முத்துக் குமார் அவர்களின் கடைசி உரை ::

முத்துக் குமார் அவர்களின் கடைசி உரை ::

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

கண்ணீரை அடக்க முடியவில்லை தோழா...


கண்ணீரை அடக்க முடியவில்லை தோழா...

உன் கடிதத்தை முழுமையாக படித்து முடித்த போது கண்ணீரை அடக்க முடியவில்லை தோழா. உன் போல் எத்தனை உயிர்களை இழக்க வேண்டுமோ தெரியவில்லை. சில சோமாரிகளினாலும், அம்மா என்ற புனித வார்த்தைக்கே கொஞ்சமும் பொருத்தமில்லாதவர்களாலும், பத்திரிக்கை நடத்தும் சில மதவாதிகளாலும், கேடுகட்ட மத்திய அரசாலும் ஈழத்தில் இழந்தது மட்டுமல்லாது உன்னையும் இழந்தோமே தோழா..

நெஞ்சு வெம்முகிறது தோழா. சோனியாவிற்கு "பிரபாகரனின்" இரத்தம் பழிக்கு பழியாக வேண்டும் என்றால், தனி ஈழம் கிடைக்குமென்றால் அதையும் கேட்காமலே கொடுப்பானே பிரபாகரன். இன்னும் எவ்வளவு இரத்தம் வேண்டும் சோனியாவிற்கு....கொடுக்க தயாராக இருக்கிறோம் மேலும்....

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் தன் தொப்புள்கொடி உறவைமட்டுமல்லாது தன் உயிரையே எடுக்கிறதே. இன்னும் எத்தனை துன்பங்களை அனுபவிக்க வேண்டுமோ. உன் உயிர் கடைசியாக இருக்கட்டும் ஈழத்திற்கும் சேர்த்து....

தன் குடும்பத்தின் நலனுக்காக டெல்லி வரை ஓயாமல் பயணம் செய்யும் தமிழின தலைவருக்கு உன் உயிருக்காக ஒரு இரங்கற்பா மட்டும் எழுத நேரம் கிடைக்கும் தோழா.
வெட்கமே இல்லாமல் தமிழக அரசியல் கட்சிகள் அடுத்த தேர்தலுக்காக கூட்டணியை மாத்த தயாராக இருக்கும்.

காங்கிரஸ் சுயமரியாதைக்காரனுக்கு உன் உயிர் போனது உறைக்காது தோழா. மூச்சுக்கு மூச்சு காமராஜர் ஆட்சி அமைக்க சபதம் எடுக்கும் அவனுக்கு காமராஜர் இருந்தால் ஒட்டு மொத்த ஈழத்தமிழனின் நிலையே மாற்றி இருப்பார் என்று உறைக்காது தோழா. அவனுக்கு அடுத்தவனின் காலைப் பிடித்து வாழவே தெரியும் உன்னை போல் ரோஷம் அவனுக்கு வராது. சூடு சொரனை கிடையாது.

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க உனக்கு நடிக்க வரவில்லையே தோழா. வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்த உனக்கு தெரியவில்லையே தோழா. கண்ணீர் விட்டு கவிதை எழுத உனக்கு தெரியவில்லையே தோழா. கேவலம் எங்களைப் போல் கையாலாகாதனத்தைக் கண்டு தினமும் கண்ணீர் சிந்த தெரியவில்லையே தோழா.

மானங்கெட்ட, ரோஷங்கெட்ட இன்னும் மூன்று மாத காலம் இருக்கும் மத்திய அரசே.....அடுத்து நீ கூட்டணி வைக்கும் கட்சி கண்டிப்பாக தமிழகத்தில் வர போவதில்லை.

கடைசியாக கலைஞரே..... சிறிய மதவாத கட்சியான பி.ஜே.பிக்கு உள்ள தைரியம், ரோஷம் உங்கள் கட்சிக்கு இல்லையே. இந்த உயிருக்கு உங்கள் பதில் என்ன????
மீண்டும் மேனன்மார்களையும் நாயர்களையும் பேச்சுவார்த்தைக்கு அனுப்ப போகிறீர்களா???? தமிழனை மதிக்காத ஒருவனை நடுநிலை பேச்சாளனாக அனுப்ப போகிறீர்களா? எப்படி உறங்க முடிகிறது உங்களால்???? உங்களை இன்னமும் நம்பிகொண்டிருக்கிறோமே, ஆறு கோடி தமிழனும் உயிர் விட வேண்டுமா??

"எந்திரன்" - கசிந்த கதை.. டென்ஷனாகும் சங்கர்

"தேவலோகத்துக்கு ஒரு இந்திரன்டா

பூலோகத்துக்கு இந்த எந்திரன்டா"


"எந்திரன்" கதையை ஆளாக்கு பிய்த்து கொண்டிருக்க, நம்ம பங்குக்கு ஒரு கதையை ரெடி செய்துட்டேன். பின்ன என்ன சூப்பர் ஸ்டாருக்கெல்லாம் நாம கதை சொல்ல இத விட்டா வேற நல்ல சான்ஸ் கிடைக்குமா என்னா?
நாசாவில் செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சில ஈடுபட்டிருக்கிற ஒரு மிகப்பெரிய டீமுக்கு இந்திரன் (ரஜினி) தான் தலைவர்.

செவ்வாயில முதலில் அனுப்பிய விண்கலம் மக்கர் செய்ய இங்கிருக்க டீம் என்ன செய்யிறதுன்னு தெரியாம முழிக்க, அப்ப பிரச்சனை ஆன உடனே விண்கலத்தில இருக்கிற ஒரு சின்ன பெட்டி கைகால் எல்லாம் கிராபிக்ஸ் புண்ணியத்தில முளைச்சு ஒரு முழு மனுசனாகி பிரச்சனையை சரி செய்ய தொடங்க, இங்க இருக்கிற டீமுக்கு யார் அதுன்னு தெரியல. முகம் தெரிஞ்ச பின்னாடி எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி. அது டீம் லீடர் இந்திரன். அவர் யாருக்கும் தெரியாம இந்த மாதிரி பிரச்சனையை சமாளிக்க அவரைப் போலவே ஒரு ரோபாவை விண்கலத்தொடு அனுப்பி வைத்திருக்கிறார்.

ஒரு வெள்ளைகாரி "ஹூ இஸ் திஸ்"ன்னு கேட்க,

நம்ம விவேக் ஸ்டைலாக கண்ணாடிய தூக்கிட்டு "திஸ் இஸ் எந்திரன்"னு சொல்றாரு.

எல்லோரும் சந்தோஷத்தோடு "எந்திரன்" கத்த ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இந்திரனோ மிகவும் சோகமாக நிற்கிறார். நண்பர் விவேக் வந்து காரணம் கேட்கிறார். இன்று அவரது பெற்றோரின் நினைவு நாள்.மிகப்பெரிய கோடீஸ்வரன் குடும்பத்தில பிறந்த அவர் சின்ன வயசிலேயே பெற்றோரை இழந்து வீட்டு வேலைக்காரியின் அரவணைப்புல வளர்ந்து நல்லா படிஞ்சு இப்ப நாசாவில வேலை. இன்று அவரை வளர்த்த தாயைப் பார்க்க(வேலைக்காரி) விரும்புவதாக கூறுகிறார்.

உடனே இருவரும் அவர்களின் உயர் அதிகாரியை சந்தித்து அனுமதி கேட்க, அடுத்த விண்கலம் அனுப்ப இரண்டு மாத காலம் மட்டுமே இருப்பதால் இரண்டு வார விடுமுறை மட்டும் தருகிறார்.

இருவரும் இந்தியாவிற்கு செல்கின்றனர். அங்கு அவரது வளர்ப்பு தாய் தேடி அலைகிறார்.

இங்கு ஒரு மிகவும் பின் தங்கிய கிராமத்தில் தாயைக் கண்டுபிடிக்கிறார்.
தாயின் அண்ணன் மகளான ஐஸ் அங்கு ஏழைகளுக்கான ஒரு பள்ளிக்கூடம் நடத்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்திரன் தனது தாயை அமெரிக்காவிற்கு அழைக்கிறார். ஆனால் அவரது அண்ணன் மகளை விட்டு வரமறுக்கிறார். ஐஸ்ஸூம் அத்தையை இந்திரனிடம் விட மறுக்கிறார். ஐஸ்ஸூக்கு கல்யாணம் செய்துவிட்டு வருகிறேன் என்கிறார் தாய். ஐஸ் இந்த கிராமத்தில் எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு வந்தால் நான் கல்யாணம் செய்து கொள்வேன் என்கிறார்.

ஐஸ்ஸூன் கல்யாணத்தை நடத்த மாப்பிள்ளை பார்க்கிறார். மேலும் பள்ளிக்கு குழந்தைகளை சேர்க்க வீடு வீடாக சென்று மக்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். குழந்தைகளின் கல்வி மிக அவசியம் என எடுத்துரைக்கிறார். எவரும் வர வில்லை. காரணத்தை ஆராய்கிறார்.
ஜாதி வேற்றுமையால் கிராமத்தில் கீழ்ஜாதி மக்களுக்கு கல்வியறிவு கிடைக்காமல் இருக்கிறது. மதத்தினால் மூட நம்பிக்கைகளுக்கு அடிமையாகி இருக்கின்றனர். அந்த கிராமத்தில் மின்சாரவசதிகூட இல்லை.

எல்லாம் கண்டு மனம் மிகவும் நொந்து கொள்கிறார். இதற்கெல்லாம் அந்த ஊர் அரசியல் வாதியே காரணம் என்பதை கண்டு பிடிக்கிறார். அரசியல் வாதியால் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறார். உதவிக்கு விண்கலத்திலிருந்து வந்த அவரது ரோபோவை அமெரிக்காவிலிருந்து அழைக்கிறார். அது மனிதனாக, மிருகமாக, பொருளாக மாறி அமெரிக்க போலிஸை ஏமாற்றி சென்னைக்கு வருகிறது.ஒரு கோளாறினால் இந்திரனுக்கும் எந்திரனுக்கும் உள்ள தொடர்பு நின்று போகிறது. சென்னையில் ரோபோவை இந்திரன் என நினைத்து அரசியல் வாதிகளின் ஆதரவு கும்பல் கொலை செய்ய முயற்சி செய்கிறது. அதை ரோபோ முறியடிக்க விசயம் பெரிதாகிறது.

அங்கு கிராமத்தில் தனது அறிவாலும் பணத்தாலும் ஊரிலுள்ள மலையின் ஊற்றிலிருந்து மின்சாரம் எடுக்க முயற்சி செய்கிறார். எல்லோரும் சிரிக்கிறார்கள். கடும் முயற்சிக்கிடையே மின்சாரம் கிடைக்கிறது. எல்லோருக்கும் இந்திரனை பிடித்து போகிறது. இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார். ஜாதி வேற்றுமையை தன் அறிவாலும், திறையாலும் முற்றிலும் ஒழிக்கிறார். எல்லோரும் ஒற்றுமையாய் வாழத்தொடங்குகிறார்கள்.

ஐஸ்ஸூக்கும் இந்திரன் மேல் கோடம்பாக்கம் சூத்திரங்களுக்குட்பட்டு அவரின் நல்ல மனதை கண்டு காதல் மலர்கிறது.

நாசா தலைமை விஞ்ஞானி ஒரு மாதம் ஆகியதால் இந்திரனை உடனே திரும்பி வருமாறு அழைக்கிறார். இந்திரன் இரண்டு நாள் டைம் கேட்கிறார்.

இதனிடையே சென்னையில் இந்திரனை தேடி எந்திரன் அலைகிறான். அவனை அரசியல் வாதிகள் துரத்த க்ராபிக்ஸ் உதவிடன் கடும் சண்டை நடக்கிறது. அரசியல் வாதிகளின் ஊழலை மீடியாவின் உதவியுடன் நாடு முழுதும் எந்திரன் அறியச் செய்கிறான். யாருக்கும் எந்திரன் ரோபோ என்று தெரியவில்லை.

ஐஸ் மற்றும் தாயை அமெரிக்காவிற்கு அழைக்கிறான் இந்திரன். ஆனால் ஐஸ் இந்தியாவை விட்டு வரமாட்டேன் என்கிறார். இந்தியாவில் ஏழை குழந்தகளுக்காக பள்ளி ஆரம்பிக்க போவதாக கூறி கண்ணீருடன் வர மறுக்கிறார். அது அவர் மனதை மாற்றுகிறது.

இந்திரன், ரோபோ மற்றும் விவேக் மட்டும் அமெரிக்காவிற்கு வந்து அந்த அடுத்த விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துகிறார்கள்.

இந்தியாவில் உள்ள ஒரு சிறு கிராமத்தை மட்டும் தான் தன்னால் மாற்ற முடிந்தது ஆனால் இந்தியா முழுதும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நாசா வேலையை விட்டு இந்தியாவில் இஸ்ரோவில் பணி செய்ய முடிவெடுக்கிறார்.

இஸ்ரோவில் பணி செய்து கொண்டே ரோபோவின் உதவியோடு பல கிராமங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். ஐஸ்ஸை கரம் பிடிக்கிறார். தாயுடன் சந்தோஷமாக வாழ படம் முடிகிறது.

இடையில் விவேக்கின் பகுத்தறிவு பிரச்சார காமெடியும், கிராமத்தில் மக்களுக்காக ரஜினி பாடம் பகுத்தறிவு பாடலும், எந்திரன் அரசியல் வாதிகளை ஏமாற்றும் காமெடியும் சேர்ந்து இரண்டரை மணி நேர ஜனரஞ்சனமான படமாக அனைத்து ரஜினி ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் என அனைவரையும் கவரும் படமாக இருக்கும்.

இந்த கதையை கேட்டு இத மிஸ் பண்ணிட்டோம்மேன்னு சங்கர் டென்ஷனாகலாம். இப்ப ஒன்னும் கெட்டு போகல. அவரோட அடுத்த படத்துக்கும் என்கிட்ட கதை ரெடி. (தலைப்புக்கு லின்ங் கொடுத்தாச்சு!)

டிஸ்கி1: இந்த படத்தின் மெயின் கதையை "ஸ்வதேஸ்" என்ற ஹிந்தி படத்திலிருந்து எடுத்துள்ளேன் என சரியாக பின்னூட்டம் இடுபவர்களுக்கு "வில்லு" படத்தின் முதல் பாதி பட டிஸ்க் பரிசாக கொடுக்கப்படும்.

டிஸ்கி2: தவறான பதில்களுக்கு "வில்லு" படத்தின் இரண்டாம் பாதி பட டிஸ்க் அனுப்பி வைக்க படம்.

டிஸ்கி3: எச்சரிக்கை: கலாய்த்து பின்னூட்டம் இடுபவர்கள் "செந்தழல் ரவி"ன் முன்னிறுத்தி "பார்பன ஜாதி"யைப் பற்றி உயர்வாக பேச வைக்கப்படுவர்.ஒரு பிரபலத்தின் (வெளிவராத) பேட்டி

பிரபலம்: "அடடே வாங்க வாங்க. நல்லாயிருக்கீங்களா? என்ன இந்த பக்கம்?"


நிருபர் : "நல்லாயிருக்கேன். உங்களை பார்க்கலாம்னு தான்.... உங்களோட இன்னொரு இடத்தையும் பிடிச்சுட்டாங்களாமே?
உங்க இனத்தையே விரட்டிவிட்டுட்டாங்களாமே? அத பத்தி பேட்டியெடுக்கலாம்ன்னு வந்தேன்"


"தவறை திருத்திக்கொள்ளுங்கள். பாதி பேரை கொன்னுருக்காங்க. மீதி தப்பி பிழைச்சவங்க இங்க ஓடி வந்திருக்காங்க"


"என்னது கொன்னுருகாங்களா? நாங்க கேட்ட வரைக்கும் அவுங்க உங்களை பாதுகாப்பா தான் வச்சிருந்ததா சொல்றாங்க"


"பாதுகாப்பா?? எங்களுக்கா?? நீங்க சொல்றத கேட்டா சிரிப்பு தான் வருது. ஆனா சிரிக்க கூட முடியாத நிலைமைல
நாங்க இருக்கோம்"


"இது மட்டும் உலக நாடுகளுக்கு தெரிஞ்சா அவுங்க சும்மா இருக்க மாட்டாங்களே"


"எங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலயே. இத்தனை வருஷமா இந்த அநியாயம் நடந்திட்டு தான் இருக்குது
அப்பெல்லாம் எங்க போச்சு உங்க உலகநாடுகள். கொத்து கொத்தா கொன்னுட்டு இருக்கும் போது எங்க போச்சு உங்க
உலகநாடுகள். பேருக்கு தான் சட்டம்னு இருக்கு அத யாராவது மதிக்கிறாங்களா?"


"சும்மா கொத்து கொத்தா கொன்னுட்டு இருந்தாங்கன்னு சொல்றீங்களே. நீங்களே உங்களுக்குள்ள அடிச்சுட்டு செத்துப்
போனதை சொல்ல மாட்டேங்கிறீங்களே"


"இது சகோதரச்சண்டை, நாங்க அடிச்சுகிட்டு சாவோம் பின்னாடி ஒன்னாகிடுவோம் அத பத்தி உங்களுக்கு என்ன?
உலகத்தில எங்க தான் சண்டை இல்ல. அது இயற்கை. நாங்க அடிச்சுகிறத வச்சு நீங்க எங்களை கொல்லுவீங்களா?"


"நீங்க மட்டும் அவுங்கள கொல்றீங்க. எத்தனை அப்பாவி உயிர்கள் போயிருக்கு தெரியுமா? அதுவும் அவுங்க இடத்தில"


"என்னது அவுங்க இடமா?? உங்களுக்கு வரலாறு தெரியலன்னு நினைக்கிறேன். உங்களுக்கு மட்டுமில்ல இப்ப இருக்கிற
தலைமுறைக்கே வரலாறு தெரியமாட்டேங்குது. இந்த மண்ணில முதல்ல வாழ ஆரம்பிச்சது நாங்க தான்.
ஆனா இப்ப மெஜாரட்டிய வச்சு முடிவு பண்றீங்க. இந்த மண்ணின் உண்மையான மைந்தர்கள் நாங்க தான்."


"உங்க ஆளுங்க சில பேர் உங்ககிட்ட இருந்து பிரிஞ்சு போய் அவுங்கிட்ட நல்ல வசதியோடும், நிம்மதியாகவும் இருக்கிறதா
சொல்றாங்களே"


"அவுங்க வாழ்றது இராஜ வாழ்க்கைன்னு நினைச்சுட்டு பேட்டி கொடுத்து இருக்காங்க. அது நிரந்தரம் இல்ல. உண்மைய
சொல்லனும்னா இப்ப தான் அவுங்க ஆபத்தில இருக்காங்க. அவுங்க ஒவ்வொரு அசைவையும் எதிரிங்க கவனிச்சிட்டு தான்
இருக்காங்க. அவுங்கள விட்டு விலகி வேற எங்காவது போகும் போது உயிருக்கே ஆபத்து ஏற்படும்னு தெரியல.
ஒரு இராஜ கைதி வாழ்கை தான் அவுங்களது இப்ப"


"சரி அவுங்க தான் அவுங்க சட்டதிட்டதிற்கு உட்பட்டு உங்கள வாழ அனுமதிக்கிறாங்க. அந்த சட்டத்தில உங்களுக்கு
போதிய அளவு பாதுகாப்பும் மரியாதையும் கிடைக்குது, அப்புறம் ஏன் முரண்டுபிடிக்கிறீங்க"


"நீங்க தெரிஞ்சு தான் இந்த கேள்வியை கேட்கிறீங்களான்னு தெரியல. அதாவது ஒரு அடிமை மாதிரி அவுங்க சொல்றத
கேட்டுட்டு வாழ சொல்றீங்க. அவுங்க பிச்சை போடுற வாழ்க்கை எதுவும் வேண்டாம். எங்களுக்கு தேவை
ஒரு சுதந்திர பூமி."


"சரி இப்ப இருக்கிற நிலைமையில இது நடக்கிற காரியமா, இப்ப அமெரிக்க அதிபரா ஓபாமா பதவி எடுத்திருக்காறே
உங்க கனவு சாத்தியப்படுமா?"


"சம்பந்தமே இல்லாம இருக்கு உங்க கேள்வி, இருந்தாலும் சொல்றேன் அமெரிக்காவில புதிய அதிபர் வந்தாலும்,
இந்தியாவில புதிய பிரதமர் வந்தாலும் எங்களுக்கு ஒரு நல்ல காலம் பொறக்கும் என்ற எண்ணமே போச்சு. எங்க கனவை
நாங்களே நிறைவேத்துனா தான் உண்டு"


"வெளிநாட்டில் உள்ள உங்க நண்பர்கள் தொடர்பு..."


"தேவையில்லாம எதுக்கு இப்ப அவுங்கள இதுல இழுக்கிறீங்க. அவுங்கலாவது நல்லா இருக்கட்டுமே. கடல் கடந்து
பரவி உலகம் முழுதும் வெவ்வேறு இடத்தில இருந்தாலும் உணர்வுபூர்வமா எங்களோட இனம் ஒன்னாதான் இருக்கு.
இந்த அரசாங்கம் தான் நவீன ஆயுதங்கள் பல வச்சுகிட்டு எங்களை அழிக்க முயற்சி பண்றாங்க. எங்ககிட்ட அந்த
மாதிரி நவீன ஆயுதம் எதுவும் கிடையாது. ஆனா நேர்மை இருக்கு.""இந்தியாவிலருந்து அனுப்பிய உதவி பொருட்கள் எல்லாம் நீங்க எடுத்துகிட்டதா சொல்றாங்களே???"


"உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......."


"ஏன் கோவப்படுறீங்க நான் என்ன தப்பா கேட்டுட்டேன்?"


"பின்ன என்னாடா...அப்பேலருந்து சம்பந்தமே இல்லாம கேள்வி கேக்கிற......உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....ஒழுங்க போயிடு இல்ல
புலி அடுச்சு தான் சாவேன் அடம் பிடிச்சா இன்னைக்கு லஞ்ச் நீதான்"


என்று நம்ம பிரபலம் புலி கோபமாக உரும.. நிருபர் ஓட்டம் பிடித்தார்.


இது பிரபலம் ....

இதெல்லாம் அவுங்க இனம்தானுங்க ......

ஒரு பிரபலத்தின் (வெளிவராத) பேட்டி - 1 க்கு செல்ல க்ளிக்கவும்

இனி வரும் குருவி பறக்கனுமா? வில்லு சீறிப்பாயனுமா? விஜய்க்கு டிப்ஸ்

தொடர்ந்து பல தோல்வி படங்களை கொடுத்து வந்த "தல" என்றழைக்கப்படும் அஜீத்திற்கு தக்க சமயத்தில் நம்ம சகா
கார்க்கி சில ஐடியாக்களை கொடுத்தார். அதை அஜித் இப்போது பின்பற்றி வருவதாக "லைட் ஆப் சுனில்" நேற்று
போன் செய்து கூறினார்.

ஆனால் இன்று அதே நிலையில் அநாமத்தாக இருக்கும் நம்ம இளை(த்)த தளபதி விஜய்க்கு யாரும் ஐடியா கொடுக்காமல்
இருக்கிறார்கள். சகாவை பொருத்த வரையில் "வில்லு" வெற்றிப்படம் போல, அதுனால நம்மளே ஐடியாவை உதிர்க்கலாம்.
டிஸ்கி: இது தமிழ் மசலாப் பட ரசிகர்களுக்கு மட்டும். உலக சினிமா பார்ப்பவர்கள் இந்தப் பதிவை படிக்காமல் இருப்பது
நலம்.

1)ஓப்பனிங் சாங்: படம் எப்படி இருந்தாலும் முதல் பாடலில் அரங்கம் அதிர ஆடித் தீர்ப்பார்கள் ரசிகர்கள். ஆனால் தியேட்டரில்
அதிர்ச்சியில் ஆடாமல் அசையாமல் இருந்தால்.... பின்ன என்னங்க குஷ்புவை போய் ஆட வச்சீங்கன்னா எவன் பார்ப்பான்?
இதென்ன மானாட மயிலாடன்னு நினைச்சீங்களா? டி.வில பாட்டை பார்த்த எனக்கே நைட்டு சாப்பாடு இறங்கல...பாவம்
தியேட்டர்ல படத்தை பார்த்தவங்க. அப்புறம் "அன்பு வேணும்", "ஆப்பம் வேணும்" எத்தனை நாளுக்கு பாடுவீங்க,
"நீ எனக்கு சகோதரன்" "நான் உனக்கு மச்சான்" சும்மா உறவு முறை வச்சு பாட கூடாது. அப்புறம் பிரச்சனையாயிடும்.

2)ரிலீஸ் தேதி: இப்பெல்லாம் பொங்கல், தீபாவளின்னு தனுஷ் படமும் இறங்க ஆரம்பிச்சுடிச்சு. "பொல்லாதவன்" வந்து
ATMக்கு ஆப்பு வச்சுது. "யாரடி நீ மோகனி" குருவிக்கு சூடு வச்சுது. இப்ப உங்க வில்லு "படிக்காதவனை" ஓட வச்சிடும்.
அதுனால தனுஷ் படம் எப்ப இறங்குதுன்னு பார்த்துட்டு அதுக்கேத்த மாதிரி ரிலீஸ் பண்ணுங்க. அவர் வேற
நடிக்கவெல்லாம் செய்யிறாரு. அப்புறம் காசுக்கு ஆசப்பட்டு அதாவது "வீக் எண்ட் கலெக்ஷன்" பார்த்து அமெரிக்காவில
நாலு நாள் முன்னாடி ரிலீஸ் பண்ணீங்க. இப்ப என்னாச்சு? படத்தை பார்த்துட்டு அப்பவே நிறைய பேர் வில்லை
இராமன் உடைச்ச மாதிரி உடைச்சுட்டாங்க. அதைப் படிச்சுட்டு இங்க நிறைய பேர் பொங்கல் லீவுல இந்த படத்துக்கு
போக வேணாம்ன்னு முடிவெடுத்துட்டாங்க. (இல்லைன்னா மட்டும் போவோமான்னு கேட்டா நீங்க தான் உண்மையான புத்தசாலி).

3)இசை மற்றும் நடனம்: ஆமா ஏன் எல்லா பாட்டையும் தெலுங்கலிருந்தே எடுக்குறீங்க??? வேற மாநிலமே உங்க
காதுக்கு கேக்கலையா?. நம்ம ப்ரெண்ட்ஸ் நிறைய பேர் தெலுங்கு தான். உங்க பாட்டை கேட்டாலே இது தெலுங்கு
பாட்டுடான்னு உடனே சொல்லிடுவாங்க. பாடல்கள் ஹிட்டானாலே படம் ஹிட்டாயிடும்ன்னு நினைப்பா உங்களுக்கு???
சரி முன்னவாவது டான்ஸ் நல்லா ஆடிகிட்டு இருந்தீங்க. இப்ப என்னாச்சு? வர வர உங்க டான்ஸ் சகிக்கல.
இனிமே உங்க இசையமைப்பாளர்கிட்ட சொல்லி சொந்தமா இசையமைக்க சொல்லுங்க.

4)கதைக்களங்கள்: முன்னெல்லாம் தெலுங்கிலேருந்து கதையை உருவுனீங்க. ஜெயம் ரவி குடும்பம் உங்களுக்கு ஆப்பு
வச்சுது. இந்த பக்கம் மலையாளம். அத ஏற்கனவே பி.வாசுன்னு ஒருத்தர் உருவிகிட்டு இருக்காரு. புது கதைன்னு
சொல்லி குருவி எடுத்தீங்க. அது முக்கால் வாசி "சத்தரபதி"ன்னு ஒரு தெலுங்கு படத்திலிருந்து எடுத்திருக்கீங்கன்னு
கொஞ்சம் பேருக்கு தான் தெரியும். அதுவும் பாக்க சகிக்கல. இப்ப இந்திப் படம். ஆமா உங்களுக்கு கொஞ்சம் கூட
மூளையே இல்லையா???? போயும் போயும் அந்த "சோல்ஜர்" இந்தி படம் தானா கிடைச்சுது?. அதுவே ஒரு டப்பா
படம். சாரூக், ஹிருத்திக் ரோஷன் படம் எதுனா முயற்சி பண்ண தோணலையா உங்களுக்கு? பேசாம பி.வாசு கூட ஒரு
மலையாள ரீமேக் படம் பண்ணுங்க. எங்கையோஓஓஓஒ போயிடுவீங்க

5)இமேஜ்: இந்த எழவு எப்ப வந்தது உங்களுக்கு??? அந்த மண்ணெல்லாம் ஒன்னும் கிடையாது. உங்களுக்கு காமெடி
தான் நல்லா வருதில்ல, உங்க பாடி லாங்வேஜும் அதுக்கு ஒத்துழைக்குது அப்புறம் ஏன் தனியா பைட் பண்ணி காமெடி
பண்றீங்க? வடிவேலு காமெடியான செத்து செத்து விளையாடுறத வேற கடந்த இரண்டு படங்கள்ல பண்ணி காமெடி
பண்ணியிருக்கீங்க. அப்புறம் படத்துல வடிவேலுவும், விவேக்கும் எதுக்கு?
அப்புறம் இந்த வீர வசனம் பேசி டயத்த வேஸ்ட் பண்றதுக்கு பதிலா தங்கர் பச்சானோடவாவது ஒரு படம்
பண்ணுங்க ஏன்னா நடிப்புன்னா என்னான்னு தெரியனுமில்ல. அப்புறம் பின்னால அரசியல்வாதியா ஆயிட்டு, நடிக்க
தெரியாம பொழப்பு ஓடாது பாருங்க.

டிஸ்கி2. இதற்கு மரணமொக்கைச் சாமின்னு லேபிள் போட்டது தற்செயலாக நடந்த ஒன்று.

டிஸ்கி3. இதையெல்லாம் படிச்சுட்டு நான் தல ரசிகன்னு கேவலமான முடிவுக்கு வருபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது
"உங்களையெல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு" :)

டிஸ்கி4. புரியலன்னா இதற்கு தொடர்புடைய லின்ங் இது தான். படிச்சுட்டு இங்க வாங்க

"Slumdog Millionaire" விருதுகள்-வெட்கி தலைகுனியும் இந்தியர்கள்.


இந்தியர்களை வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவராக கன்னத்தில் அறைந்தாலும் இந்த அளவிற்கு உறைத்திருக்குமா
என்பது சந்தேகமே.

பாலிவுட்டாலும், நம்ம நிதிஅமைச்சராலும் பட்டாடை போர்த்தி உலகநாடுகளிடையே மிகப்பிரமாண்டமாய் காட்டப்படும்
இந்தியாவை, துணியை உருவி அப்பட்டமாய் இது தான் இந்தியா என்று காட்டியிருக்கிறார் வெள்ளைகார
டைரக்டர். அது உண்மையாக இருப்பதால் பல காட்சிகளில் கண்ணீரையும், படம் முடிந்ததும் மௌனத்தையும் மட்டுமே
நம்மால் வெளிப்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே பல பேர் விமர்சனங்கள் செய்துவிட்டாலும் ஒரு நல்ல திரைப்படத்தை கண்டுவிட்டு அதைப் பற்றி எழுதாவிட்டால்
இந்த ப்ளாகர் உலகம் என்னை மன்னிக்காது.

கதாநாயகன் ஜமால்மாலிக்(Dev patel) காவல்துறையால் சித்தரவதைப்படுத்துவதோடு படம் தொடங்குறது. இருபது மில்லியன் பரிசு போட்டியில்
பத்து மில்லியன் கேள்விகளுக்கு மிகச்சரியான பதிலை சொல்வதினால், அவன் ஏமாற்றுகிறான் என்று கருதி போட்டி
நடத்துபவர் காவல்துறையிடம் அவனை ஒப்படைத்துவிடுகிறார். மீதமிருக்கும் ஒரு கேள்வி நாளை போட்டி தொடங்கும்
போது கேட்கப்படும். அதற்குள் அவனிடமிருந்து உண்மையை வரவழைக்க காவல்துறை அவனை அடித்து துன்புறுத்துகிறது.

காவல் துறை அதிகாரியான இர்ஃபான் கான் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் எப்படி தெரியும் என்று விசாரிக்கும் போது
ப்ளாஸ்பேக்ற்குள் ஒரு ப்ளாஸ்பேக் மலர்ந்து கதை நகர்கிறது. ஒவ்வொரு கேள்வியும், அவனின் வாழ்க்கையோடு
ஒன்றிப்போன நிகழ்வுகளால் ஏற்பட்ட வலியோடு வருவதால் அவனால் அதை எளிதாக கூறமுடிகிறது. கடைசியில் அவன் காவல்துறையிடமிருந்து
விடுவிக்கப்பட்டானா? கடைசி கேள்விக்கு பதில் கூறி கோடீஸ்வரன் ஆனானா? எதற்காக இந்த போட்டியில் கலந்து
கொண்டான்? என்ற கேள்விகளுக்கு பதில் தான் மீதி கதை.

கதை இவ்வாறு சொல்வதை கேட்க எளிதாக இருக்கிறதல்லவா? ஆனால் படத்தில் காட்சியமைப்புகளும், இசையும்
படத்தை பல விருதுகள் வாங்கி தர மிக தரமானதாக இருக்கின்றன.

வில்லன்கள் துரத்தி வர ஹீரோ சந்துகளில் ஓடிப் போகும் பல சேஸிங் காட்சிகளை கண்டுருப்போம். ஆனால்
சிறுவர்களை துரத்திப் போகும் போலிஸ்காரர்களின் சேஸிங் காட்சிகள் படமாக்கபட்ட விதம் இதுவரை தமிழ் சினிமாவில்
வரவில்லை. இந்திய சினிமாவில் உள்ளதா என தெரியவில்லை. அதற்கு கொடுத்த பிண்ணனி இசை காட்சிக்கு கூடுதல்
பலம். இதில் வரும் "they can't touch me" என்ற பாடல் அருமை. அந்த ஒரு பாடலில் மும்பை வாழ் சேரி வாசிகள் வாழும்
முறையை முழுதும் காணலாம்.

யாரப்பா அந்த சிறுவன்????(Ayuesh mahesh khedekar) கொள்ளை அழகு அவனிடம். அவன் காட்டும் முகபாவனை அடடா..கையையும் காலையும்
ஆட்டி வீர வசனம் பேசும் தமிழ் நடிகர்கள் அவனிடம் பாடம் கற்க செல்லலாம். முக்கியமாக, அவன் கழிவறையில்
இருக்கும் போது, (மன்னிக்கவும் அது கழிவு அறை அல்ல கழிவு ஓடம் என்று சொல்லலாம். ஸ்ட்ரைட் கனெக்ஷன் டூ
கூவம்) வெளியில் ஒரு ஆள் மிக அவசரமாக நெளிய இவன் முக்கி கொண்டே பேசும் டயலாக் டெலிவரி இருக்கிறதே.....
அடடா அற்புதம்.வெளியில் அமிதாப் பச்சன் வருகிறார் என்றதும் அவன் காட்டும் முகபாவனை, மற்றும் அவரை காண்பதற்காக அவன்
செய்யும் காரியத்திற்கு முன் காட்டும் முகபாவனை என அனைத்தும் ஃபர்பெக்ட். ஆனால் ஒரு நடிகனுக்காக ஒரு இந்தியன்
எந்த ஒரு கேவலத்தையும் செய்ய தயாராக இருக்கிறான் என்கிற உண்மையும் வெளிப்படுகிறது :( இதில் முதல் கேள்விக்கான
பதில் அவனுக்கு கிடைக்கிறது :)

இரண்டாவது கேள்வி இராமனின் கையில் இருப்பது என்ன? என்ற அபத்தமான கேள்வியை கேட்டாலும். கதாநாயகன்
ஒரு முஸ்லீமாக இருப்பதால் அந்த கேள்வி கொஞ்சம் சுவாரஸமானது. அதற்கு மனதை கனக்க வைக்கும் அவனது ப்ளாஸ்பேக்
இந்தியாவின் ஒரு கரும்புள்ளி :(

"Darshan Do Ghanshyam" என்ற பாடலை எழுதியவர் யார்? என்கிற கேள்விக்கு பதில் அனைவரையும் அதிர்ச்சியில்
உறைய வைக்கிறது. சிறிது வருடங்களுக்கு முன்னால் ஒரு வார இதழில் வடநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட சிறுவர்,
சிறுமிகளை இங்கு(சென்னை சென்ட்ரலில்) பிச்சையும், பிளாட்பாரத்தில் வியாபாரம் செய்ய விடுவதாக படித்துள்ளேன்.
ஆனால் அது எப்படி நடக்கிறது என்று காட்டும் போது கண்ணீர் வருவதை அடக்க முடியவில்லை. அதுவும் பின்னாளில்
கண் போன ஜமாலின் நண்பன் "நீ அதிர்ஷ்டகாரன்டா" என கூறும் போது கண் குளமாகுவதை தடுக்கமுடியவில்லை.

அதுவரை சிறுவர்களை இந்தியிலேயே பேச வைத்து அந்த குழந்தை தனம் மாறாமல் எடுத்தது புத்திசாலிதனம். ஓரளவு
மெச்சூட் ஆன பிறகு ஆங்கிலத்தில் உரையாடலை வைத்திருக்கிறார்கள். டைரக்டர் டச்.

ஜமாலின் அண்ணன் சலீம் பக்கா வில்லத்தனமாக இருந்தாலும் பாசம் அடிக்கடி எட்டிப் பார்க்கிறது. அதுவே கடைசியில்
ஜமாலையும் அவன் காதலியையும் சேர்க்க உதவியாக இருக்கிறது. ஹோட்டலில் ஜமாலும், சலீமும் பேசிக்கொண்டிருக்கையில்
சலீம் ஒரு குப்பையிலிருந்து கேன் ஒன்றை எடுத்து தண்ணீர் பிடித்து மீண்டும் மூடியை ஒட்ட வைப்பது அவனது கேடி
தனத்திற்கு நல்ல காட்சியமைப்பு. படம் பார்த்தவர்கள் கவனித்திருப்பார்களா என்று தெரியவில்லை.

ஜமாலின் காதலியாக வரும் லத்திகா (freida pinto) கருப்பாக அழகாக இருக்கிறாள். கொடுத்த வேலையை சரியாக
செய்திருக்கிறார். எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது. எங்கென்று ஞாபகம் இல்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

கோடீஸ்வரன் நிகழ்ச்சி தொகுப்பாளராக அனீல் கபூர். அவர் நடிக்க வந்து முப்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டதாம்.
இன்னமும் கதாநாயகனாக இளமை மாறாக நடித்துகொண்டிருப்பவர். அவரது பெண்ணும் கதாநாயகியாக வலம் வந்துவிட்டார்.
எப்படி சார் இந்த மாதிரி தைரியமான வேடத்தில நடிக்கிறீங்க? எங்க ஹீரோவுக்கெல்லாம் 25வருசமா நடிச்சா நாங்க
பெரிய விழா எடுப்போம். இந்த மாதிரி முக்கியத்துவம் வாய்ந்த சின்ன ரோல்ல எல்லாம் நடிக்க விடமாட்டோம் தெரியுமா?
கட் அவுட் வைப்போம். பால் அபிஷேகம் பண்ணுவோம். என்னமோ சார் உங்களுக்கு பொழைக்கவே தெரியல.

இதை ஒரு இந்தியன் படம் எடுத்திருந்தால் எனக்குள் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்குமா என்று தெரியாது.
ஏனென்றால் ஒவ்வொரு இந்தியனும் இதே போல் ஏதாவது இந்திய யதார்த்தத்தில் மாட்டி கொண்டு வெளிவந்திருப்பான்.
ஆதலால் அவனின் பாதிப்பாக அதை பார்க்க தோன்றும். ஆனால் படம் இயக்கியதோ ஒரு வெள்ளைகாரன்.(Danny Boyle).
திரைக்கதை அமைத்ததும் ஒரு வெள்ளைகாரன்(Simon beaufoy). கதை மட்டும் "Vikas swarup" எழுதிய "Q&A" என்ற
நாவலை தழுவி எடுத்திருக்கிறார்கள். இவர்கள் எந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் இந்த படததை எடுத்திருக்கிறார்கள் என்று
பார்க்கிற போது ஆச்சர்யம் அளிக்கிறது.

இந்தியில் பிரகாஷ்ராஜ் என்றால் அது "இர்ஃபான் கான்" என்று சத்தம் போட்டு சொல்லலாம் :)

படத்தில் ப்ளஸ் மட்டுமே உள்ளது என்றால் இல்லை... மைனஸும் இருக்கிறது. சிறுவர்கள் வன்முறை ஈடுபடுவதாக
காட்டியிருக்கும் காட்சிகள் மிக அதிகமாக உள்ளது. பின்பு பத்து பன்னிரண்டு வயதில் காதலியை தேடி அழைவதாக
காட்டியிருக்கும் காட்சிகள் ரொம்ம்ம்ம்ம்ப ஓவர்.... இந்திய சினிமாவிற்கே உண்டான காதல் காட்சிகள், காதலியை வில்லன்
கடத்துவது, க்ளைமாக்ஸில் இரயில் நிலையத்தில் ஒன்று சேர்வது என பார்த்து பார்த்து புளித்த காட்சிகள் என்றாலும்
அடர்த்தியான திரைக்கதையில் எதுவும் எரிச்சலை தரவில்லை. கடைசி பாட்டு சூப்பர் ஏ.ஆர் ரஹ்மான் சார்.

மொத்தத்தில் இந்தியாவின் டோட்டல் இமேஜை, உண்மையை சொல்லி டேமேஜ் ஆக்கிவிட்டு அதற்கு விருதும் கொடுத்து
நம்மை தலை குனிய செய்திருக்கிறார்கள் இந்த வெள்ளைகாரர்கள் :)

"அத்தனைக்கும் ஆசைப்படு"-சுவாமி ஸ்ரீ ஸ்ரீ ஆதவானந்தாவாழ்த்து கூற பிடிக்குமா? அப்படின்னா உள்ள வாங்க..

எனக்கு வாழ்த்துவதும் வாழ்த்தப்படுவதும் மிகவும் பிடிக்கும்.

என் நண்பர்கள் பல பேர்களின் பிறந்தநாளை குறித்து வைத்துக் கொண்டு அவர்களின் பிறந்தநாளில் அவர்களை
அழைத்து வாழ்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளேன். அதிக பிரசங்கிதனமாக "வால்பையனின்" பிறந்தநாள் என்று
நினைத்து வேறொரு தினத்தில் வாழ்த்து கூறி பதிவுமிட்டேன். ஆனால் அடுத்து குசும்பனுக்கும் அதே மாதிரி ஆகப்போகிறதென்று
நினைத்து தனியாக மெயில் அனுப்பினேன். அவரிடம் இருந்து நான் தான் முதலில் வாழ்த்து கூறினேன் என்ற கூறி பதில்
மெயில் வந்த போது மகிழ்ச்சியாக இருந்தது.

அதே போல் சில மகிழ்ச்சியான தருணங்களில் என்னை வாழ்த்திய சில பேர் மற்றும் சில சம்பவங்கள் என்னால் இன்றும்
மறக்க முடியவில்லை.

சிறுவயதில் பிறந்தநாளில் அதிகாலையில் கண்விழித்தாலும் கண்களை திறக்காமல் கண்மூடியே படுத்திருந்திருக்கும் போது,
நான் தூங்குவதாக நினைத்து கன்னத்தில் முத்தமிட்டு என்னை எழுப்பாமல் வாழ்த்தும் என் அம்மாவின் வாழ்த்து பிடித்தது.

ஐந்தாவது பாஸானதாக போஸ்ட்மேன் கொடுத்த போஸ்ட் கார்டை வாங்காமல் அப்படி யாரும் இல்லை என்று
கூற, அவர் அடுத்தடுத்த வீட்டிற்கு சென்று விசாரிக்க பின்பு அடுத்த வீட்டில் உள்ள லதா அக்கா அந்த போஸ்கார்டை
வாங்கி என்னிடம் கொடுத்து, போஸ்ட்மேன் மாறி கொடுத்துவிட்டதாக கூறி, அவர்கள் வாழ்த்தியது பிடித்தது.

மிகவும் பிடித்த ஷீலா டீச்சர் வகுப்பறையில் எல்லார் முன்னிலையில் நான் அவர்களின் மிகச்சிறந்த மாணவன் என்று
வாழ்த்தியது பிடித்தது.

பத்தாவது பாஸ் ஆனபோது பக்கத்துவீட்டு பெண் கைகுலுக்கி வாழ்த்து கூறியது பிடித்தது.

மறக்காமல் என் பிறந்தநாளுக்கு இந்தியாவில் பன்னிரெண்டு மணி அடிக்கும் போது துபாயில் பத்தரை ஆகுமென்றும்
தெரியாமல் என்னை எழுப்பியதாக நினைத்து வாழ்த்தியது பிடித்தது.

இவ்வாறு அடுத்தவர்கள் வாழ்த்து எனக்கு முக்கியமாய் பட்டது. இப்பொழுதும் இந்த ஐம்பதாவது பதிவிற்கான உங்கள்
வாழ்த்துக்களும்....அவனா நீயி?

"என்னடா ஆச்சு?" தீனா

"ஒன்னுமில்லடா மச்சான்" என்றேன் நான்

"பின்ன ஏன் மூஞ்சிய தூக்கி வச்சிருக்க?" விடாமல் தினேஷ்.

நான் "அது.. பஸ்ஸில ஒருத்தன்...." இழுத்தேன்.

"ஒருத்தன்.... என்னடா மேல கைவச்சுட்டானா?" உட்கார்ந்திருந்த நிர்மல் எழுந்திருத்து கேட்டான்.

"கையெல்லாம் வைக்கல..ஆனா கொஞ்சம் பிரச்சனையாடுச்சு" என்றேன்

"எந்த ஏரியா பையன்னு தெரியுமா?" நிர்மல்

"அண்ணா நகர்ன்னு நினைக்கிறேன்?"

"சரி விடு நாளைக்கு அண்ணா நகர்ல பாத்துக்கலாம் அவனை..." சசி

"ஹேய் மச்சி அதெல்லாம் வேணாம் சொல்றத கேளுங்கடா" என்றேன்

"சரி சொல்லு" கோரஸாக வந்தது
அப்படியே கொஞ்சம் கொசுவத்தி சுருளை சுத்தி பின்னாடி போகலாம்

ss1
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
வழக்கம் போல் வேலையை முடித்துக் கொண்டு சிந்தாமணி பேருந்து நிருந்தத்தில் வந்து நின்றேன். இந்த 34 நம்பர்
பஸ்ஸில் போவதை நினைத்தாலே எரிச்சலாக வரும். கால் கட்டை விரலை மட்டும் முட்டு கொடுத்து நின்று கொண்டு
சில சமயம் போய் இருக்கிறேன். சில சமயம் அந்தரத்தில்.....

கடந்த இரண்டு மாதமாக சென்ரல் வரை ஒரு பஸ்ஸிலும் அங்கிருந்து ட்ரைனிலும் போவதை வழக்கமாக்கினேன்.
இது கொஞ்சம் சுலவாக இருந்தாலும் சரியான நேரத்தில் போகவில்லையென்றால் இரயில் மிஸ்ஸாகும்.

மேட்டருக்கு வருவோம். 7F பஸ் வந்தது. சுமாரான கூட்டம். ஜிம்மிற்கு நானும் நிர்மலும் போய்கொண்டிருந்த காலம் அது.
ஆபிஸை விட்டு வந்ததும் மற்றவர்களை மிரள வைக்க, பைசப்ஸை நன்றாக தெரியும் படி சட்டை கையை மடக்கி
வைப்பேன். பஸ்ஸில் முன்புறம் ஏறி கருப்பு டீ சர்ட் போட்டிருந்தவனை "ஹலோ பாஸ் ஒரு சென்ட்ரல்" என்று
காசை நீட்டினேன்.

"வேர்?" என்று திரும்பினான். ஆள் கொஞ்சம் ஸ்மார்டாக இருந்தான். இந்த மாதிரி அழகா இருந்தா தான் நமக்கு
ஆவாதே. "அஞ செண்டரலு" என்றேன் நக்கலுடன். நெஞ்சை இரண்டு இன்ஞ்க்கு உயர்த்தினேன். டிக்கட்டை அவன்
கொடுக்கும் போது என் உடம்பை பார்த்து கொஞ்சம் மெர்சலாகி போனான்.

பனிப்போர் அதோடு முடியவில்லை. கூட்டம் அதிகம் ஏறியதால் என் அருகே நகர்ந்து வரவேண்டியிருந்தது.
நான் நகராமல் அங்கேயே நின்றேன். அவன் என் மேல் இடித்தான். நான் பதிலுக்கு இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக
இடித்தேன்.
முன் சீட்டிலிருந்த ஒரு ஆள் "புரசைவாக்கம் வந்திருச்சாப்பா?" என கேட்டார்.
நான் "அடுத்த ஸ்டாப் தான்" என்று கூறி அவர் அருகில் செல்ல முற்பட்டேன் அடுத்து உட்காருவதற்காக. ஆனால்
அந்த சீட் அவன் அருகில் இருந்தது. இருந்தாலும் நான் விடாமல் முட்டி மோதி அந்த சீட்டில் உட்கார்ந்து அவனைப்
பார்த்து ஒரு நக்கல் புன்னகையை விட்டேன்.

அவன் கொஞ்சம் காண்டாயிருக்க வேண்டும். வேண்டுமென்றே அடுத்து சீட் காலியாகயிருந்தும் என் அருகில் நின்று
கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். என் சீட்டின் இருந்த ஆள் இறங்கியதும் அவன் என்னருகில் உட்கார்ந்தான்.

நினைத்தது சரிதான். அவன் என் மேல் காண்டாக இருந்திருக்கிறான். ஒரு ஆள் உட்காரும் அளவிற்கு இடம் இருந்தும்
நன்றாக நெருக்கி உட்கார்ந்தான். நானும் விடவில்லை நன்றாக அவன் பக்கம் நெருக்கி உட்கார்ந்தேன். அவன் இன்னும்
அதிகமாக நெருக்கவே நான் "சரி எதுக்கு பிரச்சனை, அதான் சென்ட்ரல் வந்திருச்சே" கொஞ்சம் பொறுமை
காத்தேன். என் பொறுமையை சோதிக்கப்படவே நான் "ஹலோ பாஸ் கொஞ்சம் வழி விடுங்க இறங்கனும்" என்றேன்.
"நானும் சென்ட்ரல்ல தான் இறங்கனும்" என்றான் சிரித்தபடியே.

இறங்கியதும் இரயிலை பிடிக்க ஓட்டமும் நடையுமாக போன போது ஒரு குரல் "ஹலோ சார்" என்று.
(இனி வரும் டயலாக் கொஞ்சமும் மாற்றாமல் கொடுக்கப்பட்டுள்ளது)
யார்டா அது இவ்வளவு மரியாதையா என்று திரும்பினால் அவன் தான். நம்மளை சார்ன்னு கூப்பிட்டானே கொஞ்சம்
கெத்தாக "யெஸ்" என்றேன்.
"ஐ யம் ----------" என்று கை குடுத்தான். (பெயர் கார்த்தியோ என்னவோ சொன்ன ஞாபகம்)
நானும் என் பெயர் சொல்லி கை குடுத்தேன்.
"உங்க eyes ரொம்ப sharpஆ இருக்கு" என்றான்
"இஸ் இட்" என்று இரண்டு புருவத்தை உயர்த்தி இன்னும் sharp ஆக்கினேன் புன்முறுவலோடு.
"இப் யூ டோண்ட் மைண்ட் அங்க ஒரு பிப்டீன் மினிட்ஸ் ஒன்னா ஸ்பெண்ட் பண்ணலாம்" என்று ஒரு இருட்டான
சந்தை காட்டினான்.
அடப்பாவி அவனா நீயி?...இது தெரியாம உன்கிட்ட ஆக்சன் சீக்வென்ஸ் எல்லாம் காட்டினேனா
அவனை அப்போது பார்த்த போது எனக்கு பயம் தான் ஏற்பட்டது. இருந்தாலும் முகத்தில் அதை காட்டாமல் "வாட்?"
என்றேன். அவன் "பாஸ் பயப்படாதீங்க ஜஸ்ட் ஒரு.." என்று முடிக்கும் முன்
நான் "@ங்#$*&$%*(;த்.,^)" என்ற போது
ரகுவரன் ஸ்டைலில் "ஓகே ஒகே பாஸ் வேண்டாம்னா விட்டுருங்க" என்று
கையை பாக்கியராஜ் ஸ்டைலில் வைத்து கொண்டு சொல்லி கொண்டே பின் நகர்ந்தான்.
அடப்பாவி ஒரு ஆக்சன் ஹீரோவா நான் செஞ்ச விஷயமெல்லாம் உனக்கு வேற மாதிரி தோணியிருக்கா என
கோபம் கோபமாக வந்தது. அதே மூட் அவுட்டுடன் வீட்டிற்கு சென்றேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ss

சிரிப்பு சத்தம் அடங்க வெகு நேரம் ஆனது.
"மச்சி மேல கை வச்சானா?" என்று நிர்மல் திரும்பவும் கேட்டான்.

"அதான் இல்லையின்னு அப்பவே சொன்னேன்ல" என்றேன்

"டேய் அதில்லடா நான் வேற மாதிரி கை வச்சானான்னு கேட்டேன்" ஒரு பெரிய ஜோக் சொன்ன மாதிரி சிரித்தான்.

மறுநாள் ஆபிஸில் லஞ்சில் சீனியர் செக்கருடன் இதை சொன்ன போது அங்கு யாரும் சிரிக்கவில்லை. மாறாக
அவர் "இந்த மாதிரி பசங்க கெட்டு போகுறது எல்லாம் ஹாஸ்டல் சகவாசம் தான்" என்றார். அப்போது அவருடன்
வாக்குவாதம் செய்தேன் அது மட்டும் காரணமாக இருக்காது என்று.

ஆனால் நான்கு வருடம் கழித்து, இங்கு துபாயில் ஒரு பெரிய கம்பெனியில் காலேஜ் கேம்பஸ் வழியாக செலக்ட் ஆகி
நண்பனின் அறையில் இரண்டு மாதம் முன்பு ஒருவன் வந்திருக்கிறான். அவனும் இந்த கேஸ் என்று தெரிந்தது.
விசாரித்ததில் அது ஹாஸ்டலில் ஆரம்பித்த பழக்கம் தான். இந்த பதிவு இப்போது எழுதவும் இவன் தான் காரணம்.

என்னோட கஷ்டகாலம்........ அவனுக்கும் "@ங்#$*&$%*(;த்.,^)" என்று என் வாயால் வாழ்த்தியிருக்கிறேன்.
வயசு பசங்க ரோட்டுல நடமாட முடியலயேப்பா.......

"கஜினி" Vs "GHAJINI"

தமிழில் வைத்த மாதிரியே ஹிந்தியிலும் சம்பந்தமேயில்லாமல் படத்தின் தலைப்பை வைத்தால் மும்பையில் படத்தை
ஓட விடமாட்டார்கள் என யாராவது முருகதாஸிடம் சொல்லியிருக்க வேண்டும். அது தான் வில்லனின் பெயரையே
தைரியமாக தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

தமிழைப் போன்றே அதிரடியுடன் தொடங்குகிறது. கதை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஆதலால் கதையைப்
பற்றிய விமர்சனங்களை விட்டுவிடலாம்.

short term memory loss ஆக அமீர்கான் செய்யும் மேனரிசம் சூர்யாவை விட நன்றாக இருக்கிறது. உடம்பையும் நன்றாக ஏத்தி
வைத்திருக்கிறார். ஆனால் சஞ்சய் ராமசாமியாக வரும் சூர்யாவின் ஸ்டைலும் ராயல் லுக்கும் இவரிடம் மிஸ்ஸிங். ரியாஸ்கான்
முதன் முதலாக டைரியை ஓபன் செய்து சூர்யாவின் போட்டாவை பார்க்கும் போதே நமக்கும் ஒருவித ஈர்ப்பு ஏற்படும்.
"ஸ்கவுட் பாய்" போன்று டிரஸ் போட்டிருக்கும் அமீர்கானைப் பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது.

விமானத்திலிருந்து அமீர்கான் இறங்கி வரும் போதும் சட்டையெல்லாம் மடக்கி விட்டு ஏதோ "WWE"க்கு சண்டைக்கு
போகிற மாதிரி வருகிறார்.

படத்தின் இரண்டு ப்ளஸ். ஒன்று தமிழில் இருந்த தவறுகளெல்லாம் திருத்தப்பட்டிருக்கின்றன. அசினின் ஓபனிங் பாட்டு
கூட அசின் கனவு காண்பது போல எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் நயன்தாராவின் பாட்டிற்கு வில்லன் ஏன் வருகிறார்,
அவர் அங்கு வருவது சூர்யாவிற்கு எப்படி தெரியும், அவரது போட்டோ எப்படி சூர்யாவிற்கு கிடைக்கும் என்பதை
எல்லாம் சொல்லவில்லை. ஆனால் அதையெல்லாம் இதில் கதையோடு ஒட்டி சொல்லியிருக்கிறார்கள். இப்படி சிறிய
சிறிய விஷயங்களெல்லாம் பார்த்து பார்த்து அமீர்கான் செய்திருப்பது பாராட்டக்கூடியது.

இரண்டாவது அசின். கலக்கியிருக்கிறார் அசின். மிக அழகாக தெரிகிறார். அதே சுட்டித்தனம். குறிப்பாக சஞ்சயை
டில்லி விமானத்தில் பார்த்ததாக எல்லோரிடமும் 'உதார்' விடும் டயலாக் தமிழை விட அதிக சுட்டிதனம்.
பாலிவுட் ஹீரோயின்களுக்கு ஆப்பு வைக்க ஆண்டவன் அனுப்பியிருக்கிறான் போல. அடுத்த ஸ்ரீதேவி ரெடி என்று சொல்லலாம்.

ஆனால் தமிழில் உரையாடலில் கொடுத்த நகைச்சுவை அங்கே இல்லை. உதாரணத்திற்கு மனோபாலா ஆப்பிள் ஜூஸ்
கொண்டு வரும் போது அசின் "அய்யோ நீங்க ஏன் சார் இதை எடுத்துட்டு வரீங்க"
மனோபாலா "பரவாயில்லம்மா" என்பார். உடனே அசின் "இல்ல சார் எனக்கு ஆப்பிள் ஜூஸ் பிடிக்காது" என்பார். இது
போன்ற "கடி" படம் முழுவதும் தமிழை விட மிகக்குறைவே.

ஜியாகானிற்கு நயன்தாராவின் வேடம். நயன் தாராவை வைத்து தேவையில்லாமல் கவர்ச்சி காண்பித்தது போல் இல்லை.
கதைக்கு அவசியமான சீன்கள் மட்டுமே அவரை வைத்திருக்கிறார் முருகதாஸ். ஹாஸ்டலிலும் க்ளைமாக்ஸிலும்
நயன்தாரா கவர்ச்சியாக ஓடி வரும் (எப்படி கவனிச்சிருக்கேன் பாருங்க!) போன்ற அநாவசியமான சீன்கள் எதுவும்
இல்லை. அவர் ஆடும் பாட்டை கூட முழுசாக காட்டவில்லை. அவரது கண்ணே கவர்ச்சியாக தான் இருக்கிறது. ஆனால் நடிக்க
மட்டும் வைத்திருக்கிறார் டைரக்டர்.

இனி க்ளைமாக்ஸிற்கு வருவோம். அந்த இரட்டை வில்லன் கேரக்டரை தூக்கியதை பாராட்டி கொண்டே அடுத்தடுத்த
சீன்களை பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது. அசினை காப்பாற்றுவதற்காக சூர்யா போடும் சண்டையை தூக்கி விட்டு
மொத்தமாக க்ளைமாக்ஸில் ஒரு பெரிய சண்டையை வைத்திருக்கிறார்கள். ஒரு அடியில் எல்லோரும் சுருண்டு
விழுகிறார்கள். கடைசி 20 நிமிடம் அச்சு அசல் தமிழ் அல்லது தெலுங்கு படத்தை பார்ப்பது போன்ற உணர்வு. அதுவும்
முடிவு, தமிழில் பார்த்துவிட்டு இதை பார்க்கும் போது கொட்டாவி தான் வருகிறது.

பாடல்கள் பரவாயில்லை. ஆனால் பிண்ணனியில் தமிழில் வெறி கொண்ட சூர்யாவிற்கும், ப்ளாஸ்பேக் சூர்யாவிற்கும்,
அசினின் காமெடிக்கும் கொடுக்கும் தீம் மியூஸிக் இதில் எடுபடவில்லை.

தமிழில் பார்க்காமல் ஹிந்தியில் முதலில் பார்ப்பவர்களுக்கு இந்த படம் விருந்தாக இருக்கலாம். ஆனால்
மொத்தத்தில் அமீர்கான் உடம்பை ஏத்தி ஆக்ஸனில் சூர்யாவை விட சிறப்பாக செய்து விட்டு, மற்ற காட்சிகளில் ஈடு
கொடுக்க முடியாமல் போகிறார்.
Related Posts with Thumbnails