யானை கதை - பஞ்சாமிர்தம்

நம்ம கம்பெனி தியேட்டரைப் பத்தி சொல்லியிருந்தேன்ல....இரண்டு வாரத்துக்கு முன்னாடி டிவெண்டி-20ன்னு ஒரு மலையாள படம் போட்டாங்க. மம்மூட்டிய காண்பிக்கும் போது ஒரு ஆளு திடீர்னு “மம்மூட்டிக்கு ஜே! மம்மூட்டிக்கு ஜே!”னு கத்த ஆரம்பிச்சுட்டான்.

எல்லோரும் சிரிச்சிட்டே விட்டுட்டாங்க. படத்துல மோகன்லால் மம்மூட்டி வீட்டு பாதுகாப்புல இருந்து வெளிய வர்ர சீன் ஒன்னு இருக்காம். அப்படி ஸ்டைலா வெளிய வரும் போது எவனோ ஒருத்தன் “மோகன்லாலுக்கு ஜே! மோகன்லாலுக்கு ஜே!”னு கத்த ஆரம்பிச்சுட்டான்.

அதுக்கப்புறம் எல்லோரும் காண்டாகிட்டாங்க. அந்த படத்துல மலையாள நடிகர் நடிகர்கள் எல்லோரும் நடிச்சிருந்தாங்க. இனி ஒவ்வொருத்தனுக்கும் கத்த போறான்களோன்னு எல்லோரும் டென்சன் ஆகிட்டானுங்க. நல்ல வேளை கத்தல. ஆனா...

போன வாரம் வில்லு போட்டிருக்காங்க. உடல் நிலையை மனதில் கொண்டு நான் போகல. விஜயை காண்பிக்கும் போது ரெண்டு மலையாள பக்கிங்க விசிலடிச்சு ஒரே கத்தலாம். கத்துனதும் இல்லாம, படம் முடிஞ்ச அப்புறமா நான் படம் எப்படின்னு கேட்டேன். சூப்பரா இருந்ததுன்னு சொல்றானுங்க.

அடப்பாவி மக்கா ஸ்டேட் விட்டு ஸ்டேட் ஆளுங்கள கெடுத்து வச்சிருக்கு இந்த விஜய் பயபுள்ள.
----------------------------------------------------------------------------------------------
நண்பர் ஒருத்தர் எங்கேயோ படிச்சதா சொன்ன கதை...

நல்ல மரங்கள் அடர்ந்திருக்கிற ஒரு அமைதியான இரயில் நிலையம். ஒருத்தர் ரயிலை பிடிக்கிறதுக்காக வேகமா ஓடி வந்தும் ரயிலை மிஸ் பண்ணிடுறார். மூச்சிரைக்க அந்த இரயில்வே நிலையத்தின் ப்ளாட்பாரத்துல இருக்குற பெஞ்சுல உட்கார்ந்திருக்கார்.

பையில இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறார். அந்த புத்தகத்திலேயே மூழ்கி போயிருக்கும் போது ஒரு விசும்பல் சத்தம் கேட்குது.யார்ரா அதுன்னு திரும்பி பார்க்கிறார். அவருக்கு பக்கத்துல ஒரு யானை உட்கார்ந்திருக்குது. விசும்பல் சத்தம் அந்த யானைகிட்டிருந்து தான் வருது. அதோட கண்களை பார்க்கிறார். அதில் ஒரு சோகம் இருப்பதை உணர்கிறார். கர்சிப் கொடுத்து கண்ணை துடைக்க சொல்லுறார். அதுவும் துடைக்குது. ஆனா திரும்பவும் அழுகுது.

சரி பசியில அழுகுது போலன்னு நினைச்சுட்டு கேண்டீன்ல போய் ஒரு பாக்கெட் பாப்கார்ன் வாங்கிட்டு வரார். அதை அது கையில கொடுக்குறார். அது வாங்கிட்டு அந்த பாப்கார்னை பார்க்குது அவரை பார்க்குது..... அந்த பாப்கார்னை பார்க்குது அவரை பார்க்குது..... அந்த பாப்கார்னை பார்க்குது அவரை பார்க்குது.....

படம் அதோட முடியுது....

title of story: யானை பசிக்கு சோளப்பொறி

இந்த நக்கல் பிடிச்ச கதைய நம்ம மக்கள்ஸ் யாராவது தான் எழுதியிருப்பாங்க. லின்ங் இருந்தா கொடுங்க மக்கா.
------------------------------------------------------------------------------------------------
சாண்டில்யன் “யவண ராணி” படிக்க ஆரம்பிச்சிருக்கேன். இராண்டாம் நூற்றாண்டின் சோழப் பேரரசரான இளஞ்சேட் சென்னியா காலத்தில் இருந்து கதை தொடங்குகிறது.

முதல் பாகத்தின் பாதி வரை தான் படித்துள்ளேன். கல்கியின் நாவல்களை படிக்கும் போது அதில் நடப்பவையெல்லாம் உண்மையாக நடந்ததாக மனம் நினைத்து கொள்ளும்(இன்றும் மீள்வாசிப்பின் போது நினைத்துக் கொண்டிருக்கிறேன்).

ஆனால் இக்கதை ஆரம்பத்தில் படிக்கும் போதே பல சந்தேகங்கள். புகாரின் சோழர் படையில் யவணர்கள் உண்மையில் இருந்தார்களா?. அது அவர்களின் கைவசம் போனதா?.

வாணிபத்தில் இவ்வளவு செழிப்பாக தமிழக கடற்கரை துறைமுகம் இருந்த்தா? யவண ராணி உண்மையில் இங்கே வந்தாளா? என பல சந்தேகங்கள். உடனே நம் வரலாற்று சந்தேகங்களை தீர்த்து வைக்கும் “இளைய பல்லவனை” கேட்டு தெளிவாக்கினேன்.

இதையெல்லாம் மீறி கதையின் சுவாரஸியம் நம்மை இழுத்துச் செல்கிறது. கதையை முடித்ததும் முழு விமர்சனமும் பார்ப்போம்.

அதற்கு முன் கோபி கிருஷ்ணனின் “டேபிள் டென்னிஸ்” படிக்க ஆரம்பித்தேன். ஒன்றுமே புரியாமல் அப்படியே மூடி வைத்து விட்டேன். உள்ளுக்குள் “நீ இன்னும் நிறைய வளரனும் தம்பி” என்று கேட்டுகொண்டே இருந்தது. அவ்வ்வ்
-----------------------------------------------------------------------------------------------
வெப்பன்ஸ் சப்ளையர் கார்த்திகேயன் புண்ணியத்தில் "before sunrise(1994)" பார்த்தேன். இரண்டே கதாபாத்திரங்களை வைத்து இவ்வளவு சுவாரஸியமாக அதுவும் கதையே இல்லாமல் படம் எடுத்திருக்கிறார்கள். படம் முழுவதும் கதாநாயகனும் கதாநாயகனும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த இருவரோடு மூவராக நாமும் பயணிக்கிறோம் மௌனத்துடனும், ஆங்காங்கே சிரிப்புகளுடனும்.

அதுவும் முடிவு நம்மளை அறியாமல் ”ஆகா அற்புதம்” என முணங்க வைக்கிறது. இருவரும் மறுபடியும் சந்தித்தார்களா? இல்லையா? என கூறாமல் விட்டுருப்பது நல்ல முடிவு. இதிலிருக்கும் ஒரு காட்சியை வழக்கம் போல நமது கோலிவுட் இயக்குனர் அப்பட்டமாக சுட்டிருக்கிறார். வாலி படத்தில் வரும் அஜித்&ஜோதிகா பேசும் “டிரிங் டிரிங்” காட்சி தான்.

இதனுடைய இரண்டாவது பார்ட் “before sunset(2004)". அதே இரண்டு கதாபாத்திரங்கள். முதல் படத்தின் முடிவோடு ஒத்து போனதால் இந்த படத்தைப் பார்க்கலாமா வேண்டாமா என நீண்ட நேரம் ஆலோசித்தேன். முடிவில் அப்படத்தை கண்ட போது “ஆகா அருமை”. முதல் பார்ட் மனதை கொள்ளை கொண்டது என்றால் இந்த பார்ட் மனதை கனக்க வைத்தது.

ஆனால் இந்த முடிவும் அருமையாக இருப்பதால் இனி மூன்றாவது பார்ட் வந்தால் பார்க்க கூடாது என்ற முடிவில் இருக்கிறேன் :)
------------------------------------------------------------------------------------------------
ஒரு வழியா எழுத வந்து ஒரு வருசம் ஆச்சு. ஃபாலோவர் 100 பேரும் சேர்ந்தாச்சு. பல பேர் 300 தாண்டிட்டாங்க. ஆனாலும் பரவாயில்லை. உருப்படியா எதுவும் இல்லாம மொக்கையாவே எழுதி 100 பேர் சேர்ந்திருக்காங்கன்னா ஆச்சர்யம் தான். இளைய பல்லவன் ஓராண்டு ஆனதுக்கு ஏதாவது அனிமேசன் செய்யலாம் என்றார். நானும் அவரும் ஒன்னா தான் எழுத வந்தோம்.

ஆனால் நேரம் சரியா ஒத்துழைக்காததால் செய்ய முடியல. அவருக்கு என்னோட என்னோட வாழ்த்துகள். ஃபாலோவரா சேர்ந்திருக்கும் 100 பேருக்கும், ரீடரில் படிக்கும் மற்றும் நேரடியாக படிக்கும் எல்லா வாசககண்மணிகளுக்கும் நன்றி நன்றி நன்றி :)

And, Now....


எலி கடிக்காத தொப்பி ஒன்று என்னிடம் இருந்தது. குளித்துமுடித்து வந்ததும் அதை அணிந்து கொண்டு தெருமுக்கில் நின்று சைட் அடித்து கொண்டிருப்பேன்.

வெகு சுவாரஸியமாக இருந்தது, வாழ்க்கை!

எப்படியோ தொலைந்து போனது அந்த தொப்பி ஒரு நாளில், அதனுடன் என் தலை முடியும்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கொக்...கொக்...கொக்....கொக்...கொக்கரக்கோ

’ஆப்பம் இருக்காப்பா?’

’இல்லைங்க சார்’?

‘பரோட்டா?’

’இல்ல சார்’?

’சரி அப்ப சேவலை உயிரோட கொண்டு வா... கழுத்த அறுத்து நாங்க சாப்பிட்டுக்கிறோம்”

“சார் இது சரவணபவன். சைவம்”

’ஒன்னுமே இல்லாம அப்புறம் என்னங்கய்யா சைவம்?’

’மச்சி ஏன் இருக்குற கோவத்தை இவர்கிட்ட காட்டுற. மூணு ப்ளேட் சப்பாத்தி, டேய் உனக்கென்ன வேணும் ப்ரைடு ரைஸா, ஓக்கே அது ஒன்னு, ஒரு கிச்சடி, மூணு தோசை” ஆர்டர் செய்தான் நண்பன்.

பக்கத்தில் ஒரு ஆறு வயது குழந்தை அழுதுகொண்டே இருந்தது. பார்க்க பாவமாக இருந்தது. சோகத்துடன் அந்த குழந்தையுடன் அம்மாவும், அப்பாவும்.

இவர்களும் அங்கிருந்து தான் வந்திருக்கிறார்கள் என்பது அவர்கள் முகத்தை பார்க்கும் போதே தெரிந்தது.

’ஏன் நமக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது?’ என்றேன்.

‘ச்சே அப்படியெல்லாம் இல்லைடா. நிறைய பேரு இதுனால பாதிக்கபடுறாங்க. இன்னைக்கே பார்த்தல்ல எத்தனை பேருன்னு. இதோ இங்க பக்கத்தில உட்கார்ந்திருக்கிற குடும்பம் இருக்கே அவங்களும் பாதிக்கபட்டிருக்காங்க. அந்த குழந்தைய பார்த்தயா? அது என்ன பாவம் பண்ணுச்சு? நம்மளாவது இத தாங்கிற சக்தி இருக்கு. இது போல நிறைய அடிகளை வாங்கி நம்ம மனசு மறத்து போச்சுடா. அந்த குழந்தையை நினைச்சு பாருடா. ”

“ம்...” என்றவாறு அந்த குழந்தையைப் பார்த்தேன். பாவமாக தான் இருந்தது. தலையை ஒரு பக்கம் சாய்த்தே வைத்திருந்தது. கழுத்து வேறு சுளுக்கி விட்டது போல. பதட்டத்தில் இங்கும் அங்கும் தலையை திருப்பியதில் அவ்வாறு நேர்ந்திருக்கும்.

சப்பாத்தி தான் முதலில் வந்தது. யாரும் சாப்பிட ஆரம்பிக்கவில்லை. பத்து நிமிடம் கழித்து அனைத்தும் வந்தது. நாங்கள் இன்னும் சாப்பிடாமல் இருப்பதை கண்டு சர்வர் முழித்தவன் பின்பு அறிந்தவன் உதட்டோரம் ஒரு கேலி புன்னகையை விரித்து சென்றான். எனக்கு எரிச்சலாக இருந்தது. ஏதோ உங்களை போல் எத்தனை பேரை பார்த்திருப்போம் என்ற நோக்கில் இருந்தது அந்த புன்னகை.

வேண்டாவெறுப்பாக எட்டு பேரும் சாப்பிட ஆரம்பித்தோம். சற்று முன் ஏற்பட்ட விபரீத சம்பவத்தில் ஏதாவது ஞாபகம் வருகிறதா என்று யோசித்தேன். ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. கண் தான் வலித்தது. ஏன் நிலையாக அட்லீஸ் சேர்த்தார்போல் ஒரு பத்து வினாடி கூட நிற்கவில்லை என்று தெரியவில்லை.

ஹோட்டல் மாடியின் ஜன்னல் வழியாக பார்த்த போது மக்கள் திரும்பவும் வெளியே கும்பலாக நிற்பதை கண்டபொழுது ஒரு வித பரிதாபம் தான் ஏற்பட்டது. இத்தனைக்கும் அனைவரும் படித்தவர்கள் போலிருந்தது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். தெரிந்தே செய்வதில்லை என்று எனக்கு ஏற்பட்ட பொழுது தான் உணர முடிந்தது.

அந்த அம்மா குழந்தைக்கு ஏதோ ஊட்ட முயற்சித்தும் அது சாப்பிடமால அடம்பிடிக்க அவர் பொறுமையிழந்தவராக முதுகில் ரெண்டு அடி அடிக்க ஆரம்பித்தார். குழந்தையின் அலறல் அனைவரையும் அவர்கள் பக்கம் ஈர்த்தது.

“ஏன் மேடம் அடிக்கிறீங்க?” என்றான் என் நண்பன்

‘பின்ன என்னப்பா ஏற்கனவே எவ்ளோ கடுப்புல இருக்கோம்னு உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். இப்ப இவளும் இங்க சாப்பிடாம அடம் பிடிக்கிறா. நான் என்ன செய்யிறது? காலையில இருந்து ஒன்னுமே சாப்பிடல. இங்க வரப்போற சந்தோஷத்துல எதுவுமே சாப்பிடமாட்டேன்னு சொல்லிட்டா. இப்பவும் சாப்பிடலைன்னா உடம்பு என்னத்து ஆகும்?” என்று உள்ளக்குமுறலை விடாமல் கொட்டினார். அவர் கண்ணில் நீர்கோர்த்திருந்தது. அவர் கணவர் வார்த்தைகள் அற்ற ஆறுதல் கூறும் தொனியில் அவர் கையை பற்றி இறுக்கினார்.

எங்கள் அனைவரையும் அங்கே பார்த்திருப்பார் போல. நண்பனும் சற்று ஆறுதலான வார்த்தைகளை கூறி அவனுடைய HTC மொபைலை அந்த குழந்தைக்கு காட்டி விளையாட்டு காண்பித்து சாப்பிட வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சாதரணமாக நாங்கள் அந்த மொபைலை தொடும் போதே கோவப்படுபவன் ஒரு குழந்தையிடம் விளையாடக்கொடுத்தது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. ஒரு கஷ்டமான சூழ்நிலை மனிதனை எந்த அளவுக்கு பக்குவப்படவைக்கிறது. உலகம் விந்தையானது தான்.

யாரை குத்தம் சொல்வது என்று தெரியவில்லை. என் மேலும் தவறு இருக்கிறது. கடந்த இரண்டு வாரமாக நண்பனுக்கு எத்தனை தடவை போன் செய்திருப்பேன் இதற்காக?. அவன் பொறுமையை எந்த அளவிற்கு சோதித்திருப்பேன். ச்சே ஒரு இரண்டு நாள் பொறுத்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம்.

அழுது கொண்டே இருந்த குழந்தை சிரிக்கும் சப்தம் கேட்டு திரும்பினேன். நண்பன் தன் உருண்டையான தலையை 90,180,270,360 என நான்கு டிகிரிக்கும் திருப்பி “கொக்...கொக்...கொக்....கொக்...கொக்கரக்கோ...கொக்..கொக்...கொக்...கொக்கரக்கோ.....கந்த கந்த...கந்த..கந்த...கந்தசாமி..” என கத்திக்கொண்டிருந்தான். அனைவரும் கவலையை மறந்து சிரிக்க தொடங்கினோம்.

அந்த படத்தை பார்த்தது அட்லீஸ் கொழந்த சிரிக்கறதுக்காவது யூஸ் ஆச்சே...............

தியேட்டர் உள்ளே சிரித்த சில நொடிகள்.

1. பிரபுவை க்ளோஸப் ஷாட்டில் பிண்ணனி இசை இல்லாமல் சில நொடிகள் காட்டிலாலும் தியேட்டரின் எங்காவது ஒரு மூலையில் இருந்து வரும் “என்ன கொடுமை சரவணன் சார் இது?” டயலாக்.

2. ஆங்கில டயலாக்கான ”ஃபுல்ஷிட்” என்று பிரபு சொன்ன போது தியேட்டரே சிரித்தது.

3. “நீயி ஆம்பிள்ளையே இல்லைடா” என்று ஸ்ரேயா சொன்னதுக்கு “நீ பொம்பளையே இல்லடி” என்று விக்ரம் சொல்லுவார். தியேட்டரில் ஒருவன் “எங்களுக்கும் அதே டவுட்டு தான்” என்று கத்திய போது...வேறென்ன தியேட்டரே ....கொல்

4. சி.பி.ஐ ஹெட் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா ஒய்.ஜி மகேந்திரன் கொடுத்த கேசட்டை மாற்றும் போது “என்னது இவரும் விக்ரம் க்ளாஸ்மேட்டா?” என்று யாரோ டைமிங் ஜோக் அடித்த போது.

5. வடிவேலு குளிக்கும் காட்சியின் போது (இது மட்டும் தாங்க படத்துல வர்ர சீனைப் பார்த்து சிரிச்சது....பாக்கியெல்லாம்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

”குவிக் கன் முருகன்”-பஞ்சாமிர்தம்

தமிழன் இல்லாத இடமே கிடையாது. தமிழனோட காலடி படாத இடமே கிடையாதுன்னு ஒரு யார்கிட்ட வேணா சொல்லலாம். இந்த சேட்டன்மார்கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க.

இரண்டு வாரத்துக்கு முன்னால ஒரு வீக் எண்ட் ஏண்டா இந்த பேச்சை தொடங்கினோம்னு ஆகிடுச்சு. சுத்து போட்டு கும்ம ஆரம்பிச்சுட்டாங்க. எங்க ஆளுங்க அங்கே இருக்காங்க..இங்கே இருக்காங்கன்னு இத்தனை சதவிகதம் இருக்காங்கன்னு ஒரு லிஸ்டே வர ஆரம்பிச்சுது.

இதுல நிலாவுல ஆம்ஸ்ட்ராங் போனப்ப நாயர் கடையில டீ குடிச்சாருன்னு மொக்க சோக்குலெல்லாம் நிறைய விழுந்ததை தட்டி விட்டுகிட்டே நானும் விடாம பேச......கடைசியில அவங்க கேட்ட ஒரு கேள்வி எனக்கு பதிலே பேச முடியாம என்னோட தோல்வியை ஒத்துக்க வேண்டியதா போச்சு.

பாகிஸ்தான்ல தமிழர்கள் இருக்காங்களா?ன்னு கேட்டாங்க. தெரியலைன்னு சொன்னேன். பாவிமக்கா அங்க ஆயிரத்துக்கும் மேல மலையாளிகள் இருக்காங்களாம்.

நம்பாம கூகுள்ல அடிச்சப்ப ஒன்னுரெண்டு வருது. சரி நமக்கு தெரியாம தமிழர்கள் கூட அங்க இருக்க வாய்ப்பிருக்குன்னு கூகுளாண்டவர்கிட்ட வேண்டிகிட்டு கேட்டா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். இல்லைன்னு தான் சொல்றாரு கூகுளாண்டவர்.

பாகிஸ்தான் பிரிஞ்சு போனப்ப கேரளாவில் இருந்து நிறைய முஸ்லீம்கள் அங்க போனதா சேட்டன்மார்கள் சொல்றாங்க. எந்த அளவுக்கு உண்மைனு தெரியல. தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்கப்பா.
-------------------------------------------------------------------------------------------------
ஒரு பறவை வியாபாரிகிட்ட பறவை வாங்க ஒருத்தர் ஒரு கூண்டுல இரண்டு கிளியும்,ஒரு காக்காவும் இருப்பதை பார்த்துட்டு இந்த கிளி எம்புட்டு கேட்க “அஞ்சாயிரம்” சொன்னவுடனே ஷாக்கான அவர் அப்படி என்னையா இந்த கிளிகிட்ட ஸ்பெஷல்?னு கேட்டாரு. இந்த கிளி MS office எல்லாம் தெரியும் நல்லா வேலை செய்யும்னு கடைகாரர் சொன்னாரு.

இரண்டாவது கிளி என்ன விலைன்னு அவர் கடைக்காரரிடம் கேட்க “பத்தாயிரம்”னு பதில் வந்தது. ஆச்சர்யமான அவர் அப்படி என்ன இந்த கிளிகிட்ட ஸ்பெஷல்னு கேட்டார். இந்த கிளிக்கு MS office மட்டும் இல்ல நல்லா படம் வரையும், ஆட்டோகேட் மட்டுமில்லாம நிறைய சாப்ட்வேர் தெரியும். சூப்பரா சொன்ன வேலைய செய்யும் அப்படின்னாரு.

இந்த காக்கா என்ன விலைன்னு கேட்டாரு. “இருபத்தஞ்சாயிரம்”னு பதில் வந்தது. பயங்கரமா ஷாக்கான அவர் “இந்த காக்காவுக்கு ஏன்யா இம்புட்டு ரேட்டு. அப்படி என்ன தெரியும் இந்த காக்காவுக்கு” கேட்டாரு வாங்க வந்தவரு. அதற்கு வியாபாரி “எனக்கும் அதான் தெரியல. இது ஒரு வேலையும் செஞ்சு பார்த்ததில்லை. ஆனா மத்த ரெண்டு கிளியும் இந்த காக்காவை “பாஸ்” “டேமேஜர்”ன்னு தான் கூப்பிடுதுங்க”னாரு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இப்படிக்கு

ரெண்டாவது அழகான கிளி
நான் ஆதவன்
-------------------------------------------------------------------------------------------------
ரம்பா ஒரு ஆங்கில படத்துல நடித்திருக்கிறதா போன வாரம் தினமலர் சைட்ல பார்த்தேன். ஸ்லம்டாக் மில்லினரி படத்தோட டிஸ்ட்ரிபியூட் தான் இந்த படத்தையும் டிஸ்ட்ரிபியூட் பண்றாங்க. தெலுங்கு நடிகர் ராஜேந்திரபிரசாத் தான் ஹீரோ. படத்தோட பேரு “க்விக் கன் முருகன்”. நாசர், ராஜிசுந்தரம் இன்னும் நிறைய தமிழ் நடிகர்கள் கூட நடிச்சிருக்காங்க.

தென்னிந்திய படங்களை பயங்கரமா கிண்டல் பண்ணியிருக்காங்க. ஹீரோ கௌபாய் கெட்டப் தான். படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,ஆங்கிலம்ன்னு எல்லா மொழியிலையும் வருது. ஷாருக்கானோட ’ஓம் சாந்தி ஓம்’ படம் பார்த்தவங்க அதுல அவர் தமிழ் படத்துல நடிக்கிறேன்னு “மைண்ட் இட்”னு டயலாக் சொல்லிட்டு ஒரு கெட்டப்ல வருவாருல்ல...அதே தான்.

இந்த டிரைலரை பார்த்துட்டே பயங்கரமா சிரிப்பு வருது. படத்துக்காக வெயிட்டிங். படம் பார்த்துட்டு எல்லோரும் சிரிச்சாலும் தென்னிந்திய படங்களை கிண்டல் செய்திருக்கறதுனால பிரச்சனையும் சந்திக்கலாம்.

பப்பு தன்னோட பதிவுல இந்த படத்தோட டிரைலரை போட்டிருந்தார். தமிழ் வெர்ஷன் கிடைக்குமான்னு தேடி பார்த்தேன். கிடைக்கல. நீங்க தேடி பாருங்க கிடைச்சா லின்ங் கொடுங்க. இப்போதைக்கு ஹிந்தி பட டிரைலர் மட்டும். இதுல கடைசியில வர தமிழ் டயலாக்க மிஸ் பண்ணாங்க. என்சாய்ய்ய்ய்ய்-------------------------------------------------------------------------------------------------
ஆதவனோட “என் பெயர் ராமசேஷன்” புத்தகம் படிச்சேன். மேல் தட்டு மக்கள் காட்டும் பாசாங்கும்,மிடில் க்ளாஸ் குடும்பத்தினரின் முகமூடிகளும், பாசாங்களும் அப்படியே சொல்லியிருக்கார் ஆதவன்.

கதாநாயகன் ராமசேஷனை சுற்றி இருக்கும் அனைவரும், இதில் அவன் அம்மா, தங்கை,அத்தை என எல்லா உறவு முறைகளும், நண்பர்களும் ஒரு வித முகமூடிகளுடனும், தங்களை இச்சமுதாயத்தில் நிலை நிறுத்திக்கொள்ளும் நோக்குடன் பழகும் முறையுமே கதை. ஆனால் இக்கதையை படிக்கும் இது அவனை சுற்றிமட்டுமல்ல நம்மை சுற்றியும் நடந்திருக்கிறது, நடந்து கொண்டிருப்பதை உணர முடிகிறது. கதையோடு சேர்ந்த இளமையின் துள்ளல்கள் படிக்கும் ஆர்வத்தை மேலும் கூட்டுகின்றது :)

கதை முழுதும் ஊறிப்போன சம்பிரதாயங்களையும், போலி மனிதர்களையும் சாடி விட்டு முடிவில் அம்முகமூடியை கதையின் நாயகனுக்கு அணிவிப்பது போல் முடிப்பது மெலிதான புன்னகையை வரவழைக்கிறது.

இக்கதை இப்போது எந்த வித சஞ்சலமும் ஏற்படுத்த வில்லையென்றாலும் கதை வந்த காலகட்டத்தில் நிச்சயம் படிப்பவர்கள் மனதில் ஒரு வித அதிர்வை ஏற்படுத்தி இருக்கும் என்பதை உணரமுடிகிறது. இப்புத்தகத்தை படிப்பவர்கள் இனி ஆதவனின் புத்தகங்களை தேடித் தேடி படிப்பது உறுதி.

”குளிக்க வாரீகளா”

எச்சரிக்கை: முக்கியமான வேலையில் இருக்கும் போதோ, டேமேஜர் மேல் கோவத்தில் இருக்கும் போதோ, ரிலாக்ஸ் செய்யும் போதோ, சந்தோசமாக இருக்கும் போதோ, துக்கத்தில் இருக்கும் போதோ, ரொமாண்டிக் மூடில் இருக்கும் போதோ, காலம் பொன் போன்றது எனக் கொள்கை கொண்டவரோ இப்பதிவைப் படிக்க வேண்டாம் என கம்பனியின் சார்பில் எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. மகா மொக்கையான, சொட்டையான, தட்டையான பதிவு இது.

”பின்ன எப்பத்தான்யா படிக்கிறது?” என்று டென்ஷன் ஆகுபவர்கள் கண்டிப்பாக படிக்கலாம்.

குளிக்கிறதுன்னாலே பல பேருக்கு குஷியாகிடும். பல பேருக்கு ஸ்டொமக் ப்ராளத்துல சிக்கி கிட்ட மாதிரி மூஞ்சி கோணலா போயிரும். குளியல்னா சாதாரணம் கிடையாது..... அது ஒரு ஸ்பெஷல் மசாலா.

பல வீடு இருக்குற குடியிருப்புல எல்லா வீட்டுக்கும் சேர்த்து ஒரு பாத்ரூம் தான் இருக்கும். என்ன தான் குளிப்பதற்கு வெறுப்பாக இருந்தாலும் நாலு வீட்டுக்கு கேட்கிற மாதிரி “அம்மா நான் குளிக்க போறேன்”னு சத்தம் போட்டுக்கொண்டே நாம் சுத்தமாக இருப்பதை விளம்பரம் செய்துவிட்டு உள்ளே ஒரு கப்பு தண்ணீரை தலைக்கு மேலே வைத்துக்கொண்டு ஒன்னரை மணி நேரமாக “ச்சே குளிச்சு தான் ஆகனுமா?” என்று யோசிப்பர் சிலர்.

பெரும்பாலும் சாயங்காலம் தனக்கு வருகிற போன் கால்களை எடுக்காமல் பின்பு போன் செய்து “இல்லடா குளிச்சுட்டு இருந்தேன். அதான் எடுக்கல” என்று வலுகட்டாயமாக காரணத்தை சொல்லி “என்னது நீ சாயங்காலமும் குளிப்பயா” என்று எதிர் முனையில் ஆச்சர்யத்துடன் கேட்கும் போது அவர்கள் முகத்தில் பெருமை பொங்கும். “ஆமாண்டா....இல்லைன்னா உடம்பு கச கசன்னு இருக்கும்” என்பார்கள்.

பலபேருக்கு குளிக்கும் போது பாடும் பழக்கம் இருந்து வருகிறது. இதொன்றும் தவறில்லை என்றும். மெசொப்பொத்தொமிய நாகரீகத்தில் இருந்து இப்பழக்கம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது. (இதை எளிதாக கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் வயசு பிள்ளைகள் இருக்கும் வீட்டில் அவர்கள் குளிக்க போனால் ஏன் பல மணி நேரம் ஆகிறது என்பது இன்னும் கண்டுபிடிக்க இயலாதது புரியாத புதிராகவே உள்ளது. பல நாட்டு அறிவியல் அறிஞர்களும் இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு இன்னமும் முடிவு தெரியாமல் திண்டாடுவதாக கேள்வி.)

ஆனால் பாடும் போது ஹாலில் உள்ள டிவியிம் சப்தம் அதிகரித்தாலோ அல்லது பொது குளியலறையில் குளிக்கும் போது “எடுபட்ட பய” “கட்டையில போறவன்” என்ற வார்த்தைகள் கேட்டாலோ கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. உடனடியாக உங்கள் குரல் வளத்தை செல்போனில் பதிவு செய்து கேட்கவும். அவ்வாறு கேட்கும் போது உங்கள் வாய் “எடுபட்ட பய” “கட்டையில போறவன்” என்ற வார்த்தையை உங்களை அறியாமல் உபயோகித்தால் பொதுநலம் கருதி பாடாமல் இருப்பது நல்லது.

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்துக்கும் ஏத்த மாதிரி குளியல்ல பலவகை உண்டு. 1.அழுகாச்சி குளியல், 2.அழுக்குதீர குளியல் 3.ஆனந்த குளியல், 4.காக்கா குளியல், 5.’தேமே’ குளியல், 6.அமாவாசை குளியல்.

1.அழுகாச்சி குளியல்: இந்த வகை குளியல பத்தி அதிகமா சொல்ல விரும்பல. ஒரே அழுகாச்சியா இருக்கும். பெரும்பாலும் ஒரு ஆறு இல்லைன்னா ஏழு வயசுக்குள்ள நடக்குற விசயமா இருக்கும். காலங்காத்தால எழுந்திருச்சவுடனேயே “சோறு எங்கே?” கேட்குற ஆளுகிட்ட “போய் பல்லு தேயி, குளி”ன்னு கண்டிசன் போட்டா எப்படி அவன் குளிப்பான். முதுகில ரெண்டு தட்டு தட்டி அரைஞான் கயிறை பிடிச்சு இழுத்துட்டு போய் கதற கதற குளிப்பாட்டுறது தான் இதோட ஸ்பெஷல்.

2.அழுக்கு தீரக்குளியல்: கோலி,காத்தாடி,பம்பரம்,கிரிக்கெட்,ஃபுட்பால்,ஐஸ் பாய், ஏழு கல்,திருடன் போலீஸ்,குழி பந்து இந்த மாதிரி ஆடிட்டு வந்தோம்னா முதுகுல “பளீர்”ன்னு ஒன்னு போட்டு நாரை எடுத்து நாம வெள்ளை ஆகுற வரைக்கும் தேய்ச்சு குளிப்பாட்டுவாங்க.

3.ஆனந்த குளியல்: ரொம்ப முக்கியமான இடத்துக்கு வந்திருக்கோம். இது முக்கியமா வீட்டுல ஷவர், அருவியில, மோட்டார் பம்பு செட்ல, கம்மாயில, ஆத்துல, கொளத்துலன்னு குளிக்கிறது. பெரும்பாலும் டீன் ஏஜ்ல நடக்குற குளியல். இந்த சைட் ரொம்ப டீசண்டானதுனால அஜால், குஜால் மேட்டரெல்லாம் கிடையாது. போனா போகுது ஒரே ஒரு படம்.4.காக்கா குளியல்: வெறும் வாயில வெங்காயத்த கடிச்ச மாதிரி மூஞ்சிய வச்சுகிட்டே குளிக்க உள்ள போய் உடனே திரும்பி வந்திடுவாங்க. வரும் போதே துண்டால தலைய துடைச்சுகிட்டே வருவாங்க. அதுக்குள்ள குளிச்சிட்டயான்னு யாராவது கேட்டாங்கன்னா “பின்ன வெளியவா குளிக்க முடியும்”னு மொக்கை சோக்கு சொல்லி சமாளிப்பார்கள். பெரும்பாலும் அவசரமாக ஆபிஸ் போறவங்களுக்கு தான் இந்த குளியல்.

5.’தேமே’ குளியல்: குளிப்பதை ஒரு கடமையாக செய்து வருவது ‘தேமே’ குளியல். ரிட்டயர்ட் ஆகியவர்கள் இவ்வகை குளியல் செய்வதை காணலாம்.

6.அமாவாசை குளியல்: இதுக்கு விளக்கம் வேணுமா என்ன? வயசானவர்கள் இவ்வகை குளியலில் ஈடுபடுவர்.

குளிப்பதனால் ஏற்படும் நன்மைகள்.

1. பாட்டு பயிற்சி பெற குளியலறை முக்கிய பங்கு வகிக்கிறது.

2. எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது “கறி” சோறு கிடைக்க வாய்ப்புள்ளது.

3. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை சும்மா “டைம் பாஸ் செய்யலாம்”

4. ஆபிசுக்கு லேட்டாக செல்லுபவர்கள் “ஏன் லேட்டு?” என்ற கேள்விக்கு “குளிச்சுட்டு வர லேட்டாகிடுச்சு” என்று பெருமையை பறைச்சாற்றலாம்.

5. ”ஆத்தா நான் குளிக்க போறேன்” என்று ஏரியா முழுவதும் கூட கர்வத்தோடு பறைசாற்றலாம்.

6. முதுகு தேய்த்து விட ஆள் கிடைக்க வாய்ப்புண்டு.

குளிப்பதனால் ஏற்படும் தீமைகள்:

1. தண்ணீர், சோப்பு, ஷாப்பு என அனைத்து பொருட்களுக்கும் பணம் தேவை படுகிறது.

2. நேரம் விரயமாகிறது.

3. குளித்த பிறகு தலையை துவட்டும் பணி ஒன்று சேர்ந்து விடுகிறது

4. குளியலறையில் வழுக்கி விழ வாய்ப்புள்ளது.


இன்னும் நிறைய விசயங்கள் உள்ளது. “குளியல்” பற்றிய ஆராய்ச்சி மாணவர்கள் என்னை தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.

புதியவர்களுக்கு வழிவிடுகிறேன் - “பஞ்சாமிர்தம்”

"உரையாடல்” போட்டிக்கான முடிவுகள் ஒரு வழியாக சனிக்கிழமை வருவதாக ”பைத்தியகாரன்” அறிவித்துள்ளார். எப்படியாவது இந்த ஒரு தடவை வெற்றி பெற்றோம்னா அடுத்த வருகிற போட்டியில கலந்துக்காம “நானெல்லாம் ஏற்கனவே பரிசு(கள்) வென்றிருக்கிறேன். புதிதாக எழுத வருபவர்களுக்கு வழி விடுகிறேன்”னு ஒரு ஸ்டேட்மெண்ட போட்டு எஸ்கேப் ஆகிடலாம்.

வெற்றிபெறலைனாலும் எனக்கு ஒன்னுமில்ல. என்ன....திரும்பவும் போட்டினு வந்தா கலந்துப்பேன். மாட்டிக்க போறது நீங்களும் நடுவர்களும் தான்.

நடுவர்கள் வெற்றி பெற்ற கதையை எதன் அடிப்படையில் எடுத்தார்கள் எனவும், அக்கதைகளின் சிறப்பம்சத்தையும் வெளியிட்டார்களானால் அடுத்த தடவை போட்டியில் கலந்து கொள்ளும் போது தவறுகளை திருத்திக்கொள்ளலாம்.

**************************************************************************************
சார்ஜாவில ஆண்கள் தங்க நகை போட கூடாதுன்னு ஒரு சட்டம் இருக்குது. அது நம்ம ஊரு “பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது” “ஹெல்மெட் இல்லாம வண்டி ஓட்டகூடாது” மாதிரி பேருக்கு தான் இருந்தது. நம்ம சேட்டன்களும், குஜராத்திகளும் சும்மா தக தகன்னு ஜொலிச்சுகிட்டுருந்தாங்க.

போன வாரம் தூசி தட்டி அந்த சட்டத்தை திரும்ப செயல்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. “மெகா மால்”க்கு போன இந்தியன்ஸ் இரண்டு பேரோட செயினை போலீஸ் காரன் கழட்டி வாங்கிட்டு போயிட்டான். இதே மாதிரி இரண்டு சின்ன பசங்க போட்டிருந்த செயின், ப்ரேஸ்லெட் (வெள்ளி) மாதிரி அயிட்டத்தையும் புடுங்கிட்டானுங்க.

இதெல்லாம் நம்ம ஊரு மாதிரி கொஞ்ச நாள் தான். அப்புறம் அடங்கிடும்.

கிறிஸ்துவ நண்பர்கள் சில பேர் பேர் கொஞ்சம் கவலையாகவும், கொஞ்சம் சந்தோஷமாவும் ஒரு விசயம் திரும்ப திரும்ப எல்லார்கிட்டேயும் கேட்டு தெளிவுபடுத்திட்டாங்க. அந்த கேள்வி ”கல்யாண மோதிரமும் போடக்கூடாதா?”

************************************************************************************** ”நான் கடவுள்” பார்த்தப்ப கிடைச்ச பிரம்மிப்பும், படர்ந்த சோகத்தையும் விட அதிகமா கிடைச்சுது (அ) பாதிச்சுது ஜெமோவின் “ஏழாம் உலகம்”. கதாபாத்திரங்களின் உருவங்கள் மிக அழுத்தமாக பதிந்தது. ஒருவேளை அந்த படத்தை முதல்ல பார்த்ததாலயே என்னவோ ஒவ்வொரு கதாபாத்திரமும், அவர்கள் உருவமும் உடனே பதிந்து விட்டது.

முதல் அத்தியாயம் படிச்சப்ப இது தமிழா?இல்ல மலையாளமா? ரெண்டும் இல்லாத புது மொழியான்னு ஒரே குழப்பம். கொஞ்சம் மலையாளமும் தெரியும்ங்கிறதால அடுத்து படிக்க படிக்க எளிமையாகிடுச்சு. இந்த கதையில முடிவுன்னு ஒன்னு இருக்கிற மாதிரி தெரியல. இப்ப முடிஞ்சிருக்குற விதத்த பார்க்கும் போது எந்த அத்தியாயத்திலேயும் கதையை முடிக்கலாம் போல. அதுவும் நல்லா தான் இருக்குது.

நிறைய இடத்தில் வாய்விட்டு சிரிக்க முடிகிறது. முக்கியமாக எருக்குவின் ”இஞ்சிருங்கோ”வும். குய்யன் வரும் இடங்களிலும். “பனி விழும் மலர் வனம். உன் பார்வை” பாடல் பண்டாரம் காதில் ரீங்காரமிடும் போது வலுக்கட்டாயமாக “முருகா முருகா” எனும் போது மெலிதான் புன்னகையை வரவழைக்கிறது.

ஏழாம் உலகம் - நாம் கண்டிராத புது உலகம்.

”என்னது காந்தி செத்துட்டாரா?”ன்ற ரேஞ்சுக்கு இப்ப தான் இந்த புத்தகத்தை படிக்கிறயான்னு கேட்டு வரும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்.

**************************************************************************************
கம்பெனியில முன்பு போல் வேலை இல்லை. ஓவர் டைம் கிடைக்காததால் சீக்கிரமே ரூமிற்கு வந்து போரடிக்கும் தொழிலாளர்களுக்காக ஏற்கனவே இருந்த ஒர் ஹாலில் ஒரு ஸ்கீரினும், ப்ரொஜெக்டரையும் வைத்து சிறிய திரையரங்காக ஆக்கி கொடுத்துள்ளது கம்பெனி.

முதல் இரண்டு தினங்கள் மலையாள படங்களாக ஓடி கொண்டிருந்தது. இப்போது வட இந்தியர்கள் ஹிந்தி படத்தை போடு என்றும் ஆங்கில படத்தை போடு என்றும் கொஞ்சம் பிரச்சனை ஆரம்பமாகியிருக்கிறது. தமிழ் படம் போடுன்னு இருக்கிற கொஞ்ச தமிழர்கள் கத்த தேவையே இல்லை. இருக்கிற மலையாளிகள் மலையாள படத்தை விட தமிழ் ப்டத்தை போடுவதையே விரும்புகிறார்கள்.

ம்ம்ம் இக்கரைக்கு அக்கரை பச்சை.....
**************************************************************************************
இந்த வாரம் கார்டூன் இல்லை அனிமேசன் தான்.


Photobucket

சிறுகதை போட்டி முடிவுகள் வந்த பிறகு பதிவர்களின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்னு வரையலாம் யோசிச்சேன். அப்ப இந்த “ஜூஜூ” விளம்பரம் ரொம்ப பொருத்தமா இருந்தது. கொஞ்சம் மாத்திஅதையே கொடுத்திருக்கேன்
Related Posts with Thumbnails