ச்ல ஒரு டிவி முன்னால கம்பெனியில எல்லாரும் க்ளைமாக்ஸ வெறியோட பார்க்க நான் மட்டும் எஸ்ஸாகி வாணியோட பாட்டை பார்த்துகிட்டுருந்தேன். பாட்டு முடிஞ்சு வந்தா மேட்ச் முடிஞ்சிருச்சு :)

அவளுக்காக எத்தனை SMS அனுப்பியிருப்பேன்னு கணக்கே இல்லை. நான் ஒருதலை பட்சமா வாணிய காதலிச்சு தோத்து போனாலும் நம்ம பாலா அமிருதாவை கல்யாணம் பண்ணுறத பாக்கும் போது ”அட இவருக்காவது வொர்கவுட் ஆச்சே”ன்னு கொஞ்சம் ஆறுதலா இருக்கு.

வாணி எங்கிருந்தாலும் வாழ்க ♫....... :( கதாநாயகியா நடிக்க வந்த நிறைய வாய்ப்புகளை கூட வேணாம்னு சொல்லிட்டாங்க டாக்டர் வாணி :(

இல்லைன்னா தமிழ்நாட்டுல குஷ்பு, பெப்சி உமா, நமீதா(?) ஆகியோருக்கு அடுத்தபடியா நடிகை வாணிக்கு கோவில் கட்டுன அடுத்த முட்டா பய ஆகியிருப்பேன் :)மோளே கரையண்டா... அவ்வ்வ்வ்வ்வ்வ்
------------------------------------------------------------------------------------------------
தமிழ் சினிமாவுல இருக்குற & கலக்குற நிறைய மலையாள நடிகைகள் தெரியும். ஆனா மலையாளத்திலேயும் கொஞ்ச தமிழ் நடிகைகள் கலக்கிட்டு தான் இருக்காங்க.

பத்மப்ரியா, விமலாராமன், லஷ்மி ராய் (ஹி..ஹி குஷ்பு, ரம்பா, மும்தாஜ் ,நமீதா வரிசையில் இவங்களையும் தமிழச்சியா சேர்த்தாச்சு) போன்றவர்களோட ரோமான்னு ஒரு குட்டி தேவதை கலக்கிட்டு இருக்கு."நோட் புக்”ன்னு ஒரு படம் மூனு வருசத்துக்கு முன்னால வந்தது. ஊட்டி கான்வெண்ட்ல படிக்கிற பொண்ணா நடிச்சிருந்தாங்க ரோமா. படத்துல கதாநாயகனே இல்லைங்கிறது ஒரு ஸ்பெஷல் நியூஸ்.

அந்த படத்துலயும் சரி மற்ற படங்களிலும் சரி ரொம்ப துறுதுறுன்னு இருக்கும் இவங்க கதாப்பாத்திரம். இவங்க படத்தைப் பார்க்கும் போது நம்ம ஜோதிகாவை பாக்குற மாதிரி இருக்கும்.

மலையாளத்தில் இளம் கதாநாயகர்களுடைய இப்போதைய சாய்ஸ் ரோமா தான். மலையாளத்திலயிருந்து பல கதாநாயகிகளை இறக்கி வரும் தமிழ் இயக்குனர்கள் இவங்கள கண்டுக்காதது வருத்தம் தான்.


-----------------------------------------------------------------------------------------------
இந்த ஓணத்துக்கு ஏசியாநெட்ல நயந்தாராவோட பேட்டி ஒன்னு வந்தது. பேட்டியெடுத்தவன் நயந்தாராவை “தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார்” எப்படி ஆகினீர்கள்னு கேட்டான்(அடங்கொன்னியா இது நீ சொல்லி தான்டா எல்லாருக்கும் தெரியும்). அதுக்கு அம்மணி கொடுத்த பதில் தாங்க முடியல. 5 வருட கடும் உழைப்பு தான் இதுக்கு காரணமாம். அவ்வ்வ்வ்வ்

பேட்டியில அம்மணி அளப்பரை தாங்க முடியல. கொடுக்குற ஒவ்வொரு முகபாவத்திலேயும் ஒரு அகம்பாவத்தை எளிதா காணலாம். ரஜினியோட ராசியான நடிகை நயந்தாராதானாம். இதுவும் இவங்களே சொல்லிகிறாங்க (ரஜினி இரசிகர்களே இன்னுமா சும்மா இருக்கீங்க?).

யூ டியூப்ல இருக்கு ஸோ தயவு செய்து பார்த்திராதீங்கன்னு சொல்ல தான் இதை எழுதியிருக்கேன்.

பிச்சை

பி.ஏ.கே பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி. இராயபுரம். வெளியில் இருந்து பள்ளியின் வாயிலில் வளைவோடு எழுதப்பட்டிருந்ததை வெறுப்போடு படித்துக் கொண்டிருந்தேன். எரிச்சலாக வந்தது.

கட் அடித்துவிடலாமா என்று இருந்தது. இதுவரை பள்ளிக்கு கட் அடித்ததில்லை. அடித்தாலும் எங்கு போவது? ஏரியா முழுக்க பள்ளியின் ஆட்கள். சீருடையுடன் வெளியில் பார்த்தால் அவ்வளவு தான்.

இன்று காலையில் அம்மா சொன்னது வேறு காதில் ஒலித்தது “டேய் இராசா. 2500 ரூபா பீஸ் கட்ட எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு தெரியும்ல. இதுல டூசன் எல்லாம் எப்படிடா படிக்க வைக்கிறது? அதுவும் 1500 ரூபாயா? அநியாயமா இருக்கேடா? நம்ம கோபால் அண்ணன் சாயங்காலம் டூசன் எடுக்குறாரு. மாசம் 50 ரூபா தான். அங்க வேணா சேர்ந்துக்கோ”

எப்படி புரியவைப்பது அம்மாவிற்கு? நியாயமாகப் பார்த்தால் எனக்கு டியூசனே தேவையில்லை. பத்தாவது வரை அதற்கு அவசியமே வரவில்லை. அதுவும் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு சரியாக வராமல் போகும் மாநகராட்சி பள்ளியில்.

இங்கே வகுப்பிற்கு சரியான நேரத்தில் வரும் ஆசிரியர்கள். மாலை பள்ளி முடிந்ததும் கோச்சிங் க்ளாஸ். தினமும் வீட்டு பாடங்கள் செய்ய கொடுக்கும் ஆசிரியர்கள். வாரத்தில் ஒரு நாள் டெஸ்ட் என எல்லாம் புதியதாக இருந்தது.

ஏற்கனவே இப்புதியதில் திக்குமுக்காடி போயிருக்கும் நான் நேற்று வகுப்பாசிரியர் பிச்சை ஜான்சன் உள்ளங்கையை திருப்பி முட்டியில் பத்து பத்து அடிகள் இருகைகளிலும் அடித்த போது பள்ளியை விட்டு நின்றுவிடலாமா என்று தோன்றியது.

”உனக்கெப்படிடா இதுக்கு பதில் தெரியும்? புக்குல பதில் எங்க இருக்கு?” அடிவாங்காமல் தப்பிய இக்பால் ஹூசனைக் கேட்டேன்.

“அட போடா. 500 பக்க புக்குல எங்க போய் ஆன்சர் தேடுவ? நேத்து டியூசன்ல சார் இந்த கேள்வி பதில் எழுதி போட்டாரு. எல்லாரும் நோட் பண்ணிகிட்டோம்.” என்று கூறி திடீரென்று சோகமானான்.

தொடந்து “ஸாரிடா சூரி. ட்யூசன் படிக்காத பசங்களுக்கு நோட்ஸ் எதுவும் சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்காருடா. சொன்னா ப்ராக்டிக்கல்ல மார்க் கம்மி பண்ணிடுவாராம்” என்று அடிவாங்கிய என் கையை பார்த்து “பொறம்போக்கு தே....... இப்படி அடிச்சிருக்கான்” என்றான் கவலையோடு.

”பிச்சை ஜான்சன்னு அவுங்க அம்மா சரியா தாண்டா பேரு வச்சிருக்காங்க” பின்னாலிருந்த குமார் விரக்தியில் சிரித்தான்.

சைக்கிள் எடுக்கும் போது இராஜேந்திரனும், குமாரும் வந்தனர். “மச்சி நீ டியூசன் சேரப் போறயா?” என்றான் இராஜேந்திரன்.

உதட்டை பிதுக்கினேன். குமாரை பார்த்தேன். “என் நிலைமை தான் உனக்கு தெரியுமே. நான் எப்படி சேருவேன்” என்றான் சிரித்துக்கொண்டே.

மூவரும் சைக்களை உருட்டினோம்.

று நாள் மாலை பிச்சை சார் தனியே அழைத்தார்.

“நீ எப்ப ட்யூசன் சேரப்போற?”

“சார் பீஸ் ரொம்ப அதிகமா இருக்கு சார்”

“உனக்கு என்ன கேடு? நாளைக்கு உங்கப்பாவை கூட்டிகிட்டு எங்க வீட்ல வந்து பாரு. உங்கப்பா என்ன வேலை பாக்குறாரு?”

சொன்னேன்.

”இப்படியே எல்லா டெஸ்ட்லயும் பெயிலானா இந்த வருசமும் பதினொன்னாம் வகுப்புலேயே நிக்கனும். சரியா? ஒழுங்கா டியூசன் சேரு. போ” என்றார்.

மாலை சைக்களில் நானும், குமார் மட்டும் சென்றோம். இராஜேந்திரனின் தந்தை நேற்று பிச்சை ஜான்சனை பார்த்திருக்கிறார்.

குமாரை தனியாக போகச் சொல்லி முகுந்தன் சார் வீட்டுக்கு சைக்கிளை திருப்பினேன். பத்தாம் வகுப்பு விடுமுறையில் அவரது ஆபிஸில் ஆபிஸ் பாயாக வேலைப் பார்த்தேன். ஸ்கூல் பீஸ் கட்ட உதவியாய் இருந்தவர்.

ரண்டு நாள் கழித்து பிச்சை ஜான்சனின் வீட்டில் அவர் அடுத்து வைக்கப்போகும் டெஸ்ட்க்கு கொடுத்துக் கொண்டிருந்த நோட்ஸ்யை எழுதி கொண்டிருந்தேன்.

உள்ளிருந்து ஒரு பெண் குரல் கேட்டது. அருகிலிருந்த இக்பால் அது அவர் மனைவி என்று மெதுவாக கூறினான்.

“சனியனே...டேய் பொறம்போக்கு உன்னைய கல்யாணம் கட்டிகிட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்டா. உனக்கு எல்லாம் எதுக்குடா பொண்டாட்டி. தே....னே....”

பிச்சை உள்ளே சென்றார். “ஏய் எதுக்குடி கத்துற? உங்கம்மா மாதிரி பைத்தியம் பிடிச்சு அலைய போற பாரு. வாய மூடுடி”

“போடா நாயா. உனக்கென்னடா மரியாதை. !@*$& எதுக்குடா அவன்களை வீட்டுக்கு கூட்டிட்டு வந்த. போ சொல்லுடா அவன்கள” என்று கத்த ஆரம்பித்தார்.

மாணவர்களிடையே சிரிப்பு சத்தம் கேட்டது. பிச்சை டென்சனாகி கத்த ஆரம்பித்தார்.

ன்று வீட்டுற்கு ஒரு வித சந்தோசத்துடன் சைக்கிளில் போய் கொண்டிருந்தேன். காரணம் என்னவென்று தெரியாத சந்தோஷம் அது.

அன்றும் கையில் வாங்கிய அடிகளின் வீங்கங்களோடு குமார் சைக்கிளில் தனியாக ஒரு வித சோகத்தோடு வீட்டிற்கு போய் கொண்டிருந்தான்.

அன்று மட்டும் இல்லை. அந்த வருடம் முழுதும்.

பல வருடங்களுக்கு பிறகு அந்த பள்ளியின் படிக்கும் ஒரு மாணவனை கண்ட போது, பிச்சை ஜான்சன் இன்னும் அதே பள்ளிகூடத்தில் இருப்பதாகவும், கட்டாய ட்யூசன் இன்னும் இருப்பதாகவும் கூறினான்.

ஆசிரியர் தின வாழ்த்துகள்!

எண்டே ஓமனக்குட்டி..........

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தக்திமியாடும் தங்கனிலாவே ஹோய்
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே
தங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே.....

ஆத்தாடி இதுக்கே மூச்சு வாங்குது....

கேரளாவுல இப்ப இருக்குற நிலைமையில ஓணம்னா நினைவுக்கு வருவது ஒன்னுதான். என்னதான் கடவுளின் பூமி, தலைக்கு 5000ஆயிரத்துக்கு மேலே பேங்க்ல பணம் இருக்குறது, கல்வியில் முதலிடம்னு இருந்தாலும் எல்லாத்துக்கும் மேலே ஒரு விசயத்துல மூனு வருசமா முதலிடத்தில இருக்குது கேரளா. வேறன்ன சரக்கு தான்.

இந்த வருஷம் மட்டும் 200 கோடிக்கு சரக்கு விற்பனை செய்ய கேரள அரசு முடிவு பண்ணியிருக்குறதா கொஞ்ச நாளுக்கு முன்ன செய்தி வெளியாச்சு. அது முக்கியமா ஓணம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை மட்டும் கணக்குல வச்சுகிட்டு இந்த திட்டம் செயல்படுத்தபடுவதா நம்ம சேட்டன்மார்கள் தெரிவித்தார்கள்.

கேரளாவில ஒன்னாம் தேதி ஒயின்ஷாப் எல்லாம் லீவு. அதுனால 31ஆம் தேதியே கடைக்கு படையெடுத்த சேட்டன் மார்கள் அரசின் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து 34 கோடிக்கு மது விற்பனை புரிய உதவி பண்ணியிருக்காங்க. ஒரே நாள்ல மட்டும் இந்த விற்பனை.


இதெல்லாம் டூப்பு


சரக்கு தான் டாப்பு

அப்படியிருந்தும் நிறைய இடங்கள்ல சரக்கு கிடைக்காம நீளமான வரிசையில் நின்னு வெற்றிகரமா வாங்கியது இன்று மலையாள செய்திகளில் பார்க்கமுடியுது.

என்ன கலைஞரே இதை இந்த தீபாவளிக்கு முறியடிக்க வேணாமா? ஏதாவது சலுகை கொடுத்து இரண்டாவது இடத்துல இருக்குற தமிழகத்தை முதல் இடத்துக்கு முன்னேத்துங்க. கமான் க்விக்

ஓக்கே மேட்டருக்கு வருவோம். நமக்கு என்னதான் தண்ணிமேட்டர், இலங்கை தமிழர் மேட்டர், ஆபிஸ்ல பிரச்சனை இன்னும் சிலபல இத்யாதிகள் பிரச்சனையா இருந்தாலும் அங்கே இருக்கும் அதாவது வருங்கால தமிழ் சினிமாவை அலங்கரிக்க போகும் நம் இதய ராணிகளுக்காவும், கொஞ்சநஞ்ச நல்ல சேட்டனகளுக்காவும் என் ஓணம் வாழ்த்தை தெரிவிச்சுக்கிறேன்.
ரைட்டு..... மீ த பாட்டு கண்டினியூவு....

ஹேய்க் குருவாரிக் கிளியே குருவாரிக்கிளியே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே

தங்க கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்
தங்க கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே
Related Posts with Thumbnails