அவ்வளவு மோசமாவா இருக்கு?

அக்னி வெயிலில் நண்டு சாப்பிடுவது அவ்வளவு மோசமானதா? இருக்காது வேறு சில காரணம் ஏதாவது இருக்குமா? இல்லை மதியம் சாப்பிட்ட இரண்டு மாம்பழம் காரணமாக இருக்குமோ என்று மொட்டு வளையத்தைப் பார்த்து நான் யோசித்துக்கொண்டிருந்த நேரம் என் அக்கா நறுக்கென்று ஒரு கொட்டு கொட்டி (அக்காவுக்கு தலையில அடிக்கிறது புடிக்காது) "எவ்ளோ நேரமா கூப்பிடுறேன் அப்படி என்னடா மேல பார்த்திகிட்டுருக்க" என்றார்.

"இப்ப என்ன வேணும்? ஒரு மாசம் நிம்மதியா இருக்கலாம்ன்னு ஊருக்கு வந்தா தொல்லையா இருக்கே..."

டேய் கிச்சன் நிறைய வேலை இருக்குடா. இந்த இரண்டு வாண்டுகளும் தூங்க மாட்டேங்குதுடா..நீ தான் ஏதேதோ எழுவியாம்ல! அப்படியே இரண்டு பேரையும் எதுனா கதை சொல்லி தூங்க வை பார்ப்போம்..

என்றபடி பதிலுக்கு என் பதிலைக் கூற பெறாமல் இரண்டு பசங்களையும் "மாமா எதுனா கதை சொல்லுவான். அப்படியே தூங்கிடனும். சரியா" என்றபடி சுமையை இறக்கி வைத்த போர்டர் போல சென்றுவிட்டார்.

என்ன கதை சொல்வது?? நான் கதை எழுதுவேன் என்று யார் புரளியை கிளப்பியது? அன்னைக்கு டீப்பாயில ஆனந்த விகடனப் பார்த்துட்டு இதையெல்லாம் வாங்கி ஏன் காச வேஸ்ட் பண்றீங்க? உயிர்மை, காலச்சுவடு இந்த மாதிரி வாங்க மாட்டீங்களான்னு சும்மா ஒரு சீனுக்கு பிட்ட போட்டப்ப 'தினகரன்' படிச்சுகிட்டுருந்த அப்பா ஒரு மாதிரி பார்த்தாரே! அவர் சொல்லியிருப்பாரா?

எதிர் வீட்டு ஃபிகர் வீட்டுக்கு வந்தப்ப ஆனந்த விகடன்ல வந்த கதை சரியில்ல, கதையோட்டம் சரியில்ல, ஒரு முரண் இல்லன்னு சீன் போட்டத அக்கா கேட்டிருப்பாளோ?

பலகேள்விகளுக்கு பதில் தெரியாமல் இருந்த என்னை தலையில் கொட்டி(இவனுக்கும் தலையில் அடிப்பது பிடிக்காது) கத சொல்லு மாமா என்றான் ஆதி.

மனதை தேத்திக் கொண்டு "உரையாடல்-சமூக, இலக்கிய அமைப்பு" நடத்தும் போட்டிக்காக நான் வைத்திருந்த கருவிற்கு உயிர் கொடுத்து, கதையைச் சொல்லி வாண்டுகளின் கருத்தை வாங்குவது என்று முடிவெடுத்தேன்.

"ஒரு ஊர்ல பயங்கர தண்ணி பஞ்சமாம்"

"எங்க மாமா துபாய்லயா?" ஆதி

"சொல்றது மட்டும் கேளு. குறுக்கால கேள்வி கேட்காத சரியா"

"சரி நீ சொல்லு" கீர்த்தி

"அந்த ஊருல ஒருத்தன் கிணறு வெட்டத்தொடங்கினானாம்?"

"பூதம் வந்துச்சா மாமா" கீர்த்தி

"இங்கேரு..இப்படியெல்லாம் கூடால பேசுனா மாமாவுக்கு மறந்து போயிடும் அப்புறம் கதை கிடைக்காது. சொல்லிட்டேன்"

"விளக்கமாறு பிஞ்சிடும்" கிச்சனிலிருந்து அக்கா குரல்....

"விடமாட்டாங்களே...சரி அவன் கிணறு வெட்டுனானா..ஆனா ரொம்ப பள்ளம் தோண்டியும் தண்ணியே வரலையாம்"

"ஏன் மாமா மோட்டர் போடலையா?" ஆதி

"ஸ்ஸ்ஸ்ப்பா"

"சரி சொல்லு. நான் இனிமே பேசமாட்டேன்" ஆதி

"அப்புறமா ரொம்ப ஆழத்துக்கு அப்புறம் தண்ணி வந்துச்சாம். ஆனா தண்ணி சூப்பரா இருந்துச்சாம்"

"சூப்பரான்னா?" கீர்த்தி

"நல்லா ஸ்வீட்டா இருந்துச்சாம். அவனுக்கு ஒரே சந்தோசமாம். ஊர்ல எல்லோரும் அவன் கிணத்துலேயே தண்ணி எடுக்க ஆரம்பிச்சாங்களாம். இவன் எல்லாரும் இறங்கி தண்ணி பிடிக்கறதுக்காக படிக்கெட்டெல்லாம் போட்டு வச்சானாம். அப்படி இருக்கும் போது ஒரு நாள்.."

"ஒரு நாளு..."

"ஒரு நாள் காலையில அவன் எழுந்திருச்சு பார்த்தா படிக்கெட்டெல்லாம் உடைஞ்சு போயிருக்குதாம். சரின்னு எல்லா படியையும் சரி பண்ணிட்டு அன்னைக்கு போய் படுத்து தூங்கினானாம். திரும்ப காலையில வந்தப்ப எல்லா படியும் உடைஞ்சு கிடக்குதாம்."

"ஏன் மாமா உடைஞ்சு போச்சு?" கீர்த்தி

"ஏய் அது ஸ்டாராங்கா இல்லப்பா. இல்ல மாமா?" ஆதி

"அதான் சொல்றேன்ல அதுக்குள்ள என்ன அவசரம்?. ஊர்ல எல்லார்கிட்டேயும் பயங்கரமா கோவப்பட்டானாம். எல்லோரும் எங்களுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டாங்களாம். சரின்னு அன்னைக்கு படிகட்ட சரி செஞ்சுட்டு மறுபடியும் காலையில"

"காலையில பார்த்தா படிகெட்டு உடைஞ்சு கிடக்குதாம்" ஆதி

"டேய் அதிகபிரசங்கிதனமா பேசாதே. அதான் மாமா சொல்றேன்ல..... அன்னைக்கு படிக்கெட்ட சரி பண்ணிகிட்டு இராத்திரி அங்கேயே வெயிட் பண்ணி யார் இந்த மாதிரி செய்யுறான்னு பார்த்தானாம். சரியா பன்னெண்டு மணிக்கு "திபு திபு திபு திபு"ன்னு நிலாலருந்து ஒரு பெரிய மாடு இறங்கி ஓடி வந்துச்சாம். "

"பெரிய மாடா மாமா" கீர்த்தி

"ஆமாண்டா செல்லம். ரொம்ம்ம்ம் பெருசாம். அதோட வாலு சுருண்டு சுருண்டு சுருண்டு சுருண்டு ரொம்ம்ப பெருசா இருந்துச்சாம்."

"டேய் ஆதி இவ்ளோ பெருசா இருக்கும்டா" கையை முடிந்த மட்டும் விரிக்கிறாள் கீர்த்தி.

"இல்லடி அது நம்ம வீட்ட விட பெருசா இருக்கும் தெரியுமா" ஆதி

"மாமா இங்க பாரேன் வீட்ட விட பெருசா எங்கன்னா மாடு இருக்குமா?ஹ..ஹ. அப்படின்னா அது டைனோஸர்" சிரிக்கிறாள் கீர்த்தி.

"மாமா நேத்து (அவன் மொழியில இன்னைக்கு, நாளைக்கு தவிர எல்லாமே நேத்து தான்) டைனோஸர் படம் போட்டான். அதுல ஒரு.." ஆதி

"டாய் மாமா கதை சொல்லிட்டுருக்கேன்ல. அத கவனிங்கடா அப்புறம் பேசலாம். அந்த மாடு வந்து படிகட்டுல இறங்கி அந்த தண்ணிய குடிச்சுதாம். திரும்பவும் மேலே போச்சாம். அப்ப படிக்கட்டெல்லாம் உடைஞ்சு போச்சாம். அத பார்த்துகிட்டுருந்த அவன் ஓடிப் போய் அந்த வாலை புடிச்சுகிட்டானாம். அந்த மாடு நிலாவுக்கு நேரா போச்சாம்"

"ஏண்டா தம்பி... அந்த மாடு திரும்பி பாக்கல" குரல் கேட்டு திரும்பினேன். கையில் கரண்டியுடன் அக்கா.

"டேய் சீக்கிரம் சொல்றா. எனக்கு வேலை இருக்கு"

"உள்ள வேலை இருக்குன்னு இங்க என்ன பண்ற?"

"அதெல்லாம் உனக்கெதுக்கு நீ கதைய கண்டினியூ பண்ணு" என்றார் அக்கா கரண்டியை மற்றொரு உள்ளங்கையில் தட்டி.

"நிலாவுல இறங்கிப் பார்த்தா நிறைய தங்கம்,வைரம், வைடூரியமெல்லாம் இருந்ததாம்" கண்களையும் நெற்றியையும் சுருக்கி அதன் பிரம்மாண்டத்தை விளக்கினேன்.

"வைடூரியம்,வைரம்ன்னா என்ன மாமா" ஆதி

"சரி கிண்டர் ஜான், குர்குரே, லேஸ்ன்னு வச்சுக்கோ...நிறைய இருந்துதாம் எல்லாத்தையும் கைநிறைய அள்ளிகிட்டு மறுநாள் நைட்டு அங்கிருந்து மாடு கிளம்பும் போது திரும்பி வந்தானாம். ஆனா ஒரு நாளா இவனை காணாம அவன் பொண்டாட்டி ரொம்ப கவலைப்பட்டாளாம். ஊர்ல யார கேட்டாலும் ஒன்னும் தெரியலையாம். அப்புறம் அவன் வந்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டாளாம். கொண்டு வந்த தங்கத்தையெல்லாம் அவளுக்கு கொடுத்தானாம். பசங்களுக்கு கிண்டர் ஜானும்,குர்குரேயும், லேஸூம் கொடுத்தானாம்.

எப்படி கிடைச்சுதுன்னு கேட்டதுக்கு நைட்டு நடந்த விசயத்த சொன்னானாம். இத யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொன்னான். அவுங்களும் சரின்னு தலையாட்டினாங்களாம் . சரி ஏதாவது உங்களுக்கு புரியுதா?"

"ம்ம் புரியுது மாமா" கோரஸ்...

"அவன் பொண்டாண்டியும் அவன் புள்ளைங்களும் நிலாவுக்கு போகனும்னு ரொம்ப அடம் பிடிச்சாங்க. சரி சரி இன்னைக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னான் அவன். அப்புறமா அவன் பொண்டாண்டி தண்ணியெடுக்க வந்த அவளோட ஃப்ரெண்டு எங்கடி போனான் உன் புருஷன்னு கேட்க இவளும் யார்கிட்டயும் சொல்லாதன்னு உண்மைய சொல்லிட்டா. இது கொஞ்சம் கொஞ்சமா ஊர் ஃபுல்லா பரவிடுச்சு"

"அய்யய்யோ..."அக்கா

"என்ன அய்யய்யோ......உள்ள வேலைய பாருங்க" என்றேன். நகருவது போல் நகர்ந்து பின்னாலேயே இருந்தார்.

"மறுநாள் அவன் பொண்டாட்டி புள்ளைங்களோட பெரிய பெரிய பையோட காத்திருந்தானாம். அவனுக்கு தெரியாம இன்னொருத்தரும், அவுங்களுக்கு தெரியாம இன்னொருத்தரும்னு ஊரே ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம வெயிட் பண்ணிட்டுருந்தாங்களாம். அப்ப அந்த மாடு "திபு திபு திபு திபு"னு ஓடி வந்ததாம். இவன் ஓடிப் போய் மாடு வாலை பிடிக்க,அவன் கால அவன் புள்ள புடிக்க,புள்ள கால இன்னொரு புள்ள புடிக்க, அவன் கால அவுங்கம்மா பிடிக்க...இப்படியே ஒருத்தர் கால ஒருத்தர் புடிச்சுகிட்டு ஊரே மேல போச்சாம்"

"காலு வலிக்காதா மாமா?" ஆதி

"வலிக்கும் தான். ஆனா ஆசை யார விட்டது. அப்படியே போனாங்களா..... அப்ப அவன் பையன் அப்பா நிலா ரொம்ப சூடா இருக்குமாப்பான்னு கேட்டான். இல்லடா கண்ணா ரொம்ப ஜில்லுன்னு இருக்கும்னு அப்பங்காரன் சொன்னான். நிலா எவ்ளோ பெரிசா இருக்கும்ப்பான்னு கேட்டான் புள்ள. அப்பங்காரன் இரண்டு கையும் விரிச்சு இவ்ளோஓஓஓஒ பெரிசா இருக்கும்னான். அவ்வளவு தான்.......எல்லாரும் செத்து போய்டாங்க"

"எப்படி மாமா செத்து போனாங்க"கீர்த்தி

"அவன் மாடு வால்ல இருந்து கைய எடுத்தவுடனே அவனும் எல்லாரும் கீழ விழுந்திடுவாங்கல்ல...அதான் செத்து போய்டாங்க"

"அப்புறம் என்னாச்சு மாமா"ஆதி

"அதான் செத்து போய்டாங்களே அப்புறம் என்னாகும் கதை முடிஞ்சுது"

ம்ம்ம்ம் என்றபடியே இரண்டு பேரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஏய்ய்ய் எழுந்திருங்க அவன் தான் வேலையத்தவன் ஏதோ சொல்றான்னா நீங்களும் உட்கார்ந்து கேட்டுகிட்டு, எழுந்திருடி, எழுந்திருடா போய் கண்ண மூடி படுங்க போ கண்ண தொறந்தீங்க வெங்காயத்தை தட்டி கண்ல போடுவேன். மூடு.... என்று என்னையும் தலையில் ஒரு கொட்டி போய் விட்டார் என் அக்கா.

அவர்களும் அந்த அதட்டலில் தூங்கிவிட்டனர்...

நம்ம கதை அவ்வளவு மோசமாவா இருக்கு???.......

டிஸ்கி: அதுக்கப்பறமா எழுதியது தான் "வவுத்த வலி" சிறுகதை...இல்லைன்னா இதையே எழுதி அனுப்பலாம்ன்னு இருந்தேன்

"வவுத்த வலி" ('உரையாடல்' போட்டிக்கான சிறுகதை)

"ஏண்டா! உன்னைய அந்த பகட்டி வீட்டுக்கு போக வேண்டாம்ன்னுதானே சொன்னேன். நீ போனதுமில்லாம அவ வீட்டுல கைய நனைச்சுக்கிட்டு வந்திருக்கேயேடா?" மகனின் இருப்பைக்கண்டு பதறியபடி அவனின் தாய் செல்வி.

"மாமா ரொம்ப வற்புறுத்தி கூப்பிட்டாரு. என்ன பண்றதுன்னு தெரியாம போயிட்டேன்" ஒருக்களித்து படுத்தவாறு இராஜேந்திரன் கூறினான்.

”அந்த எடுபட்டவன் கூப்பிட்டான்னா... உனக்கெங்கடா போச்சு அறிவு? நீயில்ல சூதானமா இருந்திருக்கனும்...... செத்த நேராப்படுத்து சட்டையத் தூக்கு " என்றவாறு அவன் வயிற்றில் நாமக்கட்டியை தேய்த்துக் கொண்டிருந்தாள் செல்வி.

"ஏன்? அத்தை ஏதாவது செஞ்சிருக்கும்ன்றயா? அது அப்படி செய்யாதும்மா" உயிர் போகும் வயிற்றுவலியிலும் அத்தைப்பெண் அனிதாவிற்காக விட்டுக்கொடுக்காமல் பேசினான் இராஜேந்திரன்.

"அடப்போடா போக்கத்தவனே! ரெண்டு நாளா மருந்து, மாத்திரைன்னு சாப்பிட்டு வவுத்து வலி சரியாவலேயே ஏன்? தெனவெடுத்தவன் எவனோ ஏதோ செஞ்சிருக்கான். உம்மாமனுக்கு அந்த மேலூர் வீட்டை உங்கப்பாரு எழுதிக் கொடுக்கலைன்னு கோவம்டா. அவன்தான் செஞ்சிருக்கனும். அவன் கையில கட்ட மொளைக்க....!" அழுகையை அடக்கியவாறு பொருமினாள் செல்வி.

"ஏண்டி, அவன் என்னடி செஞ்சான். அவனை வையிற? எல்லாம் உன் சித்தப்ப மவன் மலைச்சாமியும் அவன் பொண்டாட்டியும் பண்ண வேலையா இருக்கும். அனுப்பானடியில இருக்குறப்பவே அவனுக்கும் உம்புருஷனுக்கும் ஆவாது. கைகலப்பு வேற. போலீஸில பிராது கொடுத்தப்பயே அவன் கையக் கால ஒடைச்சிருக்கனும்" வெற்றிலையை இடித்துக் கொண்டே தூபம் போடும் வேலையை செய்தாள் அப்பாயி.

"அப்பாயி விடு...அதான் டாக்டரு மருந்து மாத்திரை கொடுத்திருக்காங்கல்ல. எப்படியும் சரியாயிடும். யாரையும் வையாத" -இராஜேந்திரன்

இனியும் சொந்தத்திற்குள் சண்டைப்போட ஆள் இல்லை. இருப்பது அத்தையும் மாமனும் மட்டும். அவர்களையும் பிரிய மனமில்லை இராஜேந்திரனுக்கு.

"நீ சும்மா கெட. சின்னப்பையன் உனக்கென்ன தெரியும். ஏஞ் செல்வி போன சித்திரையில நீ தீச்சட்டி எடுக்கும் போது அந்த திருப்புவனத்துகாரன் நம்ம இராஜேந்திரனுக்கு அவன் பொண்ண கேட்டதுக்கு நாம 'அவன் படிப்பு முடியட்டும் அப்புறம் பாக்கலாம்'னு பட்டும் படாம பேசினோமே. வெட்டுன 'கடா'ல ஒரு துண்டு கறிய கூட வாங்காம மூஞ்சிய காமிச்சுட்டு அப்பப்போனான். அவன் ஏதாவது செஞ்சிருப்பானோ" ராகம் மாறாமல் இழுத்து இழுத்து பேசி, இடித்த வெற்றிலையை வாயில் போட்டுக் கொண்டே கிழவி விடாமல் தன் துப்பறியும் வேலையை செய்தது.

"ஆமா அத்த! ஊர் கண்ணு பூரா எம் புள்ள மேல தான் இருக்கு. எவன் குடிய கெடுக்கலாம்ன்னு அலையுறானுங்க." என்று பயத்தில் முணுமுணுத்தவாறு தன் மடியில் தலை வைத்து படுத்திருந்த இராஜேந்திரனின் தலையை கோதிக் கொடுத்தாள். அவன் கண் அயர்ந்திருந்தான்.

காலையில் மருத்துவமனைக்கு சென்று வந்த பிறகு அப்பாயியின் கட்டளையின் பேரில் மானாமதுரையில் இருக்கும் குறி சொல்லும் ஆளிடம் செல்ல முடிவெடுக்கப்பட்டது.

இது இப்பொழுதல்ல, இராஜேந்திரன் குழந்தைப் பருவத்திலிருந்து தலைவலி, காய்ச்சல் என அனைத்து உடல் உபாதைகளுக்கும் பல்வேறு சாமியாடிகளிடம் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறான்.

மானாமதுரையில் இறங்கி ஒரு இருபது நிமிட நடை மட்டுமே. சர்பத் கடையில் "குறிசொல்லி ராணியம்மா வீடு எங்கிருக்கு?" என்று விசாரித்தாள் செல்வி.

"அந்தா, அங்க தெரியுற பிள்ளையார் கோவில்ல இருந்து இடப்பக்கம் போ தாயீ" என்றார் சர்பத் கடைக்காரர்.

நீரில்லா வைகை ஆற்றை அங்கிருந்து காண முடிந்தது. ஆங்காங்கே தேங்கியிருந்த நீரில் சட்டையில்லா சிறுவர்கள் விளையாடுவதை கண்டு இரசிக்காமல் வயிற்றை பிடித்தபடி இராஜேந்திரனும், செல்வியும் அந்த வீட்டை சென்றடைந்தனர். கோவிலுக்கு மிக அருகில் உள்ள ஓட்டு வீடு. வாசலில் வேப்பமரம் தன் நிறந்தை இழந்து மஞ்சளும் சிகப்புமாக மாறியிருந்தது.

வாசலில் மூக்கில் ஒழுகிய சளியோடும் புழுதியான தலையோடும் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் "அம்மா இல்ல..வெளிய போச்சு" என்றபடி உடைந்த கோலிகுண்டின் வழியாக உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"போய் கூட்டிட்டு வாடா" என்றதும் ஓடினான்.

ரியாக சொல்லவேண்டுமென்றால் வீட்டின் முன்னறை அது. ஆனால் பல தெய்வங்களின் பல்வேறு விதமான அவதாரங்களின் படங்களோடு அந்த அறை நிரம்பியிருந்தது. படங்களின் இரண்டு பக்கங்களிலும் காமாட்சி விளக்கும், நடுவில் குத்துவிளக்கும் இருந்தது. அறையின் சாம்பிராணி வாசத்தால் மனது வேறு எந்த நினைவுகளுக்கும் திசை திரும்பாமல் இருக்க முயற்சித்தது. ஏற்கனவே குறி பார்ப்போர் வாங்கி வந்திருந்த சூடம், பூ எல்லாம் ஒரு மூலையில் இறைக்கப்பட்டு குன்றின் வடிவத்தை எட்டியிருந்தன.

இடப்பக்கம் அடுப்படி இருந்தது. மண்ணினால் ஆன அடுப்பில், எரிந்த விறகுகள் காலையில் சமைத்ததிற்கான அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தன.

ஏதோ கோவிலின் கருவறைக்கு வந்ததைப் போல கன்னத்தில் போட்டுக் கொண்டே "ஆத்தா மகமாயி" என முனங்கத் துவங்கிய் செல்வி மஞ்சள் பையில் வைத்திருந்த வெற்றிலை, பாக்கு, சூடம், பத்தி என எல்லாத்தையும் அங்கிருந்த தட்டில் வைத்தாள்.

குறி சொல்லி இராணியம்மா வந்து சேர்ந்தார். நெற்றியில் ஐந்து ரூபாய் நாணயம் அளவில் பொட்டு, மஞ்சள் அப்பிய முகம் என இராஜேந்திரனுக்கு அவரைக் காணும் போதே ஒரு வித நம்பிக்கை பிறந்தது.

தரையில் வரைந்த நட்சத்திரத்திற்கு நடுவே, கிழக்கு நோக்கி அமர வைக்கப்பட்டான். சுற்றிலும் கற்பூரம் ஏற்றப்பட்டது. தலையில் மந்திரிக்கப்பட்ட தண்ணீர் தெளிக்கப்பட்டது. சுற்றிலும் வேப்பிலை படர விடப்பட்டது.

"உர்ர்ர்ர்" என லேசாய் ஆரம்பித்தவர் "டேய்ய்ய்" என கத்த ஆரம்பித்தார் அந்தக் குறிசொல்லி. துணுக்குற்றான் இராஜேந்திரன்.

நாக்கை கடித்து கொண்டே "பள்ளிகூடத்துல இருக்குற புளியமரம் பக்கம் போகாதடா....."

"நான் பள்ளிகூடம் படிக்கல..காலேஜ்"

"அதுதாண்டா நானும் சொல்றேன். அந்த புளிய மரத்துக்கு ஒருத்தி வந்து ஏறியிருக்காடா. அந்தப்பக்கம் போகாதடா."

அவனுக்கு குறி சொல்லியின் மீது பக்தி கூடியது. தினமும் புளியமரத்திற்கு கீழே தான் நண்பர்களோடு சாப்பிடுவான்.

"சரின்னு சொல்லுடா" செல்வி

"ம்ம்"

அந்த ஐந்து வயது சிறுவன் சூடம் தீரத் தீர புதியதாய் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். முகத்தில் எந்த வித உணர்ச்சியும் தென்படவில்லை.

"அந்த நெட்ட பயலோடையும் சேராதடா..."

"யாரு" நெற்றியை சுருக்கினான்

"அதான் அந்த ஆறு விரலுகாரன்...."

தூக்கி வாரி போட்டது இராஜேந்திரனுக்கு. சீனியர் முத்துவிற்கு ஆறு விரல் இருப்பது உறைத்தது.

"உனக்கு மருந்து வச்சிருக்காங்கடா...போய் முனியன்கிட்ட மருந்தை எடுத்துட்டு வா" என்றபடி மெதுவாக பழைய நிலைக்கு திரும்பினார். மிகவும் களைப்பாக காணப்பட்டார்.

"ஆத்தா என்ன சொல்லுச்சு?" குறிசொல்லி செல்வியிடம் கேட்டார். சாமி வந்து சொல்வது எதுவும் சாமி இறங்கிய பின் குறிசொல்லி கேட்டு அறிவது வழக்கம்.

"மருந்து வச்சிருக்காங்களாம் அத எடுத்துட்டு வரச் சொல்லுச்சு" செல்வி.

"சரி போய் எடுத்துடு வாங்க" என்றபடி முனியனின் விலாசத்தை கொடுத்தனுப்பினார் குறிசொல்லி இராணியம்மா.

"ஆ..... காட்டுப்பா" என்றபடி ஒரு அடி நீள நீல நிறக் குழாயை இராஜேந்திரனின் வாயில் விட்டார் முனியன்.

முனியனின் முகத்தில் உள்ள இரண்டு வெட்டுகளை யாரும் கவனிக்க முடியாதபடி நெற்றியில் வெள்ளையும் சிகப்புமாக திருநீரையும், குங்குமத்தையும் வரைந்திருந்தார். பார்க்க முரட்டு பக்தி பழமாக இருந்தார்.

குழாயை சற்றே சாய்த்து அவன் தலையைப் லேசாக பிடித்து "ஃஊப்ப்ப்ப்ப்ப்..." என்று உறுஞ்சி பின்பு ஐந்தாறு சிறிய கறிய முட்டைகளை தன் வாயில் இருந்து வெளியே துப்பினார்.

"மருந்தை எடுத்தாச்சுப்பா இனி எதுவும் கவலைப்படாத" திருநீரை பூசினார். செல்வி கொடுத்த இருபது ரூபாயை வாங்கி இடுப்பு வேட்டியில் சொருகிக் கொண்டார்.

திரும்புவும் நட்சத்திரத்தின் நடுவே அவன்.

"அடியே உன் மவனுக்கு வச்சிருந்த மருந்தை எடுத்துட்டேண்டி. எனக்கு ஆடு வெட்டி கடா போடுடி. ம்ம்ம்ம்ம்" என்று ஆங்காரமாய் செல்வியிடம் கேட்க ஆரம்பித்தார் குறி சொல்லி.

"சரி செஞ்சுடுறேன். என் பிள்ளய நோவு நொடியில்லாம பார்த்துக்கோ. நீ கேட்டத செய்யிறேன்."அம்மா...தாயீ என்றபடி கன்னத்தில் போட்டுகொண்டாள் செல்வி.

"கடை தண்ணிக்கு போகும் போது பார்த்து போணும்டா. சூதானமா இருந்துக்கடா"-குறிசொல்லி

வேகமாக தலையாட்டினான் இராஜேந்திரன்.

ஒரு டம்ளர் நீரில் சூடம் எரிந்து கொண்டிருந்தது. அது அணையும் வரை சாமி "ஊர்ர்...ம்ம்" என்றபடி பல்லைக் கடித்துக் கொண்டிருந்தது.

இராஜேந்திரன் கண்களை இருக்க மூடி கொண்டான் சாமி அடிக்க போகும் தண்ணீரின் வேகத்தை நினைத்தபடி....

வாசலில் சப்தம்...வேறு ஒரு சிறுவன்
"அத்த அம்மா சீட்டு காசு குட்த்து விட்டுச்சு"

"அந்த மேசையில வச்சுட்டு போடா" என்று சாமி ஆவேசத்துடன் சொன்னதைக் கேட்டு இராஜேந்திரன் கண்களைத் திறந்தான். "சுளீரென்று" மூன்று முறை அவன் முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட்டது .

செல்வி தட்டில் ஐம்பது ரூபாய் வைத்தாள்.

"இப்ப தான் முகம் தெளிவா இருக்கு..."என்றபடி முந்தானையால் முகத்தை தொடைத்தாள் செல்வி. தெளிவிற்கான காரணம் அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை. பஸ் இன்னும் வரவில்லை.

"இப்ப வவுறு வலிக்குதாடா"

"இல்லம்மா" என்றான் வயிற்றைப் பிடித்தபடி.

வயிறு வலித்தது.......

-------------------------------------------------------------------------------------------------

( இது "'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு'ற்காக உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட என் முதல் சிறுகதை )
ஞானும், தற்கொலையும் பின்னே கொலையும்அப்போது சென்னைக்கு வந்து மூன்று தினங்கள் ஆகிவிட்டது. விடுமுறைக்காக சென்னை வந்ததிலிருந்து அன்று ரொம்ப போர் அடித்தது. கடந்த இரண்டு தினங்களாக அந்த விபரீத எண்ணம் ஆசையாக மனதில் வந்து சென்றது. இரவு 9 மணி இருக்கும் அப்போது. இது தவறென்று தெரிகிறது. ஆனாலும் மனது கேட்கவில்லை.

தனியாக இருந்தால் இந்த மாதிரி வீபரீத எண்ணம் தோன்றும். ஆனால் சரியான வழிகாட்டி இருந்தால் இதே எண்ணம் சில சமயம் நல்லவிதமாக முடியும். வலைகளில் பல பெரியவர்கள் இத்தொண்டினை ஆற்றி வருகிறார்கள்.

இவ்வெண்ணத்தைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. சொல்லத்தோன்றவும் இல்லை. இன்னும் நான்கு தினங்களில் அண்ணனின் கல்யாணம் இருந்ததால் வீட்டில் இதை சொல்ல மிகவும் தயங்கினேன். இதைச் சொல்லி அவர்களை கோபப்படுத்தவும் விரும்பவில்லை. பாவம் அவர்களுக்கு கல்யாண டென்ஷன் வேறு.

எப்பொழுதும் ஒரே அலைவரிசை கொண்ட எனது நண்பர்கள் இரண்டு பேரை தொடர்புகொண்டு இந்த எண்ணத்தைப் பற்றி கேட்ட பொழுது அவர்களுக்கும் இதே போன்று தோன்றியது ஆச்சர்யம் அளிக்கவில்லை எனக்கு. ஆனால் ஏற்கனவே இதில் வலி தாங்காமல் பாதியில் திருந்தி வந்த அனுபவம் வினோத்திற்கு உண்டு.

எச்சரிக்கை செய்தான். நாங்கள் கேட்கவில்லை. மாறாக அவனையும் மாற்ற முயற்சி செய்தோம். வெற்றியும் பெற்றோம்.

பின்பு ஆகும் செலவைப் பற்றி அப்போது கவலைப்படாமல் எங்கு எப்படி என்பதைப் பற்றி ஆலோசிக்க ஆரம்பித்தோம். அதை செயல்படுத்தும் முன் வலையில் அதனைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நான் கூறிய யோசனையை புறக்கணித்த நண்பன் அதைப் படிப்பதால் சுவாரஸியம் குறைந்து விடும் என்றான். ஆமோதித்த மற்றவர்கள் பின்னால் தாங்கள் செய்த மிகப்பெரிய தவறை உணர்ந்தது வேறு விசயம்.

பின்பு அடுத்தடுத்த காரியங்களை செய்யதொடங்கினோம். ஆளுக்கு எழுபத்தைந்து ரூபாய் மட்டுமே செலவானது. நண்பர்கள் சில சில்லரைகள் கொடுத்து சிகரெட் வாங்கியது எனக்கு சிரிப்பை வரவழைக்கவில்லை.

மணி 9.45யளவில் தொடங்கியது எங்கள் போராட்டம்.....ஏஸி அறையிலும் வியர்க்க ஆரப்பித்தது.

கிட்டதட்ட கோழியின் கழுத்தை அறுப்பது போல, நான்கு பேருக்கும் வலி. சூடான இரத்தம் காதின் வழியேயும், கண்ணின் வழியேயும் வழிவதைப் போல உணரமுடிந்ததே தவிர காண முடியவில்லை.

முனங்கல் சத்தம் காதின் வழியே, நிசப்சத்தில், நின்ற மழையின் சாட்சியாக இலையிலிருந்து வழிந்து விழும் கடைசி சொட்டின் சத்தமாக.....(டேய் இராசா சென்ஷி கூட சேராதன்னு சொன்னா கேட்டியா? வரலைன்னா விடுடா).

நேரம் ஆகி கொண்டிருந்தது. மூச்சு முட்டியது. வலி பொறுக்க முடியாமல் கத்தினேன். என்னைப் போலவே நண்பர்களும் கத்த ஆரம்பித்தனர்.

ங்கொய்யால டேய்ய் படமாடா அது? திரிஷாவை மட்டும் கழுத்த அறுத்து கொல்லடா நீங்க. எங்களையும் சேர்த்து தான்.

"சர்வம்"-தற்கொலைக்கு சமம்

தெரிந்தே செய்ததால் அதை தற்கொலைக்கு சமமாக எடுத்து கொண்டேன். ஆனால் எதுவும் தெரியாமல் "இராஜாதி இராஜா" சென்றது என்னை கொல்ல நடந்த முயற்சி அல்லவா?

இதய பலகீனமானவர்கள் பார்க்க வேண்டாம் என்று கீழே சிறியதாக மண்டை ஓடுடன் ஒரு எச்சரிக்கை போடவில்லையென்றாலும் வெறும் எழுத்துக்கலாளவது எழுதியிருக்கலாம் அல்லவா?

இண்டெர்நெட்டின் அவசியத்தை நன்கு உணர்ந்தேன் அப்போது. தொடர்ந்து ஒரு மாதமாக அதை உபயோகப்படுத்தாமல் இருப்பதன் தாக்கத்தை உணர்ந்தேன். அதுவும் "கேபிள் சங்கரின்" அவசியத்தையும் உணர்ந்தேன்.

இதற்கு சென்ஷியின் கவிதையே பரவாயில்லை என்று உணர்த்தியது இந்த இரண்டு படங்கள்.

32 பல்லையும் உடைப்பேன்!

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

நான் ஆதவன்.. முதல்ல சொந்த பேர்ல தான் ஆரம்பிச்சேன். அப்படி ஒருத்தர் இருக்குறதைப் அப்ப பார்த்ததால. ஆதவன்ன்னு வச்சேன் ஆனா அப்படியும் ஆள் நிறைய பேரு இருக்குறது அங்கங்க பின்னூட்டத்தில தெரிஞ்சுது. உடனே "நான் ஆதவன்"ன்னு மாத்திகிட்டேன். அப்படியும் யாராவது இருந்தா "நான்தான்டா ஆதவன்" மாத்திரலாம்ன்னு நினைச்சேன். ஆனா உங்க அதிர்ஷ்டம் அப்படி ஆகல.

நிஜப்பெயர்: "சூர்யகுமார்" எங்கம்மா வைச்ச பெயர். எல்லாரும் "சூர்யா"ன்னு கூப்பிடுவாங்க. "நேருக்கு நேர்" படம் வர்ர வரைக்கும் எனக்கு அந்த பேரு கூட பிடிக்காம தான் இருந்தது.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

கடைசியா??????? ம்ம்ம் ஞாபகம் வந்திடுச்சு. என் அக்கா பையன் வேதாந்த் கூட விளையாடும் போது கண்ணை மூடிகிட்டு நான் சும்மானாகாச்சிக்கும் அழ அவன் சீரியஸா அழ அடுப்படியில இருந்த எங்கக்கா வந்து இரண்டு பேருக்கும் என்ன ஆச்சு கண்ணு கலங்க...... மாடியிலருந்து வந்த எங்கம்மா "அய்யய்யோ என்னாச்சு" பதற...... வெளியில பேப்பர் படிச்சுட்டு இருந்த எங்கப்பா "என்ன அங்க சத்தம்"ன்னு தழுதழுத்த குரல்ல கேட்டுட்டு ஓடி வர...........

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

நல்லா முத்து முத்தா இருக்குற கையெழுத்து யாருக்காவது பிடிக்காம போகுமா?. இந்த பதிவ படிக்கிற நீங்களே சொல்லுங்க எப்படி இருக்கு என் கையெழுத்து?

எனக்கு பிடிச்சுதா இல்லையான்றத விட என் ஸ்கூல்ல என் பின்னால உட்கார்ந்து பரிட்சை எழுதிகிட்டுருந்த விஜய்க்கு சுத்தமா பிடிக்காது.

4. பிடித்த மதிய உணவு என்ன?

மிளகாய் கிள்ளி சாம்பார் மற்றும் மீன் வறுவல் (யோவ் சென்ஷி என்னையா கேள்வி இது?. இதெல்லாம் கேட்டுட்டு வீட்டுக்கு வரும் போது இதெல்லாம் செஞ்சு போடனும் ஆமா. கைப்புள்ள அண்ணே உங்களுக்கும் தான்)


5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

எனக்கென்ன தலையெழுத்தா? தெரிஞ்சே தப்பு செய்யுறதுக்கு...

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கூட யார் குளிக்கிறாங்கன்றத பொருத்து இருக்குது.....


7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

ஆம்பிள்ளையா இருந்தா தலைமுடி பார்ப்பேன். அதாவது நம்மள விட எவ்வளவு முடி கொட்டியிருக்குன்னு பார்ப்பேன்.

பெண்களா இருந்தா வேற வழியே இல்லை. கண்களை தான்....(இது என் தோழி சொல்லிக்கொடுத்தது)

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம் இரகசியம் காப்பது. பாருங்க காலேஜ் பாத்ரூம்ல சீனியரைப் பத்தி கேவலமா எழுதுனது என் பிரண்டு இராஜேந்திரன் தான்ங்கிறத அவன்கிட்ட பண்ணின சத்தியத்தின் படி இதுவரை யார்கிட்டேயும் சொல்லாம காப்பாத்தி வந்திருக்கிறேன்.

ஸ்கூல்ல சமூக அறிவியல் டீச்சர் ஷீலா வரும் போது "ஐ லவ் யூ"ன்னு போர்டுல எழுதி போட்ட என் உயிர் நண்பன் செல்வகுமாரை இதுவரை யார்கூடவும் காட்டி கொடுத்ததே இல்லை. இனிமேலும் மாட்டேன். ( இதுல பாருங்க இதே கேள்வி என் ஸ்கூல் பத்தாவது முடியும் போது கேட்டாங்க. இதே பதில தான் சொன்னேன். ஆனா பாருங்க என் ஃபிரண்டுக்கு மரண அடி கிடைச்சுது. ஏன்னு தான் தெரியல)


பிடிக்காத விஷயம்ன்னா யாராவது "உன்கிட்ட பிடிச்ச விஷயம் என்ன?" "பிடிக்காத விஷயம் என்ன?"ன்னு கேட்டா எனக்கு பிடிக்கவே பிடிக்காது.


9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஒரு நல்ல சரி பாதியா பார்த்து பேசி முடிச்சு கொடுத்தீங்கன்னா அதுக்கப்பறம் இந்த கேள்விக்கு பதில் சொல்லுவேன்

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

முதல் காதலி, முதல் நண்பன் பார்த்தசாரதி மற்றும் அக்கா பையன் வேதாந்த்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

@3#)*%^**(#)!@!#)(*^&^%$%$

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

"க@#$(*)) எனக்கு லீவு கொடுக்க மாட்டேன்ன்னு சொல்லிட்டானே. பட்டியிண்ட மோனு !@#$)($%^%^%" என ஒரு சேட்டன் எனது மானேஜரை "ரெட் லேபிளி"ன் உதவியோடு வசை பாடி கொண்டிருக்கிறார் இப்போது.


13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பச்சை கலர். எங்கப்பா என்னைய பெரிய கலெக்டர் ஆக்கி பச்சை கலர் பேனாவுல ஊருக்கே வளைச்சு வளைச்சு கையெழுத்து போடனும்ன்னு ஆசைப்பட்டாரு. அத எப்படியாவது நிறைவேத்தனும்.

14. பிடித்த மணம்?

தமிழ்மணம் (யப்பா இப்பவாவது நட்சத்திரமாக்குங்கப்பா)

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

ஆசிப் அண்ணாச்சி: தொடர் பதிவு மற்றும் விருதுன்னா மத்தவங்க மனசு கோணாம அப்படியே ஃபாலோ பண்ணுவாரு.

அப்புறம் என் மச்சானையும் கூப்பிட்டுகிறேங்க. இந்த தடவை பாடி ஸ்ப்ரேவும், செண்டும் வாங்கிட்டு போலன்னு ரொம்ப கோவிச்சுகிட்டாரு. அதுனால இவரை சமாதான படுத்த இவரையும் சேர்த்துகிறேங்க.

அவர் பதிவரெல்லாம் கிடையாதுங்க. இந்த கேள்வியெல்லாம் பிரிண்ட் எடுத்து பதில் வாங்கிட்டு நானே ஒரு பதிவா போட்டுறேன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

இப்படி திடீர்ன்னு கேட்டா எப்படி ஒரு இரண்டு நாளாவது டைம் கொடுங்க படிச்சுட்டு சொல்றேன்.....சரி சரி சொல்றேன்

சென்ஷி எழுதுற கதைகள் எல்லாம் பிடிக்கும். முக்கியமா புனைவுகள்.

கைப்புள்ள அண்ணே அவர் மகளுக்கு எழுதிய உருக்கமான கடிதம் ரொம்ப பிடிக்கும்.

17. பிடித்த விளையாட்டு?

ஐஸ் பாய், ஏழு கல் மற்றும் குழிப்பந்து (தெரியாதவங்க மெட்ராஸ் ஆளுங்க கிட்ட கேட்டுக்கங்கப்பா)


18. கண்ணாடி அணிபவரா?

இல்லப்பா

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

பார்க்கிற நம்மள முட்டாபயலுகன்னு நினைக்க வைக்காத படங்கள் பிடிக்கும்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

என் நேரம் சென்னையில போய் சனியனை காசு கொடுத்து பார்க்கனும்ன்னு இருந்திருக்கு "இராஜாதி ராஜா"


21. பிடித்த பருவ காலம் எது?

இளவேனில்

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

லிவிங் ஸ்மைல் வித்யாவின் "நான் வித்யா", எஸ் ராவின் "நெடுங்குருதி"


23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

கைப்புள்ள அண்ணே மட்டும் கூப்பிடாம சென்ஷி மட்டும் கூப்பிட்டிருந்தாருன்னா இந்த கேள்விக்கு பதில் வேற மாதிரி இருந்திருக்கும். தப்பிச்சாரு சென்ஷி.... படத்தை மாத்துறதேயில்லை....ஒரு வருஷமாச்சு


24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

அக்கா (சின்ன) பையன் "யா..யா...யா..யா மாம்ம்மா"ன்னு கத்திகிட்டே சொல்றது இப்போதைக்கு ரொம்ப பிடிச்சது.

அக்கா (பெரிய) பையன் "ஏஏஏஏஏ மாமான்னு" கத்திகிட்டே தூங்கிட்டிருக்கிற என் மேல விழுறது இப்போதைக்கு பிடிக்காத சத்தம்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

கிஷ் ஐலேண்ட் (ஈரான்)

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சொல்லமாட்டேன் போ..


27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஏற்றுக்கொள்ள முடியாத விசயத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் போது என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

இருந்தது. பால் தினகர் கிட்ட சொல்லி ஓட்ட வச்சாச்சு

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மூணாறு (கல்யாணம் ஆகும் வரை)

காசி (ஆனதுக்கப்பறம்)

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

எவனும் எந்த கேள்வியும் கேட்ககூடாது.....அப்படி வாழனும்ன்னு ஆசை.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

கல்யாணம்

அட அது ஆனப்பொறகு பதில் சொல்றேன்னு சொன்னேன்

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

சென்ஷி கவிதை மாதிரி சிக்கலா இல்லாம ஸ்ரீமதி கவிதை மாதிரி ஈஸியாகவும் இல்லாம, ஜ்யோராம் கவிதை மாதிரி "கிக்"ன்னு வாழனும்
----------------------------------------------------------------------------------------------------
33. தற்போதைய ஆசை என்ன?

சென்ஷியை ஒரு ஒரு கேள்விக்கும் ஒரு பல்லுன்னு நுப்பத்தி இரண்டு பல்லையும் உடைக்கணும்.

சென்னையை கடந்த "புயல்"

ஒன்னரை மாசமா பதிவேயே காணோம்? என்னாச்சு உங்களுக்கு?ன்னு எக்கசக்க பெண் இரசிகைகளும், நண்பர்களும் கேட்டு மெயில் அனுப்பியிருந்தாங்கன்னு சொல்ல ஆசை தான். ஆனா ஒரு பய கண்டுக்கல.

பரவாயில்லை விடுடா ஆதவா. நாமலெல்லாம் இத எதிர்பார்த்தா எழுதிகிட்டுயிருக்கோம் அப்படின்னு மனசை தேத்திக்க வேண்டியது தான். ஏன்னா இதையெல்லாம் எதிர்பார்த்து எழுத்து துறைக்கு என்னைய அர்பணிக்கல..

ஒரு மாசம் மதுரை, சென்னைன்னு அலைச்சல். ஒரு நாள்ல மதுரை பதிவர் சந்திப்பையும், இரண்டு நாள்ல பதிவர்களின் உலக திரைப்பட விழாவையும் கலந்துக்க முடியாம இங்கேயும் அங்கேயும் இடம் மாறி இருந்துட்டேன்.
------------------------------------------------------------------------------------------------------------

ஒரே ஆறுதல் பதிவர் பொன்ஸ் கல்யாணத்தில் தல பாலபாரதியையும், முத்துலட்சுமி மேடத்தையும், அயன் கார்த்திக்கையும் பார்த்தது தான். கல்யாணம் மிகச் சிறப்பாக நடந்தது.

இந்த போட்டோவை எடுத்தது வருங்கால பி.சி.ஸ்ரீராம்... நமது முத்துலட்சுமி மேடத்தின் புதல்வர் சபரி அவர்கள்.

தல பாலபாரதியைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்ல. எல்லாருக்கும் அவரோட கேரக்டர் தெரிஞ்சிருக்கும். சூரியனுக்கு டார்ச் அடிச்ச மாதிரி நான் எதுவும் சொல்ல வேண்டாம். அதேபோல் தான் முத்துலட்சுமி மேடம்.

இளைய பல்லவனோட தொலைபேசியில் மட்டும் உரையாடினேன். பார்க்க முடியாதது வருத்தமே :(
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு வருஷம் கண்ணும் கருத்துமா வெயில்ல வெளிய போகாம, ஏஸியிலேயே இருந்து கொஞ்சம் கலரை ஏத்தி ஊருக்கு வந்தா......பக்கி அங்க "அக்னி நட்சத்திர"மாமே.

ஒரே நாள் தான் வெளியில சுத்துனேன். என் ஒரிஜினல் கலருக்கு வந்துட்டேன். என்ன செய்ய ஊர்குருவி பருந்தாகுமா??
-------------------------------------------------------------------------------------------------------------
ஒன்னுமே எழுதாம இருந்த இந்த ஒன்னரை மாசத்தில மொத்தம் 15 பாலோவர்ஸ்க்கும் மேல சேர்ந்திட்டாங்க. இத ஒரு பதிவர் கிட்ட சொன்னதுக்கு....

நீங்க எழுதாம இருந்தீங்கன்னா நூறு பேர் வந்திருவாங்க அதுனால எழுதுறத உடனே நிறுத்துங்கன்னு சொன்னாரு. என்னா வில்லத்தனம்???
Related Posts with Thumbnails