கிச்சு கிச்சு மூட்டும் பாகிஸ்தான்

நம்ம பரம எதிரி நாடான பாகிஸ்தான் அவர்கள் நாட்டு பத்திரிகையில் கடந்த புதன்கிழமை தைரியமாக(!) இந்த படங்களை வெளியிட்டிருக்கிறார்களாம். அதாவது இரண்டாயிரத்து பன்னிரண்டில் பாகிஸ்தானின் வரைபடத்தையும், பின்பு இரண்டாயிரத்து இருபதில் பாகிஸ்தான் வரைபடத்தையும் ஆருடம் செய்து வெளியிட்டு, பாகிஸ்தான் மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது அந்த பத்திரிக்கை.

இது 2012


இது 2020


எனக்கு மெயிலில் வந்த விசயம் இது . இதை அனைவருக்கும் அனுப்ப சொல்லி வந்திருந்தது.

express.com. pk/epaper/ PoPupwindow. aspx?newsID= 1100533603&Issue=NP_LHE&Date=20081203

express.com. pk/epaper/ PoPupwindow. aspx?newsID= 1100533604&Issue=NP_LHE&Date=20081203

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...
























பக்கவாத்தியம்

"உங்க வீடு எங்கயிருக்கு?"

இந்த கேள்விக்கு நான் பெரும்பாலும் "திருவொற்றியூர்" என்று தான் சொல்வேன். "தண்டையார்பேட்டை" என்று
சொன்னால் பெரும்பாலான பேர் "அது எங்க இருக்கு?" என்ற அடுத்த கேள்வியை கேட்பார்கள். தெரிந்தவர்கள் மட்டும்
"அங்க எங்க இருக்கீங்க?" என்ற கேள்வியை கேட்பார்கள்.

அன்று கேட்டது நான் புதியதாக சேர்ந்திருக்கும் கம்பெனியின் டீம் லீடர். மேனேஜர் அவரிடம் என்னை சேர்த்து "இவர்
புதுசா ஜாய்ன் பண்ணியிருக்கார். உங்க டீம் தான் " என்று விடைபெற்றார். முதல் கேள்வி பெயரோடு போனது.
இரண்டாவதாக அந்த கேள்வி. நான் வழக்கமாக சொல்லும் "திருவொற்றியூர்" என்ற போது "அங்க எங்க இருக்கீங்க"
என்றார். அவருக்கு ஓரளவு தெரிந்திருக்கிறது என்று நினைத்து "திருவொற்றியூர் இல்ல சார் அதுக்கு முன்ன "டோல்கேட்"
என்றேன்.

"அங்க எங்க?"
"டோல்கேட்டுக்கு முன்ன "தமிழ்நாடு தியேட்டர்" பக்கத்தில" என்றேன்.
"அட, அங்க எங்க?"
"பெருமாள் கோவில் எதிர் தெருவுல"
"அந்த தெருவிலயா இருக்கீங்க. எந்த வீடு" என்ற போது அந்த வரிசையில் இரண்டு பக்கமும் இருந்த சீட்டிலிருந்த
ஆட்களும் எங்களை ஆச்சர்யமாக நோக்கினார்கள்.
"ஒரு ப்ரௌஸிங் செண்டர் இருக்குதில்ல அந்த வீடு தான் சார்" என்றேன்.
"அட நானும் அங்க தான்...."என்று முடிக்கும் முன் முன் சீட்டிலிருந்த ஒருவர் "சார் இரண்டு பேரும் பேசி வச்சுகிட்டு
கலாய்கிறீங்களா" என்றார்.
"இல்ல சுரேஷ் நானும் அதே வீட்ல தான் ஆறு மாசம் முன்ன வரைக்கும் இருந்தேன். அப்புறம் தான் தி.நகர் வந்தேன்"
என்று என் பக்கம் திரும்பி "எந்த வீடு ப்ஸ்ட் ப்ளோரா?"
"ஆமாம் சார். நாங்க வந்து மூணு மாசம் தான் ஆகுது"

அன்றிலிருந்து எனக்கு மிகவும் நெருக்கமானார். என் வீட்டு ஓனரிடம் அவரைப் பற்றி கேட்டேன். அவர்களும் அவரைப்
பற்றி பெருமையாக கூறினார்கள். அவர் வேலை விஷயமாக அமெரிக்கா சென்ற போது இவர்களுக்காக ஒரு கேமரா
வாங்கி வந்ததை பெருமையாக சொன்னார்கள். ஓனர் பையன் வலிய வந்து பேசினான். இதுவரை என்னிடம் தெனாவட்டாக
பேசியவன் இன்று ஒரு வித மரியாதையுடன் பேசியது ஒரே ஆச்சர்யமாக இருந்தது. அது கடைசியில் அவன் கேட்ட கேள்வியில்
புரிந்தது "உன்னையும் அமெரிக்காவிற்கு அனுப்புவாங்களா?". நான் பந்தாவாக "ஆமா இல்லையா பின்ன..ஆனா அது
அமேரிக்காவா இல்ல யுரோப்பான்னு தான் சரியா தெரியல"என்றேன் போலியான கவலையோடு.

தினமும் காலையில் வேலைக்கு போகும் போது அவனை பார்த்து "என்னடா ஏதாவது வேலை கிடைச்சுதா" என்று
கிண்டலாக கேட்பதை வழக்கமாக கொண்டேன். அவ்வாறு கேட்கும் போது அவன் முகம் போகும் போக்கை பார்க்க
சந்தோஷமாக இருக்கும். உள்ளுக்குள் டீம் லீடருக்கு நன்றி சொல்லிக்கொண்டேன்

என் மேல் டிம் லீடருக்கு ஒருவிதமான கரிசனம் இருந்தது என்று கூட சொல்லலாம்.
ஆரம்பத்தில் செய்த சிறு சிறு தவறுகளை எல்லாம் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் அவர் செய்யும் சிறிய
விஷயங்களையெல்லாம் பாராட்டவேண்டும் என்று எதிர்பார்த்தார். அதை அவர் கூறாமலே நாமே கண்டுபிடித்து சொல்ல
வேண்டும் அவருக்கு. ஒரு சின்ன க்ளூ மட்டும் நமக்கு கிடைக்கும்.
சுரேஷ் "சார் உங்க காருக்கு புது பெயிண்ட் அடிச்சிருக்கீங்களா என்ன சும்மா பளபளன்னு இருக்குது?"
"அப்படியா இருக்கு! ஜஸ்ட் வாட்டர் வாஷ் தான் பண்ணியிருக்கேன்" என்பார் பெருமிதச்சிரிப்போடு....
அந்த வேலையை சுரேஷ் சரியாக செய்து வந்தான். அதற்கேற்ற சில சலுகைகளும் அவனுக்கு கிடைத்தது. குறைந்தது
வருடத்திற்கு ஒருமுறையாவது யுரோப்பிற்கு ட்ரிப் வரும் அதில் அவனும் இருப்பான்.

ஒருநாள் "சுரேஷ் today something special, guess what?" என்றார் டீம் லீடர்.
"ஆமா சார் இன்னைக்கு சன் டி.வில "காதல்" படம் போடுறான் சார்" என்றான் சம்பந்தமே இல்லாமல். டீம் லீடர் ஒன்னும்
சொல்லாமல் போனார். அவர் முகம் மாறியிருந்தது. எனக்கு என்ன நடக்கிறது என்று சுத்தமாக புரியவில்லை. பின்பு
டீ டைமில் அனைவரும் பேசியதிலிருந்து சுரேஷ்ற்கு மலேசியாவில் வேலை கிடைத்ததாக தெரிந்தது. அன்று டீம்
லீடரின் பிறந்த நாளாம். சுரேஷ் தொடர்ந்து இரண்டு வருடங்களாக வாழ்த்து சொல்லி வருகிறானாம்.

அடுத்த இரண்டு மாதத்தில் என்னிடம் நன்றாக பழகினார். ஒருநாள் புது சட்டை அணிந்து வந்திருந்தார் "சார் ஷர்ட்
புதுசா? ரொம்ப நல்லாயிருக்கு" என்றேன். அவர் "ஆமா நேத்து டெக்ஸ்டைல் இந்தியா போயிருந்தேன் அங்க எடுத்தது" என்றார்.
பின்பு வாட்ச், ஷீ, ப்ராஜெக்ட்டில் அவர் எடுக்கும் முடிவு என நீண்டது. மற்றவர்கள் அடுத்த சுரேஷ் நீதாண்டா என்றனர். எனக்கு சரியாக
அப்போது தெரியவில்லை. இப்போது யோசித்தால் அது சரிதான்.

நான்கு மாதம் கழித்து இரண்டு மாத யுரோப் ட்ரிப்பிற்கு என்னோட பாஸ்போர்ட் காப்பி வாங்கினார்.

கஜினி திரைப்படம் வந்த புதிது. பாடல்களை கேட்டு அவர் மிகவும் புகழ்ந்து கொண்டிருந்தார். நானும் அவருக்கு தோதாக
புகழ்ந்து கொண்டிருந்தேன். தீடீரென்று "இங்க எங்க கீபோர்ட் சொல்லிதராங்கன்னு தெரியுமா" என்றார்.

நான் "ஏன் சார்" என்று ஆரம்பித்து பின்பு புரிந்து கொண்டு "ஆமாம் சார் நீங்களும் கத்துக்கங்க சார் உங்களுக்கு
கற்பூர புத்தி சீக்கிரம் பிக் அப் ஆயிடுவீங்க" என்றேன். அவர் சிரித்தார்.

நான் விளையாட்டாக துபாய் வேலைக்கு அப்ளை செய்தது ஒரு நல்ல சம்பளம், அப்பாயிமெண்ட் ஆர்டரோடு சீரியஸாக
திரும்பி வந்தது. கொஞ்சம் குழப்பமாக இருந்தது துபாயா போகலாமா இல்லை இரண்டு மாத யுரோப்பா என்று.

இரண்டு நாள் கழித்து ஆபிஸிலிருந்து கிளம்பும் போது என்னிடம் "தெரியுமா நான் கீ போர்ட் க்ளாஸில சேர்ந்துட்டேன்"
என்றார் சிரித்துக்கொண்டே.
நானும் எப்போதும் போல் "அதான் உங்கள பார்த்தாலே தெரியுதே சார்" என்றேன் அவரை உயர்த்தி.
"அவர் எப்படி?" என்றார் ஆச்சர்யத்துடன்
இப்படி தீடீரென்று கேட்பார் என்று தெரியாமல் முழித்து பின்பு சமாளித்து "இன்னைக்கு நீங்க கால்குலேட்டர் யூஸ்
பண்றத பார்த்தாலே தெரிஞ்சுது சார்" என்றேன். அவர் பேசாமல் அங்கிருந்து போனார். முகம் மாறியிருந்தது.

அன்றிலிருந்து என்னிடம் பேசுவதை குறைத்து கொண்டார். நானும் வேறு வழியில்லாமல் துபாய் வேலையை தேர்ந்தெடுத்தேன்.

ஆனால் நான் அன்றைக்கு சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று இன்று வரை யோசித்தும் விடை தெரியவில்லை.

ஆர்டரின் பேரில் இங்கு பதிவுகள் சூடாக்கப்படும்

மூன்று நான்கு வருடங்களாக பதிவெழுதுவர்களும் சரி நேத்து ஆரம்பித்தவரும் சரி சூடான இடுக்கையில் அவர்களின்
பதிவுகள் வந்தால் பெருமைதான். ஆனால் கடந்த சில நாட்களாக சூடான இடுக்கையைப் பற்றிய புலம்பல்கள்
அதிகமாகி வருகிறது.


என்னுடைய மூன்றோ அல்லது நான்கு பதிவுகள் மட்டும் சூடான பகுதிக்கு வந்திருக்கின்றன. ஆனா நண்பர் பல்லவன்
நேத்து அவர் பதிவு எதுவும் சூடாகாம அவர் சூடாகி சூடான இடுக்கைப் பத்தி சூடா ஒரு பதிவை போட்டிருக்காரு.
சரி அவருக்காக இல்லையென்னாலும் நம்மள மாதிரி புதிய ஆளுங்களுக்காக முயற்சி செய்து அவுங்க பதிவை
சூடாக்கி தரலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்.

இந்த மாதிரி பிரபலமான திரட்டில தான் பதிவுகள சூடாக்கனும்ன்னு இல்ல. நான் கூட நல்லா சூடாக்குவேன்.
படத்தை பாருங்க எப்படி சூடாக்குறேன்னு......

ss

இந்த சூடு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா....

இதுவும் முற்றிலும் இலவசமுங்கோ........


சூட்டோட சூட்டா நாமலும் சூடான இடுக்கை பத்தி பதிவெழுதாம இருந்தோம்ன்னா, எல்லாரும் சூடாகி, சூடு சொரணை
இல்லாதவன் முடிவு பண்ணி திட்டுவாங்க. அதுனாலதான் இந்த பதிவு. அதுனால நீங்க சூடாகாம இத சூடாக்கி, சூடான
இடுக்கையில வர செய்யுங்கோ.....

(கடைசியா தமிழ்மணம் இன்னைக்கு முற்றுபுள்ளி வச்சாலும் நான் நேத்து எழுதின இந்த பதிவு வேஸ்டா போகுமே...)

இப்ப வரச்சொல்லுங்கடா உங்க ஜே.கே.ரித்தீஷ...
















'Chaos theory'-கன்னா பின்னாவென ஒரு விளக்கம்...

தசாவதாரம் புண்ணியத்தில் "க்யோஸ் தியரி" என்ற ஒன்று இருப்பது பற்றி தெரிந்திருப்போம். மொத்தமாக குழப்பி இதுதான் க்யோஸ் தியரி என்றதும் நம் ரசிகர்கள் கொஞ்சம் பேர் டென்ஷன் ஆனார்கள். நமது சகபதிவர் கயல்விழியின்
'தசாவதாரம்" விமர்சனம் பதிவில் ஒரு பின்னூட்டத்தில் "Butterfly effect"யைப் பற்றி அறிய "Butterfly effect" படத்தைப்
பாருங்கள் என்று கூறியிருந்தார்.

கடந்த வாரம் படம் ஏதாவது படம் டவுண்லோட் செய்யலாம் என்று நெட்டில் மேய்ந்த போது கண்ணில் பட்டது தான் "Butterfly effect". உடனே இறக்கினேன் இரண்டு பாகத்தையும்.

ஆனால் படம் எதிர்பார்த்தது போல் இல்லை. ஒருத்தனுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் குழப்பத்தை மிகத் தெளிவாக கூறியிருக்கின்றனர். அதாவது பன்னிரெண்டுவயதில் ஒருத்தனுக்கு ஒரு சம்பவம் நடக்கிறது அவன் அப்போது எடுக்கும் ஒரு முடிவால் தன் கல்லூரி பருவத்தில் தோழி இறக்க, பின்பு திரும்பவும் அதே 12 வயதிற்கு சென்று வேறு முடிவெடுக்க அதில் தன் கல்லூரி பருவத்தில் ஒரு கொலை செய்து ஜெயிலுக்கு போக, பின்பு திரும்பவும் அதே 12...........

இப்படியே ஹீரோவுக்கு நல்ல முடிவு வரும் வரை தொடர்கிறது நம்ம 12B போல. ஸாரி இது 12B விட தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். "Butterfly effect-2"வும் ஒரே கதையமைப்பு கொண்டவை. கதைக்களம் மட்டும் வேறு வேறு.

ஆமா இது எப்படி க்யோஸ் தியரியோடு ஒத்துப்போகும். "Butterfly effect"ன் தியரியே ஆப்பிரிக்காவில் பட்டாபூச்சியின் இறக்கை துடிப்பதற்கும் அமெரிக்காவில் புயல் அடிப்பதற்கும் தொடர்பு இருக்கிறது என்பதாகும்.
அதாவது உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் ஒரு விசயத்திற்கும் வேறு ஒரு மூலையில் நடக்கும் மற்றொரு விசயத்திற்கும் கன்னா பின்னாவென்று தொடர்பு இருக்குமாம்.

ஆனால் இதில் தனிமனிதன் ஒருவன் தன் வாழ்வில் ஒரு சமயத்தில் எடுக்கும் முடிவு அவனின் தலையெழுத்தையே மாற்றுகிறது. இது எப்படி க்யோஸ் தியரியோடு ஒப்பிடுவது?. அதில் சுவாரஸ்யம் அதிகம் இருப்பதாக தெரியவில்லை.
நான் கூட +2 முடித்தவுடன் ஐ.ஐ.டி entrance exam எழுதியிருந்தால் இந்நேரம் என் வாழ்கை எங்கேயோ போயிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் நான், தண்டையார் பேட்டையிலிருந்து அடையாருக்கு போக
பஸ்ஸுக்கு காசில்லாததால் entrance exam application form வாங்க முடியவில்லை. சரி விடுங்க என் சோகம் என்னோட போகட்டும்.

இப்ப விஷயத்திற்கு வருவோம்.. நம்ம வாழ்க்கையிலும் நமக்கு தெரியாம க்யோஸ் தியரி நிறைய விளையாடியிருக்கும் ஆனால் நமக்கு தான் அது தெரியவதில்லை. அந்த அளவிற்கு நாம் அப்பாவியாக இருக்கிறோம். எனக்கும் "Butterfly effect"
ஏற்பட்டுள்ளது. சரியாக சொல்லவேண்டுமானால் அது ஒரு "peacock effect".

அதிர்ச்சியடைய வேண்டாம்.....விளக்குகிறேன். சுமார் 18 வருடங்களுக்கு முன்னால்.....

எனக்கு ஆறு வயது இருக்கும். வெள்ளந்தி மனது. எங்கள் வீட்டிற்கு "நவீன் அப்பா" வந்திருந்தார். அவரை அப்படிதான் அழைப்போம்.
அவரது மகன் பெயர் "நவீன்". முன்பு எங்கள் வீட்டின் அருகில் அவர் குடும்பமும் இருந்தது. பின்பு வீடு காலி செய்து
வேறு எங்கேயோ போய் விட்டனர். அடிக்கடி வருவார். இந்த மாதிரி வெயிலில் யாராவது வரும் போது வீட்டில்
"ரோஸ் மில்க்" கொடுப்பது வழக்கம். அம்மா சமையலறையில் ஒரு டம்ளரில் ரோஸ்மில்க் ஊற்றிக்கொண்டிருந்தார்.
நான் "அம்மா எனக்கு?" என்றேன். "பால் காலி ஆயிடுச்சு, இப்ப தான குடிச்ச அதுக்குள்ள என்ன கொள்ளையில
போகுது" என்று சத்தமாக திட்டியபடியே உள்ளே சென்று அவரிடம் குடுத்தார். நான் அம்மா திட்டியதால் நான்
கோபித்து, பின்பு ஒரு நிமிடம் போல கழித்து உள்ளே சென்றேன்.

அவர் சிரித்தபடியே "தம்பி இந்தா" என்று டம்ளரை நீட்டினார். நான் ரோஷமாக "இல்லை வேண்டாம்" என்றேன்.
அவர் திரும்பவும் "இல்ல தம்பி இத பிடி" என்றார். நான் இன்னும் சத்தமாக "இல்லங்க வேண்டாம்" என்றேன். அவர்
"இல்லப்பா இது வெறும் டம்ளர் தான் இத பிடி" என்று நக்கலாக சிரித்தபடி டம்ளரை நீட்டினார்.(எனக்கென்ன தெரியும்
அந்தாளு ஒரு நிமிஷத்தில அத குடிச்சு தொளப்பாருன்னு). நான் கொஞ்சம் அவமானமாக அதை வாங்கி வைத்தேன்.

சின்னக்கா, பெரியக்கா என எல்லோரும் அவர் போன பிறகு சிரித்த சிரிப்பு எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் அண்ணன் வந்ததும் அவரிடமும் சொல்லி கிண்டலடித்தனர் நான் ஏதோ பத்திரிக்கைகாரனிடம்
'ஷூ'வில் அடிவாங்கியமாதிரி.

இதுக்கு யார் காரணம்????? இங்கு தான் கியோஸ் தியரி விளையாடியிருக்கிறது. நான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு
ஒரு தடவை சென்ற போது அங்கு ஒரு மயில் தோகை விரித்தாடி ஆடிக் கொண்டிருந்தது. அம்மாவிடம் ஏன் என்று
கேட்ட போது "மழை வரப்போகுது" என்றார். அந்த வருடம் நல்ல மழை. மழை அதிகம் பெய்ததால் நெல் எல்லாம்
வெள்ளத்தில் மூழ்கியது. நெல் அதிகம் இல்லாமல் வைக்கோல் அதிகம் கிடைக்கவில்லை. வைக்கோல் இல்லாமல்
மாடுகள் உணவு இல்லாமல் பால் அதிகம் சுரக்கவில்லை. பால் சுரக்காததால் பால் பண்ணையில் பால் கிடைப்பது
டிமாண்ட் ஆனது. ஆதலால் ரோஸ்மில்க் போடும் போது பால் கிடைக்காமல் போனது.

இப்போது சொல்லுங்கள் இதற்கு "peacock effect" தானே காரணம். இதே விசயத்தை கமல் தெளிவாக சொல்லாததால்
பாதி பேருக்கு புரியவில்லை. இந்த விளக்கம் போதுமென்று நினைக்கிறேன். போதுமென்று நினைப்பவர்கள் கீழே தமிலீஷில்
ஒரு ஓட்டும் தமிழ்மணத்தில் தம்ஸ் அப்பையும் க்ளிக் செய்யவும்.

எச்சரிக்கை: விளக்கம் போதவில்லை என்று நினைத்து ஓட்டு போடவில்லையென்றால் நிறைய விளக்கங்கள்
என்னிடம் உள்ளது அவையெல்லாம் அடுத்து வெளியிடப்படும்.

'லக்கி'யை மட்டும் நம்பகூடாது..

இப்பதிவை எழுதிவிட்டு இதை வெளியிடலாமா வேண்டாமா என்று ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டி விட்டால் தலை
வந்தது. சரியாக சுண்டவில்லை என்று தீர்மானித்து பின்பு மறுபடியும் சுண்டினேன். இந்த முறையும் தலை வந்ததில்,
உட்கார்ந்து கொண்டு சுண்டினால் மரியாதையாக இருக்காது என்று, இந்த தடவை நின்று கொண்டு சுண்டியதில் பூ
விழுந்து பதிவை வெளியிடலாம் என்று உத்தரவு வந்தது.

ஒரு ரூபாய் நாணயத்திற்கு இரண்டு பக்கமும் பூ இருக்க கூடாதா என்று இம்மாதிரி நேரங்களில் நினைத்ததுண்டு.

இது இப்பொழுது தொடங்கியதில்ல சிறு வயதில் இது போல் பல விஷயங்களில் தொடங்கியது. நான்காவது வகுப்பு
வரை A B C D முழுசாகக் கூட தெரியாமல் இருந்தேன். சென். காப்ஸில் (ST.Cops அல்ல.. சென்னை கார்ப்பரேஷன்
என்பதின் சுருக்கம்). ஆறாவது என்று நினைக்கிறேன் காலாண்டு தேர்வில் ஆங்கில தேர்வு வரும் போது பயம் எடுத்துக்
கொண்டது. சின்னக்கா என்னதான் சொல்லிகொடுத்தாலும் மனதில் நிற்காது.

தெரியாத கேள்வியா வந்தால் அட்லீஸ் தெரிந்த கேள்வி & பதில் எழுதிவிட்டு வா என்று சின்னக்கா அட்வைஸ்
செய்யும். எதுவும் எழுதாமல் வராதே என்று திட்டும். நான் சாமி கும்பிட்டு திருநீறு பூசிக் கொண்டு இது பரிட்சை முடியும்
வரை அழியாமல் இருந்தால் பரிட்சை நன்றாக எழுதுவேன் என்று நம்பிக்கையோடு செல்வேன்.

பரிட்சை பேப்பரை பார்த்ததும் ஒரு கேள்விக்கும் பதில் தெரியாமல் 'போச்சுடா' என்று நெற்றியில் கைவைப்பேன்
திருநூறு அழிந்து போகும். பின்பு சாயங்காலம் திருநூறு அழிந்ததால்தான் சரியாக எழுதமுடியவில்லை என்று நினைத்து
வருத்தப்பட்டதுண்டு.
(ஒரு தடவை பதில் தெரிந்த கேள்வியான "what is your name?" "how old are you?" எழுதிவிட்டு
வந்தேன். அதற்கும் டிக் போட்டு மார்க் கொடுத்தார் அந்த பாரி வள்ளல் சென்.காப்ஸ் ஆசிரியர் :-)

ஏதாவது ஒரு விஷயத்தை மனதில் நினைத்துக்கொண்டு போய்கொண்டிருக்கும் போது தூரத்தில் இருக்கும் கல்லை,
அருகில் இருக்கும் மற்றொரு கல்லால் காலால் தட்டிவிட்டு அது மற்ற கல்லின் மேல் பட்டால் நினைத்த காரியம் நடக்கும்
என்று நினைப்பேன். ஆனால் இந்த கல் அந்த கல்லின் அருகே போய் நின்று விடும். பின்பு அருகில் சென்ற இந்த
கல்லை திரும்பவும் தட்டி விட்டு (அதாவது அந்த கல்லில் படும் வரை) மனநிறைவுடன்(!) செல்வேன்.

ஏதாவது ஒரு பொருளை எறிந்து விட்டு திரும்பவும் அதே இடத்தில் விழுந்தால் மட்டுமே அந்த இடத்தை விட்டு
நகரவேண்டும் என்று அரைமணிநேரத்திற்கும் மேலாக வீணாக்கியிருக்கிறேன்.

கிரிக்கெட்டில், பீல்டிங் செய்யும் போது அவுட்டே ஆகாமல் ரன்களை குவிக்கும் எதிர்டீமில் ஒருத்தன்
நான் யதேச்சையாக ஒரு காலை மடக்கி மற்றொரு காலின் முட்டியின் பின்புறம் சொறியும் போது அவுட்டானான். பின்பு
அடுத்த ஒவ்வொரு பாலும் அதே போல் மடக்கி மடக்கி, பின்பு அடுத்தவன் அவுட்டாகாமல், அப்போது போல் இப்போது
கரெக்ட்டா அதே இடத்தில் காலை மடக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுக்கொள்வேன்.

அடுத்த வருடம் மார்ச்சில் முடிவடையும் விசாவை இதோடு முடித்துக் கொண்டு ஊருக்கு போலாமா அல்லது இன்னும்
ஒரு விசா நீட்டிக்கலாமா என்று ஆபிஸ் சேரில் உட்கார்ந்து யோசிக்கும் போது, கையில் உள்ள கசங்கிய பேப்பரை
தொலைவில் உள்ள குப்பை கூடையில் சரியாக போட்டால் நீட்டிக்கலாம் இல்லையென்றால் இதோடு நிறுத்திக்கொள்ளலாம்
என்று முடிவுசெய்தேன். இரண்டு தடவை சரியாக விழாமல் கீழே விழுந்தது. பின்பு யூஸ் செய்த பேப்பரை போட
வேண்டாம் என்று புதிய A4 பேப்பரை கசக்கி சரியாக போட்டேன். விசாவை நீட்டிக்கலாம் என்று முடிவுசெய்தேன்.

ஆனால் அங்கு வந்த மேனேஜர், நான் ஏதோ ஆபிஸ் நேரத்தில் விளையாடுவதாக தவறாக நினைத்து செம டோஸ்
கொடுத்தார்.....அநேகமாக விசாவை அவர்களே கேன்சல் செய்தாலும் செய்வார்கள்.

ஆகவே மக்களே நீங்களும் என்னை போல் இந்த மாதிரி 'லக்கி'யை(அட அதிர்ஷ்டத்தங்க..ஏன் நீங்க வேற எதாச்சும் நினைச்சீங்களா?)
நம்பி நாசமா போகாம பொழைக்கிற வழியை பாருங்கோ...........

உங்களுக்கு யார் மேலவாவது கோபம் இருக்கும், உங்க மேலதிகாரிகிட்ட, தங்கமணி, ரங்கமணி ஏன் இந்த பதிவ
படிச்சுட்டு என் மேல கூட இருக்கலாம். அந்த ஆத்திரத்தை கீழ உள்ள தமிழீஸ் முத்திரையில இரண்டு குத்து
குத்தினீங்கன்னா சரியா போகுது.

"ஓடி விளையாடாதே பாப்பா"

நேற்று காலையில் வேலைக்கு கிளம்பும்போது கையில் ரிமோட் கிடைத்தது. எங்க ரூம் டி.வி ரிமோட் தான் அது. எப்பவுமே ஏதாவது மலையாள சேனல் ஓடிக்கொண்டிருக்கும், இந்த மாதிரி அத்தி பூத்தாற் போல என் கையிலும் சில சமயம் ரிமோட் கிடைக்கும். ரூமில் இரண்டு தமிழ் சேனல் தெரியும், கலைஞர் டி.வி மற்றும் இசையருவி. சரி சுபவீரபாண்டியனின் "ஒன்றே சொல் நன்றே சொல்" வரும் பார்க்கலாம்ன்னு கலைஞர் டி.வி வச்சா "ஓடி விளையாடு பாப்பா"ன்னு ஒரு நிகழ்ச்சி ஓடிகிட்டு இருக்கு. அட இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை.



அப்படியே மானாட மயிலாட நிகழ்ச்சியை மினிமைஸ் செஞ்சு பாக்கிறமாதிரி இருந்தது. அதுல நிகழ்ச்சியை தொகுத்து வழங்குற இரண்டு வாண்டுகளையும் எங்கையோ பார்த்த மாதிரி இருந்தது. சரியா ஞாபகம் இல்லை. அந்த பையன் முடி எல்லாம் குச்சி குச்சியா நீட்டிகிட்டு இருந்தது. அந்த குட்டி பொண்ணு எதிர்காலத்தில ஹீரோயின் ஆகனும்ன்னு இலட்சியம் போல. அதுக்கேத்த எல்லா தகுதியும்(?) இப்பவே வளர்த்துகிட்டு வருது. இதுல அப்பாஸ் மற்றும் இன்னொரு ஆள் நடுவர்கள் வேற.

அந்த இரண்டு பேரையும் ஒரு கையால் வாரி நெஞ்சோடு அணைத்து மற்றொரு கையால் "நறுக்" "நறுக்" "நறுக்"ன்னு நாலு கொட்டு கொட்டி "இனிமே இந்த மாதிரி அதிகபிரசங்கிதனமா பேசுவையா..ம் சொல்லு பேச மாட்டேன்னு" செய்யனும்ன்னு ஒரே எரிச்சலா வந்தது. அந்த இரண்டு பேரும் பேசுறத பாக்கிற போது...

இரண்டு பேருகிட்டையும் ஒரு குழந்தைதனமே இல்லை. இதையெல்லாம் எப்படி அவுங்க பெத்தவங்க எப்படி எடுத்துகுறாங்கன்னு தெரியல. கண்டிப்பா பெருமையா தான் இருக்கும் :-( இந்த டி.வி நிகழ்ச்சியால குழந்தைகளோட ஒரு அருமையான குழந்தை பருவம் மறைந்துகொண்டுவருகிறது. எல்லாம் இந்த கருமம் பிடிச்ச டி.வி வந்ததுலேயிருந்து தான். ஆடவரும் குழந்தைகளும் இதே போல தான்...

எனக்கு "Bridge to terabithia"ன்னு ஒரு ஆங்கில படம் தான் ஞாபகம் வருது. walt disney தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த படம். "Gabor csupo" இயக்கியிருக்கும் படம்.



பத்து வயது "ஜாஸ்" கதையின் நாயகன். ஜாஸின் குடும்பம் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம். இரண்டு அக்காள் மற்றும் இரண்டு தங்கைகள் என பெரிய குடும்பம். இரண்டு அக்காள்களும் டி.வி பார்பதிலும் கேளிக்கைகளிலும் நேரத்தை வீணடிக்கும் சராசரி அமெரிக்க இளைஞிகள். தன்னை போலவே ஒரே அலைவரிசை கொண்ட ஆறு வயது தங்கை. பின்பு மற்றுமொரு கைக்குழந்தை தங்கை.


ஜாஸ் சராசரி சிறுவன் போல் அல்லாமல் ஓவியம், விளையாட்டு என்று சிறந்து விளங்குகிறான். மற்ற மாணவர்களைப் போல் சினிமா டி.வி போன்ற எதிலும் நாட்டம் இல்லாததால் அவனுக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. மாறாக அவனை கண்டால் எல்லோரும் கிண்டலடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.


தன் ஆறு வயது தங்கை தன் ரசனையுடையவளாய் இருந்தாலும் தன்னை விட சிறுவயதுடையர்களுடன் நட்பு கொள்ள அமேரிக்க சிறுவர்களுக்குண்டான ஈகோ இவனையும் தடுக்கிறது.


அச்சமயத்தில் பக்கத்துவீட்டில் குடிவரும் லெஸி என்ற ஒரே பத்து வயது சிறுமியுடன் நட்பு கொள்கிறான். இருவரும் ஒரே ரசனையுடையவர்களாய் இருக்கின்றனர். ஒரே வகுப்பில் படிக்கும் அவர்கள் மற்ற மாணவர்களை விட புத்திசாலிகளாகவும் சிறந்த நண்பர்களாகவும் இருக்கின்றனர்.


ஒரு நாள் மாலை வீட்டை விட்டு தொலைவில் ஒரு காட்டின் அருகே விளையாடச்செல்லும் இருவரும் ஒரு சிறியஓடையின் அருகே வந்தடைகின்றனர். அருகே ஒரு பெரிய மரத்தில் ஒரு கயிறு கட்டி தொங்குகிறது. அதைப் பார்த்ததும் லெஸி கயிற்றில் தொங்கி விளையாடுகிறாள். பின்பு "ஏன் நமக்கென்று ஒரு இடம் இருக்கக்கூடாது?" அங்கே நம்மை கிண்டலடிக்க யாரும் இருக்கமாட்டார்கள். அது நமக்கே நமக்குரியதாய் இருக்கவேண்டும், அது ஒரு "மாயாஜால இராஜாங்கம்" என்று லெஸி கூறுகிறாள். ஜாஸ் ஒன்றும் புரியாமல் முழிக்கிறான். பின்பு அவள் அந்த கயிற்றில் தொங்கியபடியே ஓடையின் அப்புறத்திற்கு குதிக்கிறாள். ஜாஸ் பயந்தபடியே பின்தொடர்கிறான்.


ஓடையின் அப்புறத்தில் அவர்களுக்கென்று ஒரு இராஜாங்கம் காத்திருக்கிறது. அதில் மரத்தினால் ஆன இராட்சச மனிதன் இருக்கிறான். தும்பிகளினால் ஆன போர்படை இருக்கிறது. சில வில்லன்களும் இருக்கிறார்கள். அந்த இராஜாங்கத்திற்கு "terabithia" என்று பெயரிடுகிறார்கள்.


தினமும் அங்கு சென்று விளையாடுகிறார்கள், பேசுகிறார்கள் சில சமயம் தீயவர்களுடன் சண்டையும் போடுகிறார்கள்.


இப்படி போகும் கதையில் ஒரு நாள் ஜாஸ் இல்லாமல் லெஸி மட்டும் "terabithia"விற்கு செல்லும் போது ஒரு விபத்தில் இறக்கிறாள். அவளின் இறப்பு ஜாஸை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. "terabithia"வை கண்டு பயப்படுகிறான். நண்பர்கள் இறந்தாலும் உண்மையான நட்பு இறப்பதில்லை என்று தனது தந்தை கூறும் அறிவுரையை கேட்டு தெளிவடைகிறான்.


அந்த ஓடையின் குறுக்கே ஒரு பாலம் அமைக்கிறான். தன் தங்கையை அந்த இராஜாங்கத்திற்கு அழைத்து வருகிறான். ஆரம்பத்தில் அவள் கண்ணிற்கு எதுவும் தெரியவில்லை. பின்பு கண்களை மூடி திறந்த மனதுடன் கண்களை திறக்கும் போது அனைத்தும் தெரிகிறது, நமக்கும் எல்லாம் தெரிய ஆரம்பிக்கிறது. ஜாஸ் அந்த இராஜாங்கத்திற்கு அரசன் ஆகிறான். அவன் தங்கை இளவரசி ஆகுவதோடு படம் முடிவடைகிறது.


இதில் குறிப்பிடவேண்டிய கதாபாத்திரம் லெஸி. ஒரு குட்டி தேவதையாக அறிமுகம் ஆகி ஒரு வித தாழ்வுமனப்பான்மையுடன் இருக்கும் ஜாஸை அதிலிருந்து அவளது நட்பு மீட்பது மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.


டி.வியே பார்க்காத அல்லது பார்க்க விருப்பபடாத இரு குழந்தைகளின் கற்பனை உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். அனைத்து விஷயங்களிலும் அவர்களின் ஈடுபாடு எவ்வாறு இருக்கும் என்பதும் தெளிவாக காட்டியிருக்கிறார்கள்.


ஒரு காட்சியில் பள்ளியில், இன்று டி.வியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியிலிருந்து குறிப்பு எடுத்துவருமாறு ஆசிரியர் கூறும் போது "டி.வி இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று லெஸி கேட்கும் போது வகுப்பறையே கொல் என்று சிரிக்கிறது. அதில் ஒரு மாணவன் "டி.வி இல்லாமல் எப்படி இருக்கமுடியும்?" என்று கேட்கும் போது "எனது அப்பா டி.வி, மூளையில் உள்ள செல்களை வளரவிடாமல் கொல்கின்றன, அதனால் பார்க்க வேண்டாம் என்றிருக்கிறார்" என்கிறாள். அது எவ்வளவு உண்மை என்று படத்தைப் பார்க்கும் போது தெரிகிறது.


அந்த "மாயாஜால இராஜாங்கம்" நிஜமா கற்பனையா என்று நம்மை யோசிக்கவைக்காமல் அந்த உலகத்திற்கு நம்மை அந்த சிறுவர்களோடு கொண்டுச் செல்வது கதாசிரியரின் சாமார்த்தியம்.


இது "Katherine Paterson" எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. ஜாஸ் ஆக "Josh Hutcherson"ம் லெஸியாக "Anna sophia robb" நடித்திருக்கிறார்கள்.


இது கண்டிப்பாக குழந்தைகளோடு நாமும் பார்க்க வேண்டிய படம்.

IT அவலம்!

முதல்வருக்கு செய்திதுறை இயக்குனர் மோகன் தாஸ் கொடி நாளை முன்னிட்டு கொடி அணிவிக்கிறார்.


மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிடும் மு.க.ஸ்டாலின்....


மும்பை குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி(!) செலுத்தும் மாணவிகள்...



இது ஐ.டி ஸ்பெஷல்...

கிரிக்கெட் பார்க்க தயாராகும் மாணவிகள்.....

'பரிசல்கார(ரி)னிடம்' ஒரு கேள்வி?

நண்பன் ஒருவன் ஏன் அதிகமான பதிவுகள் இடுவதில்லை என்று கேட்டான். எழுத நிறைய விஷயம் இருந்தும் அதை எழுத சோம்பேறிதனத்தாலும், எழுதுவதில் போதிய அளவு அனுபவம் இல்லாததால் எழுத தோணுவதில்லை. இதையெல்லாம் அவனிடம் சொன்னால் பேச்சு 'வழவழ' என நீளும் மேலும் அவனிடம் பேச்சு கொடுத்தால் சந்தேகம் கேட்டே கொன்று விடுவான் என்பதால் "ஆணி அதிகம்டா அதுனால் நிறைய எழுதமுடியல.."ன்னு சொன்னேன்.

அவனுக்கு புரியல....என்னது ஆணி அதிகமா? அப்படின்னா என்ன? என்று திரும்பவும் கேட்டான். சரி இவனுக்கு அதோட உண்மையான விளக்கத்தை சொன்னா திரும்ப திரும்ப சந்தேகம் கேட்பான்னு படம் போட்டு காண்பிச்சேன்.

ss

இத பாத்ததுக்கு அப்புறம் இதுல எது தேவையில்லாத ஆணி தேவையுள்ள ஆணின்னு டவுட்டு கேட்டான். போடோ ங்கொய்யால....சொல்லிட்டு வந்துட்டேன்.

இன்னொரு நாள் நம்ம அப்துல்லா அண்ணே எங்கையோ "உள்குத்து" "வெளிகுத்து"ன்னு பின்னூடத்தல யூஸ் பண்ணியிருப்பாரு போல அதை பார்த்துட்டு அப்படின்னா என்னன்னு கேட்டான். உடனே படம் போட்டு காமிச்சேன்.

ss


ss

இதை பார்த்துட்டு அப்ப சைடு குத்துன்னா என்னன்னு கேட்டான். போடா ங்கொய்யால...

இப்ப கேள்விக்கு வருவோம்...

பரிசல்காரரே இந்த மாதிரி பதிவிற்கு சம்பந்தமே இல்லாம தலைப்பு வைப்பது எனக்கு நடந்திருக்கு உங்களுக்கு நடந்திருக்கா?

டிஸ்கி: அப்பாடா எப்படியோ தலைப்புக்கும் பதிவிற்கும் லின்ங் கொடுத்தாச்சு :-)

நாங்களும்(விஜயை போல) "ஹீரோ" தான்!

குஷி படத்தில நம்ம "டாக்டர்" விஜய் ஒரு பாட்டுல கயிறை கட்டிகிட்டு மேல இருந்து கீழ குதிப்பாரு. அதை அப்படியே வாய பொழந்துகிட்டு "அகஸ்தியா" தியேட்டர்ல பார்த்துட்டு "மச்சி எப்படிடா விஜய் மேலிருந்து கீழ குதிச்சாரு? ஒருவேளை டூப்பா இருக்குமோ"ன்னு நண்பர்கள் எல்லாம் பேசிட்டு வந்திருக்கோம்.

இந்த வருஷம்(பிப்ரவரி '08) துபாயில "bungy jump"ன்னு நம்ம DSFல்ல (dubai shopping festival) தொடங்கியிருக்கிறதா நம்ம நண்பர் போன் பண்ணி சொல்ல, உடனே துபாயிக்கு புறப்பட்டேன். அதாவது 60 அடி மேல இருந்து கீழ குதிக்கனும். கிடைக்கிற சான்ஸ ஏன் விடனும். வீடியோவோட சேர்த்து 350 திரம்ஸ் ஆச்சு.

என்னோட துரதிஷ்டம் அது கடைசி நாள். மாலை ஆறு மணிக்கு மேல ஆயிடுச்சு. இருட்டிடுச்சு. சரி பரவாயில்லை குதிக்கலாம்ன்னு குதிச்சதுதான் கீழ இருக்கிற வீடியோ. இருட்டினதுனால வீடியோ கொஞ்சம் க்ளியரா இல்லை.:-(

ஹி..ஹி..பேக் க்ரவுண்ட் மியூஸிக் நம்ம கைங்கரியம்.....



அந்த பேக் க்ரவுண்ட் மியூஸிக் பிடிக்காதவங்களுக்கு இது..ஹி...ஹி


டிஸ்கி:வீடியோவை பாராட்டி எழுதினா அவுங்க பதிவில(எப்பேர்பட்டதானாலும்) வந்து 25 பின்னூட்டம் போடப்படும்.

தீவிரவாதத்தை எப்படி அழிக்கலாம்?

எச்சரிக்கை: உள்ளே வர வேண்டாம்





ss


அய்யோ தலைதலையா அடிச்சுகிட்டேனே உள்ள வராதீக உள்ள வராதீகன்னு கேட்டீகளா..பாவி மக்கா இப்படி
என்னைய ப்ளேடு போட்டு உங்க காதுல இருந்து இரத்தம் வர செய்தீட்டீகளே... பயபுள்ளக என்னையும் இப்படி
கொலகாரனா மாத்திட்டீகளா ஆ..ஆ....ஆ....லேபில பாத்துமா உங்களுக்கு தெரியல...
போங்கயையா போங்க போய் புள்ளகுட்டிய படிக்கிற வேலைய பாருங்க.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்


ss1

ஒரு பிரபலத்தின் (வெளிவராத) பேட்டி!

நிருபர் : "சார் வணக்கம்"

பிரபலம் : "வாங்க வணக்கம், என்ன இந்த பக்கம்? என்னை கூட ஞாபகம் வச்சிருக்கீங்க பரவாயில்லை"

நிருபர் :"இல்ல சார் இந்த தடவை உங்கள பத்தி தான் ஊரே பேசுதே, நீங்க இவ்வளவு கொடூரமா நடப்பைங்கன்னு யாரும் எதிர் பார்க்கல"

பிரபலம் :"ஒரு நிமிஷம் நிறுத்துங்க..சும்மா சும்மா நான் ரொம்ப கடுமையா நடந்திட்டுருக்கேன்னு சொல்றீங்களே, அவுங்க செய்ததை நீங்க பேசவே மாட்டீங்களா"

"உங்களுக்காகவும் சில பேர் பேசுறாங்க..ஆனா நீங்க திடுதிடுப்புன்னு மத்தவங்க வீட்டுக்கு போயி அவுங்கள வீட்டை விட்டு வெளியேத்துறது ரௌடிசம் மாதிரி இல்லையா"

"என்னது அவுங்க வீடா?, அதுவுமில்லாம நான் ரௌடிசம் பண்றேனா? என்ன வார்த்தை சொல்றீங்க.. எங்க பரம்பரை பத்தி இந்த ஊருக்கே தெரியும். இன்னும் என்னோட மூதாதயரை கடவுளா வணங்குறவுங்களும் இருக்காங்க நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்னு இந்த மக்களுக்கு தெரியும் இந்த மாதிரி வதந்தியை பரப்புறதே உங்க மீடியா தான்"

"சார் எல்லாரையும் மாதிரி மீடியாவை குத்தம் சொல்லாதீங்க. நாங்க என்ன நடக்குதோ அதையே தான் காட்றோம்"

"நீங்க மும்பையில காட்டுனத பத்திதான் ஊரே பேசுதுதே! சரி நான் அவுங்க வீட்ல திடுதிடுப்புன்னு நுழைச்சதா சொல்றீங்களே அவுங்க இருக்குறது என்னோட நிலம். அத அநியாயமா அபகரிச்சு வீட்டை கட்டியிருக்காங்க அப்ப எங்க போச்சு உங்க மீடியா?"

"நாங்களும் இத அப்பப்ப அரசாங்கத்துக்கிட்ட மறைமுகமாக சொல்லிகிட்டுதான் இருக்கோம். இதுமல்லாம எங்களோட டி.வி.ல இதபத்தி அப்பப்ப காட்றோம். ஆனா ஆளும்கட்சியே இதை செய்யும் போது நாங்க என்ன சார் செய்ய முடியும்"

"நீங்க சொல்றதும் சரி தான். நானும் என்ன செய்யிறது சொல்லுங்க..மாசத்தில எத்தனை நாடுகளுக்கு போக வேண்டி இருக்கு தெரியுமா. எவ்வளவு பிஸி தெரியுமா. இவ்வளவு பிஸில இங்க யாராவது வீடு கட்டுறாங்களா இல்லையான்னு எப்படி தெரிஞ்சுகிறது. இத்தனைக்கும் சில வருடங்களுக்கு முன்னால ஒரு சில பேரை கொண்டு சில அமைப்புகளை எல்லாம் உருவாக்கினேன். ஆனா அவுங்களாளையும் எதுவும் செய்ய முடியல. நான் இங்க இருக்குறதே கொஞ்ச நாள் தான். ஆனாலும் இங்க நான் வந்தேன்னா செய்யிற நல்லதெல்லாம் மீடியாவில இருக்கிற உங்களுக்கும் தெரியும். ஏதோ இடையில ஒரு ரெண்டு மூணு வருஷம் வரமுடியல. அதுக்குள்ள என்னோட இடத்தை ஆக்கரமிச்சு கட்டிட்டாங்க. அதான் இந்த வருஷம் இத்தனை பேரோட வந்து....கொஞ்சம் அதிகமா பிரச்சனை ஆகிடுச்சு"
"உங்களுக்கு வேண்டியவங்கள கொலை செய்யிறதா வேற சொல்லியிருந்தீங்க?"

"ஆமா, நான் இங்க வருவதற்கு அவுங்களும் ஒரு காரணம், ஆனா அவுங்களையும் இங்க இருக்கவங்க வெட்டி கொன்னுருக்காங்க. இதுதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவுங்க யாருக்கும் ஒரு பாவமும் செய்யாத அப்பாவிங்க. அவுங்கள போய் கொன்னுருக்காங்க. அவுங்கள கொன்னுட்டா நான் இங்க வருவதை தடுக்க முடியும் என்று நினைக்கிறாங்க. ஆனா அந்த முட்டாள்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் இதனால் என்னுடைய வருகை ரொம்ப ஆவேசமா இருக்கும், மேலும் அவர்களை நான் வீடு புகுந்தும் அடிப்பேன்"

"நீங்க மட்டும் இவ்வளவு அநாகரிகமா பேசலாமா?"

"மன்னிக்கனும், நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன், நான் இங்க வருவதை ஏன் தடுக்குறாங்கன்னு தெரியல இதுனால அவுங்களுக்கு என்ன நன்மையின்னும் தெரியல"

"சரி இப்ப இதுக்கு என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க"

"அதுதான் எனக்கும் தெரியில. எனக்கு மேலை நாட்டுலயெல்லாம் நிறைய இடம் இருக்கு அங்கெல்லாம் இந்த மாதிரி நடக்கிறதில்லை. அங்கெல்லாம் எனக்கு நல்ல மரியாதை இருக்கு. இங்க மட்டும் தான் இப்படி. ஆனா ஒன்னு நான் உங்க ஊருக்கு வருவதை நிறுத்தினா உங்க அரசாங்கத்துக்கு எவ்வளவு இழப்பு தெரியுமா. இது உங்க ஆட்சி பீடத்தில் மாறி மாறி உட்கார்ந்திருக்கும் எல்லா முதலைமைச்சருக்கும் தெரியும்"

"அப்படின்னா நீங்க வருவதை முன்னாலேயே தெரிவிச்சுருந்தா இங்க முன்னேற்பாடு செய்திருப்பாங்களே? நீங்க ஏன் முன்னாடியே சொல்லல?"

"நான் தான் வருவேன் டி.வி.ல வானிலை மையத்தலைவர் ரமணி சொல்லியிருந்தாரே, நீங்க பாக்கலையா? சரி நான் தான் ஒவ்வொரு வருஷம் ஆகஸ்டு மாசத்திலிருந்து டிசம்பர் வரைக்கும் எப்பவேணா தீடீர் திடீர்ன்னு வருவேன்னு தான் எல்லாருக்கும் தெரியுமே. இது கூட உங்க அறிவுக்கு தெரியல" என்று கோபமாக கூறி பேட்டியை முடித்துக் கொண்டு வேறு இடத்திற்கு செல்லவிருப்பதால் நம் பிரபலம் "மழை" இங்கு பெய்வதை நிறுத்திவிட்டு வேகமாக சென்று மறைந்தார்.


இது நம்ம பிரபலம்!


இது அவருக்கு வேண்டியவங்க....


துபாயில் பேக்கரி கடை ஓனர் "வீரபாகு"

துபாயிலிருந்து சென்னைக்கு கூட ஈஸியா வந்துடுலாம். ஆனா வெள்ளிக்கிழமை துபாயிலிருந்து சார்ஜாவிற்க்கு டாக்ஸி கிடைச்சு பின்ன அந்த டிராபிக்ல மீட்டர் ஓடுறத பார்த்து பிரஷர் எகிறி ரூமுக்கு வருவதற்குள் தாவு தீர்ந்திடும்.

நேத்து நண்பர் ஒருத்தர பார்த்துட்டு "வாரணம் ஆயிரம்" படத்துக்கு போகலாம்ன்னு கலீரியா தியேட்டருக்கு போனா அந்த படத்தை தூக்கிட்டு "டிவண்டி-20" மலையாள படம் ஓடிட்டுருக்கு. சரி இனி டி.வி.டில தான் பார்க்கனும் போல நினைச்சுட்டு வந்துட்டோம்.

அங்கிருந்து திரும்ப ரூமிற்கு வரம்போதும் தான் பிரச்சனை ஆரம்பமாச்சு. டாக்ஸியே கிடைக்கல. கிடைச்சாலும் சார்ஜா வரமாட்டேங்கிறான். இது ஏதோ இந்தியா போலவும் அது ஏதோ பாகிஸ்தான் போலவும் நினைக்கிறானுங்க. எல்லாம் இந்த வெள்ளி கிழமையும், சாயங்கால நேரத்திலேயும் தான்.

போன ஜென்மத்தில பண்ணுன புண்ணியம் போல ஒரு டாக்ஸிகாரன் வந்தான். சார்ஜா சொன்னத்தும் ஏறிக்கோன்னு சொன்னான். பாகிஸ்தான் டிரைவர்.

ரொம்ப சந்தோஷமா பேசிகிட்டே வந்தான். டிராபிக் அதிகமா இருந்தனால பேசுறதும் கொஞ்சம் நேரம் கடத்தறது மாதிரி இருந்தது. எந்த ஊருன்னு கேட்டான். அவன்கிட்ட 'சென்னை' இல்லையென்னா 'மெட்ராஸ்ன்னு' சொன்னா புரியாது. மதராஸின்னு சொன்னேன். அவன்களுக்கு தென் இந்தியால "மதராஸி" "மலையாளி" இந்த இரண்டும் தான் தெரியும்.

அவன் பேச்சுல அவன் கொஞ்சம் சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரிஞ்சுது. என்ன விஷயமுன்னு கேட்டேன். அவன் இப்போ சார்ஜா ஏர்போட்டுக்கு தான் போறானாம். அவனோட மச்சான் ஒருத்தன் ஊர்லயிருந்து வரானாம்.

சரி அதுக்கெதுக்குடா இவ்வளவு சந்தோஷம்ன்னு கேட்டேன். அவன் ஒரு "ஹார்ட்வேர்" கடை ஒன்னு நடத்த போறானாம். அங்க வேலை செய்ய தான் அவனோட மச்சான் வரானாம். இன்னும் கொஞ்ச நாள்ல அவனோட பொண்டாட்டியவும் கூட்டிட்டு வரப்போறானாம். சீக்கிரமே இந்த டாக்ஸி டிரைவர் வேலைய விடப்போறானாம்.

ஏண்டா இவ்வளவு நல்ல டாக்ஸ் டிரைவர் வேலைய விடுறன்னு கேட்டேன். அவன் அதுக்கு சொன்ன காரணமும் நியாயமா தான் இருந்திச்சு. காலையில வண்டியில உட்கார்ந்தா எப்போ கீழ இறங்குவோம்ன்னு தெரியாது. ஏதாவது அவசரத்திற்கு கூட கீழ இறங்க முடியாதாம். அதாவது தண்ணிகுடிக்க, சாப்பிட ஏன் அவசரத்துக்கு ஒன்னுக்கு கூட போக முடியாதாம்.

அதான் சொந்தமா கடை தொறக்க போறேன்ல அப்புறம் ஏன் இந்த கருமம் புடிச்ச டாக்ஸி டிரைவர் வேலைக்கு போகனும்ன்னு கேட்டான். நானும் ஆமாம் ஆமாம்ன்னு தலையாட்டினேன்.

எனக்கொரு டவுட் தீடீர்ன்னு எப்படி இவனுக்கு கடை திறக்கற அளவுக்கு பணம் வந்துச்சுன்னு.. அவன்கிட்ட கேட்டேன் அவன் எனக்கொரு மச்சான் இருக்காரு இங்க. அவரோட கடைதான் அது.

ஆரம்பத்தில எனக்கு தரமாட்டேன்னு தான் சொன்னாரு. அப்பாலிக்கா பேசி அவரோட மனசை கரைச்சு சம்மதம் வாங்கிட்டேன்னு சொன்னான்.

என்னது இங்க உனக்கு மச்சானா...எப்படி அந்த உறவுமுறைன்னு கேட்டேன்.

இவனோட அக்காவ அந்த அரபி கல்யாணம் பண்ணிகிட்டானாம். எத்தனாவது கல்யாணம்ன்னு நான் கேக்கலாம்ன்னு நினைச்சேன். வேண்டாம் இப்ப கேட்டா காமெடி டைம் சீரியஸ் டைம் ஆகிடும்ன்னு விட்டுட்டேன்.
ஏன்னா இங்கிருக்க அரபிகளுக்கு ரெண்டு மூணு பொண்டாட்டிகளெல்லாம் ரொம்ப சாதாரணம்...

நான் அவன்கிட்ட உன்னை மாதிரியே எங்க ஊர்ல ஒருத்தன் இருக்கான். ஆனா அவன் பேக்கிரி கடை வச்சுருக்கான். அவன் பேரு வீரபாகு.



அவனும் உன்னை போலவே ரொம்ப நல்லவருருருருருன்னு சொன்னேன்.

டாக்ஸிகாரனும் சிரிச்சுகிட்டே "அச்சா அச்சா" அப்படின்னான்.

குசும்பனின் ஆசிர்வாதத்தோடு......

கடல் சீற்றத்திற்கு பயந்து பாதுகாப்பான இடம் தேடி தன் குழந்தைகளுடன் போகும் தாய்.....


கடினமான பாடத்தை நீக்கினதுக்காக வகுப்பை புறக்கணிக்கும் மாணவிகள்..
இது கேப்டன்...

இலங்கை தமிழர்களுக்காக வழக்கம் போல போராடும் கம்யூனிஸ்டுகளுடன் ம.தி.மு.க
இது பைனல் டச்...நம்ம குசும்பனுக்காக....ஹி...ஹி

அச்சுவிண்ட அம்(மே)மா..


தலைப்பை பார்த்துட்டு "அஞ்சரகுல்ல வண்டி" மாதிரி ஏதாவது ஏடாகூடமா நினைச்சு உள்ளே வந்தைங்கன்னா நான் பொறுப்பல்ல...

எப்ப வளைகுடா வந்தேனோ அப்பவே மலையாள படங்களைப் பார்பதும் அதிகமானது.அதற்கு முன் சென்னையில "இராகவேந்திரா" "வெங்கடேஷ்வரா" போன்ற பக்தி தியேட்டர்களில் ஷகீலா படம் பார்த்ததோட சரி.

இங்க வந்து பார்த்த முதல் மலையாள படம் "அச்சுவிண்ட அம்மா"(2005).அந்த படத்தைப் பார்த்த போது மலையாள படங்கள் மேல ஒரு மரியாதையே வந்தது. ஊர்வசி, மீரா ஜாஸ்மின், நரைன் போன்ற பெரிய நட்சரத்திங்கள் இல்லாமல் ஒரு படம்.

அம்மாவாக ஊர்வசி, மகளாக மீரா ஜாஸ்மின்.கணவன் இல்லாமல் தனியாக தன் மகளுடன், தனது சாமர்த்திய பேச்சால் பலரை பாலிசி எடுக்க வைக்கும் எல்.ஐ.சி ஏஜெண்டாக ஊர்வசி. டிப்ளோ சிவில் இன் ஜினியராக அச்சு (அஸ்வதி) கேரக்டராக மீரா ஜாஸ்மின் நமக்கு அறிமுகமாகிறார். இருவரும் தாய் மகளை போல் அல்லாமல் தோழிகள் போல் பழகுகின்றனர். இருவரும் எந்த ஒரு விஷயத்தையும் ஒருவொருக்கொருவர் மறைப்பதில்லை. அவர்களுக்கிடையே ஒரே ஒரு விஷயம் மட்டும் திரை மறைவில் உள்ளது, அது அச்சுவின் அப்பா...

தன் அப்பா அம்மாவை ஏமாற்றி சென்று விட்டதாக நினைத்துக் கொண்டு தன் அப்பாவைப் பற்றி எதுவும் கேட்காமல் இருக்கிறார் அச்சு. அதற்கேற்றாற் போல் அச்சுவிடம் ஊர்வசிக்கு கொண்டுள்ள அளவு கடந்த பாசம் அவளுக்கு அப்பாவைப் பற்றி நினைக்கக் கூட செய்யவில்லை.



அச்சுவிற்கு ஏதேச்சையாக நண்பனாக அறிமுகமாகிறார் வக்கீல் நரைன். அதே நேரத்தில் அச்சுவிற்கும் ஒரு கன்ஸ்ட்ரக்ஸன் கம்பெனியில் வேலை கிடைக்கிறது. இருவரின் ஆரம்ப நட்பு பின்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறுகிறது. ஊர்வசி இருவரின் காதலுக்கு ஆரம்பத்தில் ஓகே சொல்லிவிட்டு பின்பு அவர் தன் தாய் தந்தை மற்றும் குடும்பத்தையே ஒரு விபத்தில்(தற்கொலை) இழந்தவர் என்று தெரிந்து கல்யாணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.தன் மகளை ஒரு கூட்டு குடும்பமத்தில் மட்டுமே கல்யாணம் செய்து கொடுப்பதாக கூறுகிறார்.

இதனால் தாய் மகள் இருவரிடையே விரிசல் ஏற்படுகிறது. இதுவரையில் தன் அப்பாவை குறித்து ஏதும் கேட்காத அச்சு அப்பாவைப் பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள். பதில் கிடைக்காததால் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். தன் தோழியுடன் தங்குவதற்கு செல்லும் அவள் அதற்குரிய சூழ்நிலைகள் அங்கு இல்லாததால் மனவிரக்தியில் செல்லும் போது விபத்தில் சிக்குகிறாள். மருத்துவமனையில் அவளை காண வரும் ஊர்வசியை உடன் பேச மறுக்கிறாள்.
ஊர்வசி மனம் வெறுத்து அவள் பிறப்பின் ரகசியத்தை நரைனிடம் கூறுகிறாள். ஊர்வசி பதினைந்து வயதில் சிவகாசியில் வேலை செய்யும் போது அங்குள்ள பெண்களை வட மாநிலத்திற்கு கடத்தும் கும்வலில் சிக்குகிறார். அங்கிருந்து தப்பிக்கும் போது அந்த கும்பலில் சிக்கியிருக்கும் ஒரு இரண்டு வயது சிறுமி அவள் பாவாடையை பிடுத்து "தானும் வருவது போல்" சிரிக்கும் போது, ஊர்வசி இக்குழந்தை இவ்விடத்தில் இருந்தால் இதன் வாழ்க்கையே சீரழியும் என்று தன்னுடன் அழைத்துச் செல்கிறாள். அப்பெண்ணுக்கு அச்சு என்று பெயரிட்டு தன் மகளாகவே வளர்க்கிறாள்.


வளரும் போது தான் அவளுக்கு சொந்தம் ஏதும் இல்லை, அவள் புகுந்த வீட்டிலாவது நிறைய சொந்தங்களோடு வாழ வேண்டும் என்ற ஆசையில் தான் இக்கல்யாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறுகிறாள். இதை அவளிடம் சொல்லவேண்டாம் என்றும் இனி அவளை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கூறிச் செல்கிறார்.
நரைன் அச்சுவிடம் அவள் பிறப்பின் இரகசியத்தை கூற நேருடிகிறது. தன் தவறை உணர்ந்து அவள் வீடு வரும் போது அவள் அன்னை அவளை போன்றே மற்றுமொரு நான்கு வயது அச்சுவிற்கு தாயாகியிருக்கிறாள் என்று தெரியவருகிறது. மனது கனக்கும் க்ளைமாக்ஸோடு படம் நிறைவடைகிறது.


ஊர்வசிக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி ஒரு கேரக்டர்.ஆரம்பித்தில் இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டிகள் நமக்கு இயல்பாய் சிரிப்பை வரவழைக்கின்றன. காமெடி ஊர்வசிக்கு வெகு இயல்பாய் வருகிறது. படத்தின் முதல் பாதி முழுவதும் நகைச்சுவையாக இருப்பததால் பிற்பாதியின் சோகத்தைத் தாங்க எந்த ஒரு ஆயத்தமும் செய்யவிடாமல் கதை நகர்வது ஒரு ப்ளஸ்பாயிண்ட். குறிப்பாக ஊர்வசி ஆங்கிலம் கற்பதும், வீட்டை விட்டு ஓடி வரும் அச்சுவின் தோழியை நைசாக பேசி அவள் வீட்டிற்கு அனுப்புவது போன்ற நகைச்சுவை காட்சிகளைச் சொல்லலாம்.


மீரா ஜாஸ்மின் "அச்சு" என்ற சுட்டிப்பெண்ணாக கதாபாத்திரத்திற்கு ஏற்ப பொருந்தியுள்ளார். மிகவும் அழ்காக இருக்கிறார் இந்த படத்தில்.


நரைன் நம்ம அஞ்சாதே ஹீரோ. இவர் வேலையை இவர் சரியாக செய்திருக்கிறார். 'அஞ்சாதே' படத்தைப் பார்க்கும் போது 'இவர்' தான் 'அவர்' என்று கூறினால் மலையாளிகள் நம்ம மறுத்தனர். இப்போது அப்படியொரு மாற்றம் அவரிடம்.


இளையராஜா பாடல்கள் இனிமையாக இருக்கின்றன். அதிலும் "எந்து பறஞ்சாலும்" என்ற பாடலை இன்றும் கேரள மாநிலத்தில் ஒலித்தால் கேட்க ஒரு கூட்டம் காத்திருக்கும். அதை படமாக்கின விதமும் பாடலை எளிமையாக மக்களிடம் சென்றடைய ஒரு காரணம். நீங்களும் கேளுங்க..



இதுக்கெல்லாமா வேலைய விட்டு தூக்குவாங்க.....

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி ஆகிபோச்சு என் நிலைமை. எங்க கம்பெனியோட டிசைன் இன்ஜினியர் ஊருக்கு போனதினால் என்கிட்ட ஒரு ப்ராஜெக்ட்ட கொடுத்து டிசைன் பண்ண சொன்னாங்க..... சரி நானும் இதெல்லாம் எப்ப கத்துக்கிறதுன்னு சரின்னு சொன்னேன்.

டிசைன் செய்து அத fabricationம் செய்து erectionம் செய்துட்டாங்க...அப்பறமா தான் ஒரு சின்ன தப்பு நடந்தது தெரிய வந்தது. அந்த சின்ன தப்புக்கு போய் வேலைய விட்டு எடுக்க போறேன்னு சொல்றாங்க. இது என்னங்க அநியாயம். நீங்களே படத்த பாருங்க.........


foundationஐ டிசைன் செய்ய மறந்துட்டேனுங்க... உங்களுக்கு தெரிஞ்ச சிவில் டிசைன் இன்ஜினியர் யாராவது இருந்தா சீக்கரம் எனக்கு தெரிவிங்க....

பிரபல பதிவர் புகைப்படங்கள் (வித் கமெண்ட்ஸ்)


நான் லக்கியோட தீவிர ரசிகை.. இத யாராவது அவர்கிட்ட சொல்லுங்களேன் ப்ளீஸ்....

புலிகளுக்கு ஆதரவா பேசினதால இவரோட போஸ்டர இங்கிருந்து எடுக்க சொல்லிட்டாங்க......

ஒரு நாள் குடி போதையில இவரு நைட்டு என் வீட்டுக்கு வந்தாரு......அன்னைலருந்ந்து நான் இப்படி ஆயிட்டேன்.


இவரு தான் அதிஷ வா.....
ஆமா இவரு எழுத்துக்கு மயங்காத ஆளே இல்லை...




கி.பி 23ஆம் நூற்றாண்டு: இவர் 21ஆம் நூற்றாண்டு பதிவுலகத்தில கலக்கின பதிவர். பதிவர் சந்திப்புல பஜ்ஜி, போண்டா எல்லாம் கொடுப்பாரு.....

டேய் குசும்பா...வயசானாலும்(!) உன் அழகும் ஸ்டைலும் குறையவே இல்லடா...


இந்த நல்ல உள்ளத்தத்தான் நான் விரும்புறேன்...தயவு செய்து என்னை ஏத்துக்க சொல்லுங்க.....

"திண்டிவனம் இளைய நிலா" முதலாம் மாநாட்டுக்கு உங்க எல்லாரையும் வருக வருக என்று கேட்டுக்கொள்கிறேன்.....




Related Posts with Thumbnails