தமிழ் சினிமா ரசிகனின் ஏக்கம் நிறைவேறுமா?

எனது அறையில் ஒரு மலையாள நண்பர் சரியான விஜய் பைத்தியம். விஜயின் பெரும்பாலான படங்களை பார்த்து விட்டார். சிவகாசி பார்க்கவில்லையென்றும் வாங்கித் தரும்படியும் என்னைக் கேட்டார். வழக்கமாக அவருக்கு தமிழ் படங்கள் நான் தான் வாங்கிக் கொடுப்பேன். அன்றும் கேஸட் காரரிடம் "சிவகாசி"யை கேட்க அவர் பேரரசு ஹிட்ஸ் என்ற ஒரு டி.வி.டியை கொடுத்தார். அதில் நம்ம பேரரசுவின் ஐந்து படங்கள் இருந்தன.

ஒரு வாரவிடுமுறையில் அறையில் எல்லோரும் சிவகாசியை பார்த்தோம். அது வரைக்கும் எல்லாம் சரியாத் தான் போயிற்று. அது முடிந்தவுடன் நம்ம தலைவர் விஜயகாந்த் நடித்த "தருமபுரி" போட்டோம். விஜயகாந்த் அறிமுகமாகும் சீனைப் பார்த்தவுடன் எல்லாரும் அதிர்ச்சியாகி(!) (அதாங்க புல்லட் சட்டையில பட்டு ரிட்டன் ஆகி திருடனை சுடுமே) ஆப் செய்ய சொன்னார்கள் (நீ எப்படிடா குருவி பார்த்தன்னு நான் அவனை கலாய்த்தது வேறு விஷயம்). ஏற்கனவே நான் அந்த சீனைப் பார்த்து இருந்தாலும் அந்த படத்தில் தான் அந்த காட்சி என்று தெரியாது. தெரிந்திருந்தால் போட்டிருக்க மாட்டேன்.

பின்பு சமாதனமாகி "RACE "என்ற இந்தி படத்தைப் பார்த்தோம். அதில் சயீப், வினோத் கண்ணா, அனில் கபூர், பிபாஷா பாசு, கத்ரீனா கயீப் ஆகியோர் நடித்த படம். வெளிநாட்டில் வாழும் இந்திய சகோதரர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனையே கதை. இப்பொழுதெல்லாம் இந்தி சினிமா வெளிநாட்டில் எடுக்கவில்லையென்றால் தான் ஆச்சரியமாக இருக்கும். அதற்கு இரண்டு காரணம். ஒன்று காட்சியமைப்பில் பிரம்மாண்டம் காட்டுவதற்காக, மற்றொன்று ஆபாசக் காட்சிகள். உதாரணத்திற்கு ஆணும் பெண்ணும் கல்யாணமாகாமல் உறவு கொள்வது. மற்றவன் மனைவியிடம் சல்லாபம் போன்ற உறவு முறைகளை சிதைக்கும் கதைகள். அதை இந்தியாவில் நடப்பதாகக் காட்டினால், பிரச்சனை செய்வதற்கென்றே இருக்கும் சிலர் படத்தை ஓடவிடாமல் செய்து விடுவார்கள் என்ற பயம்.

அதையெல்லாம் தவிர்த்து அந்த படத்தில் ஒரு கவனிக்க வேண்டிய விசயம் படத்தில் யாரும் நல்லவனாக காட்டியிருக்க மாட்டார்கள். சயீப்பும் வினோத்தும் சகோதரர்கள். 200 கோடி மில்லியன் டாலருக்காக இருவரும் ஒருத்தரை ஒருத்தர் கொல்லத் திட்டமிடுவது தான் கதை. இதில் போலிஸாக வரும் அனில் கபூர் கூட நல்லவரில்லை. ஆனால் இதையெல்லாம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரோடு கடைசி வரை எடுத்துச் சென்றிருப்பது தான் சுவாரஸ்யம்.

உண்மையில் இந்த விசயத்தில் இந்தி நடிகர்களை வெகுவாக பாராட்டலாம். தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் பட்சத்தில் அது வில்லன் ரோலாக இருந்தாலும் நடிக்கிறார்கள். இது போல இரண்டு மூன்று படங்கள் பார்த்திருக்கிறேன். இந்தி திரையுலகை ஆஸ்கார் வரை எடுத்துச் சென்ற அமீர்கான் நடித்த "ஃபானா" என்ற படம் வந்தது நினைவிருக்கலாம். அதில் அவர் ஒரு தீவிரவாதியாக நடித்திருப்பார் (விஜயகாந்த் 100 கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டார்). குண்டு வைத்து உயிர்களைக் கொல்வது, இராணுவ வீரர்களைக் கொல்வது என ஒரு தீவரவாதி செய்யும் எல்லா செயல்களையும் படத்தில் அவர் நடித்திருப்பார். அதனால் அவரின் இமேஜ் ஒன்றும் குறையவில்லை. கடைசியில் தன் மனைவி கஜோலின் மீதுள்ள காதலால் அவர் திருந்திவிடுவார் என்று நினைத்திருந்தேன்(நிறைய தமிழ் படம் பார்த்ததால் அவ்வாறு நினைக்கத் தோன்றியது). ஆனால் அவ்வாறு ஏதும் நடக்காமல் தீவரவாதியாகவே மரணமடைவார். படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

"AKSAR" என்ற மற்றொரு படமும் அவ்வாறே. டினோ மோரியா, இம்ரான் ஹாஷ்மியும் நடித்த படம். படத்தின் ஹீரோ இருவருக்கும் நெகடிவ் ரோல்களே. அதை கதையின் கடைசி வரை ஒரு சஸ்பென்ஸாக எடுத்திருப்பார்கள்.

ஆனால் இன்னும் நம் விஜயகாந்த், சரத்குமார், ரஜினிகாந்த் போன்ற மூத்த நடிகர்கள் இது போன்ற வித்யாசமான கதாபாத்திரங்களில் நடிக்காமல் மக்களுக்கு நல்லது செய்வது போலவும், தீவரவாதியை பிடிப்பது போலவும் நடித்து இன்னும் எத்தனை காலம் நம்மை துன்புறுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதில் இளம் வயது நடிகைகளுடன் டூயட் வேறு.......

ஆங்கில மற்றும் தற்போதைய இந்தி படங்களில் "ஹீரோ" என்று யாரையும் குறிப்பிடுவதில்லை, முக்கிய கதாபாத்திரத்தை "லீட் ரோல்" என்றே குறிப்பிடுவதாக ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம். எல்லா முக்கிய கதாபாத்திரமும் பாஸிடிவ் ரோலாகவும் இருப்பதில்லை. ஆனால் நம்ம தமிழ் "ஹீரோ" விற்கு ஒரு படத்தில் ஐந்து பாட்டும் நான்கு சண்டையும் அவசியமாகிறது. வில்லனை புரட்டி எடுப்பதும், காதலியோடு டூயட் பாடவும், மக்களுக்காக நல்லது செய்வதும் என்ற எழுதி வைக்கப்படாத கோடம்பாக்கம் விதிகளை பின்பற்றி வருகிறது.

ஒருமுறை "ப்ளாக்" என்ற படத்தைப் பார்த்துவிட்டு அந்த படத்தில் அமிதாப் ரோலில் நம்ம சூப்பர் ஸ்டார் நடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்ததுண்டு. அது போன்ற படங்களில் வரும் காலங்களில் அவர் நடிப்பார் என்று நம்பிக்கைகொண்டிருந்தேன். ஆனால் தற்போதைய சூழலில் அது நடக்காதென்றே தோன்றுகிறது.ரஜினி என்ற நடிகனை சூப்பர் ஸ்டார் ஆகும் முன்னே நாம் கண்டதால் தான் அவரை பற்றி அவ்வாறு நினைக்கத்தோன்றுகிறது. எண்பதுகளில் முள்ளும் மலரும், மூன்று முடிச்சு போன்ற படங்களில் வித்தியாசமான நடிப்பில் அசத்திய ஒரு மாபெரும் நடிகன் சூப்பர் ஸ்டார் என்னும் போர்வையில் ஒளிந்துக்கொண்டிருக்கிறான்.

தமிழ் திரை உலகயே திசை திருப்பியதாக சொல்லப்படும் "முரட்டுக் காளை" மற்றும் "மூன்று முகம்" மட்டும் வராமல் இருந்திருந்தால் இந்நேரம் நாம் இப்படி ஏக்க பெருமூச்சு விட நேர்ந்திருக்காது.

ஒரு சாதாரண சினிமா இரசிகனாக தமிழில் உள்ள எல்லா "ஹீரோ"க்களும் இது போன்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே என் ஏக்கம்.
இது நிறைவேறுமா????

4 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கிரி said...

//ஒரு சாதாரண சினிமா இரசிகனாக தமிழில் உள்ள எல்லா "ஹீரோ"க்களும் இது போன்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே என் ஏக்கம்.
இது நிறைவேறுமா???? //

என்னுடைய ஏக்கமும் இதுவே. ரஜினி, அமிதாப் போன்று வயதுக்கேற்ற வேடங்களில் நடித்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் ரசிகர்கள் ஆதரவு அதற்க்கு இருக்காது. ரஜினியும் அதை பற்றி யோசிப்பதாக தெரியவில்லை. ரசிகர்கள் நடைமுறையை புரிந்து கொள்ள வேண்டும்.

எனக்கும் வட மொழி நடிகர்கள் போல நம் நடிகர்கள் அனைவரும் வித்யாசமான வேடங்களில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று விருப்பம், ஆனால் அதற்க்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் என்று நினைக்கிறேன். திரை துறையில் மட்டுமல்ல அரசியலிலும் வெளி பார்வைக்கு நம்மை விட அவர்கள் பரவாயில்லை. சோனியாவும் அத்வானியும் இப்போதும் பொது விழாவில் பார்த்தால் பேசி கொள்கிறார்கள் இங்கே கலைஞரும் ஜெ வும் அப்படி இருப்பதை கனவிலும் நினைக்க முடியாது.

//இந்த குப்பையை பற்றி உங்கள் "பொக்கிஷ" கருத்து//

சிறப்பாகவே எழுதி இருக்கிறீர்கள், ஏன் உங்களை நீங்களே தாழ்த்தி கொள்கிறீர்கள். யாரும் யாருக்கும் குறைந்தவர் இல்லை. எனவே இந்த வரி அவசியம் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. மனது குப்பையாக இல்லாமல் இருந்தால் போதுமானது.

நான் ஆதவன் said...

நன்றி கிரி.
உங்கள் அறிவுரையை கேட்டு வாசகத்தை திருத்தியுள்ளேன்

தாமிரபரணி said...

திரு நான் ஆதவன் அவர்களே நல்லா ஹிந்திக்கு படத்துக்கு துதிபாடுறிங்க வாழ்த்துக்கள், இப்படி சில எட்டப்பன்கள் இருப்பதால்தான் நம் தமிழ்படமான மன்னிக்கனும் எங்கள் தமிழ்படமான பருத்திவீரனை ஆஸ்காருக்கு அனுப்பாமல் வேறு ஒரு ஹிந்தி படத்தை அனுப்பிருக்கிறார்கள், இல்ல தெரியாமதான் கேட்கிறேன் பக்கத்துவீட்டு பையனோட உன்ன மட்டம்தட்டி பேசினா ஒத்துகொள்வாயா, பின்ன என்ன மைத்துக்காக தமிழ்படத்தோட அந்த வெத்து ஹிந்திபடத்த எல்லாம் கம்ப்பர்பண்ற
ஏதோ மலையாள படம்னாகூட ஒரளவுக்கு ஒத்துகொள்ளலாம், உன்னையமாதிரி சில சொணாங்கிரியாலத்தான் கன்னடம், மராத்தி, வங்காளம் etc போன்ற சினிமாக்கள் சிதைந்துவருகிறது, யாரு எவனு தெரியாத ஹிந்திகாரன பத்தி எல்லாம் எழுதுற அவனால நம்ம மொழிக்கு பத்து பைசா லாபம் உண்டா, ஏன்டா எப்ப பார்த்தாலும் தாழ்வுமனப்பான்மையுடன் அலையிருங்கிங்க, எப்ப பார்த்தாலும் ஹிந்திகாரனுங்க என்ன பண்ணினாலும் உசத்தி நம்ம ஆளுங்கனா இளக்காரம், கொஞ்சம் படிச்சாலே தாயையும், தாய் மொழியையும் மறந்திரவேண்டியது
"ஃபானா" ஒரு லாஜிக்கே இல்லாத படமனு டைமஸ் ஃப் இந்தியாவிலே எழுதியிருந்தாங்க, ஹிந்தி படத்த வெறியுடனோ இல்ல அதிகமான மோகத்தினாலோ பார்த்தா எல்லா படமும் பிரம்மிப்பாதான் இருக்கும், தேவையில்லாமல் அவனுங்க படத்தை பத்தி பேசி அவனுங்கள எதற்காக இங்க பாப்புலர் ஆக்கனும்
தமிழ்ல எத்தனையோ நல்ல படம் உள்ளது சில உதவாக்கரை படங்களும் உள்ளது ஒத்துகொள்கிறேன் அதை விடுத்து நல்ல படங்களை பற்றி பேசலாமே எ-டு சுப்பிரமணியபுரம், அஞ்சாதே படங்கள் தாம்-தூம், சக்கரைக்கட்டி, வாரணம் ஆயிரம் பட பாடல்கள் என பேச பல துளிகள் இருக்கும் போது நம்ம மொழிக்கு தேவையில்லாதவற்றை பற்றி பேசி ஏன் நேரத்தை வீரயம் செய்கிறிர்கள், நல்ல செய்திகளை நம் மொழிக்கு பயன்படகூடியவற்றை எழுதினால் நன்றாக இருக்கும்

நான் ஆதவன் said...

அய்யா தாமிரபரணி அவர்களே இப்ப யார் தமிழ்ல நல்ல படங்களே வரவில்லையென்று யார் சொன்னது. நான் சொல்லியது தமிழில் உள்ள மூத்த நடிகர்களைப் பற்றி...
அநாகரிகமாக கருத்துச் சொன்னாலும் நல்லா படிச்சுட்டு கருத்தைச் சொல்லுங்க.
சுப்பிரமணியபுரம், அஞ்சாதே போன்றவை நல்ல படங்கள் இல்லையென்று யார் சொன்னது. இப்ப அது பேச்சே இல்லையே. என்னவோ நானே "தாரே ஜமீன் பர்"யை ஆஸ்காருக்கு அனுப்பி வச்ச மாதிரி சொல்றீங்க.
நான் தான் தற்கால இந்தி படத்தைப் பற்றி மூணாவது பத்தியில தெளிவா சொல்லியிருக்கேனே. அதையும் மீறி நான் என்னவோ இந்தி படத்தையெல்லாம் பாராட்டுற மாதிரி சொல்றீங்க. என் கருத்தே நெகடிவ் ரோல்களிலும் நடிக்கும் கதாநாயகனைப் பற்றி தான்.
"ஃபானா" லாஜிக் இல்லாத படம்ன்னு டைம்ஸ் ஆப் இந்தியா சொல்லிச்சா?. ஏன் நீங்க அந்த படம் பார்க்கலயா? ஓகோ நீங்க போஸ்டர பார்த்து கதை சொல்ற க்ரூப்பா.... சரி லாஜிக் இல்லாத படமாவே இருக்கட்டும். அந்த லாஜிக்க பத்தி இப்ப யார் பேசுனா? நான் சொன்னதே கதாநாயகன் வித்தியாசமான ரோல்ல நடிச்சிருக்கான்னு தானே.
அதனால எழுதுன வேற மாதிரி புரிஞ்சுகிட்டு ஏதாவது உளறகூடாது. அப்படியே உங்களுக்கு நான் எழுதுறது பிடிக்கலன்னா தயவு செய்து என் வலைப் பக்கம் வந்து உங்க நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
இன்னொரு முக்கியமான விசயம் இந்த மாதிரி அநாகரிகமான வார்த்தைகள் வேண்டாமே.

Related Posts with Thumbnails