சுயநலவாதியை அடையாளம் காண்பது எப்படி?

வாழ்க்கையில நல்லவன், கெட்டவன், பொதுநலவாதி, சுயநலவாதி என பலபேரை காண்கிறோம். ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு பழகுவது இயலாத காரியம். ஏதாவது ஒரு சமயத்தில் "தலை முட்டி குனிவது" போல அவர்களிடம் ஏமாந்தோ அல்லது நமக்கு அவர்கள் உதவி செய்தோ அவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை தெரிந்துக்கொள்கிறோம்.


இப்படி ஏமாறாமல் இருக்க, சில சுயநலவாதிகளை அடையாளம் காண எனக்குத் தெரிந்த சில யோசனைகளைக் கூறுகிறேன்.


1.நான்கைந்து பேர் சேர்ந்து சரக்கடிக்கும் போது, தட்டிலிருக்கும் மிக்ஸரில் வேர்கடலையை மட்டும் பொறுக்கியெடுத்து தின்பவன்.


2.மதியம் சாப்பிடும்போது தன்னைக் காண வரும் நண்பனைப் பார்த்து "என்ன குடிக்கிற காபியா? டீயா?" என்று கேட்பவன்.


3.நம் பிகர் இருக்கும் சமயத்தில் இங்கிலீஸில் சரளமாக பேசி வெறுப்பேத்துபவன்.


4.கூட்டமான கோவிலின் வெளியே தன் புதுச்செருப்பில் ஒன்றை ஒரு இடத்திலும் மற்றொன்றை 10 அடி தள்ளி மற்றொரு இடத்திலும் வைப்பவன்.


5.நமக்கு ஸ்வீட் வாங்க கடைக்கு போனால் நமக்கு முன் ஒரு பீஸை எடுத்து வாயில் போட்டு நாமமெடுக்க முடியாமல் செய்ததோடு அல்லாமல் "நல்லாருக்கு வாங்கலாம்டா" என்று கூறுபவன்.


6.இருக்கிற பைசாவில் எல்லாரும் சரக்கடிக்கலாம் என்று டாஸ்மார்க்குக்கு போனால் பீர் தான் வேண்டும் என்று அடம்பிடிப்பவன்.


7.ரோட்டில் போகும் அழகான பெண் "அத்திப் பூத்தாற்போல்" பார்த்து சிரிக்கும் போது "இவள பார்த்தா ஒரு ஜாடையில உன் தங்கச்சி மாதிரியே இருக்குல்ல" என்று கூறுபவன்.


8.பஸ்ஸில் ஐம்பது பைசா கிடைக்காதென்பதால் தேவையே இல்லாமல் 2ரூபாய் கொடுத்து 1.50ரூபாய்க்கு ஏதாவது வாங்கி ஐம்பது பைசா மாற்றி வைத்துக்கொள்பவன்.


9.நமக்கு புடவை எடுக்க செல்லும் போது கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் முதலில் பார்த்த புடவையே நன்றாக உள்ளது என்று எடுக்க சொல்பவள்.(இது பெண்ணுக்கு)


10.ஒரு இசை அமைப்பாளன் கஷ்டப்பட்டு அமைத்த பாடலை "என் மச்சானுக்கு டெடிகேட் பண்ணிக்கிறேன்" "என் மாமாவுக்கு டெடிகேட் பண்ணிக்கிறேன்" என்று கூறுபவன்.


11. ஒருத்தன் தன் இருபத்தைந்தாவது பதிவுக்காக (அட இதுதாங்க) கொஞ்சம் கஷ்டப்பட்டு ஏதாவது ஒப்பேத்தி போட்டால் பின்னூட்டம் போடாமலும் வாழ்த்து சொல்லாமலும் செல்பவன்.


டிஸ்கி: இதெல்லாம் கிட்டதட்ட பழமொழி மாதிரி அதனால அனுபவிக்கனும் ஆராயக்கூடாது.

கலைஞர் டி.வி, சன் டி.விக்கு தீபாவளி டிப்ஸ்..

தீபாவளி நெருங்கியாச்சு.தமிழர்கள் கொண்டாடலாமா வேண்டாமான்னு ஒரு சில பேர் தீவரமா விமர்சனம் செய்யிராங்க. என்னை பொருத்த வரைக்கும் தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையா சந்தோஷமா இருந்தாங்கன்னா அது காதலர் தினமா இருந்தா என்ன தீபாவளியா இருந்த என்ன எல்லாத்தையும் சந்தோஷமா கொண்டாடலாம். ஆனா இந்த வருசம் ஈழத்தமிழர்கள் பல பேர் துயரத்தில் இருக்கும் போது நான் கொண்டாட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். யாருக்கும் வாழ்த்து சொல்வதில்லையென்று முடிவெடுத்துள்ளேன். நண்பர்கள் மன்னிக்க.

தலைவர் கலைஞர் என்னத்தான் துக்கத்திலும் துயரத்திலும் நித்திரை இழந்து தவித்தாலும் அவருடைய கலைஞர் டி.வியிலும், மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த (மதுரை மக்களைத் தவிர) சன்.டிவியும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்காமல் இருக்க மாட்டார்கள். அப்படி அவர்களுக்கு இந்த தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்ப சில யோசனைகள்...

கலைஞர் டி.விக்கு...

1. சிறப்பு "மீண்டும் மீண்டும் சிரிப்பு" நிகழ்ச்சிக்காக வெண்ணிற ஆடை மூர்த்திக்கு பதிலாக ஆற்காடு வீராசாமியை நடிக்க வைத்து அப்பப்ப "இந்த வருடம் மின்வெட்டே ஏற்படலன்னு " என்று மீண்டும் மீண்டும் சொல்லி காமெடி செய்யலாம்.

2.இரவு முழுவதும் கலைஞர் கவிதை முழக்கம் நிகழ்ச்சியை லைவ் ஷோ நடத்தலாம். அதை காலை வரை தொடரலாம். உதவிக்கு பா.விஜயை வைத்துக்கொள்ளலாம். (இரவு நேரமாதலால் வாலியும் அப்துல் ரகுமானும் வேண்டாம்). இது கலைஞர் இரவு உறங்குவதில்லை என்பதற்கு சாட்சியாக இருக்கும்.

3.காலை சுப. வீரபாண்டியனை வைத்து வரலாற்று நிகழ்வுகளை இந்த முறை தவிர்த்து, சின்னத்திரை நடிகர்களுக்கு விருது வழங்கிய கலைஞர், "பில்லா" "சிவாஜி" போன்ற தமிழ்ப் பெயர் கொண்ட தமிழ் படங்களுக்கு வரிவிலக்கு அளித்த தலைவர் கலைஞர் என்று புதிய வரலாற்று நிகழ்வுகளை பற்றி குறிப்பிடலாம்.

4. முக்கியமாக மானாட மயிலாட உருவானது எப்படி? என்ற நிகழ்ச்சியை அரைமணி நேரம் நடத்தலாம். மக்களுக்கு மிக உபயோகமானதாக இருக்கும். இடையிடையே "நீண்ட பணிச்சுமைகள் இருந்த போதிலும் நான் இதை காணத் தவறுவதில்லை" என்று கலைஞரை விட்டு சொல்லச் சொல்லலாம்.

5. "தமிழ் பேசு பத்து காசு" என்று ஒரு நிகழ்ச்சியை நமீதாவை நடுவராக வைத்து ஒளிபரப்பி இராமதாசு அய்யாவை வெறுப்பேற்றலாம்.

சன்டி.விக்கு....

1. திடீர் ஞானோதயம் வந்த சன் டி.வி., காலை சுவாமி சங்கராச்சாரியாரின் அருள் மொழிகளை ஒளிபரப்பலாம்.

2."காதலில் விழுந்தேன்" "சக்கரக்கட்டி" போன்ற படங்களைப் போட்டு மதுரை மக்களின் வயிற்றில் பாலை வார்க்கல்லாம்.

3."கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்ற படத்தை சிறப்பு படமாக சிம்பாலிக்காகப் போட்டு மற்றவர்களை குளிர வைக்கலாம். அப்படியும் வேலைக்காகவில்லையென்றால் அடுத்து பாயிண்ட்டை ட்ரை செய்யலாம்.

4.ஒரு மாதத்தில் கார்க்கி போடும் பதிவை விட அதிகமாக அறிக்கை விடும் ஜெவின் ஒரு மாத அறிக்கையை தொகுத்து வெளியிட்டு தன் நடுநிலைமையைக் காட்டி கலைஞரை வெறுப்பேற்றலாம்.

எங்களையும் கூப்பிட்டாகல்ல - சினிமா

யாராவது கூப்பிடுவாங்களா... இல்ல நம்மளா போய் வாலிண்டரா ஆஜர் ஆகலாமா என்று யோசிச்சுட்டு இருக்கும் போது தான் நம்ம இளைய பல்லவன் வாங்க தலைவா உங்கள கூப்பிட நான் இருக்கேன்னார். உண்மையிலே ரொம்ப சந்தோஷமாயிருந்தது. அவருக்கு என் நன்றிகள். அவரை கூப்பிட்ட அணிமாவுக்கு என் நன்றிகள். அணிமாவை கூப்பிட்ட மகேஷ்க்கு என் நன்றிகள்.....போதும் போதும் இதோட நிறுத்திக்கிறேன்.

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்

பள்ளி படிப்பெல்லாம் முடித்த பின்னரே தொலைக்காட்சிப் பெட்டி வீட்டில் வாங்கினார்கள். திரையரங்கில் பார்த்த படம் "பத்ரகாளி". சிறுவயதில் மதுரை சென்ற போது ஏதோ ஒரு காரணத்திற்கு விடாமல் அழுத என்னை தேற்றுவதற்காக "சினிமாவுக்கு போலாமா" என்று என் அழுகையை நிப்பாட்டி வாக்கு தவறாமல், அருகிலுள்ள ஒரு தியேட்டரில் என் அம்மாச்சி அப்படத்திற்கு அழைத்து சென்றார்கள். அப்படத்தைப் பார்த்துவிட்டு பயத்தில் திரும்பவும் அழ ஆரம்பித்தபோது முக்கால்வாசி படத்தோடு திரும்பி வந்தது வேடிக்கை.என்ன உணர்ந்தேன்! பயம் தான்......

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

"தசாவதாரம்" துபாயில் உள்ள தியேட்டரில்.... ரீலீசான அன்றே பார்க்க வேண்டும் என்று நண்பரிடம் அடம்பிடித்துக் கூற அவர் ஒரு நாள் முன்னரே டிக்கெட் புக் செய்து பார்த்த படம்(தமிழகத்தை விட ஒரு தினம் முன்னால்). என்ன.. கதை அப்போது ஒன்னும் புரியாமல் அடுத்த வாரம் திரும்பவும் பார்த்தது வேறு விசயம்.

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

"தாம் தூம்" மடிக்கணினியில்... ஒரு நாள் நண்பன் "மச்சி "தாம்தூம்" டிவிக்ஸ் ப்ரிண்ட் டவுண்லோட் செய்திருக்கேன் வந்து எடுத்துட்டுப்போ"ன்னான். என்ன உணர்ந்தேன்....மவன எவனாவது ஒரிஜினல் பிரிண்டே கொடுத்து பார்க்க சொன்னாலும் இது போல படத்த பார்க்கக் கூடாதுன்னு. ஒரே ஆறுதல் பாடல்கள்

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

வீடு.. சத்தியமா அது போல் ஒரு யதார்த்த படத்தை தமிழில் அதுக்கு முன்ன பார்த்ததே இல்லை. மனசுல ஒரு வாரத்துக்கு அதோட தாக்கம் இருந்துகிட்டே இருந்தது.வீடு படத்தில் நடித்த அந்த தாத்தாவிற்கு தேசிய விருது கிடைத்தது அனைவரும் தெரியும். தமிழகத்தில் ஒரு பாராட்டு விழாவில் கலந்து, நிகழ்ச்சி முடிந்து போகும் போது பேருந்துக்கு கூட பணம் இல்லாமல் நின்றததை பாலா விகடனில் "இவன் தான் பாலா"வில் எழுதியதை படித்த போது மனது கனத்தது.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

பெரிதாக எதுவும் இல்லை. அநேகமாக எல்லா அரசியல் தாக்கங்களையும் நண்பர்கள் எழுதிவிட்டனர். லேசாக வெறுப்படைந்த விசயம் ஒன்று உள்ளது. "விரும்பாண்டி" படத்திற்காக கதையே என்னவென்று தெரியாமல் பிரச்சனை செய்தது. ஆனால் கமல் அந்த பிரச்சனைக்காக படத்தின் தலைப்பை மாற்றியது "லைட்டா" பாதித்த விசயம்.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தொழில்நுட்பத்தில் பெரிதாக எதுவும் பாதித்ததாக தெரியவில்லை. ஏனென்றால் நமது தொழில்நுட்பம் வளரும் போது அதை விட வேகமாக வளரும் ஆங்கில படங்களை பார்க்க நேருவதால் தெரிவதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் சமீபத்தில் தசாவதாரம் படத்தில் வரும் முதல் பத்து நிமிடங்களைப் பார்த்து கொஞ்சம் பிரமித்து போனது நிஜம்.எனவே தொழில்நுட்பத்தை வரலாற்றுப் படங்களில் பயன்படுத்தினால் அது எளிதில் மக்களிடம் சென்றடையும் என்பது என் கருத்து. இப்போது ரோபோ வந்தாலும் ஆங்கில படம் பார்ப்பவர்களுக்கு அந்த படத்தின் தொழில்நுட்பம் பெரிதாக தெரியாதென்றே தெரிகிறது.

தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நிறைய...

தமிழ்ச்சினிமா இசை?

தமிழ் சினிமா இசை இந்தியாவில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய இடத்தில் இருக்கிறது. தமிழ் இசையமைப்பாளர்கள் இந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இனி வருங்காலத்திலும் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் என அடுத்த தலைமுறையும் கலக்க ரெடி....எல்லா இசையமைப்பாளர்களின் மெலடி பாடல்களும் என் உறக்கத்திற்கு உதவி செய்யும்.

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தமிழ் அல்லாத வேறு படங்களும் பார்ப்பேன். மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என ஒரு படத்தையும் விடுவதில்லை. வங்காள மொழி படங்கள் பார்க்க ஆசை. ஆனால் டி.வி.டி கிடைப்பதில்லை.(ஒரே ஒரு வங்காள மொழிப் படம் பார்த்திருக்கிறேன் அது ஹி..ஹி...ஹி...ஃபயர்) அதிகம் பாதித்த படங்கள் நிறைய... "ப்ளாக்" "ஸ்வதேஸ்" போன்ற இந்தி படங்களும், "தன்மாத்ரா" மலையாளப் படமும் கொஞ்சம் பாதித்தவை. "Bridge to terabithia" என்ற படம். டி.வி மற்றும் சினிமா போன்ற எதையும் பார்க்காத இரு குழந்தைகளுடைய கற்பனை உலகத்தைப் பற்றிய கதையை போகிற போக்கில் சொல்லியிருக்கிற விதம் எனக்கு ரொம்ப பிடித்தது. "சாண்ட்ரா புல்லக்" படங்கள் விரும்பி பார்ப்பேன்.

தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

கமல், விஜய், விஜயகாந்த், சிம்ரன் என நிறைய பேரை ஷீட்டிங்கில் பார்த்திருக்கிறேன். நான் படிக்கும் பொழுது எனது பாலிடெக்னிக் அருகில் எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டி இருந்ததால், போர் அடிக்கும் போது உள்ளே சென்று ஷீட்டிங் பார்ப்போம். இதை தவிர வேறு தொடர்புபெதுவுமில்லை. இது சினிமாவை வளர்க்க உதவுமா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்

எனக்கு ஜோஸியம் எதுவும் தெரியாது. ஆனா ஒரு நடிகனை நடிகனா வைக்காம, கடவுளா இல்ல தலைவனா நினைக்கிற வரைக்கும் தமிழ் சினிமா உருப்படாது. அப்படியிருந்தும் செல்வராகவன், கௌதம் மேனன், மணிரத்னம், அமீர், சேரன், பாலா போன்ற பலர் கீழே போய்ட்டு இருக்கிற தமிழ் சினிமாவை இழுத்துப் பிடிச்சுட்டு இருக்காங்க. அவுங்கல மாதிரி ஆளுங்க நினைச்சா தமிழ் சினிமாவை எதிகாலத்தில இந்த உலகமே போற்றும் படி செய்யலாம்.

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்

ரொம்ப நல்லா இருக்கும். மூச்சு விட கூட நேரம் இல்லாத இந்த சினிமா உலகத்திற்கு ஒரு பிரேக் அவசியம் தான். ஏன்னா இந்த ஒரு வருசத்தில புது இளம் மற்றும் பழைய கதாசிரியர்கள் ஆற அமர யோசிச்சு நல்ல கதை எழுதலாம். ஏன்னா பெரும்பாலும் ஒரு டைரக்டரோட முதல் படம் மட்டும் சொல்லும்படி இருக்கு. இப்படி ஒரு பிரேக் கொடுத்தா நல்ல கதையம்சம் உள்ள படம் நிறைய வரும். நமக்கும் பார்க்க வேண்டிய பழைய படம் நிறைய இருக்கு. அதெல்லாம் அந்த ஒரு வருசத்தில் பார்க்கலாம். இசையமைப்பாளர்களின் நல்ல நல்ல ஆல்பம் வரும் அதையெல்லாம் கேட்கலாம். என்ன அப்ப தியேட்டர்ல சன் டி.வி கலைஞர் டி.வின்னு எல்லாம் காட்ட ஆரம்பிப்பாங்க...அத மட்டும் பொறுத்துக்கணும்

இதை தொடர கிரி யை அழைக்கிறேன்

கூப்ட பல்லவனுக்கு ஒன்னோரு தபா டாங்ஸ் சொல்லிகிறேம்பா....வரான்டா எங்க தலைவன்.. ஜே.கே. ரித்தீஷ்க்கு போட்டி

இன்னும் எத்தனை நாட்கள் தான் ஜே.கே ரித்தீஷை புகழ்ந்து கொண்டிருப்பீர்கள். இனி "நாயகனு"க்கு போட்டியா நம்ம "மக்கள் நாயகன்" வர்ராருடா..


தமிழ் சினிமா ரசிகனின் ஏக்கம் நிறைவேறுமா?

எனது அறையில் ஒரு மலையாள நண்பர் சரியான விஜய் பைத்தியம். விஜயின் பெரும்பாலான படங்களை பார்த்து விட்டார். சிவகாசி பார்க்கவில்லையென்றும் வாங்கித் தரும்படியும் என்னைக் கேட்டார். வழக்கமாக அவருக்கு தமிழ் படங்கள் நான் தான் வாங்கிக் கொடுப்பேன். அன்றும் கேஸட் காரரிடம் "சிவகாசி"யை கேட்க அவர் பேரரசு ஹிட்ஸ் என்ற ஒரு டி.வி.டியை கொடுத்தார். அதில் நம்ம பேரரசுவின் ஐந்து படங்கள் இருந்தன.

ஒரு வாரவிடுமுறையில் அறையில் எல்லோரும் சிவகாசியை பார்த்தோம். அது வரைக்கும் எல்லாம் சரியாத் தான் போயிற்று. அது முடிந்தவுடன் நம்ம தலைவர் விஜயகாந்த் நடித்த "தருமபுரி" போட்டோம். விஜயகாந்த் அறிமுகமாகும் சீனைப் பார்த்தவுடன் எல்லாரும் அதிர்ச்சியாகி(!) (அதாங்க புல்லட் சட்டையில பட்டு ரிட்டன் ஆகி திருடனை சுடுமே) ஆப் செய்ய சொன்னார்கள் (நீ எப்படிடா குருவி பார்த்தன்னு நான் அவனை கலாய்த்தது வேறு விஷயம்). ஏற்கனவே நான் அந்த சீனைப் பார்த்து இருந்தாலும் அந்த படத்தில் தான் அந்த காட்சி என்று தெரியாது. தெரிந்திருந்தால் போட்டிருக்க மாட்டேன்.

பின்பு சமாதனமாகி "RACE "என்ற இந்தி படத்தைப் பார்த்தோம். அதில் சயீப், வினோத் கண்ணா, அனில் கபூர், பிபாஷா பாசு, கத்ரீனா கயீப் ஆகியோர் நடித்த படம். வெளிநாட்டில் வாழும் இந்திய சகோதரர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனையே கதை. இப்பொழுதெல்லாம் இந்தி சினிமா வெளிநாட்டில் எடுக்கவில்லையென்றால் தான் ஆச்சரியமாக இருக்கும். அதற்கு இரண்டு காரணம். ஒன்று காட்சியமைப்பில் பிரம்மாண்டம் காட்டுவதற்காக, மற்றொன்று ஆபாசக் காட்சிகள். உதாரணத்திற்கு ஆணும் பெண்ணும் கல்யாணமாகாமல் உறவு கொள்வது. மற்றவன் மனைவியிடம் சல்லாபம் போன்ற உறவு முறைகளை சிதைக்கும் கதைகள். அதை இந்தியாவில் நடப்பதாகக் காட்டினால், பிரச்சனை செய்வதற்கென்றே இருக்கும் சிலர் படத்தை ஓடவிடாமல் செய்து விடுவார்கள் என்ற பயம்.

அதையெல்லாம் தவிர்த்து அந்த படத்தில் ஒரு கவனிக்க வேண்டிய விசயம் படத்தில் யாரும் நல்லவனாக காட்டியிருக்க மாட்டார்கள். சயீப்பும் வினோத்தும் சகோதரர்கள். 200 கோடி மில்லியன் டாலருக்காக இருவரும் ஒருத்தரை ஒருத்தர் கொல்லத் திட்டமிடுவது தான் கதை. இதில் போலிஸாக வரும் அனில் கபூர் கூட நல்லவரில்லை. ஆனால் இதையெல்லாம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரோடு கடைசி வரை எடுத்துச் சென்றிருப்பது தான் சுவாரஸ்யம்.

உண்மையில் இந்த விசயத்தில் இந்தி நடிகர்களை வெகுவாக பாராட்டலாம். தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் பட்சத்தில் அது வில்லன் ரோலாக இருந்தாலும் நடிக்கிறார்கள். இது போல இரண்டு மூன்று படங்கள் பார்த்திருக்கிறேன். இந்தி திரையுலகை ஆஸ்கார் வரை எடுத்துச் சென்ற அமீர்கான் நடித்த "ஃபானா" என்ற படம் வந்தது நினைவிருக்கலாம். அதில் அவர் ஒரு தீவிரவாதியாக நடித்திருப்பார் (விஜயகாந்த் 100 கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டார்). குண்டு வைத்து உயிர்களைக் கொல்வது, இராணுவ வீரர்களைக் கொல்வது என ஒரு தீவரவாதி செய்யும் எல்லா செயல்களையும் படத்தில் அவர் நடித்திருப்பார். அதனால் அவரின் இமேஜ் ஒன்றும் குறையவில்லை. கடைசியில் தன் மனைவி கஜோலின் மீதுள்ள காதலால் அவர் திருந்திவிடுவார் என்று நினைத்திருந்தேன்(நிறைய தமிழ் படம் பார்த்ததால் அவ்வாறு நினைக்கத் தோன்றியது). ஆனால் அவ்வாறு ஏதும் நடக்காமல் தீவரவாதியாகவே மரணமடைவார். படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

"AKSAR" என்ற மற்றொரு படமும் அவ்வாறே. டினோ மோரியா, இம்ரான் ஹாஷ்மியும் நடித்த படம். படத்தின் ஹீரோ இருவருக்கும் நெகடிவ் ரோல்களே. அதை கதையின் கடைசி வரை ஒரு சஸ்பென்ஸாக எடுத்திருப்பார்கள்.

ஆனால் இன்னும் நம் விஜயகாந்த், சரத்குமார், ரஜினிகாந்த் போன்ற மூத்த நடிகர்கள் இது போன்ற வித்யாசமான கதாபாத்திரங்களில் நடிக்காமல் மக்களுக்கு நல்லது செய்வது போலவும், தீவரவாதியை பிடிப்பது போலவும் நடித்து இன்னும் எத்தனை காலம் நம்மை துன்புறுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதில் இளம் வயது நடிகைகளுடன் டூயட் வேறு.......

ஆங்கில மற்றும் தற்போதைய இந்தி படங்களில் "ஹீரோ" என்று யாரையும் குறிப்பிடுவதில்லை, முக்கிய கதாபாத்திரத்தை "லீட் ரோல்" என்றே குறிப்பிடுவதாக ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம். எல்லா முக்கிய கதாபாத்திரமும் பாஸிடிவ் ரோலாகவும் இருப்பதில்லை. ஆனால் நம்ம தமிழ் "ஹீரோ" விற்கு ஒரு படத்தில் ஐந்து பாட்டும் நான்கு சண்டையும் அவசியமாகிறது. வில்லனை புரட்டி எடுப்பதும், காதலியோடு டூயட் பாடவும், மக்களுக்காக நல்லது செய்வதும் என்ற எழுதி வைக்கப்படாத கோடம்பாக்கம் விதிகளை பின்பற்றி வருகிறது.

ஒருமுறை "ப்ளாக்" என்ற படத்தைப் பார்த்துவிட்டு அந்த படத்தில் அமிதாப் ரோலில் நம்ம சூப்பர் ஸ்டார் நடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்ததுண்டு. அது போன்ற படங்களில் வரும் காலங்களில் அவர் நடிப்பார் என்று நம்பிக்கைகொண்டிருந்தேன். ஆனால் தற்போதைய சூழலில் அது நடக்காதென்றே தோன்றுகிறது.ரஜினி என்ற நடிகனை சூப்பர் ஸ்டார் ஆகும் முன்னே நாம் கண்டதால் தான் அவரை பற்றி அவ்வாறு நினைக்கத்தோன்றுகிறது. எண்பதுகளில் முள்ளும் மலரும், மூன்று முடிச்சு போன்ற படங்களில் வித்தியாசமான நடிப்பில் அசத்திய ஒரு மாபெரும் நடிகன் சூப்பர் ஸ்டார் என்னும் போர்வையில் ஒளிந்துக்கொண்டிருக்கிறான்.

தமிழ் திரை உலகயே திசை திருப்பியதாக சொல்லப்படும் "முரட்டுக் காளை" மற்றும் "மூன்று முகம்" மட்டும் வராமல் இருந்திருந்தால் இந்நேரம் நாம் இப்படி ஏக்க பெருமூச்சு விட நேர்ந்திருக்காது.

ஒரு சாதாரண சினிமா இரசிகனாக தமிழில் உள்ள எல்லா "ஹீரோ"க்களும் இது போன்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே என் ஏக்கம்.
இது நிறைவேறுமா????

இன்று வால்பையனுக்கு பிறந்த நாளா?

சக பதிவர் ஆர்.கே.சதீஷ்குமார் எழுதிய இந்த பதிவில் "வால்பையனுக்கு பதினாலு.பத்து.எழுபத்தி எட்டு (14.10.78) அன்று பிறந்த நாள்" என்றிருக்கிறார். (உண்மையா??)

அப்படின்னா இன்னைக்கு வால்பையனுக்கு பிறந்த நாள்.
வாழ்த்துக்கள் வால்பையன்.

ர்ர்ரிப்பீட்டு

அன்று மாலை நானும் என் நண்பர்களும் வழக்கமாக அமரும் நண்பனின் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தோம். இதுவரை எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன் அதெல்லாம் இதோடு ஒப்பிட்டு கூடப் பார்க்கமுடியவில்லை. நான் மிகவும் மனம் நொந்திருப்பதால் எல்லோரும் ஆறுதல் கூறும் நோக்குடன் வந்திருந்தனர். "இதெல்லாம் ஈஸியா எடுத்துக்கணும்" "வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்" "இந்த மாதிரி நேரத்திலதான் மனசவிட்டுறகூடாது" என பல அறிவுரைகள். எல்லாம் கடைசியா எங்கு வந்து நிற்பார்கள் என்று அனுபவமிருப்பதால் "சரக்கடிக்கலாம் மச்சி" என்றவுடன் மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல் "உன்னோட துக்கத்துல பங்கெடுக்குறதுல ஒரு நிம்மதி கிடைக்குதுடா" என்று தீனா டபுள் மீனீங்கில் சொன்ன வார்த்தை புரிந்தாலும், எனக்கும் சரக்கடிக்கணும் போல இருந்ததால் அவன் மேல் கோபப்படவில்லை.


அனைவரும் கிளம்ப தயாரான போது தான் அந்த அதிசய சம்பவம் நடந்தது. தெருவில் ஒரு 18 வயதுமிக்க ஒரு அழகிய தேவதை அன்ன நடையென நடந்து வந்தாள். அவளைப் பார்த்ததும் என் இதய துடிப்பு கழுத்துக்கும் வயிற்றுக்கும் ஓட ஆரம்பித்தது. அச்சு அசப்பில் சிநேகாவை உரித்து வைத்திருந்தாள். அவளை பார்த்ததும் அனைவரும் மெய்மறந்து நின்றோம். அப்படியே நடந்து என் வீடு எதிரில் ஒரு மூன்று வீடு தள்ளி உள்ள வீட்டில் நுழைந்தாள். ஒரு ஐந்து நிமிடம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. நண்பர்களுக்கும் அதே நிலைமை. மனதில் உள்ள வலி மறந்து மனது இறக்கை முளைத்து பறப்பது போல் ஒரு உணர்வு. திரும்பி தீனாவைப் பார்த்த போது கண்ணில் ஒரு காமத்தீ கொழுந்து விட்டு எரிந்தது கண்டு நான் பதற்றமடைந்து "மச்சி கண்டதும் காதல பத்தி என்ன நினைக்கிற?" என ஒரு துண்டு போட்டு ரிசர்வ் செய்தேன். மூன்றாவது கண் மூலம் எல்லாரும் என்னை வில்லனைப் போல் பார்த்தனர்.


அந்த பெண்ணின் பின்னால் செந்தில் சைக்கிளில் வந்தான். ஏரியாவில் எல்லா பெண்களின் விவரமும் அவனுக்கு அத்துப்பிடி.

அவனே வந்து "டேய் பார்த்தயா, அதான் சொப்னா நம்ம சௌந்தரபாண்டி ஸ்கூல்ல தான் +2 படிக்கிறா, இதுக்கு முன்ன கும்மாளம்மன் கோவில் தெருவில இருந்தாங்க இப்ப காலி பண்ணி இங்க வந்துட்டாங்க" என்று மூச்சுவிடாமல் சொன்னான்.

சசி "ஆள் எப்படி?"என்றான்.

செந்தில் "அவளுக்கு நிறைய பாய் பிரண்ட்ஸ் இருக்கான்கடா, நம்ம கீரைத் தோட்டம் பசங்க இருக்காங்கள, அதான்டா ரமேஷ் செட்டு அவன்க கிட்ட கூட பேசுவாடா" என்றான். கொஞ்சம் பிதிர்லு ஆனது. ஏற்கனவே விஜய் டைப்பிங் இன் ஸ்டிடூட்டில் படிக்கிற கவிதாவை சசி ரூட் விடும் போது அடிதடி ஆகி அடுத்த தடவை அவுங்க ஏரியாவில் நுழைந்தா "பொருள்" வரும் என்று மிரட்டிய பசங்க தான் அந்த கீரைத்தோட்ட பசங்க. எல்லோரும் ரமேஷ் பேரை கேட்டவுடன் ஜகா வாங்கினர். எனக்கு லைன் க்ளியர் ஆனது.


என் முயற்சியின் முதலாக, முதல் இரண்டு வாரம் அவள் கண்ணில் படும் படி நின்றேன். மூன்றாவது வாரம் சிரித்தேன். பின்பு அவளிடம் வலிய சென்று பேசினேன்.


மனச தளர விடாம நான் செய்த முயற்சி வீண் போகல. நாலாவது வாரம் அவளே என்கிட்ட வந்து பேசினா. இன்னைக்கு கோவிலுக்கு போலாம்ன்னு நினைச்சுட்டுருக்கும் போது கடவுளே காலிங் பெல்ல அழுத்தி கூப்பிட்டு "எப்படி இருக்க"ன்னு கேட்டா (கும்பிட போன தெய்வம்.....இதைத் தான் வேற மாதிரி சொல்லலாமேன்னு...) எவ்ளோ சந்தோஷமா இருக்குமோ அதுக்கும் மேல ஒரு சந்தோஷமா இருந்துச்சு அன்னைக்கு. அவள் எந்த பந்தாவும் இல்லாமல் என்னுடன் பேசியது எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. ஒரே தெருவில் இருப்பதால் அடிக்கடி பேசிக்கொண்டோம். எல்லா அழகான பெண்ணுக்கும் வழக்கமாக செய்யும் மொட்டை மாடியில் படிப்பதில் அவளும் விதிவிலக்கல்ல. மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து அவள் படிக்கும் அழகே தனி . இருவரும் மொட்டை மாடியில் சைகையில் பேசிக்கொண்டோம். "வாடா" "போடா" என்று கூப்பிடும் வரை போனது எங்கள் நட்பு. அது வரைக்கும் எல்லாம் நன்றாகத்தான் சென்றது.


செந்தில் ஒரு நாள் பரபரப்புடன் "மச்சி மேட்டரு தெரியுமா, இன்னைக்கு நம்ம சொப்னாவும் ரமேஷையும் மகாராணி தியேட்டர் நூன் ஷோல ஒன்னா பார்த்தேன்டா" என்றான். இவனுக்கு எப்படிடா எல்லா விசயமும் தெரியுதுன்னு ஒரே ஆச்சர்யம்.

"டேய் அவுங்க ப்ரெண்ட்ஸ்டா இருந்தா சினிமாவுக்கு போறதல்லாம் சகஜம்டா" என்றேன்.

"நீ கூட ப்ரெண்டுதான் உன் கூட வருவாளா" என்று தினேஷ் கூறி எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தினான். எல்லோரும் சிரித்தது எனக்கு அவமானமாக இருந்தது. நாளை எப்படியாவது என் காதலை சொல்லலாம் என்று முடிவெடுத்தேன்.

ஏற்கனவே சொதப்பிய அனுபவம் இருந்ததால் இந்த தடவை எங்க செட்டில் இந்த விஷயத்தில் ரொம்ப சீனியரான நிர்மலிடம் "மச்சி நீ எப்படிடா தேவிகிட்ட லவ்வ சொன்ன" என்று கேட்டேன்.

அவன் உடனே"அவளோட மகாபலிபுரம் போயிருந்தேன்ல அப்ப ரொம்ப நேரம் அமைதியா பேசாம இருந்தோம், அப்புறமா நான் அவ கையை மெதுவா புடிச்சி கொஞ்சம் டயலாக் விட்டேன் அப்படியே மயங்கிட்டா" என்றான் பெருமையாக.

பின்பு நானும் அதே போல் செய்யலாமென்று முடிவுக்கு வந்தேன். ஆனால் வெளியில் கூப்பிட்டால் வரமாட்டாள். நாளை மொட்டை மாடியில் பார்த்து சொல்லலாம் என்று முடிவுக்கு வந்தேன்.

மறுநாள் அவளது மொட்டை மாடிக்கு சென்றேன்.

"ஹேய் நீ எங்க இங்க" என்றாள்.

"ஒரு விஷயம் சொல்லணும் சொப்னா" என்றேன்.

"சொல்லு".

டக்கென்று கையைப் பிடித்து "சொப்னா நீ.. நான் உன்னை.... அது வந்து எப்படி சொல்றது" நாக்கு குளறியது.

அவள் "ஹேய் சீ கையை விடுடா"

"இல்ல சொப்னா என் மனசில உள்ளத புரிஞ்சுக்கோ"

"விடுடா அம்மாவை கூப்பிடுவேன்" எனக்கு அப்போது தான் உறைத்தது அவள் கையை விட்டேன். கையை விட்ட அடுத்த நிமிடம் "பளார்"........

இந்த தடவை சொப்னாவிடமும் சொதப்பினேன்....

மாடிப்படியை விட்டு கீழே இறங்கும் போது கடைசியாக அவளிடம் கண்கள் கலங்கி நான் பேசிய வார்த்தை "ரமேஷ் கிட்ட சொல்லிறாத சொப்னா...ப்ளீஸ்"


அன்று மாலை நானும் என் நண்பர்களும் வழக்கமாக அமரும் நண்பனின் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தோம். இதுவரை எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன் அதெல்லாம் இதோடு ஒப்பிட்டு கூடப் பார்க்கமுடியவில்லை. நான் மிகவும் மனம் நொந்திருப்பதால் எல்லோரும் ஆறுதல் கூறும் நோக்குடன் வந்திருந்தனர். "இதெல்லாம் ஈஸியா எடுத்துக்கணும்" "வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்" "இந்த மாதிரி நேரத்தில........

மாதம் 37,500 ரூபாய் சம்பளம் வாங்கும் ஏழைகள்!!

மத்திய அமைச்சர் ப்ரிய ரஞ்சன் தாஸ் முன்ஸி இன்று பிற்பட்ட மக்கள் நலத்திற்காக பாடுபடும்(!) தமிழக முதல்வர் உள்ளிட்ட பல தலைவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது உயர்கல்வி நிறுவனத்தில் பின் தங்கியவர்களின் முன்னேறிய பிரிவினர் சேருவதற்கு வருமான உச்சவரம்பு 2.5 லட்சத்திலிருந்து 4.5 லட்சமாக உயர்த்தியிருப்பதாக கூறியுள்ளார்.

இதை இந்தியாவை முன்னேறாமல் செய்வதற்கான ஒரு தடையாகவே நான் நினைக்கிறேன். வருடம் 4.5 லட்சம் அதாவது மாதம் 37,500 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர் எப்படி பின் தங்கியவராக முடியும்?. முதலில் பின் தங்கியவர் என்றால் பொருளாதாரத்திலா, அல்லது ஜாதியிலா எவ்வாறு அதை மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

பொருளாதாரத்தில் என்றால், மாதம் 37,500 ரூபாய் சம்பளம் வாங்கும் நபர் தன் மகளையோ, மகனையோ ஏன் காசு கொடுத்து படிக்க வைக்க முடியாதா?. இன்றும் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைப் பார்க்கும் கோடானகோடி உயர் ஜாதி (அரசாங்க சட்டத்தில் உள்ளவாறு) மக்களின் பிள்ளைகளுக்கு உயர் கல்வியே கிடைக்காமல் போகும் நிலை ஏற்படாதா?.

இல்லை ஜாதியை மட்டும் பார்த்துத்தான் பின் தங்கியவர் என்று தீர்மானிக்கிறோம் என்று பிற்பட்டோருக்காக பாடுபடும்(?) கலைஞர் போன்றோர் கூறினால், இது ஜாதியை மேன்மேலும் வளர்பதற்காக உதவுமெ தவிர குறைக்காது. இத்தனை சலுகைக் கிடைத்தால் உயர் ஜாதிக்காரன் என்று சொல்லப்படுபவன் தன் ஜாதி வெறியை விட்டாலும், தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லப்படுபவன் தன் ஜாதியை விடமாட்டான். மாறாக அவன் அப்படி சொல்வதற்கு பெறுமையடைவான்.

இதியெல்லாம் விட உலகில் முதல் நூறு பல்கலைகழகத்தில் உள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்றவை கூடிய சீக்கரம் தரமான மாணவர்கள் இல்லாமல் தன் இடத்திலிருந்து கீழறங்கி போகும் என்பது உண்மை.

சாமியாடி!

சாமியாடி குறி சொல்வது நிஜமா? உண்மையிலேயே அவர்களுக்கு சாமியின் அருள் வருகிறதா? என்றெல்லாம் உங்ககிட்ட கேட்கவரல. அதெல்லாம் பொய்ன்னு உங்களுக்கே தெரியும். ஆனா சாமியாடிக்கிட்ட் குறி கேட்க போயிருக்கீங்களா?


நாங்க வருஷா வருஷம் பள்ளி, கல்லூரி லீவுக்கு பாட்டி ஊருக்கு போவது வழக்கம். ஒவ்வொரு வருஷம் போகும் போதும் ஒரு குறிப்பிட்ட உறவினர் கிராமத்துக்கு மட்டும் போகக்கூடாதுன்னு அம்மாச்சியின்(பாட்டி) கட்டளை. ஏன்னு கேட்டா "இருபது வருஷத்துக்கு முன்னால அவுங்க குடும்பத்துக்கும் நம்ம குடும்பத்துக்கும்...."ன்னு ஏதாவது ஆரம்பிப்பாங்கன்னு நீங்க நினைச்சா தமிழ் படம் நிறைய பாக்கறீங்கன்னு அர்த்தம். அப்படியெல்லாம் எதுவுமில்லை. அவங்கெல்லாம் நம்ம மேல பொறாமையா இருக்காங்கலாம். அவுங்க வீட்ல எதுவும் சாப்பிட கூடாதுன்னு சொல்வாங்க. நானும் ரொம்ப வருசமா போகாமத்தான் இருந்தேன். ஆனா ஒரு தடவை அந்த கிராமத்திலிருந்து வந்த அண்ணன் என்னைப் பார்க்க வந்தார். அப்போது அம்மாச்சி வீட்டில் இல்லை. நான் அங்கு வருவதே இல்லை என்று மிகவும் கவலையாக கூறினார். ரொம்ப வற்புறுத்தி கூப்பிட்டார். அம்மாவும் போய் வா என்றார்கள். நானும் அம்மாச்சி வந்தால் சொல்லுங்கள் என்று அம்மாவிடம் கூறிவிட்டு அவருடன் சென்றேன்.

ஆரம்பத்தில் அம்மாச்சி சொன்னது ஞாபகம் வந்து கொஞ்சம் பயம் வந்தது. ஆனால் அவர்கள் அன்பினில் எல்லாம் கரைந்து போனது. ஆளாளுக்கு அன்பை பொழிந்தார்கள். ஊரில் உள்ள உறவினர்கள் எல்லாரும் வந்து நலம் விசாரித்தது நெகிழ்ச்சியாக இருந்தது. சாப்பிடுவதற்கு அசைவத்தில் என்னென்ன வகைகள் உண்டோ எல்லாம் செய்து சாப்பிடும் படி வற்புறுத்தினார்கள். வயிறு முட்ட சப்பிட்டுவிட்டு இரவு வீடு திரும்பினேன். அம்மாச்சிக்கு என்மேல் கோபம்.

மறுநாள் வந்தது பிரச்சனை. வயிறு வலி உயிர் போனது. அம்மா டாக்டரிடம் காண்பித்தும் சரியாகவில்லை. அம்மா பயந்து விட்டார்கள். பின்பு அம்மாச்சி மானாமதுரை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் குறிசொல்லும் பெண் சாமியாடியிடம் அழைத்துச் சென்றார். சாமியாடி வீட்டிற்கு சென்ற போது அவர் வீட்டில் இல்லை. அவரின் மகன் ஏழு வயது சிறுவன் சாமியாடியை அழைத்து வரச் சென்றான். அவரது வீடே ஒரு மினி கோவில் ரேஞ்சுக்கு இருந்தது. அவர் முன்பே அம்மாச்சிக்கு மிகவும் தெரிந்தவர் போல. வரும் போது சிரித்துக்கொண்டே "வா ஆத்தா என்ன இந்த பக்கம் ஆளையே காணோம்? இது ஆரு உம் மவளா? இது பேரனா?" என்று கேட்டார். பின்பு நான் அறிமுகப்படுத்தப்பட்டேன். அம்மாச்சி விசயத்தை சுருக்கமாக கூறினார்.

பின்பு தரையில் வரைந்த நட்சத்திரத்தின் நடுவே கிழக்கு நோக்கி அமர்த்தப்பட்டேன். சுற்றிலும் கற்பூரம் ஏற்றப்பட்டது. அது வரையில் சாந்தமாக இருந்த சாமியாடி ஆவேசம் வந்தவர் போல கத்த ஆரம்பித்தார். என்னை வார்த்தைக்கு வார்த்தை "டேய்" போட்டு கூட்பிட்டார். உண்மையில் எனக்கு வயிற்று வலியோடு பயமும் சேர்ந்துக் கொண்டது. "பள்ளிக்கூடத்துக்கு சூதானமா போகனும்டா""நான் காலேஜ் படிக்கிறேன்" என்றேன். "அதத்தாண்டா சொன்னேன். அந்த நெட்ட பயலோட சேராதடா, அவன் நல்லவன் மாதிரியே பழகிட்டு உன் கழுத்தறுத்திருவான்டா" என்றார். "யாரு" என்றேன். "அவன் தான் அந்த ஆறு விரலுக்காரன் உன் கூடப் படிக்கிறானே". எனக்கு பயம் சூழ்ந்து கொண்டது. உண்மையில் என் நண்பன் ஒருவனுக்கு ஆறு விரல் இருப்பது உண்மை தான். அவனும் உயரமானவன் தான். உண்மையில் இவருக்கு பவர் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். "டேய் உன் வயித்துல மருந்து இருக்குடா, போய் அத எடுத்துட்டு வா" என்று கூறி மலையேறினார். பின்பு கண் விழித்து அம்மாச்சியிடம் "ஆத்தா என்ன சொன்னா?" என்று கேட்ட போது எனக்கு ஆச்சிரியமாய் போனது. அவர் கூறியதை எங்களிடம் கேட்கிறாரே என்று. பிறகு அம்மாச்சி அவர் உடம்பில் சாமி வந்து கூறியதாகவும் அது அவருக்கு தெரியாதென்றும் கூறினார்.

பின்பு சாமியாடி கூறிய மருந்து எடுக்கும் ஆளிடம் சென்றோம். அவர் ஒரு அடி நீளமுள்ள ஒரு குழாயை எடுத்து என் வாயில் வைத்து "ஊவ்வ்வ்வ்" என்று உறிஞ்சினார். பின்பு துப்பிய போது அவர் வாயிலிருந்து ஐந்தாறு கருப்பு முட்டை வெளிவந்தது. அவர் யாரே மருந்து வைத்திருப்பதை உறுதிப்படுத்தினார். அம்மாச்சி என்னிடம் "அங்க போவாதன்னு சொன்னேன் கேட்டயா, இப்ப பாரு" என்றார். எனக்கும் அவர் கூறியது உண்மை என்று தோணியது. பின்பு மறுபடியும் அதே சாமியாடியிடம் சென்றோம். அதே இடத்தில் உட்கார்ந்தேன்.

அவர் முன்பை விட ஆவேசம் வந்தவர் போல பேசினார். நாங்கள் பவ்யமாக கேட்டுக்கொண்டிருந்தோம். மருந்தெல்லாம் இப்ப இல்லையென்றும் ஆத்தா எடுத்துவிட்டதாகவும் கூறினார். இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். பின்பு ஒரு டம்ளர் தண்ணீரில் கற்பூரத்தையேற்றி ஏதேதோ முணுமுணுத்து தண்ணீரை என் முகத்தில் அடிக்க வந்தார். நான் கண்களை இறுக்க மூடிக் கொண்டேன்.
அப்போது ஒரு ஆறு வயது சிறுவன் வாசலில் வந்து
"அத்த, அம்மா சீட்டு காசு குட்த்துவிட்டுட்சு" என்று கத்தினான்.
அப்போது சாமியாடி "அந்த டேபிள்ல வச்சுட்டு போ" என்று அதே ஆவேச குரலில் சொன்னார்.
எனக்கு சட்டென்று பொறி தட்டி கண்ணை திறந்து நெற்றியை சுருக்கி பார்த்த போது சாமியாடி மூன்று முறை தண்ணீரை என் மீது அறைந்து மறுபடியும் மலையேறினார். அம்மா என் முகத்தை முந்தானையால் துடைத்துவிட்டு "இப்ப தான் முகம் தெளிவா இருக்கு" என்றார். ஆனால் தெளிவுக்கான காரணம் எனக்கு மட்டும் தான் தெரிந்தது. அன்று அதை யாருக்கும் சொல்லவில்லை திரும்பவும் அந்தப் பக்கமே போகவில்லை.
Related Posts with Thumbnails