"வவுத்த வலி" ('உரையாடல்' போட்டிக்கான சிறுகதை)

"ஏண்டா! உன்னைய அந்த பகட்டி வீட்டுக்கு போக வேண்டாம்ன்னுதானே சொன்னேன். நீ போனதுமில்லாம அவ வீட்டுல கைய நனைச்சுக்கிட்டு வந்திருக்கேயேடா?" மகனின் இருப்பைக்கண்டு பதறியபடி அவனின் தாய் செல்வி.

"மாமா ரொம்ப வற்புறுத்தி கூப்பிட்டாரு. என்ன பண்றதுன்னு தெரியாம போயிட்டேன்" ஒருக்களித்து படுத்தவாறு இராஜேந்திரன் கூறினான்.

”அந்த எடுபட்டவன் கூப்பிட்டான்னா... உனக்கெங்கடா போச்சு அறிவு? நீயில்ல சூதானமா இருந்திருக்கனும்...... செத்த நேராப்படுத்து சட்டையத் தூக்கு " என்றவாறு அவன் வயிற்றில் நாமக்கட்டியை தேய்த்துக் கொண்டிருந்தாள் செல்வி.

"ஏன்? அத்தை ஏதாவது செஞ்சிருக்கும்ன்றயா? அது அப்படி செய்யாதும்மா" உயிர் போகும் வயிற்றுவலியிலும் அத்தைப்பெண் அனிதாவிற்காக விட்டுக்கொடுக்காமல் பேசினான் இராஜேந்திரன்.

"அடப்போடா போக்கத்தவனே! ரெண்டு நாளா மருந்து, மாத்திரைன்னு சாப்பிட்டு வவுத்து வலி சரியாவலேயே ஏன்? தெனவெடுத்தவன் எவனோ ஏதோ செஞ்சிருக்கான். உம்மாமனுக்கு அந்த மேலூர் வீட்டை உங்கப்பாரு எழுதிக் கொடுக்கலைன்னு கோவம்டா. அவன்தான் செஞ்சிருக்கனும். அவன் கையில கட்ட மொளைக்க....!" அழுகையை அடக்கியவாறு பொருமினாள் செல்வி.

"ஏண்டி, அவன் என்னடி செஞ்சான். அவனை வையிற? எல்லாம் உன் சித்தப்ப மவன் மலைச்சாமியும் அவன் பொண்டாட்டியும் பண்ண வேலையா இருக்கும். அனுப்பானடியில இருக்குறப்பவே அவனுக்கும் உம்புருஷனுக்கும் ஆவாது. கைகலப்பு வேற. போலீஸில பிராது கொடுத்தப்பயே அவன் கையக் கால ஒடைச்சிருக்கனும்" வெற்றிலையை இடித்துக் கொண்டே தூபம் போடும் வேலையை செய்தாள் அப்பாயி.

"அப்பாயி விடு...அதான் டாக்டரு மருந்து மாத்திரை கொடுத்திருக்காங்கல்ல. எப்படியும் சரியாயிடும். யாரையும் வையாத" -இராஜேந்திரன்

இனியும் சொந்தத்திற்குள் சண்டைப்போட ஆள் இல்லை. இருப்பது அத்தையும் மாமனும் மட்டும். அவர்களையும் பிரிய மனமில்லை இராஜேந்திரனுக்கு.

"நீ சும்மா கெட. சின்னப்பையன் உனக்கென்ன தெரியும். ஏஞ் செல்வி போன சித்திரையில நீ தீச்சட்டி எடுக்கும் போது அந்த திருப்புவனத்துகாரன் நம்ம இராஜேந்திரனுக்கு அவன் பொண்ண கேட்டதுக்கு நாம 'அவன் படிப்பு முடியட்டும் அப்புறம் பாக்கலாம்'னு பட்டும் படாம பேசினோமே. வெட்டுன 'கடா'ல ஒரு துண்டு கறிய கூட வாங்காம மூஞ்சிய காமிச்சுட்டு அப்பப்போனான். அவன் ஏதாவது செஞ்சிருப்பானோ" ராகம் மாறாமல் இழுத்து இழுத்து பேசி, இடித்த வெற்றிலையை வாயில் போட்டுக் கொண்டே கிழவி விடாமல் தன் துப்பறியும் வேலையை செய்தது.

"ஆமா அத்த! ஊர் கண்ணு பூரா எம் புள்ள மேல தான் இருக்கு. எவன் குடிய கெடுக்கலாம்ன்னு அலையுறானுங்க." என்று பயத்தில் முணுமுணுத்தவாறு தன் மடியில் தலை வைத்து படுத்திருந்த இராஜேந்திரனின் தலையை கோதிக் கொடுத்தாள். அவன் கண் அயர்ந்திருந்தான்.

காலையில் மருத்துவமனைக்கு சென்று வந்த பிறகு அப்பாயியின் கட்டளையின் பேரில் மானாமதுரையில் இருக்கும் குறி சொல்லும் ஆளிடம் செல்ல முடிவெடுக்கப்பட்டது.

இது இப்பொழுதல்ல, இராஜேந்திரன் குழந்தைப் பருவத்திலிருந்து தலைவலி, காய்ச்சல் என அனைத்து உடல் உபாதைகளுக்கும் பல்வேறு சாமியாடிகளிடம் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறான்.

மானாமதுரையில் இறங்கி ஒரு இருபது நிமிட நடை மட்டுமே. சர்பத் கடையில் "குறிசொல்லி ராணியம்மா வீடு எங்கிருக்கு?" என்று விசாரித்தாள் செல்வி.

"அந்தா, அங்க தெரியுற பிள்ளையார் கோவில்ல இருந்து இடப்பக்கம் போ தாயீ" என்றார் சர்பத் கடைக்காரர்.

நீரில்லா வைகை ஆற்றை அங்கிருந்து காண முடிந்தது. ஆங்காங்கே தேங்கியிருந்த நீரில் சட்டையில்லா சிறுவர்கள் விளையாடுவதை கண்டு இரசிக்காமல் வயிற்றை பிடித்தபடி இராஜேந்திரனும், செல்வியும் அந்த வீட்டை சென்றடைந்தனர். கோவிலுக்கு மிக அருகில் உள்ள ஓட்டு வீடு. வாசலில் வேப்பமரம் தன் நிறந்தை இழந்து மஞ்சளும் சிகப்புமாக மாறியிருந்தது.

வாசலில் மூக்கில் ஒழுகிய சளியோடும் புழுதியான தலையோடும் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் "அம்மா இல்ல..வெளிய போச்சு" என்றபடி உடைந்த கோலிகுண்டின் வழியாக உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"போய் கூட்டிட்டு வாடா" என்றதும் ஓடினான்.

ரியாக சொல்லவேண்டுமென்றால் வீட்டின் முன்னறை அது. ஆனால் பல தெய்வங்களின் பல்வேறு விதமான அவதாரங்களின் படங்களோடு அந்த அறை நிரம்பியிருந்தது. படங்களின் இரண்டு பக்கங்களிலும் காமாட்சி விளக்கும், நடுவில் குத்துவிளக்கும் இருந்தது. அறையின் சாம்பிராணி வாசத்தால் மனது வேறு எந்த நினைவுகளுக்கும் திசை திரும்பாமல் இருக்க முயற்சித்தது. ஏற்கனவே குறி பார்ப்போர் வாங்கி வந்திருந்த சூடம், பூ எல்லாம் ஒரு மூலையில் இறைக்கப்பட்டு குன்றின் வடிவத்தை எட்டியிருந்தன.

இடப்பக்கம் அடுப்படி இருந்தது. மண்ணினால் ஆன அடுப்பில், எரிந்த விறகுகள் காலையில் சமைத்ததிற்கான அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தன.

ஏதோ கோவிலின் கருவறைக்கு வந்ததைப் போல கன்னத்தில் போட்டுக் கொண்டே "ஆத்தா மகமாயி" என முனங்கத் துவங்கிய் செல்வி மஞ்சள் பையில் வைத்திருந்த வெற்றிலை, பாக்கு, சூடம், பத்தி என எல்லாத்தையும் அங்கிருந்த தட்டில் வைத்தாள்.

குறி சொல்லி இராணியம்மா வந்து சேர்ந்தார். நெற்றியில் ஐந்து ரூபாய் நாணயம் அளவில் பொட்டு, மஞ்சள் அப்பிய முகம் என இராஜேந்திரனுக்கு அவரைக் காணும் போதே ஒரு வித நம்பிக்கை பிறந்தது.

தரையில் வரைந்த நட்சத்திரத்திற்கு நடுவே, கிழக்கு நோக்கி அமர வைக்கப்பட்டான். சுற்றிலும் கற்பூரம் ஏற்றப்பட்டது. தலையில் மந்திரிக்கப்பட்ட தண்ணீர் தெளிக்கப்பட்டது. சுற்றிலும் வேப்பிலை படர விடப்பட்டது.

"உர்ர்ர்ர்" என லேசாய் ஆரம்பித்தவர் "டேய்ய்ய்" என கத்த ஆரம்பித்தார் அந்தக் குறிசொல்லி. துணுக்குற்றான் இராஜேந்திரன்.

நாக்கை கடித்து கொண்டே "பள்ளிகூடத்துல இருக்குற புளியமரம் பக்கம் போகாதடா....."

"நான் பள்ளிகூடம் படிக்கல..காலேஜ்"

"அதுதாண்டா நானும் சொல்றேன். அந்த புளிய மரத்துக்கு ஒருத்தி வந்து ஏறியிருக்காடா. அந்தப்பக்கம் போகாதடா."

அவனுக்கு குறி சொல்லியின் மீது பக்தி கூடியது. தினமும் புளியமரத்திற்கு கீழே தான் நண்பர்களோடு சாப்பிடுவான்.

"சரின்னு சொல்லுடா" செல்வி

"ம்ம்"

அந்த ஐந்து வயது சிறுவன் சூடம் தீரத் தீர புதியதாய் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். முகத்தில் எந்த வித உணர்ச்சியும் தென்படவில்லை.

"அந்த நெட்ட பயலோடையும் சேராதடா..."

"யாரு" நெற்றியை சுருக்கினான்

"அதான் அந்த ஆறு விரலுகாரன்...."

தூக்கி வாரி போட்டது இராஜேந்திரனுக்கு. சீனியர் முத்துவிற்கு ஆறு விரல் இருப்பது உறைத்தது.

"உனக்கு மருந்து வச்சிருக்காங்கடா...போய் முனியன்கிட்ட மருந்தை எடுத்துட்டு வா" என்றபடி மெதுவாக பழைய நிலைக்கு திரும்பினார். மிகவும் களைப்பாக காணப்பட்டார்.

"ஆத்தா என்ன சொல்லுச்சு?" குறிசொல்லி செல்வியிடம் கேட்டார். சாமி வந்து சொல்வது எதுவும் சாமி இறங்கிய பின் குறிசொல்லி கேட்டு அறிவது வழக்கம்.

"மருந்து வச்சிருக்காங்களாம் அத எடுத்துட்டு வரச் சொல்லுச்சு" செல்வி.

"சரி போய் எடுத்துடு வாங்க" என்றபடி முனியனின் விலாசத்தை கொடுத்தனுப்பினார் குறிசொல்லி இராணியம்மா.

"ஆ..... காட்டுப்பா" என்றபடி ஒரு அடி நீள நீல நிறக் குழாயை இராஜேந்திரனின் வாயில் விட்டார் முனியன்.

முனியனின் முகத்தில் உள்ள இரண்டு வெட்டுகளை யாரும் கவனிக்க முடியாதபடி நெற்றியில் வெள்ளையும் சிகப்புமாக திருநீரையும், குங்குமத்தையும் வரைந்திருந்தார். பார்க்க முரட்டு பக்தி பழமாக இருந்தார்.

குழாயை சற்றே சாய்த்து அவன் தலையைப் லேசாக பிடித்து "ஃஊப்ப்ப்ப்ப்ப்..." என்று உறுஞ்சி பின்பு ஐந்தாறு சிறிய கறிய முட்டைகளை தன் வாயில் இருந்து வெளியே துப்பினார்.

"மருந்தை எடுத்தாச்சுப்பா இனி எதுவும் கவலைப்படாத" திருநீரை பூசினார். செல்வி கொடுத்த இருபது ரூபாயை வாங்கி இடுப்பு வேட்டியில் சொருகிக் கொண்டார்.

திரும்புவும் நட்சத்திரத்தின் நடுவே அவன்.

"அடியே உன் மவனுக்கு வச்சிருந்த மருந்தை எடுத்துட்டேண்டி. எனக்கு ஆடு வெட்டி கடா போடுடி. ம்ம்ம்ம்ம்" என்று ஆங்காரமாய் செல்வியிடம் கேட்க ஆரம்பித்தார் குறி சொல்லி.

"சரி செஞ்சுடுறேன். என் பிள்ளய நோவு நொடியில்லாம பார்த்துக்கோ. நீ கேட்டத செய்யிறேன்."அம்மா...தாயீ என்றபடி கன்னத்தில் போட்டுகொண்டாள் செல்வி.

"கடை தண்ணிக்கு போகும் போது பார்த்து போணும்டா. சூதானமா இருந்துக்கடா"-குறிசொல்லி

வேகமாக தலையாட்டினான் இராஜேந்திரன்.

ஒரு டம்ளர் நீரில் சூடம் எரிந்து கொண்டிருந்தது. அது அணையும் வரை சாமி "ஊர்ர்...ம்ம்" என்றபடி பல்லைக் கடித்துக் கொண்டிருந்தது.

இராஜேந்திரன் கண்களை இருக்க மூடி கொண்டான் சாமி அடிக்க போகும் தண்ணீரின் வேகத்தை நினைத்தபடி....

வாசலில் சப்தம்...வேறு ஒரு சிறுவன்
"அத்த அம்மா சீட்டு காசு குட்த்து விட்டுச்சு"

"அந்த மேசையில வச்சுட்டு போடா" என்று சாமி ஆவேசத்துடன் சொன்னதைக் கேட்டு இராஜேந்திரன் கண்களைத் திறந்தான். "சுளீரென்று" மூன்று முறை அவன் முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட்டது .

செல்வி தட்டில் ஐம்பது ரூபாய் வைத்தாள்.

"இப்ப தான் முகம் தெளிவா இருக்கு..."என்றபடி முந்தானையால் முகத்தை தொடைத்தாள் செல்வி. தெளிவிற்கான காரணம் அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை. பஸ் இன்னும் வரவில்லை.

"இப்ப வவுறு வலிக்குதாடா"

"இல்லம்மா" என்றான் வயிற்றைப் பிடித்தபடி.

வயிறு வலித்தது.......

-------------------------------------------------------------------------------------------------

( இது "'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு'ற்காக உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட என் முதல் சிறுகதை )
30 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

pappu said...

மதுரைய base பண்ணி கதை எழுதிருக்கீங்க போல. மதுரைன்னாலே கிராமம், சாமியாடி, குறி, மடு தானா? இங்க நாங்களும் ultramoderna வாழ்ந்துட்டு இருக்கோம்ல. ஆனா, கதை நல்லா இருக்கு.

pappu said...

நான் என் ப்ளாக்க திரும்ப போட்டுட்டேங்கிற விஷயத்தை உங்களுக்கு தெரியப்படுத்தினேனா?

நாடோடி இலக்கியன் said...

நல்ல நடை.நேரில் பார்ப்பது போன்ற விவரனைகள்.மூடநம்பிக்கையை சாடியிருக்கிறீர்கள்.அருமையான கதையோட்டம்.மிகவும் ரசித்தேன்.
(இது மதுரை வட்டார வழக்கா?தஞ்சை வட்டார வழக்கு மாதிரியும் இருக்கிறது.)

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்னதான் நவீனங்களில் திளைத்தாலும், இன்னும் மக்கள் இது போன்ற செய்வினை, குறி கேட்டல், பரிகாரம் என்ற விஷயங்களில் நம்பிக்கையும், ஈடுபாடும் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை நினைவுறுத்துதல் போல இருக்கிறது இந்தக் கதை.

இராஜேந்திரனின் வவுத்து வலிக்கு நிஜக் காரணம் என்ன?

பேச்சு வழக்கு அசத்தல், குறிப்பாக சீட்டு காசு குட்த்து விட்டுச்சு //

வாழ்த்துக்கள்

☀நான் ஆதவன்☀ said...

//pappu said...
மதுரைய base பண்ணி கதை எழுதிருக்கீங்க போல. மதுரைன்னாலே கிராமம், சாமியாடி, குறி, மடு தானா? இங்க நாங்களும் ultramoderna வாழ்ந்துட்டு இருக்கோம்ல//

வாங்க பப்பு.அட அல்ராமாடன்னு தான் மதுரை சிட்டிக்கே தெரியுமே. எனக்கு தெரிஞ்சு மதுரையில மட்டும் தான் எல்லா மாசத்திலேயும் ஏதாவது ஒரு கோவில்லயாவது மைக் செட்டோட திருவிழா நடக்குது. குறி சொல்றதும் ரொம்ப அதிகமா இருக்குது.

அப்புறம் இது கிட்டதட்ட ஒரு உண்மைச் சம்பவம் :)

//கதை நல்லா இருக்கு.//

நன்றி பப்பு

//நான் என் ப்ளாக்க திரும்ப போட்டுட்டேங்கிற விஷயத்தை உங்களுக்கு தெரியப்படுத்தினேனா?//

அதைப் பார்த்துட்டு தானே உங்களுக்கு நான் மெயில் பண்ணினேன்

☀நான் ஆதவன்☀ said...

//நாடோடி இலக்கியன் said...
நல்ல நடை.நேரில் பார்ப்பது போன்ற விவரனைகள்.மூடநம்பிக்கையை சாடியிருக்கிறீர்கள்.அருமையான கதையோட்டம்.மிகவும் ரசித்தேன்.
(இது மதுரை வட்டார வழக்கா?தஞ்சை //

நன்றி நாடோடி இலக்கியன். உங்கள் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது.இது மதுரை வட்டார வழக்கு தான்.

நான் சென்னை வந்து இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதனால் மதுரை வட்டார வழக்கை அப்படியே கொண்டு வர சிரமப்பட்டேன். முயன்றும் முழு வெற்றி பெற முடியவில்லை

☀நான் ஆதவன்☀ said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
என்னதான் நவீனங்களில் திளைத்தாலும், இன்னும் மக்கள் இது போன்ற செய்வினை, குறி கேட்டல், பரிகாரம் என்ற விஷயங்களில் நம்பிக்கையும், ஈடுபாடும் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை நினைவுறுத்துதல் போல இருக்கிறது இந்தக் கதை.//

நன்றி அமித்து அம்மா.

//இராஜேந்திரனின் வவுத்து வலிக்கு நிஜக் காரணம் என்ன?//

சாதாரண வயிற்று உபாதை தான் :) (அந்த பக்கி என்னத்த தின்னுச்சோ)

//பேச்சு வழக்கு அசத்தல், குறிப்பாக சீட்டு காசு குட்த்து விட்டுச்சு //

வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி

வித்யா said...

வெற்றி பெற வாழ்த்துகள்.

எவனோ ஒருவன் said...

சூழலை கண்முன்னே கொண்டுவந்திருப்பது அருமை.

வாழ்த்துக்கள்.

☀நான் ஆதவன்☀ said...

நன்றி வித்யா

நன்றி நண்பா

செந்தழல் ரவி said...

வட்டார வழக்கு, முழுமையாக அதையே உபயொகப்படுத்தியிருந்திருக்கலாம்.

மிக்ஸ் அண்ட் மேட்ச் ஆக உள்ளது.

எழுத்துப்பிழைகள் இல்லாமல் இருப்பது சிறப்பு...

மூட நம்பிக்கையை சாடவேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்தது சூப்பர்...

இறுதியில் கொஞ்சம் விளங்காமல் மீண்டும் படித்து, அப்புறம் பின்னூட்டத்தில் தான் முழு கதையும் புரிந்தது...

நல்ல முயற்சி...

கோபிநாத் said...

அருமை ஆதவன் ;)

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)

தேனீ - சுந்தர் said...

அருமையான நடை. வாழ்த்துக்கள்

rapp said...

கதை நல்லாருக்கு, முடிவு ரொம்ப பிடிச்சிருக்கு.

☀நான் ஆதவன்☀ said...

@ரவி

விமர்சனத்திற்கு நன்றி ரவி. மார்க் போடுவீங்கன்னு பார்த்தேன். பரவாயில்லை. கேட்டதற்கு மறுப்பேதும் இல்லாமல் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
---------------------------------------
நன்றி கோபிநாத் :)

நன்றி சுந்தர் :)

நன்றி இராப் :)

வினோத்கெளதம் said...

வட்டார வழக்கு அருமை அப்படியே இருந்தது..
கதையும் நன்று..

வினோத்கெளதம் said...

தலைவா நீங்கள் அமீரகத்தில் உள்ளிர்கள..

☀நான் ஆதவன்☀ said...

நன்றி வினோத் கௌதம்.

நானும் அமிரகம் தான். சார்ஜாவில் இருக்கிறேன்.

சென்ஷி said...

பொறுமையா படிக்கனும்னு டைம் எடுத்து படிச்சதால உடனே பின்னூட்ட முடியலை!

கதையில நல்ல நேர்த்தி இருக்குது. எதிர்பார்ப்பிற்கேற்ற முடிவு. வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆதவன்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா இருக்குங்க!! என் நண்பனுக்கும் இதே கதி தான்.. அவன் வெளியூர் போவதென்றால் கூட ஜோசியம் பார்ப்பார்கள்..

☀நான் ஆதவன்☀ said...

@சென்ஷி

நன்றி தலைவா. பரிசு கிடைக்குமாங்கிறத விட இங்க உங்கள மாதிரி ஆளுங்க நிறைய பாராட்டினதே திருப்தியா இருக்கு..முதல் சிறுகதைங்கிறனால.


@குறை ஒன்றும் இல்லை

பாராட்டுக்கு நன்றிங்க. இது நீங்க சொல்ற இந்த மாதிரி ஆளுங்களுக்கான கதை தான்

இளைய பல்லவன் said...

சூப்பர் ! (இது கதையைப் படிக்காமல் போட்ட பின்னூட்டம்)

இளைய பல்லவன் said...

சுளீர் !

தண்ணீர் தெளிக்கப்பட்டது போலவே கதையும் இருக்கிறது.

சில எழுத்துப் பிழைகள் உள்ளன. கண்டுபிடிக்கவும்.

முதல் முயற்சியிலேயே சிறப்பாக வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

(இது படித்துவிட்டு எழுதப்பட்டது!!)

♫சோம்பேறி♫ said...

எழுத்து நடை, தீம், முடிவு எல்லாமே சூப்பர். ஆனால் கதையின் நீளம் கவனத்தை சிதறடிக்கிறது.

(கதையை முழுசா படிச்சு முடிக்க மூனு நாளாச்சு.) எடிட்டினால் பரவாயில்லை.

♫சோம்பேறி♫ said...

/* ஊர் கண்ணு பூரா எம் புள்ள மேல தான் இருக்கு. */

நம்புற மாதிரி இல்லையே! :-)

சரி விடுங்க.. அத்தை பெண் அனிதா என்ன ஆனார்?

☀நான் ஆதவன்☀ said...

@இளைய பல்லவன்

உங்க கருத்துக்காக தான் வெயிட்டிங். பாராட்டுக்கு நன்றி பல்லவன்.

என்னென்ன எழுத்துப் பிழைகள்னு சொன்னீங்கன்னா திருத்திடுவேன். மெயில்ல சொல்லுங்க.

உங்க கதைக்காக வெயிட்டிங். சீக்கிரம் போடுங்க

☀நான் ஆதவன்☀ said...

// ♫சோம்பேறி♫ said...
எழுத்து நடை, தீம், முடிவு எல்லாமே சூப்பர். ஆனால் கதையின் நீளம் கவனத்தை சிதறடிக்கிறது. //

இந்த கதையில இதுக்கும் மேல குறைச்சா நேட்டிவிட்டி தீம் எடுபடாதுன்னு தோணுச்சு அதான் இத்தனை நீளம்.

//(கதையை முழுசா படிச்சு முடிக்க மூனு நாளாச்சு.) //

நேத்து பப்ளிஷ் பண்ணப்ப கூட இதையே தான் நிறைய பேரு சொன்னாங்க

///* ஊர் கண்ணு பூரா எம் புள்ள மேல தான் இருக்கு. */

நம்புற மாதிரி இல்லையே! :-)//

அட நம்புங்க அந்த கதையின் நாயகன் ஊர் உலகம் போற்றும் அழகன் அறிவன் :)

///சரி விடுங்க.. அத்தை பெண் அனிதா என்ன ஆனார்?//

உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் ச்சொல்ல....

ஷோபிகண்ணு said...

//
"வவுத்த வலி" (போட்டிக்கான சிறுகதை) /

நான் வவுத்த வலி போட்டின்னு நினைச்சுகிட்டேன்..

சங்கா said...

”நான் ஆதவன்”, (இவர் பேர, கொட்டேஷன்ல போடலைன்னா கிரேஸி மோகன் ஜோக்காயிரும்போல)
கதை சிறப்பாக வந்திருக்கிறது, ஆனா இளைய பல்லவன் சொன்ன மாதிரி, சிரமம் பாராம, இருக்கற சில எழுத்துப் பிழைகளைத் திருத்தினால் சாலச் சிறந்தது!

☀நான் ஆதவன்☀ said...

@ஷோபிகண்ணு

நீங்க கோயம்புத்தூரா? குசும்பு ஜாஸ்தியா இருக்கு! :)

தலைப்பை மாற்றிட்டேன்

-------------------------------------
@சங்கா

நன்றி சங்கா. எப்படியும் நாளைக்குள் சரி செய்து விடுகிறேன்.

Related Posts with Thumbnails