"ஓடி விளையாடாதே பாப்பா"

நேற்று காலையில் வேலைக்கு கிளம்பும்போது கையில் ரிமோட் கிடைத்தது. எங்க ரூம் டி.வி ரிமோட் தான் அது. எப்பவுமே ஏதாவது மலையாள சேனல் ஓடிக்கொண்டிருக்கும், இந்த மாதிரி அத்தி பூத்தாற் போல என் கையிலும் சில சமயம் ரிமோட் கிடைக்கும். ரூமில் இரண்டு தமிழ் சேனல் தெரியும், கலைஞர் டி.வி மற்றும் இசையருவி. சரி சுபவீரபாண்டியனின் "ஒன்றே சொல் நன்றே சொல்" வரும் பார்க்கலாம்ன்னு கலைஞர் டி.வி வச்சா "ஓடி விளையாடு பாப்பா"ன்னு ஒரு நிகழ்ச்சி ஓடிகிட்டு இருக்கு. அட இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை.அப்படியே மானாட மயிலாட நிகழ்ச்சியை மினிமைஸ் செஞ்சு பாக்கிறமாதிரி இருந்தது. அதுல நிகழ்ச்சியை தொகுத்து வழங்குற இரண்டு வாண்டுகளையும் எங்கையோ பார்த்த மாதிரி இருந்தது. சரியா ஞாபகம் இல்லை. அந்த பையன் முடி எல்லாம் குச்சி குச்சியா நீட்டிகிட்டு இருந்தது. அந்த குட்டி பொண்ணு எதிர்காலத்தில ஹீரோயின் ஆகனும்ன்னு இலட்சியம் போல. அதுக்கேத்த எல்லா தகுதியும்(?) இப்பவே வளர்த்துகிட்டு வருது. இதுல அப்பாஸ் மற்றும் இன்னொரு ஆள் நடுவர்கள் வேற.

அந்த இரண்டு பேரையும் ஒரு கையால் வாரி நெஞ்சோடு அணைத்து மற்றொரு கையால் "நறுக்" "நறுக்" "நறுக்"ன்னு நாலு கொட்டு கொட்டி "இனிமே இந்த மாதிரி அதிகபிரசங்கிதனமா பேசுவையா..ம் சொல்லு பேச மாட்டேன்னு" செய்யனும்ன்னு ஒரே எரிச்சலா வந்தது. அந்த இரண்டு பேரும் பேசுறத பாக்கிற போது...

இரண்டு பேருகிட்டையும் ஒரு குழந்தைதனமே இல்லை. இதையெல்லாம் எப்படி அவுங்க பெத்தவங்க எப்படி எடுத்துகுறாங்கன்னு தெரியல. கண்டிப்பா பெருமையா தான் இருக்கும் :-( இந்த டி.வி நிகழ்ச்சியால குழந்தைகளோட ஒரு அருமையான குழந்தை பருவம் மறைந்துகொண்டுவருகிறது. எல்லாம் இந்த கருமம் பிடிச்ச டி.வி வந்ததுலேயிருந்து தான். ஆடவரும் குழந்தைகளும் இதே போல தான்...

எனக்கு "Bridge to terabithia"ன்னு ஒரு ஆங்கில படம் தான் ஞாபகம் வருது. walt disney தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த படம். "Gabor csupo" இயக்கியிருக்கும் படம்.பத்து வயது "ஜாஸ்" கதையின் நாயகன். ஜாஸின் குடும்பம் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம். இரண்டு அக்காள் மற்றும் இரண்டு தங்கைகள் என பெரிய குடும்பம். இரண்டு அக்காள்களும் டி.வி பார்பதிலும் கேளிக்கைகளிலும் நேரத்தை வீணடிக்கும் சராசரி அமெரிக்க இளைஞிகள். தன்னை போலவே ஒரே அலைவரிசை கொண்ட ஆறு வயது தங்கை. பின்பு மற்றுமொரு கைக்குழந்தை தங்கை.


ஜாஸ் சராசரி சிறுவன் போல் அல்லாமல் ஓவியம், விளையாட்டு என்று சிறந்து விளங்குகிறான். மற்ற மாணவர்களைப் போல் சினிமா டி.வி போன்ற எதிலும் நாட்டம் இல்லாததால் அவனுக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. மாறாக அவனை கண்டால் எல்லோரும் கிண்டலடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.


தன் ஆறு வயது தங்கை தன் ரசனையுடையவளாய் இருந்தாலும் தன்னை விட சிறுவயதுடையர்களுடன் நட்பு கொள்ள அமேரிக்க சிறுவர்களுக்குண்டான ஈகோ இவனையும் தடுக்கிறது.


அச்சமயத்தில் பக்கத்துவீட்டில் குடிவரும் லெஸி என்ற ஒரே பத்து வயது சிறுமியுடன் நட்பு கொள்கிறான். இருவரும் ஒரே ரசனையுடையவர்களாய் இருக்கின்றனர். ஒரே வகுப்பில் படிக்கும் அவர்கள் மற்ற மாணவர்களை விட புத்திசாலிகளாகவும் சிறந்த நண்பர்களாகவும் இருக்கின்றனர்.


ஒரு நாள் மாலை வீட்டை விட்டு தொலைவில் ஒரு காட்டின் அருகே விளையாடச்செல்லும் இருவரும் ஒரு சிறியஓடையின் அருகே வந்தடைகின்றனர். அருகே ஒரு பெரிய மரத்தில் ஒரு கயிறு கட்டி தொங்குகிறது. அதைப் பார்த்ததும் லெஸி கயிற்றில் தொங்கி விளையாடுகிறாள். பின்பு "ஏன் நமக்கென்று ஒரு இடம் இருக்கக்கூடாது?" அங்கே நம்மை கிண்டலடிக்க யாரும் இருக்கமாட்டார்கள். அது நமக்கே நமக்குரியதாய் இருக்கவேண்டும், அது ஒரு "மாயாஜால இராஜாங்கம்" என்று லெஸி கூறுகிறாள். ஜாஸ் ஒன்றும் புரியாமல் முழிக்கிறான். பின்பு அவள் அந்த கயிற்றில் தொங்கியபடியே ஓடையின் அப்புறத்திற்கு குதிக்கிறாள். ஜாஸ் பயந்தபடியே பின்தொடர்கிறான்.


ஓடையின் அப்புறத்தில் அவர்களுக்கென்று ஒரு இராஜாங்கம் காத்திருக்கிறது. அதில் மரத்தினால் ஆன இராட்சச மனிதன் இருக்கிறான். தும்பிகளினால் ஆன போர்படை இருக்கிறது. சில வில்லன்களும் இருக்கிறார்கள். அந்த இராஜாங்கத்திற்கு "terabithia" என்று பெயரிடுகிறார்கள்.


தினமும் அங்கு சென்று விளையாடுகிறார்கள், பேசுகிறார்கள் சில சமயம் தீயவர்களுடன் சண்டையும் போடுகிறார்கள்.


இப்படி போகும் கதையில் ஒரு நாள் ஜாஸ் இல்லாமல் லெஸி மட்டும் "terabithia"விற்கு செல்லும் போது ஒரு விபத்தில் இறக்கிறாள். அவளின் இறப்பு ஜாஸை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. "terabithia"வை கண்டு பயப்படுகிறான். நண்பர்கள் இறந்தாலும் உண்மையான நட்பு இறப்பதில்லை என்று தனது தந்தை கூறும் அறிவுரையை கேட்டு தெளிவடைகிறான்.


அந்த ஓடையின் குறுக்கே ஒரு பாலம் அமைக்கிறான். தன் தங்கையை அந்த இராஜாங்கத்திற்கு அழைத்து வருகிறான். ஆரம்பத்தில் அவள் கண்ணிற்கு எதுவும் தெரியவில்லை. பின்பு கண்களை மூடி திறந்த மனதுடன் கண்களை திறக்கும் போது அனைத்தும் தெரிகிறது, நமக்கும் எல்லாம் தெரிய ஆரம்பிக்கிறது. ஜாஸ் அந்த இராஜாங்கத்திற்கு அரசன் ஆகிறான். அவன் தங்கை இளவரசி ஆகுவதோடு படம் முடிவடைகிறது.


இதில் குறிப்பிடவேண்டிய கதாபாத்திரம் லெஸி. ஒரு குட்டி தேவதையாக அறிமுகம் ஆகி ஒரு வித தாழ்வுமனப்பான்மையுடன் இருக்கும் ஜாஸை அதிலிருந்து அவளது நட்பு மீட்பது மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.


டி.வியே பார்க்காத அல்லது பார்க்க விருப்பபடாத இரு குழந்தைகளின் கற்பனை உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். அனைத்து விஷயங்களிலும் அவர்களின் ஈடுபாடு எவ்வாறு இருக்கும் என்பதும் தெளிவாக காட்டியிருக்கிறார்கள்.


ஒரு காட்சியில் பள்ளியில், இன்று டி.வியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியிலிருந்து குறிப்பு எடுத்துவருமாறு ஆசிரியர் கூறும் போது "டி.வி இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று லெஸி கேட்கும் போது வகுப்பறையே கொல் என்று சிரிக்கிறது. அதில் ஒரு மாணவன் "டி.வி இல்லாமல் எப்படி இருக்கமுடியும்?" என்று கேட்கும் போது "எனது அப்பா டி.வி, மூளையில் உள்ள செல்களை வளரவிடாமல் கொல்கின்றன, அதனால் பார்க்க வேண்டாம் என்றிருக்கிறார்" என்கிறாள். அது எவ்வளவு உண்மை என்று படத்தைப் பார்க்கும் போது தெரிகிறது.


அந்த "மாயாஜால இராஜாங்கம்" நிஜமா கற்பனையா என்று நம்மை யோசிக்கவைக்காமல் அந்த உலகத்திற்கு நம்மை அந்த சிறுவர்களோடு கொண்டுச் செல்வது கதாசிரியரின் சாமார்த்தியம்.


இது "Katherine Paterson" எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. ஜாஸ் ஆக "Josh Hutcherson"ம் லெஸியாக "Anna sophia robb" நடித்திருக்கிறார்கள்.


இது கண்டிப்பாக குழந்தைகளோடு நாமும் பார்க்க வேண்டிய படம்.

22 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

Tharani Priya said...

சேம் ஃஃபீலீங்ஸ் ஆதவன். குழந்தைங்க கிட்ட இருக்கற அந்த குழந்தைதனம் நாளுக்கு நாள் குறைஞ்சுட்டே வர்ற மாதிரிதான் இப்ப எல்லாம் நிறைய நிகழ்ச்சிகள் வருது. பத்து வயசுலயே போட்டிகள், மார்க்ஸ், எலிமினேஷன், அதுக்கு அழுகைன்னு பாவம். இவங்களை பெத்தவங்களை தான் போட்டு சாத்தணும். என்னால முடியாததை என் குழந்தையை வெச்சு சாதிக்கறேன்ன்னு இவங்க பண்ற அலப்பறை தாங்கலை.

""Bridge to terabithia” பத்தி நீங்க சொல்லும்போதே இந்த படத்தை பாக்கணுமின்னு தோணுது. டிவிடி தேடி வாங்கிடறேன். நல்ல படத்தை அறிமுகப்படுத்தியதுக்கு நன்றிங்க ஆதவன்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

Bridge to terabithia - எங்களுக்குப் பிடிச்ச நல்ல படம்!

நான் ஆதவன் said...

//இவங்களை பெத்தவங்களை தான் போட்டு சாத்தணும். என்னால முடியாததை என் குழந்தையை வெச்சு சாதிக்கறேன்ன்னு இவங்க பண்ற அலப்பறை தாங்கலை.//

ஆமாம் தாரணிப்ரியா.. இது ரொம்ப கவலையான விசயம். பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகள் மூலம் பெருமையடைய மீடியா மட்டுமே சிறந்த வழி என்று ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்துவது அடுத்த தலைமுறையை குழியில் தள்ளுவதாகும்..

படம் ரொம்ப நல்ல படம். பாத்துட்டு நீங்களும் ஒரு பதிவ போடுங்க..

நான் ஆதவன் said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
Bridge to terabithia - எங்களுக்குப் பிடிச்ச நல்ல படம்!//

வாங்க ஜீவா..உங்களுக்குன்னு பன்மையில சொல்லியிருக்கீங்க..நிறைய பேரோ :-)

ஸ்ரீமதி said...

ரொம்ப ரொம்ப உண்மையான, அழகான பதிவு அண்ணா... :)) எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. :)) எனக்கும் இந்த மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகள பார்த்தா கோவம் கோவமா வரும்...

கார்க்கி said...

என்னை மாதிரி குழைந்தகளுக்கு யாருமே பதிவு போடறதில்லைனு கஷ்டமா இருந்தது.. இப்போ இல்ல :))))

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...
ரொம்ப ரொம்ப உண்மையான, அழகான பதிவு அண்ணா... :)) எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. :)) எனக்கும் இந்த மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகள பார்த்தா கோவம் கோவமா வரும்...//

நன்றி ஸ்ரீமதி..

நான் ஆதவன் said...

//கார்க்கி said...
என்னை மாதிரி குழைந்தகளுக்கு யாருமே பதிவு போடறதில்லைனு கஷ்டமா இருந்தது.. இப்போ இல்ல :))))//

ஒரு குழந்தையோட மனசு இன்னொரு குழந்தைக்கு தானே தெரியும் சகா :-))))

ஆட்காட்டி said...

அப்ப விடீயோ கேம் விளையாடலும்களா?

நான் ஆதவன் said...

//ஆட்காட்டி said...
அப்ப விடீயோ கேம் விளையாடலும்களா?//

தலைப்பை மட்டும் படிச்சுட்டு பேச்ச பாரு! நக்கல பாரு! லொள்ள பாரு! கிண்டல பாரு! லோலாயிய பாரு! :-)

அதிரை ஜமால் said...

\\இந்த டி.வி நிகழ்ச்சியால குழந்தைகளோட ஒரு அருமையான குழந்தை பருவம் மறைந்துகொண்டுவருகிறது\\

ஆம் ஆம் ஆம்

நான் ஆதவன் said...

வாங்க அதிரை ஜமால்.. வருகைக்கு நன்றி

rapp said...

//"நறுக்" "நறுக்" "நறுக்"ன்னு நாலு கொட்டு கொட்டி "இனிமே இந்த மாதிரி அதிகபிரசங்கிதனமா பேசுவையா..ம் சொல்லு பேச மாட்டேன்னு" செய்யனும்ன்னு ஒரே எரிச்சலா வந்தது. அந்த இரண்டு பேரும் பேசுறத பாக்கிற போது...

//

சூப்பர்:):):) சேம் பிளட். ஹி ஹி ஆனா நானும் இதேமாதிரி ஒரு பிஞ்சில பழுத்த கொழந்தையா இருந்திருக்கேன்:):):)

படத்தைப் பற்றி நீங்கள் கூறுவதைப் பார்த்தால் நல்ல படமாகத் தெரிகிறதே, நான் எப்டி பாப்பேன்:):):)

அதுசரி, வேலைக்குக் கெளம்பும்போதுன்னு சொல்லிருக்கீங்க, இவ்ளோ நேரம் எல்லா நிகழ்ச்சிகளையும் பாத்துட்டு எப்போ கெளம்புனீங்க:):):)

நான் ஆதவன் said...

//சூப்பர்:):):) சேம் பிளட். ஹி ஹி ஆனா நானும் இதேமாதிரி ஒரு பிஞ்சில பழுத்த கொழந்தையா இருந்திருக்கேன்:):):)//

நீங்க இப்ப கூட குழந்தைன்னு தான் நான் நினைச்சுட்டுயிருக்கேன் ராப்..அப்ப அது பொய்யா... அவ்வ்வ்வ்வ்வ்வ்

//படத்தைப் பற்றி நீங்கள் கூறுவதைப் பார்த்தால் நல்ல படமாகத் தெரிகிறதே, நான் எப்டி பாப்பேன்:):):)//

நல்ல படத்தை பாக்கறதேயில்லைன்னு கங்கணம் கட்டிகிட்டுயிருக்கீங்க போல :-)

//அதுசரி, வேலைக்குக் கெளம்பும்போதுன்னு சொல்லிருக்கீங்க, இவ்ளோ நேரம் எல்லா நிகழ்ச்சிகளையும் பாத்துட்டு எப்போ கெளம்புனீங்க:):):)//

நிகழ்ச்சி முடியறதுக்குள்ள எஸ்கேப் ஆயிடோம்ல....பார்த்தது இருபது நிமிஷம் தான் அதுக்கே ஒரு பதிவு போட வச்சிருச்சு அந்த நிகழ்ச்சி.

ஆமா இப்படி வளைச்சு வளைச்சு என்னோட எல்லா பதிவுக்கும் பின்னூட்டம் போடுறீங்க....பேஷ் பேஷ் இன்னைக்கு நரி முகத்தில தான் முழிச்சிருக்கேன் போங்கோ...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நான் இந்த படத்தை கொஞ்சமா பாத்திருக்கேன்.. பல படங்களை இப்படி .. முதல் தடவை பின் பாதி அப்பரம் நடுவில் கொஞ்சம்.. அப்பறம் இன்னொரு நாள் முன்பகுதி மிச்சம்ன்னு பார்ப்பேன்.. நல்லா சொல்லி இருக்கீங்க.. முழுசா பாத்துடறேன்..

இந்த குழந்தைகள் பெரியவங்களைப்பார்த்து தானே எல்லாம் கத்துகறாங்க.. நாங்க சின்னப்பிள்ளையா இருந்தப்ப.. க்ளிப் வச்சு மனுசங்கன்னு விளையாடுவோம்.. இன்னும் என்னன்னவோ இப்ப தான் எதையும் எதாவும் கற்பனை செய்யவே வேணாமே .. ஆகா இதை வச்சு ஒரு பதிவே போடலாமே .. ஆனா சோம்பேறித்தனம் ..

கபீஷ் said...

படம் பாக்கணும்னு தோணுது. அறிமுகத்துக்கு நன்றி ஆதவன்!!!!

நான் ஆதவன் said...

//இந்த குழந்தைகள் பெரியவங்களைப்பார்த்து தானே எல்லாம் கத்துகறாங்க.. நாங்க சின்னப்பிள்ளையா இருந்தப்ப.. க்ளிப் வச்சு மனுசங்கன்னு விளையாடுவோம்.. இன்னும் என்னன்னவோ இப்ப தான் எதையும் எதாவும் கற்பனை செய்யவே வேணாமே .. ஆகா இதை வச்சு ஒரு பதிவே போடலாமே .. ஆனா சோம்பேறித்தனம் ..//

வாங்க முத்துலட்சுமி-கயல்விழி.

கூடிய சீக்கரம் இதை பத்தி ஒரு பதிவ போடுங்க..

நான் ஆதவன் said...

//கபீஷ் said...
படம் பாக்கணும்னு தோணுது. அறிமுகத்துக்கு நன்றி ஆதவன்!!!!//

நன்றி கபீஷ்

கைப்புள்ள said...

அருமையா எழுதிருக்கீங்க ஆதவன். குழந்தைகள் குழந்தைப் பருவத்தில் குழந்தைகளாய் நடந்து கொள்வது தான் அழகு. வயதுக்கு மீறிய குழந்தைகளின் பேச்சை என்னாலும் ரசிக்க முடிவதில்லை. கிட்டத்தட்ட இதே கருத்துல நான் எழுதின ஒரு பதிவு இங்கே.

http://kaipullai.blogspot.com/2006/11/blog-post_16.html

நான் ஆதவன் said...

//கைப்புள்ள said...

அருமையா எழுதிருக்கீங்க ஆதவன். குழந்தைகள் குழந்தைப் பருவத்தில் குழந்தைகளாய் நடந்து கொள்வது தான் அழகு. வயதுக்கு மீறிய குழந்தைகளின் பேச்சை என்னாலும் ரசிக்க முடிவதில்லை. கிட்டத்தட்ட இதே கருத்துல நான் எழுதின ஒரு பதிவு இங்கே.

http://kaipullai.blogspot.com/2006/11/blog-post_16.html//

நன்றி கைப்புள்ள கண்டிப்பா படிச்சுட்டு கமெண்ட்றேன்

narsim said...

நல்ல அறிமுகத்திற்கு நன்றி தல‌

நான் ஆதவன் said...

//narsim said...

நல்ல அறிமுகத்திற்கு நன்றி தல‌//

வருகைக்கு நன்றி நர்சிம்

Related Posts with Thumbnails