சாமியாடி!

சாமியாடி குறி சொல்வது நிஜமா? உண்மையிலேயே அவர்களுக்கு சாமியின் அருள் வருகிறதா? என்றெல்லாம் உங்ககிட்ட கேட்கவரல. அதெல்லாம் பொய்ன்னு உங்களுக்கே தெரியும். ஆனா சாமியாடிக்கிட்ட் குறி கேட்க போயிருக்கீங்களா?


நாங்க வருஷா வருஷம் பள்ளி, கல்லூரி லீவுக்கு பாட்டி ஊருக்கு போவது வழக்கம். ஒவ்வொரு வருஷம் போகும் போதும் ஒரு குறிப்பிட்ட உறவினர் கிராமத்துக்கு மட்டும் போகக்கூடாதுன்னு அம்மாச்சியின்(பாட்டி) கட்டளை. ஏன்னு கேட்டா "இருபது வருஷத்துக்கு முன்னால அவுங்க குடும்பத்துக்கும் நம்ம குடும்பத்துக்கும்...."ன்னு ஏதாவது ஆரம்பிப்பாங்கன்னு நீங்க நினைச்சா தமிழ் படம் நிறைய பாக்கறீங்கன்னு அர்த்தம். அப்படியெல்லாம் எதுவுமில்லை. அவங்கெல்லாம் நம்ம மேல பொறாமையா இருக்காங்கலாம். அவுங்க வீட்ல எதுவும் சாப்பிட கூடாதுன்னு சொல்வாங்க. நானும் ரொம்ப வருசமா போகாமத்தான் இருந்தேன். ஆனா ஒரு தடவை அந்த கிராமத்திலிருந்து வந்த அண்ணன் என்னைப் பார்க்க வந்தார். அப்போது அம்மாச்சி வீட்டில் இல்லை. நான் அங்கு வருவதே இல்லை என்று மிகவும் கவலையாக கூறினார். ரொம்ப வற்புறுத்தி கூப்பிட்டார். அம்மாவும் போய் வா என்றார்கள். நானும் அம்மாச்சி வந்தால் சொல்லுங்கள் என்று அம்மாவிடம் கூறிவிட்டு அவருடன் சென்றேன்.

ஆரம்பத்தில் அம்மாச்சி சொன்னது ஞாபகம் வந்து கொஞ்சம் பயம் வந்தது. ஆனால் அவர்கள் அன்பினில் எல்லாம் கரைந்து போனது. ஆளாளுக்கு அன்பை பொழிந்தார்கள். ஊரில் உள்ள உறவினர்கள் எல்லாரும் வந்து நலம் விசாரித்தது நெகிழ்ச்சியாக இருந்தது. சாப்பிடுவதற்கு அசைவத்தில் என்னென்ன வகைகள் உண்டோ எல்லாம் செய்து சாப்பிடும் படி வற்புறுத்தினார்கள். வயிறு முட்ட சப்பிட்டுவிட்டு இரவு வீடு திரும்பினேன். அம்மாச்சிக்கு என்மேல் கோபம்.

மறுநாள் வந்தது பிரச்சனை. வயிறு வலி உயிர் போனது. அம்மா டாக்டரிடம் காண்பித்தும் சரியாகவில்லை. அம்மா பயந்து விட்டார்கள். பின்பு அம்மாச்சி மானாமதுரை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் குறிசொல்லும் பெண் சாமியாடியிடம் அழைத்துச் சென்றார். சாமியாடி வீட்டிற்கு சென்ற போது அவர் வீட்டில் இல்லை. அவரின் மகன் ஏழு வயது சிறுவன் சாமியாடியை அழைத்து வரச் சென்றான். அவரது வீடே ஒரு மினி கோவில் ரேஞ்சுக்கு இருந்தது. அவர் முன்பே அம்மாச்சிக்கு மிகவும் தெரிந்தவர் போல. வரும் போது சிரித்துக்கொண்டே "வா ஆத்தா என்ன இந்த பக்கம் ஆளையே காணோம்? இது ஆரு உம் மவளா? இது பேரனா?" என்று கேட்டார். பின்பு நான் அறிமுகப்படுத்தப்பட்டேன். அம்மாச்சி விசயத்தை சுருக்கமாக கூறினார்.

பின்பு தரையில் வரைந்த நட்சத்திரத்தின் நடுவே கிழக்கு நோக்கி அமர்த்தப்பட்டேன். சுற்றிலும் கற்பூரம் ஏற்றப்பட்டது. அது வரையில் சாந்தமாக இருந்த சாமியாடி ஆவேசம் வந்தவர் போல கத்த ஆரம்பித்தார். என்னை வார்த்தைக்கு வார்த்தை "டேய்" போட்டு கூட்பிட்டார். உண்மையில் எனக்கு வயிற்று வலியோடு பயமும் சேர்ந்துக் கொண்டது. "பள்ளிக்கூடத்துக்கு சூதானமா போகனும்டா""நான் காலேஜ் படிக்கிறேன்" என்றேன். "அதத்தாண்டா சொன்னேன். அந்த நெட்ட பயலோட சேராதடா, அவன் நல்லவன் மாதிரியே பழகிட்டு உன் கழுத்தறுத்திருவான்டா" என்றார். "யாரு" என்றேன். "அவன் தான் அந்த ஆறு விரலுக்காரன் உன் கூடப் படிக்கிறானே". எனக்கு பயம் சூழ்ந்து கொண்டது. உண்மையில் என் நண்பன் ஒருவனுக்கு ஆறு விரல் இருப்பது உண்மை தான். அவனும் உயரமானவன் தான். உண்மையில் இவருக்கு பவர் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். "டேய் உன் வயித்துல மருந்து இருக்குடா, போய் அத எடுத்துட்டு வா" என்று கூறி மலையேறினார். பின்பு கண் விழித்து அம்மாச்சியிடம் "ஆத்தா என்ன சொன்னா?" என்று கேட்ட போது எனக்கு ஆச்சிரியமாய் போனது. அவர் கூறியதை எங்களிடம் கேட்கிறாரே என்று. பிறகு அம்மாச்சி அவர் உடம்பில் சாமி வந்து கூறியதாகவும் அது அவருக்கு தெரியாதென்றும் கூறினார்.

பின்பு சாமியாடி கூறிய மருந்து எடுக்கும் ஆளிடம் சென்றோம். அவர் ஒரு அடி நீளமுள்ள ஒரு குழாயை எடுத்து என் வாயில் வைத்து "ஊவ்வ்வ்வ்" என்று உறிஞ்சினார். பின்பு துப்பிய போது அவர் வாயிலிருந்து ஐந்தாறு கருப்பு முட்டை வெளிவந்தது. அவர் யாரே மருந்து வைத்திருப்பதை உறுதிப்படுத்தினார். அம்மாச்சி என்னிடம் "அங்க போவாதன்னு சொன்னேன் கேட்டயா, இப்ப பாரு" என்றார். எனக்கும் அவர் கூறியது உண்மை என்று தோணியது. பின்பு மறுபடியும் அதே சாமியாடியிடம் சென்றோம். அதே இடத்தில் உட்கார்ந்தேன்.

அவர் முன்பை விட ஆவேசம் வந்தவர் போல பேசினார். நாங்கள் பவ்யமாக கேட்டுக்கொண்டிருந்தோம். மருந்தெல்லாம் இப்ப இல்லையென்றும் ஆத்தா எடுத்துவிட்டதாகவும் கூறினார். இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். பின்பு ஒரு டம்ளர் தண்ணீரில் கற்பூரத்தையேற்றி ஏதேதோ முணுமுணுத்து தண்ணீரை என் முகத்தில் அடிக்க வந்தார். நான் கண்களை இறுக்க மூடிக் கொண்டேன்.
அப்போது ஒரு ஆறு வயது சிறுவன் வாசலில் வந்து
"அத்த, அம்மா சீட்டு காசு குட்த்துவிட்டுட்சு" என்று கத்தினான்.
அப்போது சாமியாடி "அந்த டேபிள்ல வச்சுட்டு போ" என்று அதே ஆவேச குரலில் சொன்னார்.
எனக்கு சட்டென்று பொறி தட்டி கண்ணை திறந்து நெற்றியை சுருக்கி பார்த்த போது சாமியாடி மூன்று முறை தண்ணீரை என் மீது அறைந்து மறுபடியும் மலையேறினார். அம்மா என் முகத்தை முந்தானையால் துடைத்துவிட்டு "இப்ப தான் முகம் தெளிவா இருக்கு" என்றார். ஆனால் தெளிவுக்கான காரணம் எனக்கு மட்டும் தான் தெரிந்தது. அன்று அதை யாருக்கும் சொல்லவில்லை திரும்பவும் அந்தப் பக்கமே போகவில்லை.

2 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஜுர்கேன் க்ருகேர் said...

இந்த மாதிரி நிறைய உட்டாலக்கடி வேலைய நானும் பார்த்திருக்கிறேன்.
வீட்ல இருக்கிற பெரியவங்க கண்மூடித்தனமா நம்பறதனால கண்டும் காணாம போக வேண்டி இருக்கு.

நான் ஆதவன் said...

கருத்திற்க்கு நன்றி ஜுர்கேன் க்ருகேர்

Related Posts with Thumbnails